விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

December 27, 2010

வெட்டி அரட்டை - அதிமேதாவி கமல், புன்னகை மன்னன் விஜய்

கடுப்பை கிளப்பிய சன்டிவி

பொதுவாகவே இந்த மாதிரி நட்சத்திர கலைவிழா, பாராட்டு விழா எல்லாம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது. அவருக்குத்தான் இவை அலுக்காது. நமக்குமா? ரஜினியின் மேடை பேட்டி, பாரதிராஜா- இளையராஜா பேச்சுக்கள் என்று சில சுவாரசியமான விஷயங்கள் காட்டியதால் பார்த்தேன். மேடையில் ஆடிய இளம் நடிகைகளை நாம் கண்கள் மேய்வதை அப்படியே காமிரா செய்து காட்டியது. அதிலும் ஆப்பக்காரி பாடல் உச்சகட்டம். போதாததுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள் வேறு. நம்மூரில் சின்ன குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவார்களே அதே போல ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.


புன்னகை மன்னன் விஜய்

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் விழா முழுவதும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தவர் நாம் இளைய தளபதிதான். அநேகமாக அவருக்கு "இளைய நரசிம்மராவ்" என்று பெயர் வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். மருந்துக்கு கூட அவர் முகத்தில் புன்னகை இல்லை. என்னதான் பல சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி வலுக்கட்டாயமாக உம்மனாம் மூஞ்சியாகவா இருப்பது? என் அம்மவே, "சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்?" என்று கூறினார். அவர் அஜித் ரசிகை அல்ல. எம்ஜிஆர் ரசிகை.

உலகக்கோப்பையும் இந்திய அணியும்சச்சின் முதல் சதம் அடிப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் பார்த்து வருகிறேன். தென்ஆப்பிரிக்க அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி இருப்பது போல, இந்திய அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி உண்டு. அதாவது உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் மூன்றாண்டுகள் எல்லா சாதனைகளையும் முறியடித்து, முதலிடத்தில் இருக்கும். சரியாக உலகக்கோப்பை தொடங்கும் நேரத்தில் சச்சினை தவிர்த்து எல்லா வீரர்களும் பார்மை இழப்பார்கள். சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ? என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு. கம்பீர், ரெய்னா, தோனி உள்பட பலர் மெதுவாக பார்மை இழந்து வருகிறார்கள். தென்னாபிரிக்கா தொடரில் தங்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்க போகிறதோ? அதே போல பாகிஸ்தான், மற்றும் நியூஸீலாந்து அணிகள் உலகக்கோப்பை வரை சொங்கி ஆட்டம் ஆடுவார்கள். ஆனால் உலகக்கோப்பையில் அநியாயத்துக்கு ஆக்ரோஷமாக ஆடி, முக்கிய அணிகளை வெளியேற்றி விட்டு தானும் வெளியேறி விடுவார்கள். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது.ஒரு சின்ன டவுட். ஸ்ரீசாந்த், நெஹ்ராவை விட இர்பான் பதான், மற்றும் ஆர் பி சிங் இருவரும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்கள் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்? தோனி கங்குலியை பார்த்து பாடம் படிக்க வேண்டும். இல்லையேல் முற்பகல் செய்தால் பிற்பகல் தனக்கே விளைந்து விடும்.

கன்றாவி தலைப்புகள்...வர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது. கடந்த வாரம் ஒரு தலைப்பு, "ஆடையில்லாமல் தவித்த ஐஸ்வர்யா" இதை படித்தவுடன் எல்லோரும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு படிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை. அதே போல இன்று "அஸினுக்கும் சல்மானுக்கும் இடையே ரகசிய திருமணம்", "என் கணவன்? சதா" என்று கன்றாவியான தலைப்புகள் தென்படுகின்றன. ஹிட்டுகள் வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள். காலக்கொடுமை...


அதிமேதாவி கமல்...

மன்மதன் அம்பு முதல் காட்சியே பார்த்தாகி விட்டது. படத்தை பற்றி கருத்து ஒன்றும் தெரிவிக்க விரும்பவில்லை. அப்புறம் ஏதாவது சொல்லி, "இதோ வந்துட்டாண்டா ரஜினி ரசிகன்!!" என்று காரி தூப்பி விடுவார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விஜய்யை வேண்டும் என்றே கலாய்த்தார்கள் என்று கிளப்பி விட்ட மாதிரி ஒரு பற்ற வைக்கும் வேலையை மட்டும் செய்யபோகிறேன்.இந்து கடவுள்களை இழிவு படுத்துகிறார் என்று கோஷமிட்டவர்கள் படத்தில்  இந்துக்களைப்பற்றி மகா மட்டமான ஒரு வசனம் வருகிறது கவனித்தார்களா என்று தெரியவில்லை. மாதவன் கமலிடம், "அதென்ன சார் எல்லா கள்ள காதலன்களும் காவி சட்டையே போடுறாங்க?" என்று கேட்பார். அதற்கு கமல்," ஒரு வேலை religion காரணமா இருக்கலாம்." என்பார். அதாவது இந்துக்கள் எல்லாரும் கள்ள உறவு வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம் வருகிறது.


படத்தில் மாதவன் "தமிழை விடுங்க, தமிழ் மெல்ல சாகட்டும்" என்று சொல்வார். 

அதே போல ஒரு காட்சியில் திரிஷா, "நான் பொறுத்துக்குவேன் , தமிழ் பொறுக்குமா?" என்று கேட்க, அதற்கு கமல்' "தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்." என்பார். அதென்ன கமல் படத்தில் எல்லாம் இலங்கை தமிழர்களை அம்மாஞ்சியாகவே சித்தரிக்கிறார். இவை அனைத்தும் படத்தில் அவ்வளவு அத்தியாவசியமும் இல்லை. நடிகைகளையும் அவ்வப்போது கேவலப்படுத்தி சேம் சைடு கோல் போடுகிறார். என்ன கமல் சார் இப்படி பண்ணலாமா?

எப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா? ஏதோ நம்மாள முடிஞ்சது.


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

December 24, 2010

பதிவுலகம் பற்றி சில உண்மைகள் - 100ஆவது பதிவுவணக்கம் நண்பர்களே. நான் பதிவு எழுத வந்து சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன. இதுதான் என்னுடைய நூறாவது பதிவு. இத்தனை நாள் என்னுடைய எழுத்துக்களையும் மதித்து, பிழைகள் இருந்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு படித்த அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டமிட்டு என் தவறுகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும், வோட்டு போட்டு ஆதரவை தெரிவித்த வாக்காளர் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றி. என் பதிவுகளுக்கு உறுதுணையாக இருந்த, நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு சில பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தனியாக ஒரு நன்றி. நீங்கள் இல்லை என்றால் என் பதிவுகளுக்கான மேட்டருக்கு எங்கே போவேன?இதே போல இனி வரும் நாட்களிலும் என் பதிவுகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதுகிறேன் (விட மாட்டான் போலிருக்கே? என்று கடுப்பாகாதீர்கள்.)

பதிவுகள் சில உண்மைகள் :

இது ஏதோ புலனாய்வு கட்டுரை என்று நினைக்காதீர்கள். பதிவுலகத்தை பற்றி கூகுலாரிடம் கேட்ட போது அவர் சொன்ன சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன்.

WEB LOG என்பதன் திரிபே BLOG. வலைப்பதிவின் திரிபே பதிவு (எப்படி தமிழ் படுத்திட்டோம்ல..)

1994 ஆம் ஆண்டு ஜஸ்டின் ஹால் என்பவர் ஆன்லைன் டைரி என்று சொந்த சமாச்சாரங்களை வலைத்தளத்தில் எழுத தொடங்கியதே முதல் பதிவாகும்.

ஒவ்வொரு அரைநொடிக்கும் ஒரு பதிவுத்தளம் உருவாக்கப்படுகிறதாம்.

பதிவுலகில் எத்தனை பதிவு தளங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியவில்லை. சுமாராக இரண்டு மில்லியனுக்கு அதிகமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். 
பதிவர்களில் 75% பேர் பட்டதாரிகள் (பத்தாம் வகுப்பில் இருநூறு எடுத்த லோக்கல் ஆட்களும் எழுதுகிறார்களே..)

பாதிக்கும் மேட்பட்டவர்கள் திருமணமாகி குழந்தை உள்ளவர்கள். (உஷார்...)

பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் பதிவுதளத்தை கைவிட்டு, இரண்டாவது பதிவு தளத்தில்தான் எழுதி கொண்டிருக்கிறார்கள் (அடியேனும் தான்...)

நாற்பது சதவிகிதம் பேர் பதிவுகளின் வாயிலாக புதிய நண்பர்கள் ஆகின்றார்கள் (அப்போ அறுபது சதவீதம் பேர் எதிரிகள் ஆகிறார்களோ?)

சும்மா இருப்பவர்களை காட்டிலும், வேலைக்கு செல்பவர்கள்தான் (வேலை பார்க்காமல்) அதிகமாக பதிவு எழுதுகிறார்களாம். (முதலாளிக்கள் கவனிக்க...)

ஐந்து பேரில் ஒருவர் தினமும் பதிவெழுதுகிறார். சராசரியாக வாரத்துக் இரண்டு அல்லது மூன்று பதிவு எழுதுபவர்களே அதிகம். 

பதிமூன்று சதவீத பதிவர்கள் சொந்தமாக வலைத்தளத்தை உருவாக்கி எழுதி வருகிறார்கள் (மூளைக்கார பசங்க...)

நூறு பதிவுகள் எழுதி விட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய சில பதிவுகளை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். டைம் இருந்தா படிச்சு பாருங்க... 

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க....முழுவதும் படிக்க >>

December 21, 2010

பத்தாண்டுகளில் பத்து பாடல்கள்....


நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்கள் என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். அவர் அழைத்து வெகு நாட்கள் ஆகி விட்டன. இப்போதுதான் எழுத நேரம் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளில் எனக்கு பிடித்த பத்து பாடல்களை தேர்வு செய்ய வேண்டுமாம். பத்து படங்களை தேர்வு செய்வதென்பதே மிக கடினமான காரியம். இதில் பத்து பாடல்களை எப்படி தேர்வு செய்வது?எனக்கு பொதுவாகவே மெலடி பாடல்களை விட கொஞ்சம் துள்ளலான பாடல்கள் அதிகம் பிடிக்கும். அதே போல இவை என் மனதில் ஞாபகம் இருக்கும் பாடல்கள் மட்டுமே. இப்போதும் என் மனதில் இடம் பிடித்திருக்கும் பாடல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன். இந்த பத்தாண்டுகளில் ஏ ஆர் ரகுமானை விட வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஆகியோரின் ஆதிக்கம்தான் தமிழில் அதிகமாக இருந்துள்ளது.

முன்பனியா முதல் மழையா?
படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா 

எஸ்பிபியின் குரல் எந்த வயது நாயகனுக்கும் பொருந்தும். தனக்குத்தான் வயதாகி விட்டது. தான் குரலுக்கல்ல என்று நிரூபித்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதே ரீதியில் சமீபத்தில் வெளிவந்த நாணயம் படத்திலும் தன் குரலில் இளமையை நிரூபித்துள்ளார் எஸ்பிபி. இப்படம் வெளி வந்தபோது கல்லூரி முதல் ஆண்டு. லைலா பின்னாடி லோ லோ என்று அலைந்தோம்.


என் அன்பே என் அன்பே 
படம்: மவுனம் பேசியதே 
இசை: யுவன் ஷங்கர் ராஜா 

இந்த பாடலில் வரும் புல்லாங்குழல் கேட்கும்போதெல்லாம் மனதை என்னவோ செய்கிறது. அதற்கேற்ப சங்கர் மகாதேவன் குரல். நான் திரிஷா ரசிகன் ஆனது இந்த படத்தில்தான்.(என்னது இதுதான் அவரின் முதல் படமா?)


டிங் டாங் கோயில் மணி...
படம்: ஜி 
இசை: வித்யாசாகர் 

மதுபாலகிருஷ்ணன் மற்றும் மதுஸ்ரீ இருவரும் அருமையாக பாடி இருப்பார்கள். வித்யாசாகர் பாடல் என்றாலே அழகான நெளிவு சுளிவுகள் நிறைய இருக்கும். திரிஷா மீது முழு இது ஏற்படுத்தியது இந்த பாடல்(இதுன்னா என்னவா?). 

லஜ்ஜாவதியே..
படம்: 4 ஸ்டூடண்ட்ஸ்
இசை: ஜேஸி கிஃப்ட்

ஜேஸி கிஃப்ட்டின் குரலே வித்தியாசமாக இருக்கும். நான் கல்லூரியில் படித்த பொழுது நடன போட்டிக்காக நாங்கள் தேர்வு செய்து ஆடி வெற்றி பெற்றது இந்த பாடலுக்குத்தான்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
படம்: பூவெல்லாம் உன் வாசம்
இசை: வித்யாசாகர்

இந்த பாடலில் உயிரே வரிகள்தான். வைரமுத்து கலக்கி இருப்பார். அதற்கு உயிரூட்டும் விதமாக ஜேசுதாஸ் மற்றும் சாதனா இருவரும் நன்றாக பாடி இருப்பார். பாடலில் வழக்கம் போல அழகான அஜீத்.

சகானா சாரல் தூவுதே....
படம்: சிவாஜி
இசை: ஏ ஆர் ரகுமான்

இந்த பாடலும் மனதில் சாரல் தூவுவது போலவே இருக்கும். சின்மயி குரல் தேன்போல அவ்வளவு இனிமையாக, உதித் நாராயண் குரல் கட்டையாக. அந்தக்கால விண்ணோடும் முகிலோடும் பாடல் போல இந்த முரணான காம்பினேசன் நன்றாக இருக்கும்.


பிச்சை பாத்திரம்...
படம் : நான் கடவுள்...
இசை: இளையராஜா

ஆன்மீகத்தில் கொஞ்சமெனும் ஈடுபாடு இருக்கும் யாருக்குமே இந்த பாடல் உடனே பிடித்து போகும். இளையராஜாவே எழுதி உள்ள இந்த பாடல் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று நிரூபிக்கும் படி உள்ளது.

அய்யய்யோ...
படம் பருத்தி வீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

மிக மெதுவான பாடல்கள் என்றால் யுவனுக்கு அல்வா சாப்பிடுகிறமாதிரி போலிருக்கிறது. பாடலை ஹெட்போனில் கேட்டால் உலகையே மறக்க செய்துவிடும். வாத்தியங்களின் ஜாலம் அப்படி. கடந்த பத்தாண்டுகள் யுவனுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம்.

ஆராரிராரோ
படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடலின் வரிகளுக்காகவே இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அம்மா பாடலுக்கும் ஜேசுதாசுக்கும் அத்தனை பொருத்தம் 

யாரோ மனதிலே...
படம்:தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

சோகம் இழையோடும் குரல். முதலில் மென்மையாக அப்புறம் கொஞ்சம் ஷர்ப்பாக, கெஞ்சலாக என்று பலவிதமாக பாடி இருப்பார் பாம்பே ஜெயஸ்ரீ.

அட போங்கப்பா ஒரே வருத்தமா இருக்கு. நினைவில் வந்த பத்து பாடல்களை உடனே எழுதிவிட்டேன். இப்போது நிறைய பாடல்கள் ஞாபகம் வருகிறது. குறிப்பாக அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு தேவா மெட்டமைத்த பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்கள். கலப்படமாக இருந்ததால் குறிப்பிடமுடியவில்லை. கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், காக்க காக்க, 12பி, மின்னலே என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. பத்து பாடல்கள்தான் என்பதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்.

யான் பெற்ற இன்பம் பெறுவதற்கு நான் அழைப்பவர்கள்

மறுக்காம எழுதுங்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

December 17, 2010

பார்க்க, கேட்க, ரசிக்க மூன்று வீடியோக்கள் ....

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் ரஜினி பற்றிய என் கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். பதிவுகள் என்பது நாம் கருத்துக்களை பதிவு செய்யும் இடம். ஆகவே அந்த நோக்கில்தான் என் கருத்துக்களை எழுதி இருந்தேன். வேறு யாரையும் வம்புக்கிழுக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது.

என்னுடைய வலைப்பக்கத்தில் முதன் முறையாக சில வீடியோக்களை பதிவு செய்திருக்கிறேன். (எல்லா வீடியோக்களுக்கும் வால்யூம் முக்கியம்)


முதலில் ஒரு குறும்படம்

இதனை இயக்கியவர் என்னுடைய மாணவர் தினேஷ் கார்த்திக். என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறார். இவர் விஷுவல் கம்யூனிகேசனோ, இல்லை வேறு திரைபடங்கள் சம்பந்தமான படிப்போ படிக்கவில்லை ப்ரோபசனலாக இல்லாமல் சும்மா ஜாலிக்காக இயக்கி ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று விட்டார்.இரண்டாவது ஒரு விளம்பரம் அல்லது குறும்படம்

பேஸ் புக்கில் இருந்து, தரவிறக்கியது. என்னை அட போட வைத்த ஒரு விளம்பரம்.
மூன்றாவதாக ஒரு நகைச்சுவை ரீமிக்ஸ் 

இதுவும் பேஸ் புக்கில் தரவிறக்கியதுதான். நன்றாக மிக்ஸ் செய்திருக்கிறார்கள். நடிகர் ராமராஜன் தற்போது விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார் என்று வேண்டுகிறேன்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

December 13, 2010

ரஜினியிடம் நறுக்கென்று நாலு கேள்விகள்...

கொஞ்ச நாளைக்கு நாளைக்கு முன்னாடி "கழுத்தறுத்த ஏர்டெல்" என்று சொந்தகதை சோகக்கதை ஒன்றை எழுதி இருந்தேன். அதை படித்த யாரோ ஏர்டெல்காரனிடம் போட்டு கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாளாக நெட் கட். ஆகவே கிடைக்கிற கேப்பில் பதிவிடுவெனா? இல்லை பின்னூட்டம் இடுவேனா? இல்லை வந்த பின்னூட்டங்களுக்கு பதிவிடுவேனா? ஆகவே மக்களே அப்பப்ப வந்துதான் படிக்க வேண்டி இருக்கிறது. மன்னிக்கவும்.


ரஜினி பிறந்த தினம் அன்று அவரை பற்றி பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நான் எப்போதுமே தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதில்லை. ஆனால் இன்னொருவர் கூறும் கருத்துக்கு என் தரப்பில் இருந்தும் சில கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லைதானே. இது கண்டிப்பாக பிளாசபி பிரபாகரன் அவர்களின் பதிவுக்கு எதிர்வினை அல்ல. ரஜினி பற்றி எழுத வேண்டியது இதனுடன் இணைத்து எழுத வேண்டியதாகி விட்டது.டிஸ்க்: இனிமேல் வரப்போவது ஒரு பக்கா ரஜினி ரசிகனின் சோம்படித்தல். பிடிக்காதவர்கள் தயவுசெய்து இதற்கு மேலே படித்து கடுப்பாக வேண்டாம்.


என்னை நானே கேட்டு கொள்கிறேன், "ரஜினி எனக்கு என்ன செய்தார்? நான் ஏன் அவருக்கு ரசிகன் ஆக வேண்டும்? அவரை தலைவா என்று கூப்பிடும் அருகதை அவருக்கு உண்டா?" இந்த கேள்விகள் ஒவ்வொரு ரஜினி ரசிகனிடமும் கேட்கபடுகிறது. மேலும், "அவர் அரசியல் வசனங்களால் ரசிகனை உசுப்பேற்றுகிறார். ரசிகனை முட்டாள் ஆக்குகிறார். வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகிறார்." என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இவை எல்லாம் அதிகமானது பாட்சா படத்துக்கு பிறகுதான். ஆனால் பாட்சா படம் வருவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவருக்கு நான் ரசிகன். அப்போது அரசியல் எனக்கு தெரியாது. அதன் பின் அவர் அரசியல் வசனம் பேசும்போதெல்லாம் அதனை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு மகிழ்ந்தது கிடையாது. இருந்தும் ரஜினி என்னை வசீகரித்தார். காரணம் ரஜினியின் மதி மயக்கும் பேச்சல்ல. அவரிடம் இருக்கும் ஏதோ ஒரு அமைதி. இது பொய்யாக இருந்தாலும் (ரஜினி நடிக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்) அது எனக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கிடையாது. அப்படியே அமைதியாய் இருப்பது போல் எத்தனை நாள் நடிக்க முடியும்? ஒரு கட்டத்தில், "சைலன்ஸ் பேசிக்கிட்டிருக்கென்ல!!" என்று குட்டு உடைந்து விடும்.


சரி, அவரை ஏன் தலைவர் என்று சொல்ல வேண்டும்? யாரை தலைவர் என்று கூப்பிடவேண்டும் என்று எனக்கு தெரியும். அதை எனக்கு யாரும் கத்து தர தேவை இல்லை. என் வீட்டு பாத்ரூமை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்? (நன்றி கமலஹாசன்). நாட்டில் பல பரதேசி, பன்னாடைகளை எல்லாம் தலைவன் என்று கூப்பிடுகிறார்கள். அப்போது வராத கோபம், இவரை சொன்னால் மட்டும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை. பொதுவாக மத எதிர்ப்பாளர்கள் அல்லது மாற்று மதத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவரை தாக்கும்போது (சொல் மூலம்), அந்த மதத்தில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் பேர்வழி என்று உப்பு சப்பில்லாத அல்லது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை பிடித்து தொங்குவார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று தன்னுடைய மன வக்கிரங்களை தீர்த்து கொள்வார்கள். அப்படித்தான் இருக்கிறது தற்போது ரஜினியை வசை பாடுபவர்கள் நிலையும்.


இந்த பத்தி மட்டும் பிரபாகரன் அவர்களுக்கு...
"ரஜினி தன் மகள் திருமணத்துக்கு பிரியாணி போடுகிறேன் என்று பொய் சொல்லி எந்திரன் பார்க்க வைக்கிறார்." என்பது மிகப்பெரிய நகைச்சுவை. தனக்கு நடனம் தெரியாது என்றுதானே சொல்லி இருக்கிறார்? எல்லோரும் பிரபுதேவா போல, விஜய் போல கமல் போல ஆடி விட முடியுமா? அவர்களுக்கு எளியதாக தோன்றும் சில நடன அமைப்புகள் எனக்கு கடினமாக தோன்றும். எனக்கு எளிதாக இருக்கும் அமைப்புகள் இன்னொருவருக்கு கடினமானதாக இருக்கும். இதை ஒரு பிரச்சனை என்று சொல்லலாமா? மைனா பற்றி ரஜினி புகழ்ந்தது பற்றி, ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்லும்போது இப்படி சொல்வது இயல்புதானே? இதுவும் ரஜினியை குறை கூற எடுத்துக்கொண்ட உப்பு சாப்பிலாத காரணம் தானே? 

சரி அடுத்த கேள்வி, உங்க தலைவன் நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுக்குரேன்னு சொன்னாரே? என்ன ஆச்சு? அரசு எல்லா ஆயத்த பணிகளையும் செய்து விட்டது. இன்னும் ஒரே ஒரு கோடி மட்டும்தான் வர வேண்டி இருக்கிறது. ரஜினிக்காகத்தான் வெயிட்டிங் என்பது போல உள்ளது இந்த கருத்து. "இந்த திட்டம் செயல்படுத்தும்போது பணம் ஒரு பிரச்சனை என்று யாரும் நினைத்தால், தான் அதற்காக ஒரு கோடி கொடுக்கத்தயார்." என்றுதானே சொன்னார். "என்னவோ ரஜினியின் ஒரு கோடியை வைத்துத்தான் நதிநீர் இணைப்பு திட்டமே நடக்க போகிறதேன்பது போல இருக்கிறதே." எங்கள் ஊரில் ஏடாகூடமான பழமொழி ஒன்று உண்டு. "பாவாடை அவிழ்ந்தது தப்பில்லை? கொழுந்தன் சிரிச்சதுதான் தப்பு என்கிற மாதிரி." அரசு திட்டங்களை நிறை வேற்றாமல் இருப்பது தவறில்லை. ரஜினி ஒரு கோடி கொடுக்கிறேன் என்று சொன்னதுதான் தப்பு. அப்படியே ஒரு கோடி கொடுத்து விட்டாலும், "கறுப்பு பணத்தில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்." என்று வாய் கூசாமல் சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இதே மாதிரிதான் கன்னடனை உதைக்க வேண்டும் என்று சொன்ன விஷயமும்.


ரசிகன் ஒருவரிடம் இருக்கும் விஷயம் பிடித்து அபிமானி ஆகிறான். இல்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவதில்லை. ரஜினி ரசிகன் தெளிவாக இருக்கிறான். அவனுக்கு ரஜினியிடம் இருந்து எதுவும் தேவை இல்லை. அவர் முதல்வரானால் கூடுதல் மகிழ்ச்சி. அவ்வளவுதான். அவருடைய மகள் திருமணத்துக்கு கூப்பிடவில்லை என்றோ? பிரியாணி போடவில்லை என்றோ கோபித்து கொள்ள போவதில்லை. இனி வருங்காலத்தில் ரஜினி ரசிகன் ஆகப்போகிறவனும், என்னமோ அவரின் வாய்ஜாலங்களுக்கு மயங்கி ரசிகனாகப் போவதில்லை. என்னுடைய அக்காவின் பேத்தி வயது ஒண்ணரைதான் , (நேற்று முத்து படம் பார்க்கும் போது) ரஜினி திரையில் தோன்றினால் "ரோபோ தாத்தா! ரோபோ தாத்தா!!" என்று கத்துகிறாள். இந்த அன்பின் பின்னால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதுவே எல்லா ரசிகனின் நிலையும். ஆகவே ரஜினி ரசிகனைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். 

ரசிகன் என்று இந்த பதிவில் கூறி இருப்பதெல்லாம் நான் மற்றும் என் போன்ற ரசிகர்களை குறிப்பது. பொது மக்களை குறிப்பதல்ல. எது எப்படியோ 


அறுபத்து ஒன்றாம் பிறந்த தினத்தை கொண்டாடி இருக்கும் தலைவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

December 8, 2010

2010 எப்படி இருந்தது? - அதிரடி சர்வே....ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு முடியப்போகிறது. இந்த வருடத்தை பற்றி நினைத்து பார்க்கும்போது நிறைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். அவற்றை ஒன்று திரட்டி பார்க்க ஒரு சிறிய நகைச்சுவையான வினாடி வினா.
1. இந்த வருடம் பதிவர்களால் அதிகம் விவாதிக்க பட்ட விஷயம் எது?
      1. நித்தியானந்தா விவகாரம்
      2. ஸ்பெக்ட்ரம் ஊழல்
      3. லிவிங் டுகெதர் .
      4. எந்திரன். 
      5. போபால் விபத்து தீர்ப்பு.

2. இவற்றில் எதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை?
     1. விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்
     2. நித்தி - ரஞ்சி வீடியோ ஒளிபரப்பு 
     3. போபால் மற்றும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு.
     4. எந்திரனுக்கு சன் டிவி செய்த விளம்பரங்கள்.

3. பதிவர்களால் அதிகம் வெளுக்கப்பட்ட இயக்குனர் யார்?
     1. செல்வராகவன் - ஆயிரத்தில் ஒருவன்.
     2. மணிரத்னம் - ராவணன் 
     3. சங்கர் - எந்திரன் 
     4. சாமி - சிந்து சமவெளி

4. இவர்களில் யார் உண்மையிலேயே டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள்?
     1. டாக்டர் விஜய் 
     2. டாக்டர் விஜயகாந்த் 
     3. டாக்டர் கலைஞர் 
     4. டாக்டர் கேதன் தேசாய்.

5. மிகுந்த எதிர்பார்ப்பில் வந்து மண்ணை கவ்விய படம் எது?
     1. சுறா
     2. அசல்
     3. வ குவாட்டர் கட்டிங்
     4. ராவணன் 
     5. ரத்த சரித்திரம் 

6. எதிர்பாராமல் வெற்றி பெற்ற படம் எது?
    1. அங்காடித்தெரு 
    2. களவாணி
    3. தமிழ் படம் 
    4. மைனா 
    5. பாஸ் என்கிற பாஸ்கரன் 

7. இவர்களில் யார் சிறந்த பேச்சாளர் ?
   1. நீரா ராடியா - போனில் 
   2. அஜீத்குமார் - பாராட்டுவிழாவில் 
   3. கலைஞர் - எப்போதுமே 
   4. ஜெயலலிதா - ஆர்ப்பாட்டத்தில் 

8. இவர்களில் யார் மிக நேர்மையானவர்கள்?
   1. லலித் மோடி 
   2. சுரேஷ் கல்மாடி 
   3. அ. ராசா 

9. இவர்களில் யார் சிறந்த ஜோடி?
   1. பிரபுதேவா - நயன்தாரா 
   2. சதீஷ் - சீதா 
   3. கமலஹாசன் - கவுதமி 

10. அதிகமான பதிவுகளில் இடம்பெற்ற கதாநாயகன் யார்?
   1. டாக்டர் விஜய் 
   2. விஜய டி ராஜேந்தர் 
   3. கவுண்டமணி 

11. இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் யார்?
   1. சச்சின் டெண்டுல்கர் 
   2. ஆக்டோபஸ் பால் 
   3. கம்ரான் அக்மல் 

12. படித்தவுடன் குபீரென்று சிரிப்பு வரவழைத்தது எது?
   1. கலைஞரின் சொத்து கணக்கு விபரம்
   2. சாரு நிவேதிதா அவர்களின் எந்திரன் விமர்சனம்
   3. கேப்டன் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம் என்ற செய்தி. புத்தாண்டு ஸ்பெஷல் படம் - ஒரே குடும்பம் ஓகோன்னு வாழ்க்கை....


தவறாமல் உங்கள் வாக்குகளை அளியுங்கள் 
பின்னூட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளியுங்கள்.

முழுவதும் படிக்க >>

December 1, 2010

இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.


டிஸ்க்: இது சொந்த ஊர் புராணம் மற்றும் புலம்பல். கொஞ்சம் போரடிக்கும்.

எனக்கு சிறு வயது முதலே என் சொந்த ஊர் விருதுநகர் மீது தனிப்பட்ட பிரியம் (சொந்த ஊரின் மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது?). எங்கள் ஊரை திரையில் காட்டிய இரண்டே படங்கள் ஒன்று வெயில்(வசந்தபாலன் விருதுநகர்காரர்), மற்றும் ரேணிகுண்டா(படத்தில் காட்டுவது ரேணிகுண்டாவே அல்ல). குறுகிய பரப்பளவு, தண்ணீர் பஞ்சம், குறுகிய தெருக்கள் என்று பல குறைகளை தாண்டி இந்த ஊருக்குள்ளே வரும்போதே தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை போல மனம் குதூகலிக்கும். படிக்கும் காலத்தில் யாராவது இந்த ஊரை குறை கூறி விட்டால் உடனே கோபம் பொத்துக்கொண்டு வரும். கல்லூரியில் படிக்கும்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பன், "இப்படி வறண்ட பாலைவனத்தில் எப்படித்தான் இந்த மனிதர்கள் இருக்கிறார்களோ?" என்று எகத்தாளமாக கூறினான். உடனே என்னிடம் பதில் வந்தது "நாளைக்கே எங்கள் ஊர் பசுமையாக மாறினாலும், இல்லை இப்படி வறண்டு போனாலும் அதை தாங்கும் சக்தி இந்த ஊர் மனிதர்களுக்கு இருக்கிறது. ஆனால் உங்கள் ஊர் ஒரு வருடம் மழை இல்லாமல் போனால் கூட உங்களால் தாங்க முடியாது!" என்று. எந்த ஒரு கணத்திலும் இதை நான் விட்டு கொடுத்ததில்லை. 


சுமார் நான்கரை ஆண்டுகள் சென்னையில் வேலை பார்த்துவிட்டு, ஊர் திரும்பி இருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவருமே பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருப்பதால் ஊருக்குள் யாருமே இல்லை. எனக்கு கொண்டாட்டம் என்றால் பண்டிகை காலம்தான். அப்போதுதான் அனைத்து நண்பர்களும் ஊர் திரும்புவார்கள். தீபாவளி அன்று வ குவாட்டர் கட்டிங் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அந்த நண்பன் சொன்ன ஒரே வார்த்தை, "எனக்கு தெரிந்து இருபது வருடங்களாக மாறாமல் இருப்பது இந்த ஊரு ஒண்ணுதான்." அதாவது இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த ஊர் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சியும் கிடையாது. நான் சிந்தித்து பார்த்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இருந்த ஊர் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் சீர்கெட்டுத்தான் போயிருக்கிறது.

 எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் மிக அதிகம். முன்பெல்லாம்  இரண்டு நாளைக்கு ஒரு தடவை முனிசிபல் குழாயில் குடிதண்ணீர் விநியோகிக்கப்படும். அதிகம் போனால் மூன்று நாளைக்கு ஒருமுறை. கடந்த சில ஆண்டுகளாக சுமார் இருபது நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க படுகிறது. இது எங்களுக்கு பழகி விட்டது. எப்படி இரண்டு மணி நேர மின்வெட்டு பழகி விட்டதோ அதுபோல. இந்த ஆண்டு விருதுநகரில் வரலாறு காணாத மழை. இப்போதும் வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்க படுகிறது. அதாவது நல்ல மழை பெய்தால் கூட சரிவர குடிநீர் விநியோகம் கிடையாது. ஊரை சுற்றி சிறு சிறு கண்மாய்கள், அணைகள் இருக்கின்றன. ஆனால் மதகுகள் தான் இல்லை. மழை பெய்தால் அனைத்து தண்ணீரும் வீணாக வெளியேறி விடும். இது குடிநீரில் உள்ள குழறுபடி. 

எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் மதுரை மற்றும் சிவகாசி. இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் விருதுநகருக்கு என்று தனியாக மொபாசல் பேருந்துகள் கிடையாது. மதுரை டு சிவகாசி, மதுரை டு கோவில்பட்டி, மதுரை டு திருநெல்வேலி ஆகிய பேருந்துகள்தான் உண்டு. இவை விருதுநகர் வழியாகத்தான் செல்லும். ஆனால் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது விருதுநகர்காரன் யாரும் பேருந்தில் ஏறிவிட கூடாது. கண்டக்டர் பேருந்து அருகில் நின்று கொண்டு, "விருதுநகர் ஏறாதே!!" என்று கூவிக்கொண்டே இருப்பார். பேருந்து நிரம்பி கிளம்பும் நேரத்தில் போனால் போகட்டும் என்று ஏற்றி கொள்வார்கள். அதாவது விருதுநகர்காரன் ஏறி உட்கார்ந்து விட்டால் சிவகாசிகாரனுக்கோ கோவில்பட்டிகாரனுக்கோ சீட் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த திட்டம். இது தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கடைபிடிக்கபடுகிறது. என்னை மாதிரி ஒரு சிலர் கண்டக்டரின் பேச்சை கேட்காமல் முன்னமே ஏறி உட்கார்ந்து கொண்டு, கண்டக்டரின் நெற்றிக்கண் பார்வையை கண்டுகொள்ளாமல், இருந்து விடுவோம். ஆனால் விபரம் புரியாத சிலர் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள். இதில் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் இன்னும் மோசம். எல்லா பேருந்துகளுமே ஊருக்குள் வருவதே இல்லை. ஏனென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்.
யாருமே இல்லாத புதிய பேருந்து நிலையம்

தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் தலைவிதிக்கு எங்கள் ஊர் மட்டும் என்ன விதி விலக்கா? எங்கள் ஊரிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் உண்டு. ஜன சந்தடி நிறைந்த இடத்தில் சிறிய பழைய பேருந்து நிலையம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் ஒரு புதிய பேருந்து நிலையம். இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி அப்போதிருந்த எம்எல்எ வீம்புக்காக கட்டியது. ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் கட்டப்பட்ட அந்த பேருந்து நிலையம் தற்போது சீந்துவாரற்று கிடக்கிறது. எப்போதாவது சில சமயம் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமலேயே புதியபேருந்து நிலையத்துக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு செல்லும். இந்த மாதிரி பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் போவதற்கும் காரணம் இருக்கிறது.

நகரின் பல்வேறு சாலைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்


உலகத்தரமான சாலைகளை உடையது எங்கள் ஊர். மலைப்பாங்கான ஊராக இல்லாமல் சமவெளியில்தான் எங்கள் ஊர் அமைந்துள்ளது. ஆனால் ஒரு மலை பிரதேசத்தில் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும். ஆங்காங்கே சர்ப்ரைஸ் குழிகளும் உண்டு. வாகனத்தில் மணிக்கு பதினைந்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் உங்களால் செல்ல முடியாது. மீறினால் ஒன்று டயர் பஞ்சராகும், இல்லை ஷாக் அப்சார்பரின் சீன் முடிந்து விடும். எங்கள் ஊர் பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு. "விருதுநகருக்குள் வண்டி ஒட்டி பழகி விட்டால். உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வண்டி ஒட்டி விடலாம்." ஊர் முழுக்க இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கபட்ட பாதாள சாக்கடை திட்டம். அதற்கு முன் மெயின் ரோடுகள் மட்டுமே குண்டும் குழியுமாக இருந்தன. தற்போது ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் சாலையும் நாசமாகி விட்டது. ஒட்டுமொத்ததில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விருதுநகரில் சாலை என்று ஒன்று இருந்ததாக நான் பார்த்ததே இல்லை.

இந்த சாலை மட்டும் பளிங்கு மாதிரி இருக்கேண்ணு பாக்குறீங்களா?
இங்கதான் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களின் வீடு இருக்கிறது 
இப்படி தொட்ட இடமெல்லாம் ஏதாவது ஒரு குறை இல்லை குழறுபடி. இதற்கு பாதி காரணம் அரசியல்வாதிகள் என்றால் மீதி காரணம் மக்கள். மக்கள் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். எனக்கு விபரம் தெரிந்து எம்எல்எ வாக இருந்தவர்கள் திரு ARR சீனிவாசன் (திமுக-1996), திரு தாமோதரன்(காங்கிரஸ்-2001), திரு வரதராஜன் (மதிமுக-2006). இவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. நான் ARR சீனிவாசன் அவர்களை வோட்டு கேட்டு வரும்போது பார்த்திருக்கிறேன். மேலும் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்ற இருவரையும் வோட்டு கேட்டு வரும்போது பார்த்ததோடு சரி. இப்படி அரசியல்வாதிகள் எல்லாம் ஒரு கணக்குக்காக எங்கள் ஊரை வைத்திருக்கிறார்களே ஒழிய அதன் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ததில்லை.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

எங்கள் ஊர் வியாபார தலமாக இப்போதும் சிறந்து விளங்குகிறது. கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த ஊர். அதனால்தான் என்னவோ இருபது வருடங்களுக்கும் மேலாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பெற்று வருகிறது. 120 ஆண்டுகளை கடந்த காமராசர் படித்த ஆண்கள் பள்ளி, 100 ஆண்டுகளை கடந்த பெண்கள் பள்ளி இன்னும் இயங்கி வருகிறது. இத்தனை சிறப்பம்சம் கொண்ட எங்கள் ஊர் எந்த வித முன்னேற்ற பாதையிலும் செல்லாததை நினைத்து வருத்தம் அடைகிறேன்.


சொல்ல மறந்துட்டேங்க. எங்க ஊர்தான் விருதுநகர் மாவட்டத்தின் தலைநகர். ஒரு மாவட்ட தலைநகருக்கே இந்த நிலைமை.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

November 27, 2010

தேர்தலுக்கு முன் - பின் கற்பனையான உண்மை சம்பவம்

உண்மை சம்பவம் என்றால் ஏற்கனவே நடந்ததுதான். ஆனால் இது இனிமேல் நடக்கபோவது ஆனாலும் ஏற்கனவே நடந்தது. ஆகவே தான் இந்த மாதிரி குழப்பமாக ஒரு பெயர் வைத்தேன். சரி பெயர்ல என்ன இருக்கு? விட்டுத்தள்ளுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோம். பொதுவாக கருத்து கணிப்பு என்பது தேர்தலுக்கு முன்பாக நடக்கும் ஒரு சம்பிரதாயம். இங்கே கருத்து மட்டும் கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்ற கற்பனையான உண்மைகளை அளித்திருக்கிறேன்.தேர்தலுக்கு முன்...

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்.
"அட போப்பா சொந்தகாரன்னு நெனச்சு ஓட்டு போட்டது தப்பா போச்சு. போன வருஷம் என்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட சகலை பேத்திக்கு இன்ஜினியரிங் காலேஜுல சீட்டு வாங்கித்தான்னு கேட்டா, பய கண்டுக்கவே இல்ல. இந்த தடவை அவன தோக்கடிச்சதான், தக்காளி அவனுக்கு நான் யாருன்னு புரியும்"

கீழ்தட்டு நகரவாசி
"தோ பாருப்பா நமக்கு இந்த ஸ்பெக்ரம் கிக்ரம்லாம் என்ன கருமமோ தெரியாது. ஓட்டுக்கு ஆயரம் ரூவா, ஷோக்கா கலர் டீவி, கேஸ்டவ்வு இதெல்லாம் யாருபா குடுப்பா? இதே அந்த அம்மாவா இருந்தாக்க அத்த கொண்டா இத்த கொண்டாண்ணு ஒரே ராவடிதாம்பா பண்ணும். முப்பது வருஷமா நான் தலைவருக்குத்தாம்பா ஓட்டு போட்ணுகிறேன். இப்போ திடீர்னு வேற யார்ணா ஒருத்தருக்கு போட எப்டிப்பா மன்சு வரும்?"

கீழ்தட்டு கிராமவாசி
"யாரு வந்தாலும் எங்களுக்கு எதுவும் செய்ய போறதில்ல. இப்ப கொஞ்ச நாளத்தான் ஓட்டுக்கு காசு அப்டிண்ணு ஏதோ தர்ராங்க. யாரு ரொம்ப காசு கொடுக்குராங்களோ அவுங்களுக்கு போடுறதுதான முறை?"

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"பாருங்க பெட்ரோல் விலை, காய்கறி விலை, பால்விலைனு எல்லாம் ஏறி கிடக்கு. என்டிடிவீ பாத்தீங்கண்ணா ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி போட்டு கிழி கிழிண்ணு கிழிக்கறான். அம்பது வருஷமா நாடாண்டு இவணுங்க என்னத்த கிழிச்சுட்டாங்க? யாராவது நியூபேஸ் வந்தா நல்லா இருக்கும் சார்."

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"இதோ பாருங்க எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் யாருக்கு போட சொல்றாரோ அவருக்கு ஓட்டு போட்டுடலாம்னு இருக்கேன்."

கல்லூரி மாணவர்
"சார் அரசியலே ஒரு சாக்கட சார். நம்ம நாடே நாறிக்கிடக்குது. இளைஞர்கிட்ட ஒரு எழுச்சி ஏற்பட்டாத்தான் சார் நாடு முன்னேறும். ஆயுத எழுத்து படத்துல கூட மணி சார் இதத்தான் சொல்லி இருப்பார். அரசியல்ல இளைஞர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கணும் சார். அப்பத்தான் அப்துல்கலாம் கண்ட 2020இல் வல்லரசு கனவு நிறைவேறும் சார். இதை தீமா வச்சு நான் எழுதிய கவிதை கூட எங்க கல்லூரில ஃபர்ஸ்ட் பிரைஸ் வின் பண்ணிருக்கு சார்."

பெருவணிக முதலாளி
"யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி நம்ம சைட்ல இருந்து வெய்ட்டா கவனிச்சுடுவோம். எல்லா கட்சியிலயும் நம்ம சாதிக்காரனுங்கதான் நிக்க போறாங்க. அதனால கவல இல்ல."

அரசு ஊழியர்
"அந்தம்மா வந்த உடனே செய்யுர மோத வேல எங்க சலுகைகள எல்லாம் கட் பண்றதுதான். ஸ்பெக்ட்ரமோ, போபர்ஸோ நமக்கு ஒண்ணும் பாதிக்க போறதில்லை. என்ன கேட்டா இவுங்களே மறுபடியும் ஜெயிக்குறதுதான் நியாயம். இது மட்டுமில்லாம எங்க சங்கத்துல எல்லாரும் இவருக்குத்தான் ஓட்டு போடனும்னு முடிவு பண்ணிட்டாங்க. நா மட்டும் என்ன பண்ண முடியும்?"

பதிவர்கள்
"முட்டாள் பொதுமக்கள்!, தேர்தலே வியாபாரம். அம்மா ஐநூறு கோடி என்றால் அய்யா பத்தாயிரம் கோடி ஊழல். பேசாம யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லைன்னு ஓட்டு போட்டுட வேண்டியதுதான். இந்த நாட்ட யாராலையுமே காப்பாத்த முடியாது."


தேர்தல் அன்று ....

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்
"என்னதான் இருந்தாலும் சொந்தக்காரன், விட்டு கொடுக்க மனசு வருமா? நம்ம சாதிசனம் பதவில இருந்தத்தானே நமக்கு மரியாத? அதுவுமில்லாம இந்த தடவ நிறையா பண்றதா சொல்லிருக்கான். (பம்முகிறார்) அதனால ஒன்னுக்கு நாலா ஓட்டு போட்டிருக்கேன்."

கீழ்தட்டு நகரவாசி
(கண்களில் போதை தெரிகிறது) "இன்னதான் சொல்லு, தலைவர் தலைவர்தாம்பா. ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுக்க யாருக்கு மன்சு வரும். கருக்கல்லயே ஊட்டுக்கு வந்து ரெண்டு பிரியாணி பொட்டலம், ஒரு குவாட்டர் பாட்லும் குட்த்தாணுங்க. பிரியாணிய பிர்ச்சி பாத்தா ரெண்டு ஆயரம் ரூவா நோட்டு. ஓத்தா இவுங்க குத்த இந்த ரூவாய்க்கு சலாம்போட்டு வாய்க்க முயுக்க வோட்டு போட்லாம்பா." (மயங்கி சரிகிறார்).

கீழ்தட்டு கிராமவாசி
"அதெல்லாம் தெரியாதுங்க. ரெண்டு பேரும்தான் ரூவா குடுத்தான், இருந்தாலும் நம்ம சாதிக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல? நம்ம சாதிக்காரப்பய நிக்கிற கச்சிக்குத்தான் ஓட்டு போட்டேன்."

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"சார் இந்த நாடெல்லாம் எப்ப திருந்த போகுது? காலைல ஓட்டு போட போனா ஐடில மூஞ்சி சரியா தெரியல, ரேஷன் கார்டு கொண்டு வான்னு அலக்கழிச்சாங்க. கடைசில என் வோட்ட ஏற்கனவே போட்டுட்டாணுங்கலாம். என்ன சார்னு நியாயம் கேட்டா அடிக்க வர்ற மாதிரி பாக்குராணுங்க. இதெல்லாம் நமக்கு தேவையா?"

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"நான் அப்பவே சொன்னேன் ஓட்டு போடுர எடத்துக்குலாம் போகாதீங்க. அங்க சண்ட நடக்கும்னு. இந்த மனுஷன் கேட்டாத்தானே? இப்ப பொலம்புராரு. நல்ல வேளை நான் போகல. கலைஞர் டீவில நல்ல படம் போடுறான். பாக்க உக்காந்துட்டேன்."

கல்லூரி மாணவர்
"என்ன சார் எலெக்சன் ஓட்டுண்ணு. அதான் அப்பவே சொன்னேன்ல நம்ம நாட்டுக்கு இளைஞர்கள்தான் தலைவரா வரணும்னு. இங்க வேட்பாளரா நிக்கிறவங்கள்ள எத்தனை பேரு இளைஞர்கள்? அதோட நான் ஒருத்தன் ஓட்டு போடாததுனால எலெக்சன் என்ன நடக்காமலா போய்டும்? போங்க சார். காலேஜுக்கு ஒருநாள் லீவு விட்டுருக்கான் அன்னிக்கும் பூத்துக்கு போ, ஓட்டு போடுன்னுட்டு."

பெருவணிக முதலாளி
"அதான் சொன்னேன்ல, யாரு வந்தாலும் நமக்கு கவல இல்ல. நான் ஓட்டு போட்டுத்தான் இங்க ரெண்டாயிட போகுதா? அதெல்லாம் எலெக்சன் முடிஞ்சு ரிசல்ட் வரட்டும் அப்ப பாத்துக்கலாம்."

அரசு ஊழியர்
"எங்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவுங்களுக்க்த்தானே ஓட்டு போட முடியும். இப்ப மூணு மாசத்து முன்னாடி கூட DA இருபத்தாஞ்சு பர்சண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க. அதனால நம்ம ஓட்டு எப்பவுமே தலைவருக்குத்தான்."

பதிவர்கள்
"இன்னிக்கு ஒரு நாள்தான் ஆபீஸ் லீவு. இதுக்காக சொந்த ஊருக்கு போயிட்டு வரமுடியுமா? நான் போடுரா ஓட்டுனால இந்த நாட்டோட தலையெழுத்து என்ன மாறிடவா போகுது? அதான் இங்க ரூம்லயே தேர்தல் அப்டெட்ஸ் பார்த்து பதிவு எழுதிக்கிட்டிருக்கேன். இந்த பதிவுக்கு தான் ஹிட்சும், வோட்டும் அதிகமா கிடைக்கும்." 

தேர்தல் முடிவுகள் 

45 சதவீதம் வாக்குப்பதிவு. ஆளும்கட்சி மயிரிழையில் முன்னணி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலுக்குப்பின் ...

மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...