முந்தைய பகுதிகள்
பகுதி 3 - இந்தியாவின் ரன் மெஷின்
1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தது. ஆகவே இந்திய மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிரிக்கெட் பற்றி எழுதின. கிரிக்கெட் பற்றி எழுதுவதில் தமிழில் தினமலர் நாளிதழ் எப்போதுமே முன்னணியில் இருக்கும். தினமும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி விலாவாரியாக எழுதுவார்கள். அப்போது ஒரு வீரருக்கு அவர்கள் கொடுத்த தலைப்புதான் இந்தியாவின் ரன் மெஷின். அவர் யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்போது அவர் இந்தியாவின் ரன் மெஷினாக இருந்தார். இப்போது கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்றுதான் சொல்ல வேண்டும்.
1989ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இருந்தாலும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு யார் கண்ணிலும் படாமல்தான் இருந்தார் சச்சின். ஆனால் அவரிடம் இருந்த துறுதுறுப்பு, அசாத்திய தைரியம் ஆகியவை தொடர்ந்து அவரை அணியில் இடம்பெற செய்தது. கபில் ஒவ்வொரு முறை சச்சின் பற்றி சொல்லும்போதும், "ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, எல்லா மாணவரும் என் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் தைரியமாக விளையாடினான். நான் முழு வேகத்தில் வீசினாலும் அவன் பயப்படவில்லை. அந்த மாணவன் பெயர் சச்சின்." என்று சொல்வார்.
1992 உலகக்கோப்பையில் ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் இந்தியாவில் நடந்த ஹீரோ கோப்பையில் பவுலிங்கிலும் அசத்தினார். ஆனால் அப்போது சச்சினை யாரும் கவனிக்கவில்லை. இந்தியாவின் அப்போதைய நட்சத்திரவீரர் அசார்தான். மேலும் காம்ப்ளி உள்ளிட்ட இளம்வீரர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் 1994ஆம் வருடம் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் ஒரு வீரன் விஸ்வரூபம் எடுத்தான். தான் எந்த நிலையில் ஆடினால் சரியாக வரும் என்று புரியாத நிலையில் திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு வந்தது.
அது 1994இல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு தொடர். அன்று ஹோலி பண்டிகை. சொந்த நாட்டில் விளையாடினாலும், முதலில் ஆடிய நியூசியால் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் ஓப்பனிங் இறங்க வேண்டிய சித்து காயத்தால் விளையாடாததால் வேறு ஒரு வீரரை தேடவேண்டிய சூழ்நிலை. யாருமே விளையாட முன்வராததால், வேறு வழியில்லாமல், சச்சினை களமிறக்கினார்கள். காரணம் எளிய இலக்கு. கொஞ்சம் சமாளித்து விளையாடுவான் என்று நம்பினார்கள். ஆனால் நடந்ததே வேறு. அத்தனை காலம், ஒருநாள் போட்டி என்றால் கடைசி பத்து ஓவர்கள் மட்டுமே சுவாரசியமாக இருக்கும். ஆனால் முதல் பத்து ஓவரில் அதை நிகழ்த்தி காட்டினார் சச்சின். இந்தியா விரைவிலேயே வெற்றி பெற்று விட்டது. சச்சின் களத்தில் இறங்கியதில் இருந்து ருத்ரதாண்டவம்தான். பெரிய பந்து வீச்சாளர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். கடைசியில் சச்சின் அவுட் ஆகும்போது அவர் எடுத்தது 82 வெறும் 49 பந்துகளில். தாங்கள் படுதோல்வி அடைய போகிறோம் என்பதை கூட மறந்து ஒரு நல்ல ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் அரங்கமே எழுந்து கைதட்டியது. ரன் கம்பேரிசன் வினோதமாக இருந்தது 11 ஓவர் முடிவில் நியூசி எடுதது 16/2 இந்தியா எடுத்தது 92/1. இவ்வளவு வேகமான ஸ்கோரிங் ரேட்டை அதுவரை இந்தியா நிகழ்த்தியதில்லை. இந்தியா 22ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.
"ஏதோ ஒரு போட்டியில் இப்படி நடக்கலாம். அதற்காக எல்லாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை." என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதற்கடுத்து அவர் களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் அதகளம்தான். இப்போது இருக்கும் முதுமையும், பொறுமையும் அவருக்கு அப்போது கிடையாது. இருந்ததெல்லாம் துணிச்சலும் வேகமும் மட்டும்தான். நாமெல்லாம் சேவாக், கில்க்றிஸ்ட் அடிப்பதை பார்த்து வாயை பிளக்கிறோம். ஆனால் 20 வயதில் சச்சின் அடித்ததை பார்த்தால்தான் தெரியும் இவர்கள் அடிப்பது சாதாரணம் என்று. மட்டையில் பட்ட அடுத்த நொடி எல்லைகோட்டை தொட்டுவிடும். அவ்வளவு பலமாக மட்டையை வீசுவார். பின்னர் தேவை இல்லாமல் சக்தியை வீணாக்க கூடாது என்று வேகத்தை குறைத்து விட்டார். வரிசையாக அரைசதமாக அடித்து வந்தவர், பத்தாவது ஆட்டத்தில் சதமடித்தார். 1994ஆம் ஆண்டை அவரால் மறக்கவே முடியாது. அதுவரை கட்டை வண்டியில் சென்றவர் திடீரென ராக்கெட்டில் ஏறியது போல இருந்தது. அதுவரை அவர் 70 போட்டிகளில் 1809 ரன்கள் எடுத்திருந்தார்.84 அதிகபட்சம்.
இப்போது 450 போட்டிகளில் 18000 ரன்கள், அதிகபட்சம் 200*.
இது ராக்கெட் வேகம்தானே?
இப்போது 450 போட்டிகளில் 18000 ரன்கள், அதிகபட்சம் 200*.
இது ராக்கெட் வேகம்தானே?
இந்தியாவுக்கு உலகில் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிடைத்து விட்டார். அதன்பின் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓப்பனிங் ஆட்டக்காரர்கள் மாறுவார்கள், ஆனால் அவர்களுடன் இன்னொருபக்கம் சச்சின் களமிறங்குவார். மஞ்ச்ரேக்கர், மனோஜ்பிரபாகர், சித்து, கங்குலி, சடகோபன்ரமேஷ், தாஸ், சேவாக், கம்பீர் என்று எண்ணற்ற வீரர்களோடு சச்சின் களமிறங்கி இருக்கிறார். இதில் கங்குலியுடன் களமிறங்கியது, வெஸ்ட்இண்டீசின் கிரீனிட்ஜ, ஹெய்ன்ஸ் ஜோடிக்கு நிகராக உலகப்புகழ் பெற்றது. சச்சினின் ரெக்கார்டுகளைப்பற்றி சொல்லத்தேவை இல்லை. அதிக ரெக்கார்டுகள் வைத்திருக்கும் ரெக்கார்டையும் அவர்தான் வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் எந்த ஒரு ரெக்கார்ட் பட்டியலை எடுத்துப்பார்த்தாலும் அதில் சச்சின் இருப்பார்.
1994இல் சச்சினின் ஆட்டத்தை பார்த்தபிறகு முடிவே செய்து விட்டேன். 1996 உலககோப்பை நமக்குத்தான். நான் மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் உலகமே அப்படித்தான் நினைத்தது. முதல் காரணம் போட்டிகள் நடப்பது இந்தியாவில். இன்னொரு காரணம் சச்சின். ஆனால் அதுவரை அமைதியாக இருந்துவந்த ஒரு அணி திடீரென நாலுக்கால் பாய்ச்சலில் முன்னால் வரும் என்று யாருமே நினைக்கவில்லை.
இலங்கையின் எழுச்சியும், காம்ப்ளியின் கண்ணீரும் அடுத்த பதிவில்.....
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
முழுவதும் படிக்க >>