விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 30, 2011

தமிழில் படம் எடுப்பது எப்படி?ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த "எப்படி" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். "முதலில் பதிவு எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டு வா அப்புறம் எழுதலாம்." என்று சொல்கிறீர்களா? ஏற்கனவே அதை யோசித்து வைத்துவிட்டேன். அதாவது "பதிவு எழுதுவது எப்படி?" என்று ஒரு பதிவை இன்னொருநாள் எழுதலாம் என்று யோசித்து வைத்திருக்கிறேன். அதற்கு முன் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஒரு விஷயத்தை பற்றி சொல்வதற்கு, அதில் கரை கண்டிருக்கவேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை. அப்படி பார்த்தால் பதிவுல்கில் ஒருவர் கூட திரைவிமர்சனம் எழுதக்கூடாது, யாரையும் கிண்டல் பண்ண கூடாது. ஆனால் அப்படியா நடக்கிறது? ஆகவே, "முதலில் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு." என்று கேபிள் அண்ணன் தளத்தில் கமெண்ட் போடுவதை போல இங்கே கமெண்ட் போடவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 100 மார்க் எடுக்க சொல்லும் ஆசிரியரிடம், "நீ 100 மார்க் எடுத்துக்காட்டு!" என்று என்னைக்காவது சொல்லி இருக்கோமா? கிடையாது. ஏனென்றால் அது முடியாது என்று நமக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். 


டிஸ்க் 1: இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்கள். ஒரு வார்த்தை கூட யாரையும் புண்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதல்ல. 

டிஸ்க் 2: இந்த பதிவை படிக்கும்போது உங்களுக்கு ஏதாவது தமிழ் படத்தின் ஞாபகம் வந்தால். நான் பொறுப்பல்ல

டிஸ்க் 3: இது மிக........ நீளமான பதிவு. இதன் சுவையை அனுபவிக்க வேண்டுமானால், முழுவதும் படிப்பதை தவிர வேறு வழி இல்லை. 

பதிவிற்குள் போகும்முன் ஒரு சின்ன புதிர் போட்டி. 

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களுக்குமிடையே குறைந்தபட்சம் 7 வித்தியாசங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு, அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் குஜய் நடித்த சூலாயுதம் திரைப்படத்தின் திருட்டு டிவிடி வழங்கப்படும். 

தமிழ்நாட்டில் பிறந்த பலருக்கு, தான் நடிகனாக வேண்டும் என்று வாழ்க்கையில் ஒரு கணமாவது தோன்றி இருக்கும். பின் படிப்பு ஏற, ஏற, அந்த எண்ணம் மாறி, நடிகரை விட இயக்குனரே திறமைசாலி என்று புரிந்ததும், கவனம் இயக்கம் பக்கம் திரும்பும். நினைத்து விடுவார்களே ஒழிய, எப்படி இதை சாதிப்பது என்று தெரியவே தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். கொஞ்சம் நீளமாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சகலகலா இயக்குனர் ஆக வேண்டுமானால் முழுப்பதிவையும் படித்துதான் ஆகவேண்டும். 

திரைப்படம் எடுப்பது எப்படி?இதற்கு முதலில் நீங்கள் ஒரு இயக்குனரிடம் பணியாற்றி இருக்கவேண்டும். அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தாலும், எப்பேற்பட்ட கேவலமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து பழக வேண்டும். படப்பிடிப்பில் என்னென்ன நடக்கிறது, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டால் மிக வசதி. மேலும் இயக்குனரை பார்க்க வருபவர்களிடம் நன்கு நெருங்கி பழகி அவர்களின் பரிச்சயத்தை பெறவேண்டும். திரைப்படம் எடுக்க ஆள்பழக்கம் என்பது மிக முக்கியம். ஒரு கட்டத்தில் அவர்களை வைத்தே யாராவது தயாரிப்பாளரை பிடித்துக்கொள்ளலாம். அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்குவது எல்லாம் பிற்பாடுதான். அது சரி கதை எப்படி சொல்வது? அதற்குத்தான் நீங்கள் வேலை பார்த்த இயக்குனரின் படப்பிடிப்பில் என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள் என்று கவனித்தீர்கள் அல்லவா, அவற்றை பேசும்போது ஆங்காங்கே தூவ வேண்டும். 

ஆக்சன் படம் எடுப்பது எப்படி?


இருப்பதிலேயே சுலபமான வேலை இதுதான். கதை ஒன்றும் பெரிதாக தேவை இல்லை. ஹீரோ அப்பாவியானவன். அவன் வாழ்க்கையில் வில்லன் குறுக்கிடுகிறான். வில்லன் ஊரிலேயே பெரிய ரவுடி. அவனைப்பார்த்தால் போலீசே நடுங்கும். அந்த ஊரிலேயே அவன்தான் பெரிய ஆள். ஆனால் அப்படிப்பட்டவன் அந்த ஊரில் இருக்கிறான் என்றே அதுவரை ஹீரோவுக்கே தெரிந்திருக்க கூடாது. ஹீரோவுக்கு தங்கையோ, அல்லது நண்பனோ இருப்பது மிக முக்கியம். ஒரு கட்டத்தில் அதாவது இண்டர்வலுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால், நண்பனாக இருந்தால் கொல்லப்படவேண்டும், தங்கையாக இருந்தால் கற்பழித்து கொல்லப்படவேண்டும். அதுவரை அப்பாவியாக இருந்த ஹீரோ வீரனாக மாறிவிடவேண்டும். அது சரி அப்போ இண்டர்வலுக்கு முன்னால் என்ன நடக்கும்? ஹீரோ அறிமுகக்காட்சி. அதாவது ஹீரோ ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் மார்க்கெட்டில் நடனமாடினால் அனைவரும் கூட நடனமாட வேண்டும். கூடவே ஹீரோ பல தத்துவ கருத்துக்களை உதிர்க்கவேண்டும். குறிப்பாக தாய்மையை போற்றும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிறகு வில்லன் அறிமுகக்காட்சி. இது டைட்டிலுக்கு முன்னால் வந்தால் இன்னும் சிறப்பு. நடு ரோட்டில் ஒருவரை வெட்டி கொன்று விட்டு அவன் மனைவி கையை பிடித்து தரதரவென இழுத்து வருவதாக காட்டினால்தான் அவன் கொடூரமானவன் என்று அர்த்தம். ஹீரோ அறிமுகமானவுடன், அடுத்த காட்சியில் ஹீரோவின் அம்மா அவனை திருமணத்துக்கு வற்புறுத்தவேண்டும். அப்போது ஹீரோ, "எனக்குன்னு ஒருத்தி போறந்திருப்பா!!" அப்படின்னு சொன்ன உடனே........... கரெக்டா சொன்னீங்க. ஹீரோயின் அறிமுக காட்சி. நடு மார்க்கெட்டில் குட்டை பாவாடையோடு ஹீரோயின் காரை விட்டு இறங்க வேண்டும். மார்க்கெட்டில் உள்ள எல்லோரும் அவளிட்ம் ஜொள்ளுவிட, ஹீரோ அவளை கண்டுகொள்ள மாட்டான். ஆனால் அவளோ இவனை பார்த்து ஜொள்ளு விட, குறிப்பிட்ட இடைவெளியில், இரண்டு பாட்டு. அப்புறம் என்ன? இண்டர்வல் வந்துவிடும்.


இண்டர்வல்லுக்கு அப்புறம் என்ன செய்வது? ரொம்ப சிம்பிள். ஒரு நூறு சுமோ, 500 அருவாள், ஆயிரம் துப்பாக்கி எல்லாம் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளுங்கள். பிறகு ஊருக்கு ஒதுக்கு புறமாக சென்று, சுமோவில் ஆட்களை ஏற்றி அதை குறுக்கா மறுக்கா ஒட்டி படம்பிடித்து கொள்ளுங்கள். பிறகு ஒரு நாலு பைட் வைத்து ஹீரோ எல்லோரையும் போட்டு தள்ளுமாறு காட்டுங்கள். வில்லன் முதலிலேய ஹீரோ கையில் மாட்டினாலும் அவனை கொல்ல கூடாது. ஏனென்றால் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது. அது செம குத்து பாடலாக இருக்க வேண்டியது அவசியம்.  இந்த பாடல்தான் அவ்வளவு நேரம் தூங்கி கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்ப போகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படம் முடியப்போகிறதென்று எல்லோருக்கும் உணர்த்தி விடும். பிறகென்ன பைட். ஒன்று வில்லனை ஹீரோ கொல்லவேண்டும், அல்லது வெறுயாராவது கொல்லவேண்டும். அது வில்லனின் மனைவியோ, அல்லது போலீஸாகவோ இருந்தால் நல்லது.  சுபம். 

சமுதாயப்படம் எடுப்பது எப்படி?

இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கமர்ஷியல் இன்னொன்று அவார்டு படம். இரண்டுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இரண்டின் கதையையுமே நீங்கள் பர்மா பஜார் உதவியுடன் உருவாக்க முடியும். நம்நாட்டில் 90 சதவீத மக்கள் வெளிநாட்டு படங்கள் பார்ப்பதில்லை என்பதால் உங்களுக்கு கவலை இல்லை. அப்படியே தெரிந்தாலும் மக்கள், "அட நம்மாள் அந்த படம் கணக்காவே எடுத்திருக்கானே?" என்று பாராட்டவே செய்வார்கள்.

கமர்ஷியல் சமுதாயப்படம்.இதில் ஹீரோ ஒரு அப்பாவி. ஒரு வாத்தியாராகவோ, மெக்கானிக்காகவோ இருக்கவேண்டும். ஆனால் அவன் வீட்டுக்கு பின்னால் பெரிய அறையில் கலர் கலராக லைட் வைத்து நிறைய கம்பியூட்டர்கள் இருக்கும். அதில் ஒன்றை தட்டினால் சிலபேரின் படங்கள் வரும். பிறகென்ன? அவர்களை எல்லாம் ஒவ்வொருத்தராக ஹீரோ கடத்தவோ, கொல்லவோ செய்வான். எப்படி கொல்வது?, எப்படி கடத்துவது? என்று குழம்பவேண்டாம். இந்த இடத்தில்தான் உங்களுக்கு பர்மா பஜார் உதவப்போகிறது. ஏதாவது ஒரு உலகப்படத்தில் இருந்து ஒரு காட்சியை இன்ஸ்பயர் ஆகி ஆட்டைய போட்டுவிடலாம். கடத்தப்பட்டவர்கள் எல்லாம் சமூகத்தில் பெரிய ஆட்கள். இந்தியாவே ஸ்தம்பிக்கிறது. இந்தியா முழுவதும் போலீஸ் தேடினாலும் ஹீரோ இருக்கும் இடம் தெரியாது. இப்போது இண்டர்வல். இண்டர்வல் முடிந்தவுடன், போலீசாலேயே கண்டுபிடிக்க முடியாத ஹீரோவின் இடத்தை ஹீரோயின் கண்டுபிடித்து விடுவாள். ஹீரோ அவளிடம் கதை சொல்ல தொடங்குவான். பிளாஷ்பேக்கில் ஒரு சோக சம்பவம் நடந்திருக்க வேண்டும். ஹீரோவின் குடும்பமோ, காதலியோ, ஒரு சமூக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செத்திருப்பார்கள். அன்றில் இருந்து சமுதாயத்தை திருத்த ஹீரோ புறப்படுவார். கிளைமாக்சுக்கு முன்னால் ஹீரோ போலீசில் பிடிபடுவார். இறுதிக்காட்சியில் கோர்ட்டில் ஆவேசமாக வசனம் பேசுவார். நாடே அவருக்காக அழும். கோர்ட்டில் ஜட்ஜ் அழுவதும் ரொம்ப முக்கியம்.  கடைசியில் சில வருடங்களுக்கு பிறகு என்று போட்டு, ஹீரோ ஜெயிலில் இருந்து வருவதாக காட்டலாம். சுபம். அவார்ட் சமுதாயப்படம்

இதில் முக்கியம் இசை இருக்கவே கூடாது. நடிகர்கள் யாரும் மேக்கப் போடக்கூடாது. கதாநாயகி விபச்சாரியாக இருக்கவேண்டும். ஹீரோ ஒரு போறம்போக்காகவோ அல்லது மனநலம் குன்றியவராகவோ இருக்கவேண்டும். படம் முழுவதும் எல்லோரும் கெட்டவார்த்தை பேசவேண்டும். அடிக்கடி வாழ்க்கையின் தத்துவத்தை யாராவது உதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஹீரோ, ஹீரோயின் வாழ்க்கையில் நல்லதே நடக்க கூடாது. இறுதியில் அனைவரும் செத்து விடவேண்டும். மற்றபடி இந்த வகை படத்திற்கான கதை, கொரியா அல்லாத ஃபிரெஞ்சு படங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். 


காதல் படம் எடுப்பது எப்படி?


இந்த வகை படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். படத்தில் சோகப்பாடலே இருக்க கூடாது. படம் முழுவதையுமே ஊட்டி மாதிரி ஒரு இடத்தில் இருக்கும் கல்லூரியிலேயே எடுக்கவேண்டும். முதல் காட்சியிலேயே ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் காதல் வந்துவிடவேண்டும். பிறகு பிரிவார்கள், சேர்வார்கள், பிரிவார்கள், சேர்வார்கள். மாறி மாறி காட்சிகள் வந்துகொண்டே இருக்க வேண்டும். ஹீரோ ஏழையாக இருந்தாலும் பைக், ரெபான்  கிளாஸ் இல்லாமல் காலேஜ் வரமாட்டான். காதலுக்கு பெற்றோரை எதிரி ஆக்குவதெல்லாம் அந்தக்காலம். இப்போது காதலுக்கு அவர்களேதான் எதிரி. படத்தில் லிப் டு லிப் கிஸ் மிக முக்கியம். ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு கேன்சர் இருப்பது நல்லது. அதே போல கிளைமாக்ஸ் காட்சி ரயில் நிலையத்திலோ, ஏர்போர்ட்டிலோ நடக்கவேண்டியது மிக முக்கியம். இந்த வகை படங்களுக்கான கதையை ஹிந்தி திரைப்படங்களில் இருந்து சுடுவது நல்லது.

திகில்படம் அல்லது பக்திபடம் எடுப்பது எப்படி?

இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டுமே தொழில்நுட்பத்தில் முன்னேறிய படங்கள். படத்தின் உயிர்நாடியே கிராபிக்ஸ்தான்.


திகில் படத்தை பொறுத்தவரை ஒரே கதைதான். ஒரு பங்களா. அது நடுக்காட்டுக்குள் இருக்கிறது. யாருமே வராத அந்த இடத்துக்கு, ஒரு ஐந்து பேர் கொண்ட குழு, மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்(டவுசர் மற்றும் பனியனுடன்) வந்து தங்குவார்கள். அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்பப்போ வந்து அனைவரையும் பயமுறுத்துகிறது. பின்னர் ஒவ்வொருவராக கொல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் தப்பிப்பார். பிறகு அவர் ஒரு சாமியாரிடம் செல்வார். சாமியார் உதவியுடன் பேயிடம் விசாரித்தால் அது தன் கதையை சொல்லும். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் இதே பங்களாவில் வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பாள். அதற்கு இந்த ஐந்து பெரும் உடந்தை. பிறகென்ன, மிச்சமிருக்கும் அந்த ஒருவனையும் கொன்றுவிட்டு பேய் சாந்தி அடையும். படத்தில் பேயை விட, அதில் வரும் சாமியார், வேலைக்காரி ஆகியோர் மிக டெரராக இருக்கவேண்டும். பேயாக வருபவர் கவர்ச்சி நடிகையாக இருப்பது மிகமுக்கியம். பெரும்பாலும் படத்துக்கு வருபவர்கள் அந்த கற்பழிப்பு காட்சிக்காகத்தான் வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

பக்தி படத்தில் ஒரு மந்திரவாதி. அவன் தான் விரும்பும் சக்தியை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரு குழந்தையை கொல்லவேண்டும். அது அம்மனின் தீவிர பக்தையான கதாநாயகியின் குழந்தை. ஆகவே அவர்களை நெருங்க விடாமல் அம்மன் காப்பாற்றுகிறார். பெரிய சைஸ், தேள், பாம்பு என்று எதை அனுப்பியும் பிரயோசனம் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகிக்கும் அம்மனுக்கும் லடாய் ஆகி விட, அம்மன் மன்மோஹன்சிங் ஆகி விடுகிறது. அதன்பின் படம் முழுவதும் மந்திரவாதி அவர்களையும், நம்மையும் டார்ச்சர் செய்கிறார். கிளைமாக்ஸில் டார்ச்சர் தாங்காமல் அம்மனே டான்ஸ் ஆடிக்கொண்டே வந்து மந்திரவாதியை கொன்று அவர்களையும், நம்மையும் கிராபிக்ஸ் உதவியுடன் காப்பாற்றுகிறார். படத்தில் உடுக்கை சத்தமும், குலவை சத்தமும் மிக முக்கியம். இந்த மாதிரி படங்களில் கதாநாயகனுக்கு வேலையே இல்லை. பிரபு, கரன், ராம்கி ஆகியோர் பொருத்தமாக இருப்பர்.  

இன்னும் ஃபீல் குட்படம் எடுப்பது எப்படி?, பிட்டு படம் எடுப்பது எப்படி?, காமெடி படம் எடுப்பது எப்படி? என்று கைவசம் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. இப்போதே இந்த பதிவை படித்து பலபேர் பீதி ஆகி இருப்பதால், அவற்றை இன்னொருநாள் சொல்கிறேன்.  அப்புறம் புதிருக்கு விடை சொல்ல மறக்காதீங்க. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


முழுவதும் படிக்க >>

July 29, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 15

தாதாவை துரத்திய சர்ச்சைகள்...
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி அடைந்து, சோகத்துடன் நாடு திரும்பியது. ஆனால் இந்திய வீரர்களின் திறமை மிக்க ஆட்டத்தை எல்லோரும் பாராட்டவே செய்தனர். தொடக்கத்தில் மோசமாக ஆடினாலும், தொடரின் முக்கிய கட்டங்களில் சிறப்பாகவே செயல் பட்டது இந்திய அணி. இந்த இறுதி போட்டியில் இருந்து இந்தியா கற்றுக்கொண்ட பாடம், இந்திய அணி ஒரு சிறந்த அணிதான். ஆனால் மிகச்சிறந்த அணி என்று தப்பு கணக்கு போட்டுவிட்டோம். அப்போதைக்கு தலைசிறந்த அணி ஆஸ்திரேலியாதான். ஒரு அணி முதலிடத்தை பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதை விட மிக கஷ்டம் அதை வெகு காலத்துக்கு தக்க வைத்துக்கொண்டிருப்பது. அந்த வகையில் ஆஸ்திரேலியா தலை சிறந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் பட்டியலில் முதலிடம் வகிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. அதிலும் முதலிடத்துக்கும் இரண்டாமிடத்துக்கும் உள்ள புள்ளிகள் வித்தியாசம் எட்ட முடியாத தூரம. 1998 முதல் 2008 வரையிலான பத்து ஆண்டுகள் என்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். 2003 வரையாவது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள், அதன் பின் அந்த நினைப்பையே கைவிட்டனர். இது முதல் படிதான் இன்னும் நிறைய உழைக்கவேண்டும். உலககோப்பை வெல்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்ட இரண்டே அணிகள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காதான். டெஸ்ட் தொடர்களோ, ஒருநாள் தொடர்களோ, இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாகவே விளங்கினர். குறிப்பாக லக்ஷ்மண் மற்றும் டிராவிட் இருவரும் ஆஸ்திரேலியாவை கலங்கடித்தனர். கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே டிராவிட் அரைசதமடித்தார். 2003 டிசம்பரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் ஒருநாள் தொடர்களிலும் சிறப்பாகவே ஆடியது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனே ஆடியதாலோ என்னவோ, மற்ற அணிகளோடு விளையாடுவது இந்தியாவுக்கு மிக எளிதாக இருந்தது போலும். 


அதற்கு மிக சிறந்த உதாரணம், ஆஸ்திரேலிய தொடருக்கு அடுத்ததாக இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் பயணம். சில பல அரசியல் காரணங்களுக்காக பல வருடங்கள் பாகிஸ்தான் செல்லாமல் இருந்த இந்திய அணி 2004இல் பாகிஸ்தான் சென்றது. இத்தனை வருடம் கிரிக்கெட் ஆடியும், இந்திய அணியால் பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியவில்லை. முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது. "எவண்டா சொன்னான். டெஸ்ட் போட்டி என்றாலே எல்லாரும் கட்டையை போடுவார்கள். மந்தமாக இருக்கும் என்று? இதோ பாருங்கடா! இதுவும் டெஸ்ட் போட்டிதான்.", என்று சொல்லாமல் ஆடிக்காட்டினார் சேவாக். முதல் நாள் முடிவில் இந்தியா 356 எடுக்க அதில் சேவாக் மட்டும் 228. மரண அடி என்றால் என்ன என்று மறுபடியும் நிரூபித்தார். சரி மறுநாள் அவுட் ஆகி விடுவார் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. சேவாக் சோர்வடைவது போலவே தெரியவில்லை. பொதுவாக சில பேட்ஸ்மேன்கள், தொண்ணூறுகளில் இருக்கும்போது சதம் அடிக்கும் வரை மெதுவாக ஆடுவார்கள். ஆனால் சேவாக் அந்த நெருக்கடியை விரும்புவதில்லை. முடிந்த வரை சீக்கிரமாக சதம் அடிக்க வேண்டும் என்றே விரும்பினார். 296 இல் இருந்து சிக்சர் அடித்து 300ஐ எட்டும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு. இந்த போட்டியில் அவர் எடுத்தது 309 ரன்கள். அன்றில் இருந்து அவரை எல்லோரும் முல்தான் கா சுல்தான் (முல்தானின் ராஜா) என்று அழைக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் சேவாக்குக்கு சொந்தமான ஓட்டலில், முல்தான் பிரியாணி 309 ரூபாய்க்கு விற்கபடுகிறது. 


இதுவரை பல வீரர்கள் அதிரடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தாலும், சேவாக் மாதிரி மரண அடி இதுவரை யாரும் அடித்ததில்லை. அதாவது அதிவிரைவாக இரட்டை சதம் அடித்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், ஐந்து முறை சேவாக் பெயர் இடம்பெற்றுள்ளது, அதே போல அதிவிரைவாக முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில், இரண்டு முறை அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளையும் சுறுசுறுப்பாக்கிய பெருமை சேவாக்குக்கு உண்டு. டெஸ்ட் போட்டிகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நாள் போட்டிகள் மாதிரி, டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடுவதற்கு தனி திறமை வேண்டும். இதற்கு முந்தைய காலகட்டங்களில், தன் மீது சொல்லப்பட்டு வந்த குறைகளை மெதுவாக திருத்திக்கொண்டு, வேகத்தோடு மட்டுமே ஆடி வந்த சேவாக், விவேகமான வேகத்தோடு செயல் பட ஆரம்பித்தார்.


முல்தான் டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்னில் இருக்கும்போது அப்போதைய தற்காலிக கேப்டன் டிராவிட் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. "சச்சினை இரட்டை சதம் அடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, கங்குலி தீட்டிய திட்டம்." என்றும் சொன்னார்கள். கங்குலி மீது மீண்டும் சர்ச்சைகள் வரத்தொடங்கின. பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இந்தியா அணி சாதனை படைத்தது. ஸ்ரீநாத் விடைபெற்ற நிலையில், அணிக்கு வந்த பதான், பாலாஜி உள்ளிட்ட பவுலர்கள், ஒருநாள் தொடரிலும் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து வந்த ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடி வந்தனர். இந்த போட்டிகளின் போது, கங்குலி மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நேரமே (2 நிமிடம்) களத்தில் இருப்பார் என்று கிண்டலாக பேசப்பட்டது. கங்குலி பெரும்பாலான போட்டிகளில் மிக மோசமாக ஆடினாலும், அவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை பெற்று வந்தது மறுக்கமுடியாதது. 

இருந்தாலும் கங்குலியின் தலைமை மீது ஒரு பெரும் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி கிட்டத்தட்ட எல்லா இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுவிடும். ஆனால் இறுதிபோட்டியில் தோல்வி அடைது வெளியேறி விடும். அவர் தலைமையில் இந்தியா வரிசையாக 17 தொடர்களில் இறுதிபோட்டியில் தோல்வி அடைந்து சாதனை படைத்தது. மெல்ல மெல்ல கங்குலி மீது பலரும் அதிருப்தி அடைய தொடங்கினார்கள். இந்த நேரத்தில் கங்குலிக்கு ஆதரவாக இருந்த டால்மியா பதவி விலக, சரத் பவார் பி‌சி‌சி‌ஐ தலைவரானார்.  இவருக்கு டால்மியாவை பிடிக்காது. ஆகவே கங்குலியையும் பிடிக்காமல் போனது. வெகுநாட்களுக்கு யாருக்கும் தோன்றாத ஒரு கேள்வி மறுபடியும் முளைத்தது. அடுத்த கேப்டன் யார்? டிராவிட், கும்ப்ளே, அல்லது சேவாக் என்று எல்லோரும் பேசிக்கொண்டனர். இதற்கிடையே 2004 இறுதியில் இந்திய அணி வங்காளதேசம் சென்றது. 


பொதுவாக இந்த மாதிரி சிறிய அணிகளோடு விளையாடும் தொடர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்படும். இந்த தொடரும் அப்படித்தான் விடப்பட்டது. ஆனால் இரண்டாண்டுகளுக்கு பிறகே இந்த தொடரை பற்றி எல்லோரும் செய்தியை சேகரித்தார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்தேன். சில சமயம் கல்லூரி அருகில் தங்கி இருந்த வெளியூர் நண்பர்களின் அறைக்கு செல்வது வழக்கம். அப்போது ஒரு டீக்கடையில் இந்தியா பங்களாதேஷ் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஒருவன் மிக வினோதமாக இருந்தான். அவன் மட்டை சுழற்றும் விதம், மிக வினோதமாக, கேவலமாக இருந்தது. இதற்கு முன் இந்திய அணியில் பெரும்பாலும் ஒல்லியானவர்களே ஆடி இருக்கிறார்கள். இவன் பார்ப்பதற்கு பயில்வான் மாதிரி இருக்கிறான். தோள்பட்டை வரை நீண்ட முடி. "யார்ரா இவன்? சரியான காட்டானாக இருக்கிறான். இவனெல்லாம் எப்படி டீமுக்குள்ள வந்தான்?" என்று கேட்டேன். அப்போது எனக்கு தெரியாது, அவனுடைய தலைமையில்தான் இந்திய அணி உலகக்கோப்பையை ஜெயிக்கபோகிறதென்று. அவன்தான் மகேந்திரசிங் தோனி. 


தூக்கி எறியப்பட்ட தாதா... கரீபியன் மண்ணில் உலகக்கோப்பை... 
அடுத்த பதிவில்..... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...  

முழுவதும் படிக்க >>

July 27, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 14

இந்த தொடருக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். "என்னடா இவன்?" நன்றிய எதனை தடவை சொல்வான்னு நினைக்கிறீர்களா? ஒரு சில நேரம் இந்த தொடரை படிக்கும்போது எனக்கே சலிப்பு தட்டுகிறது. ஆனால் சலிக்காமல் படித்து ஆதரவு கொடுத்து வருபவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா? மேலும் தொடரை முடித்து விட்டு எல்லோருக்கும் நன்றி சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அது முறையல்ல என்பதால்தான் அடிக்கடி சொல்கிறேன். இது கிரிக்கெட் பற்றிய ஒரு முழுமையான தொடர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகனாக எனது அனுபவங்கள் மட்டுமே. ஆனால் அதை முடிந்த அளவிற்கு சுவாரசியமாக்கி தர முயன்று கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து வரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

வாய்ப்பை தவற விட்ட இலங்கை... பாண்டிங் அடித்த மரண அடி. 
உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கே உரிய அத்தனை சுவாரசியங்களையும் தந்த முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா என்ற நான்கு பெரிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. அதிலும் தென்னாபிரிக்கா, உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி. வழக்கமாக ஒரு அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேற்றப்பட்டால் முதலில் பலியாவது கேப்டன்தான். இங்கேயும் அதுவே நடந்தது. மேலும் என் வயதை ஒத்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நான் பார்த்து ரசித்து வந்த பல ஜாம்பவான்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டை விட்டு விடைபெற்றார்கள். கார்ல் ஹூப்பர் (மே தீ), கிறிஸ்டன், அலேக் ஸ்டூவர்ட், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என்று பெரிய வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விடைபெற்றார்கள். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு இவர்களின் இழப்பு, கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்தது என்னவோ உண்மை.


2003 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்களை பொறுத்தவரை இந்திய அணிக்கு எந்த நெருக்கடியும் இருக்கவில்லை. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் பெரிய அணிகள் இரண்டு வராததால் மற்ற அணிகள் நிம்மதி அடைந்தது ஒருபுறம் என்றால், சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்ததையே பெரிய வெற்றியாக கொண்டாடி கொண்டிருந்தன ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள். ஆஸ்திரேலியா, "என் வழி தனி வழி", என்ற ரேஞ்சில், பட்டையை கிளப்பி தனி ரூட்டில் சென்று கொண்டிருந்தது. இந்திய அணி, ஜாக்கிரதையாக ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொண்டது. முன்பெல்லாம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால், மிச்சம் உள்ள போட்டிகளை கடனே என்று ஆடுவார்கள். ஆனால் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதில் கவனமாக இருந்தார் கங்குலி.


ஒரு அணி கோப்பையை வெல்ல முக்கியமான தகுதி அதன் கன்சிஸ்டன்சி. அதாவது தொடர்ந்து தன் திறமையை நிரூபிப்பது. அந்த வகையில் இந்த கோப்பைக்கு தகுதியான அணி ஆஸ்திரேலியாதான். லீக் சுற்றில் இந்தியா சொதப்பியதை போல, சூப்பர் சிக்சில் இலங்கை சொதப்பியது. முதலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இலங்கை, அடுத்த போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த உலகக்கோப்பை தொடரிலேயே இலங்கையின் மோசமான ஆட்டம் என்றால் அது இந்த போட்டிதான். முதலில் ஆடிய இந்திய அணி சச்சினின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் 292 ரன் குவித்தது. இந்திய அணியின் பேட்டிங் பலமடைந்து கொண்டே வந்தது. இப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு சச்சினும் சேவாக்கும் சேர்ந்து 152 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. பிறகு களமிறங்கிய இலங்கையின் ஆட்டம் மிக மோசமானதாக இருந்தது. 4 ஓவருக்குள் 15 ரன்னில் 4 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டன. பிறகு வந்த வீரர்களால் விக்கெட்டை கட்டுப்படுத்துவதா? இல்லை ஸ்கோரிங் ரேட்டை உயர்த்துவதா? என்று குழப்பம் அடைந்து விட்டனர். இளம் வீரர் சங்கக்காரா(30) மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். இலங்கையால் 109 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சங்கக்காராவுக்கு அடுத்த படியாக உதிரிகளாக 21 ரன் வந்தது மட்டுமே அதிகபட்சம். சுமார் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். 


மறுபக்கம் நியூசிலாந்து படுசொதப்பலாக ஆடி வந்தது. இந்தியாவுடனான ஆட்டத்தில் ஸ்கோரிங்கை துவக்காமலேயே முக்கிய ஆட்டக்காரர்கள், மேக்மில்லன் மற்றும் ஆஸ்லே அவுட் ஆகிவிட, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 146 மட்டுமே எடுத்தது. இந்திய அணி எளிதில் வென்றது. பல திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரில் அடுத்த அதிர்ச்சி சூப்பர் சிக்ஸ் சுற்று முடிந்தவுடன் காத்திருந்தது. இந்த சுற்று தொடங்கும்போது எல்லோருமே, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.  சூப்பர் சிக்சில் இலங்கையும், நியூசிலாந்தும் சொதப்பி கொண்டிருக்க, வந்தவரை லாபம் என்று கென்யா தன் ரன் ரேட்டை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டது. மேலும் ஏற்கனவே இலங்கையுடன் வெற்றி பெற்றதால் போனஸ் பாயிண்ட் வேறு பையில் இருக்கிறது. சூப்பர் சிக்ஸில் தனக்கு வேண்டிய ஒரே ஒரு வெற்றியை ஜிம்பாப்வேயிடம் இருந்து பெற்றுக்கொண்டது கென்யா. மட்டமாக ஆடிய நியூசிலாந்து அணி வெளியேற, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து, கென்யாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதை கென்யா ரசிகர்களாலேயே நம்ப முடியவில்லை.


தாங்கள் உலகக்கோப்பையையே வென்று விட்டதை போல உணர்ந்தனர் கென்யா வீரர்கள். அவர்களின் இந்த வெற்றிக்கு கென்யா அணியின் கோச் சந்தீப் பட்டீலும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 80களில் இந்திய அணியின் அதிரடி மன்னன் சந்தீப் பட்டீல், திறமையாக செயல் பட்டு கென்யா அணியை அரையிறுதிவரை முன்னேற உதவினார். ஆனால் 2003 உலகக்கோப்பைக்கு பின் இவர் விடை பெற, முன்பிருந்த நிலையை விட படு பாதாளத்துக்கு போய் விட்டது கென்யா அணி. எனக்கு சந்தோஷம் தாளவில்லை. அரையிறுதி இலங்கையோடு என்றால் கூட கொஞ்சம் சந்தேகம் வரும். இப்போது சந்தேகமே இல்லை. இந்திய அணி மோதப்போவது கென்யாவுடன். இறுதிக்கு சென்றுவிட்டோம். இன்னும் ஒரே ஒரு படிதான். முன்னதாக நடந்த முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இலங்கை. தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது ஆஸ்திரேலியா. என்னை பொறுத்த வரை இத்தொடரில் ஆஸ்திரேலியா சறுக்கிய ஒரே போட்டி இதுதான். 144 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது ஆஸ்திரேலியா.

இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டதில் எனக்கு இலங்கை மீது வருத்தம்தான். ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் மட்டும் கொஞ்சம் நிலைத்து ஆடி 91 அடிக்க ஆஸ்திரேலியா 212 மட்டுமே எடுத்தது. கொஞ்சம் கவனமாக ஆடி இருக்கலாம். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ஸ்கோர் மாற்றி அமைக்கப்பட இலங்கை வீரர்கள் பதட்டத்துடன் ஆடினார். இதனை சாதகமாக்கிக்கொண்ட பவுலர்கள், ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர். பிரெட்லீ தன்னுடைய அசுரவேகத்தால் இலங்கையை வீழ்த்தினார். அவரது கேரியரின் உச்ச்கட்டத்தில் இருந்த நேரம் அது.  ஒரு சுவாரசியமான செய்தி. இந்த ஆட்டத்தில் சைமண்ட்ஸ் ஆடிக்கொண்டிருந்த கடைசி பத்து ஓவர்களை, மதுரையில் இருந்து வரும் வழியில் பேருந்தில் பார்த்துக்கொண்டே வந்தேன். டி‌டி‌எச் இல்லாத காலத்தில் ஆண்டெனாவை பேருந்தில் மாட்டி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய மேட்சை, ஓடுகிற பேருந்தில், டிவியில் காட்டிய அந்த கண்டக்டரின் டெக்னிக்கல் அறிவு வியக்க வைத்தது.


"அப்பாடா! ஒரு வழியாக இறுதிப்போட்டிக்குள் வந்தாயிற்று. இன்னும் ஒரே ஒரு வெற்றி. என்னுடைய பத்தாண்டு கனவு பலிக்கபோகிறது.".  நாடே விழாக்கோலம் பூண்டது. கடந்த சில வருடங்களாக சந்தித்து வந்த பல அவமானகளில் இருந்து விடுபட்டு, சிலிர்த்து எழுந்து உலகக்கோப்பை இறுதிவரை இந்திய அணி வந்ததற்கு முதல் மற்றும் மிகப்பெரும் காரணம் கங்குலி என்ற தன்னிகரற்ற ஒரு கேப்டன்தான். சரியான நேரத்தில் அதிரடியான முடிவுகள் எடுத்து, அவற்றை சரியாக செயல்படுத்தி, வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணியின் பலம் பேட்டிங் என்று தெரிந்ததால்தான் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்ற நிலையில், விக்கெட் கீப்பரை விட்டுக்கொடுத்து, டிராவிட்டையே விக்கெட் கீப்பராக பயன்படுத்திக்கொண்டார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, ஷேன் வார்னே அணியில் இருந்து விலக்கப்ப்ட்டது, தொடர்ச்சியாக இந்தியா பெற்ற வெற்றிகள் போன்றவை, என் மனதில் நம்பிக்கையை ஆழமாக ஊன்றிவிட்டது


என்னதான் நம்பிக்கை இருந்தாலும் அடி மனதில் ஏதோ ஒரு உறுத்தல். சரி பார்க்கலாம். தொடங்கியது இறுதிப்போட்டி. தொடக்கம் முதலே ஆஸ்திரேலியர்களின் கை ஓங்கியே இருந்தது. 20 ஓவரில் 125 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகள் விழ ஓரளவுக்கு ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விட்டால் வென்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அடுத்து களமிறங்கியவர்கள் ரன்ரேட்டை உயர்த்திக்கொண்டே போனார்கள். 42 ஓவரில் 250 ரன்னாக இருந்தபோது, பாண்டிங் ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார். விளைவாக சிக்சர் மழை பொழிய ஆரம்பித்தது. இறுதியாக பாண்டிங் எட்டு சிக்சர்களுடன் 140 ரன் சேர்க்க, ஆஸ்திரேலியா 359 ரன் எடுத்தது. இந்தியா ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை. இதை எட்டினால் அது உலகசாதனை. "இருக்கட்டுமே, நாட்வெஸ்டில் எடுக்கவில்லையா? முடியும்.", என்று நானே சொல்லிக்கொண்டேன்.

சச்சினும் சேவாக்கும் களமிறங்கினார்கள். மிக நெருக்கடியான இந்த ஆட்டத்தில் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய கையோடு நடையை கட்டினார் சச்சின். பாதிப்பேர் டிவியை ஆப் செய்துவிட்டு போய்விட்டனர். கொஞ்சம் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினாலும், 59 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகள் விழ,  சேவாக்கும் டிராவிட்டும் அதிரடியாக ஆடினார்கள். என் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது.  17ஆவது ஓவரில் மழை கொட்டத்தொடங்கியது. பெரும்பாலான இந்தியர்கள் ஆட்டம் கைவிடப்படும் என்று எண்ணி பட்டாசு வெடிக்க தொடங்கினார்கள். ஆனால் சிறிது நேரத்திலேயே மழை விட, ஆட்டம் தொடங்கியது. அடுத்து சேவாக்கும், டிராவிட்டும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். போராடிக்கொண்டிருந்த யுவராஜ் 208 ரன்னில் அவுட் ஆக, மிச்சம் இருந்த அனைத்து வீரர்களும் கடனுக்கு என்று இரண்டு பந்துகள் ஆடிவிட்டு அவுட் ஆனார்கள். புதிய கேப்டன் பாண்டிங் தலைமையில் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்திய ரசிகர்கள் கோபம் அடையவில்லை. கடந்த காலத்தை ஒப்பிடும்போது, இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றதே ஒரு சாதனை என்று கூறப்பட்டது. "ஒருவேளை இந்த மன நிலைதான் நம் தோல்விக்கு காரணமா? இறுதிப்போட்டிக்கு வந்ததே போதும் என்று வீரர்கள் நினைத்து விட்டார்களோ?" என்று பல கேள்விகள்.


என்னை பொறுத்தவரை, நான் பார்த்ததிலேயே, 2011ஐ விடவும் 2003 உலகக்கோப்பை போட்டிகள்தான் மிகச்சிறந்தவை என்பேன். அதன் காரணம் எண்ணவென்று தெரியவில்லை. ஒரு வேளை என் கல்லூரிப்பருவம் என்பதாலோ என்னவோ? இந்த தொடரில் அதிக ரன் சேர்த்த பெருமையை பெற்றார் சச்சின். "சரி இது முதல் படிதான். எப்படியும் 2007இல் கோப்பையை தட்டி விடலாம்." என்று என் கனவை தள்ளிபோட்டேன்.....


மீண்டும் முளைத்த சர்ச்சைகள்..... அடுத்த பதிவில் 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

July 26, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 13


சரித்திர புகழ் வாய்ந்த 2000ஆவது டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடி தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றி கொடி நாட்டியுள்ளது இங்கிலாந்து. இந்திய அணிக்கு இதெல்லாம் புதிதில்லை. 1983 உலகக்கோப்பையை வென்று முடித்த கையோடு மேற்கிந்திய தீவுகள் அணியியிடம் உள்ளூரிலேயே படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் தோனி அணிக்கு உள்ள ஒரு குணாதிசயம், தோல்வியில் தொடங்கி, மீண்டு வந்து கோப்பையை வெல்வது. பார்க்கலாம். இந்தியானாக, இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள். அப்புறம் சச்சின் பாவம்பா... நாம எல்லாம் சும்மா இருந்தாலே அவர் சதம் அடிப்பாரு. அவர் உடனடியாக 100ஆவது சதம் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பது தேவையற்றது.சஃபாரியில் களமிறங்கியது கங்குலி அணி.... 

எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2003 உலகக்கோப்பைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏறக்குறைய, "யார் உலகக்கோப்பையை வெல்வார்கள்?" என்று பெரிய குழப்பமே நீடித்தது. ஆஸ்திரேலியா அசுர பலத்துடன் களமிறங்கியது. துடிப்பான அணியுடன், இந்தியாவும், இலங்கையும் களமிறங்கின. வழக்கம்போல எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்று தெரியாத அபாயகரமான அணிகளாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. கிரிக்கெட்டின் தாயகம், நிறைய முறை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை தவறவிட்ட அணி, கடந்த இரண்டு உலகக்கோப்பைகளாக, அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில், சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்கமே இந்தியாவுக்கு கலக்கம்தான். இந்திய அணி இருந்த பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இருந்தன. இதில் எதேனும் ஒரு பெரிய அணி முதல் சுற்றில் வெளியேறியே ஆக வேண்டும். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. 


ஒளிபரப்பை இந்த முறை சோனி மேக்ஸ் கைப்பற்றி இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கும் ஒரு கார்ட்டூன் புலி வந்து கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள், மிகவும் பிரபலமான கார்ட்டூன் அது. ஆனால் அதை விட மிக பிரபலமானது, ஒவ்வொரு போட்டிகளுக்கும் முன்னோட்டம் அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்திரா பேடியும் அவரது ப்ரீ ஷோ உடைகளும். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடந்த அன்று இவர் கட்டி இருந்த சேலை மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் பெப்சி நிறுவனத்தினர் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் போடுவார்கள். இந்த முறை தென்னாபிரிக்க காட்டுக்குள் கிரிக்கெட் ஆடும்போது பந்து, ஒரு சிங்கத்திடம் விழ அதில் இருந்து பிழைப்பது போன்ற ஒரு விளம்பரம். மேலும் எல்லாம் விளம்பரத்திலும் ஏதாவது ஒரு வீரர் சிக்சராக விளாசுவதாக இருக்கும். கொண்டாட்டத்துடன் தொடங்கியது 2003 உலகக்கோப்பை. தொடக்கவிழாவில் ஆப்பிரிக்கா பழங்குடியினர் நடனத்தை ஆடிய ஒரு பெண்கள் குழு, மேலாடை இல்லாமல் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு முதல் போட்டி நெதர்லாந்துடன். சும்மா ஊதி தள்ளி விடலாம் என்று நினைத்தால், பேட்டிங் மிக சொதப்பல். தட்டு தடுமாறி 204 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் அவர்கள் 49 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று விட்டார்கள். "என்னடா இது? சின்ன அணியிடமே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இப்படி சொதப்புகிறார்கள்?", என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த போட்டி, ஆஸ்திரேலியாவுடன். அந்த நேரத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணிக்கு ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்ததால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு, உலகக்கோப்பையை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. இதே மாதிரி 2011 இல் நடந்த இந்திய இங்கிலாந்து லீக் போட்டியிலும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தை முழுவதுமாக கையில் எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்திய அணி 125க்கு ஆல் அவுட். டெண்டுல்கர் மட்டுமே 36 ரன். ஆஸ்திரேலியா 23 ஓவரில் வெற்றி பெற, உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணிக்கு செருப்படி கொடுத்தது போல இருந்தது. 


நிஜ போட்டியில் வீரர்கள் டக் அடித்து கொண்டிருக்க, விளம்பரங்களில் எல்லாம் வீரர்கள் சிக்சர் அடிப்பது போல காட்டிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படி விளம்பரம் வர, ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். விளைவாக இந்திய அணியினருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. சேவாக் உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள், "ரசிகர்கள் இப்படி செய்வதால், வீரர்களுக்கு பிரஷ்ஷர் அதிகரிக்கும். ஆகவே இப்படி செய்ய கூடாது." என்று கூறினார்கள். கங்குலியும் ரசிகர்களை பொறுமை காக்குமாறு அறிவுறுத்தினார். அதற்கேற்றாற்போல அடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை துவைத்து எடுத்தது இந்தியா. இந்த தொடரில் ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும் சச்சின் வெளுத்து வாங்கினார். நமீபியாவுடன் 152 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக இங்கிலாந்துடன் மோத வேண்டும். 

கேடிக் ஓவரில் சச்சின் அடித்த மிகப்பெரிய சிக்சர்

சச்சினிடம் நிறைய வீரர்கள் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதுண்டு. இந்த முறை இங்கிலாந்தின் ஆண்டி கேடிக், "சச்சின் ஒன்றும் வீழ்த்த முடியாதவர் அல்ல, நான் சச்சினை இந்த முறை வீழ்த்துவேன்." என்று கூறினார். அந்த ஆட்டத்தில் சச்சின் ருத்ர தாண்டவம் ஆடினார். கேடிக் பந்துகளை நொறுக்கி தள்ளினார். கேடிக் ஓவரில் அவர் அடித்த இமாலய சிக்சர் மிக பிரசித்தம். முதலில் சிறப்பாக ஆடினாலும், கடைசி ஓவரில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழக்க, 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதலில் நிதானமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் தாறுமாறாக விக்கெட்டுகள் விழ நிலைமை படுமோசமானது. இங்கிலாந்தின் இந்த நிலைக்கு காரணம், அணியில் புதிதாய் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து 168 ரன்னுக்குள் சுருண்டது. இந்த உலகக்கோப்பையில் ஒரு சில போட்டிகளைத்தவிர எல்லா போட்டிகளிலும், இந்திய வீரர்கள் எதிரணியை 200க்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. 


பந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் உலகக்கோப்பை நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. அடுத்ததாக எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய பாகிஸ்தான் ஆட்டம். இரு அணிகளும் சம நிலையில் இருக்க, போட்டி பரபரப்பாக தொடங்கியது. இந்த ஆட்டம் நடந்த அன்று என் ஆசிரியர் செய்த சதியால், கல்லூரிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே, இந்திய பேட்டிங் மட்டுமே பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் வீரர்களால் இந்திய ஸ்கோரிங்கை கட்டுப்படுத்த முடியாததால், பரிதாபமாக தோற்றது பாகிஸ்தான். இந்திய அணி சூப்பர் சிக்க்சுக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக பாதுகாப்பு கருதி இங்கிலாந்து விளையாடாமல் போக, பாகிஸ்தானுக்கு மழை வந்து ஆப்பு வைக்க, எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பெரிய அணிகள் தொடரை விட்டு வெளியேறின. அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. 


மற்றொரு பிரிவில் இதை விட அதிர்ச்சி.  பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யாவுடன் ஆட்டத்தை நியூசிலாந்து கைவிட, மற்றொரு போட்டியில் இலங்கை கென்யாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒபுயா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொண்ட கென்யா சிறிய அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மோசமான பார்மில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே வெளியேறி விட்ட நிலையில், அடுத்து வெளியேறப்போவது இலங்கையா? இல்லை தென்னாப்பிரிக்காவா? என்ற நிலைமை. இது நாக் அவுட் மாதிரி இருப்பதாலோ என்னவோ மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விதி விளையாடியது. 268 ரன்னை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு மறுபடியும் மழை வடிவில் சோதனை வந்தது. ஏற்கனவே மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளின் கேப்டன்களும் கையில் பிட்டு வைத்திருப்பதை போல, ஒவ்வொரு ஓவருக்கும் டக்வோர்த் முறைப்படி எத்தனை ரன் இருக்க வேண்டும் என்று பார்த்து கொண்டே இருந்தனர். கடைசியில் மழை வந்துவிடவே, மேலும் போட்டியை தொடரமுடியாத நிலை. 

கடைசியில் அம்பயர்கள் முடிவை அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது 45 ஓவரில் தென்னாபிரிக்கா 230 எடுத்திருந்தால் ஜெயித்திருக்கும். அவர்கள் எடுத்தது 229. இதை கேப்டன் பொல்லாக் செய்த சின்ன தப்பு கணக்கு என்று அப்போது கூறப்பட்டது. அதாவது 44ஆவது ஓவர் முடிவில் களத்தில் நின்ற பவுச்சரிடம், "அடுத்த ஓவருக்குள் விக்கெட்டை இழக்காமல் 229 ரன்னை எட்டிவிடவேண்டும்." என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது. பவுச்சர் படாத பாடு பட்டு அந்த ஓவரில் சிக்சர் எல்லாம் அடித்து 229 ரன்னை எட்ட செய்தார். ஆனால் தவறாக கணக்கிடப்பட்ட அந்த ஒரு ரன்னில் ஆட்டம் டிரா ஆக, இலங்கை சூப்பர் சிக்சில் நுழைய, மண்ணின் மைந்தர்களான தென்னாபிரிக்கா வெளியேறியது. 

அக்தர் ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர்

முதல் சுற்று ஆட்டங்களே மிக சுவாரசியமாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களான மெக்ராத் மற்றும் ஆண்டி பிக்கல் இருவருமே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஆண்டி பிக்கல் இங்கிலாந்து எதிராக அதை செய்தார். அதிலும் கடைசி ஓவரில் அவரே ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் அடுத்த சுற்று வேறு மாதிரி இருந்திருக்கும். அதே போல கனடா பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது. எல்லா உலகக்கோப்பை போட்டிகளிலும் என்னதான் பல சுவாரசியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவாரசியமாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்தான். இந்தியாவின் சச்சின் மற்றும் சேவாக் களத்தில் நிற்க, முறையே அக்ரம், அக்தர், வாக்கர் யூனிஸ், ஆகியோரால் வீசப்பட்ட முதல் ஆறு ஓவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். புயல் வேக பந்துவீச்சால் சச்சினை சாய்ப்பேன் என்று சொன்ன அக்தர் வேகமாக பந்துவீச, அதை அசால்ட்டாக சிக்சராக மாற்றினார் சச்சின். இது இன்று வரையிலும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓவரில் செமத்தியாக உதை வாங்கிய அக்தர், அடுத்த ஓவர் வீசமாட்டேன் என்று சொல்ல, பின்னர் யூனிஸ் பந்து வீசினார். இது குறித்து அக்ரம் கூறுகையில், "எங்கள் இருவரின் காலத்துக்கு பின், பாகிஸ்தான் பந்துவீச்சின் ஆதாரம் என்று அக்தரை நான் நினைத்தேன். ஆனால் அவர் பயந்து பின் வாங்கியதை பார்த்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகி விட்டது. அந்த கணமே அந்த ஆட்டத்தில் தோற்று விட்டதைப்போல உணர்ந்தேன்." என்று அவர் சொன்னது போலவே, மீண்டும் ஒரு முறை வரலாற்றை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது.

இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே. மறுபக்கம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் கென்யா. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு புள்ளிகளுடன் இருந்ததால் அதிகம் பிரச்சனை இல்லை. கென்யாவை வீழ்த்தினாலே அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். ஆகவே மிக நம்பிக்கையோடு ஆடத்தொடங்கினார்கள். நாங்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டங்களை கவனிக்க தொடங்கினோம். 

வாய்ப்பை தவற விட்ட இலங்கை, பாண்டிங் அடித்த மரண அடி.....
அடுத்த பதிவில். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

July 21, 2011

மூணு மூணா...


பதிவுலகத்தில் நிறைய விஷயங்கள் பிரபலம். அதில் முக்கியமான ஒன்று தொடர்பதிவுகள். இந்த தொடர்பதிவுகள் எங்கே எப்படி தொடங்கியது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து இதை நம் தமிழ் பதிவர்கள்தான் தொடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பதிவர்கள் மத்தியில் நல்ல நட்பை வளர்ப்பதற்கு இது உதவுகிறது. வெகு நாட்களாக பதிவெழுதாமல், என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கும் பதிவெழுத ஒரு வாய்ப்பாய் அமைகிறது. நம் சக பதிவர் ஒருவர் நம்மை தொடர் பதிவு எழுத அழைக்கும்போது "நம்மையும் இந்த பதிவுலகத்தில் அங்கீகரிக்கிறார்களே?" என்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அந்த வகையில் என்னை அழைத்த நண்பர் உரைகல் ஜே ஆர் ரமேஷ்பாபு அவருக்கு என் நன்றிகள். 


ஒரு குறிப்பிட்ட கேள்விகளுத்தான் பதில் அளிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஆகவே கொஞ்சம் சொந்தமான கேள்விகளையும் தந்திருக்கிறேன். 

1. விரும்பும் மூன்று விஷயங்கள். 
சினிமா பார்ப்பது (எதுவாக இருந்தாலும்)
புத்தகம் படிப்பது (எதுவாக இருந்தாலும்)
அரட்டை அடிப்பது 

2. விரும்பாத மூன்று விஷயங்கள்.
அதிகாலையில் கண் விழிப்பது ( பத்தாண்டுகளாக கண் விழிப்பது 5.30க்கு)
குறைந்தபட்ச காமன் சென்ஸ் இல்லாமல் இருப்பவர்களை. 
 மற்றவர்களை கிள்ளு கீரையாக நினைப்பவர்களை. 

3. மதிப்பிற்குரிய மூன்று மனிதர்கள் (பெற்றோர்களை தவிர்த்து)
கர்மவீரர் காமராசர்.
ஆபிரகாம் லிங்கன் 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 

4. பிடித்த மூன்று திரைப்படங்கள்.
ஆறில் இருந்து அறுபது வரை 
வாலி
காதலிக்க நேரமில்லை.
 
5. பிடித்த மூன்று உணவு வகைகள்.
அயிரை மீன் குழம்பு
கெண்டை மீன் பொரியல்
பாகற்காய் பொரியல். 
 
6. இறப்பதற்குள் செய்ய விரும்பும் மூன்று செயல்கள்.  
ஒரே ஒரு மாணவனுக்காவது கல்விக்கு உதவி செய்வது
என் பெற்றோரை தாஜ்மகாலுக்கு அழைத்து செல்லவேண்டும் 
சொந்தமாக ஒரு கார் வாங்கி அதில் பெற்றோரை கூட்டி செல்ல வேண்டும்

7. பிடித்த மூன்று ஊர்கள். 
விருதுநகர் (சொந்த ஊர்)
குற்றாலம் (என் தாத்தா ஹோட்டல் வைத்து நடத்திய ஊர்)
சென்னை(முதன் முதலில் சொந்த காசில் சோறு சாப்பிட்ட ஊர்)

8. என்னிடம் எனக்கு பிடித்த மூன்று குணங்கள்.
நிதானம் 
காலம் தவறாமை 
எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மை. 

9. என்னிடம் எனக்கு பிடிக்காத மூன்று குணங்கள். 
போலியாக கூட கோபப்பட தெரியவில்லை. சிரித்து தொலைக்கிறேன். 
பல நேரங்களில் நிறைய சிந்தித்து குழப்பி கொள்வது. 
இரவு வெகு நேரம் கழித்து தூங்குவது

10. புரியாத மூன்று விஷயங்கள். 
கடவுள்
காலம் 
காதல் 
11. தொலைத்த மூன்று விஷயங்கள். 
எப்போதும் சிரித்த பள்ளி பருவம் 
காதலில் விழாமல் தப்பித்த கல்லூரிப்பருவம் 
சென்னையில் வாழ்ந்த பேச்சுலர் ரூம். 

12. கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள். 
பாரபட்சமற்ற அன்பு
கடவுளிடமும் பேரம் பேசாமல் இருக்க 
சிக்கனமாக இருக்க... 

13. பெருமைப்படும் மூன்று விஷயங்கள்... 
நான் ஒரு இந்தியன் 
நான் ஒரு ஆசிரியன். 
சாதி மத பேதமில்லாமல் எல்லோரும் மதிக்கும் காமராசர் எங்க ஊர்க்காரர். 

14. மூன்று தாரக மந்திரங்கள் 
எந்த பிரச்சனையையும் தள்ளி நின்று அணுகு
இதுவும் கடந்துபோகும் 
எப்போதும் புன்னகை செய்

15. இந்த பதிவை தொடர நான் அழைக்கும் மூன்று நண்பர்கள்
(ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, நேரம்
கிடைக்கும்போது எழுதுங்கள்)

 
 
முழுவதும் படிக்க >>

July 20, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 12


சச்சினா? கங்குலியா?இதற்கு முன் சச்சினை எனக்கு பிடிக்காது என்று இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன். சச்சின் மற்றும் கங்குலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரசல்களை பற்றி எழுதி இருந்தேன். என்னை பொறுத்தவரை ஒரு விளையாட்டு வீரரை இன்னொரு விளையாட்டு வீரரோடு ஒப்பிடுவதே மிகத்தவறு. அவருக்கு அவரே தான் அளவுகோல். அந்த விதத்தில் சச்சின் மற்றும் கங்குலி இருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாகவே விளங்கி இருக்கிறார்கள். 

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை அதன் மிகப்பெரிய ஆதாரம் சச்சின்தான். சச்சின் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெறும்போது சுமார் 10 கோடி ரசிகர்களை கிரிக்கெட் இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களுக்கு மத்தியில், கிரிக்கெட்டை சுவாசிக்கும் ஒருவராக இருப்பவர் சச்சின். ஆகவே இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை, சச்சின் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் என்றால் நாடே கொந்தளித்து விடும். இந்த நிலைமை கங்குலிக்கும் வந்தது. முன்னமே சொன்னது போல கங்குலி தன் அணி வீரர்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இதை அவர் சச்சினிடமும் எதிர்பார்த்தார். இது இயல்பானது. ஆனால் அது வேறு கோணத்தில் இருந்து பார்க்கப்பட்டது.  


அதாவது, "சச்சின் மீதுள்ள காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்கிறார்." என்று கூறப்பட்டது. அதே போல, ஓப்பனிங் ஆடிக்கொண்டிருந்த சச்சினை சோதனை முயற்சியாக சில ஆட்டங்களில் ஒன் டவுன் இறக்க, "சச்சின் சாதனை செய்வது கங்குலிக்கு பிடிக்கவில்லை." என்று கூறப்பட்டது. இந்த குற்றம் காலம்காலமாக எல்லா இந்திய கேப்டன்கள் மீதும் சுமத்தப்படும் ஒன்று. சமீபத்தில் தோனி மீது கூட இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது இதனால் சச்சினின் ரசிகர்களுக்கு கங்குலியை அறவே பிடிக்காமல் போனது. ஆனால் என்னை பொறுத்தவரை அப்படி நடந்திருக்க சாத்தியமே இல்லை என்றுதான் கூறுவேன். ஒரு சில பத்திரிக்கைகள் பரபரப்புக்காகவோ, அல்லது சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவோ அப்படி பரப்பி இருக்கலாம். ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெற்றதுதான் வேதனையான விஷயம். "இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா!!" என்று கவுண்டமணி சொல்வாரே, அதே போல பல நேரங்களில், "இந்த எக்ஸ்பர்டுகள் தொல்லை தாங்க முடியலப்பா!!" என்று சொல்ல தோன்றும்.  இந்திய கேப்டனின் ஒவ்வொரு செயல்பாட்டையும்யும் விமர்சிப்பதற்கென்றே ஒரு எக்ஸ்பர்ட் கூட்டம் இருக்கும் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் இருப்பார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த எக்ஸ்பர்டுகளுமே கங்குலிக்கு எதிரியாக இருந்தது துரதிஷ்டம். ஆனால் அவர் பெற்றுதந்த தொடர் வெற்றிகள் அவற்றை காத்து கொண்டிருந்தன. ஒரு கிரிக்கெட் ரசிகனாக, எப்போதுமே நான் கங்குலியை பிடிக்கும் என்பதால் சச்சினை வெறுத்ததே இல்லை. 


கங்குலி தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல், தனது செயல்பாடுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது அடுத்த இலக்கு 2003 உலகக்கோப்பையை வெல்வது. நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற அபார வெற்றி, இந்திய அணி ஒரு பலமான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது. பீல்டிங்கிலும் ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்பட்டது.  ஆனால் பவுலிங் அவ்வளவு நம்பிக்கைக்குரியதாக இல்லை. இந்த குறைபாடுகள் விரைவில் களையப்படவேண்டும். 2003 உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக, எல்லா அணிகளும் தங்கள் பலத்தை பரிட்சித்து பார்க்க ஒரு களமாக அமைந்தது, 2002 ஆம் ஆண்டின் நாக்அவுட் கோப்பை. அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர, நாக் அவுட் முறை மாற்றப்பட்டு, லீக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடருக்கும் சாம்பியன்ஸ் டிராபி என்று பெயர் மாற்றப்பட்டது. "ஆஸ்திரேலிய அணியால் கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் அவர்களின் தலையீடே இவ்வாறு மாற்றம் செய்ய காரணம்." என்று வெகு காலம் நம்பிக்கொண்டிருந்தேன். 


இந்த முறை தொடர், சுழலுக்கு சாதகமான இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரை பொறுத்தவரை, இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கவில்லை. ரசிகர்களும் அதிகம் கவலைப்படவில்லை. எல்லாம் இந்திய அணிக்கு சாதகமாகவே நடந்தது. முதல் சுற்றை முடித்துக்கொண்டு, செமிபைனலுக்கு அடி எடுத்து வைத்த அணிகள், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா. அந்த காலகட்டத்தில் இந்த நான்கு அணிகளுக்குத்தான் 2003 உலகக்கோப்பையை வாங்கும் வாய்ப்பு இருக்கிறதென்று சொல்லப்பட்டது. அரையிறுதியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. மிக சுவாரசியமான இந்த போட்டியில், இந்திய வீரர்கள் மீண்டும், சுழற்பந்து வீச்சால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினர். கிப்ஸ்ஸும்( 116), காலிஸூம்(97) வெற்றியை உறுதி செய்து கொண்டிருக்க, முக்கியமான கட்டத்தில் கிப்ஸ் டீஹைட்ரேசன்(Dehydration) காரணமாக, வெளியேறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை சாய்க்க தொடங்கினர். இப்போட்டியில் ஜாண்டி ரோட்ஸுக்கு யுவராஜ் பிடித்த அபார கேட்ச், திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது போலிருந்தது. 1993 ஆம் ஆண்டின் ஹீரோ கோப்பையை போல,  நெருக்கடியான கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார் சேவாக். களத்தில் குளூஸ்னர் நின்று கொண்டிருக்க, அபாரமாக வீசி அந்த ஓவரில் பத்து ரன்களை மட்டுமே வழங்கி, இரண்டு விக்கெட்டுகளை(காலிஸ், குளூஸ்னர்) சாய்த்தார். 


இறுதி போட்டியில் இலங்கையுடன் மோத வேண்டும். முதலில் ஆடிய இலங்கை 244 எடுக்க, அடுத்து விளையாடிய இந்தியா, 2 ஓவருக்கு 14 ரன் எடுத்தபோது மழை வந்து ஆட்டத்தை முடித்து வைத்தது. மறுநாள் மறுபடியும் போட்டி முதலில் இருந்து ஆரம்பிக்க, இந்த முறை இலங்கை எடுத்தது 222 ரன்கள் மட்டுமே. இம்முறை இந்தியா 8 ஓவருக்கு 38 ரன் எடுத்தபோது மழை வந்து ஆட்டத்தை முடித்து வைக்க, கோப்பை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்த கோப்பையை இந்தியாதான் வென்றிருக்க வேண்டியது." என்று புலம்பிக்கொண்டிருந்தோம். அது நடக்கவில்லை. இந்த தொடர் முடிந்த போது, இந்திய அணிக்கு உலகக்கோப்பை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று அனைவரும் கூறினார்கள். இத்தொடரில் இந்தியா, மற்றும் இலங்கை இரு அணிகளுமே ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


2003 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து பயணம் மேற்கொண்டது. இந்திய ரசிகர்களின் உலகக்கோப்பை கனவை ஆட்டம் காண செய்யும் விதமாக இத்தொடர் அமைந்தது. அதிலும் ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வினோதமான ஒன்று. முதல் இன்னிங்சில் இந்தியா 99 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து 94க்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 154க்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 160 எடுத்து ஜெயித்தது. முதல்நாள் மழையில் கட் ஆக, மூன்று நாட்கள் மட்டுமே நடந்த ஆட்டம் நான்காவது நாளில் முடிந்து போனது.  ஒரே நாளில் 22 விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே இன்னிங்சில் இரண்டு அணிகளுமே 100 ரன்னுக்குள் அவுட் ஆவது இதுவே முதல்முறை. அதே போல, முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்கு குறைவாக எடுத்தும், முன்னிலை பெற்ற ஒரே அணி இந்திய அணிதான். இந்த ஆடுகளம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.


ஒரு நாள் தொடரிலும் இந்தியா சோபிக்கவில்லை. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி எடுத்தது வெறும் 122 ரன் மட்டுமே. இதற்கடுத்த போட்டி உலகக்கோப்பையில்தான். "என்னடா இது? உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு சோதனை?" என்று எல்லோரும் கவலை அடைந்தோம். ஆனால் நியூசிலாந்து ஆடுகளம் என்பது ஆனானப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கே அல்வா கொடுக்கும். இந்த ஆடுகளத்தில் ஒன்றும் நாம் உலகக்கோப்பை ஆடப்போவதில்லையே? இந்திய ஆடுகளங்களை ஒத்த தென்னாப்பிரிக்காவில் அல்லவா ஆடப்போகிறோம்? எப்படியும் ஜெயித்து விடலாம்.... 


கோலாகலமாக தொடங்கியது 2003 உலகக்கோப்பை அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

July 19, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 11


மன்னிப்பு கேட்டார் பிளிண்ட்ஆஃப்

இந்த தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய பதிவுக்கு தன் பதிவில் லிங்க் கொடுத்த 'எப்பூடி' ஜீவதர்சனுக்கு மனமார்ந்த நன்றிகள். இரண்டு பதிவில் முடித்து விடலாம் என்று நினைத்த இந்த தொடர் இப்போது 11ஆவது பதிவில் வந்து நிற்கிறது. இது முடியும் வரை தங்கள் ஆதரவு தொடரும் என்று விழைகிறேன். 


இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அசாருதீன் மீதும், பிற்காலத்தில் கங்குலி மீதும்தான் அபிமானம் இருந்து வந்தது. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கும்போது சச்சின் அவ்வளவு சிறப்பாக ஆடாதது கூட காரணமாக இருக்கலாம். கங்குலி மீதுள்ள மதிப்பு, அவர் கேப்டன் ஆனதும் பல மடங்கு உயர்ந்து போனதேன்னவோ உண்மை. என்னதான் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டாலும் அவற்றை ஏற்க மனம் மறுக்கிறது. "கங்குலியையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது." என்று முன்பு சொன்னது போல, கங்குலி என்றவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கு ஞாபகம் வரும் ஒரு நிகழ்வு இருக்கிறது. 


2002ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்து தொடரை சமன் செய்த உற்சாகத்தில் தனது மேல் சட்டையை கழற்றி, எல்லோரையும் பிளிண்ட்ஆஃப் கடுப்பேற்றி விட்டு சென்றார். அதே ஆண்டு மத்தியில் இந்தியா, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடர். இந்த தொடரில் இலங்கை வழக்கத்துக்கு மாறாக தடுமாற்றத்துடன் ஆடியது. இதுவரை ஜெயசூர்யாவின் தலைமையில் பல வெற்றிகளை பெற்று வந்த இலங்கை இத்தொடரில் அடைந்த படுதோல்வி, பல இலங்கை ரசிகர்களுக்கு, 2003 உலகக்கோப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியது. மாறாக, தொடர்ந்து வந்த இந்தியாவின் வெற்றிகள், என்னைபோன்ற இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்தியாவும், இங்கிலாந்தும் எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக வருணிக்கப்படும் இந்த இறுதிப்போட்டி லார்ட்ஸில் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து வீரர்கள் நல்ல பார்மில் இருந்ததால், இந்திய பவுலர்களால் அவர்களை வீழ்த்த முடியவில்லை. டிரெஸ்கோதிக், மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் (இவர் சென்னையில் பிறந்தவர்) இருவரும் சதமடிக்க, இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


இந்த போட்டியில் வென்றால் அது உலகசாதனை. இதற்கு முன்பாக இரண்டாவது பேட் செய்து 316 எடுத்து வெற்றி பெற்ற சாதனையை ஆஸ்திரேலியாவும், இந்தியாவும், பாகிஸ்தானுக்கு எதிராக (கனித்கர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து காப்பாற்றுவாரே ?) நிகழ்த்தி இருந்தன. ஆக அப்போதைக்கு இது ஒரு எட்டாத கனி. ஆனால் கங்குலியும், சேவாக்கும் ஆடத்தொடங்கியபின் எங்கே எட்டிவிடுமோ?, என்று தோன்றியது. இருவரும் விளாசி தள்ளினர். பதினைந்தாவது ஓவரில் கங்குலி அவுட் ஆகும்போது ஸ்கோர் 106. "நான் அவுட் ஆகும்போது ரொம்ப அப்செட் ஆகிவிட்டேன். ஆனால் சேவாக் இருக்கிறார் என்று நம்பினேன். என் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சேவாக் அடுத்த ஓவரிலேயே ஒரு மோசமான ஷாட் அடித்து அவுட் ஆனார். அப்போது பயிற்ச்சியாளர் ஜான் ரைட் அடைந்த கோபத்துக்கு அளவே இல்லை." என்று கங்குலி சொன்னார். அந்த நேரத்தில் என்னதான் சேவாக் அதிரடியாக ஆடினாலும், அவரது மோசமான ஷாட் செலக்சன் மிக பிரசித்தம். எந்த ஷாட் ஆடக்கூடாது என்று அவருக்கு சொல்லி அனுப்பப்பட்டதோ அதே ஷாட் ஆடி அவுட் ஆகி வருவது வாடிக்கை. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தவுடன், ஸ்கோரிங் ரேட் பாதிக்கத்தான் செய்யும். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் அப்படி நிகழாமல் பார்த்துக்கொண்டனர்.


ஆனால் விக்கெட்டுகள் வீழ்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. மோங்கியா வந்த வேகத்தில் வெளியேற, டிராவிட்டும் நடையை கட்டினார். ஒரே நம்பிக்கை சச்சின் என்று நம்பி இருந்த நேரத்தில் அவரும் அவுட் ஆக, ஸ்கோர் 24 ஓவரில் 146க்கு 5 விக்கெட்டுகள். அனுபவம் மிக்க வீரேர்களோ, அடுத்து பேட்ஸ்மேன்களோ இல்லாத நிலையில், தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்தில் இருந்த யுவராஜும், அணிக்கு புதிதாய் வந்து சேர்ந்த முகமது கைஃபும் ஜோடி சேர்ந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் ஏளனத்துடன் பந்து வீச தொடங்கினார்கள். இருவரும் ஏற்கனவே ஒன்றாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்கள். அப்போது கைஃப் கேப்டன். ஆகவே மிக கவனமாக, அதே நேரம் துரிதமாக ரன் சேர்க்க தொடங்கினர். பொதுவாக சச்சின் அவுட் ஆனவுடன் பெரும்பாலானோர் டிவியை ஆஃப் செய்துவிட்டு போய் விடுவர். என்னை போல ஒரு சிலர்தான், இந்தியா தோற்றாலும் கதற, கதற இறுதி நொடி வரை ஆட்டங்களை பார்ப்போம். 


கொஞ்ச நேரத்தில் இந்தியாவின் கை ஒங்க தொடங்கியது. 42ஆவது ஓவரில் யுவராஜ் (69) அவுட் ஆகும்போது ஸ்கோர் 267. யுவராஜ் முகத்தில், "அணியை கடைசிவரை காப்பாற்ற முடியவில்லையே!" என்ற கவலை தெரிந்தது. ஆனால் அவருக்கு ஒட்டு மொத்த மைதானமே எழுந்து கைதட்டி மரியாதை செய்தது. பிறகு வந்த ஹர்பஜன் கொஞ்சம் வான வெடிக்க காட்ட, பரபரப்பான கடைசி நொடிகள், நகங்கள்,கடிக்க வைத்து, சீட் நுனிக்கு நகர்த்தி, கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற்று ஒரு புதிய உலகசாதனையை படைத்தது. நம்பிக்கை உடைய இரண்டு புதிய இளைஞர்கள் நிகழ்த்திக்காட்டிய சாதனை அது. இந்தியா 2003 உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது.  இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தோம். 


திடீரென கேமரா பெவிலியனை நோக்கி திரும்ப, கங்குலி, ஆவேசமாக தான் மேல்சட்டையை கழற்றி தலைக்குமேல் சுற்றினார். "எங்கள் மும்பையில் நீ செய்ததற்கு, பழிக்கு பழியாக, உங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நான் செய்கிறேன் பார்." என்று சொல்வது போல இருந்தது. அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயமாக ஆனது.கிட்டத்தட்ட பதிவுலகம் மாதிரி, பல கிரிக்கெட் வித்தகர்கள் இதனை கண்டித்தார்கள், ஆதரித்தார்கள், வேடிக்கை பார்த்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் ரசிகர்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான். "நீயும் செய்தாய். நானும் செய்தேன். முடிந்தால் எங்களை தோற்கடி." இது குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறும்போது, "கடந்த பத்தாண்டுகளில், தானாக போய், மேட்ச் ரெப்ரீயிடம் அதிகமுறை முறையிட்ட வீரர் கங்குலிதான். அவரைப்பொறுத்தவரை ஆஸ்திரேலியர்கள் மாதிரி ஆக வேண்டுமென்று அவர் நினைத்ததில்லை. அவர்களை விட ஒருபடி மேலே சென்று தோற்கடிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்ற வேண்டும். இதுதான் அவர் ஆசை. கங்குலி மற்றும் அர்ஜுனா ரணதுங்கா இருவருக்கும் ஒரு பொது குணம் உண்டு. அவர்கள் யார் மாதிரியும் இருக்க விரும்புவதில்லை. தனக்கென்று ஒரு தனி பாதை அமைத்து, ஜெயித்து காட்டியவர்கள்." 


உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகள் பிற்காலத்தில்தான் உணரப்படுகின்றன. இது குறித்து, கங்குலி, மற்றும் பிளிண்ட்ஆஃப் இருவரும் கூறியது.... 

பிளிண்ட்ஆஃப்
"நான் அதை செய்திருக்க கூடாது. எங்கள் அணி ஜெயித்த அந்த தருணத்தில் நிகழ்ந்த மாபெரும் தவறு அது. I was carried away by the moment.மும்பை ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை... Sorry..." 


கங்குலி 
"இப்போது நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது. I was carried away by the moment. நான் அதை செய்திருக்க கூடாது, லங்காஷைர் அணியுடனான கசப்பான அனுபவங்கள், இங்கிலாந்து மீடியாக்களின் கிண்டல்கள், மும்பையில் பிளிண்ட்ஆஃப்பின் செயல் ஆகியவை அப்படி செய்வதற்கு காரணமாகி விட்டன. இப்போது திரும்பி பார்க்கும்போது அப்படி செய்திருக்க கூடாதுதான்." 

இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள். இந்த மாதிரி நிறைய சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் கங்குலி மீது வரத்தொடங்கின. உதாரணமாக சச்சினை கீழ்தரமாக நடத்துகிறார் (பெரும்பாலும் இப்படி சொல்பவர் கவாஸ்கராகத்தான் இருப்பார்), நடிகை நக்மாவுடன் தொடர்பு என்று. எப்போதுமே கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் ஒரு கசமுசா இருந்து கொண்டே இருக்கும், அல்லது பத்திரிக்கைகளால் ஏற்படுத்தப்படும். தோனி-லட்சுமிராய், யுவராஜ்-தீபிகா வரை இது பிரசித்தம். அதற்கு கங்குலியும் தப்பவில்லை. 


சச்சின் vs கங்குலி, 2003 உலகக்கோப்பை.... அடுத்த பதிவில் 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...