விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 20, 2011

நான் ஒரு காவி பயங்கரவாதிபதிவுலகம் என்பது எல்லோருடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம். என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கூட தணியாத எழுத்து தாகத்தை தீர்த்துக்கொள்ள உதவும் நீரூற்று. இலக்கியம், அரசியல், சினிமா, நகைச்சுவை, சமையல் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் பெட்டகம். எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பதை போல எனக்கும் இருக்கிறதல்லவா. ஆகவே வெகு காலமாக என் மனதில் இருந்துவந்த சில ஆதங்கங்களை இங்கே சொல்கிறேன். (வழக்கம்போல கொஞ்சம் நீளமாக...) டிஸ்க்: இங்கே இனம் என்ற வார்த்தை பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை சாதியை மட்டும் என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். 


மனிதன் முதன் முதலில் தோன்றியவுடன் அவனுக்கு ஏற்பட்ட உணர்வு எது தெரியுமா? காதலா? இல்லவே இல்லை. மனிதனுக்கு முதலில் தோன்றிய உணர்வு இன உணர்வுதான். அதாவது, "நான் மனிதன். என்னை போலவே இருப்பவர்கள் மனிதர்கள். என் இனத்தவர்கள்." என்பது மாதிரியான எண்ணம்தான். ஆதி காலம் முதல் தற்காலம் வரை ஒரு மனிதனால் வேறு எந்த விதமான உணர்வும் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். ஆனால் இன உணர்வில்லாமல் வாழ முடியாது. "அதெப்படி? தன்னலமில்லாத, இன பேதமில்லாத மனிதர்களும் இங்கு இருக்கிறார்களே?" என்று கேட்கலாம். கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் இனம் என்றவுடன் நாம் புரிந்து வைத்திருப்பது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட இனத்தை மட்டும்தான். ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இந்த இன உணர்வானது பிறப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு உண்டாவதில்லை. 


இன உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனால் இந்த சமூகத்தில் வாழ முடியும். இல்லாவிட்டால் அவன் தனித்து விடப்படுவான். இப்போது இனம் என்று எதை சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எதனோடாவது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே மனிதன் நினைக்கிறான். எவ்வளவுதான் படித்தாலும் இந்த உணர்வு மாறவே மாறாது. அது பெரும்பாலும், சாதி, மத, மொழி உணர்வுகளாக இருக்கும். அதுபோக அரசியல் கட்சிகள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், இஞ்சீனியர்கள் என்று எதனோடாவது நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம். இதுவும் ஒரு வகை இன உணர்வுதான். 


ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போது நான் அல்லது நாங்கள் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றியதோ, அப்போதே அவர்கள் நம் எதிர் இனத்தவர்கள், என்று இன்னொரு மனிதனை பார்க்கும் உணர்வும் தோன்றிவிட்டது. கூடவே, "அவர்களை விட நாம் மேம்பட்டவர்கள், பலசாலிகள், அவர்களை நம் ஆளுமைக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் ." என்ற எண்ணமும் தோன்றியது. இதன் விளைவாகவே, மனிதன் தோன்றியவுடன் செய்த முதல் காரியம், தன்னோடு தோன்றிய மற்ற இரண்டு மனித (குரங்கு) இனத்தை கூண்டோடு அளித்ததுதான். ஆக ஆரம்பத்தில் இருந்தே இன வெறி என்பது மனித ரத்தத்தில் ஊறிய ஒன்று. காலம் மாற மாற, நாகரீகம்(?) வளர வளர, மனிதன் தன் இன வெறிக்கும் நீரூற்றி வளர்த்து வந்தான். பிறகு ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ முடியாது என்ற நிலை வந்தவுடன், ஒரு வித ஒப்பந்தத்துடன் எல்லை வகுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் உள்மனதில் அந்த இன வெறி இருந்து கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வெளிப்படவும் செய்தது. 


கல்வி அறிவு வளர்ந்து, விஞ்ஞானம் வெகு வேகமாக வளர்ந்த நிலையில் இந்த இன உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கினான் மனிதன். ஆனால் அவனது ஆழ்மனதில் சுருண்டு கிடக்கும் கருநாகம் போல இந்த உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை கொஞ்சம் சீண்டினால் போதும். விருட்டேன எழுந்து விடும். அந்த நொடியில் அவன் கற்ற கல்வி, நாகரீகம், பண்பாடு ஆகியவை காணாமல் போய், ஆதி மனிதனாக மாறி விடுகிறான். இதைத்தான் பண்டைய காலத்தில் இருந்து அரசர்களும், தலைவர்களும் செய்து வருகிறார்கள். உங்களுக்கு பின்னால் ஒரு பெரும் கூட்டம் சேர வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, அந்த கூட்டத்தை, நீங்கள் அவர்களின் இனத்தவன் என்று நம்ப வைக்க வேண்டும். அதை விட மிக முக்கியம் அவர்களின் எதிரி இனத்திற்கு நீங்கள் எதிரி என்று நம்பவைக்க வேண்டும். இதற்கு பல மனிதர்கள் சான்றாக இருந்திருக்கிறார்கள். 


மிகப்பெரிய கொடுங்கோலனாக இருந்த ஹிட்லருக்கு கூட கடைசி வரை விசுவாசிகள் இருந்தார்கள். காரணம் ஹிட்லர் கையில் எடுத்தது இனவெறி என்ற ஆயுதம்தான். ஒசாமா பின் லேடன் ஆனாலும் சரி, பால் தாக்கரே ஆனாலும் சரி அவர்கள் கையில் வைத்திருப்பது இனவெறி என்னும் வசிய மை. எந்த மனிதனையும் எளிதில் ஆட்டுவிக்கக்கூடியது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை ஐம்பது வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கும் கழகங்களின் தொடக்கமே இன உணர்வை அடிப்படையாகக் கொண்டதுதான். பெரும்பான்மையான திராவிடர்களின் ஆதரவை பெற வேண்டுமானால், அவர்களை சிறுபான்மையான ஆரியர்களுக்கெதிரான இன உணர்வை தூண்ட வேண்டும். அந்த சரக்கு இன்றும் விலை போய் கொண்டிருக்கிறது. 


பூவுலகத்தின் தலை எழுத்துக்கு, வலையுலகமும் விதி விலக்கா என்ன? இந்த இன வெறியை தூண்டும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது . பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. புரட்சி செய்கிறேன் என்று மக்களின் மனதில் இன வெறியை தூண்டும், சிகப்புச்சட்டை பால்தாக்கரேக்கள் இங்கு அதிகம். ஆனால் இவர்கள் பால் தாக்கரேவையும், ராஜா பக்சேவையும் இன வெறியன் என்று கூறுகிறார்கள். நம் மக்களின் அடிப்படை இன உணர்வு மொழி உணர்வு, அதை சொல்லி பிரிக்கவேண்டும், பின்னர் மத உணர்வு, பின்னர் ஜாதி உணர்வு, பின்னர் வர்க்க உணர்வு. இப்படி ஏதாவது ஒரு இடத்தில் அவனை வசியப்படுத்தி விடலாம். "டேய் தமிழா! உனக்கு மானமில்லையா?" என்று தமிழர்களையும், "டேய் உன்னை இந்த காவி பயங்கரவாதிகள் அடிமை படுத்தி வைத்திருப்பது தெரியவில்லையா?" என்று பிற மதத்தவரையும், "அடேய் உன்னை அரிஜனம் என்று சொல்ல அந்த நாய் காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கு?" என்று பிற்படுத்தப்பட்டோரையும், "டேய் உன் இம்மானுவேல் சேகரனை விடவா தேவர் உயர்ந்தவர்?" என்று விஷத்தை பாய்ச்சி, இவர்கள் இருவர் பற்றி தெரியாதவர்களை கூட படிக்க செய்து தன்னுடைய இனமாக மாற்றும் நடவடிக்கைகளில் சில நல்ல உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள். எதுவுமே கிடைக்கலையா? குறைந்த பட்சம் ஆண் பெண் என்ற இன உணர்வையாவது தூண்டுவோம் என்று ஆணாதிக்கம், பெண்ணாடிமை என்று வீட்டில் பொண்டாட்டியை அடித்து காசு வாங்கி கட்டிங் அடித்து விட்டு பதிவுலகில் பஞ்சாயத்து பண்ண தொடங்கி விடுவார்கள்.


பொதுவாகவே சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு (சாதியினால் மட்டுமல்ல), இன்னொரு இனத்தின் மீது பொருமல் இருந்துகொண்டே இருக்கும். அதைப்போல ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அஜீத் ரசிகராக இருக்கும் பொது, ஒரே ஒருவர் மட்டும் விஜய் ரசிகராக இருந்தால் தொலைந்தது. அவரால் பேசவே முடியாது. கூனி குறுகி போய் விடுவார். ஆனால் அதே நேரம் கூட இன்னொரு விஜய் ரசிகர் சேர்ந்து விட்டால் அத்தனை நாள் சேர்த்து வைத்த கடுப்பை கொட்டி தீர்த்து விடுவார். விளைவு எப்படா அஜீத் ரசிகன் தனியாக மாட்டுவான் என்று காத்திருக்க ஆரம்பித்து விடுவார். எப்படா இந்த ரஜினி தவறு செய்வான், அவனை காய்ச்சலாம் என்று காத்திருந்து, கூப்பாடு போடுபவர்களை பதிவுலகில் எங்கும் காணலாம். இந்த தாழ்வு மனப்பான்மையால், வேறு இனத்தவர் சும்மா சிரித்தால் கூட நம்மை பார்த்துத்தான் சிரிக்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். 


அதன்பின் அடுத்த இனத்தை முடிந்த அளவு தகாத வார்த்தைகளால் திட்டுவது, முடியாத பட்சத்தில் அடுத்தவர்களின் திட்டுகளை ரசிப்பது என்று உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தை அவ்வப்போது தட்டி கொடுப்பார்கள். இந்த மாதிரி வலைப்பக்கங்களுக்கு அதிகமாக ஹிட்ஸ் கிடைப்பதே இதன் சான்று. ஒரு சில நல்ல எண்ணத்தில் வெளிப்படும் பதிவுகளில் கூட பின்னூட்டமிட்டு அந்த பதிவின் நோக்கத்தையே திசை திருப்பும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி பதிவுகளால் எந்த பிரயோசனமும் கிடையாது. சம்பந்த பட்டவர்களின் மனதில் இருக்கும் வக்கிரங்களுக்கு வடிகாலாக வேண்டுமானால் அமையும். உண்மையான சமூக அக்கறை உள்ளவனுக்கு அடுத்த மக்களை பிரித்து பார்க்க தெரியாது. ஒரு இனத்தை தாழ்த்தி பேசி, இன்னொரு இனத்தவனை மகிழ்விப்பதில் இருந்தே அவர்களின் சமூக உணர்வு பல்லிளித்து விடுகிறது. இது புரியாமல் இந்த மாதிரி பதிவுகளை படித்து விட்டு, ஒரு கூட்டம் தன் மனதில் இருக்கும் வக்கிரங்களையும் பின்னூட்டங்களால் இறக்கி வைக்கிறது. இன்னொரு கூட்டம் தங்கள் இனம் திட்டப்படுவதை பொறுக்காமல், பதிலுக்கு திட்டி தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.


சிங்கம் படத்தில் ஒரு வசனம் வரும், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாடியும் ஒரு ஜாதி இருக்கு, ஒரு கூட்டம் இருக்கு. அதை நல்லவர் யாரும் காட்டிக்க மாட்டாங்க. அதைத்தான் நானும் சொல்கிறேன். ஒரு மனிதனை வசியப்படுத்தி தன் பேச்சை கேட்க வைப்பதை ஆங்கிலத்தில் Manipulation என்று கூறுவார்கள். இது பலவகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த இன உணர்வை தூண்டுவது. மக்களே பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. உங்களுக்கு இன உணர்வு இருப்பது தவறே கிடையாது. ஆனால் அடுத்த இனத்தையும் மனிதனாக பார்க்கும் உணர்வும் இருக்கணும். மற்றபடி இனத்தை காட்டி உங்களை Manipulate செய்ய நினைக்கும் யாரையும் கண்டுக்காதீங்க...


இந்த இடத்தில் என்னுடைய இனஉணர்வையும் பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது. மதக்குறியீடுகள் என்பது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவருக்கும் எவ்வளவு மதிப்பிற்குரியது என்பது தெரிந்ததே. தெரிந்திருந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தவர் மதக்குறியீடுகளை குதர்க்கமாக கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? காவி என்பது இந்துக்களை பொறுத்தவரை ஒரு புனிதமான ஒரு நிறம். ஆனால் கண்ட நாதாரிகளை அடிப்படையாக வைத்து காவி குள்ளநரி, காவி பயங்கரவாதி என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? மேலும் ஒரு மதத்தை ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக அவர் மத வெறியர் அல்லர். அதே போல ஒரு மதத்தை சேர்ந்தவர் அயோக்கியர் என்பதற்காக அந்த மதத்தவர் அனைவருமே அயோக்கியர் அல்லர். எப்படி இசுலாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று பரப்பப்ப்டுகிறதோ அது போல. ஆனால் இந்துக்களை பற்றி சொல்லும் எல்லா இடத்திலும், காவி புத்தி என்று கூறுவது கண்டனத்துக்குரியது. நைசாக இந்த கட்டுரையில் என் காவி நரித்தனத்தை புகுத்தி விட்டதாக நீங்கள் நினைத்தால் தாராளமாக சொல்லுங்கள் நான் ஒரு காவி பயங்கரவாதி என்று. எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா? 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

June 16, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 7

கிரிக்கெட் பதிவுக்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய இடைவெளியாகும் என்று நினைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத அறிவிக்கப்படாத கோடை விடுப்புக்கப்புறம் மீண்டும் எழுதுகிறேன். விடுப்பு என்றவுடன் ஏதோ சுற்றுலாவுக்கு சென்று விட்டதாக நினைக்க வேண்டாம். ஆசிரியர்களுக்கு எப்போதுமே கோடை விடுமுறையில் விடைத்தாள் திருத்தும் பணிதான் இருக்கும். ஆகவே பதிவுலகத்தின் பக்கம் எட்டி கூட பார்க்க முடியாத நிலை. வந்தவுடனே சீரியசாக ஆரம்பிக்க வேண்டாம் என்பதால் கிரிக்கெட் வரலாற்றை எழுதுகிறேன். பின்னூட்டமிட்டும், பின்னூட்டமிடாமலும் தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. 


பகுதி 7 - இந்திய அணியின் தடுமாற்றம். 


சச்சின் தனது முதல் கோப்பையை பெற்று விட்டாலும் அவரால் ஒரு திறமையான கேப்டனாக செயல் படமுடியவில்லை என்பது முற்றிலும் உண்மை. அவரது மோசமான ஃபார்ம், மற்றும் மற்ற வீரர்களின் படுமோசமான ஃபார்ம் என்று இந்திய அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்தது. அணியில் நிறைய வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். ஒன்றிரண்டு தொடர்களில் நீக்கப்பட்டார்கள். 1996 இறுதியில் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார் வி‌வி‌எஸ் லக்ஷ்மண். இப்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு இந்தியா சிறந்து விளங்கினாலும், ஒருநாள் தொடர்களில் சரிவர ஆட முடியவில்லை. கங்குலி, டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் புதுமுகங்களாக இருந்ததால் அவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவே அதிகம் சிரத்தை எடுக்க வேண்டி இருந்தது. மூத்த வீரர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அணி தடுமாறியது. பேட்டிங்தான் இப்படி என்றால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை.மொகந்தி, குருவில்லா என்று நிறைய வீரர்கள் வந்த சுவடே தெரியாமல் போனார்கள். 


ஷார்ஜா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து என்று சென்ற இடமெல்லாம் இந்திய அணிக்கு தோல்வி முகம்தான். இந்திய வீரர்களின் பவுலிங் திறமைக்கு எடுத்துக்காட்டாக 1997 இல் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தை சொல்லலாம். முதலில் பேட் செய்த இந்தியா, ஒண்ணே முக்கால் நாளில் 537 எடுத்து டிக்ளேர் செய்ய, மீதி மூணே கால் நாட்கள் இலங்கை ஆடி டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரான 957 ரன்களை எடுத்தது. என் வாழ்நாளிலேயே நான் பார்த்த மொக்கையான டெஸ்ட் போட்டி இதுதான். ஜெயசூரியாவும், மகனாமாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 576 ரன்கள் குவித்து பல சாதனைகளை வசமாக்கினார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியா வீழ்த்தியது வெறும் ஆறு விக்கெட்டுகள்தான்.  இந்த போட்டி முடிந்ததும் சச்சின் இலங்கை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம்தான் என்றாலும், இந்திய அணியின் மோசமான பந்த்துவீச்சின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.


எனக்கு உள்ளுக்குள் பயம் பிறந்தது "என்னடா இது? இப்படிப்பட்ட ஒரு அணியை நம்பியா 1999 இல் இந்தியா உலககோப்பை தொடரில் களமிறங்கபோகிறது?" இந்த நடுக்கத்துக்கு வலு சேர்க்கும் விதமாக 1997இல் நடந்த சுதந்திரதின பொன்விழா கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த தொடரை நினைவிருக்கிறதா? மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. வழக்கமான அதே ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய ஆட்டம் பாதி முடிந்தவுடனேயே நிறைய இந்தியா ரசிகர்கள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். ஆம், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 327 ரன் எடுத்தது. அப்போது அது எட்டவே முடியாத ஒரு ஸ்கோர். அதில் சயீத் அன்வர் எடுத்தது மட்டும் 194. ஒருநாள் போட்டியில் வெகு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ்இன் 189 ஸ்கோரை இந்த ஆட்டத்தில் அன்வர் முறியடித்தார். அதிலும் இந்தியாவுக்கு எதிராக, இந்திய மண்ணிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 200 எடுத்து விடுவார் என்று கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த என் வயிற்றில் கங்குலி அபாரமாக ஒரு கேட்ச் பிடித்து பாலை வார்த்தார். 


"சரி பரவாயில்லை எப்படியும் சமாளித்து விடலாம்." என்று நினைத்தபோது, ஆடத்தொடங்கிய 15ஆவது நிமிடத்தில் இந்தியாவின் அப்போதைய ஒரே நம்பிக்கையான சச்சின், 4 ரன்கள் மட்டுமே சேர்த்து நடையை காட்டினார். கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்த மாதிரிதான். பிறகு 'கட்டை மன்னன்' என்று அப்போது வருணிக்கப்பட்ட டிராவிட்டும், காம்ப்ளியும் சமாளித்து ஆடினார்கள். இருந்தாலும் நம்பிக்கை இல்லாத ஒரு ஆட்டத்தால் வரிசையாக ஒரு பக்கம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்தது. மறுமுனையில் டிராவிட் நிலைத்து ஆடி தன் முதல் சதத்தை கடந்தார். இந்த காலகட்டம்தான் ராகுல் டிராவிட் வாழ்க்கையில் மிக முக்கியமானது. தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு ஒரு மாபெரும் பலமாக வந்து சேர்ந்தார் டிராவிட். இதற்கு பின்னர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு அசைக்கவே முடியாத மிடில் ஆர்டர் வீரராக மாறி "கிரேட் வால் ஆஃப் இந்தியா" என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். ஒரு காலத்தில் சச்சின் அவுட் என்றால் ஆட்டம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அடுத்து டிராவிட் இருக்கிறார் என்று நம்பிக்கை அளித்தார். 


முதல் சதம் கடந்த டிராவிட்டும் அவுட் ஆக, வழக்கம்போல் உடைந்த கப்பலை ஒற்றை ஆளாக மீட்கும் பணியில் ஈடுபட்டார் ராபின்சிங். மிக குறுகிய காலமே ஆடினாலும் அனைத்து இந்திய ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர் ராபின் சிங். மேற்கிந்திய தீவுகளில் பிறந்த இவர், கங்குலி மாதிரியே 1989இல் ஒரே ஒரு தொடரில் ஆடிவிட்டு, பின் 7 வருடங்கள் கழித்து 33ஆவது வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். பொதுவாக பீல்டிங்கில் அவ்வளவாக சோபிக்காத இந்திய அணியில் ராபின்சிங் ஒரு சிறந்த பீல்டராக விளங்கினார். இவரது மீடியம் பந்துவீச்சு ஓரளவிற்கு மிடில் ஓவர்களில் நன்கு உபயோகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து விட்டாலும், ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி போராடுவார். இவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அபிமன்யு ஞாபகம்தான் வரும். உடம்பெல்லாம் சேறாக, விழுந்து புரண்டு, ஒரு ரன்னை இரண்டாக்கி, இரண்டை மூன்றாக்கி,  வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து என்று கடைசி பந்த்துவரை அணிக்காக மிகுந்த அர்ப்பணிப்போடு ஆடிய ஒரு வீரர். தற்போது மும்பை அணிக்கும், இந்திய அணிக்கும் பீல்டிங் கோச்சாக இருக்கிறார். 


1999 உலகக்கோப்பை ஜுரம் - அடுத்த பதிவில்.....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...