விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 30, 2010

கடவுளும் நம்பிக்கையும்... கம்யுனிசமும்...


இந்த பதிவுலகத்தில் யாருக்கும் தன் சொந்த கருத்துக்களை சொல்லவும் உறுதிப்படுத்தவும் உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு அதை விமர்சனம் செய்யவும் உரிமை இருக்கிறது. ஆனால் பிறரின் மனதை புண்படுத்தாமல் சொல்வதில்தான் அதன் வெற்றியே அடங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவை எழுதுகிறேன். பதிவை படித்துவிட்டு "வந்துட்டாண்டா அதிபுத்திசாலி!!", என்று யாரும் கிளம்பி விடவேண்டாம். தவறு இருந்தால் தயங்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுலகம் என்றில்லாமல் எங்கு பார்த்தாலும் இருக்கும் ஒரு விஷயம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது. கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சமுதாய ஏற்றதாழ்வுகள் சார்ந்த கம்யுனிச சிந்தனையாகவே இருக்கின்றன. நான் கம்யுனிசத்தை முழுமையாக படித்தவன் இல்லை. அதே போல கடவுளையும். இரண்டிலும் எனக்கு சில புரிதல்கள் உள்ளன. அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


நண்பர் ஒருவர் கம்யுனிசம் மீது மிகுந்த பற்று உடையவர். அவரிடம் "நண்பரே, கேரள அரசின் பாரபட்சம் உங்களுக்கு தெரியவில்லையா? வங்காளம் இந்நேரம் சொர்க்கம் ஆகி இருக்க வேண்டுமே? சீனாவில் ஊழல் நடக்கவில்லையா?" இது மாதிரியான கேள்விகள் கேட்டால் அவர் சொல்லும் பதில், "அவர்கள் எல்லாம் போலி கம்யுனிஸ்டுகள். சந்தர்ப்பவாதிகள். இவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்பதால் கம்யுனிசம் எப்படி தவறானதாக, போலியாக இருக்க முடியும்?" என்று கேட்டார். அன்பே சிவத்தில் கமல் சொல்வது போல "காதல் மாதிரி கம்யுனிசமும் ஒரு பீலிங் அல்லது உணர்வு. அது கட்சி அல்ல, சங்கம் அல்ல. சக மனிதனிடம் இருக்கவேண்டிய அன்பின் வெளிப்பாடே கம்யுனிசம். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியே கம்யுனிசம்." என்றும் கூறினார். "சரி அப்படியென்றால் நிறைய பேர் அதனை எதிர்க்கிறார்களே?" என்று கேட்டதற்கு, "கம்யுனிசத்தை யாருக்கும் புகட்ட முடியாது. அது புரிதலில் வரும். உணர்தலில் வரும். இன்று எதிர்ப்பவர்கள் எல்லாம் அரைகுறையாக கம்யுனிசத்தை படித்து தவறாக புரிந்து கொண்டவர்கள்." என்றும் விளக்கம் கூறினார். இவர் மட்டுமல்ல இன்று கம்யுனிச தத்துவம் பேசும் யாரை கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.

இது இவர்களின் நம்பிக்கை அல்லது புரிதல். சரி இதே பதிலை நான் கடவுள் நம்பிக்கையை வைத்து சொன்னால் கேட்பார்களா? மாட்டார்கள். நான் சொல்கிறேன், கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி ஒரு சில பேர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதால் கடவுளே இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம்? அவர்கள் எல்லாம் போலி மதவாதிகள், போலி சாமியார்கள். அவர்களை வைத்து கடவுள்களை மதிப்பிடுவது தவறு. கம்யுனிசம் போல கடவுளும் ஒரு பீலிங்தான். அதாவது உணர்வு. கடவுளை, கடவுளின் இருப்பை ஒருவருக்கு புகட்ட முடியாது. அவரால் மட்டுமே உணர முடியும். மதம் என்பது கட்சி அல்ல, சங்கம் அல்ல. கடவுளை அடைவதற்கான வழி. அதனை தவறாக புரிந்து கொண்டு மனிதன் அடித்துக்கொண்டால் அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்? இன்று கடவுளை எதிர்ப்பவர்கள் எல்லாம் அரைகுறையான விஷயங்களை படித்து புரிந்து கொண்டு எதிர்ப்பவர்கள். இன துவேசம் காரணமாக ஒருவன் நல்ல விஷயங்களே சொன்னாலும் ஏற்க மறுப்பவர்கள்.

உதாரணமாக "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!" இது கீதையில் சொன்னது. உங்களை பொறுத்தவரை பார்ப்பனன் கட்டி விட்ட கதை.நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மூலதனம் புத்தகத்தையே யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்பவர்கள் யார் எழுதினார்கள் (அவர்களை பொறுத்தவரை) என்றே தெரியாத, எப்போது எழுதப்பட்டது என்றும் தெரியாத ஒரு புத்தகத்தின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியம் இருப்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்? நன்றாக என்பதற்கு பரிபூர்ணமாக என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதே போல "கடமையை செய் பலனை எதிர்பாராதே!", என்று சொல்வது மக்களின் எதிர்பார்ப்புகளை நீர்த்து போக செய்யும் முதலாளித்துவ வார்த்தையாம். கடமையை செய்யும்போது அதில் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் வேலை சரியாக நடக்காது. என்பதாகவும் அர்த்தம் கொள்ளலாமே? இல்லை மற்றவர்களுக்கு நன்மை செய்வது நம் கடமை அதற்கான பலனை எதிர்பார்க்க கூடாது என்றும் கொள்ளலாமே?

சரி விதி என்பது சோம்பேறிகளின் வார்த்தை என்பதும் வாதமாக இருக்கிறது. விதி என்பது யாரோ ஒருவர் நாம் பிறக்கும்போதே எழுதி வைத்தது என்று சொன்னால் சிரிப்பாகத்தான் வரும். இதை அப்படி பிடித்து கொண்டு வாதம் செய்வது தவறானது. விஞ்ஞானம் சொல்வது போல ஒரு பொருள் ஒரு நிலையில் இருக்கும்போது அதன் சூழல், அதனுள் இருக்கும் ஆற்றல், போன்றவற்றினால் அதன் பயணம் பாதிக்கப்படும். வெளியில் இருந்து செலுத்தப்படும் ஆற்றல் எல்லாமே அதன் உள்ளிருப்பை பொறுத்தே எதிர்வினையை உருவாக்கும். இதுதான் விதி. 

சரி உங்கள் கடவுள்தான் சகலகலா வல்லவர் ஆயிற்றே அவர் நினைத்தால் நடக்காதது எதுவுமே கிடையாதே பின் ஏன் மனிதருக்குள் இந்த ஏற்றதாழ்வுகள்? என்று கேள்வி கேட்கிறார்கள். இதை பற்றி சொல்வதானால் பெரிய ஆராய்ச்சியே நடத்த வேண்டும். அந்த அளவுக்கு இதனுள் பல நுட்பமான, குழப்பமான விஷயங்கள் அடங்கி உள்ளன. அவற்றை பற்றி விளக்கி கூறும் அளவுக்கு இன்னும் நான் அறிவை பெறவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இதை சொன்னது விஞ்ஞானம். இது கடவுளுக்கும்தான். இதன்படியே உலகத்தில் இருப்பவர்களுக்கு நன்மையையும் தீமையும் நடக்கிறது. பிறப்பு, இறப்பு இவற்றுக்கு அப்பாற்பட்டு சில செயல்கள் நடக்கின்றன. நாம் பார்ப்பது, வசிப்பது எல்லாமே ஒரு மாயைதான். சிரிப்பாக இருக்கின்றதா? இதே கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் Matrix, Avataar போன்ற படங்கள். உடல் ஒரு இடத்தில், எண்ணங்கள் ஒரு இடத்தில். ஒரு மாய உலகத்தில் அனைவரும் அடிமையாக இருப்பது போல காட்டி இருப்பார்கள். சமுதாய ஏற்றதாழ்வுகள் என்பது பணம், தங்கம் போன்றவற்றுக்கு மதிப்பு கொடுத்து மனிதனாகவே உருவாக்கி கொண்டது.

"உலகத்தை கடவுள் படைத்தார் என்றால் அவரை யார் படைத்தது?" என்றும் கேள்வி கேட்கிறார்கள். கடவுள் என்று பெயர் வைத்து அவர், இவர் என்றெல்லாம் சொல்வது ஒரு வசதிக்குத்தான். அவருக்கு உருவமும் கிடையாது, முதல் முடிவும் கிடையாது. அண்டவெளியை போல Infinity. நமக்கு மேலே ஒரு சக்தி என்று சொல்வது தலைக்கு மேலோ வானத்திலோ அல்ல. நம்மை விட உயர்வான என்று பொருள் கொள்ள வேண்டும். கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் எல்லாமே, தியானத்தின் உன்னதத்தை உணர்த்த அமைக்கப்பட்டவை. அவை வழிபாட்டு கூடங்கள். அவற்றுக்கு நகையோ, பணமோ, பொருளோ காணிக்கையாக அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்வது மனிதனின் மூடத்தனம். பழங்கால விரதங்கள், சடங்குகள் எல்லாவற்றிலும் ஒருவித அறிவியல் உண்மை அடங்கி இருந்ததும், காலப்போக்கில் அவை மாறி வெறும் சம்பிரதாயங்களாகி விட்டதும் கவலைக்குரியது. இருந்தாலும் அவற்றை செய்வதால் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறதென்றால் தவறில்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை போரடித்துவிடும். போராட்டத்தை போக்க கடவுளை கேட்க தேவை இல்லை. போராட தேவையான சக்தியை கடவுளிடம் கேட்கலாம்.
நம் செயல்கள், வாழ்க்கை போன்றவற்றை பற்றி விவேகானந்தர் எழுதி உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்ற புத்தகங்களை படியுங்கள். இது இந்து மத நூலல்ல அவர்கள் மட்டும் படிப்பதற்கு. இது வேதம் அல்ல பார்ப்பனர்கள் மட்டும் படிப்பதற்கு. ஒரு ஆராய்ச்சிக்காக வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் முன்கூட்டியே எதையும் முடிவு செய்து கொள்ளாமல் படியுங்கள். இவை எல்லாமே ஒரு பாமரனுக்கு தேவை இல்லை. அவனை பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு. எந்த ஆதரவும் இல்லாத ஒருவனும் இந்த உலகில் இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அந்த பிடிப்புதான். பகுத்தறிவு என்று அதிலும் கை வைத்து விடாதீர்கள். 

ஐன்ஸ்டீன் சொன்னது.."ஒரு சிறு குழந்தை மிகப்பெரிய நூலகத்தினுள் நுழையும் போது அதன் கண்முன்னே லட்சக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி இருப்பதை பார்க்க முடியும். அவற்றை யார் எழுதியது, ஏன் எழுதினார்கள் என்று கண்டு பிடிக்கும் திறன் அதற்கில்லை. முழுவதும் படிப்பதும் சாத்தியம் இல்லாதது. கடவுள் என்னும் நூலகத்தின் முன்னால் உலகின் மிகப்பெரிய அறிவாளி மனிதனும் இந்த குழந்தையை போலத்தான்". 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

July 20, 2010

திரை விமர்சனம் எழுதுவது எப்படி?


பதிவுலகத்தில் எழுதப்படாத சட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒன்று ஏதாவது புது படம் ஒன்று வெளியாகி விட்டால் அதற்கு கண்டிப்பாக விமர்சனம் எழுதவேண்டும். அந்த படத்தை பார்த்து விட்டாலும், நாம் பார்த்த படம் நல்ல இருக்கா? இல்லையா? என்று குழம்பி பதிவுலகத்தில் வரும் விமர்சனங்களை படித்து அது நல்ல படமா? இல்லை மொக்கை படமா? என்று முடிவு செய்து கொள்பவர்கள் பலர். ஒரு சிலர் தங்களின் நாயகன் நடித்த படங்களை எப்படி விமர்சனம் செய்திருக்கிறார்கள்? என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அவர்களின் நோக்கம் படம் சூப்பர் என்று விமர்சனம் வரவேண்டும். இல்லாவிட்டால் கேவலமாக பின்னூட்டம் இட்டுவிட்டு வேறு ஏதாவது தளத்தில் அந்த படத்தை பாராட்டி இருக்கிறார்களா? என்று தேட சென்று விடுவார்கள். 

எது எப்படியோ திரை விமர்சனம் என்பது ஒரு பதிவருக்கு இன்றியமையாதது ஆகி விட்டது. ஆனால் என் போன்ற பெரும்பாலான பதிவர்களுக்கு இதுதான் பெரிய பிரச்சனை. படத்தை பார்க்கும்போது ஒரு விமர்சன பார்வையோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை. அப்புறம் எப்படி படத்தை பற்றி விமர்சனம் எழுதுவது? சரி பல விமர்சனங்களை படித்தவன் என்ற முறையிலும், சில நண்பர்கள் கூறிய கருத்தை வைத்தும் ஒரு திரை விமர்சனம் என்றால் எப்படி எழுத வேண்டும் என்று நான் கற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... (பதிவு கொஞ்சம் நீளமானதுதான்....)

திரை விமர்சனம் எழுத நினைப்பவர்கள் முதலில் திட்டுகளுக்கு பயப்படக்கூடாது. எப்படி எழுதினாலும் பின்னூட்டத்தில் ரைடு கிடைக்கபோவது நிச்சயம். ஆகவே அதனை கண்டு கொள்ளக்கூடாது.

திரைவிமர்சனங்கள் ஐந்து வகைப்படும். ஒவ்வொன்றாக பார்க்கலாம்...


முதலாவது அலசல் விமர்சனம். 

நம்ம யூத் பதிவர் கேபிள் அண்ணன் டைப் விமர்சனம். இந்த வகை விமர்சனங்கள் எழுத நிறைய பொறுமை வேண்டும். அதாவது கொடுத்த காசை கணக்கு பார்க்க கூடாது. இவ்வகை விமர்சனம் எழுத வேண்டுமானால் இரண்டுதடவை படம் பார்க்க வேண்டும். முதல்தடவை பதிவு எழுத, இரண்டாவது தடவை படத்தை ரசிக்க. இதற்கு குறைந்தபட்சம் பத்து டெக்னிகல் வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். லாங் ஷாட், மிட்ஷாட், டிம்லைட், மைல்ட் ரீரெகார்டிங் போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே பயன்படுத்த வேண்டும். உதாரணமாக "காதலி தன காதலனை முதன் முதலாக சந்திக்கும் காட்சி டிம்லைட்டில் கவிதை போல சொல்லி இருப்பார்கள். இதற்கு ஏதுவாக மைல்ட் ரீரேகார்டிங்கில் ரகுமான் பின்னி இருப்பார்." என்பது மாதிரியான வார்த்தைகள் அதிகம் இடம்பெறவேண்டும். இவற்றை படம் பார்க்கும் போது யாரும் செக்பண்ணுவதில்லை. ஆதலால் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள். மேலும் திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைகிறது, தூக்கி நிறுத்துகிறது என்று பொத்தாம் பொதுவாகவும் எழுதலாம். விமர்சனத்தில் ஆங்காங்கே படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் என் கூட வேலைபார்த்த ஒருவரின் வாழ்கையில் என்று ஒரு கதையை இரண்டொரு பத்திகளுக்கு எழுதி நிரப்பலாம். விமர்சன முடிவில் பஞ்ச லைன் வைத்து எழுதுவது சிறப்பு. உதாரணம் வேட்டைக்காரன் : ஹன்டிங் தி பீப்புள். முக்கியமான விஷயம் இம்மாதிரி விமர்சனங்களை படம் வெளிவந்து இரண்டு நாளைக்குள் எழுதி விடவேண்டும். ஏனென்றால் அதற்குள் நிறையபேர் பார்த்து விடுவார்கள். இவ்வகை விமர்சனங்கள் ஸ்பாய்ளர்களாக இருப்பதால் படம் பார்க்கும் முன்னரே மக்கள் இதனை எதிர்பார்ப்பார்கள்.


இரண்டாவது வகை மாற்றுப்பார்வை விமர்சனம்


இவ்வகை விமர்சனங்களுக்கு கடைசியில் பன்ச்லைன் கொடுக்க தேவை இல்லை. மாறாக பன்ச்லைனையே தலைப்பாக வைக்கலாம். உதாரணமாக ராவணன் - மணிரத்னத்தின் துவைக்காத கோவணம். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட தேவை இல்லை. நீங்கள் பார்த்த படம் நன்றாக இருந்தாலும் நல்லாவே இல்லை என்று சொல்லவேண்டும். அதற்கு காரணமாக பார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரேபியா மொழியில் வெளிவந்த அல் இஸகா கில்மா என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று அடித்து விடவேண்டும். யாரும் இந்த படத்தை பார்த்திருக்க போவதில்லை. படத்தில் வரும் வசனங்களை பற்றி கவலைப்பட தேவை இல்லை. "இது மதுரை பாஷையே அல்ல!!" என்று கூறவேண்டும். மதுரை பாஷைக்கு எதுவும் இலக்கணம் இல்லாததால் யாரும் கேள்வி கேட்கமுடியாது. முதல் காட்சியில் நாயகன் ஜிப் போடாமல் வருவார். இரண்டாவது காட்சியில் ஜிப் போட்டிருக்கும் என்று உங்கள் லாஜிக் கண்டுபிடிக்கும் திறமையை உபயோகிக்க வேண்டும். கண்டிப்பாக படத்தை தயாரித்தவர் ஒரு முதலாளியாகத்தான் இருப்பார். ஆகவே, "இயக்குனர் முதலாளிகளுக்கு குடைபிடிக்கிறார். இவரெல்லாம் ஒரு படைப்பாளியா?" என்று ஆங்காங்கே கேள்வி எழுப்ப வேண்டும். கதைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தெலுங்கானா? காவிரி பிரச்சனை பற்றி ஒரு சில பத்திகள் எழுதி, "இவற்றிற்கு இயக்குனர் என்ன சொல்ல போகிறார்?" என்று கேள்வி கேட்க வேண்டும். இம்மாதிரி விமர்சனங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் வரும் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. நிறைய பின்னூட்டங்கள் உங்களை திட்டி வரும். கவலைப்படாதீர்கள். அப்படி திட்டுபவர்களுக்கு ஆணாதிக்கவாதி, பார்ப்பனன் என்று பட்டம் கொடுங்கள். திரும்பி பார்க்காமல் ஓடி விடுவார்கள். 


மூன்றாவது வகை சன் டிவி விமர்சனம்

ஒண்ணுமே இல்லாத ஒரு படத்தை ஆஸ்கார் ரேஞ்சுக்கு எழுதுவது, பொதுவாக இந்த மாதிரி விமர்சனங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களால் எழுதப்படுவது. இதற்கு பெரிய சினிமா ஞானம் எல்லாம் தேவை இல்லை. உங்களுக்கு ஒரு நடிகரை பிடித்திருக்கிறதா அவர் என்ன செய்தாலும் பாராட்டி எழுதுங்கள். உதாரணமாக, "இந்த படம் ஆப்பிரிக்காவில் அபார வெற்றி! ரசிகர் உற்சாகம்!!" என்று எழுதி சில காட்டுவாசிகள் ஆடும் வீடியோ இணைப்பை கொடுக்கலாம். மேலும், "நேற்று நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள் எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது, கண்டிப்பாக வெற்றி." என்று ரீல் விடலாம். தியேட்டர் ஈயாடினாலும் வேறு எதாவது கூட்டத்தில் எடுத்த படத்தை போட்டு கூட்டம் அலை மோதுகிறது என்று எழுதலாம். கவனியுங்கள் இவை எதுவுமே படத்துக்கு சம்பந்தம் இல்லாதவை. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? "எனக்கு படம் பிடித்திருக்கிறது என் போன்றவர்களுக்கு பிடிக்கும், உங்களை யார் பார்க்க சொன்னது?" என்று அந்தர் பல்டி அடிக்கலாம். படத்தை பற்றி எழுதவேண்டுமானால், அனல் பறக்கிறது, சூடு பிடிக்கிறது, துள்ளலாக இருக்கிறது என்று அடித்துவிடலாம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த படம்தான் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் என்று தைரியமாக சொல்லுங்கள். யாரும் எழுதி வைத்துக்கொள்ள போவதில்லை. பின் நீங்கள் உங்கள் நண்பர்கள் நாலுபேருடன் சேர்ந்து படத்தை பற்றி நல்லவிதமாக பின்னூட்டம் இட்டுக்கொள்ளுங்கள். இவ்வகை விமர்சனத்துக்கு ஓட்டுகள் அதிகமாக விழும். ஏனென்றால் படம் நல்லா இல்லனாலும் ரசிகன் ஒட்டு போடுவான். 


நாலாவது வகை ஆப்பு விமர்சனம் 

இது ஒரு குறிப்பிட்ட நடிகரின் எதிர் போட்டியாளரின் ரசிகர்களால் எழுதப்படுவது. உங்கள் குறிக்கோள் ஒன்றுதான். படத்தை நாரடிக்கவேண்டும். பின் விமர்சன பார்வை எதற்கு? அந்த நடிகரை பற்றி முதலில் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அப்படியே எழுதுங்கள். ஐயோ, அம்மா, கொலைவெறி முதலிய வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துங்கள். பின் படத்தில் வரும் காட்சிகளை இஷ்டம்போல் கலாய்த்து விடுங்கள். "அம்மா செண்டிமெண்டா தாங்க முடியலடா சாமி, நடனம் இவருக்கு நடனம் ஒரு கேடா?, கிளைமாக்ஸ் உச்சகட்ட காமெடி." என்று எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். பின்னூட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால் விவாதத்தை திசை திருப்பி விடலாம். பிரச்சனை இல்லை. இந்த வகை விமர்சனத்துக்கும் ஓட்டுகள் அதிகம் விழும். பின்ன? தனக்கு பிடிக்காத ஒரு நடிகரை பற்றி கலாய்த்து எழுதினால் ஒட்டு போடாமல் என்ன செய்வார்கள்? 


கடைசி வகை தியேட்டர் விமர்சனம்...

இது லேட்டஸ்ட் டிரெண்டு...
இது ரொம்ப எளிய வகை விமர்சனம். இதற்கு படம் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. படம் ஓடும்போது தூங்கினாலும் பிரச்சனை இல்லை. முதலில் ஊரிலேயே எந்த மொக்கை தியேட்டரில் அந்த படம் ஓடுகிறது என்று பார்த்து அங்கு செல்லுங்கள். பின் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் தொடங்கி, டிக்கெட் கவுன்டர், பாத்ரூம், பழைய போஸ்டர்கள், சீட், சவுண்ட் சிஸ்டம் பற்றி விலாவாரியாக எழுதுங்கள். கிண்டலாக எழுதுவது மிக முக்கியம். பின் உங்கள் அருகில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். உதாரணமாக பக்கத்து சீட்டில் இருப்பவர் பான்பராக்கை துப்பிக்கொண்டே இருந்தார், ஒரு ஜோடி ஓரமாக அமர்ந்திருந்தார்கள், இன்டர்வெல்லில் ஒரு குடிமகன் வாந்தி எடுத்தார் என்று எல்லாவற்றையும் எழுதலாம். இடையிடையே தியேட்டரில் சவுண்டு விட்டது, கமென்ட் அடித்தது என்று நீங்களாக கற்பனை செய்து எழுதலாம். இந்த வகை விமர்சனம் பாதுகாப்பானது. அனைவரும் ரசிக்ககூடியது.

என்ன நண்பர்களே சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி என்று கற்றுகொண்டீர்களா? இனி நீங்களே மேலே கூறியவற்றுள் உங்களுக்கு எந்த வகை விமர்சனம் வசதியானது என்று பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள். ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் மாற்றக்கூடாது. அதே மாதிரிதான் எல்லா விமர்சனங்களையும் எழுத வேண்டும். 

டிஸ்க்: மேலே உள்ள விமர்சனங்களின் வகைகளை படிக்கும்போது சக பதிவர் பெயர் ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல...


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

July 17, 2010

காணாமல் போன காமராசர்...


இந்த வாரம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் எங்கள் ஊரில் கொண்டாடப்பட்டது அவர் பிறந்த ஊர் என்ற ஒரே காரணத்துக்காக. இந்த ஒரு நாளில் மட்டும்தான் கட்சி பாகுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளையும் எங்கள் ஊரில் பார்க்க முடியும். ஜூலை 15 அன்று மட்டுமல்ல. இந்த ஜூலை மாதம் முழுவதும் ஊரில் ஆங்காங்கே காமராஜர் பெயரை சொல்லி ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நடந்து கொண்டே இருக்கிறது. இன்று கூட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் ஒரு விழா நடக்கவுள்ளது. இந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது விழா. முதலில் நடந்தது நாடாளுமன்ற உறுப்பினர் புரந்தேஸ்வரி அவர்கள் தலைமையில் ஒரு விழா. பின் சாத்தூர் ராமச்சந்திரன்(திமுக அமைச்சர்) தலைமையில் ஒரு விழா. இன்று சிதம்பரம் தலைமையில் ஒரு விழா. இவை அனைத்தும் என்னவோ காமராஜரின் புகழை பரப்ப என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்தந்த வட்டாரத்தில் யார் பெரியவன் என்று தன் பலத்தை நிரூபிப்பதற்காக நடத்தும் விழா. விழாவுக்காக ஊர் முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் கொடிகள் என்று அமர்க்களப்படுகின்றன. பேனர்களிலும் போஸ்டர்களிலும் ஆக்கிரமித்திருப்பது பெரிய தலையில் இருந்து சின்ன வட்டம் வரை இருப்போரின் புன்னகை திருமுகங்கள். காமராசரின் படத்தைத்தான் காணவில்லை. சில போஸ்டர்களில் போனால் போகிறதென்று தபால் கார்டில் ஸ்டாம்ப் ஓட்டுவது போல ஒரு ஓரத்தில் பரிதாபமாக சிரிக்கிறார் காமராசர்.


விழாவுக்கு வருபவர்களும் காமராசரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அன்னை, அய்யா என்று ஜல் ஜல் என்று நன்றாக வாசிக்கிறார்கள். ஆனால் கடைசியில் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரசாரும், நடப்பது காமராசர் ஆட்சிதான் என்று திமுகவினரும் உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பொதுமக்களும் புரியாமல் கை தட்டி கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பல பன்னாடைகள் காமராசர் உயிரோடு இருந்த காலத்தில் அவருக்கு எதிராக அவரை தோற்கடிப்பதற்காக பல வேலைகளில் ஈடுபட்டவர்கள். அப்போது இவர்களின் தில்லாலங்கடி வேலைகளுக்கு தடையாக இருந்தவர் காமராசர். இப்போது அதே வேலைகளை செய்ய இவர்களுக்கு காமராசர் தேவைப்படுகிறார். இது விருதுநகரின் நிலை.


இதே போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சாதிக்கும் அடையாளமாக ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். இந்த பெரிய மனிதர்களின் பெயர் போஸ்டர்களிலும் பேனர்களிலும் மட்டுமே பயன்படுகிறது. இவர்களின் பெயரை பயன்படுத்தி மக்களை அடிமுட்டாளாக்கி பல மானங்கெட்ட ஜென்மங்கள் பொழப்பு நடத்தி வருகின்றன. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று உசிலம்பட்டியில் பேருந்துகளை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்ட யாருக்குமே விமான நிலையத்துக்கு அவரின் பெயர் வைப்பதால் என்ன பயன் என்று கேட்டால் தெரியாது. எவனோ சொன்னான், "தலைவர் பெயரை வைக்கலேன்னா பஸ்ஸுகளை அடித்து நொறுக்கு!!!" என்று. உடனே இவன் கிளம்பி விட்டான். சமீபத்தில் பத்தில் இருந்து பதினைந்து வயதுக்குள் இருக்கும் சில சிறுவர்கள் தங்களுடைய செல்போனில் வீரன் சுந்தரலிங்கம் அவர்களை போற்றி பாடும் ஒரு பாடலை சத்தமாக வைத்து ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே வீரன் சுந்தரலிங்கம் என்றால் யார் என்று தெரியாது. அவர்களுக்கு சுந்தரலிங்கத்தின் தியாகம் விதிக்கப்படவில்லை, அவர் சார்ந்த சாதி வெறிதான் விதைக்க பட்டுள்ளது.


எல்லாம் கல்வி அறிவு இல்லாததால்தான் என்று சொல்கிறார்கள். மெத்த படித்த படிப்பாளிகள் கூட ஊர்ப்பக்கம் வரும்போது தன் ஜாதியின் அடையாளத்தோடுதான் திரிகிறார்கள். என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் அடாவடி செய்த ஒருவரிடம் "டேய் நான் தஞ்சாவூர் கள்ளர்டா" என்று சாதியை சொல்லி மிரட்டினார். ராவணன் படம் ஓடும் தியேட்டரில் விக்ரம் ரசிகர்களுக்கும், கார்த்திக் ரசிகர்களுக்கும் பெரிய அடிதடியே நடந்தது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம், ஒரு குழந்தை வளரும்போதே அதன் சாதியின் பெருமைகளையும் அதைவிட அதிகமாக அடுத்த சாதியின் குறைகளையும் சொல்லி வன்மத்தை விதைக்கிறார்கள். நாளடைவில் அவனுடன் வளர்ந்து எவ்வளவு படித்து பெரிய பதவிக்கு போனாலும் இந்த வன்மம் மட்டும் நிலைத்து விடுகிறது. அந்த வன்மத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் காட்டுகிறான். எங்கள் ஊர்பக்கம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகம். அதில் பெண்கள்தான் அதிகம் வேலை செய்வார்கள். அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருத்திக்கு உடன் வேலை பார்க்கும் ஒருவன் காதல் கடிதம் கொடுத்து விட்டான். பிரச்சனை பெரிதாகி அடிதடி வரை சென்று போலிஸ் வந்துவிட்டது. புகார் கொடுத்தது பெண்ணின் தகப்பனார்.


அந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர் அதே ஜாதி. அவர் நேரே வந்து அந்த தொழிற்சாலையின் மேனேஜரின் சட்டையை பிடித்து வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அவர் என்னவோ அந்த பெண்ணுக்கு ஆதரவாக திட்டுவது போல தெரியவில்லை. ரொம்ப நாளாக அந்த ஜாதியின் மீதுள்ள வன்மத்தை கொட்டுவது போலவே இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை அந்த ஜாதி பெயரை சேர்த்து உடன் நாயையும் சேர்த்து கொண்டார்." ஏண்டா .......நாய்களா? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? உங்க ............களுக்கெல்லாம் இததான் பொழப்பா? தெரியும்டா உங்க ..................களைப்பற்றி" என்று அடுக்கிகொண்டே போனார்.

இது நம்ம பதிவுலகத்திலும் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சின்ன கிண்டல் வார்த்தையை வைத்து வேற்று சாதிக்காரன் நம் சாதியை திட்டுகிறான் என்று கண்டுபிடிக்கும் நாம் இந்த சாதி உணர்வை வைத்து எங்கோ ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து கொள்வதே இல்லை. தேநீரின் சுவையை விட்டுவிட்டு கோப்பையை கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரிய மனிதர்களின் கருத்துக்களை விட்டுவிட்டு அவரின் சாதியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...முழுவதும் படிக்க >>

July 8, 2010

ஆணாதிக்கவாதி பாலா ஒழிக...
இந்த பதிவை படித்து விட்டு தலைப்பில் சொன்னது மாதிரியான பின்னூட்டங்கள்தான் வரும் என்று எதிர்பார்கிறேன். இதன் காரணம் என்னான்னு கடைசில சொல்றேன். இன்னைக்கு காலை விடிந்ததே சோகமாகத்தான் விடிந்தது. எழுந்தவுடன் முதல் வேலையாக டிவியை ஆன் செய்தேன். சன் நியூஸ் சேனலில் "ஜெர்மனியை வென்று இறுதி போட்டியில் நுழைந்தது ஸ்பெயின்" என்ற செய்தியை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. இந்த உலககோப்பையை வெல்லும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு அணி. நேற்று இரவு முதல் பாதி ஆட்டம் பார்த்த போதே லேசாக பொறி தட்டியது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்தான் போய் படுத்தேன். அதே போல க்ளோஸ் ஒரே ஒரு கோலாவது அடித்து விடவேண்டும் என்று வேண்டினேன். அதுவும் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது. அதாவது நடனம், நாடகம், மிமிக்ரி என்று சிறு சிறு போட்டிகளாக சுமார் முப்பது போட்டிகள் நடத்துவார்கள். அவற்றில் ஜெயிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஜெயித்த நபருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இறுதி நாளில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதற்கு ஒரு சுழற்கோப்பையும், அதிக புள்ளி பெற்ற ஒரு மாணவருக்கு ஆல் ரவுண்டர் விருதும் கொடுக்கப்படும். ஜெர்மனி போல யாராலும் கண்டுகொள்ளப்படாத அணியாகத்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டோம். போக போக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தோம். இன்னும் ஒரு சில முக்கிய போட்டிகளே மீதம் இருந்தன. அனைவராலும் கவனிக்கப்படும் அணியாக மாறினோம். இறுதி நாள் அன்று தனி நபர் பட்டியலில் நானும் இன்னொரு அணியை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒரே புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தோம். இருப்பது ஒரே ஒரு போட்டி. குழு நடனம் மட்டுமே. புள்ளிகள் பெறவேண்டிய கட்டாயத்தால் நானும் குழு நடனத்தில் பங்கேற்றேன். எங்களது முழு திறமையும் காட்டி நடனம் ஆடினோம். இருப்பினும் எங்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. எங்கள் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தனி நபர் பட்டியலிலும் நான் இரண்டாவதானேன். ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது. இன்று ஜெர்மனியை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் க்ளோஸ் - ஆவது தங்க காலனி வாங்குவார் என்று எதிர் பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை. 


வெளியூரில் குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போவது. இதன் முக்கிய காரணம் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஏஜென்டுகளே முன்பதிவு செய்து விடுவதுதான். முன்பதிவு தொடங்கி பத்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும். எனவே அனைவரும் ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நம் மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது அரசு அறிவிப்பு ஒன்று. அதாவது முன்பதிவு தொடங்கி முதல் அரைமணி நேரத்துக்கு ஏஜெண்டுகள் யாரும் பதிவு செய்ய முடியாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இந்த அறிவிப்பு சாதாரணமாக தெரிந்தாலும். அனுபவித்தவர்களுக்கு தெரியும். தீபாவளி அன்று டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.


நம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணம் முடிந்தாலும் தோனி மீதான கிசு கிசுக்கள், வதந்திகள் குறைந்த பாடில்லை. அவர் காரணம், இவர் காரணம், பிபாசாவுக்கு கல்தா கொடுத்தார். அசினுக்கு அல்வா கொடுத்தார், என்று ஆயிரம் கிசுகிசுக்கள். ஆனால் ஆட்டக்களத்தில் இருப்பது போல புன்சிரிப்பு மாறாமல் அமைதியாகவே இருக்கிறார் தோனி. இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் தோனி மன நிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதில் தப்பொன்றும் இல்லை. Happy Married Life Dhoni.

சரி தலைப்பில் சொல்லி இருக்கும் மேட்டர்க்கு வருவோம். மாதா மாதம் நிறைய புதியவர்கள் பதிவு எழுத வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நானும் புதியவன்தான். ஏன் இந்த மாதம் கூட நிறைய பேர் வந்திருக்கிறார்கள். புதிதாய் பதிவு எழுத வருபவர்களுக்கு ஏற்கனவே எழுதி கொண்டிருப்பவர்கள் ஊக்கம் அளிப்பார்கள். இங்குதான் பிரச்சனை. நான் பொதுவாக பேசவில்லை. அதனால் இது சம்பந்த பட்டவர்களையே குறிக்கும். மற்றவர்கள் காண்டாக வேண்டாம். இந்த மாதம் புதிதாக பெண் பதிவர் ஒருவர் எழுத தொடங்கி உள்ளார். நான்கு அல்லது ஐந்து பதிவுகள்தான் போட்டிருப்பார். அவருக்கு பின்னூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான பின்னூட்டங்கள் "அருமையான பதிவு", " அசத்துங்க", "உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன. 

பாலோயர்கள் என்றால் என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்காக தன்னையும் இணைத்துக்கொள்வது. இப்பதிவருக்கு அதற்குள் நிறைய பாலோயர்கள். அதாவது இவர் கண்டிப்பாக நல்லா எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில். என்னே ஒரு ஆர்வம்? சரி அதற்காக புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே? இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா? இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோ?அது சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். 
(இது பின்னூட்டங்கள் வரலையே அப்படிங்கற பொறாமையில் எழுதியதல்ல. இந்த விஷயத்தை மனசாட்சியோடு அணுகி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கு எழுதி இருப்பது என்னுடைய பார்வையில்).


டிஸ்க்: ஒரு புது பெண் பதிவருக்கு பின்னூட்டம் இடுவதோ, பெண் பதிவர்களாக 
தேடி போய் பாலோயர் ஆவதோ தவறு என்று நான் சொல்லவில்லை. இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...முழுவதும் படிக்க >>

July 6, 2010

தங்கமகன் விருது...மதுமிதா அவர்கள் பரந்த மனப்பான்மையோடு எனக்கு ஒரு விருது கொடுத்தார். அதன் கனத்தை என்னால் ஒரு நாள் கூட தாங்க முடியவில்லை. ஆகவே அதை பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன். இதை எத்தனை பேருக்கு கொடுக்கலாம் என்று எனக்கு தெரியவில்லை. நானாக கணக்கிட்டு ஒரு நான்கு பேரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். இவ்விருதை பெறுவதன் மூலம் விருதுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.


எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியவர், என் முதல் பாலோயர் (என்ற பெயரில் வழி நடத்துபவர்). என் எழுத்துக்களுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் வழங்கி என்னை செப்பனிட்டவர். காதல் மன்னன். காதல் கதை எழுதுவதிலும் மன்னன். இந்த விருதை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.


நான் அதிகம் படிக்கும் ஒரு பதிவு. என் எழுத்து நடையை மேம்படுத்த உதவி புரிந்த ஒரு தளம். தரும் செய்திகள் முதன்மையானதாகவும் உண்மையானதாகவும் இருப்பதே இதன் சிறப்பு. எனக்கும் இவருக்கும் பெரும்பான்மையான கருத்துக்கள் ஒத்துப்போகின்றன என்பதே வெகு நாட்களுக்கு பிறகு நான் அறிந்தது.  உங்களுக்கு விருது வழங்கி மகிழ்கிறேன்.இவர்கள் மொக்கை பட விமர்சன ஸ்பெசலிஸ்டுகள். சீரியசான விஷயத்தை எப்படி காமெடியாக சொல்வது? காமெடியான விஷயத்தை எப்படி சீரியசாக சொல்வது என்பதை எனக்கு கற்று கொடுத்த நண்பர்கள். உங்கள் இருவருக்கும் சேர்த்து இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் அடிக்கடி கருத்தோடு மோதிக்கொள்ளும் ஒரு நண்பர். இருவரும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும் பயணிப்பது ஒரே சாலையில் ஆனால் தனித்தனி தடங்களில்.தொடங்கியது ஒரே இடத்தில் இருந்து. ஆனால் போகப்போக தடம் மாறி விட்டது.  என்னை அதிகம் சிந்திக்க வைத்தவர்.  இதையும் சொத்துடைமை என்று மறுத்து விடாதீர்கள். இது ஒரு அன்பின் வெளிப்பாடு. உங்களுக்கு இந்த விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி

முழுவதும் படிக்க >>

July 5, 2010

கனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் சர்ச்சைகள், குழப்பங்களுக்கு குறைவில்லை என்றாலும் கன ஜோராக கல்வி வியாபாரம் தொடங்கி விட்டது. பொறியியல் கல்லூரிகளை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை சொல்லி ஒரு சில நபர்களையாவது விழிப்படைய செய்வதுதான் என் நோக்கம். கல்லூரிகளைப்பற்றி அவதூறு பரப்புவதல்ல.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் ஐநூறை தாண்டி விட்டது. இதில் போதிய வசதி இல்லாத கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்கும்போது அவர்கள் மனதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். சேரும் மாணவரிடம் கண் நிறைய கனவுகள் இருக்கும். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப்போவதுதான் வேதனைக்குரிய விஷயம்.


இந்த பதிவை எழுத தொடங்கும்போது ஒரு உதாரணத்துக்காக இரண்டு கல்லூரிகளை பற்றி எழுத நினைத்தேன். என்ன ஒரு அதிசயம்? நான் எழுத நினைத்தது வெள்ளி அன்று மதியம். சனிகிழமை காலையில் ஒரு கல்லூரியின் பெயரை எல்லா செய்தி சேனல்களும் ஒளிபரப்பின.


இந்த கல்லூரி பற்றி இப்போதுதான் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையின் அருகாமையில் இருந்தாலும் தனக்கென தனி சிறப்புகள் பெற்ற ஊரில் இருக்கும் மிக செல்வ செழிப்புடன் வீற்றிருக்கும் ஒரு கல்லூரி. ஒரு உலகப்புகழ் பெற்ற கோவிலின் வரும்படியை வைத்து தெய்வீக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த கல்லூரியை யாராலும் எளிதில் நெருங்க முடியாது. எனவே இவ்வளவு நாட்களாக புலனாய்வு கண்களில் இருந்து லாவகமாக தப்பி வந்தது இந்த கல்லூரி. கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. இந்த கல்லூரியில் நடக்கும், நடப்பதாகக்கூறப்படும் அராஜகங்கள்தான் முக்கியம். வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் மற்றும் மாணவி சகோதர சகோதரியாய் இருந்தாலும், விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நீங்கள் இருவரும் எத்தனை நாள் தொடர்பு வைத்திருக்கிறீர்கள்? என்பது மாதிரியான சாட்டையடி கேள்விகள் பறக்கும். மாற்று மதத்தவரும் இக்கல்லூரியில் பின்பற்றப்படும் மத அடையாளங்களை பின்பற்றவேண்டும். இம்மாதிரியான அடுக்கடுக்கான பல புகார்கள் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களிடம் இருந்து வருகிறது.இதை எதிர்த்து புகார் செய்ய யாரும் முன் வருவதில்லை. கல்லூரி வளாகத்தில் நடக்கும் தற்கொலைகள் ஒரு பெட்டி செய்தியாக கூட வெளி வருவதில்லை. தட்டிக்கேட்கும் மாணவர் மற்றும் பெற்றோர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுகிறார்கள். படித்து முடித்து வெளிவரும் மாணவர்களும் தத்தமது வேலைகளை கவனிக்க சென்றுவிடுவது வேதனைக்குரியது. இக்கல்லூரியில் பயிலும் ஒரு மாணவன் சொன்னது, "இரவு பத்து மணிக்கு மேல் யாரும் ஹாஸ்டலை விட்டு வெளியே வர முடியாது. கதவை கூட திறக்கக்கூடாது. கல்லூரி வளாகம் முழுவதும் சைரன் வைத்த வாகனம் ஒன்று(போலீஸ் வாகனம் அல்ல) அடியாட்களுடன் சுற்றி வரும். உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை." வலுவான மத பின்னணியாலும், பொதுமக்களிடம் அமோக செல்வாக்கு இருப்பதனாலும் இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்க இயலவில்லை. அந்த கல்லூரிக்குள் என்ன நடக்கிறது என்பது அந்த அருள்மிகு ஆதி பராசக்திக்கே வெளிச்சம்.
நான் சொல்லப்போகும் இன்னொரு கல்லூரி கண்டிப்பாக மாட்டிக்கொள்ளாது. சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் மிகுந்த ஒரு சாலையில் உள்ளது இக்கல்லூரி. பார்ப்பதற்கு ஒரே கல்லூரி போல இருந்தாலும் உடல் முழுவதும் ஒட்டி, தலை மட்டும் வேறாய் இருக்கும் குழந்தைகள் போல ஒரே கட்டிடத்தில் மூன்று கல்லூரிகள் இயங்குகின்றன. சேலம் மாவட்டத்தில் பிறந்த தங்கமான காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான கல்லூரி(கள்). அதனால்தான் சொன்னேன் மாட்டிக்கொள்ளாது என்று. முன்பு சொன்ன கல்லூரி போல இது அடாவடி கல்லூரி அல்ல. கல்லூரியில் மாணவர்களை யாரும் கண்டிப்பதில்லை. ஏன் என்றால் கல்லூரிக்கு உள்ளே சென்று பாருங்கள். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. அந்தளவிற்கு அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லாத கல்லூரி. இத்தனைக்கும் இக்கல்லூரி துவங்கி சுமார் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு பின் தொடங்கிய கல்லூரிகள் எல்லாம் கட்டமைப்பில் எங்கோ போய்விட்டன.

நல்ல ஒழுக்கத்துடன் வரும் மாணவன் எல்லா கெட்ட பழக்கங்களையும் பழக்கங்களும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். அந்தளவிற்கு இந்த கல்லூரிகளில் போதை வஸ்த்துக்கள் உலவுகின்றன. ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் தரப்படாததால் யாரும் பொறுப்புடன் செயல் படுவதில்லை. அதனால் மாணவர்களே யாருக்கும் அடங்குவதில்லை. ஒரு மாணவர் கல்லூரி முதல்வரை வராண்டாவில் வைத்து அறைந்ததேல்லாம் சரித்திரம்.செமஸ்டர் தேர்வு எழுத குறிப்பிட்ட அளவு வருகை இருக்கவேண்டும் என்பது பல்கலைக்கழகம் வைத்த சட்டம். அந்த சட்டத்தை இவர்கள் சிறிது மாற்றி உள்ளார்கள். இருபதாயிரம் ருபாய் அபராதம் செலுத்தினால் தேர்வு எழுதலாம். அதாவது கல்லூரிக்கே வராமல். இக்கல்லூரியில் நல்ல மாணவர்களும் படிக்கிறார்கள். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே நிர்வாகத்துக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். மீறி ஏதாவது போராட்டம் வெடித்தால் கல்லூரி சேர்மன் அதாங்க நம்ம காங்கிரஸ் பிரமுகர் மாணவர்களிடம் நேரில் வந்து பேசுவார். பெரும்பாலும் கையால்தான் பேசுவார். வருட முடிவில் ஸ்ட்ரைக் நடந்ததை முன்னிட்டு பொருட்சேதம், ஒழுக்கக்கேடு என்று இவர்களாக ஒரு கணக்கு போட்டு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயாவது பிடுங்கி விடுவார்கள். இவை எதுவுமே வெளிவருவதில்லை.


மேலே சொன்ன எல்லா செய்திகளும் அந்த கல்லூரிகளில் படித்த, வேலை செய்த நபர்கள் சொன்னது, மற்றும் நான் நேரில் கண்டவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆகவேதான் கல்லூரிகளின் பெயரை சொல்லவில்லை(யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்). இது எனக்குதெரிந்த ஒரு உதாரணம்தான். இதே போல தமிழகம் எங்கும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. ஆகவே இக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. சரி கல்லூரி பிடிக்கவில்லை என்றால் வெளியே வந்து விடலாமே என்கிறீர்களா? அந்த வசதி கலந்தாய்வில் (Counselling) கல்லூரியில் சேரும் மாணவருக்குத்தான். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்கு எளிதில் டி சி கொடுத்து விடமாட்டார்கள். இப்படி சேரும் மாணவர்கள் எந்த பருவத்தில் கல்லூரியை விட்டு விலகினாலும் நான்காண்டுகளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டுத்தான் வெளியே வர முடியும். இது சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பு வைத்திருக்கும் ஒரு சட்டம். கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் எளிதில் டி சி வாங்கி இன்னொரு கல்லூரியில் சேர்ந்து விட முடியும். அப்படி சேர்ந்திருக்கும் உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருந்தால் விசாரித்து பாருங்கள். ஒரு மாணவர் கல்லூரியை விட்டு விலகப்போகிறார் என்றால் அவருடைய Internal Mark இல் சும்மா குத்து குத்தென்று குத்தி இருப்பார்கள். மேலும் அத்தனை செய்முறை தேர்வுகளிலும் தோல்வி அடைய செய்து விடுவார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் இம்மாதிரியான கோணங்களிலும் விசாரிப்பது நல்லது. கல்லூரியில் சேர்ந்து விட்ட பிறகு ஒன்றுமே செய்ய இயலாது. உண்டியலில் போட்ட காசுதான். திரும்ப வரவே வராது. இந்த கல்லூரிகளை அடக்கி ஒடுக்கும் அதிகாரம் மிக்கவர்களே இம்மாதிரியான கல்லூரிகளை நடத்துகிறார்கள். ஆகவே இந்த கல்லூரிகள் ஒருபோதும் மாட்டிக்கொள்வதே இல்லை. மாட்டினாலும் சப்பை கட்டு கட்டி எப்போதும் போல தங்களின் சேவையை தொடர்கின்றன. எனவே இம்மாதிரியான கல்லூரிகளை தண்டிப்பது என்பது புறக்கணிப்பதன் மூலமே சாத்தியம்.

பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க ...இந்த பதிவு நிறைய பேருக்கு போய் சேரனும்கிறது என்னுடைய விருப்பம்...    
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்...

முழுவதும் படிக்க >>

July 1, 2010

சந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....ஒரு பதிவின் ரீமேக்: 


நான் ஒரு போதும் சீரியசான பதிவிட்டது கிடையாது. பதிவுலகம் வந்தபின் சில புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தங்களும் பதிவுலகத்தில் கிடைத்தது. ஆனால் அவை எப்போதுமே நெருப்பு துண்டங்களாகவே இருக்கின்றன. அவற்றை கையில் எடுத்தாலே சுட்டு விடுகிறது. அதனால்தான் பெரும்பாலான பதிவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். அந்த வார்த்தைகள் என்னவென்றால், ஆணாதிக்கம், பார்பனீயம், முதலாளித்துவம், ஆத்திகம் மற்றும் நாத்திகம்.

ரீமேக் என்று ஏன் சொல்கிறேன் என்றால் நான் சொல்லவந்த செய்தி யாருக்கும் புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே பிளேட்டை திருப்பிவிட்டார்களா என்று தெரியவில்லை. பிளேட் திருப்பப்பட்டது இப்படித்தான். 

சிகப்பில் இருப்பது வேறொரு பதிவில் வந்தது


இவர் விவாதங்களே வேண்டாம் என்கிறார் விவாதங்களை குப்பத்தொட்டி என்கிறார் . இது தான் திமிர் பிடித்த கருத்து , உங்களுக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லையா விவாதம் செய்யுங்கள்
விவாதம் செய்ய முடியாமல் குப்பை தொட்டி என்று சொல்கிறீர்கள் ...............


நான் குப்பைதொட்டி என்று சொன்னது குழம்பிய என் மனதை. பதிவுலகத்தை பற்றியோ விவாதங்களை பற்றியோ நான் கூறவில்லை. இது பிளேட்டை திருப்பும் வேலை. 


விவாதம் இல்லாமல் , மணிரத்தனம் சிறந்தவர் , பார்பனர்கள் நல்லவர்கள் , பெண்கள் அடங்கி தான் இருக்கவேண்டும் . முதலாளிக்கு அடங்கி போக வேண்டும் , கடவுள் இருக்கிறார் , இது எல்லாம் நீங்கள் சொல்ல வரும் கருத்து இதன் பெயரே பார்பனீயம்பாலா 


அடங்கொய்யால, ஒரு வார்த்தை கிடைத்தால் அதற்க்கு கண் காத்து மூக்கு வைத்து பின் பூணூலையும் மாட்டி விடும் நேர்த்தியான பிளேட் திருப்பும் வேலை.


ஆண்கள் தண்ணி அடிக்கும்போது பெண்கள் அடிக்ககூடாது என்று சொல்ல நீங்கள் யார்? 


என் பதிவில் அப்படி நான் சொல்லி இருக்கிறேனா? இதை நூறாவது தடவை சொல்கிறேன். தவறு என்றால் அது யாராக இருந்தாலும் தவறுதான். 

ஆணாதிக்கம் இல்லை என்று சொன்னால் என்னைப்போல் ஒரு முட்டாள் இருக்க மாட்டான். தவறு யார் செய்தாலும் தவறுதான். இதை முதலியே என் பதிவில் அடைப்புக்குள் கொடுத்திருந்தேன். எல்லா இடத்திலும் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே விட்டுவிட்டேன். ஆணாதிக்கம் இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆணாதிக்கமாக பார்க்கப்படுகிறதே என்றுதான் சொல்கிறேன். ஒரு பெண்ணிடம் சாதாரணமாக ஒரு ஆண் சொல்லும் அறிவுரைகள் ஆணாதிக்கமாகாதுதானே? ஆணாதிக்கம் என்ற வார்த்தையை ஒரு excuse ஆக பயன்படுத்தக்கூடாதுதானே?
" இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? " இது அந்த பெண்ணை பாத்து நான் கேட்டது. ஆனால் ஒரு ஆணைப்பார்த்து நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல வில்லையே.


ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........


இப்படி நீங்களாக கற்பனை செய்து கொண்டு உளறினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.


தலித் மக்கள் துன்புறும் பொழுது கோபம் கொள்ளாத நீங்கள் , பார்பனரை திட்டும் பொழுது மட்டும் கோபம் கொள்வது கூட பார்பனீயம்.


இப்படி சொல்வதனால் கண்டிப்பாக தலித் இன மக்களும், சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும் எனக்கு எதிராக திரும்புவார்கள் என்பதுதானே உங்களின் எதிர்பார்ப்பு? ஒன்று சொல்லிக்கொள்கிறேன் பார்ப்பனர்களால் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன்தான் நானும். 

பார்ப்பனீயம் பற்றி பேசக்கூடாது என்று யார் சொன்னது? எல்லாவற்றையுமே அதில் இருந்து தொடங்கலாமா என்றுதான் கேட்டேன். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு மனிதர் பார்ப்பனர் அதனால் அவர் கெட்டவர் . இந்த வாதம் சரியா? பெரும்பாலான பதிவர்கள் இந்த நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். ஒருவர் தவறு செய்தால் முதலில் அவர் பார்ப்பனரா என்று பார்க்கிறார்கள். இருந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம். பார்ப்பனன் புத்தி இப்படித்தான் போகும் என்கிறார்கள். இல்லாவிட்டால் ஒருவர் பார்ப்பனர் என்று தெரிந்து விட்டால் எப்படா இவர் மாட்டுவார் என்று காத்திருக்கிறார்கள். இது உண்மைதானே. சமூக ஏற்றதாழ்வுகள் இட ஒதுக்கீடு இவற்றை நான் விமர்சிக்கவில்லை. எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். ஆனால் அவன் பார்ப்பனராக இருந்தால் மட்டும் அதை சுட்டிக்காட்ட யாரும் மறப்பதில்லை. இதுதான் என் பதிவில் நான் சொல்ல நினைத்த கருத்து.


தண்ணீர் குடிக்கும் பாமரனையும் , KINLEY கம்பெனி இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்வளவு அயோக்ய தனமோ அவ்வளவு அயோக்யத்தனம் உங்கள் மணிரத்னத்தையும் தன் குடும்பம் வாழ அதிகம் ஆசை படாமல் சிறு வேலைகள் பார்க்கும் தொழிலாளியையும் compare செய்வது .


இந்த இடத்தில் நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. அதாவது நான் பாமரர்களின் தோழன். இந்த பாலா மணிரத்தினம் கூட்டாளி. பார்ப்பனன் என்ற முத்திரையை என் மீது குத்தப்பார்க்கிறீர்கள்.


மணிரத்னம் சம்பாதிப்பதும் , சாதாரண தொழிலாளி முதலாளியிடம் சம்பாதிப்பதும் ஒண்ணா ???????? சாதாரண தொழிலாளி தன் வாழ்க்கை ஓட்ட முதலாளியிடம் வேலை செய்கிறான் . 


உங்கள் கொள்கையில் எங்கோ இடிக்கிறேதே. இந்த சாதாரண தொழிலாளி என்பது உங்களையும் சேர்த்துதானா? நீங்கள் ஒரு நல்ல முதலாளியிடம்தான் வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மாதம் கஷ்டப்பட்டு ஐந்தாயிரம் பத்தாயிரம் சம்பாதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நான் குறிப்பிட்டது உங்களை அல்ல. நான் சொன்னது சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஐம்பதாயிரம் வாங்கிகொண்டு வேலைநேரம் போக மீதி நேரங்களில் கம்யுனிசம் பேசும் நபர்களைப்பற்றி.

கடவுள் நம்பிக்கை பற்றி நாளை சொல்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள். அதற்கும் விளக்கம் சொல்லி விடுகிறேன். கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நான் கடவுளை நம்ப மாட்டேன் என்பதால் கடவுளை நம்புபவனிடம் போய் கடவுளை ஆபாசமாக திட்டலாமா? கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்து பலர் எழுதுகிறார்கள் அதை நான் எதிர்க்கவில்லை. கடவுளை திட்டிவிட்டு வேண்டுமானால் உங்கள் கடவுளை தண்டிக்க சொல் பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவுதான் பண்புடன் பதிவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திட்டாமல் இருப்பதில்லை. பொதுவில் எதிர்த்தாலும் பண்பு, நாகரீகம் கிடையாதா. மேடையில் அசிங்கமாக பேசும் அரசியல்வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதிலுக்கு பதில் பேசியாகி விட்டது. இப்போது என் கருத்துக்கள்.
ஆணாதிக்கம் என்று இதை சொல்லலாமா என்றுதான் கேட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக ஒரு பெண் தனியாக சம்பாதித்தவுடன் பெற்றோரை மதிக்கவில்லை என்ற நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி இருந்தேன். எல்லா பெண்களும் அப்படி என்றோ ஆண் செய்தால் தவறு பெண் செய்தால் தவறில்லை என்ற அர்த்ததிலோ சொல்லவில்லை. 

ஒருவரை தாக்குவதற்கு ஆயுதமாகவோ, இல்லை கேடயமாகவோ பார்ப்பனீயத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் என் கேள்வி. எப்படி பார்ப்பனர்கள் தம் சந்ததியினருக்கு இனத்துவேசத்தை கற்றுக்கொடுத்தார்கள் என்று இவர்கள் சொல்கிறார்களோ அதே போல பார்ப்பனன் என்றாலே அயோக்கியன் என்று தன் சந்ததிக்கு ஏன் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றுதான் கேட்டேன். ஒருவன் தவறுசெய்தால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று முடிவு கட்டுவது ஏன்? இதையே சாதித்தலைவர்கள் மேடையில் செய்தால் சாதி அரசியல். வலையுலகத்தில் செய்தால் முழக்கமா? இது அப்பட்டமான சாதிவெறியே அன்றி வேறொன்றும் இல்லை. 

முதலாளித்துவம் பற்றி முன்பே சொல்லிவிட்டேன். என் நோக்கம் பாட்டாளிகளை கிண்டல் செய்வதல்ல. மல்டி நேசனல் கம்பெனியில் மாதம் ஆறிலக்க சம்பளம் வாங்கிக்கொண்டு கம்யுனிசம் பெசுபவர்களைப்பற்றிய சந்தேகம். இதைச்சொன்னால் இவர்களுக்கேன் கோபம் வருகிறது. இவர்கள் மனம் ஏன் குறுகுறுக்கிறது? 

நண்பர்களே ஒரு பதிவை படிக்கும்போது முன்கூட்டியே எந்த முடிவும் செய்துகொள்ளாமல் படியுங்கள். இல்லை என்றால் எழுத்துக்கள் எல்லாம் தவறாகத்தான் தெரியும். ஒரு காமெடியான உதாரணம் சொல்கிறேன். சினிமாவில் இந்த காட்சியை பார்க்கலாம். ஒரு குடிகாரன் மனைவியை போட்டு அடிக்கிறான். ஒருவன் வந்து ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறேன். உடனே குடிகாரன் காரணம் சொல்லாமல் "நீ அவள வச்சிருக்கியா?" என்று கேட்கிறான். இதில் யார் என்ன கேரக்டர் என்றெல்லாம் ஆராய்ந்து குழப்பி கொள்ளாதீர்கள். என்னைப்பார்த்து நீ பார்ப்பனன் என்று சொல்வது கூட இப்படித்தான் இருக்கிறது. சுருக்கமாக என் கேள்விகளை கேட்கிறேன்.

1. பொதுவில் ஒரு பெண்ணை ஆண் கண்டிக்கலாமா? 
(இதற்கு நண்பர் புலிகேசி ஏற்கனவே பதில் சொல்லி விட்டார்)
2. எல்லா பார்ப்பனர்களுமே அயோக்கியர்களா?
3. கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு கம்யுனிசம் பேசலாமா?
4. கடவுள் மறுப்பு வாதம் என்பது ஆபாசமாக திட்டுவதுதானா?
இவைதான் என் சந்தேகங்கள். இவற்றை விடுத்து தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று அடுத்தவனை வில்லனாக சித்தரிக்காதீர்கள்.

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...