விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 23, 2011

வெட்டி அரட்டை - அதிமுக, ரஜினி, ஐ‌பி‌எல்....


கிரிக்கெட் பதிவுக்கு மீண்டும் ஒரு பிரேக். கிரிக்கெட் பதிவு தொடர், ஐபிஎல் மாதிரி நீண்டு கொண்டே இருப்பதால், இடைக்காலத்தில் பிற நிகழ்வுகளால் உண்டாகும் என் எண்ணங்களை வெளியிட முடியாமல் போய் விடுகிறது. ஆகவே அவை அனைத்தையும் ஒரே பதிவில் சொல்லி முடித்து விடுகிறேன். அம்மா அதிரடி.... 

தேர்தல் முடிவுகள் பற்றி நிறைய பேர் துவைத்து அலசி காய போட்டு விட்டார்கள். அதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. "திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுக கூட்டணிதான் வெல்லும் அதுவும் கிட்டத்தட்ட 140 இடங்கள் வெல்லும்." என்று முன்னமே நினைத்திருந்தேன்( நம்புங்கப்பா..). தேர்தல் அன்று ஜெயலலிதா பேட்டி அளித்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஓய்வு தந்த சோர்வா? அல்லது வயது தந்த சோர்வா? என்று தெரியவில்லை. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே ஜெயிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் பிரதான எதிர்கட்சி அளவிற்கு உயர்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மக்கள் ஒட்டு மொத்தமாக திமுகவை துடைத்தெறிந்து விட்டார்கள்(அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை நடப்பதுதானே?). இனி விஜயகாந்துக்கு பொறுப்பு அதிகரித்து விட்டது. அவரது செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். பார்க்கலாம் என்ன செய்கிறார் என்று. சொல்ல மறந்துவிட்டேன் நேற்று தியேட்டரில் எங்கேயும் காதல் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் படம் பார்த்தார்.(தியேட்டர் அவரோடது). எங்கள் ஊரில் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்று விடுவோம் என்று தெரிந்து அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். அங்கேயும் படுதோல்வி. இந்த மாதிரி தோல்வி வந்தால்தான் அமைச்சர்களை எல்லாம் நேரில் பார்க்க முடிகிறது. 

அம்மா என்றாலே அதிரடி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த முறை முதல் பந்தில் இருந்தே சிக்சர்களாக அடிக்க தொடங்கிவிட்டார். அவரது போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்களே திண்டாட தொடங்கி விட்டார்கள். கடைசியாக சமச்சீர் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதில் வந்து நிற்கிறார். புதிய பாடத்திட்டத்தில் கலைஞர் புகழ்பாடும் சில பக்கங்களை நீக்குவது வரை சரியே. கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இறந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன் (என்ன ஒரு உயர்ந்த எண்ணம்?). அப்புறம் பாடங்களில் கலைஞர் சரித்திர நாயகனாக ஆகி விடுவார். அவருக்கு ஆயிரம் கோடி செலவில் நினைவிடம் எழுப்பப்படும். ஊருக்கு ஊர் அவருக்கு சிலை வைக்கப்படும். அந்த கொடுமையை எல்லாம் தாங்க முடியாது. ஏற்கனவே எம்ஜியார் நகர், அண்ணா நகர், கலைஞர் நகர் இல்லாத ஊர்களை தமிழகத்தில் பார்க்க முடிவதில்லை.  ஆனால் புதிய பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்தது சரியா என்று சொல்லத்தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை. விடுமுறை 15 நாட்கள் நீட்டிக்கபட்டுள்ளதால் பிள்ளைகள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள். . 


இதெல்லாம் ஒரு பொழப்பா?


சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி வருந்தத்தக்க வதந்திகள் நாடெங்கிலும் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் உண்மை இல்லை என்றாலும், அவற்றை கேட்டவுடன் மனதில் பதைபதைப்பு தோன்றுவது மறுப்பதற்கில்லை. இந்த மாதிரி கேவலமான ஈன பிறவிகளை பார்க்கும்போது தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் கண்முன்னே தோன்றுகின்றன. ரஜினி என்பவர் அயோக்கியனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவரை ஆராதிக்கும் கூட்டம் முட்டாள்களாகவே இருக்கட்டும். அதில் உனக்கென்ன வந்தது? ரஜினி என்பவர் இல்லாமல் போய் விட்டால் நீ வாழ்க்கையில் முன்னேறி விடுவாயா ? வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதன் முக்கிய காரணமே இந்த மாதிரி எண்ணம்தான் என்பது உங்களுக்கு புரியப்போவதில்லை. இந்த மாதிரி எண்ணம் இருப்பவர்கள் பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும், ஆற்றாமையிலும் வெந்து, நிலைகொள்ளாத கேவலமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ வேண்டி இருக்கும்.  இதை பயன்படுத்தி, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்கள் பங்குக்கு வியாபாரம் செய்து வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி ஒரு பொழப்பு தேவையா? 


வதந்திகள் தலைவருக்கு ஒன்றும் புதிதில்லை. இருபது வருடங்களுக்கு முன் ரஜினி அவ்வளவாக மீடியாக்களுக்கு முகத்தை காட்டாமல் இருந்தார். அவரது குழந்தைகளோ வெளிஉலகத்துக்கே காட்டப்படாமல் இருந்தார்கள். அப்போது சில விஷமிகள், "ரஜினியின் குழந்தைகள் ஊனமுற்றவர்கள், ஆகவே அவர்களை வெளிஉலகுக்கு காட்ட ரஜினி தயங்குகிறார்." என்று கூசாமல் சொன்னார்கள். அந்த நேரத்தில் ஊனமுற்றவர்கள் நலனுக்காக தமிழக அரசு வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் ரஜினி நடித்தார். உடனே, "தன் குழந்தைகள் ஊனமுற்றவர்கள் என்பதாலேயே, விளம்பரங்களிலேயே நடிக்காத ரஜினி இதில் நடித்திருக்கிறார்." என்று இட்டுக்கட்டினார்கள். இந்த வதந்திகள் ரஜினியையோ, அவர் குடும்பத்தையோ சிறிதும் பாதிக்கவில்லை. இவற்றுக்கு ரஜினி பதிலளிக்கவும் இல்லை. அவர் பாணியில் சொல்வதானால், "காலம் பதில் சொல்லும்".  சொன்னது. 


இப்படிப்பட்ட வதந்திகளால் ஒரு மிகப்பெரிய நன்மை நடந்திருக்கிறது. ரஜினி என்ற நபர் மக்கள் மனதில் எப்பேற்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. வதந்திகளை பரப்பிய மானங்கெட்ட மக்கா உங்களுக்கு ஒரு நன்றி.  


ஐபிஎல் போரடிக்குது... 


பொதுவாக டிவியில் ஒளிபரப்பப்படும், ஏர்டெல் சூப்பர் சிங்கர், அசத்தப்போவது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்கள் முதலில் நன்றாக இருந்தாலும் போகப்போக போராடித்துவிடும். ஐபிஎல்லும் அந்த பட்டியலில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. இந்த சீசனில் ஒரு ஆட்டம் கூட சுவாரசியமாக இல்லை. என்னதான் கிறிஸ்கெய்ல் தாறுமாறாக அடித்தாலும் அதில் மனம் லயிக்க மறுக்கிறது. எண்ணற்ற போட்டிகள், ஒரே மாதிரியான டெம்ப்ளேட் ஆட்டங்கள் எல்லாம் ஆட்டங்களின் மீதுள்ள ஈடுபாட்டை குறைக்கவே செய்கின்றன. சும்மா பரபரப்புக்காக கிரிக்கெட் பார்க்காமல் வீரர்களின் ஆட்டநேர்த்தியை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஒரு ஏமாற்றமே.  இந்த ஐபிஎல்லில் சச்சின் அடித்த சதத்தில் மட்டுமே ஒரு நேர்த்தி, முழுமைத்தன்மை இருந்தது. மற்றவை எல்லாம் அவசரத்தில் கிண்டிய பிரைட் ரைஸ் மாதிரியே இருக்கிறது. 


காலிஸ், டிராவிட் உள்ளிட்ட ஸ்டைலிஷ் ஆட்டக்காரர்கள் கூட தங்களின் இயல்பை மாற்றி ஆடுவது, பத்மாசுப்ரமணியம் டப்பாங்குத்து ஆடுவது போல பரிதாபமாக உள்ளது. இந்த ஐ‌பி‌எல்லில் பிடித்த கேட்ச்களை விட, தவற விட்ட கேட்ச்கள் மிக அதிகம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. முன்பெல்லாம் கேட்ச் தவற விடுவது என்பது மிக பெரும் தவறாக கருதப்பட்டது. இப்போது அது இயல்பாக மாறிவிட்டது. ஒரு போட்டியில் குறைந்த பட்சம் ஐந்தில் இருந்து ஆறு கேட்ச்கள் தவறவிடப்படுகின்றன. இது இந்த விளையாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. அதே போல ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று, வீரர்களுக்கிடையே கேனைத்தனமாக குழாயடி சண்டை வேறு அவ்வப்போது அரங்கேறுகிறது.  இதில் பேர் பிளே அவார்ட் வேறு. அதை எல்லாம் எவன் மதிக்கிறான்? 


வீரர்கள்தான் இப்படி என்றால் அம்பயர்கள் இன்னும் மோசம். முன்தினம் அடித்த சரக்கு மப்பு இறங்குவதற்குள், தொப்பியை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள். சிறு குழந்தை கூட சொல்லி விடும் விஷயத்தை வாக்கி டாக்கி மூலம் கேட்டு அறிகிறார்கள். பேசாமல் களத்தில் அம்பயர்களை நீக்கி விட்டு தர்ட் அம்பயரை மட்டும் பயன்படுத்தலாம் போலிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மனம்போன போக்கில், எல்‌பிடபில்யு, வைட் எல்லாம் கொடுக்கிறார்கள். இப்படியே போனால், கிரிக்கெட் என்பது WWE மாதிரி ஒரு நாடகமாக மாறிவிடும். அதற்காக ஐ‌பி‌எல் போன்ற ஆட்டங்களை தடை செய்யவேண்டும் என்று அர்த்தமில்லை. இவற்றை நெறிப்படுத்தினாலே போதுமனது. நான் ரசித்த ஒரு விஷயம், கில்கிறிஸ்ட் சதமடித்துவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி தலையை சிலுப்பியவுடன், பிரீதிஜிந்தா கண்கலங்கி உதடுகளை கடித்தாரே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். (இப்படித்தாண்டா ஐ‌பி‌எல் போணியாவுது...) 


இந்த பதிவில் தோழர்கள் ஸ்டைலில் காவி பயங்கரவாதம் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் எழுதுகிறேன். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

May 18, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 6


பகுதி 6 - கிரிக்கெட்டின் ஆதிக்கம். 1996 உலகக்கோப்பை தொடங்குபோது இருந்த உற்சாகம் அது முடியும்போது இல்லை. ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு குணம் உண்டு. மாபெரும் தோல்வி தந்த அதிர்ச்சியை ஒரு சிறு வெற்றி மீட்டெடுத்து விடும். அடுத்த சில வருடங்களுக்கு இந்திய அணி மாபெரும் வெற்றி என்று எதையும் பெறவில்லை என்றாலும், அவ்வப்போது பெற்ற சில வெற்றிகள் கிரிக்கெட் என் உள்ளத்தில் நிலைத்து வேரூன்ற காரணியாகிவிட்டன. 96 முதல் 99 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் வெறியனாகிப்போனேன்.உண்பது, பருகுவது, பேசுவது என்று எல்லாமே கிரிக்கெட்தான். நீளமாக எது கிடைத்தாலும் அது பேட். உள்ளங்கையில் அடங்கியது எல்லாம் பந்து. டப்பா, பேப்பர் உருண்டை, ஏன் சில சமயம் மக்கா சோள துண்டு கூட பந்தாகி இருக்கிறது. நடக்கும்போது வெறும்கையில் பந்து வீசிக்கொண்டோ அல்லாத மட்டையை வீசிக்கொண்டோதான் நடப்பேன். எந்த நாளிதழை பார்த்தாலும் முதலில் படிப்பது கிரிக்கெட் நியூஸ்தான். அப்போது ஏற்பட்ட பழக்கம், இப்போது எந்த நாளிதழை படித்தாலும் கடைசி பக்கத்தில் இருந்துதான் படிக்கிறேன். கிரிக்கெட் சம்பந்தமாக கிடைக்கும் தகவல்கள், படங்கள் ஆகியவற்றை திரட்டி இரண்டு போட்டோ ஆல்பங்கள் தயார் செய்தேன். அதற்கான படங்களை சில சமயம் விலைக்கு வாங்குவேன். பல சமயம் திருடுவேன். எங்கள் பள்ளி நூலகத்தில் ஸ்போர்ட்ஸ்டார் புத்தகம் இருக்கும். துல்லியமாக பல படங்கள் அதில் இருப்பதால் அதன் பக்கங்களை கிழித்து எடுத்து வந்து விடுவேன்.


அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் பற்றிய அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தேன். அப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் முதலிடத்தில் இருந்தார். அதிக சதமடித்தவர்கள் பட்டியலிலும் அவரே முதலிடத்தில் இருந்தார். அவர் அடித்திருந்தது 17 சதங்கள். அப்போது அந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது வியப்பாக இருக்கிறது. 1997 வாக்கில் (தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு தொடரில், ஜிம்பாப்வேக்கு எதிராக என்று நினைக்கிறேன்) அதை கடந்த சச்சின் அதன் பின் அதைவிட மூன்று மடங்கு சதங்கள் அடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.


1996 உலகக்கோப்பை ரணம் ஆறுவதற்கு முன் அடுத்தடுத்து இரண்டு தொடர்களில் இந்தியா விளையாடியது. ஒன்று சிங்கப்பூரில் நடந்த சிங்கர் டிராபி, மற்றொன்று ஷார்ஜாவில் நடந்த கொக்ககோலா கோப்பை. சிங்கர் டிராபியில் இலங்கையே முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்த தொடரில்தான் ஜெயசூர்யா 17 பந்துகளில் அரைசதமும், 48 பந்துகளில் சதமும் அடித்து சாதனை புரிந்தார். அதற்கு முன்னர் அந்த சாதனை அசார் வசம் இருந்தது.  பிற்காலத்தில் அப்ரிடி 37 பந்துகளில் சதமடித்து இதை முறியடித்தாலும், இன்னும் அரைசத சாதனை ஜெயசூர்யா வசமே உள்ளது. இந்தியா சார்பில் வேகமாக அரைசதம் அடித்த சாதனை அஜீத் அகார்கர் வசம் உள்ளது. அவர் அரைசதம் அடித்தது 21 பந்துகளில். தற்போது அதிவிரைவான இந்திய சதத்துக்கு சொந்தக்காரர் சேவாக். நியூசிலாந்துக்கு எதிராக 60 பந்துகளில் சதமடித்த அடியை வெட்டோரி வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார். மழை பெய்கிறது. இந்தியாவுக்கு கடின இலக்கு நிர்ணயிக்கிறார்கள். சேவாக் எளிய இலக்காக மாற்றுகிறார். மீண்டும் மழை. மீண்டும் கடின இலக்கு. மீண்டும் சேவாக் ஆட்டத்தை மாற்றுகிறார்.  "ஆட்டம் முடிந்ததும் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது." என்று சொன்னது சேவாக் அல்ல. வெட்டோரி.


1996 இல் ஷார்ஜாவில் நடந்த தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. முதன்முறையாக 300 ரன்களை கடந்தது இந்த தொடரில்தான். முதலில் சச்சினும் சித்துவும் 230 ரன்கள் சேர்க்க (அப்போது அதுதான் அதிக பாட்னார்ஷிப் ) பின்னால் வந்த ஜடேஜா மற்றும் அசார் பெங்களூருவை ஞாபகப்படுத்தினார்கள். பெங்களூருவில் வக்கார் யூனுசுக்கு விழுந்த அடி இந்த முறை அட்டா உர் ரஹ்மான் என்ற இளைஞருக்கு விழுந்தது. கொஞ்ச காலமே கிரிக்கெட் ஆடியவர். ஆள் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் மாதிரியே இருப்பார். பிற்காலத்தில் மேட்ச் பிக்சிங்கில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர். இந்த தொடரில் ஓரளவுக்கு நன்றாக ஆடினாலும், இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் மூன்று புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் விக்ரம் ரத்தோர், வைத்யா, மற்றும் ராகுல் டிராவிட். மூன்றுபேருமே அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் ராகுல் டிராவிட் தனது விடா முயற்சியாலும், திறமையாலும் இந்திய அணியின் கேப்டன் அந்தஸ்து வரை உயர்ந்தார். மற்ற இருவரும் காலப்போக்கில் காணாமல் போனார்கள். வைத்யா எங்கே இருக்கிறார் என்று தெரிய்வில்லை. விக்ரம் ரத்தோரை ஐ‌பி‌எல்லில் பஞ்சாப் அணியில் பார்த்தேன். டக் அவுட்டில் தாடிவைத்து அமர்ந்திருப்பார்.


ஷார்ஜாவுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அந்த போட்டிகள் அப்போது உருவாகி இருந்த புதிய சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பினார்கள். அதற்கு முன் அது பிரைம் ஸ்போர்ட்ஸ்ஆக இருந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பே சேனலாக மாறி விட்டதால் ஆட்டங்களை பார்க்க முடியாமல் போனது. நான் வெறி கொண்ட வேங்கையானேன். இந்த தொடரில் ஒரு பந்து கூட பார்க்க முடியாமல் போனது. இதில் புதிதாக வந்த கங்குலி என்ற ஒரு இளைஞன் மிக சிறப்பாக ஆடி முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்தான் என்று கேள்விபட்டேன். வெகு காலத்துக்கு கங்குலி முதலில் அணிக்கு வந்தது 1996தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் களமிறங்கி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடி இருக்கிறார் என்று அப்போது தெரியாது.


அது எங்கள் வீட்டில் கேபிள் டிவி வந்த சமயம். என் வீட்டு பெண்களின் சன்டிவி ஆசையும், எங்களது கிரிக்கெட் ஆசையும் கேபிள் கனெக்ஷன் கொடுக்க வைத்தது. அப்போதெல்லாம் கேபிள் டிவி கனேக்ஷன் என்பது மிகப்பெரிய பாவம். பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று நம்பினார்கள். பிரைம்ஸ்போர்ட்சில் கிரிக்கெட்டைவிட அதிகம் ஒளிபரப்பியது அப்போது WWF  ஆக இருந்து தற்போது WWE ஆகி உள்ள மல்யுத்தவிளையாட்டு. கிரிக்கெட் போலவே இதுவும் என் ரத்தத்தில் கலக்க தொடங்கியது.  இருந்த ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலும் கைவிட்டு போன சோகத்தில் தூர்தர்ஷனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆபத்பாந்தவனாக வந்தது ESPN என்னும் புதிய சேனல். இதில் இந்தியா அல்லாத பிற அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை அதிகம் ஒளிபரப்புவார்கள். முதலில் இது தனியாகத்தான் இருந்தது. 2002 வாக்கில்தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்தது. இந்திய வீரர்கள் அல்லாத பிற அணிகளின் வீரர்களும் என்னை கவரத்தொடங்கினார்கள். நிறைய வீரர்கள் ஒன்றிரண்டு தொடர்களில் சிறப்பாக ஆடுவார்கள் திடீரென காணாமல் போய் விடுவார்கள்.


ESPN சேனலில் நான் அதிகம் பார்த்தது ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளைத்தான். இதற்கிடையே இந்திய அணியில் அசாருக்கு எதிராக உருவாகி இருந்த அதிருப்தி காரணமாக கேப்டன் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்று கேள்வி எழுந்தது. ஜடேஜாவா, சச்சினா என்று பார்க்கையில் சச்சினே என்று அனைவருக்குமே தோன்றியதால் சச்சினே புதிய கேப்டன் ஆனார். 23 வயதில் மிகப்பெரிய பொறுப்புகளோடு இலங்கை சென்ற சச்சினுக்கு தோல்வியே கிடைத்தது. இந்த தொடரில் அவரைத்தவிர யாருமே சரியாக ஆடவில்லை. முதல் வெற்றியை பெற்றது இந்தியாவில் நடந்த டைட்டன் கோப்பை தொடரில்தான்.


இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்ற டைட்டன் கோப்பை இந்தியாவில் நடந்தது. தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கமே இருந்தது. இந்திய அணியினர் படு சொதப்பலாக ஆடினார். இடையில் கோல்கத்தாவை நினைவு படுத்தும் வகையில் ரசிகர்களின் தாக்குதல் வேறு நடந்தது. பின்னர் அசாருதீன் வந்து ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு வேண்டினார் .இத்தொடரில்  கங்குலி ஓரளவுக்கு ஆடினார். அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடிய விதம் என்னை அவருக்கு ரசிகனாக்கியது. தென்னாபிரிக்கா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இறுதிபோட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி. பெங்களூருவில் நடந்த அந்த ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. சின்னசாமி ஸ்டேடியத்தை என் மனம்கவர்ந்த ஸ்டேடியம் ஆக்கியதில் இந்த ஆட்டத்துக்கும் பங்கு உண்டு. தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை ஸ்ரீநாத், கும்ப்ளே என்ற இரு மண்ணின் மைந்தர்கள் மட்டையை விளாசி காப்பாற்றினார்கள். இந்த ஆட்டத்தை கும்ப்ளேவின் தாயார் உணர்ச்சி பொங்க பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது. இறுதிபோட்டியில் இந்தியாவின் சுழலுக்கு பணிந்தது தென்னாபிரிக்கா. சச்சின் கேப்டனாக முதல் கோப்பையை வென்றார்.

-தொடர்ந்து பேசுவோம்......

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

May 10, 2011

பணம் சம்பாதிக்கத்தான் கல்வியா?


நாள்தோறும் ஒரு நாள் விடாமல் ஐ‌பி‌எல் மேட்ச் ஓடுவதால் கிரிக்கெட் மீதே ஒரு வித வெறுப்பு உண்டாகிறதே? அதே போல, தொடர்ந்து கிரிக்கெட் பற்றியே எழுதி வருவதால் எனக்கே கூட ஒரு விட சலிப்பு உருவாகி விட்டது. அதற்காக கிரிக்கெட் தொடரை நிறுத்திவிடுவேன் என்று நினைக்காதீர்கள். ஒரு சின்ன பிரேக். இன்னும் இரண்டு பதிவுகள் கழித்து கிரிக்கெட்டை தொடருகிறேன். சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே சீசனில், ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன். அதே போல இன்னொரு பதிவை இப்போது வெளியிடுகிறேன். வர வர பிளஸ்டூ தேர்வு முடிவுகள் என்பது தேர்தல் முடிவுகள் மாதிரி மிகவும் பரபரப்பானதாக மாறிவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளிலும் இது முழு நேர செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது. முதலில் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முதலிடம் பிடித்த அந்த மாணவர்களின் மகிழ்ச்சியும், பெற்றோர் கண்களில் தெரிந்த பெருமிதமும், என்னையும் தொற்றிக்கொண்டது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 95 சதவீதம் பெற்று 26ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த மாவட்டமான விருதுநகர் மாவட்டம். விருதுநகர்காரனாக எனக்கு இது பெருமைதான்.  


இது ஒரு புறம் இருக்க, வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததில் ஒருவர் கூட தமிழில் பேசவில்லை. தான் படித்த பள்ளி, அதன் முதல்வர், ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோருக்கு நன்றி, என்று உணர்ச்சிப்பெருக்கில் அவர்கள் பேசியது எல்லாமே ஆங்கிலத்தில். ஒரு மனிதன் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டால் வெளிப்படுவது தாய்மொழிதான். அப்படியானால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மொழியாக புகட்டப்படுவது ஆங்கிலம்தானா? இது என் மனதில் தோன்றிய சிறிய வருத்தம்தான். இது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. அந்த குழந்தைகளை குறை சொல்லி என்ன பயன்? 


அதுசரி இந்த பிளஸ்டூ தேர்வுகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? ஒரு மாணவன் பதினொன்றாம் வகுப்பை பாதி முடித்துவிட்டாலே அவனை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. கேபிள் கட், விஷேச நிகழ்ச்சிகள் கட், டூர் கட், விளையாட்டு கட், அவனது நிம்மதி முழுவதும் கட். ரஷ்யா போன்ற நாடுகளில் எட்டு ஆண்டுகளுக்கு அடுத்து நடக்கபோகும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 4 வயதில் இருந்தே குழந்தைகளை தேர்ந்தெடுத்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுப்பார்களாம். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே. அதே போல அடுத்த ஒண்ணறை ஆண்டுகள் ஒரு மாணவன் மனதில் வெறும் தேர்வுகளின் நினைவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. 


"அடப்போப்பா, இந்த ஒண்ணறை ஆண்டுகள் கொஞ்சம் கஷ்டப்பட்டால், வாழ்க்கை முழுவதும் அவன் கஷ்டப்படவேண்டியதே இல்லை. பெரிய காலேஜில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இருந்தால் உருப்படாமல் போக வேண்டியதுதான்." இதுதான் இன்றைய பெற்றோர்கள், மற்றும் பெரும்பாலான ஆசிரியர்களின் வாதம். ஆக பணம் இருந்தால், நிம்மதியான வாழ்க்கை கிடைத்துவிடும் என்ற முட்டாள்தனமான நமது எண்ணத்தை, நமது பிள்ளைகளிடமும் நாம் திணிக்கிறோம். 


பிளஸ்டூவில் முண்டியடித்து ஒரு நல்ல மதிப்பெண் பெற்று, பெரிய கல்லூரியில் இடம் பிடித்தபின், படிக்கமுடியாமல் தவித்து, மனதளவில் கூனிக்குறுகிப்போகும் மாணவர்களைப்பற்றி நாம் கவலைப்பட்டதுண்டா? "என் மகன் பிளஸ்டூவில் நல்ல மார்க்தான். காலேஜில் ஏன் சரியா படிக்க மாட்டேங்கிறான் என்று தெரியவில்லை." என்று கல்லூரிக்கு வந்து புலம்பும் பெற்றோர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை. செக்கு மாட்டை வண்டியில் பூட்டினால், வண்டி ஊர் போய் சேராது. பன்னிரண்டாம் வகுப்பில் நாம் செய்து கொண்டிருப்பது, நமது கன்றுக்குட்டிகளை செக்கு மாடாக ஆக்குவதுதான். மேலும் "உலகத்திலேயே சிறந்த இடம் முதல் இடம்தான். முதலிடம் பிடிப்பவனே திறமைசாலி."என்று ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சிறு வயதில் இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள்.  நாம் குழந்தையை ஊக்கப்படுத்த இந்த மாதிரி சொல்வதில் தவறில்லை. ஆனால் முதலிடம் பிடிக்காதவன் எல்லாம் இந்த உலகிலேயே வாழ தகுதியற்றவன் என்று சொல்லி சொல்லி, குழந்தைகளை வெறியேற்றி மன நோயாளிகளாக்கி விடுகிறோம். 


இதனால் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தோல்விகளை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. கல்லூரி இறுதி ஆண்டில், கேம்பஸ் இண்டர்வியூவில் முதல் கம்பெனியில் தோல்வி அடைந்தவுடன் தன் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதைப்போல புலம்பிய மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். இதன் காரணம், பள்ளியில் இருந்தே அவர்களுக்கு வெற்றி என்ற மாயை மட்டுமே காட்டப்பட்டு வந்திருக்கிறது. நல்ல துடிப்புள்ள, அறிவுள்ள பல மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை இந்த மாதிரி குறுகிய ஒரு வட்டத்துக்குள் வீணடிப்பதற்கு பெற்றோர் ஆகிய நாமும் ஒரு காரணம். கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் இந்த உலகம் ஒரே மாதிரியான பிரச்சனைகளைத்தான் அளிக்கிறது. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். உங்களுடன் படித்த அத்தனை நல்ல படிப்பாளிகளும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்களா? அத்தனை மக்கு மாணவர்களும் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்களா? இன்னும் உற்று கவனித்தால், சரியாக படிக்காதவர்களே அதிக உயரத்துக்கு சென்றிருப்பார்கள். படிப்பாளிகள் தங்களை அரசு உத்தியோகத்திலோ, அல்லது ஏதாவது ஒரு கம்பெனியிலோ நிரந்தர பணியில் அமர்த்தி கொண்டு, அதுதான் வாழ்வின் வெற்றி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு, தன் பிள்ளைகளுக்கும் அதை புகட்டிக்கொண்டிருப்பார்கள். 


நடிகர் சிவக்குமார் சொன்னது போல, தற்கால கல்வி என்பது நிறைய பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் ஒழுக்கத்தையோ, நேர்மையையோ, வாழும் முறையையோ கற்றுக்கொடுக்கவில்லை. இது எவ்வளவு உண்மை. இப்போது பெற்றோர்களும் இதை கற்றுக்கொடுக்க தவறி விட்டனர். நம் குழந்தை எக்கேடு கேட்டாலும் நமக்கு கவலை இல்லை. அவன் ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். என்ற எண்ணம்தான் பெரும்பாலான பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது. நண்பர்களே, நம் பிள்ளைகள் சமூகத்தில் பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வித்தையை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. ஒழுக்கத்தையும், நேர்மையையும், வாழ்க்கையின் உன்னதத்தையும் கற்றுக்கொடுங்கள். பெரிய ஆளாய் வரும் வித்தையை அவர்களே கற்றுக்கொள்வார்கள். அப்படியே கொஞ்சம் நம் தாய்மொழியையும் கற்றுக்கொடுங்கள். தமிழ் எழுதப்படிக்க தெரிந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

May 5, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 5


பகுதி 5 - உலகக்கோப்பை காலிறுதி மகிழ்ச்சி, அரையிறுதி சோகம்.... 

ஒரு நாலு பதிவில் இந்த தொடர் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நினைவுகள் என்பது கிளற கிளற வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் சில பதிவுகளில் முடித்துவிட முயற்சி செய்கிறேன். 1996 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போது உள்ள மாதிரி பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவாக நடக்காது. ஆகவே நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆட்டங்கள் இறுதி நிலையை எட்டி இருக்கும். பள்ளி விட்டவுடன் அடித்து பிடித்து ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தால், கரண்ட் இருக்காது. செம கடுப்பாக வரும். இதனாலேயே பெரும்பாலான லீக் ஆட்டங்களை பார்க்க முடியாமல் போய் விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக காலிறுதியில் இருந்து பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவாக அமைந்தது. 


ஒவ்வொரு முறையும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அந்த உலகக்கோப்பையில் மிக பிரபலமாக அமைந்துவிடும். இப்போதும் அப்படித்தான். பெங்களூருவில் நடந்த அந்த ஆட்டத்துக்கு , எக்கச்சக்க கூட்டம், வரலாறு காணாத பாதுகாப்பு. முதலில் ஆடிய இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டையை கிளப்பி விட்டது. ஆரம்பத்தில் சித்துவும், கடைசி மூன்று ஓவர்களில் ஜடேஜா விளாசியதில் ஸ்கோர் 288ஐ தொட்டது. இந்த ஆட்டத்தில் வக்கார் யுனுஸ் அசாரை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சேர்ந்தார். இவரும், சச்சினும் ஒரே போட்டியில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நிலை காரணத்தால் இந்த ஆட்டத்தில் அக்ரம் ஆடவில்லை. 
பிறகு ஆடத்தொடங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவை சுளுக்கெடுத்தார்கள். ஒரு கட்டத்தில் 12 ஓவருக்கு 115 என்ற நிலையில் அடுத்தடுத்து அன்வரையும், சோகைலையும் இழந்து தடுமாற தொடங்கியது பாகிஸ்தான். இந்த தடுமாற்றம் வெங்கடேஷ் பிரசாத்துக்கு சாதகமாக, மளமளவென விக்கெட்டுகளை சரித்தார். ஜாவிட் மியாண்டத் ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. இந்த ஆட்டம் தன்னுடைய கடைசி ஆட்டமாகி விடுமோ என்று மியாண்டத் பயந்தமாதிரியே நடந்து விட்டது. ஆம், அவர் ரன் அவுட் ஆக, மிச்ச சொச்ச விக்கெட்டுகளை கும்ப்ளே வாரினார். உலகக்கோப்பையில் இந்தியாவுடன் ஜெயித்ததில்லை என்ற குறை நிறைவேறாமேலே போனது. இன்னும் இது ஒரு குறையாகத்தான் உள்ளது. இன்றுவரை பாகிஸ்தான் இந்தியாவுடன் உலககோப்பை போட்டிகளில் வென்றதில்லை. 
மறக்கமுடியாத தருணம் 
இந்த காலிறுதியில் சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது பிரசாத் வீசிய பந்தை ஆப்சைடில் விளாசிய சோகைல், பிரசாத்தை பார்த்து, "அங்கே பார். அங்கே ஆள் போடு. இல்லாவிட்டால் மறுபடி அடிப்பேன்." என்பது போல தெனாவட்டாக சொல்ல, பிரசாத் மட்டுமல்ல ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே அடக்கமுடியாத கோபத்துக்கு ஆளானார்கள். அடுத்த பந்தை பிரசாத் வீச, சோகைல் அதை ஆப்சைடில் விளாச முயல, பந்து ஸ்டம்பை தரையில் சாய்த்தது. ஒட்டுமொத்த தேசமே ஆர்ப்பரித்தது. இப்போது பார்க்கும்போது கூட மெய் சிலிர்க்கும் ஒரு நிகழ்வு இது. லைவாக பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
இப்போது மனதில் மறுபடியும் நம்பிக்கை பூ பூத்தது."எப்படியும் கோப்பையை வென்று விடலாம்.", நானே சொல்லிக்கொண்டேன். அரையிறுதி போட்டிகள் தொடங்கின. ஓரளவுக்கு சம பலம் மிக்க ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அம்ப்ரோஸ் மூலம் காத்திருந்தது. நம்பிக்கை நட்சத்திரம் மார்க்வாக் டக் அடிக்க, 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் எனக்கு பிடித்த ஒரு வீரர் என்றால் அவர் மைக்கேல் பெவன் தான். அணி மூழ்கும் நிலையில் இருந்தாலும், ஒரு சிறு துரும்பு கிடைத்தாள் அதை பிட்த்துக்கொண்டு, கப்பலையே கரைசேர்த்து விடும் வீரர். கடைசி வரை அவர் அவுட் ஆகமாட்டார். வெகு காலத்துக்கு அவரது ஆவரேஜ் 74இல் இருந்தது. பின்னர் 56க்கு வந்தது.  அவரும் ஸ்டூவர்ட் லாவும் சேர்ந்து மெதுவாக ஆஸ்திரேலியாவை மீட்டனர். இருந்தாலும் அவர்களால் 207 மட்டுமே எடுக்க முடிந்த்து. அந்த நிலையில் அதுவே பெரிய விஷயம். 
போல்ட் ஆன வால்ஸ், மகிழ்ச்சியில் பிளெமிங் 
பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கை மிக்க ஆட்டத்தால் உருக்குலைந்தது. ஒரு புறம் கேப்டன் ரிச்சர்ட்சன் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் நம்ம ஷேன் வார்ன் சொல்லி சொல்லி விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் 4 பந்துகளில் 6 ரன் தேவை. இருப்பது ஒரு விக்கெட். மறுபுறம் ரிச்சர்ட்சன் தவிப்புடன் நிற்க, வால்ஸ் ஒரு சிங்கிள் எடுத்திருந்தால் கூட ரிச்சர்ட்சன் சிக்சர் அடித்து ஜெயிக்க வைத்திருப்பார், ஆனால் வால்ஸ் பவுண்டரி அடிக்க முயல, ஸ்டம்ப் எகிறியது. வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. ரிச்சர்ட்சன் விடைபெற்றார்.  இந்த உலகக்கோப்பையில்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியையே ஒற்றை ஆளாக முதுகில் சுமந்த ஒரு வீரர் அறிமுகமானார். அவர் பெயர் சந்தர்பால். இந்த ஆட்டத்தின் நடுவில் ரிச்சர்ட்சன் பந்தை முட்டி போட்டு ஸ்வீப் செய்ய, அது பறந்து போய் லெக் அம்பயரின் காதை பதம்பார்த்தது. அந்த பந்து மட்டும் பவுண்டரி சென்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கும் என்று வெகுநாட்கள் புலம்பி கொண்டிருந்தேன்.  
சச்சின் ஸ்டம்பிங்கும், ரசிகர்கள் வன்முறையும் 
அடுத்த அரையிறுதி. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் மறக்க விரும்பும், ஆனால் மறக்க முடியாத ஆட்டம். இந்த போட்டி தொடங்கியபோது நான் பள்ளியில் இருந்தேன். என்னுடைய ஆசிரியர் ரேடியோவில் ஸ்கோர் கேட்டு எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட். அதுவும் ஜெயாசூர்யா 1 ரன்னில் அவுட். 85 ரன்களுக்குள் 4 விக்கெட் அரவிந்தாவும் அவுட். என் கண்ணில் உலகக்கோப்பை தெரிந்தது. ஆனால் ஸ்லோ பாய்சன்கள் இருவரும் நின்று ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டினர். அதிலும் மகனமா அடிபட்டு நடக்கமுடியாத நிலையிலும் ஆடி, கடைசியில் வெளியேறினார்.
கண்ணீர் காம்ப்ளி 
"ஜெயிக்க 251 ரன் தேவை. ஆட்டம் நடப்பது அசார் கோட்டையான கொல்கத்தாவில். வாங்கிட்டோம்டா உலககோப்பை!!" என்று துள்ளினேன். எல்லாம் சரியாகபோனது சச்சின் அவுட் ஆகும் வரை. அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 98/2. ஜெயசூர்யா ஓவரில் சச்சின் எக்குத்தப்பாக ஸ்டம்பிங் ஆக, ஆட்டம் மாறியது. கொஞ்ச நேரம் கழித்து யாராவது ஸ்கோர் கேட்டிருந்தால் மயங்கி கீழே விழுந்திருப்பார்கள். ஸ்கோர் 120/8. ஏற்கனவே கொல்கத்தா ரசிகர்கள் கோபக்காரர்கள். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உள்ளே எறிய, பாதுகாப்பு கருதி ஆட்டம் கைவிடப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கபட்டது. ஒரு பக்கம் நம்பிக்கையோடு ஆடிய வினோத்காம்ப்ளி அழுதபடியே வெளியேறினார். அந்த நேரத்தில் அது மனதில் ஏதோ செய்தது. பின்னர் நாங்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு வைத்த பட்டப்பெயர் "கண்ணீர் காம்ப்ளி". என்னுடைய உலகக்கோப்பை கனவு மூன்றாண்டுகளுக்கு தள்ளி போடப்பட்டது. இறுதி போட்டி லாகூரில் வைத்து நடப்பதால், "இங்கே வந்து ஆடினால் கொன்று விடுவோம்" என்று மிரட்டல் வந்ததால் இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று கூட அப்போது சொல்லப்பட்டது. 
பிறகு இறுதிபோட்டி பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. இறுதிபோட்டி கிட்டத்தட்ட ஒருபக்க சார்பாகவே நடந்தது. ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர், நிலைத்து ஆடி 247 ரன்கள் எட்ட உதவி செய்தார். அவருடன் இணைந்து ஆடிய ஒரு புதுமுக இளைஞன், ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டான். அந்த இளைஞன், இந்த உலகக்கோப்பைக்கு பின்னர் சிறிது காலம் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், மீண்டும் இணைந்து உலகப்புகழ் பெற்றான். அந்த இளைஞன் பெயர் ரிக்கி பாண்டிங். அதே போல இந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனமும் ஷேன் வார்ன் பக்கமே இருக்க, யாருமே சரியாக கவனிக்காத ஒரு புதிய பவுலர் மெதுமெதுவாக உலகத்தில் இருக்கும் அத்தனை பேட்ஸ்மேன்களையும் மிரட்டும் அளவிற்கு வந்தான். அவன்தான் கிளென் மெக்ராத்.
இரண்டாவதாக ஆடிய இலங்கை எளிதாக வென்றது. டி சில்வா அபாரமாக ஆடி சதமடித்தார். உலகக்கோப்பையை வெல்ல முழு தகுதியான அணி இலங்கை என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதன் பின்னர்தான், இலங்கையில் பல நம்பிக்கை நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஒருவர் வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ். மற்றொருவர் ஷேன்வார்னுக்கு சவால் விட்டு அதை ஜெயித்து காட்டிய முத்தையா முரளீதரன். 
கிரிக்கெட்டின் ஆதிக்கம்.... அடுத்த பதிவில்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
முழுவதும் படிக்க >>

May 3, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 4
பகுதி 4 - இலங்கையின் எழுச்சியும், காம்ப்ளியின் கண்ணீரும்

ஹெய்ன்ஸ் மற்றும் கிரீனிட்ஜ 

இந்திய அணியில் உள்ள நல்ல வீரர்கள், குறிப்பாக சச்சினின் அசுர வளர்ச்சி, மேலும் ஆட்டங்கள் பெரும்பாலும் இந்தியாவில் நடப்பதால், உள்ளூரில் நம்மை யாரும் அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கை ஆகியவை என்னுள், "இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்." என்று அடித்துக்கூறின. இந்த முறை மொத்தம் 12 அணிகள். அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா மற்றும் ஹாலந்து ஆகிய மூன்று அணிகள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்றே அப்போதுதான் தெரியும். கோலாகலமாக தொடங்கியது 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.


டீன் ஜோன்ஸ்

கிரிக்கெட் ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் விதமாக ஒவ்வொரு அணியிலும் இருந்த ஜாம்பவான் ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றுவிட்டார்கள். குறிப்பாக, கபில்தேவ், மார்டின் குரோவ், டெஸ்மண்ட் ஹெயின்ஸ், கிரஹாம் கூச், டீன் ஜோன்ஸ், ஆலன் பார்டர் என்று பெரிய வீரர்கள் எல்லாம் வரிசையாக ஓய்வு பெற்றார்கள். பாகிஸ்தானில் மட்டும் இன்னும் சீற்றம் குறையாத சிங்கமாக ஜாவித் மியாண்டத் ஆடிக்கொண்டிருந்தார்.

இந்திய அணிக்கு முதல் சுற்றில் எந்த வித கடினமும் இருக்கவில்லை. காலிறுதி ஆட்டத்துக்கு 12 அணிகளில் எட்டு அணிகள் அதாவது ஒவ்வொரு 6 அணிகள் கொண்ட பிரிவில் இருந்தும் 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்ப்டும் என்பதால் இரண்டு அணிகளை வீழ்த்திவிட்டாலே பிரச்சனை இல்லை. இலகுவாக இந்தியா முன்னேறியது. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு ஆட்டங்கள் என் உலகக்கோப்பை கனவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.


அந்த ஆட்டங்கள் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரானவை. "இந்தியாவின் பலவீனம் என்ன?", என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும், "பவுலிங் மற்றும் பீல்டிங். " என்று. இந்த இரு அணிகளையும் இந்திய வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இலங்கைக்குக்கு எதிராக மனோஜ் பிரபாகர் ஓடி வராமல், ஸ்பின் எல்லாம் போட்டு பார்த்தார் (அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்). ஒன்றும் வேலைக்காகவில்லை.   இலங்கைக்கு எதிராக இமாலய ஸ்கோரான 271 எடுத்தும் கூட இந்தியாவால் ஜெயிக்க முடியவில்லை. இருந்தாலும் மற்ற மூன்று அணிகளுடன் ஜெயித்து (கென்யா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட்இண்டீஸ்) காலிறுதிக்கு முன்னேறிவிட்டோம்.


லீக் சுற்றுகளில் நிறைய சுவாரசியங்கள் நடந்தன. இலங்கை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை சென்று விளையாடப்போவதில்லை என்று புறக்கணித்ததால் அவற்றிலும் இலங்கையே வென்றது என்று அறிவிக்கப்பட்டது. விளையாடி இருந்தாலும் இலங்கைதான் வென்றிருக்கும் என்பது என் கருத்து. அதே போல நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து முதன் முறையாக Greatest Upset  ஒரு ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. இரண்டு முறை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி, புதிய அணியான கென்யாவிடம் படுதோல்வி அடைந்தது. 93 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. என்னை பொறுத்தவரை இந்த தோல்விதான் வெஸ்ட் இண்டீசின் சரிவின் ஆரம்பம். எந்த நேரத்தில் இந்த தோல்வி வந்ததோ, இன்றுவரை அவர்களால் மீண்டு வர முடியவில்லை. 

கென்யாவுடன் சரித்திர தோல்வி 

முழுக்க முழுக்க சச்சினின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு உலகக்கோப்பை இது. இந்தியாவின் பெரும்பான்மையான ஸ்கோரிங்கை சச்சினே பார்த்துக்கொண்டார். எல்லா ஆட்டங்களிலும் சச்சின் ரன்களை குவித்து தள்ளினார். ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டும் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹீத் ஸ்ட்ரீக் பந்தில் இரண்டு ஸ்டம்புகள் தெறித்து விழுந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கென்யாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் எட்டவே முடியாத ஸ்கோராக 398 என்ற இலக்கை நிர்ணயித்து எல்லோர் வாயையும் பிளக்க வைத்தது இலங்கை. அப்போதெல்லாம் 300 என்பதே கனவுதான். "அதெல்லாம் சும்மா. கண்டி மிக சின்ன கிரவுண்ட். அங்கே விளையாடி இருந்தால் இந்தியா கூட 400 அடிக்கும்." என்று சின்ன பிள்ளைதானமாக வாதம் செய்திருக்கிறேன்.
ஹன்சி குரோனியே 
வழக்கம்போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதே நேரம் அச்சுறுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா ஆடிக்கொண்டிருந்தது. ஹன்சி குரோனியே தலைமையில், கொஞ்சமும் மன உறுதி குறையாத ஒரு அணி உருவாகி இருந்தது. டொனால்ட், மேத்யூஸ், டிவில்லியர்ஸ் என்று கதிகலக்கும் வேகப்பந்து வீச்சு, மேலும் மேக்மிலான் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள், பொல்லாக், காலிஸ் என்று புதுமுக வீரர்கள் என்று 1992 அணியை விட பலமாக இருந்தது.  கேரி கிறிஸ்டன் 188 ரன்கள் எடுத்து, ஒரு ரன்னில் விவியன் ரிச்சர்ட்சின் அப்போதைய சாதனையான 189ரன்னை முறியடிக்க தவறினார். பிற்பாடுதான் அன்வர் 194 அடித்தது எல்லாம். என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக நல்ல வலுவான அணியாக இருந்தது தென்னாப்பிரிக்காதான்.


தென்னாபிரிக்க அணியில் எல்லோரையும் கவர்ந்த பவுலர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். விக்கெட் வீழ்த்துவதிலோ, கட்டுப்படுத்துவதிலோ அவர் புகழ்பெறவில்லை. மாறாக அவரது வினோதமான பவுலிங் முறையில் அனைவரையும் கவர்ந்தார்.  அவர் பெயர் பால் ஆடம்ஸ். மெதுவாக ஓடி வந்து ஒரு ஜம்ப் அடித்து உடலை பல்டி அடிப்பது போல சுழற்றி கையை தலைக்கு மேலே கொண்டு சென்று அவர் பந்து வீசுவதே பார்க்கவே வினோதமாக இருக்கும்.


1995 இல் இருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு எல்லா அணிகளும் பயந்தது யாரைப்பார்த்து என்றால், ஆஸ்திரேலியாவை பார்த்து அல்ல. இலங்கையை பார்த்து. அப்போதெல்லாம் இந்திய இலங்கை ஆட்டம் என்றால் எல்லோரும் அடித்து சொல்வார்கள் இலங்கைதான் வெல்லும் என்று. இந்தியாவில் சச்சினை விட்டால் அடிக்க ஆளில்லை. இலங்கையிலோ தர்மசேனா வரை அடிப்பார்கள். அடுத்திருப்பது முரளி மட்டும்தான். இங்கே கும்ப்ளேவை நம்பிதான் பவுலிங்கே. அங்கே மகனாமா, கலுவிதரானா தவிர அனைவருமே பவுலர்கள். இப்படி ஒரு அணி இலங்கைக்கு இனி அமையுமா? என்றால் சந்தேகமே. 1992 உலகக்கோப்பை வரை கென்யா மாதிரி ஒரு கத்துக்குட்டி அணியாக இருந்த இலங்கை 1995 முதல் அசுர வளர்ச்சி பெற்றது. இதில் பயிற்சியாளர் வாட்மோர் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2003க்கு அப்புறம் வங்காளதேசத்தின் பயிற்சியாளர் ஆன பின்புதான் அவர்களின் ஆட்டத்திலும் மாற்றங்கள் வந்தன.

டி சில்வா என்ற எமதர்மன் 

ஜெயசூர்யா என்று ஒரு பவுலர் இருக்கிறார் என்று சொன்னால் 1996க்கு முன்பு யாருக்குமே தெரியாது. 1996க்கு பின் அவரை தெரியாத ஆளே கிடையாது. ஒரு அணியின் மன உறுதியை குலைத்துவிட்டால் அவர்களை வென்று விடலாம் என்று திட்டமிட்டு ஜெயசூர்யாவை அஸ்திரமாக பயன்படுத்தியவர் ரணதுங்கா. 1996 முதல் 1998 வரை அவரது கேரியரின் உச்சம் என்று சொல்லலாம். சச்சின் அடிப்பது தர்மஅடி என்றால் ஜெயசூர்யா அடித்தது மரண அடி. எதிரணி எழுந்திருக்கவே முடியாத அடி. ஒரு காலத்தில் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்திருக்கிறார் என்று சின்னாபிள்ளைதானமாக எண்ணியதுண்டு. அதே போல அரவிந்தாவை பார்த்தாலே எமதர்மனின் ஞாபகம் வந்து தொலைக்கும். அவர்கள் இருவரும் அதிரடி என்றால், மகனாமாவும், ரணதுங்காவும் ஸ்லோ பாய்சன்கள். நிலையாய் நின்றே கொன்று விடுவார்கள். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு இலங்கை வீரர்களை பார்த்தாலும் பற்றிக்கொண்டு வரும். "இவர்கள் எல்லாம் எப்போது ரிட்டயர் ஆவார்கள்?" என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்ததுண்டு.

நாக் அவுட் ராசி 
1996 உலகக்கோப்பை முதல் சுற்றுகள் முடிந்து காலிறுதியில் வந்து நின்றது. வழக்கத்துக்கு மாறாக எல்லா ஆட்டங்களுமே சுவாரசியமானவை. இங்கிலாந்து எடுத்த 235 ரன்னை ஜெயசூர்யா என்ற சூறாவளியின் உதவியோடு 40 ஓவரிலேய எடுத்து முன்னேறியது இலங்கை. மறுபக்கம் நாக்அவுட் சனி தொடர்ந்து வர இலங்கைக்கு சவாலாக எண்ணிய தென்னாபிரிக்கா வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக பரிதாபமாக தோற்றது. லாரா விளாசிய சதத்தை அவரால் மறக்க முடியாது.  சென்னையில் நடந்த ஆட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்த நியூசி அணியை காப்பாற்ற தன் வாழ்நாளில் சிறந்த சதத்தை அடித்து ஹாரிஸ் முயற்சி செய்ய, ஆனால் மார்க்வாக்கின் சதம் அதை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றிய முழு கட்டுரை அப்போது குமுததில் வெளிவந்து மிக புகழ் பெற்றது. அடுத்த ஆட்டத்தை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது.


பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மீது தனி பாசத்தை ஏற்படுத்தியது அந்த ஆட்டம். ஒவ்வொரு கணமும் அனுபவித்து பார்த்த ஆட்டம். அது இந்திய் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த 1996 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம்.

ரொம்ப நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் பேசலாம்.
இந்தியா காலிறுதியும், அரையிறுதியும்... அடுத்த பதிவில்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...