விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

December 7, 2011

இவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா


எல்லோருக்கும் இவரை பிடிக்க என்ன காரணம்? யோசித்து பார்த்தேன். என்னவென்று தெரியவில்லை. இந்த பதிவின் தலைப்புதான் நினைவுக்கு வந்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!!!!!!

பி.கு: சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால், பத்து நாளைக்கு பதிவுலகம் பக்கம் தலை காட்ட முடியாத காரணத்தாலேயே இந்த அட்வான்ஸ் பதிவு...... 


முழுவதும் படிக்க >>

December 2, 2011

மறக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன்

மு.கு: வழக்கம் போல இதுவும் கொஞ்சம் நீளமான பதிவுதான். 

ஜெயா டிவியில் திங்கள்தோறும் இரவு, மதன் டாக்கீஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறார்கள். எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களுள் மதனும் ஒருவர். மிக குழப்பமான விஷயத்தை எளிதாக புரியும்படி லோக்கல் தமிழில் சொல்வதில் வல்லவர். இந்த நிகழ்ச்சியில், திரைவிமர்சனத்தோடு சில சுவாரசியமான செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் சொன்ன செய்தியால் கவரப்பட்டு, அதன்பின் நான் சேகரித்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா புகழும் மதன் டாக்கீஸுக்கே.... சினிமா என்பது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு ஊடகம். உலகில் எந்த நாடுமே இதற்கு வீதி விலக்கல்ல. இந்த சினிமாத்துறை மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர். உயர்ந்த இடத்துக்கு சென்று, பிறகு தடாலென கீழே விழுந்து காணாமல் போனவர்கள் சிலர். ஒரு சூரியனின் பிரகாசத்தால் சில நட்சத்திரங்கள் நம் கண்களுக்கு தெரியாமலேயே போய் இருக்கின்றன. அப்படிபட்ட ஒருவரைப்பற்றித்தான் இப்போது சொல்லப்போகிறேன்.திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக பேரை கவர்ந்தவர் யார் யார் என்று உங்களைப்பார்த்து கேட்டால், கண்டிப்பாக நம் பொது அறிவுக்கு ஏற்றவாறு பட்டியலிடுவோம். இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆனால் எல்லோரது பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு நடிகர் யார் என்றால் அது சார்லிசாப்ளின்தான். அதே போல கதாநாயகர்களில் சிறந்த ஸ்டண்ட்மேன் யார் என்று கேட்டால் உடனே சொல்லும் பெயர் ஜாக்கிசான். அதிக வன்முறை இல்லாமல், இயல்பாக, நகைச்சுவையாக அதே சமயம் ஆபத்தான சண்டைக்காட்சிகள் அமைப்பதில் அவர் வல்லவர். எனவே அனைவருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. சார்லிசாப்ளினும், ஜாக்கிசானும் கலந்த ஒரு நடிகர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எவ்வளவு பெரிய புகழ் பெற்றிருப்பார்? மக்களை எப்படி மகிழ்வித்திருப்பார்? கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது? ஆனால் உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் வாழும்வரை அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. அந்த மனிதரின் பெயர் கீட்டன் பஸ்டர் (Keaton Buster).


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் நாகேஷுக்கும், சந்திரபாபுவுக்கும் என்ன வித்தியாசம்? நாகேஷ் முக பாவனை, உடல் மொழி, டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவார். சந்திரபாபு, முக பாவனைகளை குறைத்து உடல் மொழி, மற்றும் சின்ன சின்ன ஸ்டண்ட்களில் அசத்துவார். இதே வித்தியாசம்தான் சாப்ளினுக்கும் கீட்டனுக்கும். சாப்ளின் அதிகம் நடிப்பார். ஸ்டண்ட் குறைவு. கீட்டன் முகம் மரக்கட்டை போல இருக்கும். உடல் நடிக்கும். உடல் நடிக்கும் என்றால், வித்தியாசமான நடை உடை பாவனை என்று அர்த்தம் அல்ல. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை அசால்ட்டாக செய்வார். அதை சாகசமாக செய்யாமல் நகைச்சுவையாக செய்வார். உதாரணமாக சாலையில் நின்று கொண்டு வேகமாக வரும் காரில் மோதி விழுவது, உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று விழுவது போன்றவை. இவரது சில ஸ்டண்ட்களை பார்க்கும்போது உண்மையில் இவர் மனிதன்தானா? இல்லை ரப்பர் பொம்மையா? என்று கூட தோன்றும். இவரது சில ஸ்டண்ட்கள் ஜாக்கிசான் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை கிளிக் செய்து பாருங்கள் கீட்டன் எடுக்கும் ரிஸ்கை 

இவரது உண்மையான பெயர் ஜோசப் பிரான்சிஸ் கீட்டன். பதினெட்டு மாத குழந்தையாக இருக்கும்போது உயரமான படிக்கட்டில் இருந்து, எக்குத்தப்பாக உருண்டு விழுந்திருக்கிறார்.அந்த குழந்தை விழுந்த ஜோரில் எழுந்து நின்றதாம். சாதாரணமாக வேறு யாராவது விழுந்திருந்தால் மரணம் நிச்சயம். இதை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஹாரி ஹவுர்டினி என்ற சர்க்கஸ் கலைஞர் வைத்த பட்டப்பெயர்தான் 'பஸ்டர்'. அதாவது மரண அடி என்று சொல்வோமே? கிட்டத்தட்ட அந்த மாதிரியான வார்த்தை. சிறு குழந்தையாக இருக்கும்போது, இவரது தந்தையும், ஹாரி ஹவுர்டினியுடன் சேர்ந்து நிறைய சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டுவார்களாம். இவர் சாகசம் செய்து காட்டும் பொருட்களில் கீட்டனும் அடக்கம். டாம் அண்டு ஜெர்ரியில் அடிபட்டவுடன் பூனை தாறுமாறாக போயி விழுமே? அதே போல நிஜமாகவே மேடையில் நிகழ்த்தி காட்டுவார்களாம். தந்தை கோபத்தில் மகனை அடிப்பது போல காட்சி என்றால், இவரது தந்தை கீட்டனை அடிக்காமல், வேகமாக தள்ளுவார். குழந்தை கீட்டன் தாறுமாறாக போய் விழுவார். சில நேரம் அவரை தூக்கி அப்படியே கூட்டத்துக்குள் வீசுவாராம்.  பிற்காலத்தில் இது குறித்து கீட்டன் சொன்னது, "என் தந்தை என்னை தூக்கி எறிந்து எந்த தருணத்திலும் எனக்கு அடிபட்டதில்லை. அதே போல என் திரைப்படங்களிலும் எனக்கு காயம் ஏற்பட்டதில்லை. இதன் அடிப்படை ரகசியமே விழும்போது நம் கை, கால்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதுதான். சில நேரம் தவறி இருந்தால் மரணம் நேரும் ஆபாயம் கூட இருந்திருக்கிறது. ஒரு பூனை எப்படி விழும்போது அடிபடாமல் தப்பிக்கிறதோ அதே முறையை நானும் பின்பற்றினேன்." என்றாராம். ஆனால் குழந்தையாக இருக்கும்போதே இத்தகைய திறமை இவருக்கு வந்தது ஆச்சர்யம்.


திரைப்படத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த கீட்டன், ஒரு கட்டத்தில் அர்பக்கிள் என்ற இயக்குனரை சந்தித்திருக்கிறார். இவர்தான் சார்லிசாப்ளின் மற்றும் கீட்டன் என்று இரு சிகரங்களை உருவாக்கியவர். அவரிடம் விளையாட்டாக சினிமா கேமரா பற்றி கற்றுக்கொண்டு, பின் அவரிடமே வேலைக்கு சேர்ந்து, உதவி இயக்குனர் அளவுக்கு உயர்ந்து விட்டார். 1920இல் வெளிவந்த தி ஷாப்ஹெட் படம் ஹிட் ஆக, அதன் பின் கீட்டன் தனியே படங்களை இயக்க தொடங்கினார். அடுத்த பத்து வருடங்களுக்கு கீட்டன் படங்களை எடுத்து தள்ளினார். எல்லாமே நன்கு ஓடிய படங்கள். 1927இல் தி ஜெனரல் என்ற அமெரிக்க உள்நாட்டு போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு படத்தை எடுத்தார். இந்த படம் செம பிளாப் ஆனது. இதன் பின்னர் இவர் பணி புரிந்த எம்‌ஜி‌எம் நிறுவனம் இவரை மரியாதை குறைவாக நடத்த தொடங்கியது. இவரை சுதந்திரமாக செயல்படவிடாமல், கட்டுப்படுத்த தொடங்கியது. அதன் பிறகு படங்களை இயக்கினாலும் பின்னால் இருந்து இயக்கியது எம்‌ஜி‌எம் நிறுவனம்தான். மனதோடிந்து போன ஒரு கட்டத்தில் எம்‌ஜி‌எம் உடன் தகராறு செய்ய அவரை வெளியே துரத்தி விட்டது. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளிவந்த ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்கள் இயக்கத்தொடங்கிய கீட்டன் ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் இருந்து தனித்து வாழ ஆரம்பித்தார்.


திருமணவாழ்விலும் ஏகப்பட்ட சங்கடங்களை சந்தித்த கீட்டன், திரைப்படத்துறையாலும் புறக்கணிக்கப்பட்டார். துண்டு துக்கடா வேடங்களில் எல்லாம் நடித்தார். சார்லி சாப்ளினின் லைம் லைட் படத்தில் கூட ஒரே ஒரு காட்சியில் கீட்டன் நடித்திருப்பார். தீவிர குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். குடிப்பழக்கம் அவரை முழுவதும் ஆக்கிரமிக்க, காப்பகத்தில் சேர்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். தோல்வி, அவமானம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை கீட்டனை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது.  வளமான காலகட்டத்தில் இவர் கட்டிய ஒரு ஆடம்பர வீட்டுக்கு, இவருக்கு பிறகு 1950களில் தங்க வந்த ஜேம்ஸ் மேசன் என்ற நடிகர் அந்த வீட்டினுள் ஏராளமான பிலிம் ரீல்களை கண்டெடுத்திருக்கிறார். அழிய தொடங்கி இருந்த அவற்றை உடனடியாக பாதுகாத்து, நல்ல பிலிம் ரீல்களுக்கு மாற்றி இருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் கீட்டன் சும்மா எடுத்து வெளியிடாமல் இருந்தவை. இவை அனைத்துமே மாஸ்டர் பீஸ் இவை வெளியே வந்ததும்தான் கீட்டன் பீவர் மறுபடியும் பிடிக்க ஆரம்பித்தது. இவரது படங்களை தேடி அலைய ஆரம்பித்தார்கள். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், எந்த படத்தின் தோல்வி இவரது வாழ்க்கையையே புரட்டி போட்டதோ அதே "தி ஜெனரல்" படம்தான் இவரது ஆகச்சிறந்த படமாக இப்போது கொண்டாடப்படுகிறது. தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கீட்டனை லேட்டாகத்தான் உலகம் புரிந்து கொண்டது. 1966இல் நுரையீரல் புற்றுநோயால் உலகை விட்டு பிரிந்தார் கீட்டன். 

இவர் வாழ்ந்த காலகட்டம் என்பது சார்லிசாப்ளின் என்பவர் உலகை நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்த அதே காலகட்டம். சொல்லப்போனால் சாப்ளினை விட கீட்டனே அப்போது மிகப்பிரபலம். பிறகு சாப்ளினின் புகழ் வளர வளர கீட்டனை எல்லோரும் மறந்து போனார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்திலேயே, மிக ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை வன்முறை இல்லாமல், வெறும் நகைச்சுவையாக காட்டிய கீட்டன் பஸ்டரை இந்த உலகம் மறந்தது வேதனை. இன்றும் சார்லிசாப்ளினை பல பேருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பஸ்டரை பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நேரம் இருக்கும்போது யூடியூபில், keaton buster என்று தேடிப்பாருங்கள். அதில் வரும் அத்தனை படங்களும் வயிற்றை பதம் பார்ப்பவை. அவரின் சாகசங்கள் அனைத்தும் வாயடைக்கச் செய்யும்.  மறக்கப்பட்ட ஒரு உன்னத கலைஞனை நினைவுபடுத்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...