எனக்கு பிடிக்காத எதுவும் விரைவில் மக்களிடம் புகழ் பெற்று விடுகிறது. நான் விரும்பும் எதுவும் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். கார் ரேசில் ஹக்கினன், டென்னிசில் ஹிங்கிஸ், புட்பாலில் பிரான்ஸ் அணி, குறிப்பாக ஜுடேன், மைக் டைசன் என்று எனக்கு பிடித்தவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் அனைவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. அது ஆக்ரோசம். எனக்கு எப்போதுமே ஆக்ரோசமாக விளையாடினால் பிடிக்கும். அதாவது அதிரடி இல்லை. செயல்பாடுகளில் ஆக்ரோசம். இது பலபேருக்கு எரிச்சலை வரவழைத்து விடுகிறது. ஆனால் எனக்கு இது பிடிக்கிறது. இதனால்தான் எனக்கு ரோஜர் பெடரரை பிடிக்கும். சொல்லி வாயை மூடவில்லை அடுத்தடுத்து நடாலுடன் தோல்வி அடைந்தார். இதே போல தன் ஆக்ரோசத்தாலேயே பிறருக்கு பிடிக்காமல் போன ஒரு கிரிக்கெட் வீரரை பற்றித்தான் சொல்ல போகிறேன் (கண்டிப்பாக ஸ்ரீசாந்த் அல்ல).
சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று அடித்துக்கொள்பவர்கள் நிறையபேர் உண்டு. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், ரஜினியை மட்டும் அப்போதைக்கு பிரபலமாக இருக்கும் எல்லா நடிகர்களிடமும் ஒப்பிட்டு சண்டையிடுவர். இது மோகன் காலத்தில் இருந்து, சிம்பு வரை தொடர்கிறது. அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி, இவன் என்ன பெரிய ரஜினியா? இதே மாதிரி ஒரு விஷயம் கிரிக்கெட்டிலும் நடந்து வருகிறது. அந்த மனிதர் சச்சின் டெண்டுல்கர். நீண்ட காலம் விளையாடுவதாலோ என்னவோ, காம்ப்ளி முதல், விராட் கொஹ்லி வரை அனைவரையும் சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். கடைசியில் இவன் சச்சினுக்கு இணை இல்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் வயது அடிப்படையில் சச்சினுடன் அதிகம் ஒப்பிடப்பட்டவர் ஒரே ஒருவர் மட்டும் தான். அவர்தான் சவுரவ் கங்குலி.
இவர்கள் இருவரால் எங்கள் நண்பர் குழுவில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. என்ன நீங்களும் வரிந்து கட்டிக்கொண்டு ரெடியாகி விட்டீர்களா? மன்னிக்கவும் இப்போது இந்த இருவரையும் ஒப்பிட்டு நான் பதிவிட போவதில்லை. எனக்கு ஏன் கங்குலி பிடிக்கும், ஏன் டெண்டுல்கர் பிடிக்காது என்றே சொல்ல போகிறேன். கங்குலி முதன் முதலில் களமிறங்கியது 1992 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானத்தில். அந்த ஆட்டத்தில் அவர் எடுத்தது வெறும் மூன்று ரன்கள் மட்டும்தான். பின் தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் வீரர்களுக்கு குளிர்பானம் சுமக்க மாட்டேன் என்று சொன்னார் என்று கூறப்படுகிறது. கங்குலி இதை திட்டவட்டமாக மறுத்தார். பின் நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1996 இல் இங்கிலாந்தில் களமிறங்கினார். நான்கு ஆண்டுகளாக சேர்த்து வைத்த வைராக்கியம் மட்டையின் மூலமாக வெளியானது. அடுத்தடுத்து இரண்டு சதங்கள். அவருக்கு ஒரு நிலையான ஒரு இடம் அணியில் கிடைத்தது. பின் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மடமடவென அணியில் நட்சத்திர வீரர் ஆனார். பின் 2000 ஆம் ஆண்டு கிளம்பிய சூதாட்ட புகார், சச்சினின் உடல் நிலை மற்றும் சரியில்லாத அணித்தலைமை எல்லாம் சேர்ந்து வேறு வழி இல்லாமல் கங்குலியை அணித்தலைவர் ஆக்கியது. அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. முதலில் குரல் எழுப்பியவர் யாராக இருப்பார்? வழக்கம் போல நம்ம கவாஸ்கர் தான் துவக்கி வைத்தார். அவருக்கு டெண்டுல்கரை தவிர வேறு யாரையும் அணித்தலைவராக நினைக்க முடியவில்லை. இருந்தாலும் கொல்கத்தா வீரர் என்ற வகையில் அமைதியாய் இருந்துவிட்டார் (கவாஸ்கரும் கொல்கத்தாதான்).
இந்த காலகட்டத்தில் அசாரைப்போலவே அணியில் நிறைய புதுமுகங்கள் தென்பட்டன. சேவாக், ஜாகிர்கான், யுவராஜ், ஹர்பஜன் என்று நிறைய மாற்றங்கள். இவர்களை நேர்த்தியாக கையாண்டு ஒரு வலிமையான அணியாக உருவாக்கினார். இப்போதுள்ள இந்திய அணியின் முன்னோடியான ஒரு அணியாக அவர் உருவாக்கிய அணி விளங்கியது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. எவ்வளவுக்கெவ்வளவு வெற்றி வந்ததோ அவ்வளவு விமர்சனங்களும் எழுந்தன. பின் கிரிக்கெட் போர்ட் கை மாறியது, பவார் தலைவர் ஆனார். மும்பை கை ஓங்கியது. விளைவு கங்குலி தூக்கி அடிக்கப்பட்டார்.
கங்குலி பற்றி சில சுவாரசியமான தகவல்கள்...
வெகு நாட்களாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லாத அணியாக இருந்த இந்திய அணியில் தலை சிறந்த இடது கை வீரராக திகழ்ந்தார். இவரது கவர் டிரைவ் மிக பிரசித்தம் பெற்றது. வர்ணனையாளர்கள் கங்குலிக்கு ஆப் சைடில் எத்தனை வீரர்களை நிறுத்தினாலும் அவர் பவுண்டரி அடிப்பதை தடுக்க முடியாது என்று கூறுவார்கள். அது பலமுறை நிரூபிக்க பட்டுள்ளது. அதே போல கங்குலி அடிக்கும் சிக்சர்கள். என்னதான் சச்சின் வேகமாக ரன் குவித்தாலும் அவரால் தொடர்ச்சியாக சிக்சர்கள் அடிக்க முடியவில்லை. கங்குலியை விட நூறு போட்டிகளில் அதிகமாக விளையாடியும் இன்னும் கங்குலியை சச்சின் சிக்சர்களில் முந்தவில்லை. அதுவும் சிக்சர் என்றால் சாதாரணமாக அல்ல. மரண அடி. மைதானத்துக்கு வெளியே தான் போய் விழும். அவர் 1996 இல் ஆடிய ஒருநாள் போட்டிகளில் இருந்து கவனித்து வருகிறேன். கங்குலிக்கு ஸ்பின்னர்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. குஷி ஆகி விடுவார். இரட்டை இரட்டையாக சிக்சர் அடிப்பது அவருக்கு பிடிக்கும்.
பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெயசூரியா, கில்க்ரிஸ்ட் முதலானவர்களை Unstoppables என்பார்கள். அதாவது இவர்களை இருபது பந்துகளுக்குள் அவுட் ஆக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் கதை முடிந்தது. அவர்களாக நினைத்தால்தான் அவுட் ஆவார்கள். இதில் கங்குலியும் அடங்குவார். நிலைத்துவிட்டால் அவுட் ஆக்குவது கடினம். சளைக்காமல் விளையாடுவார். பந்து வீச்சிலும் ஓரளவிற்கு நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்துள்ளார். டொராண்டோவில் நடந்த சஹாரா கோப்பையில், திறமையாக பந்து வீசி நம் வெற்றிக்கு வழிவகுத்தார். அசாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலை சிறந்த கேப்டனாக விளங்கி உள்ளார். தன்னிடம் இருந்த ஆக்ரோசத்தை அப்படியே தன் அணியிடம் வர செய்தவர். அதற்க்கு முன் அடுத்தவர் என்ன சொன்னாலும் தலை குனிந்து செல்லும் பழக்கம் உடைய இந்திய வீரர்கள் முதல் முறையாக நிமிர்ந்து பார்க்க தொடங்கினார்கள். இங்கிலாந்தின் பிளின்ட் ஆப் ஒரு முறை இந்திய அணியினரை கேலி செய்வதற்காக தன் சட்டையை கழற்றி மைதானத்தில் சுற்றிக்கொண்டே ஓடினார். இது நடந்தது இந்தியாவில். அதற்க்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் கங்குலி இப்படி செய்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அசாருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த வீரர் கங்குலி. சச்சின் ரசிகர்களால், அசாரை விட பலமடங்கு அர்ச்சனை வாங்கியவர். இதற்க்கு முக்கிய காரணம் அவரது இயற்கையான ஆளுமை திறன். இதனால் சில விரும்பத்தகாத செயல்களை செய்து அதிருப்தியை சம்பாதித்து கொண்டார். தன்னால் ஏன் சச்சினின் இடத்தை பிடிக்க முடியாது? என்று கருதினார். ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவர் அப்படி நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம்தான் தவறானது. என்னை பொறுத்தவரை இருவருமே சமமான பலம் பொருந்திய திறமைசாலிகள். என் தம்பிக்கு கங்குலியை பிடிக்காது. அதை விட சச்சின் பிடிக்கும் என்பதே சரி. கொல்கத்தா அணி தோல்வி அடையும் தருவாயில் இருக்கும் போது, "கங்குலி தோற்கவேண்டும், கங்குலி தோற்கவேண்டும் , திறமையே இல்லாத இவனெல்லாம் சச்சினுக்கு நிகராக வரமுடியுமா? இவன் தோற்கவேண்டும், அணியில் இருந்து துரத்தப்பட வேண்டும்" என்று ஏக வசனத்தில் திட்டினான். எனக்கு கோபம் வந்து விட்டது. உண்மையிலேயே கங்குலி திறமையானவர் இல்லையா என்று தேடியதில் கிடைத்ததே கீழே காணும் தகவல். இருவரும் ஓரளவிற்கு ஒரே மாதிரியாகத்தான் விளையாடி இருக்கிறார்கள்.
Player | SC Ganguly (India) | SR Tendulkar (India) |
Mat | 311 | 442 |
Inns | 300 | 431 |
NO | 23 | 41 |
Runs | 11363 | 17598 |
HS | 183 | 200* |
Ave | 41.02 | 45.12 |
100 | 22 | 46 |
50 | 72 | 93 |
4s | 1122 | 1927 |
6s | 190 | 185 |
(நன்றி cricinfo)
சச்சின் சிறந்த வீரர்தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை ஆதரிக்கிறேன் என்று இன்னொருவரை தூற்றுவது சச்சின் மீது வெறுப்பையே உருவாக்குகிறது. இதற்க்கு சச்சின் எந்த வகையிலும் காரணம் இல்லை. "இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில், முழுக்க முழுக்க மும்பை அணிக்கே ஆதரவு இருந்தது. எங்களை பொறுத்தவரை சென்னைக்கு ஆதரவு நாங்கள் மட்டும்தான். ஒவ்வொரு வீரனுக்கும் மற்ற பத்து பேர் ஆதரவு" என்று டோனி கூறியுள்ளார். இதே போல இரண்டாண்டுகளுக்கு முன் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தின் இறுதியில் யுவராஜ் கோபமாக "நாங்களும் இந்திய அணியில்தான் விளையாடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார். சச்சினுக்கு நிகர் யாரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சச்சின் என்ற சூரியனின் ஒளியால் மற்ற நட்சத்திரங்கள் நம் கண்ணுக்கு தெரியால் போய் விடுகிறது என்பதும் உண்மை. எனக்கு சச்சினின் திறமை மீது எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் சச்சின் என்று வந்துவிட்டால் மற்ற வீரர்கள் தாறுமாறாக திட்டப்படுகிறார்களே என்பதுதான் என் கோபம். சச்சின் மீது ஈடுபாடு இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>