விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 11, 2013

விஸ்வரூபம் போன்ற படங்களை என்ன செய்யலாம்?

; நான் விஸ்வரூபம் படத்தை பார்த்து விட்டேன். "படம் வெளிநாடுகளில் பட்டையை கிளப்பி வருகிறது", என்று எல்லோரும் கூறினாலும் எங்கள் ஊரில் தியேட்டர்கள் காத்தாடுகிறது என்பதே உண்மை.(ஒருவேளை வெளிநாடுகளில் படத்தின் நிலைமை என்னவென்று நமக்கு தெரியாது என்பதால் புருடா விடுகிறார்களோ?) என் உறவினர் ஒருவர் தீவிர கமல் பக்தர். அவரிடம் அவரது நண்பர் வழக்கமாக ஒவ்வொரு கமல் படம் வெளிவரும்போது கேட்கும் அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்டார். "உங்க ஆளுக்கு புரியுர மாதிரி படம் எடுக்கவே தெரியாதா?" என்பதுதான் அவர் வழக்கமாக கேட்கும் கேள்வி. பூஜா குமார் கமலை பின்தொடர்ந்து ஒரு டிடெக்டிவை ஏன் அனுப்புகிறார் என்பதையே நான் அரைமணி நேரம் அவருக்கு(கமல் பக்தருக்கு) விளக்கினேன். இது இப்படி இருக்க, தாலிபான், ஒசாமா, எஃப்‌பி‌ஐ, சீசியம் என்று நான் இறங்க அவர் சொன்னது, "கிழிஞ்சது போ.... ". இதுவே ஒரு C சென்டர் ரசிகனின் ஒற்றைவரி விமர்சனம்.&nbsp


சரி அதை விடுங்கள். "அதென்னமோ இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்களே? அதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?" என்று கூறுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நான் ஒரு கருத்தை சொல்லப்போக, கடந்த ஒரு மாதகாலமாக பல தளங்களில் வந்த அதே செட்ஆஃப் கருத்துகளை மறுபடியும் ஒரு முறை என் தளத்தில் வந்து பகிருவார்கள். இசுலாமிய கருத்துரையாளர்களுக்கு மாலேகான், மோடி, காஷ்மீர் என்று ஒரு அஜெண்டா. இந்து கருத்துரையாளர்களுக்கு, நபி, பர்தா, மலாலா என்று இன்னொரு அஜெண்டா. இவை இரண்டையும் தாண்டி இருவருமே வெளி வர விரும்ப மாட்டார்கள். ஆகவே அதை பற்றி பேசி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம். 


ஒரு இந்துவாக என் கருத்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லா இசுலாமியர்களும், தீவிரவாதிகளோ, கொடிய எண்ணம் கொண்டவர்களோ அல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, எல்லா இந்துக்களும், இந்துத்வாவாதிகளோ, ஆர்‌எஸ்‌எஸ்காரர்களோ, இசுலாமியர்களை விரோதிகளாக எண்ணுபவர்களோ அல்ல. தங்களது கடவுள்கள் குழுவில் அல்லா சாமியையும், ஏசப்பாவையும்  சேர்த்துக் கொண்டவர்களே அநேகம். சரி இதைப்பற்றி இன்னொரு நாள் இன்னும் விலாவாரியாக எழுதுகிறேன். 

நான் இந்த பதிவில் சொல்லவேண்டியதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று விட்டேன். பார்த்தீர்களா? இப்படித்தான் எல்லா விவாதங்களும் சென்று விடுகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் என்ற ஒரு படம் இல்லை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை சொன்னவுடன் உங்களுக்கு ஒரு உருவம் ஞாபகத்துக்கு வரும். அது நம் தமிழ் சினிமா உருவாக்கி வைத்துள்ள பிம்பம்.  அதையே இங்கே பட்டியலிட போகிறேன்.  இதே மேட்டரை பலபேர் ஏற்கனவே பட்டியலிட்டு விட்டாலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக. 

படத்தில் வரும் பாத்திரங்களை சில பிரிவுகளாக பிரித்துள்ளேன்.

துணை பாத்திரங்கள் 

தீவிரவாதி - பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லீம்

போலி சாமியார் - ஒரு இந்து சாமியார் (பெயர் ஏதோ ஒரு ஆனந்தாவாக இருக்கும்)

அம்மு குட்டி (அ) ஓமண குட்டி - கேரளாவை சேர்ந்த ஒரு பெண். இவளுக்கு எப்போதுமே தமிழ் ஆண்கள் மீது ஒரு கண் உண்டு. ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ஹி ஹி...  

நாயர் - இவர் அம்முகுட்டியை கல்யாணம் செய்த அப்பாவி. டீக்கடை நடத்துபவர்

மடிசார் மாமி - இவர் அம்முகுட்டியின் தமிழ் சாரி ஆரிய வெர்ஷன். இவரது ஆத்துக்காரர் யாரென்பது தெரியவே இல்லை

கிளப்பில் நடனம் ஆடுபவள் -  கிறித்துவ பெண் 

விபசாரம் செய்பவள்#1 - வாழ்க்கை இழந்த (வில்லனால் கெடுக்கப்பட்ட) தாழ்ந்த சாதி பெண்

விபசாரம் செய்பவள்#2 - ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார கிறித்துவ பெண்

விபசார விடுதி நடத்தும் பெண் - வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு தெலுங்கு பேசுபவள் 

சேட் - மக்களை ஏமாற்றும் வட்டிதொழில் செய்யும் முட்டாள் வட இந்தியர் 

ரொம்ப நல்ல பெரியவர் - வயதான பள்ளி ஆசிரியர் அல்லது சுதந்திர போராட்ட தியாகி

போலீஸ் கமிஷனர் - வில்லனுக்கு துணை போய், அவனிடம் அறை வாங்கும் அளவுக்கு கேவலமான மாமா

பட்லீ அல்லது செட் அப் - நுனி நாக்கில் தமிழ் பேசும் ஆங்கிலோ இந்திய பெண் 

கறிக்கடை பாய் - பத்து இந்துக்கள் கடை வைத்திருக்கும் இடத்தில் மத நல்லிணத்துக்காகவே கசாப்பு கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லீம். 

ஃபாதர் - அதே தெருவில், அதே காரணத்துக்காக அங்கியை மாட்டிக்கொண்டு குறுக்கா மறுக்கா நடக்கும் கிறித்துவர்


குருக்கள் - ஒரு சண்டை காட்சிக்கு லீடாக ரவுடிகளால் கலாய்க்கப்படும் ஒரு அப்பாவி. மற்ற நேரங்களில் நாயகன் அல்லது காமெடியன்களால் கலாய்க்கப்படுபவர்

 நர்ஸ் - நகைச்சுவை நடிகர்களால் கையை பிடித்து இழுக்கபடுபவர் 

வில்லன் மனைவி - கணவனுக்காக கோயில் கோயிலாக சுற்றும் தீவிர இந்து பக்தை. 

பத்திரிக்கை நிருபர் - தாடி வைத்தவர். வில்லனால் கொல்லப்படுபவர் 

திருநங்கை - காமெடி காட்சியில் கதாநாயகனை துரத்துபவர் அல்லது பாடல் காட்சியில் நகைச்சுவை நடிகரை சுற்றி ஆடுபவர். 

வில்லன்கள் 

லோக்கல் ரவுடி வில்லன் - தீவிர இந்து. குறிப்பாக முருகன், சிவன், முனியசாமி ஆகியோரை கும்பிடுபவன். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் 

ரெட்டி - படிக்காத ஆந்திர அரசியல்வாதி. பெண் பித்து பிடித்த கொலைகார வில்லன் 

பீகாரி - படிக்காத வட இந்திய தாதா. பெண் பித்து பிடிக்காத கொடூர கொலைகார வில்லன். 

அமெரிக்க ஐரோப்பிய வில்லன் - போதைக்கும் பெண்ணுக்கும் அடிமையான ஒரு கிறித்துவன் 

தேசத்தை அச்சுறுத்தும் தீவிரவாத வில்லன் - முதலில் தாடி வைத்து, பிறகு அதை மழித்து கொண்டு சுற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் 

கெட்ட சைக்கோ கொலைகாரன் - ஒரு கிறித்துவன்


பெண்களை கடத்துபவன் - கிறித்துவன்

கடத்த பட்ட பெண்களை ஏலம் எடுப்பவன் - துபாய் ஷேக் அல்லது முஸ்லீம் 

வில்லனின் முக்கிய அடியாள் - முஸ்லீம். திருந்தும் நேரத்தில் வில்லனால் கொல்லப்படுபவன் 


கதாநாயகன் மற்றும் கதாநாயகி
ஏழை கிறித்துவன் - மீன் பிடிப்பவன், சாராயம் குடிப்பவன். கேரஜ் வைத்து மெக்கானிக்காக இருப்பவன்

பணக்கார கிறித்துவன் - அடிப்படையில் நல்லவன் ஆனால் கடத்தல் தொழில் செய்பவன். விஸ்கி குடிப்பவன்.  (இந்துவாக பிறந்தவன்)


ஏழை இசுலாமியன் - இப்படி ஒரு பாத்திரம் மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் தாதா வில்லனின் அடியாள் (இந்துவாக பிறந்தவன்)

பணக்கார இசுலாமியன் - மிக மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் லோக்கல் தாதா (இந்துவாக பிறந்தவன்)

தலித் (அ) தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் - அநாதை, சேரியில் வளர்ந்தவன்.(உயர்ந்த சாதியில் பிறந்தவன்)

தமிழ் பட கதாநாயகன் (90%) - வேறு சாதியில்(தாழ்த்தப்பட்ட சாதியில் அல்ல) பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிராமணன் ஆக வாழ்பவன் அல்லது பிராமணனாக பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரியில் வாழ்பவன்  

பணக்கார கதாநாயகி - மாடர்ன் டிரெஸ் போட்ட, படித்த திமிர் பிடித்த வெகுளியான லூசுப்பெண்


ஏழை கதாநாயகி - தாவணி காட்டிய, படிக்காத வெகுளியான லூசுப்பெண்

மிடில் கிளாஸ் நாயகி - சுடிதார் போட்ட  காலேஜ் போகும் வெகுளியான லூசுப்பெண் 

புதுமைப்பெண் கதாநாயகி - பேண்ட் ஷர்ட் போட்டவள்,  நாயகனை மணக்கும் வரையில் பெண்ணுரிமை பேசுபவள் அதன் பிறகு லூசுப்பெண்  

 இப்போவே கண்ணை கட்டுது. இதுக்குமேல நம்மால் முடியாது. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள். 

இது ஒரு தவறான பிம்பம் என்றாலும்  இதை உருவாக்கிய பெருமை (அ) சிறுமை திரை துறையையே சாரும். இது மாற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் மாறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. யாரும் தட்டிக்கேட்கவும் போவதில்லை. அப்படியே கேட்டாலும், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று பதில் வரும். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க. 
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...