விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 27, 2011

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....

முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும். 

காட்சி :1 

தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.


அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"

அவன்,"ஆமா.."

அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்." 

அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள். 

ஆம் அவள் அவனது அண்ணி. 

காட்சி :2 

"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான். 

"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய். 

"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான். 

"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள். 

"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது. 

அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள். 

அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய். 


காட்சி - 3 

முதலில் சிறியதாய் இருக்கும் அது, ஒரு பெண்ணின் விரல் பட்டதும், மெதுவாக நீண்டு பெரியதாகிறது. 


விளக்கம்: 
ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த மூன்று காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள். 

காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம் 
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம் 
காட்சி 3 - ஆக்ஸ் டியோடரண்ட் (நீள்வதற்கு காரணம் 35% எக்ஸ்ட்ராவாம்) 


நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

September 21, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 4

நண்பர் அந்நியன் 2 உள்பட நிறைய பேர் "தமிழ்மணம் பட்டை எங்கே?" என்று கேட்டிருக்கிறார்கள். முதல் காரணம் முதலில் இருந்தே அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றொரு காரணம், வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக இணைத்து விட்டேன். ஆனால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் பதிவிற்கு மேலே இருக்கிறது. எப்படி கீழே கொண்டு வருவதென்று தெரியவில்லை. ஓட்டுப்போடணும்னா சிரமம் பார்க்காம, மேலே உள்ள தமிழ்மண பட்டையிலும் ஒரு அழுத்து அழுத்துங்க. இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளில் என்னை கவர்ந்த வீரர்களை பற்றி எழுதுகிறேன். இந்த பட்டியல் மிக பெரியது என்பதால், மிகவும் கவர்ந்த வீரர்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறேன். பாகிஸ்தான் 

இந்திய அணியின் சொந்த சகோதரன். அடிக்கடி உரசல் வரும். அந்த உரசல் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கும். உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இல்லாத பரபரப்பு, இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு உண்டு. மேலும் இரு அணி வீரர்களும், மற்ற அணிகளோடு ஆடுவதை விட ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். மிகுந்த சர்ச்சைகள் நிறைந்த, அதிரடி திருப்பங்கள் மிகுந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு. அதில் என்னை கவர்ந்த சில வீரர்கள் உள்ளனர். 

இன்சமாம் உல் ஹக் 


1992 உலகக்கோப்பையின் ஹீரோ. மிக அழகான, பெண்களுக்கு பிடித்த வீரராக திகழ்ந்தவர். மிக மிக மெதுவாக செயல்படும் ஒரு வீரர். இவ்ரது பெயரை சொன்னதுமே, கூடவே ஞாபகம் வருவது ரன் அவுட். இவருக்கும் ரன் அவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஆனால் பாகிஸ்தானின் அபாயகரமாக வீரர்களுள் இவரும் ஒருவர். 

சயீத் அன்வர்


பாகிஸ்தான் வீரர்களிலேயே மிக அமைதியான வீரர். இவரும் முகத்தில் எந்த வித சலனமும் காட்டமாட்டார். சிரித்துக்கொண்டே சிக்சர் அடித்து பவுலர்களை கடுப்பேற்றுவதில் கில்லாடி. அதே போல கொஞ்சம் கூட களைப்படையாமல் நீண்ட நேரம் ஆடக்கூடியவர். 

வக்கார் யூனிஸ்


பாகிஸ்தான் முதன்மை பவுலர்களில் ஒருவர். பந்து வீச்சில் 90களில் குறிப்படத்தக்க ஒருவராக திகழ்ந்தவர். பாகிஸ்தான் அணியில் நீண்ட காலம் நிலைத்து ஆடுவது என்பது கஷ்டம். இவர் நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் ஆடியவர். 

மொஹம்மத் யூசுஃப் 


இவர் சரியான விடாக்கண்டன். பாகிஸ்தான் அணி படு மட்டமாக ஆடி பாதாளத்தில் கிடக்கும்போது இவர் களத்தில் இறங்கி வெற்றிகரமாக மீட்பார். இவரை அவுட் ஆக்குவது என்பது மிக சிரமமான காரியம். முதலில் ஒரு கிருத்துவராக, யூசுஃப் யுகானாவாக இருந்தவர், பின்னர் இசுலாமுக்கு மாறி மொஹம்மத் யூசுஃப் ஆனார். 

ஷாஹித் அப்ரிடி


இன்று வரை பாகிஸ்தான் ரசிகர்களின் கனவு நாயகன். ஒரே படத்தின் மூலம் மாதவன் பல பெண்கள் மனதில் இடம் பிடித்ததை போல, ஒரே ஆட்டத்தில் பல பெண்களின் கனவு நாயகனாக மாறியவர். மிக அழகான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். மரண அடிக்கு பெயர் போனவர். பெரும்பாலும் ஒன்றிரண்டு பந்துகளிலேயே அவசரப்பட்டு அவுட் ஆகி விடுவார். ஆனால் அப்படி ஆகாமல் நிலைத்து விட்டால், பவுலர் பாடு திண்டாட்டம்தான். சமீபகாலமாக பவுலிங்கில் சிறந்து விளங்குகிறார். 

சக்லைன் முஷ்டாக்


தொண்ணூறுகளில் ஆட்சி செய்த ஒரு சில ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். மிக மிக மெதுவாக பந்து வீசுவார். இவரது சிறப்பம்ஸமே, இவர் வீசும் டாப் ஸ்பின்தான். அதாவது பந்து வெகு நேரம் காற்றிலேயே பறந்து வரும். எந்த இடத்தில் தரையில் படும் என்று கணிக்க முடியாது. குறுகிய போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 

அப்துல் ரசாக்


ஒரு காலத்தில் சச்சினை வீழ்த்த வேண்டுமா? கொண்டு வா ரசாக்கை, என்ற நிலை இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சச்சின் இவரது பந்து வீச்சில் திணறி வந்தார். பாகிஸ்தானின் இடைப்பட்ட ஓவர்களை வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதில் வல்லவர். மேலும் பேட்டிங்கிலும் கொஞ்சம் அபாயகரமானவர்தான். இவரது நடை உடை பாவனைகளில் எல்லாம் பெண்ணின் சாயல் இருக்கும். 

வாசிம் அக்ரம் 


கிரிக்கெட்டின் சிறந்த பவுலர்களில் இவரும் ஒருவர். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. ரிவர்ஸ் ஸ்வீங் என்ற முறையை திறமையாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியவர். நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையிலும் சிக்கியவர். 


இலங்கை 

பாகிஸ்தான் அணி போலவே இலங்கை அணியும் இந்திய கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. விடா முயற்சிக்கு பெயர் பெற்ற ஒரு அணி. எந்த ஒரு தொடரையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

முத்தையா முரளிதரன் 


கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு நல்ல மனிதராகவும் இவரை எனக்கு பிடித்திருக்கிறது. எந்த ஒரு கள்ளம் கபடமும் இல்லாத மனிதராக விளங்கும் இவர், கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவர். நிறைய சர்ச்சைகளை தாண்டி, சாதித்து காட்டியவர். நாடுகள் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு வீரர்.


சனத் ஜெயசூரியா


தொண்ணூறுகளில் பல பவுலர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர். ஈவு இரக்கமற்ற வீரர்களுள் ஒருவர். இலங்கை உலகக்கோப்பை வென்றதில் இவர் பங்கு சிறப்பானது. மிக சிறந்த பீல்டரும் கூட. இவர் களத்தில் விளையாடுவதை பார்த்தால், இவருக்கு 41 வயது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். 

அரவிந்த டி சில்வா 


இவரப்பார்த்தால் எமதர்மன் தோளில் கதாயுதத்தை சுமந்து கொண்டு வருவது போல இருக்கும். இலங்கையின் உலகக்கோப்பை நாயகன். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாமல், டெக்னிக்கலாக ஆடுவதிலும் வல்லவர். துல்லியமாக பந்து வீசி தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதிலும் வல்லவர். 

சமீந்தா வாஸ் 


90களில் குறிப்பிடத்த்க்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். நீண்டகாலம் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அதிகம் அவதிப்படுவர். ஆனால் காயமில்லாமல் அதிக காலம் அணியில் ஆடியவர். 

ரோஷன் மகானமா


நான் பார்த்த முதல் இலங்கை வீரர். 1994 என்று நினைக்கிறேன். அப்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். நிலையாக நின்று சாதிப்பார். இவர் ஒரு ஸ்லோ பாய்சன். மெதுமெதுவாக எதிரணியை வீழ்த்துவார். 1996 உலகக்கோப்பையில், அரையிறுதியில் இந்தியாவின் கோப்பை கனவில் மண் அள்ளி போட்டவர். 

அர்ஜுனா ரணதுங்கா 


எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஒரு சிறந்த கேப்டன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அணியை இக்கட்டான நேரத்தில் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இவரைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர். 

லசித் மலிங்கா 


தற்காலத்தில், பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர். இவரது ஜெட் வேக யார்க்கர்களை சமாளிக்க முடியாமல் நிறைய வீரர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். வித்தியாசமாக ஹேர்ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்தவர். இவரைப்பார்த்தால் எனக்கு மயில்சாமி ஞாபகம் வருகிறது. 


உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 20, 2011

பதிவுலக சாதி வெறியர்களே....


தலைப்பை பார்த்ததும் கடுப்பாகி இருப்பீர்களே? "சொல்ல வந்துட்டாண்டா இவன் பெரிய யோக்கியன். முதலில் இவன் என்ன ஜாதி? இவன் யார் மத்தவங்களை பத்தி சொல்றதுக்கு?" என்று நினைப்பீர்கள். வேறு சிலர், "இவன் எந்த ஜாதியை பற்றி சொல்லப்போகிறான்?" என்று ஆவலோடு வருவீர்கள். சில மாதங்களுக்கு முன் இன உணர்வை பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் கூறி இருந்த சில கருத்துக்களை இங்கும் பயன்படுத்துகிறேன்.  


மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக, நிற உணர்வாக, மொழி உணர்வாக, எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாகரிகம், பண்பாடு வளர வளர இந்த உணர்வை மனிதன் மறைத்து வைத்திருக்கிறானே ஒழிய, மறப்பதில்லை அல்லது மறக்க விரும்புவதில்லை. என்னை பொருத்தவரை இது தவறல்ல. ஏனென்றால் இன உணர்வில்லாமல், மனிதனால் சமூகத்தில் வாழ முடியாது. அவன் தனித்து விடப்பட்டு விடுவான். ஒரு சினிமா நடிகன் முதல் பிறந்த ஊர் வரை நாம் எதனோடாவது நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். "நான் அஜீத் ரசிகன், நான் விருதுநகர்காரன்" என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இதுவும் இன உணர்வே. 


இன உணர்வுக்கும், இன வெறிக்கும் நூல் அளவே வித்தியாசம் இருக்கிறது. "நம் இனம் சிறந்தது." என்று நினைப்பது, இன உணர்வு. "நம் இனம் மட்டுமே சிறந்தது, மற்ற இனங்கள் எல்லாம் இருக்கவே தகுதி அற்றது." என்று நினைப்பது இன வெறி. இன உணர்வு இருக்கும் எல்லோருக்குமே இன வெறியும் இருக்கும் என்பதுதான் வேதனையான உண்மை. ஆனால் இந்த இன வெறி என்பது நாம் வளர்க்கும் நாய் போல. அது நமக்கு கட்டுப்பட்டது. நம் அனுமதி இன்றி யாரும் அதை சீண்டி விட முடியாது. அப்படி மற்றொருவரால் என்று சீண்டப்படுகிறது என்றால், நம்மை அறியாமலேயே நாம் அவருக்கு அடிமை ஆகி விட்டோம் என்று அர்த்தம். ஆகவே ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதி இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் இன வெறியை யாராலும் தூண்ட முடியாது. 


மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம், இன உணர்வும் இருக்கும், அது சம்பந்தமான மோதல்களும் இருக்கும். அதற்கு பதிவுலகமும் விலக்கல்ல. ஆண்-பெண், மேல் சாதி - கீழ் சாதி, அஜீத் - விஜய், திமுக-அதிமுக என்று மோதல் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது அல்லவா?   சிறுபான்மை இனம் என்பது ஒரு குறிப்பிட்ட இனம் கிடையாது. ஒரு இடத்தில் எந்த இனம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுதான் சிறுபான்மை இனம். சிறுபான்மை இனத்தில் இருக்கும் எல்லோருமே பண்பாளர்களாக, மற்ற இனங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? உதாரணத்துக்கு, ஒரு அலுவலகத்தில் விஜய் ரசிகர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்கள் எல்லோரும் அஜீத் ரசிகர் என்றால், அங்கே அந்த விஜய் ரசிகர் என்பது சிறுபான்மை. 


எப்போதுமே சிறுபான்மை இனத்துக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை இருக்கும். பெரும்பான்மையினர் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட நம்மை கேலி செய்வதற்காகவே செய்வது போல தோன்றும். பெரும்பான்மை என்பதால் அவர்களும் சும்மா இருப்பதில்லை. அவ்வப்போது சீண்டுவார்கள். சில காலம் கழித்து அந்த அலுவலகத்தில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை அஜீத் ரசிகர்களை விட அதிகரித்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அஜீத் ரசிகர்கள் என்ன செய்தார்களோ அதையே இவர்களும் செய்ய தொடங்குவர். ஆகவே யார் செய்தாலும் அது சரி ஆகாது. ஆனால் சமீப காலத்தில் இணையத்தில் நடந்து வரும் சில செயல்கள் மிக அருவருப்பாக உள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக தளங்களில், ஒரே இனத்தை சேர்ந்த சிலர், தங்களில் மன வக்கிரத்தை, மாற்று இனத்தை இழித்து பேசுவதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட இனம் என்று இல்லாமல் எல்லா இனத்தினரும் செய்து வருகின்றனர். ஆகவே குறிப்பிட்டு யாரையும் சொல்வது தவறு. அதே போல எல்லோரும் செய்வதால் அது சரி ஆகி விடாது. அது உங்கள் சொந்த விஷயம், அதில் யாரும் தலையிடக்கூடாது என்று நினைத்தால், அதை யார் பார்வைக்கும் படாத வண்ணம் மறைப்பதுதான் சிறந்தது. ஆனால் நம் நோக்கமே அதை நாலு பேர் படித்து, குறிப்பாக நாம் திட்டி இருக்கும் இனத்தவன் படித்து கடுப்பாகவேண்டும். அதுதான் கெத்து என்று நினைக்கிறோம். பிரச்சனையே இங்கேதான் தொடங்குகிறது. 


இது ஒரு புறம் இருக்க, பதிவுலகில் சமூக ஆர்வலர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் வேலை என்னவென்றால், சாதி ஒழிப்பு என்ற பெயரில், ஏதாவது ஒரு சாதியையோ, அல்லது மதத்தையோ மிக கேவலமான முறையில் விமர்சிப்பது. இதை படித்ததும், சம்பந்தப்பட்ட இனத்தவர் மனதால் தூண்டப்படுவார். அந்த பதிவில் வந்து அசிங்கமாக பின்னூட்டமிடுவார். இது ஒன்று போதாதா? உடனே சம்பந்தப்பட்ட இரண்டு இனங்களும் ஆஜர். மாறி மாறி கெட்டவார்த்தைகள், அர்ச்சனைகள் என்று களை கட்டிவிடும். சில நல்லவர்கள், மூன்றாவதாக ஒரு இனத்தையும் இதில் இழுத்து விட்டு, புண்ணியம் தேடி கொள்வார்கள். இங்கே நடப்பது சாதி ஒழிப்பு அல்ல. மறைமுக சாதி வெறி தூண்டல். இந்த மாதிரி கட்டுரைகள் பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்தே எழுதப்படுகிறது. இதன் காரணம் முதலிலேயே சொல்வது போல சிறுபான்மையினரே ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருப்பார்கள். 


பொதுவாக தாழ்வு மனப்பான்மை என்பது இயலாமையின் வெளிப்பாடு. ஆக நாம் திட்ட வேண்டும் என்று நினைக்கும், நம்மால் திட்ட முடியாத ஒரு இனத்தை இன்னொருவன் நம்மை விட கேவலமாக திட்டியவுடன் நமக்கு சந்தோஷம் உண்டாகிறது. புத்துணர்ச்சி அடைகிறோம். அங்கே சென்று நம் பங்குக்கு வக்கிரத்தை வெளிப்படுத்துகிறோம். நமக்கு தெரியாமலே நம் சாதி வெறி தூண்டப்படுவது இப்படித்தான். சாதி வெறி என்றல்ல, எல்லா இன வெறியுமே இப்படித்தான் வெளிப்படுகிறது. அதே போல நம் இனத்தை இன்னொருவன் திட்டியவுடனும் நம் சாதி வெறி தூண்டப்படுகிறது. அவ்வளவு நாள் நாம் சாதி வெறியை வெளிக்காட்டாமல் இருந்ததன் காரணம், அதற்கு ஒரு காரணம் கிடைக்கவில்லையே என்பதுதான். இப்போது அது கிடைத்துவிட்டது. "அவன்தான் முதலில் திட்டினான்." என்று நாமும் சாக்கு சொல்கிறோம். 


உண்மையிலேயே சமூக நோக்குடைய பதிவுகள் என்பது, ஒரு பக்க சார்பு நிலை இல்லாமல் இருப்பதே. ஏனென்றால் இன உணர்வை தொடுவது என்பது மிக சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். கொஞ்சம் தப்பினாலும், நம் நோக்கமே மாறிவிடும். நம் வார்த்தைகளுக்கு புது அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டுவிடும். கடுமையாக சாடுவது என்பது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது என்று அர்த்தமல்ல. கட்டுரைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது, அவர்களுக்கு மேலும் வெறியை அதிகப்படுத்துமே தவிர, வேறு எந்த பயனும் அளிக்காது. அதே போல நண்பர்களே, நம்ம ஜாதிக்காரனை, நம்பலாம், எதிர் சாதிக்காரனையும் நம்பலாம். ஆனால் ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண வருகிறான் பாருங்கள். அவன்தான் மிக ஆபத்தானவன். 

எதிர்கால இந்தியா ஒரு குறிப்பிட்ட ஜெயந்தி விழாவில் 

சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே..... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 16, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 3


லட்சம் ஹிட்ஸ் பெற்றது மகிழ்ச்சி என்றால் அதற்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தது அதை விட பல மடங்கு மகிழ்ச்சி. இந்த ஆதரவை தொடர்ந்து பெற எப்போதும் முயற்சிப்பேன். சாதி வெறி குறித்து ஒரு பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சோம்பல் காரணமாக அதை நாளைக்கு ஒத்தி வைத்து விட்டேன். லைட் வெயிட்டாக கிரிக்கெட் பதிவு போட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று நான் கேள்விபட்ட இரண்டு செய்திகள் கடுப்பை கிளப்பின. 

செய்தி ஒன்று : ஆசிய கோப்பையை ஜெயித்த இந்திய ஹாக்கி அணிக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கியது. 

செய்தி இரண்டு: நான்காவது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் பயிற்சியை கட் அடித்து விட்டு, எல்லா இந்திய கிரிக்கெட் வீரர்களும் 75,000 ரூபாய் பணம் கட்டி மினி ரேஸ் கார் ஓட்ட சென்றது. நாம் நாட்டில் விளையாட்டின் தரம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? 

(பருத்திவீரன் ஸ்டைலில் படிக்கவும்...)


இங்கிலாந்து 

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளிலேயே என்னால் அதிகம் கண்டுகொள்ளப்படாத நாடு. இந்திய அணி 90களில் இங்கிலாந்துடன் குறைந்த தொடர்களிலேயே பங்கேற்று இருக்கிறது. இந்த அணியில் என்னை கவர்ந்த சில வீரர்கள் இருக்கிறார்கள்

பால் கோலிங்வுட் 

இவரை கிரிக்கெட்டில் மிஸ்டர் டிபெண்டபுள் என்று அழைக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் கைகொடுக்கும் ஒரு வீரர். அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றி பெரும் வரை களத்தில் நின்று மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்தவர். இங்கிலாந்தில் மிகச்சிறந்த பீல்டர்களில் முதலிடம் இவருக்குத்தான். பவுலிங்கிலும் அசத்துவார். முகம் எப்போதுமே சாந்தமாகவே இருக்கும் 

ஆன்ட்ரூ பிளின்டாப் 


இவர் சின்ன போத்தம் என்று அழைக்கப்பட்டவர். மிக ஆக்ரோஷமான வீரர். முதலில் இவரைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் 20 வயது வீரரான இவர் ஆஸ்திரேலியாவுடன் ஒரு போட்டியில் அடித்து நொறுக்கி வெற்றியை நிலைநாட்டினார். அதன் பின்னரே எல்லோராலும் கவனிக்க பட்டார். மிக ஆபத்தான வீரர். காயத்தால் அடிக்கடி அவதிபட்டவர். பல பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு. 

அலேக் ஸ்டூவர்ட்


வெகு காலமாக இவர் விக்கெட் கீப்பராக இருந்தவர். பெரும்பாலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்குவார். கிரிக்கெட் இலக்கணத்தோடு விளையாடுபவர்களில் இவரும் ஒருவர். இவரைப் பார்த்தால் எனக்கு டிராவிட் ஞாபகம்தான் வரும். தொண்ணூறுகளில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம். 

இயான் போத்தம்


இன்று வரை இங்கிலாந்து என்றவுடன் எல்லோரும் சொல்லும் பெயர் இயன் போத்தம். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். முதலில் ஸ்லிம்மாக இருந்தாலும் போக போக உடல் பருமனாகி விட்டார். ஆனாலும் அவரது ஆட்ட நேர்த்தி குறையவே இல்லை. லார்ட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்து நொறுக்கி இங்கிலாந்தை ஜெயிக்க வைத்தது உலகபிரசித்தம். இவர் ஒரு கால்பந்து வீரரும் கூட. 

கெவின் பீட்டர்சன் 


குறுகிய காலத்தில் மிக பிரபலம் ஆன ஒரு வீரர். நல்ல உயரமான, உடல் கட்டுடைய, ஸ்மார்ட்டான வீரர். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர். கிரிக்கெட்டின் தற்கால அதிரடி ஆட்டக்காரர்களில் இவர் குறிப்பிடதக்கவர். ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்சர் அடித்து காட்டியவர். இவருக்கு ரிவர்ஸ் ஸ்வீப் மிகுந்த புகழை பெற்று கொடுத்தது. 

மார்க்கஸ் டிரெஸ்கோதிக்


குறுகிய காலமே ஆடினாலும் என் மனம் கவர்ந்த ஒரு வீரர். 2000 - 2003 வரையிலான போட்டிகளில் இங்கிலாந்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். நெடு நேரம் நிலைத்து ஆடும் ஒரு அதிரடி ஆட்டக்காரர். குனிந்து நிற்காமல் நிமிர்ந்த படியே இவர் ஆடுவது வித்தியாசமாக இருக்கும். 


வெஸ்ட் இண்டீஸ் 

ஒரு காலத்தில் கிரிக்கெட்டையே தங்கள் கைக்குள் வைத்திருந்த ஒரு அணி. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரனையும் பார்த்து எல்லோரும் பயப்படுவர். ஆனால் 1996 உலகக்கோப்பைக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சரிவை சந்தித்த அணி, 2008 வாக்கில் ஒரு மகா மட்டமான அணியாக காட்சி அளித்தது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. 

பிரயன் லாரா


சச்சினுக்கு இணையாக வைத்து பேசப்பட்டவர். இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான வீரர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மிக ஸ்டைலிஷ் ஆன வீரர். பல பெண் ரசிகைகள் உண்டு. நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நான் சிறுவனாக இருக்கும்போது பலர் லாரா மாதிரி ஸ்டைலில் ஆட முயற்சிப்பார்கள் 

கர்ட்லி ஆம்ப்ருஸ்


சும்மா பனைமரம் மாதிரி உயரம். ஆளை பயமுறுத்தும் ஒரு வேகம். இவை எல்லாம் இருந்தும் முகத்தில் தெரியும் ஒரு அப்பாவித்தனம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு வீரர். வெஸ்ட் இண்டீஸ் உருவாக்கிய தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். 

கொர்ட்னி வால்ஷ்


இவரும் ஆம்புரூசும் ஜோடி போட்டுக் கொண்டு பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். இவரும் தன் வேலை ஒன்றிலேயே குறிக்கோளாக இருப்பார். தேவை இல்லாத சண்டைகளில் ஈடு பட மாட்டார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர். 

சிவ்நாராயண் சந்தர்பால்


பல வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒற்றை ஆளாக தாங்கி வருபவர். ஆஸ்திரேலியாவுக்கு பெவன் எப்படியோ, வெஸ்ட் இண்டீசுக்கு சந்தர்பால் அப்படி. மிக மிக நிதானமாக ஆடுவார். ஆனால் அடுத்து விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். மூன்று ஸ்டம்ப்களும் தெரியும்படி இவர் பேட்டிங் பிடிப்பது வினோதமாக இருக்கும். கால்களை வேகமாக நகர்த்தி ஆடும் ஒரு வீரர். 
  
கார்ல் ஹூப்பர்


மிக மிக அசமந்தமான ஒரு வீரர். மெதுவாக ஆட ஆரம்பித்து, கடைசியில் அடித்து நொறுக்கி விடுவார். ஆனால் முகத்தில் எந்த விதமான சலனமும் காட்டமாட்டார். பேட்டிங்தான் இப்படி என்றால் பந்துவீச்சு இன்னும் மோசம். நடந்து வந்து மிக மெதுவாக வீசுவார். ஒரு ஓவரை இரண்டரை நிமிடத்துக்குள் வீசி முடிக்கும் திறமையாளர். விக்கெட் வீழ்த்தினாலும் ரியாக்சன் காட்டமாட்டார். இவரை பார்த்ததும் எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் ஞாபகம் வரும். 

ஜிம்மி ஆடம்ஸ்


இவரை உண்மையிலேயே ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் மட்டுமல்லாது, வெகு காலம் விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். அணிக்கு தேவையான சமயங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இவரைப்பார்த்தால் எனக்கு ஹெல்பாய் திறப்பட நடிகர்  Ron Perlman ஞாபகம்தான் வருகிறது. 

கிரீஸ் கெய்ல் 


இன்றுவரை பவுலர்கள் அச்சப்படும் வீரர்களுள் இவரும் ஒருவர். இவரை வீழ்த்தி விட்டால் பெரிய கடமை முடிந்து விட்டதை போல எதிரணியினர் ரிலாக்ஸ் ஆவார்கள். இவரை சிறிது நேரம் களத்தில் நிற்க விட்டு விட்டால் அதற்கப்புறம் அவுட் ஆக்குவது சிரமம். அது மட்டுமல்லாமல், சளைக்காமல் அடித்து நொறுக்கி கொண்டே இருப்பார். இவர் கைகள் அவ்வளவு பலமா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு, சிக்சர் அடித்தால் பந்து வெகு தொலைவில் போய் விழும். கிரிக்கெட்டை சுவாரசியமாக்கியதில் இவருக்கும் பங்கு உண்டு. 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் , அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 13, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 2மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னடா இது? ஏவிஎம் படத்தோட மொத டயலாக் மாதிரி பதிவை தொடங்குறான்னு பார்க்கிறீர்களா? பதிவெழுத தொடங்கிய காலத்தில் எதை எழுதினாலும் படிக்க ஆளே வரமாட்டார்கள். ஒவ்வொரு பதிவுக்கும் இருபது அல்லது முப்பது ஹிட்ஸ் கிடைத்தாலே அது பெரியவிஷயமாக இருக்கும். "நாம் ஒரு லட்சம் ஹிட்ஸ் எப்போது வாங்குவோம்?" என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்வேன். "குறைந்தது நான்கைந்து வருடமாவது ஆகும் போலிருக்கிறது." என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் இப்போது ஒரு லட்சம் ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது. ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதுவுமே செய்யாத போது, இது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தென்னாபிரிக்கா 

இந்த அணியை ஒரு திறமையற்ற அணி என்று சொல்வதா துரதிஷ்டமான அணி என்று சொல்வதா என்று தெரியவில்லை. இவர்கள் பொதுவாக சிறப்பாகவே ஆடுகிறார்கள். ஆனால் வெற்றி கிட்டுவதில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் எனக்கு பிடித்த நிறைய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். 

ஜான்டி ரோட்ஸ்


மிகவும் சுறுசுறுப்பான வீரர்களுள் ஒருவர். இவரைப்பார்த்தாலே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இன்று வரை பீல்டிங் என்றால் அதற்க்கு இவரைத்தான் உதாரணம் காட்டுகிறார்கள். நல்ல கேட்ச் யாராவது பிடித்தால், "ஜான்டி ரோட்ஸ் மாதிரி பிடித்தான்." என்று சொல்வது ஒன்றே சாட்சி. சிறந்த பேட்ஸ்மேனும் கூட. கிரிக்கெட்டில் பீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது வாங்கிய ஒரே வீரர். 2003 உலகக்கோப்பையில், கென்ய வீரர் ஒடும்பே அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, எலும்பு முறிவு ஏற்பட, இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

கேரி கிறிஸ்டன்


ஓப்பனிங் இறங்கி நெடு நேரத்துக்கு அவுட் ஆகாமல் சோதிப்பவர். மிக அதிரடியாக ஆடமாட்டார். ஆனால் ரன்ரேட் உயர்ந்து கொண்டே செல்லும். பவுண்டரிகள் அடிப்பதை விட ஓடியே அதிக ரன் சேர்த்து விடுவார். ஆனால் விளையாடும்போது எப்போதும் கடுகடுவென முகம் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்ததில் ஒரு பயிற்சியாளராக முக்கிய பங்கு இவருக்குண்டு. 

ஜாக் காலிஸ்


பெரும்பாலானவர்களுக்கு பிடித்தவர். ஆல்ரவுண்டர் என்பதற்கு இவர்தான் சரியான உதாரணம். மிக கன்சிஸ்டண்ட் ஆக ஆடும் கிரிக்கெட்டர்களில் இவரும் ஒருவர். பேட்டிங்கோ, பவுலிங்கோ இரண்டிலுமே சாதிக்கும் வீரர்கள் மிக அரிதானவர்களே. நல்ல உடற்கட்டுள்ள இவருக்கு கிரிக்கெட் ஆட வந்ததில் இருந்தே முடி கிடையாது. இருந்தாலும் இவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. பல பெண் ரசிகைகளை பெற்றவர். 

ஷான் பொல்லாக்


இவரை பார்த்தால் பார்பி பொம்மை ஆணாக மாறிவிட்டதை போல தோன்றும். தென்னாப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவர். ஒருமாதிரி வளைந்து நெளிந்து இவர் பந்து வீசுவது வித்தியாசமாக இருக்கும். அதை பல முறை பள்ளி காலங்களில் முயற்சி செய்திருக்கிறேன். மிக ஒழுக்கமான, எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதராம். இவரை பார்த்தாலே அப்படித்தான் தோன்றுகிறது. 

பிரயன் மேக்மில்லன் 


பீமசேனன் மாதிரி கனத்த உடம்புடன், உயரமாக இருப்பார். ஆனால் பந்து வீசும்போது அசம்பந்தமாக ஓடி வருவார். துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். தென்னாபிரிக்கா விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் போதெல்லாம் சிறப்பாக ஆடி அணியை மீட்க உதவியவர். அந்த அணியின் முக்கிய பலமே அதிக ஆல்ரவுண்டர்களைக் கொண்டதுதான். அதில் இவரும் ஒருவர். மெல்ல மெல்ல ரன் சேர்க்க தொடங்கும் இவர் அதிரடியாக ஆடத்தொடங்கி விட்டால் கட்டுப்படுத்துவது கடினம். 1992 அரையிறுதியில் அந்த சங்கடமான தருணத்தில் களத்தில் நின்றவர். இவர் நின்று கொண்டிருந்தவரை வெற்றி தென்னாப்பிரிக்காவுக்குத்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள். ஆட்டம் முடிந்தவுடன், கடுப்புடன் வெளியேறுவார். 

லான்ஸ் குலூஸ்னர்


இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் இன்னொரு ஆல்ரவுண்டர். பல ஒன் மேன் ஷோக்களுக்கு சொந்தக்காரர். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டு வீரர். 

ஹெர்ஸ்சலே கிப்ஸ்


இவர் களத்தில் நின்றாலே எனக்கு எரிச்ச்லாக இருக்கும். சுமாரான ஒரு வீரராக ஆடத்தொடங்கிய இவர் 1997க்கு அப்புறம் தான் வழியையே மாற்றினார். ஈவு இரக்கமற்ற பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். எந்த ஒரு ரியாக்சனுமே இல்லாமல் அடித்து நொறுக்கிக்கொண்டே இருப்பார்.

ஆலன் டொனால்ட்


மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆறேழு வருடங்களுக்கு, தென்னாபிரிக்க பவுலிங்கின் அச்சாணியாக திகழ்ந்தவர். மிக ஆக்ரோஷமான வீரர். இவரை எப்போதும் முகத்தில் க்ரீமுடன் பார்த்து பழகி விட்டதால், அது இல்லாமல் பார்க்கும்போது ஏதோ ஒன்று குறைவதை போன்றே தோன்றும். கிரிக்கெட்டின் மறக்க முடியாத வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 

பேன்னி டிவில்லியர்ஸ்


தென்னாப்பிரிக்காவின் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர். மிக உயரமான ஆக்ரோஷமான வீரர். இவரும் டொனால்டும் சேர்ந்து வீசும் முதல் பத்து ஓவர்களை தாக்கு பிடிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டமாக இருக்கும். 93இல் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஜெயிக்க 117 ரன் மட்டுமே தேவை. டோனி கிரெக், "தென்னாபிரிக்கா வெல்ல 1 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது." என்று சொன்னார். அந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை தோற்கடுத்தவுடன் டோனி கிரேக்கிடன், "நாங்கள் எப்போதும் தளர்ந்து விடமாட்டோம்." என்று கூறினார்.  சரியாக ஆங்கிலம் பேச வராத இவர், குறைந்த காலமே கிரிக்கெட் ஆடினாலும் நல்ல புகழ் பெற்றார். 


நியூசிலாந்து 

எனக்கு தெரிந்து கிரிக்கெட்டில் அதிகம் வம்பு சண்டைக்கு போகாதவர்கள் இவர்கள்தான். நியூசிலாந்து ஒரு அழகான நாடு. அதற்கெற்றாற்போல அதன் வீரர்களும் மிக ஸ்மார்ட்டாக இருப்பார்கள். சிறப்பாக ஆடியும் ஏனோ இவர்கள் அதிகம் சாதித்ததில்லை. 

மார்க் கிரேட்பேட்ச் 


இவரை பார்த்தால் ஆங்கில படங்களில் வரும் அடியாள் மாதிரியே இருப்பார். வாயில் பபுள் கம்மோ, என்னவோ? மென்று கொண்டே இருப்பார். இவரை பார்க்கவே பயமாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் பிஞ்ச் ஹிட்டிங் அதாவது அதிரடி ஆட்டம் என்று ஒரு விஷயம் இருக்கிறது என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியவர். முன்பெல்லாம் ஜெயிக்க தேவையான ரன்ரேட் 7க்கு மேல் இருந்தால் தோல்விதான் என்று நம்பி கொண்டிருந்த நேரத்தில் அதை மாற்றி, கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கி தள்ளி, அணியை ஜெயிக்க வைத்தவர். 

கிரீஸ் ஹாரிஸ்


என்னை கேட்டால் நியூசிலாந்து அணியின் மிக சிறந்த வீரர் என்று சொல்லலாம். இவரிடம் இருந்து எல்லாவிதமான பங்களிப்பையும் எதிர்பார்க்கலாம். அணியை காப்பாற்ற பேட்ஸ்மேனாக களமிறங்குவார். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கில் அசத்துவார். சிறப்பான பல கேட்ச்களை பிடித்து, பீல்டிங்கில் அசத்துவார். இவரை நான் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே இவருக்கு தலையில் முடி இல்லை. இவரை பார்க்கும்போது நடிகர் கிட்டியின் நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை.

கிரீஸ் கெய்ன்ஸ்


நியூசிலாந்தின் மிரட்டல் வீரர். நல்ல உயரமான கம்பீரமான வீரர். சிறந்த் வேகப்பந்து வீச்சாளர். அதோடு மட்டுமல்லாமல், அதிரடியாக ஆடி ரன்களையும் குவித்தவர். நியூசிலாந்தின் கபில்தேவ் என்று இவரை கூறலாம்.  

நாதன் ஆஸ்லே


நியூசிலாந்து அணிக்காக வெகு காலம் ஓப்பனிங் இறங்கியவர். பல போட்டிகளில் வெற்றியை ஈட்டி தந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 153 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். 

டேனியல் வெட்டோரி


நியூசிலாந்தின் மிக அழகான, வெற்றிகரமான கேப்டன். எந்த நேரத்திலும் புன்னகை மாறாமல் இருப்பது இவரது சிறப்பு. மிகமிக மெதுவாக வந்து பந்து வீசுவார். கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். எந்த ஒரு கட்டத்திலும் கண்ணாடியை கழற்றியதே இல்லை.

கிரெக் மேக்மில்லன்


இவர் ஒரு முரட்டுத்தனமான ஆல்ரவுண்டர். மீடியம் பவுலிங்கில் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியவர். ஆனால் இவர் பேட்டிங்கிலேயே அதிக கவனம் செலுத்தினார். ஓப்பனிங் தொடங்கி நியூசிலாந்தின் பல்வேறு  நிலைகளிலும் களமிறங்கிய வீரர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். எல்லா நிலைகளிலும் சிறப்பாக ஆடியவர். நியூசிலாந்து வீரர்களில் வம்பு சண்டைக்கு அதிகம் போகும் வீரர் இவர்தான். சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட இவர் விரைவிலேயே ஓய்வு பெற்றுவிட்டார்.  

ரோஸ் டெய்லர் 


இவர் பார்க்க சாதுவாக இருந்தாலும் அதிரடி ஆட்டக்காரர். உலகக்கோப்பை உள்பட பல போட்டிகளில் அதிரடியில் மிரட்டி இருக்கிறார். நியூசிலாந்து அணியில் இன்றும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். 

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...