"ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்.."என்று ஒரு பாடலில் ஒரு வரி வரும். அது எந்த அளவுக்கு உண்மை என்று இந்த படம் பார்த்தால் புரியும். சார்லி சாப்ளின் என்பவர் ஒரு கோமாளித்தனமான காமெடியன், வசனம் சரியாக பேச மாட்டார், அவர் ஊமை படங்களில் மக்களை சென்றடைந்தார் என்று நினைப்பவர்கள், இந்த படத்தைப்பார்த்தால் அப்படி சொல்ல மாட்டார்கள்.
படத்தின் கரு என்னவென்றால், ஒரு நாட்டின் தலைவன், முட்டாள்தனமாக நடப்பவன், பயந்தாங்கொள்ளி, அவனை மாதிரியே இருக்கும் இன்னொருவன் ஆள் மாறாட்டம் காரணமாக அவன் இடத்துக்கு வருகிறான். பின் நடப்பதுதான் கதை. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா? ஆமாம் இம்சை அரசன் படத்தின் கதைதான். படம் முதல் உலகப்போர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. போரில் சண்டையிட்டு தன் சுய நினைவை இழக்கும் ஒரு பார்பர்(முடி வெட்டுபவர்) , இருபது வருடங்கள் கழித்து சுயநினைவுக்கு வருகிறார். அப்போது அவர் வாழும் டோமானியா நாட்டை ஹெயக்கல் என்ற சர்வாதிகாரி ஆண்டு வருவது தெரிகிறது. அங்கு யூதர்கள் மோசமாக நடத்தப்படுவது இவருக்கு கோபம் அளிக்கிறது. சர்வாதிகாரியை எதிர்க்க துணிகிறார். அதனால் ராணுவம் இவரை கைது செய்ய நினைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பி, ராணுவ வீரன் மாதிரி உடையில் சுற்றுகிறார். இவரை பார்த்த வீரர்கள் அச்சு அசப்பில் இவர் ஹெயக்கல் மாதிரியே இருக்க, இவரை மாளிகைக்கு கொண்டு செல்கின்றனர். இதற்கிடையே ஹெயக்கல் ஒரு சிறு விபத்தில் சிக்கி சேற்றில் விழுகிறார். அவரை பார்பர் என்று நினைத்து ராணுவம் கைது செய்கிறது. ஹெய்க்கலாக இடம் மாறிய பார்பர் பொது மக்கள் மத்தியில் யாரும் எதிர்பாராத விதமாக, யூதர்களுக்கு ஆதரவாக ஒரு உருக்கமான உரை ஆற்றுகிறார். இது வானொலியில் டோமானியா முழுவதும் ஒளிபரப்பாகிறது. இதனை கேட்கும் பார்பரின் காதலி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். படம் முடிவடைகிறது.
படத்தில் காட்சிக்கு காட்சி நக்கல் நய்யாண்டிதான் . படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜ பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டவை . அவற்றின் உச்சரிப்பை பார்த்தாலே தெரியும்.
ஹெய்க்கல் - ஹிட்லர்
பென்சியோ நபோலினி - பெனிடோ முசோலினி
கார்பித்ஸ் - கோயபல்ஸ் (ஹிட்லருக்கு அடுத்த பதவியில் இருந்தவர். ஹிட்லர் செய்த படுகொலைகள் அனைத்தையும் மூடி மறைத்தவர். கடைசி வரை ஹிட்லர் நம்பிய ஒரே நபர்.)
இந்த படம் வெளி வந்த ஆண்டு 1940. அதாவது ஹிட்லர் உயிருடன் இருந்த போது வெளிவந்ததது. அதுவும் அமெரிக்காவும், ஜெர்மனியும் நட்பாக இருந்த காலகட்டம். அப்போது இந்த மாதிரி ஒரு படம் எடுக்க பெரிய தில் வேண்டும். ஒரு வேலை இப்படம் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் ஹிட்லர் தோற்றது, தற்கொலை செய்து கொண்டது எல்லாம் படத்தில் இடம் பெற்றிருக்கும். ஆனால் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. படத்தை தயாரித்து இருப்பது சாப்ளினின் சொந்த நிறுவனமான (நால்வரில் ஒருவர்) யுனைட்டட் ஆர்ட்டிஸ்(United Artists) நிறுவனம். சாப்ளினே எழுதி, இயக்கி, இசைஅமைத்து நடித்திருக்கிறார்.
சில சுவாரசியமான தகவல்கள்:
சாப்ளின் மற்றும் ஹிட்லர் இருவரும் உருவத்தில் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. குறிப்பாக மீசை. இருவரும் ஒரே ஆண்டில் நான்கு நாள் இடைவெளியில் பிறந்தவர்கள். ஹிட்லரின் நாசி கட்சி புகழ் அடைந்து கொண்டிருக்கும் போது சாப்ளின் சினிமாவில் உயர்ந்து கொண்டிருந்தார். இந்த படத்தை ஆதரிக்க பலரும் தயங்கியதால் சாப்ளினே தன் முழு செலவில் படம் எடுத்து வெளியிட்டார். இந்த படம் மட்டும் ஓடாமல் இருந்திருந்தால் சாப்ளின் நடு தெருவுக்கு வந்திருப்பார். இந்த படம் ஹிட்லர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர் இந்த படத்தை இரண்டு தடவை பார்த்திருக்கிறார்.
இந்த படம் சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் பேசும் படம். வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடிய இந்த படம்தான் சாப்ளின் நடித்த படங்களிலேயே பெரிய வெற்றிப்படம். தன்னை நடிகன் என்று சொல்லிகொள்ளும் இன்றைய தலைவலிகள் எல்லாம் நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க..
4 comments:
உண்மையிலேயே தில்லான படம்தான். அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
அற்புதமான படம். நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம். சார்லி என்ற ஜினியஸ் ஒவ்வொரு பிரேமிலும் தெரிவார். முக்கியமாக ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய பிறகு இரண்டு காதுகளிலும் தண்ணீரை ஊற்றிக்கொள்வார். பேச்சின் அபத்தத்தை உணர்த்த இதைவிட சிறந்த பகடி வேறெதுவும் இல்லை.
சார்லி சப்ளின் போல மாறுவேடப் போட்டி ஒன்று நடந்ததாம். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் சாப்ளினும் கலந்து கொண்டாராம். ஆனால் அவருக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது
I will see soon.
Post a Comment