விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 9, 2010

ஹாக்கி இனி மெல்ல சாகும் .....


ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. நாடு முழுவதும் ஐ பி எல் ஜுரம் தொற்றி கொண்டு விட்டது. ஏறக்குறைய எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்த முறை எந்த அணி ஜெயிக்க வாய்ப்புள்ளது, நட்சத்திர வீரர்கள் எதில் அதிகம் என்ற பேச்சுகளும் அதிகம் காதில் விழுகின்றன. கிரிக்கெட் ஒரு விளையாட்டாக கருதப்பட்ட காலம் போய் இப்போது அது ஒரு மதம் ஆகி விட்டது. கிரிக்கெட் பார்க்காதவன், அதற்க்கு எதிராக விமர்சனம் செய்பவன் எல்லாம் தேசதுரோகி என்று கூறும் அளவிற்கு கிரிக்கெட் நம் வாழ்வில் ஒன்றி விட்டது.

கடந்த சில வாரங்களாக பதிவர்களால் அதிகம் அலசப்பட்ட விஷயம் என்னவாக இருக்கும்? நித்தி பிரச்சனை வருவதற்கு முன்? ஆங்... கரெக்டா சொன்னீங்க நம்ம சச்சின் எட்டிய புதிய மைல் கல். சச்சின் 200 ரன்கள் எடுத்ததுதான் எல்லோராலும் பேசப்பட்டது. எல்லா பதிவர்களும் சச்சினை பற்றி எழுதி  புண்ணியம் சம்பாதித்து கொண்டனர். சிலர் சச்சினை விமர்சித்து வாங்கி கட்டியும் கொண்டனர். இதற்கிடையே சச்சின் அந்த மாட்சில் எப்படி எல்லாம் ஆடி அந்த ரன்களை எடுத்தார் என்றும் பலர் தான் ஆராய்ச்சி மூளையை கசக்கி எழுதினர். தோனி என்பவர் எவ்வாறு சச்சினை 200 ரன்கள் எடுக்க விடாமல் நாட்டுக்கு துரோகம் செய்ய முயன்றார், கடந்த காலங்களில் அவருக்கு எதிராக பலர் எவ்வாறு சதி திட்டம் தீட்டினர் என்றும் தன் கற்பனை சக்தியை கொண்டு முடிந்தவரை எழுதி களைத்து விட்டனர். இது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாள் கழித்து பாருங்கள் எல்லா பதிவர்களுக்கும் எழுதுவதற்கு பொதுவான ஒரு விஷயம் ஐ பி எல் தொடர்தான்.  ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வந்து விட்டால் போதும், ஆளுக்கொரு விமர்சனம், அலசல்கள், புள்ளி விபரங்கள், கருத்துக்கள் பதிவுலகமே போட்டி போட்டுக்கொண்டு எழுதும். பதிவுலகம் என்றில்லை பிரபல நாளிதழ்கள் கூட விளையாட்டு மலர் என்று இலவச இணைப்பு போட்டு விட்டு, பெரும்பாலும் கிரிக்கெட் செய்திகள் தான் வெளியிடும். 

அது சரி... கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா? இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து ஆம் என்ற பதில் தான் ஒவ்வொரு இந்தியன் வாயில் இருந்து வரும். கிரிக்கெட்டில் தோற்றால் ஒரு இந்தியனுக்கு மான பிரச்சனை. அவனால் வெளியில் தலை காட்ட முடியாது. தன் பேவரிட் சச்சினோ, சேவாக்கோ டக் அவுட் ஆனால் சாப்பாடு இறங்காது. ஒவ்வொரு உலக கோப்பை தொடரிலும் நமது அணியின்  மோசமான செயல்பாட்டால் ரசிகர்கள் அவர்கள் வீட்டை தாக்குவது போன்ற அதிகப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர். 2007 உலக கோப்பை போட்டியில் நடந்தது அனைவரும் அறிந்ததே. 

சரி முந்தாநாள் உலக கோப்பை ஹாக்கியில் நமது பாரம்பரியம் மிக்க இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதே, அதை யாராவது கண்டு கொண்டோமா? உள்நாட்டில்,அதுவும்  தலை நகரத்தில் நடக்கும் இந்த தொடரில், ஒரே ஒரு ஆட்டம் தவிர, மற்ற எதிலும் நம் அணியால் வெற்றி பெற முடியவில்லையே?  சச்சினுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் பொங்கி எழும் நாம் சம்பள பாக்கி கூட தராமல் இழுத்தடிக்கப்படும் ஹாக்கி அணியை திரும்பி கூட பார்க்கவில்லையே ஏன்? நான் சச்சினை குறை சொல்லவில்லை.  இவற்றை கவனிக்கும் நாளைய சமுதாயத்தின் மனதில் ஒரு ஆழமான கருத்தை விதைக்கிறோம். கிரிக்கெட் விளையாடினால் முதல் மாத சம்பளமே அரை லட்சம். (பார்த்திவ் படேல் ஒரு தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல், அணியில் இடம் பெற்ற  ஒரே   காரணத்துக்காக லட்சக்கணக்கில் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே)  

நான் கடந்த ஒரு வாரமாக நடக்கும் ஹாக்கி போட்டிகளை கவனித்து வருகிறேன். அதில் நாம் வீர்கள் விளையாடும் போது ஒரு விதமான சோகமே மனதில் எழுந்தது. பந்தை விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வீரனின் மனநிலை என்னவாக இருக்கும்? "ஒரு வேளை நான் கிரிக்கெட் ஆடி இருந்தால் இந்நேரம் என்னை ஐ பி எல் இல் ஏலம் எடுத்து இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம்" என்று நினைத்தபடி ஆடி கொண்டிருப்பானோ ? என்று எண்ண தோன்றியது. இருக்கலாம். அதில் என்ன தவறு. அது உண்மைதானே. ஆனால் இது ஒரு மோசமான முன்னுதாரணம். இப்படி ஒவ்வொரு வீரனும்  எண்ண தொடங்கினால் அதுவே அந்த விளையாட்டின் அழிவுக்கான  ஆரம்பம். இதனை நாம் நம்மை அறியாமலே நம் குழந்தைகள் மனதில் விதைக்கிறோம். முன்பெல்லாம் 5 வயது சிறுவர்களுக்கு பொம்மை வாங்கும் போது ஹாக்கி மட்டையோ இல்லை உதை பந்தோ வாங்குவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் விளையாடும் பொருள் என்றால் அது கிரிக்கெட் பேட்  தான்.

நாம் நமக்கே தெரியாமல் நமது தேசிய விளையாட்டை சாகடித்து கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதோ  விளையாடுவதோ ஒரு தவறே அல்ல. ஆனால் நமக்கு அடுத்து தலை முறையினரிடம் கிரிக்கெட் தவிர்த்து மற்ற எதுவும் விளையாட்டே இல்லை என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அது தான் தவறு . இந்த நிலை இன்னும் தொடர்ந்தால்

ஹாக்கி இனி மெல்ல சாகும் ..... 

1 comments:

Subu said...

பாலா

/////அது சரி... கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா? /////

இதே கேள்வி என் மனதில் பத்தாண்டுகளாய் இருந்து வருகிறது

சிறிய ஐரோப்பிய நாட்டுக்காரர்கள் "..அது என்ன இந்தியாவில் 110 கோடி மக்களளிருந்தும் 1 ஒலிம்பிக் தங்கம் வாங்க இவ்வளவு போராட்டமா .." என்று கேட்கிறார்கள்

நம் மாநிலத்தை விட குறைந்த மக்கட்தொகையும், பண பலமும் உள்ள ஆப்பரிக்க நாடுகள் ஒலிம்பிக்கில் தங்கங்கள் அடித்து செல்கின்றனர்.

/////இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து ஆம் என்ற பதில் தான் ஒவ்வொரு இந்தியன் வாயில் இருந்து வரும். கிரிக்கெட்டில் தோற்றால் ஒரு இந்தியனுக்கு மான பிரச்சனை. அவனால் வெளியில் தலை காட்ட முடியாது.//////


கிரிக்கெட் வளர்ந்த மற்ற வளர்ந்துவரும் நாடுகளில் - எ,கா பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ... ... பங்களாதேஷ்... ஜிம்பாப்வே ... சற்றேரக்குறைய இதே நிலை தான் போல இருக்கு. கிரிக்கெட் தவிற விளையாட்டில்லை. இருந்தாலும் கேட்பாரில்லை. மற்றவை ஏனோ தானோ. கிரிக்கெட் என்ற காந்தம் மக்களை / நேரத்தை உறிஞ்சிவிட்டது

அதிக பணமும், ஓய்வும், தளவாட நிலையும் எத்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை எல்லாவாற்றையும் சேர்த்து சமாளிக்கும் வல்லமை படைத்தவை

கிரிக்கெட் இல்லாததே சீனாவின் தங்கப் பதக்க தேடலுக்கு ஒரு துணையோ ?

நாம் என்ன செய்யலாம் ? இன்நிலையை எப்படி மாற்றலாம் ?


அன்புடன்
சுப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...