விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 25, 2011

வெட்டிப்பேச்சு - இலவசம், பாண்டிங் நல்லவரா?

பெட்டிகளை
இலவசம்...இலவசம் 

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் பல அதிரடி நடவடிக்கைகளில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவார்கள். ஆனால் இந்தமுறை தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகளே அதிரடியாக பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்கைகள் பலருக்கு இடஞ்சலாக இருந்தாலும் வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. அது சரி, தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத காலம் மின்னணு வாக்கு இயந்திரங்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள்? அதற்கு இன்னும் என்னென்ன கெடுபிடிகள் இருக்கும்? என்று தெரியவில்லை. நேற்று சன் செய்திகளில் வித்தியாசமான ஒரு நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. திருப்பூரில் தேர்தலை முறியடிக்க சுமார் 200 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்களாம். 64 பேருக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த முடியாதாம்.
தமிழகத்தில் பிறந்தவன்தானே நானும். தமிழ் மக்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? வழக்கம்போல ஆட்சியில் இருக்கும் திமுக அரசை விட எதிரணியில் இருக்கும் அதிமுக மீது கொஞ்சம் அபிமானம் இருந்தது. ஆனால் நேற்றோடு அதுவும் போய் விட்டது. "என்ன கொடுமை இது?" என்றே கேட்க தோன்றுகிறது. இந்த இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையை வேறு நாட்டவர் யாராவது படித்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். முதலில் கலைஞர் தனது இலவச பட்டியலை வாசித்தபோது 2006 தேர்தல் அறிக்கையை விட அதிக எரிச்சல் வந்தது. தற்போது அம்மாவும் அதே அறிக்கையின் அப்கிரெடெட் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடருமாம். அடப்பாவிகளா! இலவசங்கள் கொடுத்தால் ஏழைகள் அதிகமாகத்தானே செய்வார்கள்? 


இந்த தேர்தல் அறிக்கையில் உருப்படியாக எந்த திட்டமும் இல்லை என்பதே என் கருத்து. எத்தனை பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்? இலவசத்திற்காக வாங்கும் கடனை வேலை வாய்ப்பு உருவாக்க பயன்படுத்தலாமே? டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று கொடுத்து விட்டு மின்சாரத்தை மட்டும் பிடுங்கி விடுகிறார்கள். தமிழ்நாடு ஒன்றும் செல்வத்தில் கொழிக்கவில்லை. எப்படியும் இலவசங்களை எல்லாம் கடன் வாங்கித்தான் செய்யப்போகிறார்கள். அப்படி வாங்கும் கடனில் மின்சாரம், குடிநீர், அணைகள், வேலைவாய்ப்பு முதலியவற்றுக்கு செலவளித்தாலே போதுமானது. லாப்டாப் கொடுக்க தேவை இல்லை. கல்வி கட்டணங்களை கட்டுப்படுத்தினாலே போதும். முடிந்தால் முதுகலை வரை இலவச கல்வி கொடுக்கட்டும். ஆரம்பத்தில் காமராஜர் இலவசமாக மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். அதன் காரணம் ஓட்டு அல்ல. "அப்படியாவது பசங்க ஸ்கூலுக்கு வருவார்களே!!" என்ற எண்ணம்தான். ஆனால் அதன் வளர்ச்சியாக இப்படி இலவசம் மட்டுமே தரப்படும் தேர்தல் அறிக்கைகள் வரும் என்று அவரே கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார். 

இதற்கு யார் காரணம்? மக்களை பிச்சை எடுக்க பழக்கிய கலைஞரா? இல்லை அடாவடியாக ஆட்சி நடத்திய அம்மாவா? தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை திருடிவிட்டு தனக்கே பத்து பைசா பிச்சை போடுபவனை சாமி என்று கும்பிடும் மானமுள்ள மக்களா?

பாண்டிங் நல்லவரா கெட்டவரா?

அகமதாபாத்தில் நேற்று நடந்த காலிறுதி போட்டியை இந்தியர்களாலும், ஆஸ்திரேலியர்களாலும் மறக்கவே முடியாது. எப்படி 1996இல் பெங்களூருவில் நடந்த இந்தியா பாகிஸ்தான் காலிறுதியை மறக்க முடியாதோ அதே போல. சொல்லப்போனால் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்குத்தான் பிரஸ்ஸர் அதிகம். நேற்று ஆஸ்திரேலியாவுடன் ஆடிய பிறகுதான் இதுவரை நாம் மோதிய அணிகளின் குறை தெரிந்தது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவில் அவ்வளவு நல்ல வீரர்கள் யாரும் இல்லை. வழக்கமான சொதப்பல்கள், புலம்பல்கள், திட்டல்கள் எல்லாம் இருந்தது. நேரம் நெருங்க நெருங்க பாண்டிங் தனது எல்லா அஸ்திரங்களையும் எய்து பார்த்தார். ஆனால் யுவராஜிடம் எதுவும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் தோனி விளையாடி கொண்டிருக்கும்போது எனக்கு நம்பிக்கையே போய் விட்டது. ஆனால் ரெய்னா களத்தில் இறங்கியபின் ஆட்டம் மீண்டும் சுறுசுறுப்பானது. என்னதான் உள்குத்து, வெளிக்குத்து, பிக்சிங் என்று காரணம் சொன்னாலும், ஒரு முழுமையான ஆட்டத்தை பார்த்த திருப்தி இருந்ததென்னவோ உண்மை. எவ்வளவுதான் கோபம் இருந்தாலும், இறுதியில் பாண்டிங்கை பார்த்த போது மனதில் என்னவோ செய்தது. அவர் ஆடிய முதல் ஆட்டத்தில் இருந்து பார்த்து வருவதாலோ என்னவோ. கமெண்ட்ரியில் இது அவரது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று வேறு சொன்னார்கள். 

நேற்றைய ஆட்டத்தில் கவர்ந்தவை.


1. வாட்சனின் க்ளீன் போல்ட். ஹாட்ஸ் ஆப் டு அஷ்வின்.
2. சச்சினுக்கு பிரேட்லீ வீசிய 157 மைல் வேக பவுன்சர். 
3. முகத்தில் வழியும் ரத்தத்தை கூட துடைக்காமல் விருவிருவென்று உள்ளே சென்று ஒரு பிளாஸ்திரி மட்டும் ஓட்டிக்கொண்டு திரும்பி வந்த பிரேட்லீ 
4. பிரேட்லீ பந்தை அசால்ட்டாக வெளியே அனுப்பிய ரெய்னா 
5.ஜெயித்தவுடன் மண்டி போட்டு மட்டையை வீசியபடி யுவராஜ் வெளிப்படுத்திய வெற்றி கர்ஜனை. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

March 22, 2011

வாயை அடக்கலாம் வாங்க..."வாயை அடக்கலாம் வாங்க", என்று சொன்னவுடன் ஏதோ டயட் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இது வேற மேட்டர். "உலகத்திலே மோசமான ஆயுதம் எது? மனிதனுடைய நாக்குதானது", என்று எம்ஜியாரும் கலைவாணரும் ஒரு படத்தில் பாடுவார்கள். அது மிகச்சரி. அவசரத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள், இடம் தெரியாமல் பேசிவிட்ட வார்த்தைகள், நிலைமை தெரியாமல் பேசும் வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்களும், பிரச்சனைகளும் ஏராளம். அவற்றை கையாள்வது பற்றி எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன்.

கோபத்தில் உதிர்த்து விட்ட வார்த்தைகள்:

ஒரு சிலர் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுவார்கள். பிறகு அப்படி பேசியதை நினைத்து வருத்தப்படுவார்கள். இந்த மாதிரியான வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்கள் மிகப்பெரியவை. ஒரு நட்போ உறவோ நிரந்தரமாக பிரிந்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடலாம். இதற்கு முதலில் கோபத்தை அடக்கலாம் வாங்க பகுதியை படித்துப்பாருங்கள். மெல்ல மெல்ல கோபத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தாமாகவே அந்த மாதிரி வார்த்தைகளை களைந்து விடலாம்.


இடம் தெரியாமல் அல்லது நிலைமை தெரியாமல் பேசுவது:

இது பொதுவாக நடக்கக்கூடியது. கோபத்தில் பேசும் சொற்களாவது நட்பை பிரித்துவிடும். ஆனால் இடம் தெரியாமல் பேசும் வார்த்தைகள் உறவை பிரிக்காது. ஆனால் எதிரில் இருப்பவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துவிடும். இவ்வகை பேச்சுக்கள்தான் மிக ஆபத்தானவை. இதிலும் இரண்டு பிரிவு உண்டு. தெரியாமல் பேசி விடுவது. அல்லது வேண்டுமென்றே குத்தலாக பேசுவது. 

குத்தலாக பேசும் மக்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர்களின் மனதில் வன்மம் ஊறிக்கிடக்கிறது என்று அர்த்தம். அல்லது ஒரு வகையான சாடிஸ்ட் மனோ நிலையில் இருப்பவர்கள் என்று அர்த்தம். மற்றவர்களை மட்டம் தட்டி விடவேண்டும் அல்லது அவர்களுக்கு ஒருவித சங்கடத்தை கொடுத்து, அவர்கள் தவிப்பதை ரசிக்க வேண்டும். உதாரணமாக ஒரு கல்யாணவீட்டில் வைத்து "சார் உங்க பையன் +2 பெயிலாமே!" என்று வேண்டுமென்றே கேட்டு அவர் அவமானத்தில் நெளிவதை கண்டு ரசிப்பது. இம்மாதிரியான மனநிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உங்கள் விரோதியாகவே இருந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து அவர்களை மட்டம் தட்டி பேசி நீங்கள் உங்களை மேதை என்று காட்டிக்கொள்ள நினைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இருபது சதவீதம் மக்கள் வேண்டுமானால் உங்களை நல்லபடி நினைப்பார்கள். மீதி எண்பது சதவீதம் அங்கே அவமானப்படுத்த பட்டவரைத்தான் நல்லவராக நினைப்பார்கள். (வைகோ கதை ஒரு உதாரணம்). மேலும் ஒருவரை அவமானப்படுத்தி விடவேண்டும், அல்லது மட்டம் தட்டி விடவேண்டும் என்ற முனைப்பில் இருப்பவரது முகத்தை உற்று கவனித்தால், அவர் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதை மீறி ஒரு குரூரம் தென்படும். அதை பார்த்த மாத்திரத்திலேயே அவர்மீது நமக்கு கசப்பான உணர்வு வரும். அதே போல்தானே நம் மீதும் மற்றவருக்கும் இருக்கும்? மேலும் இது ஒரு பசி மாதிரி. அப்போதைக்கு அடங்கி விடும். பின்னர் எப்போதும் அவரை மட்டம்தட்ட வேண்டும் என்ற முனைப்பு உருவாகி, உங்களை ஒரு சைக்கோ ரேஞ்சுக்கு எல்லோர் மனதிலும் உருவகப்படுத்தி விடும்.


இதில் உள்ள மற்றொரு வகை தெரியாமல் பேசி விடுவது. அதாவது நாம் வேறு ஏதோ நோக்கத்தில் பேசியது, வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இல்லை, இடம் பொருள் தெரியாமல் பேசி அங்குள்ள கலகல சூழ்நிலையை இறுக்கமாக மாற்றிவிடுவோம். உதாரணமாக என் உறவினர் ஒருவர் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். இது அந்த குழந்தைக்கு அரைகுறையாகத்தான் தெரியும். ஒரு பொது நிகழ்ச்சியில் வைத்து, "என்னப்பா உன் தத்து பிள்ளை எப்படி இருக்கா?" என்று ஒருவர் கேட்டுவிட்டார். பெற்றவர்களுக்கோ சங்கடம். அந்த குழந்தை மனதிலோ அவமானம் கலந்த குழப்பம். அந்த இடமே மயான அமைதி ஆகி விட்டது. அடுத்து என்ன பேசுவது என்றே யாருக்கும் தெரியவில்லை. சில நேரங்களில் இப்படியும் நடந்துவிடும். "நான் இயல்பாத்தானே கேட்டேன்? அவர்களை காயப்படுத்தும் நோக்கத்தில் நான் கேட்கவில்லையே?" என்று காரணம் சொன்னாலும், நடந்தது அதுதானே?


ஒரு சிலர் நிலைமை புரியாமல் பேசிக்கொண்டிருப்பர். பொது இடத்தில் ஒரு பெண் அமைதியாக இருப்பாள். "என்னம்மா அமைதியா இருக்க?" என்று கேட்டால், "ஒன்றும் இல்லை." என்று சொல்வாள். விடாமல், "இல்லை நீ இப்படி இருக்கமாட்டியே?" என்று கேட்பார்கள். அவளின் அம்மா முந்திக்கொண்டு, "அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை." என்று சொல்வார். இவர்கள் அத்தோடு விட வேண்டியதுதானே? "உடம்புக்கு என்ன?" என்று நொண்டி நொண்டி கேட்பார்கள். பொது இடத்தில் சொல்ல கூடாத விஷயமாக இருப்பதாலேயே மென்று விழுங்குகிறார்கள். அதைக்கூட புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாமா? 


எப்படித்தான் பேசுவது? 

வார்த்தைகளை வடிகட்ட பழகிக்கொள்ளவேண்டும். அதாவது எந்த ஒரு இடத்திலும் தேவை இல்லாமல் ஒருவார்த்தை கூட பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ளுங்கள். படிப்படியாக அதை பழகுங்கள். அதற்காக உம்மணாம் மூஞ்சியாக இருங்கள் என்று அர்த்தம் இல்லை.

ஒரு நாலுபேர் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எந்த மனநிலையில் பேசுகிறார்கள் என்று
புரியும்வரை பேசத்தொடங்காதீர்கள். சில நேரம் காமெடி பீஸ் ஆகிவிடுவீர்கள். சிலநேரம் சிவபூஜை கரடி ஆகி விடுவீர்கள்.


எதிராளிகளின் மனநிலையை புரிந்து கொண்டு பேசுவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆகவே முதலில் கவனிக்க பழகுங்கள். விவாதமோ அல்லது சாதாரண பேச்சோ முதலில் எதிராளியை பேசவிடுங்கள். பின்னர் அதற்கேற்றார்போல உங்கள் சொற்களை அமைத்துக்கொள்ளலாம். A good speaker is always a good listener.

எதிரில் இருப்பவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா அல்லது கவலையுடன் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதும் முக்கியம். நாம் பேசப்போகிறவர் நமக்கு மிக நெருக்கமானவர் என்றால், அவர் நடவடிக்கையில் தெரிந்துவிடும். ஒருவர் குழப்பமாக இருந்தால் கண்களில் உள்ள Pupil சுருங்கி விடும். சரி அவ்வளவு நெருக்கமாக கவனிக்க முடியாதென்றால், அவரது கண்கள் நிலை கொள்ளாமல் அலைபாயும், இல்லை வேறு ஏதாவது திசையை நோக்கி நிலைத்திருக்கும். அதைவைத்து கண்டுபிடித்துவிடலாம்.


தன்னை கவனிக்கும் பழக்கம் வேண்டும். இது மிகவும் கடினமான செயல் ஆனால் பழகிவிட்டால் நீங்கள் நல்ல பண்பாளராக அனைவராலும் போற்றபடுவீர்கள். அதாவது உங்கள் நடவடிக்கையை ஒரு மூன்றாவது மனிதன் போல இருந்து கவனிக்க தொடங்கவேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைகள், முகபாவனைகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். பிறகு அவற்றை பற்றி சிந்தித்து பார்க்கவேண்டும். நாம் பேசிய தவறான வார்த்தைகளை அடையாளம் கண்டு இனி அவ்வாறு பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ள வேண்டும். நாளடைவில் இந்த கவனிக்கும் பழக்கும் மெருகேறி, பேசும்போதே நல்ல வார்த்தைகளை அந்த மூன்றாவது மனிதன் தேர்ந்தெடுத்து தரும் அளவிற்கு மாறிவிடுவோம். நம் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மூன்றாவது மனிதனின் மேற்பார்வையில் நடப்பதால் தவறு நிகழாது.

நெருக்கமாக உரிமையாக திட்டிக்கொள்பவர்கள், உண்மையிலேயே புரிந்துணர்வு உடையவர்களுக்கு மேலே சொன்னவை ஒத்துவராது. ஆனால் மேலே உள்ளவற்றை பின்பற்றினால் கூடிய சீக்கிரம் அனைவரயும் புரிந்து கொள்ள உதவும்.மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே நினைத்திருந்தால் மேலே கூறி இருக்கும் பயிற்சிகள் எளிதில் வசமாகும். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

March 18, 2011

என்னடா நடக்குது இங்க? - நான்தான் அவுட்டா?


நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் நண்பருக்கு அவர்முன்னால் நடக்கும் எல்லாமே தெரியும். அதிர்ச்சி அடைவார். ஆனால் சசிகுமார் எதுவும் தெரியாதது போல இருப்பார். இவர் கடைசியில் காமெடி பீசாகி விடுவார். அப்போது சொல்லும் வார்த்தைதான் இது. நாட்டில் நடக்கும் சில விஷயங்களை பார்த்தாலும் அப்படித்தான் சொல்லத்தொன்றுகிறது.


அம்மா போட்ட மாஸ்டர் பிளான் 

முன்பெல்லாம் நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களை கொஞ்சம் மிகைப்படுத்தி ஆர் கே செல்வமணி போன்ற இயக்குனர்கள் சினிமாவாக எடுப்பார்கள். ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுவாரசியமான பல விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றுவரை வெற்றி கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட அதிமுக-தேமுதிக-மதிமுக(!?)  உள்ளிட்ட கூட்டணி திடீரென்று சிதறி விடும் நிலையில் இருக்கிறது. அம்மா எப்பவுமே என்ன பண்ணுவாங்கன்னு சொல்லவே முடியாது. ஆனால் நேற்று என் நண்பன் சொன்ன ஒரு விஷயம் வித்தியாசமாக இருந்தது. "திமுக என்பது மிகப்பெரிய தொல்லை. அதை தேர்தலில்தான் சரிக்கட்ட முடியும். ஆனால் காங்கிரஸ் உள்பட சில சில்வண்டு கட்சிகளை அதற்கு முன்பாகவே காலி செய்து விடவேண்டும். முக்கியமாக காங்கிரஸ், தேமுதிகவை சேரவே விடக்கூடாது. என்ன பண்ணலாம்? தேமுதிகவை நம் பக்கம் வரவைப்போம். வேறு வழி இல்லாமல் காங்கிரஸ் திமுகவுடன் இணையும். பிறகு வைப்போம் கேப்டனுக்கு ஆப்பு!" என்று நினைத்திருப்பாரோ? தற்போது இருக்கும் நிலையில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மூன்றாவது அணியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க முடியுமே தவிர ஜெயிக்க முடியாது. இதில் திமுக தரப்பு கொண்டாட்டமாக இருப்பதாக தகவல்.

அம்மாவுக்கு பிடித்த திரைப்படம் என்னவாக இருக்கும்? த்ரீ இடியட்ஸ்?


சும்மா சீன் போடாதீங்க

கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் "பொதுவாக் இந்திய அணி ஒரு உலககோப்பைத்தொடர் முடிந்த பின் நல்ல பார்முக்கு வரும். சரியாக அடுத்த உலகக்கோப்பை தொடக்கத்தில் பார்மை இழந்துவிடும்." என்று அதில் சொல்லி இருந்தேன். முதலில் பவுலின்கில் சொதப்பினார்கள். போகப்போக பேட்டிங்கிலும் சொதப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ இங்கிலாந்து புண்ணியத்தில் காலிறுதியில் நுழைந்தால் கூட அதற்கு மேல் முன்னேறமுடியாது என்றே தோன்றுகிறது. வழக்கம்போல பாகிஸ்தான் அல்லது இலங்கையுடன் இறுதி போட்டியில் மோதி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகிவிடும் போலிருக்கிறது. வழக்கம்போல அதிக ரன் குவித்த சச்சினுக்கு கார் கொடுப்பார்கள். 2015இல் அப்போதைய கேப்டன் பேட்டி கொடுப்பார் "இது சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பை. ஆகவே அதை அவருக்கு பரிசளிப்போம்." என்று.

இதில் கேப்டன் தோனி வேறு நிறைய காமெடி செய்து வருகிறார். ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கை இருக்கலாமா? இன்னுமா இவர் நெக்ரா மற்றும் பியூஸ் சாவ்லாவை நம்புகிறார்? முதலில் ஏதோ ஒரு நம்பிக்கையில் இவர்களை தேர்வு செய்து விட்டார்கள். தற்போது அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வரட்டு கவுரவத்துக்காக தொடர்ந்து இவர்களை ஆட வைப்பது போல தோன்றுகிறது. சரி அஷ்வின் இந்தியாவை சுற்றி பார்த்ததே இல்லையா? அவரை ஏன் அணியில் சேர்த்தார்கள்? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணியுடனான மேட்சிலாவது அவரை ஆடவைத்து அவரின் திறனை சோதித்திருக்கலாமே? இனி இருப்பது ஒரே ஆட்டம். அதில் கண்டிப்பாக இவரது "நம்பிக்கை நட்சத்திரங்கள்"தான் இருப்பார்கள். தப்பி தவறி ஜெயித்து விட்டால் பின்னர் அணியை மாற்றாமலேயே முன்னேறுவார்கள். எல்லா இந்திய கேப்டன்களுக்கும் பிடிக்கும் ஒரு கிறுக்கு தற்போது தோனியை பிடித்து விட்டது. "யப்பா! கம்பீர், ரெய்னா, கொஹ்லி ரெடியாவுங்கப்பா. கேப்டன் வேலைக்கு ஆள் எடுக்க போகிறார்கள்." 

அதுசரி, "பியூஸ் சாவ்லாவுக்கு இன்னும் பிராக்டிஸ் தேவை." என்று தோனி சொல்கிறாரே, எதற்கு பிராக்டிஸ் தேவை? அடுத்த மாதம் ஐபிஎல்லில்  விளையாடவா? அதற்காகத்தான் உலகக்கோப்பையில் விளையாடி பயிற்சி பெறுகிறாரோ?


ஜப்பான் சோகம்


ஜப்பானில் நிகழ்ந்துள்ள இயற்கை பேரழிவில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு பீனிக்ஸ் போல எழுச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். 
பொதுவாக ஜப்பானுக்கு நிலநடுக்கமும், சுனாமியும் புதிது கிடையாது. ஆனால் இயற்கை இப்படி எதிர்பார்க்காத நேரத்தில் மிக கடினமான பாடங்களை எளிதாக நடத்தி விடுகிறது. "சுண்டைக்கா பசங்களா. நீங்களா உலகை ஆளபிறந்தவர்கள்?" என்று மனிதனின் அகந்தையை உடைத்து விடுகிறது. இதில் இயற்கை சீற்றம் பாதி என்றால் மனிதனின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மீதி. அணு உலை வெடித்து கதிரியக்கம் வெளியேறுகிறதாம். ஒரு ஹிரோஷிமா நாகசாகியையே நம்மால் இன்னும் மறக்க முடியவில்லை. தற்போது உலக நாடுகள் வைத்திருக்கும் அணு குண்டுகளின் சக்தி அதை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தவையாம். என்னதான் மனிதன் விஞ்ஞானம் மூலம் இந்த அண்டத்தையே அளந்தாலும், அதன் சூட்சமத்தை மட்டும் மனிதனால் புரிந்துகொள்ளவே முடியாது. அடுக்கு மாடி கட்டிடங்கள், கார்கள், லாரிகள், கப்பல்கள் என்று நொடிப்பொழுதில் சொத்து என்று நினைத்து மனிதன் சேர்த்துவைத்த அனைத்தும் இந்த மண்ணோடு மண்ணாகிப்போனது. இயற்கை தொடர்ந்து மனிதனுக்கு உணர்த்தி வருவது ஒன்றே ஒன்றுதான். "எல்லாம் ஒருநாள் இந்த மண்ணுக்குள் சென்றுவிடும். உன்னையும் சேர்த்துத்தான்."

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று... 
இறைவன் சிரிப்பதுண்டு பாவம் மனிதனென்று..."


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

March 14, 2011

காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு...

இன்னிக்கு காலைல என் நண்பன் ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அத பாத்ததுல இருந்து மனசே சரியில்ல.

மைக்ரோ சாப்ட் நிறுவனரின் சிறந்த தயாரிப்பு எது தெரியுமா

:
:
:
:
:
:
:

:
:

இல்லை இல்லை...

:
:
:
:
:
:
:


:
:

கிடையாது
:
:
:
:
:
:
:


:
:

அட இல்லீங்க...
:
:
:
:
:
:
:


:
:

ப்ச் இதுவும் கிடையாது 
:
:
:
:
:
:
:


:
:

கிடையவே கிடையாது
:
:
:
:
:
:
:


:
:

இதுவும் இல்லை 
:
:
:
:
:
:
:


:
:

நோ நோ 

அப்புறம் வேறென்ன?
:
:
:
:
:
:
:


:
::
:
:
:
:
:

:
:இவங்கதான் அண்ணன் பில்கேட்ஸின் புதல்வியாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ. அட போங்கப்பா காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..


முழுவதும் படிக்க >>

March 11, 2011

கோபத்தை அடக்கலாம் வாங்க....சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? எனக்குத்தெரிந்த சில ஐடியாக்களை சொல்கிறேன். பெரும்பாலும் சொந்த அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.கோபத்தின் படிநிலைகள் 

கோபம் என்பது பலவகைப்படும். நமக்கு பிடிக்காத அல்லது நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்டாலோ, நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போனாலோ, நமக்கு வரும் ஏமாற்றம்தான் ஒருசில நொடிகளில் கோபமாக உருவெடுக்கிறது. அது அளவு கடந்து போகும்போது ஆத்திரமாக மாறுகிறது. அதை வெளிப்படுத்த முடியாமல் போகும்போது ஆற்றாமை ஆகிறது. மனதின் உள்ளே புதைக்கப்பட்டு வஞ்சமாக உருவெடுக்கிறது. வஞ்சத்தையும் தீர்க்க முடியாவிட்டால் மனசோர்வை ஏற்படுத்தி சுயபச்சாதாபமாக ஆகிவிடுகிறது. இதுதான் ஹிஸ்டீரியா உட்பட பல மனநோய்களின் ஆரம்பம். இவற்றுள் ஆரம்பத்திலேயே கோபத்தை கட்டுப்படுத்திவிடுவது நலம். ஒவ்வொரு நிலையிலும் அதற்கேற்ற தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.


கோபத்தை அடக்கலாமா?

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் கோபத்தை அடக்குவதல்ல. கோபத்தை கையாள்வது ஆகும். கோபம் என்பது நெருப்புத்துண்டம் மாதிரி. அதை அடக்குகிறேன் என்று மனதில் போட்டு அழுத்தினால் மேலே கூறிய படிநிலைகளில் அது உருமாறிக்கொண்டே வரும். ஆகவே மனதில் இருக்கும்வரை அந்த நெருப்புத்துண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். கோபத்தை கையாள்வது என்பது அதனை சரியான பாதையில் திருப்பி விடுவது அல்லது அதன் வேகத்தை லாவகமாக குறைப்பது. கிரிக்கெட்டில் வேகமாக வரும் பந்தை பிடித்தபின் வீரர்கள் கையை பின்னுக்கிழுத்து, சில அடி உருள்வது பந்தின் வேகத்தை குறைத்து அதன் தாக்கம் (impact) கையில் ஏற்படாமல் தடுக்கவே. அதே முறையை நாம் கோபப்படும்போதும் பின்பற்றவேண்டும்.


கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் 

இந்த வழிமுறைகளில் பலவற்றை நான் பின்பற்றி பலன் கண்டிருக்கிறேன். தொடக்கத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

தற்காலிகமாக குறைக்க

1. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

2. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

3. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

4. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

5. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

6. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.


நிரந்தரமாக குறைக்க 

1. கோபத்தின் பெற்றோர் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்தான். இவற்றை களைந்து விட்டால் கோபம் வருவது குறையும். எந்த ஒரு விஷயத்தோடும் மிகுந்த ஈடுபாடு காட்டாமல் தாமரை இலை நீர்போல இருப்பது சிறந்தது. கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்ப்போம். கடைசி நேரத்தில் அவர் இன்னிக்கு மீட்டிங் என்று காரணம் சொல்வார். சினிமாக்கு போக அப்படி ஒன்று அவசியம் இல்லை என்ற எண்ணம் வந்தால் கோபம் வருவது குறையும்.

2. யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார்கள் என்று ஆராயவேண்டும். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று நினைத்து பார்க்கவேண்டும்.

3. இதற்குமுன் இதே மாதிரி ஒரு விஷயத்தில் நாம் கோபப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து பார்க்கவேண்டும். 

4. கோபம் ஏற்படுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களை கவனியுங்கள். கோபம் வந்து சில நிமிடங்களில் மிக களைப்பாக இருப்போம். பசி இருக்காது. அடிவயிற்றில் நெருப்பு எரிவது போல உணர்வோம். அடுத்தவர் மீது கோபப்பட்டு நாம் உடல்நிலையை கெடுத்துக்கொள்ளலாமா?

5. எல்லோருக்கும் குறைகள் உண்டு குற்றங்கள் உண்டு. மனிதர்களின் குறைகளை பார்க்காமல் அவர்களின் நல்ல குணங்களை பாருங்கள். தவறு செய்தால் உணர்த்துங்கள். கோபத்தால் ஒருவரை திருத்த முடியாது. பயமுறுத்தத்தான் முடியும். அவர்கள் மறுபடியும் அதே வேலையை செய்யும்போது பதட்டத்தில் இன்னும் அதிக தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது.


மேலே சொன்ன வழிமுறைகளை கடைபிடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால் பின்பற்றி அதன் பலனை பார்த்தபின் ஒரு முடிவுக்கு வாருங்கள். கோபத்தின் விளைவுகள் மிக மோசமானவை. ஒரு தந்தை மகனிடம், “உனக்கு கோபம் வரும்போதெல்லாம் அந்த சுவற்றில் ஒரு ஆணி அடி. அது தவறு என்று நினைக்குபோது ஆணியை பிடுங்கி வீடு” என்றாராம். ஒரு வருடம் கழித்து மகன் சாந்தமானவன் ஆகிவிட்டான். ஆனால் சுவர் முழுக்க ஓட்டைகள். கோபத்தின் விளைவுகள்தான் அது. 

அதுசரி கோபமே படாமல் இருந்தால், சூடு சொரணையே இல்லாத ஜடம் ஆகி எல்லோருடைய கேலிக்கும் ஆளாகி, இளிச்சவாயன் என்று பேரெடுத்து விடுவோமே? கோபம் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். சரியான இடத்தில் கோபத்தை காட்ட வேண்டும். காந்தியை பிடித்து கீழே தள்ளிய அந்த ரயில்வே அதிகாரியிடம் கோபத்தை காட்டி இருந்தால் அன்றே அந்த பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் கோபத்தை ஆங்கில அரசிடம் காட்டினார். அதுதான் அர்த்தமுள்ள கோபம். மனிதநயம் என்று ஒன்று வந்துவிட்டால், தேவை இல்லாத கோபத்தை தவிர்த்து விட்டு உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கமுடியும். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

March 8, 2011

மகளிர் தினத்தில் ஒரு ஆணாதிக்க பதிவு....

சுயமுன்னேற்றத்தை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். திடீரென்று ஞாபகம் வந்தது. இன்று மகளிர் தினம் என்று. பதிவுலகத்தில் நிறைய பதிவர்கள் எழுதி தள்ளி விட்டார்கள். தினமும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சில பதிவுகளை மட்டுமே என்னால் படிக்க முடிகிறது. ஒரு சில பதிவர்கள் என்ன எழுதினாலும் எனக்கு உடன்பாடாக இருக்காது. இருந்தாலும் அவர்கள் பதிவை தினமும் படிப்பேன். அப்படி படித்த சில பதிவுகள்தான் இந்த பதிவை என்னை எழுதத் தூண்டியது.பெரும்பாலும் நான் படிக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் சில சமூக கருத்துக்கள் இருந்தால் அதை நாம் பின்பற்றுகிறோமா? என்று எனக்கு சந்தேகம் வரும். இல்லாவிட்டால் வருத்தமாக இருக்கும். தற்போதும் அதே மன நிலையில்தான் இருக்கின்றேன். ஏனென்றால் சாடிசம், சைக்கோதானம், திமிர், ஆணவம், அராஜகம் ஆகியவற்றின் மொத்த உருவமான ஆண்பிள்ளையாக பிறந்துவிட்டோமே என்று. பெண்களுக்கென்று வரும் பிரத்யேக இதழ்கள், கட்டுரைகள், பெண்கள் அமைப்பின் பேச்சுக்கள், எல்லாமே இதை நிலை நிறுத்தும் வகையில்தான் இருந்து வருகிறது. இன்று இணையத்தில் பெண்கள் தின சிறப்பு கட்டுரைகள் அனைத்தும் இதை ஆணித்தரமாக கூறுகின்றன. அப்படி என்றால் நான் ஒரு சாடிஸ்ட் என்பது உண்மையாகத்தானே இருக்கவேண்டும்?

எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன். டாமினேசன் என்னும் ஆளுமை குணம் எல்லோருக்கும் உண்டு. அது செல்லுமிடத்தில் செல்லுபடியாகிறது. பொதுவாக ஆண் என்பவன் மனதால் பலம் குன்றியவன். அதனை மறைக்க முரட்டுத்தனம் என்கிற முகமூடியை மாட்டிக்கொள்கிறான். ஒரு ஆணின் மன நிலையில் இருந்து சொல்கிறேன், பெரும்பாலான ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் டாமினேட் செய்வதில்லை. தன்னை விட பலம் குன்றி யார் இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஆளுமையை காட்டுவான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த பொதுவான மிருக குணம் அவன் எவ்வளவு படித்திருந்தாலும் மறைவதில்லை. ஒருவன் இன்னொருவனை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும் ஒரே ஜாதியினர் என்றால் பிரச்சனை வருவதில்லை. இருவரும் வேறு ஜாதியினர் என்றால் அங்கே அது சாதி சண்டையாக உருவெடுக்கும். ஒரு ஆண் இன்னொருவரை டாமினேட் செய்ய முயல்கிறான் என்றால் அது இன்னொரு ஆணாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அது ஒரு பெண்ணாக இருந்து விட்டால் அங்கே அது ஆணாதிக்கமாக மாற்றப்படுகிறது. முற்றிலும் ஆண்களே இருக்கும் பணியிடங்களிலும் இந்த டாமினேசன் உண்டு.

வரதட்சணை பிரச்சனை என்பது ஒவ்வொரு மனிதரின் பேராசையினால் வருவது. இதற்கு ஆண் பெண் என்ற பேதமில்லை. நூற்றுக்கு 35 சதவீத பெண்களும், 35 சதவீத ஆண்களும் வீட்டுக்கு வரும் பெண்ணிடம் பணத்தை வாங்கி முதலீடு செய்ய அல்லது அனுபவிக்க விரும்புவார். மீதம் இருக்கும் 30 சதவீதம் பேர் அப்படி வாங்குவதை கேவலமாக நினைப்பவர்கள். ஒரு சைக்கிளாக இருந்தாலும் அது தன் சொந்த பணத்தில்தான் வாங்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்மகன்கள் ஏராளம். இதற்கு காரணம் சமூக அக்கறை அல்ல. முதலில் கூறிய அந்த மிருக குணம். ஆளுமை குணம். தனக்கு வரும் மனைவி என்றில்லை, நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் கை எந்த கூடாது என்று நினைப்பவர்கள். அவர்களிடம் உதவி கோரினால் எங்கே தன் ஆளுமையை விட்டு இறங்கி வர வேண்டியிருக்குமோ? என்று பயந்து உதவி கேட்காமல் இருப்பவர்கள். துரஷ்டவசமாக அவர்களும் ஆணாதிக்க சாயம் பூசப்படுகிறார்கள்.

ஆணாதிக்கத்தை எதிர்த்துவரும் கட்டுரைகள் எல்லாமே வீட்டுக்கு வரும் புதுப்பெண் கணவன் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்தே சொல்லப்படுகின்றன. ஆனால் அங்கேயும் ஆண்களை விட பெண்களே வில்லிகளாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆண் செய்யும் தவறாக கூறப்படுவது வாய் பேசாமல் ஊமையாக இருந்துவிடுவது. எந்த சமூகத்துக்காக பொறுத்துக்கொண்டு இருப்பதாக ஒரு பெண் கூறுகிறாளோ அதே சமூகத்துக்காகத்தான் ஆணும் ஊமையாக இருக்க வேண்டி இருக்கிறது. நேற்றுவரை தன்னிடம் எரிந்து விழுந்த மகனை ஒன்றும் சொல்லமாட்டாள் தாய். திருமணத்துக்கு பிறகு அதே மாதிரி நடந்தால் அதற்கு காரணம் வந்த மருமகள் என்று புலம்ப தொடங்குகிறாள். அவளை சமாதானப்படுத்த முடியாது. அவனை பெற்றவள் அல்லவா? ஆகவே மனைவியை சமாதான படுத்த முயல்கிறான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மனதளவில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்கள் அப்போது நடக்கும் விஷயத்தை வைத்து ஒருவரின் குணத்தை முடிவு செய்பவர்கள். பெண்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு first impressionதான் முக்கியம். வீட்டுக்குள் வந்தவுடன் தன் கண்ணுக்கு வில்லியாக தெரியும் மாமியார் அவளுக்கு நல்லவளாக தெரியபோவதே இல்லை. ஆகவே கணவன் சமாதானப்படுத்தினாலும் அவள் கேட்பதில்லை. 

கணவன் முன்னிலையில் அமைதியாக இருந்தாலும், அவன் இல்லாத நேரத்தில் மாமியாரிடம் லேசாக உரசுகிறாள். போதுமே? மகன் வந்தவுடன் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர்வடிக்கிறாள் தாய். படுக்கை அறையில் தனியாக கண்ணீர் வடிக்கிறாள் மனைவி. முன்பே சொன்னது போல ஆண் மனதளவில் பலவீனமானவன். அவனால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை. முரட்டுத்தனத்தை எடுத்து முகமூடியாக அணிந்து கொள்கிறான். மற்றபடி ஆண்கள் தனியாக சங்கம் வைத்து, ஒவ்வொரு குழந்தையையும் பெண்ணை அடிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி அனுப்புவதில்லை. சொல்லப்போனால் பெண் சமூகம்தான் திருமணத்துக்கு முன் ஆண்கள் சமூகத்தை ஒரு சைக்கோ கூட்டம் என்பது மாதிரியான எண்ணத்தை பெண்ணின் மனதில் விதைத்து விடுகிறது. திருமணம் என்பது மனதளவில் இரு பாலருக்குமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதை வெளிஉலகத்தில் மறந்துவிடுகிறான் ஆண். ஆனால் பெண் அதை தன் தோழிகளோடு பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் அங்கேயும் அதே கதைதான். ஆகவே அவளுக்குள் சுமை அதிகமாகவே செய்கிறது.

ஆண் அறிவுப்பூர்வமாக செயல்படுபவன். ஆகவே எதையுமே மேலோட்டமாக அணுகுபவன். ஆனால் பெண் உணர்வு பூர்வமாக செயல்படுபவள். ஆகவேதான் ஆணின் அணுகுமுறைகள் பெண்ணின் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண்மை உண்டு. அது எப்போதாவது வெளிவரும்போது அவன் நாடுவது தாய் மடியை அல்லது மனைவியின் மடியை. அப்போதுதான் அவனுக்கு அவளின் அருமை புரிகிறது. பெண்களே! உலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா பாலினத்திலும் இருக்கிறார்கள். வெகு காலத்துக்கு முன்பு வேண்டுமானால் பெண்கள் முற்றிலும் அடிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இந்த நிலை மாறிவருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மனதளவில் மாறி வருகிறார்கள். இனியும் ஆண்களை சைக்கோவாக சித்தரிக்கின்ற போக்கை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான முறையில் சிந்திக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.


அண்ணே எங்க போறீங்க? இது நமக்கு. ஆம்பள பசங்களுக்கு. புதுசா ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு போறீங்க. மோத நாள் எல்லா பயலும் உங்கள பாத்து மொறைக்கிறான். அப்ப உங்க ஊர்க்காரன் ஒருத்தனை பாக்குறீங்க. அப்ப உங்க மனசுல ஒரு நிம்மதி வருமே? அப்படித்தான் இருக்கும் உங்கள கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கும். அவளுக்கு அந்த வீட்டுல உங்கள விட்டா வேற யாருமில்ல. அதனால அவ மனசு நோகாம நடந்துக்கிறதுதானே நல்ல ஆம்பளைக்கு அழகு. நமக்கு எப்பவுமே ஈகோவை டச் பண்றது பிடிக்காதில்லையா? இப்போ ஈகோவை டச் பண்ற மாதிரி ஒண்ணு சொல்றேன். நீங்க சரியான ஆம்பளையா இருந்தா உங்களுக்கு சமமான பலத்துல இருக்குறவங்கிட்ட உங்க வீரத்த காட்ட வேண்டியதுதானே? அத விட்டுட்டு அப்பாவி பொண்ணுகிட்ட வீரத்த காட்டலாமா?

ஆண் பெண் இருவருக்கும் ஒன்று சொல்கிறேன். மனிதநேயத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. எதிர்பாலினமாக பார்க்காமல் சக மனிதராக பார்த்தால் வேற்றுமை குறையும். நாம் கற்ற கல்வி பணம் சம்பாதிக்க அல்ல. நம்மை மிருகத்தனத்தில் இருந்து மனிதனாக மாற்றவே. இனி வரும் காலங்களில் மகளிர் தினத்தை கொண்டாடும் அவசியம் இல்லாமல் போக வேண்டும் என்பதே என் ஆசை.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

March 4, 2011

புதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்....


சில மாதங்களுக்கு முன்பாக பதிவுகளும் சில சந்தேகங்களும் என்று மிக சீரியஸாக ஒரு பதிவை எழுதி, பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு எதிர்பதிவெல்லாம் போட்டார்கள். இப்போது இங்கே நான் கேட்கும் சந்தேகங்களும் பதிவுலகம் பற்றித்தான். ஆனால் இது சீரியசா? காமெடியா? என்று தெரியவில்லை. உங்களுக்கு விடைதெரிந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ தயவுசெய்து கூறுங்கள். "அதென்ன புதிய பதிவர்னு போட்டிருக்க?" அப்படின்னு கேட்கலாம். இந்த சந்தேகங்கள் புதிய பதிவர்களுக்கு வரலாம் அல்லவா? அவர்கள் மன நிலையில் இருந்து எழுதி இருக்கிறேன். (எனக்கு சந்தேகம்னு சொன்னா ஒரு வருடமா என்னத்த கிழிச்சன்னு கேட்டிருவாங்களோண்ணு இப்படி கேட்டுட்டு, சமாளிக்கிறதை பாரு)


சந்தேகம் #1இந்த சந்தேகத்தை ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதென்ன வடை? கமெண்ட் போடுவதற்கும் வடை வாங்குவதற்கும் என்ன தொடர்பு? குறிப்பாக வடையைத்தான் சொல்ல வேண்டுமா? மொத பஜ்ஜி, மொத போண்டா என்று சொல்லக்கூடாதா? இது என்னை மாதிரி பஜ்ஜி போண்டா ரசிகர்களின் ஆதங்கம். சில பதிவர்கள் இதை வித்தியாசமாக மொத வெட்டு, சூடு சோறு என்றெல்லாம் சொல்கிறார்கள். மொத வெட்டு என்று சொல்வது ஆட்டைத்தானே? தமிழனையும் சாப்பாட்டையும் பிரிக்க முடியாதோ? அம்மா இங்கே வா வா பாடலில் கூட அம்மாவுக்கப்புறம், "இலையில் சோறு போட்டு" என்றுதானே சொல்கிறார்கள். ஒருவேளை அதன் நீட்சிதானோ இது?


சந்தேகம் #2
சில பதிவர்கள் மற்றும் கமெண்டர்கள் "அவ்வ்வ்வ்" என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். microsoft indic tool பரிந்துரையில் வரும் அளவிற்கு இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை எந்த மாதிரி அர்த்ததிற்கு பயன் படுத்த வேண்டும் என்றே குழப்பமாக உள்ளது. சிலர் அழும்போது, சிலர் குழப்பத்தில் இருக்கும்போது, சிலர் கலாய்க்கும்போதும் பயன்படுத்துகிறார்கள். இது வடிவேலு சொல்லும் 'அவ்வ்'வா அல்லது கடித்து குதறுவதற்கு முன் குரைக்கும் 'அவ்'வா. ஒரே குழப்பமா இருக்கு ....அவ்வ்


சந்தேகம் #3 சொம்பு நசுங்குவது என்று சொல்கிறார்கள். அது எந்த சொம்பு? மற்றவர்களை மட்டம் தட்டுவதற்காக சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். சொம்பு நசுங்கினால் அது கேவலமா? யாராவது ஏதாவது கருத்து சொன்னால், சொம்பு நசுங்கி விட்டது என்று சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? சொம்பு பல வகைப்படும். அது பித்தளை சொம்பா? எவர்சில்வர் சொம்பா? அல்லது வெள்ளி சொம்பா? இதில் எந்த சொம்பு நசுங்கினால் அது கேவலம்? சொம்பு நசுங்கி விட்டது, அல்லது நசுங்கவில்லை என்று எப்படி கண்டு பிடிப்பது?


சந்தேகம் #4 


கொஞ்ச நாளாகவே நம்ம டாக்டர் விஜய் அவர்களை பற்றி எந்த பதிவரும் எழுதுவதில்லையே? பதிவர்கள் மாறி விட்டார்களா? அல்லது அவரை கலாய்த்து போராடித்துவிட்டதா? இவரையும் பாவம் என்று விட்டுவிட்டால் நமக்கு யார் இருக்கா கலாய்க்கிறதுக்கு? பதிவுலகத்தை மீட்க விரைந்து வருவான் வேலாயுதம் என்று முழுமையாக நம்புகிறேன்.


சந்தேகம் #5 


கொஞ்சம் சீரியஸான சந்தேகம்தான். வன்கொடுமை சட்டம் என்றால் ஒருவரை சாதியின் பெயரால் திட்டுவது. இது எல்லா சாதிக்கும் பொருந்துமா? அல்லது குறிப்பிட்ட சாதியினருக்குத்தான் பொருந்துமா? ஒரு சில பதிவர்கள் பார்ப்பனர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சாதியினரை தீட்டி எழுதுகிறார்களே, அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்க முடியுமா? ஒரு சிலர் "பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் கிடையாது. தன்னை விட மற்றவர்கள் முன்னேறிவிட கூடாது என்று எண்ணுகிறவர்கள்." என்று சொல்கிறார்கள். ஆனால் எங்கு பார்ப்பனர்கள் பற்றி எழுதும்போதும் "அவா" என்று பிராமணர்களை குறிப்பது போலவே எழுதுகிறார்களே இது அறியாமையா இல்லை குசும்பா?
(என்னதான் வில்லங்கமா எழுதக்கூடாதுண்ணு நினைச்சாலும் முடிய மாட்டேங்குது)


சந்தேகம் #6  

முதலாளித்துவத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னால் கூட "அமெரிக்காவின் கைக்கூலி" என்று சொல்லி விடுகிறார்களே, கம்யூனிசத்துக்கு ஆதரவாக எழுதுபவர்களை ரஷ்யாவின் கைக்கூலி என்று சொல்லலாமா? இப்படி ஒரு வார்த்தை பேசினால் கூட கூட்டமாக நின்று கும்மி விடுகிறார்களே இதை பார்ப்பனியம் என்று சொல்லலாமா? 

இந்த விஷயத்துக்கும் சந்தேகம்#6க்கும் சம்பந்தம் கிடையாது. ரஷ்யா என்றவுடன் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாளுக்கு முன்னாள் வினவு தளத்தில் ரஷ்யாவின் வளர்ச்சி, அதற்கு கம்யூனிசத்தின் பங்கு பற்றி ஒரு நீ....ளமான கட்டுரை எழுதி இருந்தார்கள். வழக்கம்போல் அதை படித்த பலபேர் இந்தியாவை திட்டியும், அதைவிட அதிகமானோர் வினவை திட்டியும் கருத்திட்டு மோதிக்கொண்டிருந்தனர். ஒரே ஒரு நபர் மட்டும் சோவியத்தில் இருந்து பிரிந்த சில நாட்டு மக்களிடம் தான் பேசிய கருத்துக்களை சொல்லி இருந்தார். அவர்கள் அனைவரும் கம்யூனிச ஆட்சியால் தாங்கள் அடைந்த துன்பத்தை பற்றி சொல்லி இருந்தார்கள். படிக்க சுவாரசியமாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் அப்புறம் படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அந்த கட்டுரையை காணவில்லை. ஏன் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. இல்லை அரை தூக்கத்தில், வினவு, கீற்று, மாற்று என்று நான்தான் குழம்பி போய் விட்டேனோ?

வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறுவதால், என் மற்ற சந்தேகங்களை அப்புறம் கேட்கிறேன்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...