விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 27, 2010

தேர்தலுக்கு முன் - பின் கற்பனையான உண்மை சம்பவம்

உண்மை சம்பவம் என்றால் ஏற்கனவே நடந்ததுதான். ஆனால் இது இனிமேல் நடக்கபோவது ஆனாலும் ஏற்கனவே நடந்தது. ஆகவே தான் இந்த மாதிரி குழப்பமாக ஒரு பெயர் வைத்தேன். சரி பெயர்ல என்ன இருக்கு? விட்டுத்தள்ளுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோம். பொதுவாக கருத்து கணிப்பு என்பது தேர்தலுக்கு முன்பாக நடக்கும் ஒரு சம்பிரதாயம். இங்கே கருத்து மட்டும் கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்ற கற்பனையான உண்மைகளை அளித்திருக்கிறேன்.



தேர்தலுக்கு முன்...

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்.
"அட போப்பா சொந்தகாரன்னு நெனச்சு ஓட்டு போட்டது தப்பா போச்சு. போன வருஷம் என்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட சகலை பேத்திக்கு இன்ஜினியரிங் காலேஜுல சீட்டு வாங்கித்தான்னு கேட்டா, பய கண்டுக்கவே இல்ல. இந்த தடவை அவன தோக்கடிச்சதான், தக்காளி அவனுக்கு நான் யாருன்னு புரியும்"

கீழ்தட்டு நகரவாசி
"தோ பாருப்பா நமக்கு இந்த ஸ்பெக்ரம் கிக்ரம்லாம் என்ன கருமமோ தெரியாது. ஓட்டுக்கு ஆயரம் ரூவா, ஷோக்கா கலர் டீவி, கேஸ்டவ்வு இதெல்லாம் யாருபா குடுப்பா? இதே அந்த அம்மாவா இருந்தாக்க அத்த கொண்டா இத்த கொண்டாண்ணு ஒரே ராவடிதாம்பா பண்ணும். முப்பது வருஷமா நான் தலைவருக்குத்தாம்பா ஓட்டு போட்ணுகிறேன். இப்போ திடீர்னு வேற யார்ணா ஒருத்தருக்கு போட எப்டிப்பா மன்சு வரும்?"

கீழ்தட்டு கிராமவாசி
"யாரு வந்தாலும் எங்களுக்கு எதுவும் செய்ய போறதில்ல. இப்ப கொஞ்ச நாளத்தான் ஓட்டுக்கு காசு அப்டிண்ணு ஏதோ தர்ராங்க. யாரு ரொம்ப காசு கொடுக்குராங்களோ அவுங்களுக்கு போடுறதுதான முறை?"

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"பாருங்க பெட்ரோல் விலை, காய்கறி விலை, பால்விலைனு எல்லாம் ஏறி கிடக்கு. என்டிடிவீ பாத்தீங்கண்ணா ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி போட்டு கிழி கிழிண்ணு கிழிக்கறான். அம்பது வருஷமா நாடாண்டு இவணுங்க என்னத்த கிழிச்சுட்டாங்க? யாராவது நியூபேஸ் வந்தா நல்லா இருக்கும் சார்."

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"இதோ பாருங்க எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் யாருக்கு போட சொல்றாரோ அவருக்கு ஓட்டு போட்டுடலாம்னு இருக்கேன்."

கல்லூரி மாணவர்
"சார் அரசியலே ஒரு சாக்கட சார். நம்ம நாடே நாறிக்கிடக்குது. இளைஞர்கிட்ட ஒரு எழுச்சி ஏற்பட்டாத்தான் சார் நாடு முன்னேறும். ஆயுத எழுத்து படத்துல கூட மணி சார் இதத்தான் சொல்லி இருப்பார். அரசியல்ல இளைஞர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கணும் சார். அப்பத்தான் அப்துல்கலாம் கண்ட 2020இல் வல்லரசு கனவு நிறைவேறும் சார். இதை தீமா வச்சு நான் எழுதிய கவிதை கூட எங்க கல்லூரில ஃபர்ஸ்ட் பிரைஸ் வின் பண்ணிருக்கு சார்."

பெருவணிக முதலாளி
"யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி நம்ம சைட்ல இருந்து வெய்ட்டா கவனிச்சுடுவோம். எல்லா கட்சியிலயும் நம்ம சாதிக்காரனுங்கதான் நிக்க போறாங்க. அதனால கவல இல்ல."

அரசு ஊழியர்
"அந்தம்மா வந்த உடனே செய்யுர மோத வேல எங்க சலுகைகள எல்லாம் கட் பண்றதுதான். ஸ்பெக்ட்ரமோ, போபர்ஸோ நமக்கு ஒண்ணும் பாதிக்க போறதில்லை. என்ன கேட்டா இவுங்களே மறுபடியும் ஜெயிக்குறதுதான் நியாயம். இது மட்டுமில்லாம எங்க சங்கத்துல எல்லாரும் இவருக்குத்தான் ஓட்டு போடனும்னு முடிவு பண்ணிட்டாங்க. நா மட்டும் என்ன பண்ண முடியும்?"

பதிவர்கள்
"முட்டாள் பொதுமக்கள்!, தேர்தலே வியாபாரம். அம்மா ஐநூறு கோடி என்றால் அய்யா பத்தாயிரம் கோடி ஊழல். பேசாம யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லைன்னு ஓட்டு போட்டுட வேண்டியதுதான். இந்த நாட்ட யாராலையுமே காப்பாத்த முடியாது."


தேர்தல் அன்று ....

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்
"என்னதான் இருந்தாலும் சொந்தக்காரன், விட்டு கொடுக்க மனசு வருமா? நம்ம சாதிசனம் பதவில இருந்தத்தானே நமக்கு மரியாத? அதுவுமில்லாம இந்த தடவ நிறையா பண்றதா சொல்லிருக்கான். (பம்முகிறார்) அதனால ஒன்னுக்கு நாலா ஓட்டு போட்டிருக்கேன்."

கீழ்தட்டு நகரவாசி
(கண்களில் போதை தெரிகிறது) "இன்னதான் சொல்லு, தலைவர் தலைவர்தாம்பா. ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுக்க யாருக்கு மன்சு வரும். கருக்கல்லயே ஊட்டுக்கு வந்து ரெண்டு பிரியாணி பொட்டலம், ஒரு குவாட்டர் பாட்லும் குட்த்தாணுங்க. பிரியாணிய பிர்ச்சி பாத்தா ரெண்டு ஆயரம் ரூவா நோட்டு. ஓத்தா இவுங்க குத்த இந்த ரூவாய்க்கு சலாம்போட்டு வாய்க்க முயுக்க வோட்டு போட்லாம்பா." (மயங்கி சரிகிறார்).

கீழ்தட்டு கிராமவாசி
"அதெல்லாம் தெரியாதுங்க. ரெண்டு பேரும்தான் ரூவா குடுத்தான், இருந்தாலும் நம்ம சாதிக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல? நம்ம சாதிக்காரப்பய நிக்கிற கச்சிக்குத்தான் ஓட்டு போட்டேன்."

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"சார் இந்த நாடெல்லாம் எப்ப திருந்த போகுது? காலைல ஓட்டு போட போனா ஐடில மூஞ்சி சரியா தெரியல, ரேஷன் கார்டு கொண்டு வான்னு அலக்கழிச்சாங்க. கடைசில என் வோட்ட ஏற்கனவே போட்டுட்டாணுங்கலாம். என்ன சார்னு நியாயம் கேட்டா அடிக்க வர்ற மாதிரி பாக்குராணுங்க. இதெல்லாம் நமக்கு தேவையா?"

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"நான் அப்பவே சொன்னேன் ஓட்டு போடுர எடத்துக்குலாம் போகாதீங்க. அங்க சண்ட நடக்கும்னு. இந்த மனுஷன் கேட்டாத்தானே? இப்ப பொலம்புராரு. நல்ல வேளை நான் போகல. கலைஞர் டீவில நல்ல படம் போடுறான். பாக்க உக்காந்துட்டேன்."

கல்லூரி மாணவர்
"என்ன சார் எலெக்சன் ஓட்டுண்ணு. அதான் அப்பவே சொன்னேன்ல நம்ம நாட்டுக்கு இளைஞர்கள்தான் தலைவரா வரணும்னு. இங்க வேட்பாளரா நிக்கிறவங்கள்ள எத்தனை பேரு இளைஞர்கள்? அதோட நான் ஒருத்தன் ஓட்டு போடாததுனால எலெக்சன் என்ன நடக்காமலா போய்டும்? போங்க சார். காலேஜுக்கு ஒருநாள் லீவு விட்டுருக்கான் அன்னிக்கும் பூத்துக்கு போ, ஓட்டு போடுன்னுட்டு."

பெருவணிக முதலாளி
"அதான் சொன்னேன்ல, யாரு வந்தாலும் நமக்கு கவல இல்ல. நான் ஓட்டு போட்டுத்தான் இங்க ரெண்டாயிட போகுதா? அதெல்லாம் எலெக்சன் முடிஞ்சு ரிசல்ட் வரட்டும் அப்ப பாத்துக்கலாம்."

அரசு ஊழியர்
"எங்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவுங்களுக்க்த்தானே ஓட்டு போட முடியும். இப்ப மூணு மாசத்து முன்னாடி கூட DA இருபத்தாஞ்சு பர்சண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க. அதனால நம்ம ஓட்டு எப்பவுமே தலைவருக்குத்தான்."

பதிவர்கள்
"இன்னிக்கு ஒரு நாள்தான் ஆபீஸ் லீவு. இதுக்காக சொந்த ஊருக்கு போயிட்டு வரமுடியுமா? நான் போடுரா ஓட்டுனால இந்த நாட்டோட தலையெழுத்து என்ன மாறிடவா போகுது? அதான் இங்க ரூம்லயே தேர்தல் அப்டெட்ஸ் பார்த்து பதிவு எழுதிக்கிட்டிருக்கேன். இந்த பதிவுக்கு தான் ஹிட்சும், வோட்டும் அதிகமா கிடைக்கும்." 

தேர்தல் முடிவுகள் 

45 சதவீதம் வாக்குப்பதிவு. ஆளும்கட்சி மயிரிழையில் முன்னணி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலுக்குப்பின் ...

மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

November 26, 2010

குயில்களின் குரலில் எனக்கு பிடித்தவை..


மறுபடியும் ஒரு தொடர் பதிவு. என்னை இந்த பதிவு எழுத அழைத்திருக்கும் ராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக திரைப்பட பாடல்களை எல்லாம் கேட்டவுடன் குப்பை என்று சாதாரணமாக ஒதுக்கி விடுவோம். இப்பல்லாம் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மாதிரியான நிகழ்ச்சிகள் பார்த்த பிறகுதான் பாடல் பாடுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது. மேலும் கல்லூரி காலங்களில் இசைக்குழுவில் இருந்ததால் பாடல்களின் இனிமை மற்றும் அருமை எனக்கு தெரியும். இசைக்குழுவில் இருந்ததால் பெரிய வித்துவான் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எல்லாம் கேள்வி ஞானம் மட்டும்தான். ரஜினி படங்களை வரிசை படுத்த எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஆனால் இந்த பதிவில் பாடல்களை தேர்வு செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. தொகுத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் வரிசைப்படி கொடுத்ததல்ல.


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...

       படம் : தில்லானா மோகனாம்பாள் 
       பாடலாசிரியர்:கண்ணதாசன் 
       இசை : கே வி மகாதேவன் 
       பாடியவர்: பி சுசீலா 

காதலும், நக்கலும் கலந்து எழுதப்பட்ட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரல் கணீரென்று இருக்கும். பத்மினியின் அபிநயங்கள், மற்றும் சிவாஜி கணேசனின் நடிப்பு எல்லாம் நன்றாக இருக்கும்.



மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு...
       
       படம் : கந்தன் கருணை 
       பாடலாசிரியர்: கண்ணதாசன் 
       இசை : கே வி மகாதேவன் 
       பாடியவர்: பி சுசீலா

முதலிரவு பாடல். தான் கணவன் மீது கொண்ட மையலை அழகாக வெளிப்படுத்துவது போல அமைந்திருக்கும் இந்த பாடல். சுசீலாவின் தேன் குரல் திகட்டாத இனிமை.


நினைத்து நினைத்து பார்த்தால்...

       படம்: 7/G ரெயின்போ காலனி
       பாடலாசிரியர்: நா முத்துக்குமார் 
       இசை : யுவன் ஷங்கர் ராஜா. 
       பாடியவர்: ஷ்ரேயா கோஷல் 

பாடல் வரிகள் உணர்த்தும் மெல்லிய சோகம் இந்த பாடல் முழுவதும் இழையோடும். அதற்கு முழு பொறுப்பு ஷ்ரேயா கோஷல்தான். இந்த பாடலை கேட்டு கதறி அழுதவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.


சினேகிதனே...சினேகிதனே..

       படம்: அலைபாயுதே 
       பாடலாசிரியர்:  வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான். 
       பாடியவர்: சாதனா சர்கம்
இந்த பாடல் வெளிவந்தபோது விரும்பி கேட்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கிட்டத்தட்ட முதலிரவு பாடல் போல இருந்தாலும், திருமணத்துக்கு முன்தினம் இருவர் பேசிக்கொண்டால் அந்த பெண் என்ன சொல்வாள் என்பது போல அமைந்திருக்கும்.


மல்லிகை என் மன்னன் மயங்கும் ...

       படம்:தீர்க்க சுமங்கலி 
       பாடலாசிரியர்: கண்ணதாசன் 
       இசை :  எம்எஸ் விஸ்வநாதன் . 
       பாடியவர்: வாணி ஜெயராம்

வாணிஜெயராம் குரலுக்காகவே இந்த பாடலை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம். பாடலில் பல நெளிவு சுழிவுகள், ஏற்ற இறக்கங்கள் என்று பாடுவதற்கு மிக கடினமான பாடல் இது. 


நிலா காய்கிறது...

       படம்: இந்திரா 
       பாடலாசிரியர்: வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான்
       பாடியவர்: ஹரிணி.

ஒரு பிஞ்சு குழந்தையின் குரலை கேட்டு அய்யோ கொஞ்ச தோன்றுமே? அதே போலத்தான் தோன்றும் இந்த பாடலை கேட்டால். ஹரிணி குழந்தையாக இருக்கும்போது பாடிய பாடல். மழலை குரலில் நெஞ்சை அள்ளும் இந்த பாடல். 


அன்பேன்ற மழையிலே...

       படம்: மின்சார கனவு   
       பாடலாசிரியர்:  வைரமுத்து   
       இசை :  ஏ ஆர் ரகுமான் 
       பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல்களில் இதுவும் ஒன்று. தெரியாமல் ஆரம்பித்துவிட்டு, போக போக பாட முடியாமல் திணறுபவர்கள் பலர்.  அனுராதாவின் குரலின் முழு பலத்தையும் வெளிக்கொணர்ந்த பாடல் இது.


பாடவா உன் பாடலை...

       படம்: நான் பாடும் பாடல் 
       இசை : இளையராஜா   
       பாடியவர்: எஸ் ஜானகி 
  
படத்தில் இந்த பாடல் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவது போல அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மெலடி என்றும் சொல்ல முடியாது, வேகமான பாடல் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஜானகியின் குரலிலேயே நிறைய உணர்ச்சிகளை புரிய வைக்கமுடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த பாடல்.


என் வானிலே... 

       படம்:  ஜானி 
       இசை : இளையராஜா   
       பாடியவர்: ஜென்ஸி

பட்டுப்போன்ற துணியால் வருடுவது போன்ற குரல் ஜென்சியினுடையது. மிக குறைந்த பாடல்களே பாடி இருந்தாலும் அனைத்துமே குறிப்பிடத்தக்க பாடல்கள். ஒரு சில பாடல்களே எந்த வேளையில் கேட்டாலும் நன்றாக இருக்கும். அப்படி பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.


எங்கே எனது கவிதை...

       படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
       பாடலாசிரியர்: வைரமுத்து   
       இசை : ஏ ஆர் ரகுமான் 
       பாடியவர்: சித்ரா
சித்ராவின் பாடல்கள் பெரும்பாலான பேருக்கு மகிழ்ச்சியாக பாடினால்தான் பிடிக்கும். ஆனால் எனக்கு சோக பாடல்கள் பிடிக்கும். அழுகை முட்டிக்கொண்டு வரும்போது அதை அடக்கி கொண்டு பாடுவது போல அமைக்கபெற்ற இந்த பாடல் என் ஆல்டைம் பெவரிட்.

டிஸ்க்: இளையராஜாவின் பாடல்கள் குறைவாக இடம்பெற்றதன் காரணம் எனக்கு பிடித்த இளையராஜா பாடல்கள் எல்லாம் டூயட் பாடல்களாகவே இருக்கின்றன. அதே போலத்தான் பின்னணி பாடகிகளின் பாடல்களும்.

இந்த பதிவை தொடர்வதற்கு நான் அழைப்பவர்கள் 





மறுக்காமல் எழுதுங்கள் என்று கேட்டு கொள்கிறேன். 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

November 24, 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...


ரஜினிகாந்த் அவர்களை பற்றிய பதிவு என்றவுடன் மனம் உடனே குதூகலம் அடைந்து விடுகிறது. நமக்கு பிடித்தவரை பற்றி பேசுகிறோம் அல்லவா? என்னை தொடர் பதிவுக்கு அழைத்த அரசையுரான் மற்றும் முறைமாமன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு நாட்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் பதிவுலகத்துக்கு ஆப்ஸெண்ட் ஆகி விட்டேன். ஆகவே உடனடியாக எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ரஜினி படங்களை வரிசைபடுத்த விரும்பவில்லை. ஆகவே நம்ம சன்டிவி புத்தாண்டு அன்று பத்து படங்களை வரிசை படுத்தாமல் ஒளிபரப்புவார்களே? அதே போல எழுதுகிறேன். ரஜினியின் படங்கள் என்றவுடன் என் நினைவுக்கு வரும் பத்து படங்களை பற்றி எழுதுகிறேன்.


தர்மத்தின் தலைவன்


இந்த படம் பார்க்கும்போது நான் ஒரு முழுமையான ரஜினி ரசிகனாக மாறி இருந்தேன். அப்போது எனக்கு வயது ஐந்துதான். ஆனாலும் ரஜினியிடம் இருந்த ஈர்ப்பு அவரிடம் கொண்டு சேர்த்தது. இன்னொரு விஷயம் இந்த படத்தில் ஒரு ரஜினியின் பெயர் ப்ரோபஸர் பாலு. பிரபு அடிக்கடி, "நான் ப்ரோபஸர் பாலுவோட தம்பி. சீவிடுவேன் சீவி!" என்று சொல்வார். அப்போது தீவிர ரசிகராக இருந்த என் மாமா என்னை பார்த்து, "டேய் ப்ரோபஸர் பாலு!" என்று கூப்பிடுவார். அப்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் அப்படி ஆவேன் என்று.

தளபதி


ரஜினியின் நடை உடை பாவனைகள் அனைத்து ஒரு பக்கா ரவுடியின் சாயலை ஒத்திருக்கும். சண்டை போடும்போது முகத்தில் காட்டும் ஆக்ரோஷம் அனைத்தும் அருமை. இந்த படத்துக்கு என் குடும்பத்துடன் இரண்டு தடவை சென்று டிக்கட் கிடைக்காமல் மூன்றாவது தடவைதான் முழுமையாக பார்க்க முடிந்தது. படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் மிக மிக வேகமாக இருக்கும். "இவர் மெதுவா பேசினாலே புரியாது." என்று என் அம்மா குறை பட்டு கொண்டார்.

தில்லு முல்லு 


இந்த படத்தை எப்போது கேடிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதும் பார்த்து விடுவேன். ரஜினியும், தேங்காய் சீனிவாசன் அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். மீசை இல்லாத ரஜினி தேங்காய் சீனிவாசனை முதன் முதலில் பார்த்து, "சார் அந்த தோட்டகாரன் உங்கள மாதிரியே இருக்கான்." என்று சொல்வதும், "இனிமேல் கல்யாணம் ஆகாத பொண்ணுங்களை மட்டும் லவ் பண்ணவே மாட்டேன்!" என்று சொல்வதும் இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

பாட்ஷா 


இந்த படம் பார்க்கும் போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் தியேட்டரில் இவ்வளவு ரசிக வெள்ளத்தை எந்த படத்துக்கும் பார்த்ததே கிடையாது. ரஜினியால் மட்டுமே இவ்வளவு மாஸ் உள்ள பாத்திரத்தில் நடிக்கமுடியும். இதற்கு பின் இதே சாயலில் வந்த பல படங்கள் மண்ணை கவ்வியது இதற்கு ஒரு சான்று. இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுதான் தமிழகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கி பெரிய அரசியல் மாற்றத்துக்கு அடிகோலியது.

நான் சிகப்பு மனிதன்


ஒரு அமைதியான ஆக்சன் ஹீரோவின் படம். எஸ் எ சந்திரசேகரன் அவர்கள் எடுத்ததிலேயே உருப்படியான படம் இதுதான். ரஜினி உச்ச நிலையில் இருந்த போது வந்த இந்த படத்தில் கூட தனக்கு இணையான கதாபாத்திரத்தில் பாக்யராஜை நடிக்க சம்மதிருப்பார். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் ரஜினியின் அலட்டாத நடிப்பு, அவரின் சின்ன சின்ன ஸ்டைல்கள் அனைத்தும் என்னை கவர்ந்தவை. இறுதி காட்சியில் ஆடாமல் அசையாமல் காந்திதேசமே என்று பாடல் பாடுவது கூட ஸ்டைலாகத்தான் இருக்கும்.


ஆறில் இருந்து அறுபது வரை


இன்றுவரை என் மனதில் மிகுந்த பாரத்தை ஏற்படுத்தும் படம் என்றால் அது இந்த படம்தான். தன் வேகத்துக்கும் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றிருந்த சமயத்தில் அப்படியே உல்டாவாக நடிக்க எந்த நடிகரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ரஜினி அப்படி எந்த வித செய்கைகளும் இல்லாமல் நடித்த படம் இது. பல இடங்களில் கண்களில் கண்ணீர் மல்க செய்யும்படி நடித்திருப்பார் ரஜினி.

நெற்றிக்கண் 


பலபேருக்கு இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் போது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி ரஜினி என்னை ரசிக்க வைத்த படம். பொதுவாகவே ரஜினி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலபேர் விரும்புகிறார்கள். ஒருதடவை ரஜினியே தனக்கு வில்லனாக நடிக்க பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அந்த விதத்தில் இந்த படம் ஒரு மைல்கல். விசு வசனத்தில் விளையாடி இருப்பார். சரிதாவிடம் அறை வாங்கி விட்டு அதனை சமாளிக்கும் காட்சி சுவாரசியமானது.

படையப்பா 


இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியும் தியேட்டரில் விசில் சத்தம் காது கிழியும். இந்த படம் வெளிவந்த சமயம் எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. படம் வெளியான மறுநாள் இறுதிதேர்வாக சமூக அறிவியல் தேர்வு. முந்தின நாள் இரவு படம் பார்த்து விட்டு உறங்க இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் தூக்க கலக்கத்தில் சென்று தேர்வு எழுதியது மறக்க முடியாதது. ரஜினி சவுந்தர்யாவின் கையை பிடித்தபடி ரம்யா கிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே வரும்போது வரும் பின்னணி இசை மிகவும் பிடித்தது. அதே போல வயதான ரஜினியை முதன்முதலாக காட்டும் காட்சியும் அருமை.

மன்னன் 


ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி மூவரும் கலந்து கட்டி அடித்த படம். அதிலும் அந்த செயின் மோதிரம் வாங்கும் காட்சியில், "இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா. எப்டி இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுகிட்டு முன்னால தைரியமா நீக்கறியோ?" என்று சொல்லும் டைமிங் அட்டகாசம். தலைவருடன் நடிப்பதாலோ என்னவோ விஜயசாந்தி இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்.

அண்ணாமலை 


ரஜினிக்கு அறிமுக பாடல் (அதற்கு முன் பெரும்பாலும் சண்டை காட்சிகள்தான் இருக்கும்), தனியாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்று டைட்டில் இசை ஆகியவை தொடங்கிய படம்.  தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்ட் உருவாக்கிய படம். தேவாவின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம். சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சியும், ஏலம் எடுக்கும் காட்சியும், புதிய சேர்மனாக ரஜினி தேர்ந்தெடுக்கப்படும் காட்சியும் பிரசித்தி பெற்றவை.


அடுத்த படம்... என்னது பத்து படம்தான் கோட்டாவா? அய்யய்யோ இந்த தொடர் பதிவை ரஜினி 100 படங்கள் என்று வைத்திருக்கலாமோ? நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். என்ன செய்ய பத்து படங்கள் என்று சொன்னதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

இந்த பதிவை தொடர நான் அழைப்பது (மற்றவர்கள் அழைத்து விட்டாலும், ஒன்ஸ்மோர்)





மறுக்காம எழுதிடுங்க ப்ளீஸ்... 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 



முழுவதும் படிக்க >>

November 20, 2010

கழுத்தை அறுத்த ஏர்டெல்...

இதற்கு முன்பு ஒரு பதிவில், "ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா?" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவை படித்து விட்டு, "நீ மட்டும் என்ன ஒழுங்கா? ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை வைத்து அவர்களை திட்டியே ஒரு பதிவிடுகிறாயே?" என்று யாரும் கேட்க கூடாது. இந்த சேவைக்கும் நான் பணம் கட்டுகிறேன். சரி இனி நடந்தது என்னவென்று பார்ப்போம். முதலிலேயே சொல்லி விட்டேன் இது சொந்த கதை. கொஞ்சம் போர் அடிக்கும். நீளமாக வேறு இருக்கும். எனக்கு வேறு யார் இருக்க புலம்பரதுக்கு?
இப்போ புதுசா இந்த லோகோ மாத்திருக்காங்களாம் 


நான் என் வீட்டில் இண்டர்நெட் இணைப்பு பெற்று சுமார் ஒண்ணரை ஆண்டுகள் ஆகின்றன. நமக்கு எப்பவுமே இந்த பேலன்ஸ் பார்த்து கால் பண்ற வேலையே ஆகாது. அதனால்தான் மொபைலில் கூட போஸ்ட் பெய்டு இணைப்புத்தான் வைத்திருக்கிறேன். எனவே இணைப்பு வாங்கும்போதே ஏர்டெல்லில் 256 kbps வேகம் கொண்ட அன் லிமிட்டட் இணைப்பு பெற்றேன். எல்லாம் நன்றாகத்தான் போயி கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பெண் ஏர்டெல்லில் இருந்து தொடர்பு கொண்டாள். நீங்கள் இணையத்தை நிறைய பயன்படுத்துவதால்  உங்களுக்கு ஒரு புது ஆஃபர் . அதாவது உங்கள் வேகம் 1 mbps ஆக (நான்கு மடங்காக) அதிகரித்து கொள்ளலாம். கட்டணம் முன்னூறு ரூபாய்தான் அதிகம். தற்போது நீங்கள் அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று கூறினார். நான் அவரிடம் சுமார் ஒரு அரைமணிநேரம் உரையாடி தெளிவு பெற்றபின் என் இணைய வேகத்தை அதிகரித்து கொண்டேன். 

இந்த புது வேகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. என் இணைய பயன்பாடும் அதிகரித்தது. மூன்று மாதங்கள் கழித்து திடீரென இணைப்பின் வேகம் பாதியாகி போனது. உடனே கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு பேசிய போது, "நீங்கள் 100 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளீர்கள். இது டிராய் சட்டப்படி கூடாது. ஆகவே உங்கள் இணைப்பு பாதியாக குறைந்து விடும், அடுத்த மாத தொடக்கத்தில் வேகம் கூடி விடும்!" என்றார்கள். இந்த ம...ரை அந்த பெண் என்னிடம் கூறவே இல்லை. சரி 100 ஜிபி கொஞ்சம் ஓவர்தான் என்று அதற்கடுத்த மாதங்களில் உபயோகத்தை குறைத்து கொண்டேன். கடந்த மாதம் என் இணையத்தின் வேகம் பாதியாகி விட்டது. கேட்டால், "நீங்கள் இருக்கும் பிளானில் 25 ஜிபி டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்!!" என்றார்கள். "இது என்னடா புதுக்கதை?" என்று நான் வெகு நேரம் விவாதம் செய்த பிறகு, பெங்களூரில் இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு புகாரை அனுப்பினார்கள். நான் கல்லூரியில் இருக்கும் போது மதிய நேரம் ஒரு அதிகாரி என்னுடன் பேசினார். "எங்கள் பக்கம் தவறு நேர்ந்து விட்டது. இதை உங்களிடம் சொல்லாமல் விட்டது தவறுதான்." என்று கூறினார். "உங்களுக்கு 25 ஜிபிதான் வரையறை." என்றும் கூறினார். அவரிடம் நான் கேட்ட கேள்விகள்

1. ஒரு புது பிளானை அறிமுகபடுத்தும்போது, கஸ்டமரிடம் இம்மாதிரி விஷயங்களை மறைப்பது நியாயமா?

2. அப்படியே 25 ஜிபி வரையறை இருந்தாலும், முதல் நான்கு மாதங்கள் எனக்கு இப்படி நடக்க வில்லையே?

3. 25ஜிபி தான் வரையறை என்றால், என்னால் முன்பு நூறு ஜிபி வரை எப்படி டவுன்லோட் செய்ய முடிந்தது?

3. முன்பு நூறு ஜிபி வரை நான் டவுன்லோட் செய்தபோது கூட எனக்கு 25 ஜிபி வரையறை இருப்பது தெரிவிக்க படவில்லையே? தவறு என்றால் ஒரு முறைதானே நடக்கும்?

இந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. நான் இணைப்பை துண்டிக்க போகிறேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். மாலை வீட்டிற்கு சென்று வேகத்தை சோதனை செய்தால், முழு வேகத்தோடு இருக்கிறது. இது சரியாக இரண்டு நாளைக்குத்தான். மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்றாகி விட்டது. மறுபடியும் கஸ்டமர் கேரில் பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் விவாதம் வர, திடீரென இணைப்பு கட்டானது. கோபமுற்ற நான் மறுபடியும் தொடர்பு கொண்டேன். வேறு ஒருவர் பேசினார். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இணைப்பை தூண்டித்ததை சொல்ல வில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை கால் செய்யும் போது, பெயர், போன் நம்பர்,  மொபைல் நம்பர், ஈமெல் ஐடி, நாம் வைத்திருக்கும் பிளான் எல்லாம் ஒரு முறை ஒப்பிக்க வேண்டும். இதுவரை நான் பேசியவரை சுமார் 25தடவை ஒப்பித்து விட்டேன்.(கொடுமைடா சாமி) அவரிடம் நேரடியாக விஷ்யத்தை சொல்ல, உடனே அவர் ஒரு தொலைபேசி எண் கொடுத்தார். அதாவது இது பில்லிங் சம்பந்தமான புகாராம். பில்லிங் டீபார்ட்மெண்ட்டில் பேச வேண்டுமாம். உடனே நானும் தொடர்பு கொண்டேன்.

பில்லிங் டிப்பார்ட்மெண்டில் இருப்பவன் எல்லாம் பெரிய புடுங்கிகள் போலிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டுமானால் நிமிடத்துக்கு 50 பைசா பிச்சை போடவேண்டுமாம். மறுபடியும் ஒரு பெண் பேசினார். மீண்டும் போன் நம்பர் எல்லாம் ஒருமுறை ஒப்பித்த பிறகு உங்கள் பிரச்சனை என்ன என்று கேட்டார். சிவாஜி படத்தில் வருவது போல வசனம்தான் வந்தது, "எத்தனை பேர்தாண்டா இதே கேள்விய கேப்பீங்க?" என்று கேட்க நினைத்து, கேட்காமல், நடந்த எல்லாவற்றையும் நூற்று ஓராவது தடவையாக கூறினேன். அவர் சிறிது நேரம் கழித்து கூப்பிடுகிறேன் என்று போனை வைத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்தது. இப்போது அந்த பெண் குழைவான தோனியில் பேச தொடங்கினார். "சார் அது வந்து இங்க தப்பு நடந்துடுச்சு, எல்லாருக்குமே இதுதான் பிளான். உங்களுக்கு இதில் நிறைய வசதி இருக்கு..." என்று கூற ஆரம்பித்தார். நான் இடையில் மறித்து, "இதை எல்லாம் நான் கேட்டாகி விட்டது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்." என்று கேட்டேன். அவர், "சார் உங்களுக்கு நியாயமா இணைப்பு வேகம் கால் பங்காக குறைந்திருக்க வேண்டும், ஆனால் பாதிதான் குறைந்திருக்கிறது. வந்தவரை லாபம்தான்." என்று கூறினார். நான் கடுப்பில் போனை வைத்து விட்டேன்.

இதற்குள் அந்த மாத பில்லிங் சைக்கிள் முடிந்து விட்டது. என் இணைப்பு பழைய வேகத்துக்கே வந்து விட்டது. சரியாக ஒரு வாரம் கழித்து மறுபடியும் வேகம் பாதியாகி விட்டது. இது நடக்க வேண்டும் என்றுதான் நான் எதிர் பார்த்தேன். கண்டபடி தீட்டி ஷாக் கொடுக்கலாம் என்று கஸ்டமர் கேருக்கு போன் செய்து (எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டு) பேச ஆரம்பித்தேன். அவர், "சார் உங்கள் பிளான் படி 15 ஜிபிக்கு மேல் டவுன்லோட் செய்தால் வேகம் பாதியாகி விடும்." என்று எனக்கு ஷாக் கொடுத்தார். நான் நேராக இணைப்பு வாங்கிய அலுவலகத்துக்கே சென்று விட்டேன். "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ரூல் சொல்கிறார்கள், முதலில் 100ஜிபி, பின்னர் 25 ஜிபி, தற்போது 15 ஜிபி என்கிறார்கள். எனக்கு இணைப்பு வேண்டாம் துண்டித்து விடுங்கள்!" என்று கூறினேன். உடனே அங்கிருந்தவர் பதறிக்கொண்டு, "நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன்." என்று அனுப்பி வைத்தார். இரண்டு நாள் கழித்து இணைப்பு முழு வேகம் வந்துவிட்டது. இருந்தாலும் எங்கோ தவறு நடப்பதாக என் துப்பறியும் மூளை சொன்னது.

இரண்டு நாள் ஆராய்ச்சி செய்ததில் நான் ஸ்பீட் செக் செய்யும் போது முழு வேகத்தில் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் டவுன்லோட் செய்யும் போது பாதி வேகத்தில் வருகிறது. உடனே கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு,(ஒப்பித்து விட்டு) விஷயத்தை கூறினேன். உடனே அவர், "உங்கள் கம்யூட்டரில் வைரஸ் இருக்கலாம், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறி விட்டார். நான் இணைப்பு வாங்கிய அலுவலகத்தில், மேல சொன்னவற்றை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, சில கேள்விகளையும் கேட்டேன். நம்ம உருவத்த பார்த்து படிக்காதவன் போலிருக்கு என்று பேசியவர், நான் சொன்ன விஷ்யங்களை கேட்டவுடன், விவரம் தெரிந்த ஆசாமி போலிருக்கு என்று, டெக்னீசியனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொன்னார். கூடவே அவரது மொபைல் எண்ணும் கொடுத்தார். இது நடந்தது, நவம்பர் 16. ஆனால் அவர் வருவதற்கு முன்னரே இணைப்பு தானாக முழு வேகத்தில் செயல் பட தொடங்கி விட்டது. இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அவ்வளவுதாங்க கதை. இதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

சம்பந்த பட்ட அந்த பெண் வேண்டுமென்றே என்னிடம் தெரிவிக்க மறந்திருந்தாலும், அடுத்த மாதமே என்னுடைய இணைப்பின் வேகம் பாதியாக குறைந்திருக்க வேண்டும். நடக்கவில்லை. ஆகவே ஏர்டெல்லே திட்டமிட்டு, என்னை முழு வேகத்தையும் உபயோகபடுத்த பழக்கி, பின் மெதுவாக தான் வேலையை காட்ட துவங்கி விட்டார்களோ?

பெங்களூரு ஆசாமியிடம் நான் பேசியவுடன் இணைப்பு வேகம் அதிகரித்தது தற்காலிகமாக  என் வாயை மூடவா? 

ஒவ்வொரு தடவை நான் போன் செய்யும் போதும் ஒவ்வொரு விதமான டீட்டைல் தரப்படுகிறதே எப்படி? வாய்ப்பே இல்லை என்று சொன்னவர்கள் இப்போது இணைப்பை தூண்டிக்கிறேன் என்று சொன்னதும், முழு வேக இணைப்பை வழங்கியது எப்படி?

வைரஸ் தாக்கி இருந்தால் இன்று வரை எனக்கு வேகம் பாதியாகத்தான் வந்திருக்க வேண்டும். மேலும் வைரஸ் தாக்கி இருந்தால் அச்சு பிசகாமல் பாதி வேகம் மட்டும் வருமா? நான் புகார் செய்ததும் முழு வேகம் வந்தது எப்படி? அந்த வைரசுக்கு எப்படி தெரிந்தது? ஏர்டெல்லில் போன் செய்து சொல்லி இருப்பார்களோ?

கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என்னையே இப்படி புரியாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றால், இந்த விவரம் தெரியாதவர்களை எல்லாம் எப்படி ஏமாற்றுவார்கள்?

எனக்கு தெரியும் இதுவும் அடுத்த பில்லிங் சைக்கிள் வரைதான். அதன் பின்...

                                                                                                                                 -தொடரும்......

டிஸ்க்:அவனவன் இரண்டு லட்சம் கோடி அடிச்சுட்டு போய்ட்டான், அவன கேக்க துப்பில்லை என்று யாரும் கமெண்ட் போடாதீர்கள்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


முழுவதும் படிக்க >>

November 15, 2010

பதிவர்களுக்கு வரக்கூடிய வினோத நோய்கள்...

நான் இப்போது சொல்லப்போவது ரொம்ப சீரியஸான விஷயம். ஆனால் சீரியசா இல்லாமல் கொஞ்சம் லைட்டாவே சொல்றேன். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதிவெழுதி வருகிறேன். அதற்கு முன் சுமார் ஒரு வருடங்கள் பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஆக நான் பதிவுலகுக்கு வந்து ஒண்ணரை வருடங்கள்தான் ஆகின்றது. அதற்கு முன் தமிழில் பதிவுகள் வருவதே தெரியாது. நான் வந்த புதிதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். அதுவும் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளாகவே என் உடலும் மனதும் சரியில்லை. என்னவென்று ஒரு டாக்டரை அணுகியபோது அவர் கூறிய சில நோய்கள்...

1. உலகபடமோபோபியா: 

இது பொதுவாக இளைஞர் முதல் நடுவயதினரை தாக்கும். ஆண்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் வெளிநாட்டு படங்களுக்கெல்லாம் ஒரே பெயர்தான். அது இங்கிலீஷ் படம். இப்போதுதான் நிறைய ஆங்கிலம் அல்லாத படங்கள் பற்றி தெரிந்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சனை என்றால், இப்போதெல்லாம் தமிழ் படங்களை பார்க்கும்போது, "இது ஒரு உலக படதரத்துக்கு இல்லையே?" என்று கடுப்பு வருகிறது (உபயம் பதிவுலகம்). மேலும், "இந்த படத்தை பாராட்டி பதிவெழுதலாமா, எழுதினால் கும்மி விடுவார்களோ?" என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது. ஒரு நல்ல படத்தை பார்த்தால் கூட, "இது எந்த உலகபடத்தின் காப்பியோ?" என்று சந்தேகம் வருகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியாமல், ஒரு நிம்மதி அற்ற நிலையே ஏற்படுகிறது. ரசித்து பார்த்தாலும், எனக்குள் இருக்கும் பதிவர் வந்து, "நீயும், உன் ரசனையும்!!" என்று காரி துப்புகிறார். ஒண்ணரை வருடத்துக்கு முன் திரைப்படம் பார்க்குபோது இருக்கும் நிம்மதி இப்போதில்லை. இதன் பெயர்தான் உலகபடமோபோபியா.

டிஸ்க்: தமிழ்நாடும் உலகத்தில்தானே உள்ளது. அப்படியானால் தமிழ் படங்களை உலகப்படம் என்று சொல்லக்கூடாதா?


2. பார்ப்பனியாசிஸ்:

இந்த நோய்தான் எனக்கு முற்றி விட்டது. உதாரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர். கொஞ்ச நாளாக இது எனக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால் இதில் வருபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். இது மட்டுமல்ல, ஏனைய பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூட நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் யாராவது பேசினாலோ, கருத்து தெரிவித்தாலோ அது என்னை பாதிக்காது. ஆனால் இப்போதெல்லாம் பேசுபவர் பார்ப்பனராக இருக்குமோ? என்று கருத தோன்றுகிறது(உபயம் பதிவுலகம்). இதற்கு முன் ஒருவரின் சாதி என்ன என்று கவனிக்க தோன்றாத எனக்கு, இப்போதெல்லாம் யாருடன் பேசினாலும் அவர் சாதி என்ன?, ஒருவேளை பார்ப்பனராக இருப்பாரோ? என்று ஆராய தோன்றுகிறது. இப்பேற்பட்ட சாதி வெறியை சமுதாய விழிப்புணர்வு என்ற பெயரில் எனக்கு தந்தது இந்த பதிவுலகம்தான். இந்த நோய்க்கு பெயர் பார்ப்பனியாசிஸ்.

3. பகுத்தறிவு டிஸார்டர்:

இந்த நோய் பதிவுலகம் வருவதற்கு முன்பிருந்தே கொஞ்சம் தாக்கி இருந்தது. இப்போது முழுவீச்சில் என்னை ஆதிக்கம் செலுத்துகிறது. கோவிலுக்கு சென்று நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை. "நாம் ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?" என்ற எண்ணம் தோன்றி தொலைக்கிறது. இந்துவாக இருப்பதே ஒரு தேசதுரோக குற்றமாக எண்ண தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை மற்ற மதத்தை துவேசிப்பதில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று நினைப்பவன். இப்போது, "நாம் திராவிடர்கள். ஆரிய கடவுள்களை கும்பிடக்கூடாது" என்று சொல்கிறார்கள். இதற்கு முன் இப்படி நினைத்ததில்லை. ஆரிய திராவிட பேதம் கூட தெரியாது. இதற்கு முன் எங்கள் வீட்டில் புரோகிதர் வைத்து திருமணம் நடந்ததில்லை. இனிமேலும் நடக்க போவதில்லை. ஆனால் இனிமேல் புரோகிதர் இல்லாமல் நடப்பது என் மனதில் ஒரு வித கொடூர சந்தோசத்தை தரும். ஏனென்றால் "நான் திராவிடன். ஆரியனை புறக்கணிக்கிறேனே" என்று. எனக்கு நம்பிக்கை தரும் ஒரு சக்தியாகவே கடவுள் இருந்திருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையையே ஆட்டம் காண செய்திருக்கிறது இந்த நோய். கடவுள் நம்பிக்கை என்பது செக்ஸ் மாதிரி என்று சொல்கிறார்கள். கடவுளை வணங்குவது சுய இன்பம் மாதிரி என்று கூட சொல்வார்கள். 

இந்த நோயால் ஒரு நன்மை உண்டாகி இருக்கிறது. இதுவரை கடவுள் இருக்கிறார் என்று நம்பிய எனக்கு, அவர் எப்படி இருப்பார்? என்ற ஆவல் உண்டாகிறது. கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு பதிலாக, கடவுள் ஏன் இருக்க கூடாது? என்ற கேள்வி தோன்றி உள்ளது. நான் யாருக்கும் கடவுளை போதிக்கவில்லை. ஆகவே யாரும் எனக்கு நாத்திகத்தை போதிக்க தேவை இல்லை. ஐயோ மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சுட்டேனே?

4. புரட்சியோமேனியா 

எப்படி பகுத்தறிவு டிஸார்டர் என்னை இந்துவாக இருப்பதற்காக வெட்கப்பட வைத்ததோ அதே போல புரட்சியோமேனியா என்னை நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதற்கு வெட்கப்பட வைக்கிறது. "ஏதோ பிறந்தோம், சம்பாதித்தோம், இறந்தோம் என்று இருக்கிறாயே!" என்று செருப்பால் அடிக்கிறது. "அநியாயத்தை தட்டிக்கேள்!!" என்று ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நாம் உடல் நிலையோ, மன வலிமையோ என்னை பார்த்து, "இதோ பார்ரா புரட்சிக்காரன்.." என்று  எக்காளமிடுகின்றன. யாரை பார்த்தாலும் ஒரு சமுதாய கண்ணோட்டத்தோடே பார்க்க தோன்றுகிறது. எல்லோரும் எதிரி மாதிரியே தெரிகிறார்கள். ஜவுளிக்கடை, மார்க்கெட், தொழிற்கூடம் எங்கே போனாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது (உபயம் பதிவுலகம்). ஏற்கனவே இருந்த ஆசிடிட்டி அல்சராக பிரோமோஷன் பெற்று விட்டது.

5. ரசிகனோசோம்னியா 

நான் கட்டவுட் ஏறி பாலாபிஷேகம் செய்யும் ரசிகனல்ல. ஆனால் ஒரு சில நடிகர்களின் தீவிர ரசிகன். அபிமானம் என்பதை தாண்டி ஒரு வித அன்பு இருக்கிறது. ஒவ்வொரு முறை தல படம் பார்க்கும்போதும், "அய்யயோ இந்த படத்தை பதிவர்கள் எப்படி கிழிக்க போகிறார்களோ?" என்ற பயம் தோன்றுகிறது. இளைய தளபதி படத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்க தோன்றுகிறது. அந்த படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கூட கட்டாயமாக மறக்க முயல்கிறேன். பதிவர்கள் ஒவ்வொரு முறை ரசிகர்களை முட்டாள்கள் என்று திட்டும்போதும், என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறேன்.  "நான் முட்டாள்தானோ? படித்து முடித்த இரண்டாவது நாளில் இருந்து என்னுடைய செலவுகள் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை, என் மன நிறைவுக்காக, நான் விரும்பும் நாயகனின் படத்தை பார்க்க செலவளிக்கிறேன். நான் எப்படி முட்டாள் ஆவேன்? இந்த பணததை யாரேனும் ஏழைகளுக்கு செலவிடலாம். நான் முட்டாள்தானோ?" இப்படி மாறி மாறி எண்ணங்கள் என் நிம்மதியை குலைக்கின்றன. ஒரு வேளை நான் என் நாயகனின் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்? ஒரு பெரிய சமுதாய மாற்றம் உண்டாகும். ஆனால் அதனால் எனக்கொன்றும் பயனில்லை. எனக்கிருந்த ஒரே மகிழ்ச்சியும் பறிபோகும். இப்படி ஒரு பைத்தியக்கார மன நிலைக்கு என்னை தள்ளியது இந்த நோய்தான். என் ஆதர்ச நாயகனின் படத்தை கூட சலனம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. படம் பார்க்கும் போது கூட பதிவர்கள்தான் ஞாபகம் வருகிறார்கள். 

நடுத்தரவர்க்க பதிவுலக நண்பர்களே! உங்களுக்கும் என் போன்ற உபாதைகள் வந்திருக்கலாம். அதில் இருந்து எப்படி மீண்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்...

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

November 10, 2010

என்கவுண்டரும் - ஹிட்கவுண்டரும்...

இன்று பதிவுலகில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் என்கவுண்டர். அதாவது,ம"னித உரிமைக்கு இங்கு மதிப்பே இல்லை, எல்லாருக்கும் இப்படி தண்டனை கொடுத்து விட்டால் சரியாகி விடுமா?" என்றல்லாம் பலர் எதிர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். நான் பேசப்போவது என்கவுண்டர் சரியா தவறா என்றல்ல. என்கவுண்டர் விஷயத்தை கூட சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தும் ஹிட் கவுண்டர்களை பற்றி. 



இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக எங்கெல்லாம் சந்து கிடைக்கிறதோ அங்கெல்லாம் மூத்திரம் அடித்து விட வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்வது? தேவையே இல்லாமல் இந்த விஷயத்துக்கு சாதி, மதம், தொழிலாளர் வர்க்கம் என்று மூலாம் பூசுகிறார்கள். மக்களுக்கு உண்மையை தெளிவாக்குகிறேன் என்று இன துவேசத்தை தூண்டுகிறார்கள். இந்த தவறை செய்தவன் ஒரு பார்ப்பனராக இருந்தால் இப்படி நடக்குமா? என்று கேள்வி கேட்கிறார்கள். அய்யா சாமி!, சாத்தியமா எங்களுக்கு இப்படி எல்லாம் சிந்திக்க தெரியாது. செத்துபோன அந்த குழந்தைகள் என்ன சாதின்னும் தெரியாது, கடத்தி கொன்னவன் எந்த சாதின்னு தெரியாது, அவன சுட்டு கொன்னவனும் என்ன சாதின்னு தெரியாது.


இந்த செய்திகளை கேட்ட உடனே மனதில் தோன்றியது, அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு வேன் டிரைவரை நம்பித்தானே பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். ஒரு குழந்தையை கொடூரமாக கொன்றவனுக்கு இந்த தண்டனை தேவைதான் என்ற எண்ணம். "அது சரி, எல்லாவற்றுக்கும்  என்கவுண்டர் என்றால் என்ன ஆகும்?" என்று கேட்கிறார்கள். இதே பதிவர்கள் இவனை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து வழக்கு நடத்தினால் அதற்கும் தம் கண்டனங்களை பதிவு செய்வார்கள். அதாவது அவர்கள் செய்திருக்க வேண்டிய செயல், அவனை கைது செய்தவுடன் இவர்களிடம் போன் போட்டு கேட்டிருக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று. இங்கே நான் நிறுவுவது என்கவுண்டர் சரியென்று அல்ல. சந்தடி சாக்கில் தான் அதிமேதாவித்தனத்தை காட்டி ஹிட் வாங்க துடிக்கும் உண்மையான சமூக ஆர்வலர்களின் செயல் சரியா என்று வினவுவதற்க்காகத்தான். எல்லா விஷயத்திலும் ஒன்று பூணூல் மாட்டுவது, இல்லையேல் சிகப்பு சாயம் அடிப்பது சரியாஇந்த மாதிரி பல விஷ கிருமிகள் பதிவுலகிலும் பெருகி விட்டன. இந்த கிருமிகள் நிறைந்த உலகில் சஞ்சாரிப்பதால் எனக்கும் ஒரு சில நோய்கள் வந்து விட்டன. அதைப்பற்றி இன்னொரு பதிவில் கூறுகிறேன்.

என்கவுண்டர் நடந்த இடத்தில்...
(இந்த போட்டோ எடுத்தவரை பாராட்டியே ஆகனும்) 

நான் தொலைக்காட்சியில் இந்த செய்தியை சொல்லக்கேட்டவுடன், குபீரென்று சிரித்து விட்டேன். அப்படியே அஞ்சாதே பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவு படுத்தியது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இது பற்றி என் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் இந்த என்கவுண்டர்களுக்கு பின்னால் சில தூண்டல்கள் இருக்கலாம் என்றான்.

  1. பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாரேனும் பெரும்புள்ளி இருந்திருந்தால் அவர்கள் போலீசிடம் லஞ்சம் கொடுத்து இதை செய்திருக்கலாம்.
  2. உண்மையிலேயே அவன் தப்பி ஓடி இருக்கலாம்.
  3. அவன் உயிருடன் இருந்தால் ஏதாவது உளறி இன்னும் பலபேரின் அண்டர்வேரை கழட்ட வேண்டி வரும் என்ற பயத்தால் கரை வேட்டிக்காரர்கள் செய்த வேலையாக கூட இருக்கலாம்.
அவன் கேட்ட இன்னொரு கேள்வி, தற்போது (இன்னொரு குற்றவாளி) மனோகரனின் மனநிலை எப்படி இருக்கும்?


என்கவுண்டர் ஒரு தீர்ப்பல்ல. ஆனால் என்கவுண்டரும் சில நேரங்களில் தீர்ப்பாக வேண்டும். எது எப்படியோ இது ஒரு நிரந்தர தீர்வல்ல என்பது மட்டும் உண்மை. சட்டத்தில் தேவையான மாற்றங்கள் வந்தால் தேவலாம்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...