விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 31, 2010

புகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்


இன்று புகையிலை ஒழிப்பு தினமாம். மனிதனை பல நூற்றாண்டுகளாக பீடித்து வரும் பழக்கங்களிலேயே மிகப்பழையது இந்த புகையிலை பழக்கம். சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த புகையிலையில்? பெரும்பாலும் புகையிலை புகை வடிவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்த பெயர் வந்திருக்குமோ என்னவோ. இதில் இருக்கும் நிகோடின் நாம் சுவாசிக்கும்போது நம் நுரையீரல்கள் வழியாக உள்ளே செல்கிறது. நுரையீரல்தான் ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளையர். அதனுடன் கலக்கிறது. இதன் விளைவாக நம் நரம்பு மண்டலத்தில் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக நம் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது. ஞாபகதிறனும், விழிப்புணர்வும் (Alertness) அதிகமாகிறது. இதன் மூலம் சுறுசுறுப்பு கிடைகிறது, டென்சன் குறைகிறது. எனவே உங்களுக்கு எப்போதெல்லாம் டென்சன் வருகிறதோ அப்போது புகைப்பது நல்லது. சரி இதுவரை சந்தோசமாக படித்து விட்டீர்கள் அப்படியே தொடர்ந்து முழுவது படித்து விடுங்கள்.
சரி புகைப்பதனால் நடக்கும் இன்ன பிற மாற்றங்கள் என்னேனென்ன என்று தெரிந்து கொள்வோமா? எல்லோரும் சொல்வது போல புற்றுநோய் வரும் என்று சொல்ல மாட்டேன். அது தெரிந்ததே. 


நமக்கு நடப்பவை...

புகையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் ரத்தம் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது. இதனால்தான் புகைப்பவர்களால் ரொம்ப தூரம் ஓட முடிவதில்லை. ஓடினால் அதிக ஆக்சிஜன் தேவைப்படும். ஆனால் ஆக்சிஜனை இழுக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 


புகைப்பதனால் நரம்பு மண்டலம் செயற்கையாக தூண்ட படுகிறது. இதன் விளைவாக அதன் இயற்கையான தூண்டல் சக்தியை இழக்கிறது. எனவே புகை பிடிக்காத நேரத்தில் மிக மந்தமாக உணருவோம். விழிப்புணர்வு, ஞாபக சக்தி குறைந்து விடும். எனவே மேலும் மேலும் புகையை நாடி செல்வது அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்படலாம். 


புகைப்பது நம் நரம்பு சம்பந்தமான செயல் என்பதால் அது சுரப்பிகளை பாதிக்கிறது, இதன் மூலம், ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம். (புகை பிடிக்க, பிடிக்க ஆண்மை படிப்படியாக குறையும் என்பது உண்மை). பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உண்டாகும். இது தெரியாமல் கோவில் கோவிலாக குடும்பத்தோடு சென்று நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று புலம்பினால் கடவுள் நம்மை பார்த்து சிரிக்கும்.


புகைப்பவர்களுக்கு ஜலதோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கும். காரணம் நுரையீரலில் உண்டாகும் சளி வெளியேற விடாமல் உள்ளே படிந்திருக்கும் கார்பன் பார்த்துகொள்கிறது. எனவே தான் நமக்கு இருமல் உண்டாகிறது. மேலும் இவர்களுக்கு பற்கள் எளிதில் சொத்தை ஆகிவிடும். அடித்து சொல்கிறேன், புகைப்பவர்களுக்கு அல்சர் மற்றும் வயிற்று கோளாறுகள் கண்டிப்பாக இருக்கும்.


பிறருக்கு நடப்பவை 

செகண்ட் ஹன்ட் ஸ்மோக்கிங் (Second hand Smoking) என்பது மிக ஆபத்தானது. அதாவது புகை பிடித்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பது. பெரும்பாலும் இது குழந்தைகள் மற்றும் பெண்களையே பாதிக்கிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனையும் இவர்களுக்கு உண்டாகும்.


புகையிலையில் உள்ள நிகோடின் மற்றும் இதர பொருட்கள் நம் டிஎன்ஏ வை பாதிக்கின்றன. இதன்மூலம் நம் சந்ததியினர் உடல் மற்றும் மன குறைபாடுடன் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.


சில தகவல்கள்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 80 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கிறார்கள்.

உலகில் சுமார் நூறு கோடி மக்கள் புகை பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பதில் அதிகரித்து வருகின்றனர். 

புகை பிடிப்பவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழந்து விடுகிறார்கள். அதாவது சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். 

உலகத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பத்து லட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன.

ஒவ்வொரு 72 வினாடிக்கும் ஒருவர் புகைப்பதனால் இறக்கிறார்.

புகை இல்லாத எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே. இது நம்மிடம் மறைக்கப்பட்டு விளம்பரப்படுத்த படுகிறது.


மேலே கூறிய அனைத்தும் நாம் பெரும்பாலும் கேள்விபட்டைவையே. ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நமக்கு நடக்காதவரை அவை வெறும் புள்ளி விவரங்களே. "போடா!! என் தாத்தா நூறு வயது வரை பீடி குடித்தார், அவர் என்ன கேன்சர் வந்தா செத்தார்?" என்று சொல்பர்களுக்கு, உங்க தாத்தா இருந்த காலகட்டம், உண்ட உணவு, சுற்று சூழல், எல்லாமே வேறு என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் புகை பிடித்து அழிந்து போவதோடல்லாமல், அருகில் இருக்கும் மக்களையும் அவர்கள் அறியாமலேயே தீங்கு விளைவிக்காதீர்கள். "அவனவன் ஐம்பது வயதிலேயே ஆண்டு அனுபவித்து போய் கொண்டிருக்கிறான்!!, வந்துட்டான் சொல்றதுக்கு!!", என்று சொல்பவர்களுக்கு, ஐம்பது வயதில் செத்து விட்டால் பரவாயில்லை ஆனால் பக்க வாதம் வந்து படுத்து விட்டாலோ, குழந்தைகள் உடல் குறைபாடு, நோய்களால் பீடிக்க பட்டுவிட்டாலோ? என்ன செய்வீர்கள்? "எல்லாம் எனக்கு தெரியும், இது வைரம் பாஞ்ச கட்டை, எனக்கு ஒன்னும் செய்யாது, என் பிள்ளைகள் எக்கேடு கேட்டல் என்ன?" என்று நினைப்பவர்களுக்கு,
 நீங்கள் தாராளமாக புகை பிடியுங்கள். உங்களுக்கு அந்த தகுதி உண்டு. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க அப்படித்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். இந்த பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பதால், முதல் முறையாக கேட்கிறேன், தயவு செய்து ஓட்டு போடுங்கள். 


உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

May 28, 2010

அக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...


அக்கிரமம், அநியாயம், கொடுமை இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால். நாளிதழில் நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகிறேன். 


என்று தணியும் இந்த மதிப்பெண் தாகம்? என்று கேட்க தோன்றுகிறது. நேற்று நாளிதழை புரட்டி கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி திடுக்கிட வைத்தது. பத்தாம் வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த மாணவி பெயில் ஆகவில்லை. முன்பெல்லாம் தேர்வில் தோல்வி அடைந்தால் மட்டுமே நேரும் இந்த கொடுமை இப்போது மதிப்பெண் குறைந்தாலே நடக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு யார் காரணம்? மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறமையை எடைபோடும் சமூகமா? தன் பிள்ளை பெறும் மதிப்பெண்தான் தன் கவுரவத்தை நிர்ணயிக்கிறது என்று மற்றவர் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்ணை சுட்டிக்காட்டியே வளர்க்கும் பெற்றோர்களா? ஒரு சின்ன தோல்வியை (சொல்லப்போனால் இது தோல்வியே அல்ல ) கூட ஏற்றுகொள்ளாத மனப்பக்குவத்துடன் வளரும் இளம் தலைமுறையினரா? எது எப்படியோ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுபவன்தான் சிறந்தவன், ஒழுக்க சீலன், வாழ்க்கையில் உருப்படுவான் போன்ற எண்ணங்களை குழந்தைகளிடம் விதைப்பதை இந்த சமூகம் என்று கை விடுகிறதோ அப்போதுதான் விடிவு காலம் வரும்.


தேனியில் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்த சுமார் பதினைந்து மாணவர்களின் மீதான பகையை மனதில் தேக்கி வைத்து, அவர்களின் ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்டில் பச்சை மையால் கிறுக்கி சரியான நேரத்தில் பழிதீர்த்துள்ளார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர். அவரிடம் மாணவர்கள் முறையிட்டதற்கு அப்படித்தான் செய்வேன், முடிந்ததை பார் என்று சொல்லி உள்ளார். தன் மீது அபாண்டமாக அந்த மாணவர்கள் பழி சுமத்தி இருந்தார்களானால் அதை நேர்மையான முறையில் எதிர்கொள்வதே முறை. அதை விட்டுவிட்டு இப்படி சின்ன புத்தியுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நாதாரிகளை எதை கொண்டு சாத்துவது? இந்த லட்சணத்தில் ஆசிரியப்பணி அறப்பணி என்று வாய் கிழிய பேச்சுவேறு. ஒரு ஆசிரியன் என்ற முறையில் இதற்கு நான் தலை குனிகிறேன். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவர் காட்டி உள்ள வழியை பார்த்தீர்களா? உங்களுக்கு கீழே உள்ள ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவனுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். அதை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. இதைத்தான் அந்த பன்னாடை இந்த மாணவர்களுக்கு கற்பித்து உள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விஷயம் பேமஸாக இருக்கும். இப்போது பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் ஐநூறு பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் வந்தாயிற்று. ஒரு கல்லூரி கட்டுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஏகப்பட்ட சம்பிரதாயங்கள், ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே அனுமதி அளிக்கப்படும். தற்போது சுமார் 67 பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அடிப்படை வசதி இல்லை என்று நோட்டிஸ் அனுப்ப போகிறார்களாம். அப்படியானால் முதலில் அனுமதி அளித்தபோது எல்லாம் சரியாக இருந்ததா? இல்லாவிடில் அனுமதி அளித்திருக்க கூடாதே? இதெல்லாம் இல்லை. இவர்களுக்கு இது ஒரு தொழில். சரியாக கவனிக்காமல் அனுமதி அளிப்பது. பின் இது நொட்டை அது நொள்ளை என்று சொல்லி காசு பார்ப்பது. இவர்கள் செய்யும் ஆய்வினை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு கல்லூரியில் ஒன்றுக்குமே உதவாத கணிப்பொறிகளை காட்டி அனுமதி பெற்றதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அது ஒரு அமைச்சரின் கல்லூரி. இப்படி எதுவுமே சரியில்லாமல் இயங்கும் கல்லூரிகள் இருநூற்றுக்கும் மேல். இவை எல்லாம் பெரிய கைகளின் கல்லூரி என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. என்னத்த சொல்ல? 

மகாராஷ்ட்ராவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசு வழங்க இருக்கும் வீடுகளுக்கு 65 எம்எல்ஏக்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒரு படத்தில் "அரசியல்வாதிகள் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை கூட விட்டு வைக்க மாட்டார்கள்" என்று ஒரு வசனம் வரும். அதுதான் நினைவுக்கு வருகிறது.


மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மூன்று மணிநேரமாக இருந்த மின்வெட்டு இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. முதலில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, மூன்று மணிநேரமாக அதிகரித்து பின் இரண்டு மணிநேரமாக ஆக்கியது, என்னவோ பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்திவிட்டு ஐம்பது காசு குறைப்பார்களே? அதே போலுள்ளது. இருந்தாலும் இது வரவேற்ப்புக்குரியதே . அதே போல பதிவு செய்து ஒருமாதம் கழித்து கிடைக்கும் சமையல் எரிவாயு நேற்று எங்கள் வீட்டில் இரண்டே நாளில் கிடைத்தது. இவையெல்லாம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும்கட்சி செய்யும் தாஜா என்றே நினைக்க தோன்றுகிறது. இனி வரும் நாட்களில் இதுமாதிரியான பல இன்ப அதிர்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.


வரும் தேர்தலில் மைனாரிட்டி திமுக அரசை தோற்கடித்து அமோக வெற்றிபெறுவோம் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார். எனக்கென்னவோ கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆட்களாக இழந்து இவர்தான் மைனாரிட்டி பொதுசெயலாளராக ஆகி விடுவாரோ என்று தோன்றுகிறது. மேலும் அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் நமக்கு தேவை இல்லை. பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் என்று கூறி உள்ளார். இவர் ஆட்சியில் இருந்தபோது ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு புதிய தலைமை செயலகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இவருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியம் தெரியவில்லையா? ஒரு வேளை ஆட்சிக்கு வந்து தன் பங்குக்கு இவரும் ஒரு தலைமை செயலகம் கட்டினால் என்ன ஆகும்? இவர்கள் ஆட்சி செய்தால் அங்கே, அவர்கள் ஆட்சிசெய்தால் இங்கே. கேட்கவே நன்றாக இருக்கிறது. இதற்கு பேசாமல் இருவரும் தங்கள் கட்சி அலுவலகத்திலேயே அவையை நடத்தலாம். மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாகிறது பாருங்கள்...


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களையும் தயங்காம பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 27, 2010

மன்னித்து விடுங்கள் மனைவிமார்களே!!!

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையான ஒரு விஷயத்தை உங்களுக்கு தமிழ் படுத்தி தருகிறேன். இது மனம் விட்டு சிரிக்க மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல. மன்னித்துவிடுங்கள் மனைவிமார்களே!!!!


ஆண்கள் ஏன் மனைவியை விரும்புவதை விட தான் வளர்க்கும் நாய்களை அதிகம் விரும்புகிறார்கள்?

1. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு லேட்டாக வீட்டுக்கு வருகிறீர்களோ அவ்வளவு பாசத்துடன் உங்களை ஓடி வந்து கட்டித்தழுவி முத்தமிடுவது உங்கள் வீட்டு நாய்தான். மனைவி விஷயத்தில் நடப்பதே வேறு...

2. நீங்கள் உங்கள் மனைவியின் பெயருக்கு பதிலாக வேறொரு பெண்ணின் பெயரை சொல்லி நன்றாக வாங்கி கட்டி கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டு நாயை வேறு ஒரு நாயின் பெயரை சொல்லி அழைத்து பாருங்கள். அது பெருந்தன்மையுடன் உங்களை கண்டு கொள்ளாது.


3. வீட்டில் பொருட்கள் இறைந்து கிடந்தால் உங்கள் மனைவிக்கு கேட்ட கோபம் வரும். ஆனால் உங்கள் வீட்டு நாய்க்கோ குஷியாகி விடும்.

4. மனைவியின் பிறந்த வீட்டில் இருந்து அடிக்கடி சொந்தக்காரர்கள் வந்து நம் வீட்டில் தங்கி நமக்கு இம்சை தருவார்கள். ஆனால் நம் நாய்க்கோ நம்மை விட்டால் யாருமே இல்லை. யாரும் வரப்போவதுமில்லை.


5. கோபத்தில் குரலை உயர்த்தினால் அடங்கிபோகும் ஒரே ஜீவன் நாய்தான். மனைவியிடம் குரலை உயர்த்தினால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

6. உங்கள் நாயை வெளியே அழைத்து செல்வதற்கு நீங்கள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம். உங்களை காத்திருக்க வைக்காமல் நீங்கள் கிளம்பியவுடன் உங்களுடனே வந்து விடும்.


7. ஒரு நாள் குடித்து விட்டு வந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் உங்கள் மனைவி. நீங்கள் குடித்திருந்தால் உங்களுடன் சேர்ந்து அதை என்ஜாய் பண்ணுவது நாயின் சிறப்பு.

8. நடு ராத்திரியில் எழுப்பி, நான் செத்துட்டா இன்னொரு நாய் வளர்ப்பீங்களா? என்று கேணத்தனமான கேள்வி எல்லாம் உங்கள் நாய் ஒரு போதும் கேட்காது.

9. சம்பந்தமே இல்லாமல் இன்னொரு பெண்ணின் வாசனை நம் மீது வந்தால் அவ்வளவுதான். விஜய், விஜயகாந்த் தோற்றுபோகும் அளவுக்கு பறந்து பறந்து அடி விழும். ஆனால் இன்னொரு நாயின் வாசனை நம் மீது வந்தால் அதை மனபூர்வமாக ஏற்றுகொள்வது நம் வீட்டு நாய்தான்.

10. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் செய்த செயின், நேக்லேசாக இருந்தாலும், "நீங்களும் உங்க டேஸ்டும்" என்று கரித்து கொட்டுபவர் உங்கள் மனைவி. ஆனால் செயினை மாட்டுவதை விட கழற்றுவதையே பெரிய சந்தோசமாக நினைக்கும் உங்கள் வீட்டு நாய்.


இறுதியாக....ஒரு கேள்வி

ஒரு அறைக்குள் மனைவியையும் இன்னொரு அறையில் நாயையும் அடைத்து வைத்து விட்டு சுமார் 24 மணி நேரம் கழித்து திறந்து விட்டால் யார் முகத்தில் அதிக மகிழ்ச்சி தெரியும்?  சிந்தியுங்கள்...

சரி இவ்வளவு நேரம் பெண்களை கலாய்த்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக ஒரு பத்திரிகையில் நான் படித்த துணுக்கு ஒன்றை வெளியிடுகிறேன்.

இரண்டு கல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள்.


அவள்: "ஏண்டி எல்லா பசங்களும் கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லனாலும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க?
இவள்: "கார் ஓட்ட தெரியலனாலும், அத தொரத்திக்கிட்டே நாய் ஓடுறதில்லையா? அது மாதிரிதான்" 

மனசுல எதுவும் வச்சுக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 26, 2010

பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...ஒரு இயக்குனரை சுத்தமாக பிடிக்காது என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது இருக்காது. அவர்களையே பிடிக்காத இயக்குனர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதே போல எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மோசமான இயக்குனர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்த காலகட்டத்தில் நம் மனநிலை, ரசிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்து மாறும். எனக்கு பிடிக்காத சில இயக்குனர்கள் நான் விரும்பும்படியான நல்ல படங்களை கொடுத்துள்ளார்கள். அதை இங்கே வரிசை படுத்துகிறேன்.


விஜய டி ராஜேந்தர்: மைதிலி என்னை காதலி


எழுபதுகளின் இறுதியில் இளைஞர்களின் இதய துடிப்பை சரியாக புரிந்து கொண்டு படம் எடுத்த இந்த இயக்குனர் கால மாற்றத்தினால் ஏற்பட்ட அடுத்த தலைமுறை ரசிகர்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு திறமை இருக்கிறது. என் படத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து, கடைசியில் படம் பார்க்கும் வேலையையும் அவரே செய்ய வேண்டியதாகிவிட்டது. இவர் சிறப்பாக செயல் பட்ட காலத்திலேயே இவரின் படங்கள் என்னை கவர்ந்தது இல்லை. காரணம் படத்தின் நீளம், மெதுவான காட்சி அமைப்புகள், நடிக்கத்தெரியாத புதுமுகங்கள், ஓவர் ஆக்டிங் செய்யும் பழைய முகங்கள், அடிக்கடி வந்து பயமுறுத்தும் டி ஆர்., சோகமான முடிவுகள் இவைதான். ஆனால் இவை எல்லாம் இருந்தும் என்னை எதோ விதத்தில் கவர்ந்தது இந்த படம்தான். அமலாவுக்கு முதல்படம் என்று நினைக்கிறேன். 
எஸ் ஜே சூர்யா: வாலி 


குறுகிய காலத்தில் கொஞ்சம் நல்ல பெயர், நிறைய கேட்ட பெயர் வாங்கிய இயக்குனர். முதலில் நன்றாக ஆரம்பித்து பின் நிலை தடுமாறி விழும் ஆசாமிகளின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்க்கலாம். சாமர்த்தியமான திரைக்கதை இவரின் பலம். ஆனால் பலான விஷயங்களை வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்வதுதான் இவரின் பலவீனம். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பாக்கியராஜ் மாதிரி வந்திருக்கலாம். இவர் இயக்கத்தில் என்னை கவர்ந்த படம் வாலி. அஜித்தை உற்று கவனிக்க வைத்த படம். மாற்று திறனாளியின் பாடி லாங்குவேஜ், கெட்டப் எதுவும் மாற்றாமலேயே வெறும் பார்வையாலேயே இருவரையும் வேறுபடுத்தி காட்டி அஜித்தின் உண்மையான திறமையை வெளி கொணர்ந்த படம். என்னதான் அஜித் திறம்பட நடித்தாலும் இதில் எஸ் ஜே சூரியாவின் பங்கும் உண்டு. இவர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, நடிக்க ஆரம்பித்தது. மீண்டும் பாதை மாறி தன் பலம் என்ன பலவீனம் என்ன என்று உணர்ந்து செயல் பட்டால் விரைவில் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறலாம்.தரணி : கில்லி 


தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகத்திற்கு இவர் செய்த சேவை மிகப்பெரியது. அப்பாவி கதாநாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அதன் பின் வில்லன் இவனை துரத்த, கதாநாயகன் ஓட தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் நம்ம ஆள் வில்லனை எதிர்க்க துணிந்து வில்லனை ஓட ஓட விரட்டுகிறான். சுபம். இப்படி ஒரு கதையில் கடந்த பத்து வருடங்களாக சுமார் நூறு படங்களுக்கு (மூன்று மொழிகளையும் சேர்த்து) மேல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் நம்ம தரணிதான். இதில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பது மறுக்கலாகாது. ஆனாலும் இவர் படத்தின் ஒரே டெம்ப்ளேட் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதே சமயம் இவரின் இந்த சக்சஸ் பார்முலாவை இவரைவிட இவருக்கு அப்புறம் வந்தவர்கள் கப்பென பற்றிகொண்டார்கள். இவரின் இயக்கத்தில் வெளி வந்த கில்லி படம்தான் என்னை கவர்ந்த படம். இது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்றாலும், இயக்குனரின் உழைப்பு கண்டிப்பாக படத்தில் உண்டு. விஜய் தன் பில்டப்புகளை கொஞ்சம் குறைத்து நடித்திருப்பார். அதே போல வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான பில்டப்புகள் படத்தில் உண்டு. எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது. இந்த படம் விஜய் வாழ்க்கையிலும் ஒரு மைல் கல் என்பதை மறுக்க முடியாது.பேரரசு: சிவகாசி


இவரை பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. இயக்குனர் தரணியின் சிஷ்யர். குருவை மிஞ்சிய சிஷ்யர். பழைய கால எம்ஜியார் படங்களை அதிரடி குத்து பாடல்களோடு மக்களிடம் ரீமேக் செய்பவர். இவர் படங்களை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பலர் விமர்சிப்பதுண்டு. ஒரு படத்தில் எல்லா பாடல்களையுமே குத்து பாடலாக வைக்க முடியும் என்று சாதித்து காட்டியவர். ஓவர் பில்டப், பழைய கதை, நம்ப முடியாத சண்டைகாட்சிகள், கெட்ட வார்த்தை வசனம் என்று எல்லோருக்கும் பிடிக்காத ஒரு இயக்குனராக இன்றும் தன் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவரின் இயக்கத்தில் கொஞ்சம் சுவாரசியமான படம் என்றால் அது சிவகாசிதான். ஒரு ஹீரோவுக்கு எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியும் என்று நிருபித்த படம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்.


சேரன்: ஆட்டோகிராப் 


பொதுவாக சேரன் படங்களை அவ்வளவாக மொக்கை என்று சொல்ல முடியாது. அதில் மெல்லிய உணர்வுகளை சொல்லி இருப்பார். இவரின் படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதன் காரணம் அதீத சோக உணர்வுகள். படம் மிக மெதுவாக நகரும். அதே போல எல்லா கதாபாத்திரங்களும் ஒரு தடவையாவது படத்தில் அழுது விடுவார்கள். இதனாலேய இவர் படத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இவரின் ஆட்டோகிராப் படம் இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட படம். சோக உணர்வு குறைவு. இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக தங்களின் பழைய வாழ்க்கையை நினைத்து பார்ப்பார்கள். இவரின் நடிப்பு இதில் புதுமையாக இருந்தது. தானே நடிக்க முடிவு செய்தது பாராட்டத்தக்கது. ஆனாலும் அதே மாதிரியான எக்ஸ்ப்ரஷன்களை எல்லா படத்திலும் கொடுத்து நோகடிக்கிறார் மனிதர். அடுத்து மிஸ்கின் படத்தில் நடிக்கிறார். என்ன ஆகப்போகிறதோ?


கவுதம் மேனன்: மின்னலே


பொதுவாக கவுதம் மேனன் படம் என்றால் ஆங்கிலம் பொங்கி வழியும். கெட்ட வார்த்தை காதை கிழிக்கும். இளமை ததும்பும். இவரின் படங்களை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு படத்தை முடித்து விட்டு இவர் கொடுக்கும் பில்டப்புகள்தான் கடுப்பை கிளப்புகின்றன. இவரின் பெரும்பாலான படங்கள் பிற மொழிகளின் இன்ஸ்பிரேசன் (அப்படித்தான் சொல்கிறார்கள்). ஆனால் ஏதோ தானே உட்கார்ந்து யோசித்து கதை எழுதுவது போல இவர் பேசும் பேச்சு இருக்கிறது. Derailed என்று ஒரு படம். பாருங்கள். படம் பார்க்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே என்ன படம் என்று கண்டுபிடித்து விடுவீர்கள். அப்படியே கார்பன் காப்பி. இவரின் முதல் படம் என்பதாலோ? இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ? எனக்கு பிடித்த படங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. கவுதமாக இவர் எடுத்த இந்த படத்தில் இருக்கும் வசீகரிப்பு மெல்ல வளர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் ஆன பிறகு இல்லை.சுரேஷ் கிருஷ்ணா: பாட்ஷாஇந்த படத்தை பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. என் மனதில் அண்ணாமலை பிடித்திருந்த இடத்தை இப்படம் நிரப்பி விட்டது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்த படம் வெற்றி வாகை சூடியது. ஆனால் பரிதாபத்துக்குரிய விஷயம் இதன் பின் இப்படத்தின் இயக்குனருக்கு சொல்லிகொள்ளும் படியான படம் எதுவும் இல்லை. இவர் ஆக்சன் படம் எடுப்பதில் வல்லவர். ஆனால் ஒரே மாதிரியான கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று சறுக்கி விட்டார். இவரின் முதல் படம் கமல் நடித்த சத்யா என்றால் நம்ப முடிகிறதா? பிற்காலத்தில் தன் பாணி மாறி ஆஹா என்ற குடும்ப படமும் எடுத்தார். அதுவும் வெற்றி பெறவில்லை.ஆர் வி உதயகுமார்: சிங்கார வேலன்.


கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற மிக சீரியசான படங்கள் எடுத்து பெயர் பெற்றவர். தொடக்கத்தில் நல்ல படங்கள் கொடுத்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான கதை அமைப்புகள், சுவாரசியமில்லாத திரைக்கதை என்று அரைத்த மாவையே அரைத்து தோல்வியை தழுவினார். இவர் தன் பாதையில் இருந்து மாறி எடுத்த படம் சிங்காரவேலன். எந்த வித லாஜிக்கும் பார்க்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த என்டர்டெய்னர் என்பதில் சந்தேகம் இல்லை. 


எஸ் எ சந்திரசேகர்: நான் சிகப்பு மனிதன். சமூகத்துக்கு தனி ஒரு மனிதன் நீதிகேட்பது மாதிரியான ஆன்டி ஹீரோ படங்களை முதலில் தமிழில் எடுத்தவர். இவரது படங்களில் ஆக்சனுக்கும், வன்முறைக்கும் பஞ்சம் இருக்காது. இவர் படங்களில் எனக்கு மிக பிடித்த படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்சன் படம் என்றால் அது இந்த படம்தான். இவர் எடுத்து பெயர் பெற்ற ஒரே படம் இதுதான். இதன் பிறகு இவர் படங்கள் ஓரளவுக்கு சுமாரான வெற்றியே பெற்றன. முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார். கபடி விளையாட்டின் மகத்துவம் பற்றி புதிய கருத்துக்களை சொன்னவர். இயக்குனர் ஷங்கர் இவரின் உதவியாளராக இருந்தவர் என்றால் நம்புவது கடினம்தான்.
லிங்குசாமி : ரன் 


குறுகிய காலத்தில் அனைவராலும் பேசப்பட்ட ஒரு இயக்குனர். தரணியின் வழித்தோன்றல்களில் ஒருவர். கதை என்று ஒன்று இல்லாமல், சம்பவங்களை வைத்தே படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர். முதலில் ஆனந்தம் என்ற குடும்ப படத்தை எடுத்து வெற்றி கண்டு, தன் பாணியை மாற்றி ரன் படம் எடுத்தார். இந்த படம் வெளிவந்த போது பாபா படம் வெளிவந்தது. ஆனாலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாதவனாலும் ஆக்சன் ஹீரோ வேடங்களில் நடிக்க முடியும் என்று நிருபித்த படம். இந்த படம் பழைய நாகார்ஜுனா படம் உதயம் மாதிரி இருக்கிறது என்று சொன்னாலும் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்பின் இவர் தன் பாணியை மாற்றாமல் டெம்ப்ளேட் படங்கள் கொடுத்து சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.


இந்த பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துகொள்கிறேன். இதில் சில இயக்குனர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். உதாரணமாக வசந்த், பிவாசு, சுந்தரராஜன், மணிவண்ணன் ஆகியோர். எனக்கு பிடிக்காத இயக்குனர்கள் என்று சட்டென மனதில் பட்டவர்கள் பெயரையே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கே நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் என் சொந்த கருத்துக்கள். எனக்கு தோன்றியவை பற்றியே எழுதி இருக்கிறேன். யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள். 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 22, 2010

பிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...

எவ்வளவு நாள்தான் சீரியசாக பதிவு போடுவது? கொஞ்சம் ரிலாக்சான பதிவாக போடவேண்டும் என்று எண்ணி இந்த பதிவு போடுகிறேன். எல்லா இயக்குனருக்கும் ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கும். அந்த இயக்குனர்களின் படங்களுக்கு போகும்போது அந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தை எதிர் பார்த்துதான் போவோம். ஆனால் சில நேரங்களில் அந்த இயக்குனர்கள் நம்மை ஏமாற்றி விடுவதுண்டு. அப்படி சில படங்களைத்தான் வரிசை படுத்துகிறேன்.

கே பாலசந்தர்: பார்த்தாலே பரவசம்

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக விளங்குபவர். முற்போக்கு கதைகளை, பெண்ணியத்தை சொல்லும் கதைகளை அந்த காலத்திலேயே எடுத்து வெற்றி கண்டவர். இவரின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம், இவர் டிவி தொடர்களை இயக்கதொடங்கிய பின் வெகு நாளைக்கு பிறகு வந்த படம். இவரின் சரக்கு தீர்ந்து விட்டது என்பதை நிருபித்த படம். கதையில் குழப்பம், நாடகத்தன்மை இவை இந்த படத்தின் குறைகளாக நான் கண்டது.  கே பாக்கியராஜ் : ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

இவருக்கு நிகராக திரைக்கதை அமைக்க இந்தியாவில் யாரும் கிடையாது என்று பெயர் பெற்றவர். கிளுகிளுப்பான விஷயங்களை கூட சாமர்த்தியமாக திரையில் கொண்டுவந்தவர். படத்தில் சிக்கலான விஷயங்களை புகுத்தி , படத்தின் சுவாரசியத்தை கூட்டி, மக்களை குறிப்பாக பெண்களை தன் பக்கம் இழுத்தவர். இவரின் எந்த சிறப்பம்சங்களும் இல்லாமல் வந்த படம்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. மொக்கை கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று எனக்கு பிடிக்காத படங்களில் இதுவும் இடம் பிடித்து விட்டது. பாரதி ராஜா: என் உயிர் தோழன்

திரை உலகத்தை வெளி உலக படப்பிடிப்பு அழைத்து சென்றவர்.  கிராம புற வட்டார வழக்கு, எதார்த்தமான கதைகள் என்று மக்களின் மிக நெருக்கத்தில் சென்ற இயக்குனர். சமீப காலமாக தாஜ்மகால் போன்ற மொக்கை படங்களை கொடுத்தாலும், சிறப்பாக செயல் பட்ட காலத்திலேய கொடுத்த படு மட்டமான படம் இது. எடுத்துக்கொண்ட கதை, சொன்ன விதம் எல்லாமே சொதப்பல். இவர் படங்களில் பெரும்பாலும் நடிகர்கள் நடிக்க கஷ்டபடுவார்கள். இந்த படத்தில் அது கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிக்கவே இல்லை.  


எஸ் பி முத்துராமன்: பாண்டியன்

மசாலா படங்களுக்கு முன்னோடி இவர். சொன்ன கதையையே அலுப்பு தட்டாமல் மறுபடியும் புதிய தளத்தில் சொல்ல முடியும் என்று செய்து காட்டியவர். இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் ஒரு சுவாரசியம் இருக்கும். ஆனால் இவர் எடுத்ததிலேயே மொக்கை படம் என்று நான் நினைப்பது சூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன். இந்த படம் எடுக்கும் போது பாதியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மீதி படத்தை இவரின் உதவியாளர்கள் இயக்கினார்களாம். யார் கண்டது இவரே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மொக்கை படமாக இருந்தாலும் ரஜினிக்காக இந்த படம் நன்றாக் ஓடியது என்பதை மறுக்க முடியாது. இதே படக்கதையை சமீபத்தில் தெலுங்கில் போக்கிரி என்ற பெயரில் எடுத்து அது 75 வருட தெலுங்கு சினிமா வசூல் சாதனையை முறியடித்தது என்பதும், தமிழிலும் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே.

ஹரி: சேவல்

மசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும், சிறந்த பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் அதில் இவர் படங்கள் நிச்சயம் இடம்பிடிக்கும். ஹீரோயிசத்தொடு நல்ல கதையம்சத்தோடு உள்ள படங்கள் எடுப்பதால் இவர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஹரி படம் என்றால் மிக வேகமாக இருக்கும். சாமர்த்தியமான வசனங்கள் இருக்கும். குடும்ப சென்டிமென்ட் இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் வந்த ஒரு படம் சேவல். ஹரி படத்தில் எப்படா படம் முடியும் என்று நான் நெளிந்த ஒரே படம். 


பாலு மகேந்திரா: அது ஒரு கனாக்காலம்

இவர் படத்தில் ஒரு எதார்த்தம் இருக்கும். இவர் படங்களில் கண்டிப்பாக கள்ள உறவு இடம்பெறும். இவரது பெரும்பாலான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாவிட்டாலும், திரை சரித்திரத்தில் இடம்பெறும் படங்கள் அதிகம். ஆனால் வந்த சுவடே தெரியாமல் போன ஒரு படம்தான் அது ஒரு கனாக்காலம். தனுஷ், பிரியாமணி நடித்த இந்தப்படம் மனதை தொடும் எந்த விஷயமும் இல்லாமல் போனதே தோல்விக்குகாரணம்.  

கே எஸ் ரவிகுமார் : மின்சாரக்கண்ணா

இந்த படம் வெளிவந்த நேரம் இதே கதையில் மூன்று படங்கள் வந்தன. பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி ஆகியவை மற்ற இரண்டு படங்கள். விஜயை ஒரு முழுநீள காமெடி ஹீரோவாக காட்ட முயன்று தோற்றிருப்பார் இயக்குனர். வழக்கமாக கே எஸ் ஆர் படங்களுக்கே உரிய ஒரு சுவாரசியம் படத்தில் மிஸ்ஸிங். பார்த்து பார்த்து சலித்த காட்சிகள், விஜயின் பாடி லாங்குவேஜ் மற்றும் வசனங்கள், நீளமான மொக்கை கிளைமாக்ஸ் ஆகியவை இந்த படத்தின் சுவாரசியத்தை குறைத்துவிட்டது.
ஷங்கர் : பாய்ஸ்

இந்த படத்தின் உயிர் நாடியே இசைதான். பாடல்கள் சரியாக அமையாமல் இருந்திருந்தால் படம் படு குப்பையாக ஆகியிருக்கும். இந்தப்படம் பெற்ற சராசரி வெற்றி கூட ஷங்கர், ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பிராண்ட் நேமுக்கு கிடைத்த வெற்றிதான். அமெரிக்கன் பை மாதிரியான ஒரு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்து, தன் ஸ்டைலில்  கருத்து சொல்கிறேன் என்று முயன்று, முகம் சுளிக்கும் காட்சிகளை திணித்து, இடைவேளைக்கு பிறகு படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் குழப்பி எடுத்த படம்தான் இது. இந்த படத்துக்கு என்ன குறைச்சல் என்று பல பேர் நினைக்கலாம். ஆனால் ஷங்கரிடம் எதிர்பார்க்கும் ட்ரீட்மென்டே வேறு. படம் பார்க்கும் போது இது யூத்துகளுக்கான ஜாலி படமா? மெச்செஜ் சொல்லும் படமா? காதல் படமா? சீரியஸ் படமா? காமெடி படமா? என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது.மணிரத்னம் : திருடா திருடா.

இந்த படமும் பாடல்கள், இசை சரியாக அமையாமல் போயிருந்தால் காணாமலே போயிருக்கும். மணிரத்னத்தின் சாயல் எந்த இடத்திலுமே இல்லாமல் அவரின் உதவியாளர் ஒருவர் அவரை போலவே இயக்க முயன்றிருப்பது போலத்தான் இந்த படம் இருக்கும். வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் போனது, படத்தில் பல காட்சிகள் ஆங்கில படங்களை ஒத்திருப்பது, எந்த காட்சியுமே நம் மனதில் எந்த பாதிப்புமே ஏற்படுத்தாதது ஆகியவை இந்த படத்தை மனதில் பதிக்க தவறிவிட்டது.
விக்ரமன் : சென்னை காதல் 

பொதுவாக விக்ரமன் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று விமர்சனம் வரும். ஆனால் அனைவரும் பார்க்கும்படியான பீல் குட் படங்களை எடுப்பதில் இவர் வல்லவர். முகம் சுளிக்கும் காட்சிகள், வன்முறைகள் எதுவும் இல்லாமல் எடுத்ததாலேயே இவர் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் பார்முலாக்கள் மக்களிடம் ஒரு சலிப்பை ஏற்படுத்த, ரூட் மாறுகிறேன் என்று ஒரு மட்டமான படம் எடுத்தார். அதுதான் சென்னை காதல். உப்பு சப்பிலாத கதை, பத்து நிமிடத்துக்கு ஒரு இடைவேளை(பாடல்கள்) என்று படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது இந்த படம்.இப்பட்டியலில் நிறைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஒன்று அவர்கள் எனக்கு பிடிக்காதவர்களாக இருக்கலாம், இல்லை குறைவான படங்களையே இயக்கி இருக்கலாம். இவர்கள் நிறைய படங்களை இயக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே இங்கே எழுதி இருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கள் அனைத்தும், இப்படங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றியவை. விரைவில் பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள் பட்டியலை வெளியிடுகிறேன்...

உங்களுக்கும் தோன்றிய படங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
முழுவதும் படிக்க >>

May 21, 2010

சட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது சரிதான்


சமீப காலமாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பேருந்தில் சென்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இணையதள நண்பர் (தோழர்) ஒருவரிடம் சில நாட்களுக்கு முன் இது குறித்து என்னுடைய சந்தேகங்களை கேட்டேன். அதாவது மாவோயிஸ்ட்டுகள் என்பவர்களும் காம்ரேடுகள்தானே? அவர்கள் நோக்கம் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சமத்துவத்தை நிலை நாட்டுவதாகத்தானே இருக்கும்? பின் ஏன் இப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள்? இது என் கேள்வி. அதற்கு அவர் பதில் அவர் சட்டை கலரிலேயே வந்தது. நீங்கள் இங்கு வசதி வாய்ப்புகளை நிறைய வைத்துக்கொண்டு வாய்சவடால் பேசுவீர்கள், வடகிழக்கில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட நிறைவேறவில்லை, ராணுவத்தால் மலைவாழ் பெண்கள் மானபங்க படுத்த படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உரிமை கிடைக்காவிட்டால் பொங்கி எழுவது குற்றம் ஒன்றும் இல்லை. அது இயல்புதான் என்று கூறினார். அவர் சொன்ன பதிலையும் சமீபத்தில் நடந்த பேருந்து தாக்குதலையும் வைத்து பார்த்தால் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் புலனாகிறது. இந்த தாக்குதலில் இறந்த காவல்துறையினர் கண்டிப்பாக லஞ்சம் வாங்கி இருப்பார்கள். அல்லது கொடுத்திருப்பார்கள். அவர்கள் சமூகத்தின் நச்சு. அதே போல இறந்தவர்களில் கண்டிப்பாக சிறு வியாபாரிகள் இருப்பார்கள். அவர்கள் எதிர்கால முதலாளிகள் அல்லது பண முதலைகள். அவர்கள் சாக வேண்டியவர்கள். சில விவசாயிகள் மற்றும் பாட்டாளிகள் இருக்கலாம். தன் இனம் எழுச்சி பெறுவதற்கு இந்த தியாகத்தை கூட செய்யாவிட்டால் எப்படி? குழந்தைகள் இருப்பார்கள். எப்படியும் அவர்கள் மேலே கூறிய ஏதாவது ஒன்றாக நிச்சயம் ஆவார்கள். பெண்கள், சொல்லவே வேண்டாம், அவர்களும் இதில் அடங்கும். இந்த வகையில் பார்த்தால் அவர்கள் செய்தது, செய்து கொண்டிருப்பது சரிதான். அய்யா தோழர்களே உங்கள் சக தோழர்கள் செய்யும் இந்த அரும்பணிக்கு நீங்களும் உறுதுணையாக இருங்கள். எனக்கு நீங்கள் சொல்லும் பகுத்தறிவு கிடையாது. நுண்ணரசியல் தெரியாது. மனித நேயம் தெரியும். முதலாளிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறி நீங்களும் அதே அப்பாவி மக்களை குறி வைக்கிறீர்களே இது என்ன நியாயம்? நான் பார்ப்பனன் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்தவன்தான். நான் பார்ப்பனீயம் பேசவில்லை. நீங்கள் தகர்க்கும் பாலங்கள், பேருந்துகள், கொளுத்தும் ரயில்கள் எல்லாம் எந்த முதலாளிக்கு சொந்தம்? எல்லாம் சாமானியனின் வரி. போராட்டம் தேவைதான். ஆனால் அது முட்டாள்தனமாக இருந்தால் யாருக்கு லாபம்? என்னை போன்ற அறிவீலிகள்தான் இதை முட்டாள்தனம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் பாதையில் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தேவை சமூக மாற்றம் அல்ல. சட்ட ஒழுங்கு சீர்கேடு. பணம் கொழிக்கும் பதவி திமிங்கலத்தை பிடிக்க நீங்கள் பயன்படுத்தும் இரைதான் பொதுமக்கள். 


நீங்கள் ஆட்சியை பிடித்து விட்டால் மட்டும் என்ன புடுங்கி விட போகிறீர்கள். ஸ்டாலின் செய்த அதே வேலையைத்தான் செய்வீர்கள். உங்கள் கருத்துக்கு இணங்காதவர்களை களைஎடுப்பீர்கள். பின் இருக்கவே இருக்கிறது இன வெறி. அதை தூண்டிவிட்டு மிச்சம் இருக்கும் மக்களையும் கொன்று குவிப்பீர்கள். நடத்துங்கள். இந்தியாவில் பணம் இருக்கிறதோ இல்லையோ கொல்லுவதற்கு நிறைய மக்கள் இருக்கிறார்கள். நடத்துங்கள் உங்கள் சேவையை. 


இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், மாவோ செய்தது போல டெல்லியை நோக்கி புறப்படுங்கள் பார்க்கலாம்? இல்லை ஏதாவது முதலாளிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம்? முடியாது. நீங்கள் செய்வது எல்லாம், எழுச்சி என்ற பெயரில் அப்பாவிகளை கொல்வதுதான். இதுதான் கம்யுனிசம் என்றால், எனக்கு தேவை இல்லை உங்கள் பாழாய்ப்போன கம்யுனிசம்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 15, 2010

தோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்....


நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரிய இலக்கை எட்டவேண்டும். அதாவது இரண்டாவது பெரிய இலக்கு. இதற்கு முன் இலங்கை 195 எடுத்திருந்தது. எனவே கண்டிப்பாக ஆஸ்திரேலியா மண்ணை கவ்வும் என்று எதிர்பார்த்து உறங்க சென்றுவிட்டேன். காலையில் எழுந்து செய்திகளில் ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்று கேட்டு வியப்படைந்தேன். வெற்றிக்கு காரணம் நம்ம மைக்கேல் ஹஸ்ஸி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சொதப்பு சொதப்பு என்று சொதப்பினாரே அவரே தான். இப்போது இறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. பிற நாட்டு வீரர்களுக்கும் நம் வீரர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் நாட்டுக்காக விளையாடும் போது காட்டும் வேகத்தை உள்ளூர் ஆட்டங்களில் வெளிப்படுத்துவதில்லை. நம்மாட்கள் உல்டாவாக உள்ளூர் ஆட்டங்களில் சிரத்தையோடு ஆடுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் மோர்கன். இருவரும் உள்ளூர் ஆட்டங்களைகாட்டிலும் சர்வதேச ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பொறுத்தவரை அதிக விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு பதவிகள் ஒன்று பிரதமர் பதவி மற்றொன்று கிரிக்கெட் அணி கேப்டன் பதவி. இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விட்டாலே சனி பிடித்துவிட்டது என்று அர்த்தம். சிலருக்கு உடனே பிடித்துவிடும். உதாரணமாக சச்சின், ஸ்ரீகாந்த், டிராவிட். சிலருக்கு கொஞ்சநாள் கழித்து பிடிக்கும் அசார் மற்றும் கங்குலி மாதிரி. இப்போது தோனிக்கும் பிடித்துவிட்டது. முதலில் இருந்தே அவரை பிரச்சனைகள் விரட்டி வந்தன. லாவகமாக தப்பிய அவர், தற்போது தானாகவே மாட்டிகொண்டார். தமிழக அரசியல் நிலை என்ன? அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்று? கேட்டால் டக்கென்று பதில் வரும். ஒன்று திமுக இல்லை அதிமுக என்று. ஒருவர் ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு கட்சி நெருக்கடி கொடுக்கும். சரி, திடீரென்று ஒரு புது கட்சி, உதாரணமாக இளைய தளபதியின் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும்? இந்த இரு கட்சிகளின் நெருக்கடியையும் சேர்ந்தே சமாளிக்க வேண்டும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் நடந்து வருகிறது. அவர்களை பொறுத்தவரை கொல்கத்தா அல்லது மும்பை (இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் என்பது வேறு விஷயம்). இது இல்லாமல் யாராவது கேப்டன் பொறுப்பேற்றால் கொஞ்சநாள் அமைதியாக இருப்பார்கள். அதாவது குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பின் ஈவு இரக்கமே இல்லாமல் தள்ளி விட்டு விடுவார்கள். 


சில நாட்களுக்கு முன் தோனி மூத்த வீரர் சேவாக்கை தரக்குறைவாக நடத்துகிறார், வீரர்களை மோசமாக திட்டுகிறார் என்று புகார் எழுந்ததே, அதுகூட இவர்கள் தோண்டிய குழி என்று கூறப்படுகிறது. பின் அது புஸ் ஆகிவிட்டது. இந்திய அணி தோற்றால் கூட அதை ஒரு காரணமாக கூறி பதவியில் இருந்து தூக்கி விடலாம். ஆனால் இந்திய அணி தோனி தலைமையில் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டது. எதுவுமே சிக்கவில்லையா? மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வு உருவானால் கண்டிப்பாக ஒரு சின்ன பிரச்னையை கூட பெரிதாக்கி விடலாம். ஆகவே கடைசியாக கையில் எடுப்பது சச்சின் பிரச்சனை. சச்சின் என்றால் நாடே கொதித்து விடும். ஆனால் தோனி அதில் இருந்தும் தப்பி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்துவிட்டது ஒரு சாக்கு. ட்வென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி. வழக்கமான காரணங்கள் கூறாமல் தோனி கூறிய காரணம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அதாவது ஐபிஎல் போட்டிகளின் போது இரவு நேரங்களில் பார்ட்டி என்ற பெயரில் நடந்த கூத்துக்கள்தான் காரணம் என்று கூறிவிட்டார். அதிகாலை நான்கு மணிவரை நடக்கும் இந்த பார்ட்டிகளில், எதுவும் கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது. பத்திரிக்கைகளும் எழுதி தள்ளி விட்டன. தோனி கூறியதில் உண்மை இருந்தாலும் அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று பிசிசிஐ கூறி உள்ளது. அவதூறான செய்திகளை கூறுகிறார் தோனி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் படி அவர் பதவி பறிக்கப்படும் என்றும் தெரிகிறது. நடிகர் சங்கமோ, கிரிக்கெட் வாரியமோ உண்மையை மட்டும் பேசிவிடக்கூடாது. இல்லாவிட்டால் ஒன்று கூடி தீர்மானம் போட்டு விடுவார்கள்.


தினகரன் நாளிதழ் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தினகரன் வெளிவருவதன் நோக்கம் செய்திகள் வெளியிடுவதற்கு அல்ல, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு என்று. இன்று தினகரன் நாளிதழ் கிடைத்தால் பாருங்கள். பத்து பக்க பேப்பரில் அவர்கள் வெளியிட்டது இரண்டே பக்க செய்திகள். நேற்று நடந்த இரண்டு அதிமுக்கியமான செய்திகள். ஒன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் பற்றிய அலசல். இன்னொன்று நக்கத் (இந்த பெயர் ஞாபகம் இருக்கிறதா? அதாங்க நம்ம குஷ்பு) திமுகவில் இணைந்து விட்டார் என்ற முக்கியமான செய்தி. மற்றபடி எல்லாமே விளம்பரங்கள்தான். குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வெறும் விளம்பரங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழனை எந்தெந்த வகையில் எல்லாம் ஏமாற்றலாம் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.


நேற்று ஒரு பெரிய அரசியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. குஷ்பு திமுகவில் இணைந்துள்ளார். வெகு காலத்துக்கு முன்னாலேயே அவருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கேள்விபட்டேன். முதலில் அவர்மீது இருக்கும் வழக்கு முடிவுக்கு வரும், பின் கட்சியில் உறுப்பினர், பின் எம் பி பதவி. நான் போட்ட கணக்கு படி சரியாக நடந்து வருகிறது. பார்க்கலாம், மக்களவையா? மாநிலங்கலவையா? சட்டப்பேரவையா? இல்லை மேலவையா? என்று. தமிழக பெண்களின் கற்புக்கு கன்செசன் வாங்கி கொடுத்தவர், குறைந்த துணியில் ஜாக்கெட் அணிவது எப்படி என்று பாடம் நடத்தியவர், அவைக்கு எப்படி செல்வார் என்று நினைத்தால் பயமாக உள்ளது. அம்மணிக்கு திமுகவில் இடம் கிடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டு உண்டு. மூன்றாவது ஒரு தமிழ் உண்டு. அது கொடூரதமிழ். அதை பேசுபவர்களுக்கே தமிழ் நாட்டில் முன்னுரிமை. குஷ்பு பேசுவது இவ்வகை தமிழ்தான். 


தமிழின தலைவர் என்றால் எல்லா தமிழையும் வாழ வைக்க வேண்டுமே. அநேகமாக கொடூர தமிழுக்கும் முன்னுரிமை அளித்த தலைவருக்கு பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. செம்மொழி மாநாட்டுக்கு ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்த பாடல் வெளியீட்டு விழா மற்றும் ரகுமானுக்கு பாராட்டு விழா இரண்டும் நடக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது. கண்டிப்பாக விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ரகுமானை விட்டுவிட்டு, தலைவரின் வாள்வீசும் வசனத்துக்கு முன்பு ரகுமானின் இசை சும்மா என்று ஏதாவது சொல்வார்கள். சங்கடத்தில் நெளிய போவது என்னவோ ரகுமான்தான். 


கொஞ்சம் சீரியசான விஷயம். மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது தண்ணீருக்காகத்தான் என்று சுற்றுசூழல் நிபுணர்கள் கூறி உள்ளார்கள். சுற்று சூழல் மாறி வருவதற்கு காடுகளை கன்னா பின்னா என்று அழிப்பதே காரணம். வெப்பநிலை உயர்வர்தற்கு கார்பன் டை ஆக்சைட் காற்றில் அதிகரித்துள்ளதே காரணம். காற்றில் ஆக்சிஜன் அதிகம் இருந்தால் குளுமை இருக்கும். நான் கேள்விப்பட்ட சில செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மரம் ஒரு வருடம் வெளியிடும் ஆக்சிஜனை வைத்து பத்து பேர் உயிர் வாழலாம். அப்படியானால் ஒரு மரத்தை வெட்டினால் அது பத்து கொலைகளுக்கு சமம்தானே? ஒரு ஏக்கர் மரங்கள் உள்ளிழுக்கும் கார்பன் டை ஆக்சைட் என்பது ஒரு காரை சுமார் 26000 மைல்கள் ஓட்டினால் வெளிவரும் புகைக்கு சமம். இவை எல்லாம் சில்லறை கணக்குகள். நம்மால் ஆக்சிஜனை செயற்கையாக உருவாக்க முடியும். கொஞ்சம் செலவாகும். அதாவது உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஆக்சிஜன் சப்ளை செய்யவேண்டுமானால் 350 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி ) டாலர் செலவாகுமாம். ஆனால் மரம் வளர்க்க அவ்வளவு செலவாகாது. எல்லாவற்றையும் காசாக பார்க்கும் உலகத்தில் இதையும் காசை வைத்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த கட்டுரை உங்கள் மனதை தொட்டிருந்தால் இனி போகிற போக்கில் ஒரு இலையை கூட பிய்த்து போட உங்களுக்கு மனம் வராது. சிறுவயதில் படித்ததை ஞாபகபடுத்துகிறேன். 
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மண்வளம் காப்போம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...