ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என் மனதில் 1992 விழுந்த விதை அறுவடையான அந்த தருணத்தில் என் கிரிக்கெட் அனுபவங்களை எல்லாம் ஒன்றிரண்டு பதிவுகளில் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலில் இந்த தொடரை எழுத தொடங்கினேன். ஆனால் நீண்ட தொடராக இது அமைந்துவிட்டது. எனக்கு தொடர் எழுதவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை. அதிலும் அண்ணன் ஹாலிவுட் பாலா அவர்கள் எழுதிய பிக்ஸார் தொடரை பார்த்தவுடன் இன்னும் ஆசை அதிகமானது. ஆனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை ஆகிவிடக்கூடாது என்பதாலேயே வெகு நாட்களாக என்ன எழுதுவது என்று குழம்பி கொண்டிருந்தேன். இந்த தொடரை கூட முதலில் இப்படி எழுதவேண்டும் என்ற திட்டமில்லை. ஒரு சில நண்பர்கள் இதை புத்தக வடிவில் கொண்டு வரலாம் என்று கூறினார்கள். ஆனால் அந்த அளவுக்கு இந்த தொடர் தரமானதா என்று தெரியவில்லை. மேலும் இதை மெருகேற்ற இன்னும் கடுமையான அளவு உழைக்கவேண்டும். படங்களுக்கு, காப்பிரைட் பிரச்சனையும் வரும். எனவே மின் புத்தகமாக ஒரே வீச்சில் எளிதாக படிக்கும் விதமாக வேண்டுமானால் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை, ஒரு சரித்திர தோல்வி அடைந்த தருணத்தில் எழுதுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இதெல்லாம் எனக்கு புதிதில்லை. இது போல பல தோல்விகளை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இப்போது அப்படி இல்லை.
டிஸ்க்: இது மிக நீளமான பதிவு....
சரித்திரம் திரும்புகிறது..,
இந்த முறை உலககோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா, பாகிஸ்தான், இலங்கையுடன் சேர்த்து முதல்முறையாக பங்களாதேசும் பெற்றது. ஆனால் 2009இல் இலங்கை வீரர்கள் பயணித்த பேருந்தில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் நீக்கப்பட்டு, லாகூரில் அமையவிருந்த உலகக்கோப்பை தலைமை அலுவலகம், மும்பைக்கு மாற்றப்பட்டது. முந்தைய உலகக்கோப்பைகளைப்போல் இல்லாமல் 1996ஆம் ஆண்டைப்போல இரண்டே பிரிவுகள், ஒவ்வொன்றிலும் தலா ஏழு அணிகள். மேலும் சூப்பர் சிக்ஸ் அல்லது சூப்பர் எயிட் சுற்றுக்களாக இல்லாமல், காலிறுதி போட்டிகள் என்று சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் . இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றது. இதே பிரிவில் பலம் வாய்ந்த அணிகளாக தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து மட்டுமே இருந்தன. மற்றவை எல்லாம் சிறிய அணிகள்தான். ஆனால் 2007ஆம் ஆண்டு அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து பீதியை கிளப்பியது.
தொடக்க விழா பங்களாதேசில் நடைபெற்றது. வித்தியாசமாக ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் சைக்கிள் ரிக்சாக்களில் அழைத்து வரப்பட்டார்கள். இந்த தொடரில் பங்களாதேஷ் அணி தான் ஆடிய எல்லா போட்டிகளையுமே சொந்த மண்ணிலேயே ஆடியது. அதே போல இந்திய அணி ஒரு போட்டியும், இலங்கை இரண்டு போட்டிகள் மட்டும் அந்நிய மண்ணில் ஆடின . மற்ற எல்லா போட்டிகளுமே சொந்த மண்ணிலேயே ஆடின. இந்த முறை ஒளிபரப்பு உரிமை இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், மிக தரமாக போட்டிகளை ஒளிபரப்பினார்கள். அதிக விளம்பரங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். உலகக்கோப்பைக்கென சங்கர்-எசன்-லாய் குழுவினர் இசையமைத்து பாடிய பாடல் இந்தியா முழுக்க புகழ் பெற்றது.
இந்திய அணிக்கு முதல் போட்டி பங்களாதேசுடன். இதற்கு முந்தைய ஆண்டுகளில் பெற்ற அதிர்ச்சி தோல்விகள் காரணமாகவோ என்னவோ முதல் அடியே மரணஅடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியா களமிறங்கியது. அடியை ஆரம்பித்து வைத்தவர் அதிரடி மன்னன் சேவாக். இவர் எடுத்தது 175 ரன்கள். இவரோடு ஜோடி சேர்ந்து தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற விராட் கோஹ்லி, முதல் போட்டியிலேயே சதமடித்தார். இந்திய அணி எடுத்தது 370 ரன்கள். பின்னர் ஆடத்தொடங்கிய பங்களாதேஷ், நிதானமாக ஆடி 283 எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றாலும், இந்திய பந்துவீச்சு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. ஜாகீர் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். ஸ்ரீசாந்த் 5 ஓவரில் ஐம்பது ரன்களை வாரி வழங்கினார். இதற்கு அடுத்ததாக, மிக முக்கியமான போட்டியாக கருத்தப்பட்ட இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு உலகக்கோப்பை வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டது. ஷேன் வார்னே மட்டும், "இந்த போட்டி டிராவில் முடியும்." என்று கூறி ஆச்சர்ய பட வைத்தார்.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் விளாசி தள்ளினார்கள். இங்கிலாந்தின் நம்பிக்கை வீரராக இருந்த ஆண்டர்சன் 91 ரன்களை விட்டுக்கொடுத்தார். சச்சின் சதமடித்து, மறுபடியும் தனக்கு வயதாகி விடவில்லை என்று நிரூபித்தார். இந்தியா எடுத்தது 338. இதை துரத்திய இங்கிலாந்து வீரர்கள் பதிலுக்கு இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தனர். கேப்டன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ரன் குவித்தார். கடைசிநேரத்தில் டென்சனை கிளப்பி 338 ரன் எடுக்க, ஷேன் வார்னே சொன்னது போலவே ஆட்டம் டிரா ஆனது. இந்திய பவுலிங் மிக மோசமாக இருந்ததற்கு இது ஒரு சான்று. இந்த போட்டியில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அடுத்தடுத்த சுற்றுகளில் சவால் விடும் என்று தெரிந்து போனது. இதற்கு அடுத்த படியாக அயர்லாந்து, மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியது இந்தியா. அயர்லாந்துடன் ஆடிய ஆட்டத்தில் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. "அய்யய்யோ பேட்டிங்கை நம்பித்தானே இருந்தோம். அதுவும் மோசமடைந்து வருகிறதே?" என்ற கவலை தொற்றிக்கொண்டது.
அடுத்த போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. உலகக்கோப்பைக்கு முந்தைய தொடரில் வாங்கிய அடிக்கு பழிவாங்கும் விதமாக இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள். சச்சின் சதமடிக்க, 40 ஓவர்களில் இந்திய அணி 263 குவித்தது. ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்களின் கேவலமான ஆட்டத்தால் 296க்குள் சுருண்டது. இந்திய பவுலர்களால் தென்னாபிரிக்க வீரர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. எளிதில் வென்றார்கள். "இந்திய அணி 350 ரன்னுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் போலிருக்கிறது. பவுலிங் அவ்வளவு கேவலமாக இருக்கிறது." என்று குறைபட்டுக் கொண்டோம். காலிறுதிக்கு தகுதி பெரும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா. காலிறுதிப்போட்டிக்கு வழக்கம்போல எட்டு பெரிய அணிகளும் தகுதி பெற்று விட்டன. முதல் சுற்று போட்டிகளில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை.
கென்யாவுடன் நடந்த ஆட்டத்தில் 8 ஓவர்களில் 72 ரன் எடுத்து ஆட்டத்தை வென்றது நியூசிலாந்து. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ஓவரில் 207 எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தி பீதியை கிளப்பியது. முக்கியமான போட்டியில் பலம் வாய்ந்த இலங்கையை, குறைத்து மதிப்பிடப்பட்ட பாகிஸ்தான் வீழ்த்தி, உலகக்கோப்பை ரேஸில் இணைந்து கொண்டது. அதுவரை பாகிஸ்தானை யாரும் நெருக்கடி தரும் அணியாக நினைக்கவில்லை. மேலும் பாகிஸ்தான் இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலியாவை படுதோல்வி அடைய செய்தது. அந்த போட்டியில் அவர்கள் எடுத்தது வெறும் 176 ரன் மட்டுமே. அதே போல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 47 ஓவருக்கு 250 ரன் எடுத்த நியூசிலாந்து அடுத்த 3 ஓவரில் 52 ரன் குவித்தது. இதை நிகழ்த்தி காட்டியவர் நியூசிலாந்தின் வீரர் டெய்லர். இப்படி ஏ பிரிவில் ஒவ்வொருவரும் மாறி மாறி ஜெயித்துக்கொண்டிருந்தார்கள். பி பிரிவில் நடந்த ஒரு போட்டியை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டி அது.
இந்தியாவுடன் ஆட்டத்தை டிரா செய்த உற்சாகத்துடன் முதலில் ஆடிய இங்கிலாந்து 327 எடுத்தது. பின்னர் ஆடத்தொடங்கிய அயர்லாந்து 25 ஓவரில் 111 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைக்கையில், களமிறங்கிய கெவின் ஓ பிரயன், சூறாவளியாக மாறினார். 50 பந்துகளில் சதமடித்த அவர், கண நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். ஒரு சுமாரான ஆட்டத்தை காண வந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இந்த ஆட்டம். உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு பெரிய அணிக்கு மீண்டும் ஒரு முறை அயர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. உலகக்கோப்பை போட்டிகளின் சிறப்பான ஆட்டங்களின் பட்டியலில் இந்த ஆட்டமும் சேர்ந்து கொண்டது.
காலிறுதி போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை பாகிஸ்தானும், இங்கிலாந்தை இலங்கையும் துவம்சம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டன. இரு அணிகளுமே விக்கெட் இழப்பின்றி வென்றது குறிப்பிடத்தக்கது. முக்கியமான் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கவும், நியூசிலாந்தும் மோதின. என்ன நடந்திருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. 221 என்ற எளிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா, நாக் அவுட் ஜுரத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தது. "அப்பாடா, இங்கிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா என்று இரண்டு தொல்லைகள் இனி இல்லை." என்று நான் நிம்மதி அடைந்தேன். ஆனால் காலிறுதியிலேயே பெரிய சோதனை காத்திருந்தது. ஆம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை சுவைத்த ஆஸ்திரேலியா என்ற சிங்கத்திடம், மோத வேண்டும். "அதற்கு முன் எப்படி ஆடி இருந்தாலும், உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியர்களில் ஆட்டமே வேறு. ஆகவே இந்தியர்கள் இதை கடந்து விட்டாலே பெரிய அதிசயம்." என்று கூறப்பட்டது.
அதுவரை களமிறங்காமல் இருந்த அஷ்வின் களமிறக்கபட்டார். ஆஸ்திரேலியர்களை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சை பெரிதும் நம்பி இருந்தார் தோனி. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆஸ்திரேலியா 260 மட்டுமே எடுத்தது. அதிலும் பாண்டிங் மட்டும் சதமடித்தார். அவர் சதமடித்த போது, 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வந்தது. ஆனால் அஷ்வின் சாமர்தியமாக அவரை வீழ்த்தி விட்டார். ஆஸ்திரேலியர்களின் பவுலிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே மிக எச்சரிக்கையாக ஆடியது இந்திய அணி. 187 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்ந்தபோது என் நம்பிக்கை லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது. ஆனால் ரெய்னாவும், யுவராஜும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள். ஒரு சரித்திர நிகழ்வு அங்கே நடந்தேறியது. ஆம் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளாக தன் அசுரப்பிடியில் வைத்திருந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.
"இது பொதும்டா. இனி ஜெயிக்காட்டியும் கவலை இல்லை." என்று எண்ணம் தலை தூக்கியது. ஆனால் 2003 நினைவுக்கு வர, "வேகம் குறையக்கூடாது. இறுதி வரை முயற்சியை கைவிடக்கூடாது." என்று எண்ணிக்கொண்டேன். அரையிறுதியில் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை. மறுபுறம் இன்னொரு சரித்திரப்போட்டி. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்றாலே அது பரபரப்புதான். அதுவே உலகக்கோப்பை அரையிறுதியாக இருந்தால் கேட்கவா வேண்டும்? பல்வேறு அரசியல் தலைவர்கள், குறிப்பாக இரு நாட்டு பிரதமர்கள் என்று அரங்கமே நிறைந்துவிட்டது. என்னதான் இந்தியா சிறப்பாக ஆடினாலும் அடி வயிற்றில் புளியை கரைத்தது உண்மைதான். முதலில் ஆடிய இந்தியா 260 ரன் எடுத்தது. இது குறைவான ஸ்கோர்தான் என்றாலும், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால், நிதானமாக ஆடியும் தோல்வியையே தழுவியது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய அப்ரிடி, இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.
இலங்கை அணி இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி இருந்தது. ஆனால் அவை உள்ளூர் போட்டிகள் என்பதும், இறுதி போட்டி இந்தியாவில் என்பதும் ஒரு சவால். மேலும் இலங்கையின் பெரும்பாலான ஆட்டங்களில் முதலில் ஆடிய தில்ஷான், சங்கக்காரா, தரங்கா ஆகியோர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதால், பின் வரிசை வீரர்கள், மிக சொற்ப ரன்களையே இந்த தொடரில் எடுத்திருந்தார்கள். மேலும் இந்திய அணி பல கடினமான படிகளை தாண்டி வந்திருந்ததால் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தது. இந்தியாவுக்கு எதிராக, இந்திய ஆடுகளங்களில், முரளீதரன், மலிங்கா ஆகியோரின் பந்துவீச்சு பெரும்பாலும் எடுபட்டதில்லை. இப்படிப்பட்ட செய்திகள் இலங்கை கோப்பை வேல்வதற்கான வாய்ப்புகள் குறைவே என்று நினைக்க வைத்தன. ஆனால் அவை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் இலங்கையின் ஆட்டம் அமைந்தது. இலங்கை அணி 276 ரன் குவித்தது. ஜெயவர்தனே சதமடித்து இறுதிபோட்டிகளில் சதமடித்தோர் பட்டியலில் இணைந்தார். 2003 போலவே இறுதி போட்டியில் இந்திய பவுலிங் சொதப்பலாக அமைந்தது. எனக்கு அதுவரை 100% இருந்த நம்பிக்கை 50% ஆக குறைந்தது.
இந்தியா ஆடத்தொடங்கிய இரண்டாவது பந்திலேயே சேவாக் டக் அடிக்க, சச்சினும் உடனே நடையை கட்ட, 6 ஓவரில் 31 ரன்னுக்கு இரண்டு விக்கெட். என் நம்பிக்கை 20% ஆனது. "அட போங்கடா...." என்றும் தோன்றியது. விராட் கொஹ்லி மிக நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். அவரும் அவுட் ஆக, யுவராஜுக்கு முன்ன்தாக களமிறங்கினார் தோனி. அவரும் கம்பீரும் கவனமாக அதேநேரம் விரைவாக ரன் சேர்க்க தொடங்கினார்கள். இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடத்தவறிய இந்த இரண்டு வீரர்களும், இந்த முக்கிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் சதமடிக்கும் முன் அவசரப்பட்டு கம்பீர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 41 ஓவரில் 221. ஆட்டம் சம நிலையில். ஆனால் களமிறங்கியது யுவராஜ். அப்போதே தெரிந்து விட்டது. இலங்கைக்கு காலம் கடந்து விட்டது. கம்பீரை இன்னும் விரைவாக வெளியேற்றி இருக்க வேண்டும். 45வது ஓவரில் பவர் பிளே எடுத்ததும் ஆட்டம் ஜெட் வேகம் பிடித்தது. 47ஆவது ஓவரை குலசேகரா வீச, 27 பந்துகளில் 24 ரன் எடுக்க வேண்டும். அந்த ஓவரில் தோனி இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
இப்போது 18 பந்துகளில் 16 ரன் எடுக்கவேண்டும். இந்த ஓவர் தொடங்கும்போதே யுவராஜ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். 48வது ஓவரை வீச அழைக்கப்பட்டவர் மலிங்கா. இந்த ஓவர்தான் இலங்கையின் உலகக்கோப்பையின் கடைசி நம்பிக்கை. ஏனென்றால், இந்த மாதிரி பல நெருக்கடியான நேரங்களில் அற்புதம் நிகழ்த்தக்கூடிய ஒரு வீரர் மலிங்கா.ஆனால் தோனி இந்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் விளாச, கடைசி நம்பிக்கையும் தவிடுபொடி ஆனது. 12 பந்துகளில் 5 ரன் எடுக்க வேண்டும். முதல் பந்தில் யுவராஜ் 1 ரன் எடுக்க, 11 பந்துகளில் 4 ரன் எடுக்க வேண்டும். குலசேகரா வீசிய அந்த பந்தை சிக்சருக்கு விரட்டினார் தோனி. ஏற்கனவே கையில் பட்டாசோடு நின்றிருந்த நான், அதை பற்ற வைக்க, எங்கள் ஊரின் முதல் சரவெடி என் வீட்டின் முன் கேட்டது. பிறகு, ஊரெங்கும் கேட்கதொடங்கியது.
என் மனதில் மகிழ்ச்சி பேரு வெள்ளம் கரைபுரண்டோடியது. ஒவ்வொரு வீரனின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். களத்தினுள் சச்சின் ஓடி வந்ததும் அரங்கமே அதிர்ந்தது. அவரை தூக்கிக்கொண்டு ஆனந்த கூத்தாடினார்கள் இந்திய வீரர்கள். இது வரை இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரனுக்கு, கோப்பையை வென்றதன் மூலம் மேலும் ஒரு பெருமையை சேர்த்த பெருமிதம் அவர்களின் கண்களில். ஆம் உலகமே சச்சினை புகழ்ந்தாலும், உலகக்கோப்பையை வென்ற அணியில் சச்சின் இல்லை என்பது அதுவரை ஒரு குறையாகவே இருந்தது. தான் உலகக்கோப்பை ஆடுவது ஒரு நபருக்காக என்று அதுவரை சொல்லி வந்த யுவராஜ், அந்த நபர் சச்சின்தான் என்று அன்று கூறினார்.
இந்த உலகக்கோப்பை வெற்றி ஒருவரால் வந்ததல்ல. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் யுவராஜ் மற்றும் ஜாகீர்கானின் பங்களிப்பு சிறப்பானது. தொடர்ந்து, பயிற்சியாளரையும் தோளில் சுமந்து மைதானத்தை வலம்வந்தனர் இளம் வீரர்கள். இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கணத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை. சரித்திரம் திரும்பியது. என் கனவும் நனவானது......
இப்படிக்கு
ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகன்.
படங்கள் நன்றி : cricinfo
செய்திகள் நன்றி: cricinfo, wikipedia
பிற் சேர்க்கை:
அதெப்படி அவ்வளவு சீக்கிரம் முடித்து விடுவோமா? இதன் நீட்சி தொடரத்தான் போகிறது. ஒவ்வொரு அணியிலும் கடந்த இருபது ஆண்டுகளாக என் மனம் கவர்ந்த வீரர்கள் பலர் ஆடி இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஓரிரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டால் எப்படி? ஆகவே இன்னும் ஓரிரு பதிவுகளில் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....