முன்குறிப்பு: இந்த பதிவு ரஜினிக்கு ஆதரவானதா? இல்ல எதிரானதா? யாராவது சொல்லுங்களேன்?
அப்பாடா ஒரு வழியாக எந்திரன் படத்துக்கு டிக்கட் பதிவு செய்தாகி விட்டாயிற்று. தலைவர் படத்தை முதல்நாள், முதல் காட்சியே பார்ப்பதே ஒரு தனி சந்தோசம்தான். எங்கள் ஊரில் முன்பதிவு வசதி (முதல் காட்சிக்கு) இல்லாத காரணத்தால் மதுரையில் நண்பர் உதவியுடன் முன்பதிவு செய்தேன். என்னது டிக்கெட் விலை எவ்வளவா? அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், "இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச?" அப்படின்னு வருமான வரி ரெய்டு வந்துடும். தென் தமிழக மக்கள் ஒருவர் மீது அபிமானம் வைத்து விட்டால் அவர்கள் காட்டும் அன்புக்கு எல்லையே இருக்காது. அதுவும் ரஜினி ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஒவ்வொரு ரஜினி படம் வந்து, சில வருடங்கள் கடந்த பிறகு, ஒரு அமைதி நிலவும். ரஜினி அடுத்த படம் நடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். அந்த இடைப்பட்ட காலத்தில் "ரஜினி அவ்வளவுதான், அவருக்கேது ரசிகர்கள்? எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க..." அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்."இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும்?" அப்படின்னு மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கூட்டம் அள்ளும். "ரஜினிக்கு மவுசு போயிடுச்சு, எல்லாம் கலாநிதி மாறன் தயவில்தான் நடக்கிறது." என்று சொல்பவர்களைக் கேட்டால் சிரிப்பாகத்தான் வருகிறது.
ரஜினியின் படத்தை முதல் நாளில் அத்தனை காட்சிகளும் பார்க்கும் ரசிகர்கள், தினம் ஒரு தடவை வீதம் படம் ஓடும் அத்தனை நாட்களும் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் ரஜினியே வேண்டாம் என்றாலும் கேட்கபோவதில்லை. "நீ கவலப்படாத தலைவா. உன்ன பாக்குரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு பண்ணலாம்." என்று சொல்பவர்கள். ரஜினி படம் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இரண்டொரு தடவை ரஜினி படத்தை பார்க்க தவறுவதில்லை.
இந்த அளவுகடந்த அபிமானத்தை பயன்படுத்திதான் தியேட்டர்காரர்களும், டிஸ்டிரிபியுட்டர்களும் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ரஜினி படத்தை வாங்க ஏகப்பட்ட போட்டி. அதிக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதைவிட அதிக லாபம் சம்பாதித்து விடுகிறார்கள். ஒவ்வொரு ரஜினி படமும் தன் முந்தைய சாதனைகளை தகர்ப்பது அனைவரும் அறிந்ததே. அந்த சாதனை டிக்கட் விலையிலும் முறியடிக்கப்பட்டு வருவது முற்றிலும் உண்மை. சிவாஜி பட டிக்கட் விலை நூற்றைம்பது ரூபாய். இப்போது எந்திரன் டிக்கட் முன்னூறு ரூபாய்க்கு விற்கபடுகிறது. இதை வாங்குவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. இதுபோக ஒரு குறிப்பிட்ட காட்சியை ரசிகர் சிறப்பு காட்சியாக ரசிகர்மன்றம் வாங்கி விடும். அந்த காட்சிக்கு இன்னும் அதிக விலைக்கு டிக்கட் விற்கபடுகிறது. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வித்தை அறிந்தவர்கள் சன் பிக்சர்ஸ். இப்போது அவர்கள் கையில் இருப்பது பெருமாள். என்ன செய்வார்கள்? ரஜினி என்ற கரும்பில் இருந்த சர்க்கரையை பிழிந்து எடுத்ததோடு மட்டுமல்லாமல், சக்கையையும் விற்று காசாக்கி விட்டார்கள். எந்திரனை ரசிகர்கள் வரவேற்றாலும், அவர்கள் மனதில் சன் பிக்சர்ஸை நினைத்து சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது. மற்ற நடிகர்களைப்போல ரஜினியையும் எக்ஸ்ப்லாய்ட் செய்கிறார்களே என்று.
இவை அனைத்தும் என் மனதிலும் இருக்கிறது. "தலைவா, உங்கள் படத்தை பார்ப்பதாலோ? புறக்கணிப்பதாலோ? சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆகவே புறக்கணிப்பது என்பது முட்டாள்தனமானது என்று எல்லா ரஜினி ரசிகனுக்கும் தெரியும். அதே சமயம் ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்கிறேன். அதிக விலையில் டிக்கட் விற்ககூடாது என்று கூறி விட்டால் மட்டும் போதாது. அந்தந்த பகுதி ரசிகர் மன்றங்கள் மூலம் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள செய்யவேண்டும். இது தயாரிப்பாளர்கள் பிரச்சனைதான் என்றாலும், அதில் தலையிடும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இறுதியாக ஒரே வேண்டுகோள். தயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்."
"உங்கள் படங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களை நீங்கள் கவனியுங்கள். தலைவா எங்கள காப்பாத்து...."
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>