விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 30, 2012

பள்ளிக்கால நினைவுகள்......

நண்பர் நம்பிக்கைப்பாண்டியன் அவர்கள் என்னை வெகு நாட்களுக்கு முன்பு இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அவரே என்னை அழைத்ததை மறந்து போயிருக்கலாம். இவ்வளவு தாமதமாக எழுதினால் யாருக்குத்தான் மறக்காது? எப்படியோ அவரது வேண்டுகோளை நிறைவேற்றி வார்த்தையை காப்பாற்றி விட்டேன். கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதே ஒரு இனிய அனுபவம்தானே.கல்வியை பொறுத்தவரை அது எனக்கு பாரமாகவே இருந்ததில்லை. ஏனென்றால் அதை எப்போதுமே ஒரு கடமையாக நான் நினைத்ததில்லை. "புரிந்தால் படி. இல்லையேல் புரிந்துகொள்ள முயற்சி செய். முடியவில்லையா? விட்டுத்தள்ளு. புரிந்தவரை போதும்." இதனால் எதுவுமே கடினமாக தெரியவில்லை. என் குடும்பத்தையே பொறுத்தவரை நான் கொடுத்து வைத்தவன். குடும்பமே வறுமையில் இருந்தபோது கூட என் படிப்பிற்கு எந்த பங்கமும் வந்துவிடவில்லை. எப்பாடு பட்டாவது என்னை படிக்க வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆகவே என் சகோதரர்களுக்கு கிட்டாத பல வாய்ப்புகள் எனக்கு மட்டுமே கிடைத்தது. என் இன்றைய நிலைக்கு அதுவே காரணம். என்றும் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன். நான் படிக்க தொடங்கிய காலத்தில் எல்‌கே‌ஜி, யு‌கே‌ஜி எல்லாம் பணக்காரர்கள் படிப்பு. ஆகவே பெரும்பாலானவர்களை போல நேரடியாக முதல் வகுப்புதான். அதற்கு முன்பாக அரைக்கிளாஸ் என்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவரிடம் ஒரு வருடம் படித்ததாக ஞாபகம். என் அம்மா மாதம் 5ரூபாய் பீஸ் கட்டி அவரிடம் சேர்த்து விட்டார். கண்டிப்புக்கு பெயர் போன அந்தப் பெண்மணிதான் என் மீது உளியை வைத்த முதல் சிற்பி.

அதன் பிறகு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுப்பிரமணிய வித்தியாசாலை என்ற தொடக்க பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அரைக்கிளாஸ் சேர்ந்தபோதும் சரி, முதல் வகுப்பு சேர்ந்தபோதும் சரி, நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று நினைத்த என் அம்மா ஏமாந்து போய் விட்டாராம். கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஒரு ஏக்க பார்வை? ம்ஹீம். சரியான கல்லுளி மங்கன் என்று இப்போது கூட சொல்வார். ஒன்னாம்கிளாஸ், இப்போதும் என்னுடன் நெருங்கிய நண்பனாக இருக்கும் ஒருவனை அறிமுகப்படுத்தியது. மற்றபடி பாடத்தோடு தினமும் மாலையில் கேளிக்கை விளையாட்டு என்று மிக ஜாலியாக சென்றது. "படிப்பு என்றால் இதுதானா? இவ்வளவு ஈசியாக இருக்கிறதே?" என்று நினைப்பதற்குள் முடிந்து விட்டது. அந்த ஆண்டில் மறக்க முடியாத நிகழ்வு  என்றால் , காலாண்டு பரீட்சை தினம். காலையில் ஒரு மணிநேரத்தில் பரிட்சை முடிந்து விட, இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த அரைமணி நேரத்தை பயனுள்ளதாக கழிக்க எண்ணி, எல்லோரும் அருகில் காலியாக இருந்த ஒரு வகுப்பில் போய் கூத்தாடினோம். எல்லோரும் உற்சாக மிகுதியில் இருக்க, திடீரென்று தலையில் நங்கென்று இடி இறங்கியதை போன்ற ஒரு உணர்வு. பரவச நிலையை அடைந்த நண்பன் ஒருவன், வகுப்புக்கு வெளியே பள்ளியில் மணி அடிப்பதற்காக வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து என் தலையில் மணி அடித்து விட்டான். அப்புறம் என்ன? உச்சந்தலையில் வெட்டி ரத்தம் வர இன்றும் ஆழமாக இருக்கும் அந்த வடுவை இதை டைப் செய்யும் வேளையில் தொட்டுப்பார்க்கிறேன்.  

இரண்டாம் வகுப்பு என்றாலே எனக்கு கிளாஸ் எடுத்த சொர்ணமுத்து வாத்தியார்தான் ஞாபகத்துக்கு வருகிறார். தினமும் காலையில் அரைமணி நேரம், மதியம் அரைமணி நேரம் மட்டுமே வகுப்பெடுப்பார். பின் இருக்கையில் இருந்தபடியே குறட்டை விட்டு தூங்குவார். அவர் இல்லாதபோது அவர் மாதிரியே தூங்கி காட்டுவோம்.

மூன்றாம் வகுப்பு, படிப்பு என்பது என்ன என்பதை நான் புரிந்துகொள்ள தொடங்கி இருந்தேன். புதிதாக ஆங்கிலம் என்ற ஒன்றை சொல்லிக்கொடுத்தார்கள், அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுவரை தமிழ், கணக்கு, சூழ்நிலையியல், வாழ்க்கை கல்வி என்று நான்கு சப்ஜெக்ட் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என்று புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  ஆனால் படித்ததது எல்லாமே மிக எளிதாக இருந்ததால் ஒரு பிரச்சனையும் தெரியவில்லை. எப்போதுமே முதல் ரேங்க் அல்லது இரண்டாவது ரேங்க் மட்டுமே எடுப்பேன், ரேங்க் என்றால் என்ன என்றே தெரியாமலேயே.

நான்காம் வகுப்பு, அந்த பள்ளியிலேயே வாட்டசாட்டமாக இருந்த நரசிம்மன் என்ற ஆசிரியர்தான் எனக்கு வகுப்பாசிரியர். கண்டிப்புக்கு பெயர் போனவர். ஜாலியாக பேசுவார் ஆனால் கோபம் வந்தால் அடி பின்னி விடுவார். மாணவர்கள் அனைவரும் நடுங்குவார்கள். ஆங்கிலத்தின் அடுத்த படியான உச்சரிப்புகள், வார்த்தைகள் அமைப்பதற்கு முன்னேறினோம். நரசிம்மன் வாத்தியார் சிகப்பு சட்டை போட்டு வந்தால் அன்றைக்கு எல்லோருக்கும் அடி விழும் என்பது எங்களுக்குள் பரவலாக இருந்த மூட நம்பிக்கை. என்னதான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், என் கையெழுத்தை யாராலும் சீரமைக்க முடியவில்லை. கண்டிப்புக்கு பெயர் போன நரசிம்மன் ஆசிரியராலேயே சீரமைக்க முடியவில்லை. ஒரு முறை என் அம்மாவை பள்ளிக்கு அழைத்து, தாறுமாறாக திட்டி, நான் எழுதிய நோட்டை விசிறி அடித்ததை மறக்க முடியாது.

ஐந்தாம் வகுப்பு,அதுதான் அந்த பள்ளியில் மிக உயர்ந்த வகுப்பு. நாங்கள்தான் பள்ளியின் சீனியர். தலைமை ஆசிரியர்தான் எங்கள் வகுப்பாசிரியர். அவர் பெயர் கந்தசாமி. அவர் அடிப்பதை பார்ப்பதற்கு  WWF மேட்ச் பார்ப்பது போலவே இருக்கும். தூக்கி போட்டு, உருட்டி புரட்டி அடிப்பார். டெய்லி ஒரு மாணவர் வகுப்பில் சிறுநீர் கழித்து விடுவான். அவர் அடியில் இருந்து தப்பி வந்த  மாணவர்களுள் நானும் ஒருவன். ஒரே ஒருமுறை கணிதத்தில் மார்க் குறைந்து விட, குனியவைத்து முதுகில் கொத்து பரோட்டா போட்டு விட்டார். அப்போது எங்கள் முன் ஒரு இலக்கு வைக்கப்பட்டது. இந்த வகுப்பில் நான்கு படித்து நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஆறாம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதுதான் அது. அப்படி சேர்க்கப்பட்ட  மாணவர்களுள் நானும் ஒருவன். ஐந்தாம் வகுப்பு பாதியில் நான் எப்போதும் ரேங்கிற்கு போட்டி போட்டு தோற்கும் விஜயகுமார் என்ற மாணவனை அவன் தாயார் சென்னைக்கு வேலைக்கு அனுப்ப போவதாக சொல்லி கூட்டி போய் விட்டார். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த நான் அவனை திரும்ப சந்திக்கவே இல்லை.  

ஆறாம் வகுப்பின் தமிழ் மீடியம் வகுப்புகள் நடுநிலைப்பள்ளிகளில் ஊருக்குள் இருக்கும். ஆங்கில மீடிய வகுப்புகள், ஊருக்கு வெளியே தூரத்தில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும். ஆகவே ஏதோ ஒரு மேல்படிப்பு படிக்கப்போவதைப்போல உணர்ந்தேன். அதுவரை நடந்தே பள்ளிக்கு சென்று வந்த எனக்கு சைக்கிளும், நிறைய அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆறாம் வகுப்பில் என்னைப்போல பல பள்ளிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்திருந்தார்கள். நிறைய புதுமுகங்கள். புதிதாக டைம் டேபிள் என்று ஒன்றை கொடுத்தார்கள். ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒரு ஆசிரியர் என்று எல்லாமே புதிதாக இருந்தது.  பாடம் நடத்த தொடங்கிய பிறகுதான் எல்லோர் முகத்திலும் மரண பீதி உண்டானது. இதுவரை ஒரே ஒரு சப்ஜெக்ட்டாக படித்த ஆங்கிலம் இப்போது எல்லா சப்ஜெக்ட்டிலும். இருந்தாலும் விடாமல் படித்து ஒரு கை பார்த்து விடுவது என்று களமிறங்கினேன். என் ஆசிரியர் ஒரு மாதம் பாடம் நடத்துவதை கைவிட்டு, எங்களுக்கு ஆங்கில கூட்டெழுத்து, கையெழுத்து மற்றும் இலக்கணம் நடத்தினார். இலக்கணமும் கூட்டெழுத்தும் கை கூடிய எனக்கு, கையெழுத்து மட்டும் மோசமாகவே இருந்தது. கிரிக்கெட் எங்களை முழுமையாக ஆக்கிரமித்தது அப்போதுதான். 1996 உலகக்கோப்பை போட்டிகள் நடந்த சமயம் அது.

ஏழாம் வகுப்பு, கொஞ்சம் குளிர் விட்டுப்போனது. வெறும் ஆண்கள் மட்டுமே படித்த நூற்றாண்டு பழமையான பள்ளி என்பதால் அங்கே கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. நிறைய 'விஷயங்கள்' கற்றுக்கொண்டு, குழந்தை பருவத்தில் இருந்து வெளிவரத் தொடங்கினேன். படிப்பு பல்லிளிக்க தொடங்கியது. கணிதத்தில் புதிதாக நெகட்டிவ் எண்கள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். எனக்கு அது புரியவே இல்லை. ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுத்த அனைத்து கணக்குகளுமே தப்பாக போட்டுவிட்டேன். அந்த தினத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னை அடி விளாசிய அவர், வகுப்பு மாணவர்கள் முன்னால் என்னை நிற்க வைத்தார். தலைகுனிந்து அழுது கொண்டிருந்த என் தலையை நிமிர்த்தி, எல்லா மாணவர்களுக்கும் என் மூஞ்சை காட்டினார். நான் கூனிக்குறுகிபோனேன். அன்றில் இருந்து அந்த ஆசிரியர் எனக்கு எதிரி ஆனார். கணிதம் எனக்கு ஜென்ம எதிரி ஆனது. 

எட்டாம் வகுப்பு, எங்கள் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடத்தில் தனியாக அமைந்திருக்கும். ஆகவே கேள்வி கேட்க யாருமில்லை. வகுப்பில் எல்லோருமே ஓரளவுக்கு நன்கு படிப்பவர்கள் என்பதால் படிப்பை பற்றி கவலை கொள்ளாமல், விளையாட்டு, சினிமா என்று கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போதே பல புத்தகங்களை குறுகிய நேரத்தில் படித்து விடுவேன் என்பதால், நான் பேசும் விஷயங்களை கேட்க எப்போதுமே கூட்டம் கூடிவிடும். அந்த காலத்தில்தான் செக்ஸ் புத்தகங்கள் பரவலாக மாணவர்கள் மத்தியில் புரள தொடங்கியது. முழுவதும் ஆண்கள் மட்டுமே படித்த பள்ளி என்பதால் எதிலுமே ஒழிவு மறைவு கிடையாது. 

ஒன்பதாம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்த  மாணவர்களும் எங்கள் பள்ளியில் வந்து இணைந்து கொள்வார்கள். இரண்டே இரண்டு ஆங்கில மீடிய வகுப்புகள், மிச்ச பத்தும் தமிழ் மீடிய வகுப்புகள். எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து ஆண்  மாணவர்களும் படிக்கும் ஒரே இடம் என்பதால் இவ்வளவு கூட்டம். இதில் பலர் சரியாக படிக்காமல் பெயில் ஆவது, வறுமை காரணமாக படிப்பை பாதியில் விடுவது என்று போய் விடுவார்கள். ஆகவே பத்தாம் வகுப்பு செல்லும்போது வகுப்புகளின் எண்ணிக்கை குறைந்து விடும். கண்மண் தெரியாமல் விஷமம் செய்வது என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்ட பருவம் அது. நாங்கள் செய்த குறும்புகள் அனைத்தையும் மறைத்து, எங்களை தலைமை ஆசிரியரிடம் இருந்து காப்பாற்றியவர் எங்கள் வகுப்பாசிரியர்தான். அதற்கு முந்தைய் ஆண்டுதான் எங்கள் பள்ளி மாணவர் ஒருவர் மாநிலத்தில் முதல் மாணவராக ரேங்க் வாங்கினார். ஆகவே நாங்களும் அதே உத்வேகத்தோடு படிக்க தூண்டப்பட்டோம். ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு முன்னேறினோம். 

பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகள் மிக ஜாலியானவை. ஆசிரியர்கள் அடிப்பதில்லை. எல்லா  மாணவர்களுமே விடலைப் பருவத்தினர். நிறைய காதல் கதைகள், கில்மாகதைகள் என்று பேசும் வாய்ப்பு உண்டு. மானவர்களுக்கு மத்தியில் ஜாதி ஒரு குறியீடாக வர ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல் அடிதடி வன்முறைகள் எல்லாம் நடக்கும். ஒன்றிற்கும் குறைவில்லை. ஆனால் என் படிப்புதான் அதல பாதாளத்துக்கு போய் விட்டது. ஒரு கட்டத்தில் கணிதத்தில் பாஸ் ஆகவே முடியாத நிலைக்கு போய் விட்டேன்.  அப்புறம் எப்படியோ தட்டு தடுமாறி பாஸ் ஆகிவிட்டேன். மிகக்குறைவான மதிப்பெண் எடுத்து. என் வாழ்க்கையில் படிப்பை நினைத்து கவலைப்பட்ட ஒரே தருணம் அது மட்டும்தான். அதன் பின் வாழ்க்கை எந்தப்பக்கம் சுழலப்போகிறது என்று தெரியாமல் குழம்பி தவித்தேன். நல்ல வேளையாக எனக்கு சாதகமாகவே சுழன்றது. 

சுயபுராணம் போதும் என்று நினைக்கிறேன்.... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 
முழுவதும் படிக்க >>

March 29, 2012

குழப்பத்திலேயே கட்டிப்போடும் ஒரு படம்

ஆங்கில த்ரில்லர் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் நம்மை கட்டிபோடுபவை. அதிலும் ஒரு சில படங்கள் திடீரென்று ஒரு புது டிரெண்டையே உருவாக்கி விடும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சா ( SAW ) என்ற ரத்தக்களரி பட தொடர்கள். ஏழு பாகங்கள் வரை அதை இழுத்து சென்று, அனைத்தையுமே வெற்றி பெறச்செய்வது, அதிலும் ஒரே கதையை வைத்துக்கொண்டு என்பது சாதாரண காரியமல்ல. இன்றுவரை ஹாரர்/த்ரில்லர் பட ரசிகர்களின் ஹாட் பெவரிட் படங்களுள் SAW  ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பது உண்மை. நான் இப்போது கூறப்போகும் படம் அதுவல்ல. ஆனால் கிட்டத்தட்ட  SAW மாதிரியே கதையம்சம் கொண்ட வேறொரு படம். இதில் ரத்தக்களரி மிக குறைவு. ஆனால் ரத்தக்களரி ஏற்படுவதற்கு முன் நம் மனதில் உண்டாகும் தவிப்பு இருக்கிறதே அதுதான் இந்த படத்தின் வெற்றி. மூன்று பாகங்கள் வெளிவந்த இந்த பட வரிசையின் முதல் படம் கியூப் (CUBE - 1997). தொடர்ச்சியாக ஹைபர் கியூப் (HYPER CUBE - 2003) மற்றும் கியூப் ஸீரோ (CUBE ZERO - 2004) என்று வெளிவந்து வெற்றி பெற்றன.

சிறு வயதில் நாம் சொல்லும் விடுகதைகளில் ஒன்று." நீங்கள் ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள், எதிரே ஆறு கதவுகள். எதேனும் ஒன்றை திறந்து தப்பிக்க வேண்டும். ஒரு கதவில் மட்டுமே வழி உண்டு. மீதி ஐந்தில் மரணம் காத்திருக்கிறது. எப்படி சரியான கதவை கண்டுபிடிப்பீர்கள்?", இந்த புதிரை நீங்கள் சிறுவயதில் கேட்டிருப்பீர்கள்தானே? இதுதான் இந்த படத்தின் அடிப்படை. 

மயக்கமோ ஆழ்ந்த உறக்கமோ, டக்கென விழித்து பார்க்கிறீர்கள். சதுர வடிவ ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த அறையின் ஒவ்வொரு சுவற்றின் நடுவிலும் ஒரு கதவு வீதம் ஆறு கதவுகள்(மேலே கீழே சேர்த்து). கதவு என்றவுடன் பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஒரு ஓட்டை. அதை திறந்து வெளியேறினால் அது இன்னொரு அறைக்குள் செல்கிறது. அதுவும் முந்தைய  அறை போன்றே இருக்கிறது ஆனால் வேறு நிறத்தில். இப்படி வரிசையாக நிறைய அறைகள் உள்ளனே.  ஏதாவது ஒரு அறையில் உள்ளே கால் வைத்தவுடன், நெருப்போ, அமிலமோ, கத்தியோ, விஷ வாயுவோ தாக்கி இருக்க நேரிடும். என்ன கொடுமை சார் இது? என்று கேட்கிறீர்களா? இது போல நிறைய மனிதர்கள் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு அறையை சுற்றி இருக்கும் ஆறு கதவுகளில் எந்த கதவின் வழியாக சென்றால் பாதுகாப்பான அறைக்கு செல்ல முடியும்? எந்த  அறை  மரணத்துக்கு அழைத்து செல்லும்? என்று யாரும் சொல்லி விட முடியாது. உள்ளே இருக்கும் யாருக்குமே, தங்கள் எப்படி உள்ளே வந்தோம்? எப்படி வெளியே செல்வது? தங்களை யார் இங்கே அடைத்தது? எதற்கு அடைத்தார்கள்? என்பது தெரியாது. 

தனித்தனி அறையில் அடைக்கப்பட்ட ஆறேழு பேர் ஒரு கட்டத்தில் ஒரே அறையில் சந்திக்கிறார்கள். இதில் ஒரு சிலர் காயங்களோடு, ஏற்கனவே மரணத்திலிருந்து தப்பியவர்கள் என்று சொல்லாமேலேயே தெரிகிறது. அவர்களுள் ரீன்ஸ் என்பவர் ஒவ்வொரு அறையிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கருதி, தன்னுடைய ஷூவை லேசில் கட்டி தூக்கி போடுவார். எதுவும் தாக்கவில்லை என்றவுடன் உள்ளே செல்வார். இல்லையேல் லேசை இழுத்து ஷூவை திரும்ப எடுத்து அடுத்த அறையை முயற்சி செய்வார். மற்றவர்கள் அவரை பின்தொடர்வார்கள். ஆனால் ஒரு அறையில் அவரது கூற்று பொய்யாகி அவர் இறந்து விடுகிறார். எல்லோரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்த குழுவில் லீவன் என்னும் கணித மாணவி இருக்கிறாள். ஒவ்வொரு கதவிலும் சில எண்கள் (உதாரணமாக 235,345,675) பொரிக்கபட்டிருப்பதை பார்க்கும் அவள், அவை ஒரு முப்பரிமாண தளத்தில் இருக்கும் (X,Y,Z), கோஆர்டினேட்டுகள் என்று கண்டுபிடிக்கிறாள். அதாவது அதாவது நாம் க்யூப்களை வைத்து ஒரு பக்கம் ஒரே கலர் வருமாறு ரூபிக் கியூப் என்று ஒரு கேம் விளையாடுவோமே? அதே போல சிறு சிறு கியூப்கள் சேர்த்து ஒரு பெரிய கியூப் வடிவமைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறாள். 

மொத்தம் 26 X 26 X 26 = 17600 அறைகள் என்று சொல்கிறாள். எல்லோருக்கும் தலையே சுற்றி விடுகிறது.  இந்த 17000 சொச்சம் அறைகளில் எதில் ஆபத்து இருக்கிறது, எது பாதுகாப்பானது என்று கண்டு பிடித்து தப்பிப்பதற்குள் இரண்டு ஜென்மம் கண்டுவிடும் என்று சோர்ந்து விடுகிறார்கள். அதற்கும் லீவன் ஒரு வழி சொல்கிறாள். "நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும்போது, பகா எண்கள் (Prime Numbers) பொறிக்கப்பட்ட அறைகளிலேயே ஆபத்து இருக்கிறது." என்று கூறுகிறாள். மேலும், ஒரு நேர்கோட்டில் 26 அறைகள் மட்டுமே இருக்கும், ஒரே திசையில் 26 அறைகள் நகர்ந்து சென்றால் கண்டிப்பாக இந்த பெரிய கியூபின் ஓரத்துக்கு சென்றுவிடலாம் அதற்கப்புறம் தப்பி விடலாம்." என்றும் கூறுகிறாள். எல்லோரும் அதன்படி செல்கிறார்கள். ஆனால் அவள் கூற்றை பொய்யாக்கும் விதமாக, Prime number  பொறிக்காத ஒரு அறையில் ஆபத்து உண்டாக, எல்லோரும் லீவன் மீது பாய்கிறார்கள். இப்போது நிதானமாக அமர்ந்து கணக்கு போட்டு பார்த்ததில் மேலும் ஒரு புது விஷயத்தை கண்டு பிடிக்கிறாள் லீவன். Prime number மட்டுமல்ல, அதன் மடங்குகள்( உதாரணமாக 7,49,343,2401  ) எண்ணிட்ட அறைகளும் ஆபத்தானவை என்று அறிவிக்கிறாள். அவள் முகத்தில் சந்தோஷமும், கவலையும் மாறி மாறி வருகின்றன. 

ஒரு எண்ணை பார்த்தவுடன் அது Prime numberஇன் மடங்கா இல்லையா என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அதுவும் கால்குலேட்டர் இல்லாமல் கண்டுபிடிக்க நேரமாகும் என்று கூறுகிறாள். இந்த குழுவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனும் இருக்கிறான், அவனை இழுத்துக்கொண்டு அலைவது தேவை இல்லாத சுமை என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஒரு திறமை இருக்கிறது. எந்த எண்ணை பார்ததுமே அது எந்த எண்ணின் மடங்கு என்பதை சொல்லி விடுவான். அவன் உதவியால் மிக வேகமாக முன்னேறுகிறார்கள். போகும் வழியில் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். அங்கே ரீன்ஸ் இறந்து கிடக்கிறார்.(முதலில் இறந்தவர்) அதாவது எந்த அறையில் தொடங்கினார்களோ அங்கேயே வந்து நிற்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? அவர்களுக்கு நேர்ந்தது என்ன? யார் யார் தப்பினார்கள்? இவைதான் கிளைமாக்ஸில் கிடைக்கும் விடைகள்.

இந்த படத்தின் சிறப்பம்சமே, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு என்ன மன நிலை இருக்குமோ அதை மன நிலை நமக்கும் ஏற்பட்டு விடுவதே. என்ன நடக்கிறது, இது எந்த மாதிரி இடம், இடம் மர்மம் என்ன என்பதில் கடைசி வரை நம்மை குழப்பத்திலேயே அழைத்து செல்கிறார்கள், அதுவே நமக்கு ஒரு வித ஈடுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் கணிதத்தில் கொஞ்சம் ஆர்வம் இருப்பவர்கள் மிகவும் எஞ்சாய் செய்து பார்க்க முடியும். முப்பரிமானம், Prime number, மடங்கு ஆகியவை பற்றி அறியாதவர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இந்த படத்தின் இயக்குனர் வின்ஸ் நடாலி. கதையிலும் பங்களித்திருக்கிறார். ஒரே ஒரு அறையை மட்டுமே நிர்மாணித்து, அதன் வண்ணங்களை மட்டும் மாற்றி மாற்றி குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். இதன் அடுத்த பாகமான ஹைபர் கியூப் இதை விட இன்னும் குழப்பமான கதையம்சத்தை கொண்டது. அதாவது முப்பரிமாணங்களை சேர்த்து, நான்காவது பரிமாணமாக காலத்தையும் இணைத்திருப்பார்கள். மூன்றாவது பாகமான கியூப் ஸீரோ முதல் பாகத்துக்கு முன்னால் நடக்கும் கதையாக எடுத்திருக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களை காட்டிலும், அதிக விளக்கங்களை கொண்டதாக இப்படம் இருக்கிறது. 

படத்தில் வசனங்கள் மிக முக்கியம். அதிலும் அதில் கூறப்படும் கணித, அறிவியல் கருத்துக்களை புரிந்துகொண்டால் படத்தை எஞ்சாய் பண்ணலாம். இல்லை என்றால் கஷ்டம்தான். இன்னொரு விஷயம் படத்தை பாதியில் இருந்து பார்த்தால், குழம்பி தலை சுற்றி விழ வேண்டியதுதான். முழுவதும் பார்த்தாலே குழம்புவது நிச்சயம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

March 26, 2012

ஹீரோக்கள் கதை கேக்குறாங்கோ....

மு.கு: வழக்கம்போல இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சித்தரிக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, இழிவு படுத்தும் நோக்கமோ இதில் கிடையாது. 
இப்போதெல்லாம் ஹீரோக்கள் கதையை ஓகே செய்த பிறகே படத்தின் வேலைகள் தொடங்குகின்றன. அதாவது கதைக்கேற்ற ஹீரோக்களை தேடிப்போவது மாறி, ஹீரோக்களுக்கான கதை உருவாக்கும் நிலை வந்துவிட்டது. முன்பு ஒரு சில ஹீரோக்கள் செய்த இந்த வேலையை, இப்போது எல்லா ஹீரோக்களும் செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு புது டைரக்டர் இந்த ஹீரோக்களிடம் கதை சொல்லும்போது, எந்த மாதிரி கதைகளை ஹீரோ விரும்புகிறார்கள் என்பதின் கற்பனை வடிவமே இந்த பதிவு. 

STR என்கிற சிம்பு
"சார் என்கிட்ட சாஃப்டான ஒரு ரொமான்டிக் ஹீரோ கதை இருக்கு."

"என்ன தல? எனக்கு இருக்குற ரேஞ்சுக்கு சாஃப்ட் ஹீரோ கதை எல்லாம் ஒத்து வருமா? சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் ரேஞ்சுக்கு மாஸ் கதையா இருந்தா சொல்லுங்க." 

"ஓகே சார்.  இந்த படத்துல, நீங்க ஒரு ராணுவ வீரர் சார். ஏன்னா நீங்க ஏற்கனவே போலீசா நடிச்சிட்டதால அதுக்கும் மேல டெரரா இருக்கணும்னுதான் இந்த ஏற்பாடு. மத்தபடி நீங்க உங்க உடம்பை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க... சிக்ஸ் பேக் வரைஞ்சுக்கலாம். "தளபதி தலையில கொட்டுனாலும், அவன் அய்யோ தலன்னுதான் கூப்பிடுவான். தல தாண்டா எல்லாமே" அப்படின்னு நீங்க சொன்னதும் எல்லாரும் தலையிலேயே அடிச்சுக்கிறாங்க.  படத்துல இதே மாதிரி மொத்தம் ஆயிரம் பஞ்ச் டயலாக் சார். இதை கின்னஸ் புக்ல கூட பதிவு பண்ணிரலாம். படத்துல மொத்தம் மூணு ஹீரோயின். ரெண்டு பேர் ஒரே ஒரு அயிட்டம் சாங்குக்கு ஆடுறாங்க. இன்னொருத்தார் ஒண்ணு ரெண்டு சீன்ல தலை காட்டுவாங்க. அந்த ரெண்டு சீன்லேயுமே உங்களுக்கு லிப் கிஸ் சீன் இருக்கு. இன்னொன்னு சொன்னா ரொம்ப சந்தோசப்படுவீங்க. ஹீரோயின்ஸ் எல்லாருமே உங்களை விட வயசுல மூத்தவங்க. நிஜத்துல ரொம்ப மூத்தவங்க. ஆனா படத்துல ஒண்ணு ரெண்டு வயசு மூத்தவங்க. அப்புறம் படத்துல ஒரு பாட்டுல, டான்ஸ் மூவ்மெண்ட் ஒண்ணு வைக்கிறோம் சார். அதாவது குப்புற படுத்துக்கிட்டு மூக்காலேயே ஆடுறீங்க. இத பாத்து அவனவன் பேதி ஆகணும். உங்கப்பாதான் அந்த பாட்ட பாடுறார். எப்படி சார் கதை?".  

உடனே சிம்பு, "ஆகா, இதுவரைக்கும் இந்த மாதிரி கதையில நான் நடிச்சதே இல்லை. சூப்பர். நாம படம் பண்றோம்.".  


கொலவெறி புகழ் தனுஷ் 

'சார் நீங்க எதையுமே வித்தியாசமாதான் செய்வீங்கன்னு எனக்கு தெரியும். இந்த படத்தோட ஒன் லைன் சொன்னதுமே உங்களுக்கு பிடிச்சிடும்." 

"பாஸ், மொதல்ல கதைய சொல்லுங்க பாஸ்".  

"அதாவது சார் நீங்க பத்தாவதுல பத்து தடவ அட்டம்ப்ட் பண்ணி வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கிற பையன் சார்." 

"ஆகா பாஸ் சூப்பர். இந்த படத்துல நான் நடிக்கிறேன்." 

"சார் நான் கதையே இன்னும் சொல்லலயே?" 

"அதனால என்ன? இந்த ஒன் லைனே எனக்கு பிடிச்சிடுச்சி. இந்த படத்துல எனக்கு வயசு 17." 

"அதெப்படி சார் பத்தாவது 10 தடவை பெயில் ஆன பிறகும் வயசு 17 வரும்?" 

"அதெல்லாம் தெரியாது. அப்படித்தான். ஹீரோயினுக்கு வயசு 19. நாங்க ரெண்டுபேரும் திருட்டுதனமா ஊரெல்லாம் சுத்துறோம்." 

"சார் திருட்டுதனமா எப்படிசார் ஊர் சுத்துறது?" 

"அது அப்படித்தான். பிறகு ரெண்டு பெரும் மேட்டர் பண்ணபுறம் பிரிஞ்சிடுறோம். கிளைமாக்ஸ்ல நாங்க படிச்ச ஸ்கூலுக்கு வரேன். அப்போ அவ அங்க டீச்சரா இருக்கா. நான் அதே ஸ்கூல்ல பத்தாவது எக்ஸாம் எழுத வரேன். ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கிறோம்.  படம் முடியுது. எப்படி கதை?" 

"சார், நான் கதை சொல்ல வந்தா, நீங்க கதை சொல்றீங்க?" 

"என்ன பத்தி என்ன நினைச்சீங்க பாஸ். இந்த படத்துல, ஒரு பாட்டு எழுதி, நானே இசையமைச்சு, நானே பாடி, நானே ஆடுறேன். அந்த பாட்டு முழுவதும் பொண்ணுங்களை சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைல திட்டுறேன்.. அதை சப் டைட்டிலோட யுடியூப்ல போடுறோம். ஹிட் ஆக்குறோம்."  

இயக்குனர் குழம்பி தலை தெறிக்க ஓடுகிறார்.  


இளையதளபதி டாக்டர்: 

"சார் உங்க மாசுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணிருக்கேன் சார். ஒரு கிராமம் சார். அங்க நீங்க ஆட்டோ டிரைவரா இருக்கீங்க.அப்படியே பால் வியாபாரமும் பண்றீங்க. ஆட்டோ ஒட்டுற காசை வைச்சு ஊர் மக்களுக்கு பசுமாடு தானம் பண்றீங்க. அந்த ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாம் உங்களை சுத்தி பாட்டு பாடுறாங்க. உங்களுக்கு ஒரு தங்கச்சி ஒரு அம்மா. அப்போ அந்த ஊர்ல இருக்குற ஒரு தாதாவுக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஆவுது. அவனை ஊருக்கு நடுவுல வச்சி துவைக்கிறீங்க. அவன் உங்களை பழிவாங்க ஊர் கிணத்துல விஷத்தை கலக்கிறான். அதை தடுக்க உங்க தங்கச்சி அதை குடிச்சி செத்து போறாங்க. உடனே நீங்க வில்லனை பழிவாங்குறீங்க. படத்தோட பேரு எட்டுக்கால் பூச்சி."   

"இதோ பாருங்க, இப்போலாம் நான் மாஸ் கதை பண்றது இல்ல. வித்தியாசமா ஏதாவது இருந்தா சொல்லுங்க." 

"ஓகே சார். என்கிட்ட இன்னொரு கதை இருக்கு. அதாவது நீங்க பெரிய பிசினஸ்மேன். கூடவே அமெரிக்கவுல நீங்க பைலாட்டா இருக்கீங்க. பிளேன் ஒட்டுற காசை வச்சு அமெரிக்ககாரங்களுக்கு டெல்லி எருமை வாங்கி கொடுக்கிறீங்க. அங்க வெள்ளை மாளிகையில உங்களுக்கு ஓபனிங் சாங். உங்களுக்கு ஒரு சிஸ்டர் மறறும் மதர். அமெரிக்காவுல இருக்கற இந்தியன் டெரரிஸ்ட் ஒருத்தனை நடு ரோட்டுல வச்சி அடிக்கிறீங்க. அவன் பதிலுக்கு வெள்ளை மாளிகையில குண்டு வச்சிடுறான். ஒபாமாவை காப்பாற்ற உங்க சிஸ்டர் சாகுறாங்க. உடனே வில்லனை ஓட ஓட விரட்டி பிளேன் ஏத்தி கொல்றீங்க." 

"அண்ணா சூப்பர்ண்ணா.. இந்த மாதிரி நான் படம் பண்ணாதே இல்லை. படத்தோட பேரு என்ன?"

"ஆக்டோபஸ்: அத்தியாயம் எட்டு." 


தல அஜீத்: 

"சார் உங்க வயசுக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி ஒரு கதை சார். ஓப்பனிங் சீன்ல ரவுடி ஒருத்தனை கொல பண்ண தோரத்துறாங்க. அவன் ஓடாம திரும்பி நின்னு, உடம்புல கை கால் அப்படின்னு எத்தனையோ பாகம் இருந்தாலும் ரொம்ப முக்கியம் எது தெரியுமா? அப்படின்னு கேக்கிறான். உடனே உங்களை காட்டுறோம் சார். படத்துல உங்க வயசு 50 சார். படத்துல மொத்தம் 10 வில்லன் சார். ஒவ்வொருத்தாரா நீங்க கொல பண்றீங்க. கடைசியில ஒரு பெரிய வில்லன். அப்போதான் சார் ஒரு டுவிஸ்ட் வைக்கிறோம். அந்த பெரிய வில்லனே நீங்கதான் சார். நீங்க கொல பண்ண பத்து பேரும் வில்லனே இல்லை. எல்லோருமே நல்லவங்க. நீங்க மட்டும்தான் சார் கெட்டவன். படத்துல சொல்லவேண்டிய முக்கிய விஷயம், உங்களுக்கு கூலிங் கிளாஸ் மற்றும் கோட் சூட் கண்டிப்பா உண்டு. அப்புறம் ஒரு கார் சேஸ் மற்றும் பைக் சேஸ். படத்துல உங்களுக்கு வசனமே கிடையாது. சும்மா உங்க நடையிலேயே அசத்துறீங்க. கடைசியில ஒரே ஒரு வரி வசனம் மட்டும் பேசுறீங்க. ஆனா அதை சென்சார்ல கட் பண்ணிருவாங்க. ஏன்னா அது கெட்ட வார்த்தை. வழக்கம்போல திரிஷா உங்களுக்கு ஹீரோயின். ஆனா வழக்கம்போல அவங்களோட நீங்க சேரப்போறதில்லை. பாதியிலேயே கழட்டி வீட்டிடுறீங்க." 

"பாஸ் நாம இந் படம் பன்றோம். நான் ஷூட்டிங்க்ல பிர்யணி செஞ்ச் போட்ரென். அது....." 


சிக்ஸ் பேக் சூர்யா: 

"சார் இது ஏற்கனவே தல மற்றும் தளபதி ரிஜெக்ட் பண்ண கதை."

"அப்படியா? அப்போ ஓகே. இந்த படம் பண்றோம். கண்டிப்பா பண்றோம்." 

"படத்தோட கதை என்னன்னா?. படத்துல நீங்க தமிழன் சார். உங்களுக்கு சிக்ஸ் பேக் இருக்கு. நீங்க ஒரு அப்பாவி. நீங்க ஒரு பொண்ண லவ் பண்றதோட எல்லாமே பண்றீங்க. அந்த பொண்ணு செத்து போகுது. சோகமா பாட்டு பாடுறீங்க. இன்னொரு பொண்ண கரெக்ட் பண்றீங்க. திடீர்னு மிலிடரிக்கு போறீங்க. அப்போதான் தெரியுது உங்க தாத்தாதான் இந்த உலகத்துக்கே துப்பாக்கி சுட கத்துகொடுத்தாருன்னு. அதை எப்படியாவது மறைக்கணும்னு மந்திரிபக்சே அப்படிங்கற ஒரு வில்லன் முயற்சி பண்றான். அப்படியே மொறச்சி பாக்குறீங்க. அது மொறப்பா, இல்லை கோபமான்னு எல்லோரும் கண்பியூஸ் ஆகணும். உங்க திறமைய பாராட்டி ஒபாமா உங்களை ஒசாமாவை பிடிக்கிற பொறுப்பை ஒப்படைக்கிறார். ஒசாமா கிட்ட போய் எதிர் பாக்கலல்ல? அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அவன் முழிக்கிறான். பாத்தியா? தமிழன் வாய தொறந்தா எவனும் பதில் பேச முடியாது அப்படின்னு கர்ஜிக்கிறீங்க. கடைசியில ஒசாமாவை ஓட ஓட விரட்டுறீங்க. அவன் தன்னோட துப்பாக்கியால தானே சுட்டு செத்துப்போறான். உங்க நோக்கு வர்மத்தாலதான் அவன் செத்தான்னு நீங்க எல்லோரையும் நம்ப வைக்கிறீங்க. ஐநா சபையில உங்கள பேச சொல்றாங்க. அப்போ தமிழனை பத்தியும் உங்க தாத்தவை பற்றியும் பேசுறீங்க. எல்லோரும் புல்லரிச்சு போறாங்க. அப்படியே எண்ட் கார்டு போடுறோம். இந்த படத்தை பாக்கலான்னா அவன் தமிழனே இல்லைன்னு விளம்பரம் பண்றோம். நீங்களும் ஒவ்வொரு அவார்ட் பங்க்ஷனா போய் எல்லா நடிகர் கால்லேயும் விழுந்து, நீங்க அவரோட ஃபேன் அப்படின்னு சொல்றீங்க."

"கரெக்ட். ஏதாவது ஒரு பங்ஷன்ல பாவப்பட்டு அவங்களே ஒரு அவார்ட் கொடுத்திருவாங்க. இந்த படம் நாம கண்டிப்பா பண்றோம்."

மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்: 

"கேப்டன் உங்களை வச்சி ஒரு படம் எடுக்கலாம்னு, ஒரு கதை சொல்ல வந்திருக்கேன். படத்துல நீங்க டாக்டருக்கு படிச்சு, சி‌பி‌ஐல வேல பாக்கிற ஒரு போலீஸ் அதிகாரி. உங்களுக்கு மட்டும் யூனிஃபார்ம் கிடையாது. நாலஞ்சு துப்பாக்கி கொடுப்பாங்க. உங்க வண்டியில கையில் ஜோதியோட கருப்பு மஞ்சள் சிகப்புல ஒரு கொடி பறக்குது." 

கேப்டன் இடை மறித்து, "இரு மீதி கதைய நான் சொல்றேன். பாகிஸ்தான் தீவிரவாதி ஒருத்தன் இங்கே இருந்து தப்பிச்சு ஓடிடுறான். அவனை பிடிக்க நான் மட்டும் பாகிஸ்தான் போறேன். அங்கே எல்லோரும் உருதுல பேசுறாங்க. நான் மட்டும் தமிழ்ல பேசுறேன். அந்த தீவிரவாதிய சுட்டு கொல்றேன். அப்போதான் தெரியுது அங்கே ஒரு அரசியல்வாதி ரொம்ப நாளா பதவில இருக்கான். அவன் தன்னோட குடும்பம், குழந்தை எல்லாத்துக்கும் பதவிய கொடுத்து பாகிஸ்தானையே அடிமையா வச்சிருக்கான். அவனோட எதிரியான ஒரு பொம்பள கூட சேர்ந்து அந்த அரசியல்வாதிய தோற்கடிக்கிறேன். அப்போதான் தெரியுது அந்த பொம்பளயும் கெட்டவ. ரெண்டு பேரையும் கட்டிவச்சு, மூணு மணி நேரம் வசனம் பேசுறேன். என் பேச்சை கேட்டு ரெண்டு பெரும் கண்ணீ வடிக்கிறாங்க. கடைசியில அவங்க கட்டுக்களை நான் அவுக்கிறேன். காதில் ரத்தம் வடிய ரெண்டுபேரும் என் காலில் விழுந்து சாகிறாங்க. நான் நடந்து வெளியே வரேன். அப்போ ஒரு பாகிஸ்தான் பொம்பள எங்க போறீங்கன்னு கேக்கிறா? இதே மாதிரி பிரச்சனை எங்க நாட்டிலேயும் இருக்கு, அங்க போறேன் அப்படின்னு சொல்றேன். உடனே ஊரு பெரியவர், நீங்க வரணும்னுதான் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்றார். நான் சிரிச்ச படியே இந்தியாவ நோக்கி நடந்து வரேன்.  பின்னாடி அதே கொடி பறக்குது. எண்ட் கார்டுல 2017? அப்படின்னு போடுறோம்." 

சொல்லிவிட்டு கேப்டன் திரும்புகிறார். கதை சொல்ல வந்த இயக்குனர் மாடியில் இருந்து குதிப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.  

இன்னும் ஆர்யா, ஜீவா, விஷால் மற்றும் பரத்துக்கு எல்லாம் கதை இருக்கு. இப்போதே நிறைய பேர் பீதியாகி இருப்பதால் இத்தோடு முடித்து கொள்கிறேன். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

 
முழுவதும் படிக்க >>

March 19, 2012

சதங்களின் மன்னன்"சாதனைகளின் மன்னன் சச்சின்!!", என்று சொல்லி சொல்லி போராடித்து விட்டது. இனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும். ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு அருபெரும் சாதனையான நூறு சதங்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறார். இவரது வயது, ஓய்வு எப்போது அறிவிப்பார்?, ஆட்டத்திறன் போன்றவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், இனி இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படுவதோ, அல்லது இவரது சாதனை முறையடிக்கப்படுவதோ, குறைந்தபட்சம் இருபது வருடங்களுக்கு சாத்தியமில்லை என்பது என் கருத்து. 


அடுத்த தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. சச்சின் கிரிக்கெட் ஆடுவதை லைவ்வாக பார்த்ததுதான் அது. இருபது வருடங்களாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அதனை நினைத்து பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது. இவரைப்பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. ஆகவே இந்த பதிவு முழுவதும் படங்களை போட்டு நிரப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். 
சில சுவாரசிய தகவல்கள்:

மேலே உள்ள நபர்தான் ராமகாந்த் அச்ரேகர். இவர்தான் சச்சினின் கோச். இவரும் டென்னிஸ் லில்லியும் சேர்ந்துதான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய சச்சினை, "உனக்கு பவுலிங் சரிப்பட்டு வராது, பேட்ஸ்மேன் ஆகிவிடு.", என்றார்களாம். யார் கண்டா?, முரளி, ஷேன்வார்ன் போல, இந்தியாவுக்கு ஒரு ஆயிரம் விக்கெட் வீழ்த்திய ஒரு பவுலர் கிடைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அச்ரெகர் ஸ்டம்ப் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை பேட்டிங் பிடிக்க சொல்வாராம். சச்சினை அவுட் ஆக்குபவர்களுக்கு அந்த ஒரு ரூபாய். ஒருநாள் முழுவதும் சச்சின் அவுட் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்த ஒரு ரூபாய். அப்படி மொத்தம் 13 நாணயங்களை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறாராம் சச்சின்.  


மேலே படத்தில் இருப்பவருக்குத்தான் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர் பெயர் ராஜ் சிங் துங்கர்பூர். 1989இல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய அணியில் சச்சினை தேர்வு செய்தவர். 


முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச களத்தில் சச்சின். 

எனக்கு பிடித்த சச்சினின் சதங்கள்...... 

1. இதுதான் ஆரம்பப்புள்ளி. இங்கிலாந்துக்கு எதிராக 1990 இல் அடித்த 119*. சச்சினின் முதல் சதம்.2. 1992  இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் சச்சின் அடித்த 114. உலகின் மிக அபாயகரமான ஆடுகளமாக கருதப்படும் பெர்த் ஆடுகளத்தில் சச்சின் ஆடியதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ், ஆலன் பார்டரை பார்த்து, "இந்த பொடியன் ஒருநாள் உன் சாதனையை முறியடிக்கபோகிறான் பார்." என்று கூறினாராம்.3. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு, 79 ஒருநாள் போட்டிகளில் ஆடியபிறகு 1994இல் சச்சின் அடித்த முதல் ஒருநாள் சதம். இதன் பிறகு இவரை தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை என்பது தெரிந்ததே.


4. 1994இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 179 விளாசினார். இது இவருக்கு வெகு ஆண்டுகள் அதிக பட்ச டெஸ்ட் ஸ்கொராக இருந்தது. சச்சினுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த சதங்களுள் இதுவும் ஒன்று. 5. 1996 உலகக்கோப்பை தொடரில் தனியாளாக ஜொலித்த சச்சின், இலங்கைக்கு எதிராக 137 சேர்த்தது வெகுகாலம் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கொராக இருந்தது. இந்த போட்டியில் இலங்கை வென்றது குறிப்பிடத்தக்கது. 6. 1996இல் சித்துவும், சச்சினும் சேர்த்து ஷார்ஜாவில் வைத்து பாகிஸ்தானை புரட்டி எடுத்த போட்டியில் சச்சின் அடித்த 118. இந்த போட்டியில்தான் இந்தியா ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 300 ரன்களை கடந்தது.


7.     1998இல் அதே ஷார்ஜாவில், மணல் புயல் ஓய்ந்த நேரத்தில், சச்சின் புயல் வீசி ஆஸ்திரேலியர்களை நொறுக்கி தள்ளியது. அவர் சேகரித்த 143 ரன்களை ஆஸ்திரேலியர்கள் மறக்கவே மாட்டார்கள். 8. 1998இல் ஜிம்பாப்வே மண்ணில் வைத்து தனது 18ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார் சச்சின். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு முந்தைய சாதனையாக டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் 17  சதங்கள் பெற்றதே ஒருநாள் போட்டிகளில் 5 வருடங்கள் முறியடிக்காத சாதனையாக இருந்தது. இதற்கப்புறம் சச்சினை யாரும் நெருங்கவே முடியவில்லை. அப்போது சச்சின் அதிகபட்சம் 25  சதங்கள் வரை அடிப்பார் என்று நாங்கள் கணக்குப்போட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.


9. 1998இல் ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா பந்தில் சச்சின் அவுட் ஆக, அதை பற்றி ஒலோங்கா கொஞ்சம் தெனாவட்டாக பேச, அடுத்த போட்டியில் மரண அடி அடித்தார் சச்சின். பவுன்சர் வந்த பந்தை ஆஃப்சைடில் சிக்சர் அடித்தது அப்போது மிக பிரபலம்.  10. 1999இல், சென்னையில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் 136 ரன்கள் எடுத்தார். முதுகு வலியோடு அவதிப்பட்டு ஆடிவந்த அவரது வேதனையை ரசிகர்கள் எல்லோரும் உணர்ந்தார்கள். சச்சின் அவுட் ஆன அரைமணி நேரத்துக்குள் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.


11. 1999 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக 140 ரன் குவிததார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சச்சினின் தந்தை மரணமடைய, இந்தியா சென்ற சச்சின், நெருக்கடி காரணமாக உடனே திரும்பி வந்து விளாசிய இந்த சதத்தை, தந்தைக்கு காணிக்கையாக்கினார்.


12. 1999இல் நியூசிலாந்துக்கு எதிராக 186 ரன் எடுத்தார். இப்போட்டியில் இவர் டிராவிட்டோடு இணைந்து 331 ரன் எடுத்தது, இன்னும் முறியடிக்கபடாத சாதனை. 13. 2002இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் சேகரித்த 117 ரன் மூலம் 29  சதங்கள் பெற்று, பிராட்மேனை சமன் செய்தார். 14. இடைப்பட்ட காலத்தில் சச்சின்  சதங்கள் குவித்து தள்ளினாலும், அதன் பிறகு சச்சினுக்கு சாதனைகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. டென்னிஸ் எல்போ வலியால் அவதிப்பட்டு வந்த சச்சின், 2006இல் ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்தியை உடைத்து, அறுவை சிகிச்சை முடித்து வந்ததும் 141 விளாசினார்.15.  2009இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன் சேகரித்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், சச்சினின் ஆட்டம் பலரால் வெகுவாக பாராட்டபட்டது. 16. கிரிக்கெட்டில் எப்போதாவது நடக்கும் அற்புதம் 2010இல் நடந்தது. "கிரிக்கெட்டில் 40 ஆண்டுகளாக இதை நிகழ்த்த எந்த இளைஞர் வருவார்?", என்று எல்லோரும் யோசித்து கொண்டிருக்கையில், "நானும் இளைஞன்தான்.", என்று சாதித்து காட்டிய சச்சினின் இரட்டை சதம். 17. 2011 உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடித்து நொறுக்கிய சச்சின் 99 சதத்தை தன்வசமாக்கினார். 18. மார்ச் 16, 2012 அன்று, கிரிக்கெட் உலகில் மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. எப்போதாவது நடக்கும் அற்புதங்கள், சச்சின் வாழ்க்கையில் மட்டும் எப்போதுமே நடக்கின்றன. வங்கதேசத்துக்கு எதிராக அவர் சேகரித்த 114ரன், கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை தொட்ட முதல் வீரன் என்ற பெருமையை ஏற்படுத்தி கொடுத்தது. 


சச்சின் என்பவர் கிரிக்கெட்டில் வகுத்த இலக்கணங்கள் ஏராளம். 100 வருடங்களுக்கு ஒரு முறையே கிரிக்கெட்டில் அதிசயம் நிகழ்கிறது. அப்போது பிராட்மேன், இப்போது சச்சின். இன்னொரு அதிசயம் நிகழ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

நன்றி: cricinfo.com, iamraghuveer.com.
முழுவதும் படிக்க >>

March 16, 2012

நானும், என் விகடனும்.....

இந்த வாரம் பதிவுலகை பொறுத்தவரை மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சியாக பெருகிக் கொண்டிருக்கிறது. தமிழ் மணத்தில் நட்சத்திர பதிவராக எழுதியது, தளத்தின் ஹிட்ஸ் ஒன்றரை லட்சத்தை அடைந்தது என்று அடுத்தடுத்து சந்தோஷம். இதனிடையே நேற்று இரவு, உடன் பணிபுரியும் நண்பர் போன் செய்து, "சொல்லவே இல்லை?..." என்றார்.


எனக்கு புரிபடவில்லை. "என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லை. என்று கூறினேன். "என் விகடனில் இந்த வலைத்தளத்தை பற்றி உங்கள் புகைப்படத்துடன் பிரசுரித்திருக்கிறார்கள்.", என்று கூறினார். என்னால் நம்ப முடியவே இல்லை. பிறகு கடையில் விகடன் வாங்கியபிறகுதான் உண்மை தெரிந்தது. 

சிறு வயதில் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள், படைப்புகள் புத்தகங்களில் வெளியாகும் போது, அவற்றை பார்த்து பிரமித்ததுண்டு. அந்த பிரமிப்பின் வெளிப்பாடே, இந்த மாதிரி ஒரு வலைத்தளத்தை அமைத்து, அதில் எழுதி வந்தது. ஆனால் என் பெயரும் கூட ஒரு நாள் பத்திரிக்கையில் வெளியாகும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அதற்கான தகுதி உண்டா என்பதில் எனக்கு இன்றும் சந்தேகம் உண்டு. படைப்புகள் எழுதி அவை வெளியாகாவிட்டாலும், பெயர் வருவதே, என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு மிகப்பெரிய சாதனையே. அதுவும் நடுப்பக்கத்தில் என்னும்போது, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைபோன்றரை ஊக்குவிக்கும் விதமாக இவ்வாறு வெளியிட்டதற்கு விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சமீபத்தில் தமிழ்மணம் நட்சத்திர பதிவராக எழுதுவதற்கு அழைத்ததையே என்னால் நம்ப முடியாத நிலையில், அதன் மூலமாக விகடனில் என் முகம் வெளியானதற்கு தமிழ்மணத்துக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் பத்தாது. இப்போதும் காண்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், "என் முகம் விகடனில் வந்துவிட்டது!!", என்று சிறு குழந்தை போல. 

இதற்கு உறுதுணையாக இருந்து, ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை எனக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையில், என்னால் முடிந்த அளவுக்கு மென்மேலும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்.

முழுவதும் படிக்க >>

March 11, 2012

யூரி கெல்லரும், உட்டாலக்கடியும்.....
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள் எழுதிய 'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்தை சமீபத்தில் மீண்டும் படிக்க நேர்ந்தது. அதில் அபூர்வ சக்தி உடைய மனிதர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் குறிப்பிட்ட இரண்டு மனிதர்களைப்பற்றி அவர் கொடுத்திருந்த தகவல்கள் எனது ஆவலைத்தூண்டவே, அவர்களைப்பற்றி சில தகவல்கள் இணையத்தில் சேகரித்து தரலாம் என்ற எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை. இந்த இரு மனிதர்களைப்பற்றி இன்றும் பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், இன்று வரை பலரால் இவர்கள் முற்றிலும் நம்பப்படுகிறார்கள். முதலாமவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டானியல் டங்க்லஸ் ஹியூம். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், அபூர்வ சக்தி படைத்த மனிதர்களுள் முதலாமவராக கருதப்படுகிறார். குறிப்பிட்ட ஒரு சக்தி என்றில்லாமல், எண்ணிலடங்கா சக்திகளை தன்னுள் கொண்டவராக போற்றப்பட்டவர். சிறு வயதிலேயே அத்தை மற்றும் மாமாவினால் தத்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவில் தங்க நேரிட்டது. பிற மாணவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஹியூம் தனது ஒரே நண்பரான எட்வினோடு மட்டும் சுற்றி இருக்கிறார். இருவரும் விளையாட்டாக ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். இருவருள் யார் முதலில் இறந்தாலும் மற்றவரோடு வந்து தொடர்பு கொள்ளவேண்டும் என்பதுதான் அது. சிறிது காலத்துக்கு பிறகு சுமார் 300 கிமீ தூரத்தில் உள்ள இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்தார் ஹியூம். செல்ஃபோன், ஈமெயில் இல்லாத அந்த காலத்தில் ஹியூமூக்கு எட்வினோடு முற்றிலும் தொடர்பு அறுந்து போய் விட்டது. திடீரென்று ஒருநாள் பிரகாசமான ஒளியோடு எட்வினின் உருவம் ஹியூமூக்கு தெரிந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து, வந்த லெட்டரில் எட்வின் இறந்து விட்டதாக செய்தி வந்தது. அதாவது எட்வின் ஹியூம் முன்னால் தோன்றுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னாலேயே எட்வின் இறந்திருக்கிறார். 

காற்றில் மிதக்கும் ஹியூம் 


இந்த நிகழ்ச்சி நடந்தது ஹியூம் 13 வயது சிறுவனாக இருந்தபோது. இதற்கப்புரம் ஹியூம் தொடர்ச்சியாக பல ஆவிகளோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஹியூமின் நண்பர் ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு, ஹியூம் தன் முன் மேஜை ஒன்றை தொடாமலேயே நகர்த்தி காட்டியதாக கட்டுரை ஒன்றை எழுதினார். இதற்கப்புறம் ஹியூமின் புகழ் பரவத்தொடங்கியது.  ஒருபக்கம் இவரது புகழ் பரவத்தொடங்கினாலும், மறுபக்கம் இவர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று நிரூபிக்க பலபேர் போராடினார்கள். ஒரு முறை ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் முன்னிலையில் மேஜை ஒன்றை மேலே எழும்ப செய்தார். அவரை சோதிக்க வந்த சிலர் அந்த மேஜையில் ஏறி நின்ற பிறகும், மேஜை அவர்களையும் சேர்த்தே மிதந்தது. ஒரு முறை இறந்த மன்னர் ஒருவரின் கைகளை காற்றில் தோன்றவைத்தார். பலர் அதை தொட்டுப்பார்த்ததில் அது உண்மையிலேயே ஒரு மனிதரின் கை என்று ஒத்துக்கொண்டார்கள். மேலும் அது தன் தந்தையின் கைதான் என்று அதில் இருந்த தழும்புகளை வைத்து அந்த மன்னரின் மகளே ஒத்துக்கொண்டாராம். காற்றில் மிதந்து காட்டிக் கொண்டிருக்கும்போது ஆய்வாளர்கள் சிலர் அவரது காலை பிடித்து கீழே இழுக்க, அவர்களையும் தூக்கி கொண்டு மிதந்திருக்கிறார். அதே போல எந்த வித கருவிகளின் உதவியும் இல்லாமல், மிதந்த படியே ஒரு அறையின் ஜன்னல் வழியே புகுந்து வேறு ஒரு ஜன்னல் வழியே அந்த அறைக்குள் திரும்ப வந்திருக்கிறார். இது சாத்தியமே இல்லாதது. இதையும் அறிவியல் அறிஞர்கள் நம்ப மறுக்க, "அட போங்கடா.." என்று காற்றில் மிதந்த படியே தன் உயரத்தை அளக்க சொல்ல, ஹியூமின் உடல் வளர்ந்து கொண்டே போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரது உயரம் ஒரு அடி அதிகமாக இருந்துள்ளது. இது சாத்தியமே இல்லை. ஆய்வாளர்கள் வாயடைத்து போனார்கள். "இவற்றை எல்லாம் சாத்தியமாக்கியது, ஆவிகளே!", என்று ஹியூம் அடித்து கூறுகிறார். இப்படி நிறைய சாகசங்களை செய்து காட்டிய ஹியூம் ஒரு மோசடிக்காரர் என்று கடைசிவரை யாராலும் நிரூபிக்க முடியவே இல்லை. 

வரைந்த படமும், வளைந்த ஸ்பூனும் 

இதே மாதிரி தற்காலத்தில் மிக பிரபலமாக விளங்கும் இன்னொரு நபர் யூரி கெல்லர். இஸ்ரேலில் 1946இல் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியவர். ஹியூம் எப்போதுமே தன்னுடைய சக்திகளை விளம்பரப்படுத்தியதில்லை. ஆனால் யூரி கெல்லர் இதை ஒரு தொழிலாகவே செய்தார். இவரது புகழ் பெற்ற திறமைகளாக கூறப்படுபவை, உலோகங்களை மெலிதாக தடவியே வளைப்பது அல்லது உடைப்பது, கடிகாரத்தை ஓடாமல் நிறுத்துவது, பிறர் மனதில் நினைத்த காட்சிகளை படமாக வரைவது ஆகியவைகளை குறிப்பிடலாம். "தனக்கு ஆவிகளின் துணை இருப்பதாகவும், மேலும் சில மனோதத்துவ சக்திகள் இருப்பதாலும், தன்னால் இப்படி செய்ய முடிகிறது." என்று கூறுகிறார். 70களில் இவர் இதை ஒரு தொழிலாகவே செய்ய, அதுவரை அறிவியல் அறிஞர்கள் மட்டுமே இவரை ஏமாற்றுக்காரர் என்று கூறி வந்த நிலையில், சில மேஜிக்காரர்களும் சேர்ந்து கொண்டார்கள். யூரி கெல்லர் நிகழ்த்தி காட்டிய அனைத்துமே, மேஜிக் ட்ரிக்குகள்தான் என்றும் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கூறி சிலர் செய்தும் காட்டினார்கள். இதை யூரி கெல்லரும் ஒப்புக்கொண்டார். "இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நான் எந்த ட்ரிக்கும் செய்யவில்லை. எனக்கு ஆவிகள் உதவுகின்றன." என்றே கூறினார். 

தோல்வியை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி 

ஹியூம் காலத்தில் சக்தி வாய்ந்த கேமராக்கள், இன்ன பிற கருவிகள் என்று எதுவுமே கிடையாது. ஆனால் யூரி கெல்லர் தற்கால மனிதர் என்பதால் அவரை சோதிக்க பல கருவிகள் வந்துவிட்டன. இதே ஊடகங்களால் அவருக்கு பல நன்மைகள் உண்டானதும் உண்மைதான். அவரது பல டெலிவிஷன் ஷோக்கள் உலகப் புகழ் பெற்றவை. எந்த அளவுக்கு அவரது புகழ் பரவியதோ அதே போல அவருக்கு சோதனைகளும் அதிகம் வந்தன. பல நேரங்களில் அறிவியல் சோதனை என்று தாறுமாறாக அவர் சோதிக்கப்பட்டார். யூரி கெல்லருக்கு தலைவலியாக விளங்கியவர்களுள் முதன்மையானவர் ஜேம்ஸ் ரேண்டி என்ற மேஜிக் நிபுணர். பலமுறை யூரி கெல்லருக்கு எதிராக வெளிப்படையாகவே சவால் விட்டு, அவருக்கு எதிராக புத்தகம் எல்லாம் எழுதினார். கெல்லர் இவர் மீது பலமுறை வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவரது வாதங்களுக்கு சாதகமாக, யூரி கெல்லரால் எல்லா நேரமும் அதிசயங்களை நிக்ழ்த்தி காட்ட முடிந்ததில்லை. உதாரணமாக 1973 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூரி கெல்லரிடம், நன்கு சோதிக்கப்பட்ட, ஸ்பூன் மற்றும் போர்க்குகள் கொடுக்கப்பட்டன. அவற்றை கெல்லரால் வளைக்க முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதே போல  ரேண்டியின் JREF அமைப்பு ஆவிகளின் இருப்பை யாராவது நிகழ்த்தி காட்டினால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக அறிவித்துள்ளது. இன்றுவரை இந்த பணத்தை யாரும் வாங்கவில்லை.  ரேண்டி ஹியூமூக்கு எதிராகவும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் ஹியூமின் காலத்தில் வாழாததால், அவரால் நிரூபிக்க முடியாமல் போயிருக்கலாம். 

ஜேம்ஸ் ரேண்டி 


இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையை பொறுத்தது. நம்பிக்கை இருக்கும் வரை மர்மங்களுக்கும் மோசடிகளும் முடியாத தொடர்கதைதான். உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

March 10, 2012

கையாளுவதில் கை தேர்ந்தவரா?


ஒண்ணறை லட்சம் ஹிட்ஸ்களை அடைய காரணமாக இருந்த அனைத்து வாசகர் மற்றும் பதிவர் நண்பர்களுக்கும், திரையுலக, அரசியல், விளையாட்டு பிரபலங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

முகு: கொஞ்சம் நீளமான பதிவு.... கையாளுதல் (Handling) என்பது தலைமைப்பண்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் நிறைய பிரிவுகள் உண்டு. நேரத்தை, பணத்தை, சூழ்நிலைகளை, மனிதர்களை என்று நிறைய விஷயங்களை திறம்பட கையாளுபவரே, சிறந்த தலைவராகவோ அல்லது மேலாளராகவோ இருப்பார்கள். கையாளுதல் என்பதற்கு தொழில் முறை விளக்கமே நான் கொடுத்திருக்கிறேன். ஒரு அலுவலகமோ, அல்லது தொழிற்கூடத்திலோ நடக்கும் இத்தகைய நிகழ்வு கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் நன்மைக்காகவே செய்யப்படுவது. நான் இப்போது அதைப்பற்றி கூறப்போவதில்லை. இதே கையாளுதல் என்ற செயல் சுயநலத்துக்காகவோ அல்லது ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ளவோ பயன்படும்போது இதற்கு வேறு பெயர் கிடைக்கிறது. அது ஆங்கிலத்தில் Manipulation என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு பலவீனத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே இந்தவகை கையாளுதல் கலையின் நோக்கம். இதில் ஒரே ஒரு பிரிவான மனிதர்களை பயன்படுத்திக்கொள்ளும் கலை பற்றி மட்டும் பார்ப்போம். இந்த கட்டுரையின் நோக்கம், அடுத்தவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவர்களை ஊக்குவிப்பதல்ல. மாறாக, நம்மை பிறர் பயன்படுத்திக்கொள்ள முனையும்போது அதில் இருந்து தப்புவதற்காகவே... 

இது எத்தனை வகைப்படும்? 

பொதுவாக இதை உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக என்று இரண்டு வகைகளில் பிரிக்க முடியும். இரண்டுமே அடுத்தவரின் மீது பயன்படுத்தி காரியம் சாதித்துக்கொள்ள முடியும். இவை இரண்டுக்குள்ளுமே உட்பிரிவுகள் நிறைய உண்டு. நான் கூறப்போவது இரண்டாவது வகை பற்றித்தான் என்றாலும், முதல் பகுதி பற்றி கொஞ்சம் சுருக்கமாக கூறி விடுகிறேன். 

உடல்ரீதியான ஆளுமை: தன்னுடைய உடல் பலத்தைக்காட்டி ஒருவரை தனக்கு சாதகமாக வேலை செய்ய வைப்பதே இந்த வகை. இதில் பல வழிமுறைகள் உள்ளன. சிறு சிறு வன்முறையில் தொடங்கி, இறுதியில் கொலை மிரட்டல் வரை செல்லமுடியும். இதனை லாவகமாக பயன்படுத்துவதிலேயே இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட இருவரின் மனோ தைரியத்தை பொறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பயப்படும் வரைதான் உடல்ரீதியான ஆளுமை வேலை செய்யும். அவர்கள் திடீரென்று எங்க வீட்டுப்பிள்ளை எம்‌ஜி‌ஆர் மாதிரி வீரமாக மாறிவிட்டார்கள் என்றால் அவ்வளவுதான். அதே போல, இந்த ஆளுமை செலுத்த முயல்பவர் எந்த அளவுக்கு இறங்குவார்கள் என்பதை பொறுத்திருக்கிறது. சிலர் ஒரே ஒரு அடி மட்டும் அடித்து விட்டு அடுத்தவர்கள் அடிபணிந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பார்கள். அது நடக்காத பட்சத்தில், பின்வாங்கி விடுவார்கள். ஒரு சிலர் மரண அடி கூட அடித்து விடுவதுண்டு. உடல்ரீதியான ஆளுமைக்கு நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. சில மனைவிமார்கள், கணவனைக்கண்டாலே பயந்து நடுங்குவதையும், அடம்பிடிக்கும் சில குழந்தைகள் தந்தை பெயரைக்கேட்டதும் சமர்த்து ஆகி விடுவதும் அடிக்கு பயந்துதான். இவ்வகை ஆளுமை செலுத்துபவர்கள் பெரும்பாலும் மிக நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல. 

மனரீதியான ஆளுமை: 

முதலாமவதை விட இது மிக பயங்கரமான ஆயுதம். குறிப்பாக உடல்ரீதியான ஆளுமைக்கு உள்ளானவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பது தெரியும். ஆனால் இந்தவகையில் சிக்கி இருப்பவர்கள், தங்களை அடுத்தவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைக்கூட அறியாமல் இருப்பதுதான் பரிதாபம்.. நேரடி மிரட்டல்: இது உடல்ரீதியான ஆளுமையை செலுத்துவதன் முந்தைய நிலை. ஒருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டி சாதிக்க முடியும். "இப்படி செய்யாவிட்டால், உன்னை பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுத்து விடுவேன்", "நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் நீயும் நானும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்", என்று பலவகை மிரட்டல்களை நாம் கேள்விபட்டிருக்கிறோம். அதே போல மறைமுகமாக, "நீங்கள் இதை செய்யாவிட்டால் உங்க பொண்ணு வாழ்க்கை நாசமாகி விடும்.", என்று மாமனார் மாமியாரை மிரட்டும் கணவன்களையும் பார்த்திருக்கிறோம். இதை சாதிப்பதில் சம்பந்தப்பட்டவரின் மனோதைரியத்தை எடைபோட்டுக்கொள்வது அவசியம். அப்பாவி மனைவியை மிரட்டி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பல கணவன்கள் வெளி உலகத்தில் அம்மாஞ்சிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் வீரம் எல்லாம் அப்பாவியான மனைவி மீது மட்டும்தான். 

பச்சாதாப ஆளுமை : இது தன்னை பலவீனமானவனாக காட்டிக்கொள்ளும் முறை. அதாவது தன்மீது மற்றவர்களுக்கு இறக்கம் வரும் அளவுக்கு பாவமாக நடந்து கொள்வது. அல்லது தான் அன்பின் ஆழத்தை காட்டி பரிவு தேடுவது. உதாரணமாக ஒரு பெண்ணின் நட்பை பெறவேண்டுமானால், காதலில் தோல்வி அடைந்தவன் போலவும், உலகத்தையே வெறுப்பவன் போலவும் காட்டிக்கொள்வது. சில மனைவிகள், கணவனிடம் காரியம் சாதித்துக்கொள்ள, “எல்லாம் என் தலையெழுத்து. நான் ஒரு பாவப்பட்ட ஜென்மம்.”, என்று கண்ணை கசக்குவதை பார்த்திருப்போம். சிலர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூட மிரட்டுவார்கள். "எனக்காக இதைக்கூட நீ செய்ய மாட்டாயா?". இந்த வார்த்தையை எத்தனை பேர் ஆயுதமாக பயம் படுத்துகிறார்கள் என்று யோசித்து பாருங்கள். இதற்கு கொஞ்சம் நடிப்பு திறமை இருந்தால் போதும். குழப்பிவிடும் வார்த்தை ஜாலம்: சிலர் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல், சுற்றி வளைத்து கதை பேசி சொல்வார்கள். இதன் மூலம் இவர்களின் நேரடி நோக்கம் நமக்கு தெரியாமல் போய்விடும். சில நேரங்களில் அவர்களின் கோரிக்கை தவிர்க்க முடியாமல் ஆகி விடும். உதாரணமாக, பக்கத்து வீட்டு பெண்கள், “ஏம்மா உன்ன மாதிரி இந்த காம்பவுண்ட்ல இருக்கிற யாருக்குமே நல்ல மனசு கிடையாது. எல்லாம் அடுத்தவங்க வளர்ச்சிய பாத்து பொறாமைப்படுற கும்பல்கள். உனக்கே தெரியும் நான் மனசுல எது பட்டாலும் உடனே சொல்லிடுவேன். உன்னை பார்த்தா என் சகோதரி மாதிரி தெரியுது. உன் கிட்ட கேட்ட தப்பில்லைன்னு தொனிச்சு. ஒரு 500ரூவா கைமாத்தா கிடைக்குமா?”, என்று கேட்டு சங்கடத்தில் நெளிய வைத்து விடுவார்கள். "சார் ஒண்ணு கேட்டா மாட்டேன்னு சொல்லக்கூடாது. இந்த ஆபீஸ்ல உங்களை போல யார் கிட்டையும் ப்ரீயா பேச முடியல. எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? ஒரு அவசர வேலையா வெளிய போக வேண்டி இருக்கு. உங்க வண்டி சாவிய கொஞ்சம் கொடுங்களேன். வேணும்னா நானே பெட்ரோல் போட்டிடுறேன்." இந்த மாதிரி வார்த்தைகளை டெய்லி நாம் கேட்டிருப்போம். குற்றம் சுமத்தி காரியம் சாதிப்பது: பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மிக பலமான ஆயுதம். எதிராளியை நிலைகுலைய வைப்பதோடு, நீண்ட காலம் அடிமையாக வைத்திருப்பது இதுதான். அவர்களின் மீது வரிசையாக குற்றம் சுமத்தி, தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவது. "எல்லாத்துக்கும் நீதான் காரணம். உன்னாலேதான் இது நாசமா போச்சு, என் பேச்சை எப்போ கேக்கப்போறியோ, அப்போதான் எல்லாம் உருப்படும்." இந்த வார்த்தைகள் உபயோகிக்காத கணவன்மார்களை விரல்விட்டு எண்ணி விடலாம். "எல்லாமே உன்னாலேதான் ஸ்பாய்ல் ஆகிடுச்சு. உன்னோட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு வந்தா, எப்பவுமே இப்படி பேசி என் மூடை கெடுத்திடுற உனக்காக என் வேலையெல்லாம் விட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்." என்று தன் காதலனிடம், காரியம் சாதித்துக் கொள்ளாத காதலிகள் இல்லை. 

தனிமைப்படுத்தி காரியம் சாதிப்பது: காரணமே இல்லாமல் ஒருவரை தவிர்த்து விடுவது, இப்படி தொடர்ந்து செய்து அவர்களை தவிக்க விடுவது. ஒரு கட்டத்தில் அவர்கள் ஓடோடி வந்து உங்களிடம் நிற்பார்கள். அப்போது சாதிக்க முடியாத காரியங்களே இல்லை. வீட்டிற்கு வரும் கணவன் தன்னிடம் எதுவுமே பேசாமல், சாப்பிடாமல் படுக்கையில் போய் படுத்துக்கொண்டால் மனைவி கண்டிப்பா பதறுவாள் என்று கணவனுக்கு தெரியும். கால் செய்தும் எடுக்காமல், மெசேஜுக்கு ரெப்ளை செய்யாவிட்டால் காதலன் எப்படி பதறுவான் என்று காதலிக்கும் தெரியும். அவர்களை திரும்ப பேச வைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள் என்றும் தெரியும். அந்த நேரத்தில் எளிதாக காரியம் சாதித்துக்கொள்ளலாம். மயக்கி சாதிப்பது: ஒருவருக்கு எதையாவது கொடுத்து மயக்கி காரியம் சாதிக்கும் முறை. காலம்காலமாக இது நடந்து வருகிறது. பணமாகவோ, பொருளாகவோ, இல்லை பாசமாகவோ கூட இருக்கலாம். லஞ்சம் கொடுப்பது, பதிலுக்கு ஏதாவது உதவி செய்து கொடுப்பது, அதிகாரிகளுக்கு ‘ட்ரீட்’ கொடுப்பது ஆகியவை இதற்கு கீழே வரும். காலம்காலமாக மாமியார்கள் தங்களுடைய மருமகள்களை வெறுக்க காரணமாக இருக்கும் தலையணை மந்திரம் இந்த வகைதான். இவை மட்டுமல்லாமல், அளவுக்கதிகமாக புகழ்வது, எதற்கெடுத்தாலும் பாராட்டுவது, மிக நெருக்கமாக இருப்பது போன்றவை கூட இதில் வரலாம். விஸ்வாமித்திரர் உள்பட இதற்கு அடிமையாகாத மனிதனே கிடையாது. 

உசுப்பி விடும் வார்த்தைகள்: இதுதான் மிக மிக எளிய வழி. இதற்கு மசியாதவர்களே உலகில் கிடையாது. "சரியான ஆம்பளையா இருந்தா......", என்று தொடங்கி அதன் பின் என்ன சொன்னாலும் சரி, தான் ஆம்பளை என்று நிரூபிப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். நீய்ல்லாம் ஒரு இந்தியானா? நீயெல்லாம் ஒரு தமிழனா? நீயெல்லாம் ஒரு மாணவனா? நீயெல்லாம் குடும்ப பொம்பளயா? இது போன்ற உசுப்பி விடும் வார்த்தைகள் ஒருவரை எளிதில் ஆட்கொண்டு விடும். இதில் எதிலுமே மசியவில்லையா? இருக்கவே இருக்கிறது, "ஒரு அப்பனுக்கு போறந்திருந்தா.........", இதுதான் கடைசி ஆயுதம். "நீங்கள் உங்கள் தாயை உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால் இந்த எஸ்‌எம்‌எஸ்ஐ பார்வர்ட் செய்யவும்!", என்றவுடம் முட்டாள்தனமாக பார்வர்ட் செய்பவர்கள் எத்தனைபேர்? "சச்சினுக்கு நோபல் பரிசு கொடுக்கிறார்கள், தாஜ்மகால் உலக அதிசயமாக வேண்டும் ஒரு இந்தியனாக இருந்தால் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்." என்று சொன்னவுடன், பாய்ந்து கொண்டு சச்சினுக்கும், தாஜ்மகாலுக்கும் ஓட்டு போட்டவர்கள் எத்தனை பேர்? 

உங்களை யாரும் பயன்படுத்திக்கொள்ள கூடாதா? நம்மை யாரும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். ஒருவர் நம்மை பயன்படுத்திக்கொள்ள நாமே அனுமதிப்பதின் காரணங்களாக சொல்லப்படுபவை சில உண்டு. 

முதலாவதாக தாழ்வுமனப்பான்மை. நம்மை பற்றி நாமே ஏற்படுத்தி கொண்டிருக்கும் தவறான கருத்து அல்லது மதிப்பீடு. இதனால் எப்போதுமே நாம் செய்யும் எதன் மீதும் ஒரு வித பய உணர்வு இருக்கும். இரண்டாவதாக, சார்ந்திருக்கும் தன்மை. "இவரை விட்டால் நமக்கு வேறு நாதியில்லை." என்ற உணர்வே, என்னதான் கொடுமை செய்தாலும் பல பெண்களை கணவனை விட்டு பிரியாமல் இருக்க செய்கிறது. இதே போல எதற்கெடுத்தாலும் அடுத்தவரை சார்ந்திருப்பது, அல்லது அவர்களின் ஆணைப்படியே எல்லாவற்றியும் செய்வது. மூன்றாவதாக, ரொம்ப நல்லவனாக இருப்பது. அதாவது அடுத்தவர் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று அவர்களிடம் அடிமை போல இருப்பது. நான்காவது அடுத்தவர்களை இம்ப்ரஸ் செய்ய முயல்வது. "உனக்காக வானத்தையும் வில்லாக வளைப்பேன், நீ சொன்னால் என் உயிரையும் கொடுப்பேன்!!", என்று உட்டாலக்கடி அடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதையே நம் மீது ஆயுதமாக பிரயோகித்து விடுவார்கள். சிலருக்கு இயல்பிலேயே தயக்க உணர்வு அதிகமாக இருக்கும். யாராவது நம்மிடம் ஒரு வேலை சொன்னால், முடியாது என்று சொல்வதற்கு அதிகம் தயங்குவார்கள். ஆகவே அதனை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டுவிட்டு, பிறகு கஷ்டப்படுவார்கள். சிலர் மீதான கண்மூடித்தனமான அன்பும் இதற்கு காரணம். “அவன் உன்னை நல்லா ஏமாத்துறான்”, என்று சொன்னாலும், "நான் நம்ப மாட்டேன் அப்படி எல்லாம் இருக்காது." என்று சொல்வார்கள். கஷ்டப்பட்டு அதை நிரூபித்தாலும், "பரவாயில்லை, அவருக்காகத்தானே செய்கிறேன்?", என்று சமாளிப்பார்கள். கடைசி வரை தாங்கள் ஏமாற்றப்படுவதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். சிலர் பழக்கத்துக்காக, நட்புக்காக, பாசத்துக்காக, உறவுக்காக என்று பிறர் தம்மை பயன்படுத்திக்கொள்வதை தெரிந்தே அனுமதிக்கிறார்கள். ஆனால் அதுவே தொடர்கதையாகும்போதும், கண்மூடித்தனமாக அதை ஆதரிப்பது மிகவும் தவறு. சம்பந்தப்பட்டவர் மீது உண்மையிலேயே அன்பிருந்தால், அவர்கள் கேட்காமேலேயே அவர்களுக்காக நாம் எதையும் செய்வோம் என்று உணர்த்தவேண்டும். இது சுயநலத்தின் வெளிப்பாடு என்றும் உணர்த்தவேண்டும். அடுத்தவருக்கு உதவி செய்வதில் தவறே இல்லை, ஆனால் அவர்கள் அதையே அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொள்ளும்போது, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருப்பதில் தவறே இல்லை. இந்த நழுவுகிற டெக்னிக்கை இன்னொரு பதிவில் விளக்குகிறேன். எக்காரணத்தை கொண்டும் அடுத்தவர் பலவீனத்தை நமக்கு சாதகமாகவோ, நம் பலவீனத்தை அடுத்தவர் தங்களுக்கு சாதகமாகவோ பயன்படுத்த அனுமதிக்க்வோ கூடாது. 

உங்கள் கருத்துக்கள் இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...