விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 26, 2011

வெட்டி அரட்டை - சில கோபங்கள்


"கோபம் என்பது தன்னை தானே அழித்துக்கொள்ளும் ஆயுதம்." என்று பல பேர் சொல்லக்கேட்டதுண்டு. எனக்கும் அந்த கொள்கைதான். ஆனால் கோபத்துக்கும் வஞ்சத்துக்கும் வித்தியாசம் உண்டு. தற்காலிக கோபங்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எனக்கும் அப்பப்போ சீசனுக்கு ஏற்ற மாதிரி கோபங்கள் வருவதுண்டு. சமீப காலத்தில் கோபத்தை ஏற்படுத்திய சில விஷயங்களை பற்றி சொல்கிறேன். பஸ் தினம்


நாங்கள் கல்லூரியில் படித்த காலத்திலும் பஸ் தினம் கொண்டாடியதுண்டு. ஓட்டுனர், மற்றும் நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்ல உறவை வளர்க்கும் விதமாகவும், பயணிகளை அவ்வளவாக இடையூறு செய்யாததாகவும் (கொஞ்சம் இடையூறு இருக்கத்தான் செய்யும்) இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி எதோ தறி கேட்டு ஆட்டம் போடுவதற்க்காகவே இந்த நாள் இருப்பதாக மாற்றி விட்டார்கள்.ஒரு கொண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டுமானால் தண்ணி அடிக்கவேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி விட்டது. ஒரு கொண்டாட்டத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமானால் தெளிவாக இருந்தால்தான் முடியும். இல்லையேல் அது தனக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி தரும். மற்றவர்களுக்கு கண்டிப்பாக இடையூறுதான்.


எல்லோரும் மகிழ்ந்திருப்பதுதான் கொண்டாட்டம். எல்லோரிடமும் வசைப்பாட்டு வாங்கி என்ன சாதிக்க போகிறோம்? இள வயதில் ரத்தம் சூடாகத்தான் இருக்கும். எதையும் அலட்சியம் செய்யும். நினைத்ததை அடைய துடிக்கும். ஆனால் இவற்றை சரியான முறையில் வழி நடத்தத்தான் கல்வி அறிவு பயன்படுகிறது. ஆனால் படித்தவர்கள் என்பதற்கு துளியும் அடையாளம் இல்லாமல் இவர்கள் போதும் ஆட்டம் இருக்கிறது. இதில் பஸ் தினம் கொண்டாட விடாததால் போலீஸ் மீது கல்வீச்சு, மற்றொரு கல்லூரியில் வேண்டுமென்றே பேருந்தை நடத்தி கூட்டி சென்றிருக்கிறார்கள். இந்த களேபரத்தில் முன்னூறு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இனி அரசு வேலையில் இருந்து, வெளிநாட்டு வாய்ப்புகள் வரை எதுவுமே இவர்களுக்கு கிடையாது. என்னை பொறுத்தவரை கள்ளங்கபடம் இல்லாமல், நேர்மையாக, உண்மையான நாட்டுபற்றுடன் இருப்பது மாணவர் சமுதாயமே. ஆனால் அவர்களே இப்படி கண்மூடிதனமாக இருப்பது கோபம் வரவழைக்கிறது.

விஜயகாந்த்


திமுக, அதிமுக ஆகிய இரண்டே இரண்டு கட்சிகளின் பிடியில் தமிழகம் இருக்கும்போது, மூன்றாவதாக ஒரு சக்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைத்து கொண்டிருந்த போது, கட்சியை துவக்கியவர் விஜயகாந்த். முதலில் எல்லோராலும் காமெடி பீஸ் என்று அழைக்கப்பட்டவர், கொஞ்சம், கொஞ்சமாக் தமிழகத்தின் ஆட்சியையே நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக மாறிவிட்டார். பெரும்பாலான மக்கள் இவருக்கு ஆதரவு தெரிவிக்க காரணம், எந்த பக்கமும் சாராமல், தனித்து நின்றது. ஒரு காலத்தில், "தனித்துதான் நிற்பேன்." என்று சொன்னவர், கொஞ்ச நாளில், "கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?" என்று எல்லோரையும் எதிர்பார்க்க வைத்தார். பின், "யாருடன் கூட்டணி?" என்று கேட்க வைத்தார். தற்போது ஏறக்குறைய அதிமுக பக்கம் சாய்ந்து விட்ட இவர், கட்சி ஆரம்பிக்கும் முன் இருந்த இரண்டு கட்சி நிலையையே மறுபடியும் உருவாக்கிவிட்டார். இவரை ஒரு மாற்றாக நினைத்த மக்களை, காமெடி பீஸ் ஆக்கிவிட்டார். முதல்வன் படத்தில் வருவதுபோல "நீயும் அரசியல்வாதின்னு நிரூபிச்சுட்டியேன்னு?" கோபம் வருது.

திருமாவளவன்


வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இலங்கை சென்று, திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார். வந்தவுடன் வழக்கம்போல மைக்கை பிடித்து ஆத்து ஆத்து என்று ஆத்துகிறார் சொற்பொழிவை. ஏற்கனவே இந்த மாதிரி எரிமலை, சூறாவளி, பொங்கி எழுவோம், அடித்து நொறுக்குவோம் என்று சவடால் விட்டுவிட்டு, இலங்கை சென்று ராஜபக்சேவிடம் பல்பு வாங்கியது அனைவருக்கும் தெரியும். இவர் செய்வதை பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி வீட்டுக்குள் மனைவியிடம் செமத்தியாக உதை வாங்குவார். ஆனால் வீட்டைவிட்டு வெளியே வந்து, "ஆய் ஊய்" என்று கத்திக்கொண்டே ஓடுவார். அந்த காமெடி காட்சிகள்தான் ஞாபகம் வருகிறது. இவ்வளவு நடந்த பிறகும், இவரை ஒரு மிலிட்டரி வீரர் ரேஞ்சுக்கு உருவகப்படுத்துவதைக்கண்டு கோபம் வருகிறது.

பெங்களூரு கிரிக்கெட்


மொத்தமுள்ள 35000 டிக்கெட்டுகளில் வெறும் 8000 டிக்கெட்டுகளை மட்டுமே ரசிகர்களுக்கு விற்க முடிவு செய்து, அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் என்று ரசிகர்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். மேலும் டிக்கெட் வாங்கும் இடத்தில் தடியடி நடத்தி ரசிகர்களை நாய்களை போல துரத்தி இருக்கிறார்கள். ஆமாம்  ரசிகர்களுக்காகத்தானே கிரிக்கெட் போட்டிகளே நடக்கிறது? இவர்கள் யாரும் வரவில்லை என்றால், பொழப்பு எப்படி ஓடும்? டெஸ்ட் போட்டிகளின்போது ரசிகர்கள் வரவில்லை என்று இலவச டிக்கட் கொடுக்க நினைத்தவர்கள்தானே? இப்போது மட்டும் ஏன் இந்த மண்டைக்கனம்? கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் அதிகம் இருப்பதால்தான், ஐ‌சி‌சியில் இருந்து அனைத்து விளம்பரதாரர்களும் இந்தியாவை நோக்கி படை எடுக்கிறார்கள். ஆனால் அந்த ரசிகர்களை அடித்து துரத்தி விட்டு போட்டி நடத்தி என்ன சாதிக்க போகிறார்கள்? இதை பார்த்தால் கோபம் தலைக்கேறுகிறது. இவ்வளவு நடந்த பிறகும், "கிரிக்கெட் போட்டிகளை பார்த்தே தீருவேன்!" என்று அடம்பிடிக்கும் ரசிகர்களை கண்டால் இன்னும் கோபம் வருகிறது. ஒரே ஒரு முறை போட்டியை புறக்கணித்து பாருங்கள். அடித்து பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு


ஒரு வழியாக ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம் அல்லவா? மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இந்த ஒரு பிரச்சனையால் முடங்கியது. ஒரு நாளைக்கு சுமார் ஏழரை கோடி வீதம், சுமார் நூறு கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. லட்சம் கோடியில் இது தூசு என்றாலும், நூறு கோடி என்பது கொஞ்சமில்லையே? இதை நினைத்தால் கோபம் கோபமாக வருகிறது 

நடு நிசி நாய்கள்


இந்த படத்தை பற்றி பல்வேறு விதமாக விமர்சனங்கள் வந்துவிட்டன. ஒரு பக்கம் , "இப்படி முறையற்ற உறவுகள் எங்கோ எப்போதோ நிகழ்கிறது. அதை மையமாக வைத்து படமெடுத்து விட்டார்கள்." என்று கொதிக்கிறார்கள். மறுபக்கம் "எல்லாவற்றையும் சினிமாவாக பார்க்க சொல்பவர்கள், இதை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்?" என்று கேட்கிறார்கள். மேலும் , "நாட்டில் இது அதிகமாக நடக்கிறது." என்று புள்ளி விபரங்களை சொல்கிறார்கள். எல்லாம் சரிதான். இயக்குனரின் நோக்கம் கருத்து தெரிவிப்பதா? அல்லது வக்கிரத்தை வியாபாரப்படுத்துவதா? முதலாவதுதான் நோக்கம் என்றால், காதல் கொண்டேன் படத்தில் வருவதை போல பட்டும் படாமலும் சொல்லி இருக்கலாம். அதை விடுத்து எல்லா காட்சிகளையும் மனப்பாடம் செய்யும் அளவுக்கு டீடெயிலாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வியாபார நோக்கம் என்றால், இன்னும் திரில்லிங்காக எடுத்துவிட்டு, எல்லா தொலைக்காட்சியிலும் தோன்றி தன்னிலை விளக்கம் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். வெளிநாடுகள் போல நம் நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்து படம் பார்ப்பதில்லை. படம் பார்க்கவேண்டுமானால் குடும்பத்துடன்தான் செல்கிறார்கள். இதை இயக்குனர்கள் மனதில் வைத்தால் நல்லது.  "தமிழ் சினிமாவில் இதுமாதிரி படம் வந்ததே இல்லையா?" என்று கேட்பவர்களுக்கு, இப்படி படம் வந்திருக்கிறது. அதனால் இதையும் வரவேற்கவேண்டும் என்று சொல்வது தவறில்லையா? மொத்தத்தில் இயக்குனர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார். அதை தேர்வு செய்வதும் ஒதுக்குவதும் நம் விருப்பம். அதை விடுத்து மோதிக்கொண்டிருப்பதை பார்த்தால் கோபம் அல்ல எரிச்சல்தான் வருகிறது.


வழக்கறிஞர்கள் சாலை மறியல்நேற்று ஒரு செய்தி. அதாவது சொந்த பிரச்சனையில் போலீஸ்காரர் ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை தாக்கி விட்டார். இது இரண்டு தனி மனிதர்களின் பிரச்சனை. ஆனால் இதை வக்கீல்கள் காவல்துறையினர் பிரச்சனை ஆக்கி, வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் சமுதாயத்தில் போலீஸ்காரர்களை தைரியமாக தட்டி கேட்பவர்கள் வக்கீல்களே. ஆனால் எதற்கெடுத்தாலும் இப்படி தெருவுக்கு வருவது, தன்னை சமூகத்தில் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்வதற்கு செய்வது போலவே இருக்கிறது. தற்போதெல்லாம் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, சாதி சாயமும், அரசியல் சாயமும் பூசிக்கொள்ளும் வக்கீல்கள்தான் நாளை சட்டம் என்னும் இருட்டறையில், மெழுகுவர்த்தியாக இருக்கபோகிறார்கள் என்று நினைக்கும்போது கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

கோபத்துல அப்படியே போய்டாதீங்க...
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...  

முழுவதும் படிக்க >>

February 24, 2011

ஆடுகளம் - பாண்டிங்குக்கு தோனி எச்சரிக்கை....வணக்கம் மக்களே! போட்டோ கமெண்ட் போட்டு ரொம்ப நாள் ஆச்சு அல்லவா? அதான். இவை எல்லாமே ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க. சிரிக்க மட்டுமே....அடுத்து வருவது ஆடுகளம் ஸ்பெஷல். ஆடுகளம் ஸ்டைலில் படிக்கவும்...முழுவதும் படிக்க >>

February 22, 2011

நடு நிசி நாய்கள்


"நடு நிசி நாய்கள்" இந்த தலைப்பை பார்த்தவுடனே இது திரை விமர்சனம் என்று நினைத்து இங்கு வந்திருந்தால் நான் பொறுப்பல்ல. இந்த படத்தை போலவே நான் சொல்லபோவதும் ஒரு உண்மை சம்பவம்தான். (கொஞ்சம் பெரிய பதிவுதான். போராடித்தாலும் படித்து விடுங்கள்...)நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை NSS கேம்ப்புக்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு செல்வதுண்டு. அப்படி நான் சென்றது மதுரை மாவட்டத்தில் இருக்கும் சித்தூர் எனப்படும் உள்ளடங்கிய ஒரு கிராமம். இந்த கிராமத்தில் ஒரு ஸ்பெசாலிட்டி என்னவென்றால் மிக குறைந்த அளவே மக்கள் இருப்பார்கள். அதிலும் இரவு பத்து மணிக்கு மேல் ஆள் அரவமே இருக்காது. ஏன் என்று கேட்டதற்கு அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தோம். கேரளாவில் (இந்த ஊரில் இருந்து போடி வழியாக கொஞ்சம் பக்கம்) இருந்து நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். அவள் மீது சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி இருக்கிறார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக ஊரை விட்டு ஓடி ஊருக்கு வடக்கே இருக்கும் சுடுகாட்டுக்கு அருகில் குழந்தையை பிரசவித்து விட்டு அங்கேயே இறந்துவிட்டாள். குழந்தையும் இறந்துவிட்டது. பத்தினியான தன்னை இப்படி அநியாயமாக தண்டித்த மக்களை பழிவாங்க அங்கேயே காத்திருந்து, அந்த பக்கமாக வருபவர்களை அடித்து கொல்ல தொடங்கி இருக்கிறாள். கலவரம் அடைந்த மக்கள் அவளிடம் மன்றாட, கோபம் தணிந்த அவள், சரி அப்படியானால் இந்த ஊரில் இறப்பவர்களை நான் சாப்பிட்டு விடுகிறேன் என்று சொல்லி விட்டாளாம். அன்றில் இருந்து இரவு பத்து மணிக்கு மேலாக ஊரை சுற்றி வருகிறாளாம். அதிலும் ஏதாவது சாவு நிகழ்ந்துவிட்டால் மிக ஆக்ரோஷமாக ஊரை சுற்றி வருவாளாம். மேலும் அந்த ஊரில் பிணத்தை எரித்தால் மட்டும் பிண வாடை அடிப்பதில்லை.


என்னை விட பயங்கர டெரர் எஃபெக்ட்டில் அந்த பெரியவர் சொன்னதும் வயிற்றில் புளியை கரைத்தது. பற்றாக்குறைக்கு அந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வேறு சென்றோம். மல்லாக்க படுத்து பிரசவித்த நிலையில் நாக்கை தொங்க விட்டபடி ஒரு முப்பதடி சிலை பயமுறுத்தியது. இது கேரளா மாசாணி அம்மன்தான் என்றாலும் பயம் மட்டும் விலகவில்லை. ஒருவழியாக பத்துநாள் கேம்ப் நிறைவு பெற்றது. ஒன்பதாவது நாள் இரவு எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. நாங்கள் அனைவரும் கண்மாயில் நெருப்பு கொழுத்தி கேம்ப் பயர் கொண்டாடிவிட்டு நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு திரும்புகையில் இரவு மணி பதினோன்றரைக்கு மேல் ஆகி விட்டது. தங்கும் இடம் என்றவுடன் ஹோட்டல் ரூம் என்று நினைக்காதீர்கள். ஊர் மக்கள் வீட்டு மொட்டை மாடிதான். விருந்து என்றவுடன் புல் கட்டு கட்டியதன் விளைவு கொஞ்ச நேரத்தில் தெரிய ஆரம்பித்தது. வேறு வழியே இல்லை. தங்கும் இடத்தில் டாய்லெட் எல்லாம் கிடையாது. ஒரு அரை கிலோமீட்டர் பயணம் செய்து சமூக நல கூட பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும்.


முதலில் ஒன்றும் தெரியவில்லை. தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோதுதான் தெரிந்தது இந்த அரை கிலோமீட்டர் அம்பது கிலோமீட்டர் ஆக போகிறாதென்று. கும்மிருட்டு. மெதுவாக தட்டு தடுமாறி நடக்க தொடங்கினேன். உண்மையை சொல்கிறேன். சுமார் ஒரு இருபது நாய்கள் என்னை சுற்றி நின்றுகொண்டு குறைக்க தொடங்கின. நெஞ்சு படபடத்தது. ஓடலாமா? கூடாது ஆளுக்கு அரை கிலோ என்றாலும் என் உடலில் கறி மிஞ்சது. வேறு என்ன செய்வது. ஏதாவது விறகு கட்டையை கையில் எடுத்து கொள்ளலாமா? அதுவரை சும்மா இருந்த நாய்கள் கோபமாகி பாய்ந்து விட்டால்? சரி அகிம்சையே சிறந்த வழி. மெதுவாக நடந்தேன். நாய்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. இது உண்மையா? பிரமையா? பயத்தின் உச்ச கட்டத்தில் இருந்தேன். இதுவரை குரைத்து வந்த நாய்கள் ஊளையிட தொடங்கின. மிக எச்சரிக்கையாக நடந்தேன். ஒரு சிறு தவறு கூட நாய்களை உசுப்பேத்தி விடும். ரொம்ப தூரம் நடந்த மாதிரி இருந்தது. சாலை நீண்டு கொண்டே சென்றது. ஒருவழியாக போது கழிப்பறையை அடைந்து உள் பக்கமாக தாளிட்டேன். நிம்மதி பெருமூச்சு கூட விட முடியவில்லை. இதயம் துடிப்பது காதுக்கு கேட்டது.


அடுத்த பிரச்சனை. திரும்ப போகவேண்டுமே? கதவை திறந்து ஒரே ஓட்டமாக ஓடி விடலாமா? ஏற்கனவே நாய்களை எதிர்கொண்டதால் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. மெதுவாக வெளியே வந்தேன். ஆச்சர்யம். ஒரு நாயை கூட காணவில்லை. தைரியமாக ஒரு பத்தடி நடந்திருப்பேன். எப்போதுமே ஒரு மனிதனுக்கு தனிமையில் இருக்கும்போது அவன் மறந்த எல்லா தேவையில்லாத விசயங்களும் நினைவுக்கு வரும். ஞாபகம் வந்தது. அந்த கர்ப்பிணி பெண் ஊரை சுற்றி வருவாளாமே? அய்யய்யோ இன்று அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் அம்மா தவறி விட்டார். அப்படியானால் கண்டிப்பாக அவரது பிணத்தை சாப்பிட்டுவிட்டு ஆக்ரோஷமாக ஊரை வலம் வந்து கொண்டிருப்பாளோ? நாய்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டதற்கு இதுதான் காரணமோ? அடிவயிற்றில் குப்பென பயம் கவ்வியது. இன்னும் அரை கிலோமீட்டர் போக வேண்டுமே? சரி ஆனது ஆகட்டும் என்று திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினேன். ஊருக்குள் கேட்கும் வினோத ஒலிகள் எல்லாமே யாரோ காலில் சலங்கை கட்டி அதிர நடப்பது போன்றே இருந்தது. தூரத்து நிழல் கூட பெண்ணின் உருவமாக தோன்றியது.


இன்னும் இருபது அடிதான். வீட்டை நெருங்கி விட்டேன். அந்த இடத்தில் ஒரு அசாதாரண இருட்டு. சுத்தமாக கண் தெரியவில்லை. மனதில் ஏதோ ஒரு நெருடல். ஒரு இறுக்கம். அருகில் என்னவோ இருக்கின்றது. அது என்ன? காதை கூர்மையாக்கினேன். ம்ம்... ஹம்ம் ..ம்ம்... ஹம்ம் .. என்று யாரோ மூச்சு விடும் சத்தம். தூக்கத்தில் விடவில்லை. ஏதோ கோபத்தில் இருப்பது போல தோன்றியது. எனக்கு இதயமே நின்றுவிட்டது. போச்சு நாளை காலையில் இந்த இடத்தில் நாம் ரத்தம் கக்கி செத்து கிடப்போம் என்று நினைத்து கொண்டேன். மிச்சம் இருக்கும் தைரியம் (எங்க இருக்கு?) எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு, ஒரே ஓட்டம். கல் முள் எதுவும் தெரியவில்லை. வீட்டை அடைந்து குப்புற படுத்துக்கொண்டு போர்வையால் இருக மூடிக்கொண்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அந்த மூச்சு சத்தம் கேட்ட இடத்துக்கு விரைந்தேன். அங்கே ஒரு வயதான பசுமாடு படுத்து கிடந்தது. அதன் அருகில் சென்றேன். ம்ம்... ஹம்ம் ..ம்ம்... ஹம்ம் .. அட நீதானா அது? என்று நொந்து திரும்பினேன். தெருவோரத்தில் படுத்திருந்த ஒரு நாய் என்னை ஏளனமாக நிமிர்ந்து பார்த்தது.


என் வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத ஒரு இரவாக அன்று அமைந்து போனது. இது பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை, சொன்னால் கிண்டல் செய்வார்கள் என்று.

இந்த கதையால் அறியப்படும் நீதி.

நீதி #1: தெரியாத ஊரில் இந்த மாதிரி யாராவது கதை சொன்னால் அதை நம்பாதீர்கள். உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் என்றால் கதையை கேட்க கூட செய்யாதீர்கள்.

நீதி #2: ஓசியில் கிடைக்கிறது என்று அகால வேளையில் அன் லிமிடட் மீல்ஸை, புல் கட்டு கட்டாதீர்கள்.

நீதி #3: நாய் துரத்தினால் எக்காரணம் கொண்டும் ஓடாதீர்கள்...

டிஸ்க்: இது என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

February 17, 2011

திருமண வாழ்த்து....


கடந்த 16.02.2011 ஆம் தேதி நமது அருமை நண்பர், பிரபல பதிவர் ராஜா அவர்களுக்கு தென்காசி அருகில் உள்ள புளியங்குடியில் திருமணம் நடந்தது. அன்று மாலை அருப்புக்கோட்டையில் திருமண வரவேற்பு நடந்தது.


அவர்களின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்..

திருமணங்கள் சொர்க்கத்தில் 
நிச்சயிக்கப்படுகின்றனவாம்...
உண்மையில் சொர்க்கம்தான்
திருமணத்தில் நிச்சயிக்கப்படுகிறது 

உங்களது நிச்சயிக்கப்பட்ட சொர்க்கத்திற்கு 
என் உள்ளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

தமிழும், இனிமையும் போல என்றும்
நீடூழி வாழ்க...


தூரத்தில் இருப்பவர்களும் தங்களோட வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவியுங்கள். நன்றி....


முழுவதும் படிக்க >>

February 15, 2011

தற்கொலை செய்து கொள்ள நினைத்ததுண்டா?


இந்த மாதம் நிறைய திருமண முகூர்த்தம் போலிருக்கிறது. நமது நண்பர்கள் பலருக்கும் இது கல்யாண சீசன் என்பதால் அடுத்தடுத்து திருமண விழாக்கள். வெளியூர் பயணங்கள். இணையத்தில் இணைந்திருக்கும் நேரம் மிக குறைவாகவே இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம். மிதமான கருத்துக்களையே வெகு காலமாக எழுதி வந்ததால் கொஞ்சம் கனமான பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதுகிறேன். இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல. என் சொந்த கருத்துக்களின் வெளிப்பாடே.சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு மாணவிகளின் தற்கொலை சம்பவங்களை யாரும் மறக்கமுடியாது. இந்த விஷயத்தில் வாதி, அல்லது பிரதிவாதி என்கிற இருபக்கமும் ஆதரவு தெரிவித்து பலர் பதிவெழுதி விட்டதால் நான் அதை பற்றி பேச போவதில்லை. ஒரு குழந்தைக்கு தற்கொலை எண்ணம் வருகிறதென்றால் அதற்கு முழு காரணமும் அதன் பெற்றோர்தான் என்பேன். முன்பெல்லாம் தலைமுறை இடைவெளி என்பது இருபதாண்டுகள் இருந்தது. நான் மாணவனாக இருந்த காலத்தில் பத்தாண்டுகள் ஆனது. இப்போதெல்லாம் அது ஐந்தாண்டுகள் ஆகி விட்டது. அதாவது மாணவர்களின் மனநிலை மாற்றங்களை சொல்கிறேன். எனக்கும் என்னை விட ஐந்து வயது இளையவர் ஒருவருக்கும் கூட தலைமுறை இடைவெளி இருக்கிறது. அவர்களின் எண்ண ஓட்டங்கள் நம்மை விட புத்திசாலித்தனமாக இருக்கின்றன, துடுக்குத்தனமாக இருக்கின்றன. இவை மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம் என்றால், மனோதிடம் குறைந்து கொண்டே போகின்றது. இது வருந்தவைக்கும் செய்தி. நீங்கள் எப்பொழுதாவது தற்கொலை செய்ய நினைத்ததுண்டா?


நான் நினைத்திருக்கிறேன். அதன் விளிம்பு வரை சென்றிருக்கிறேன். சம்பந்தப்பட்ட அந்த நாளில் மதியம் பள்ளிக்கு மட்டம் போட்டாகிவிட்டது. இரவு வரை ஊர் சுற்றி விட்டு, நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மாண்டு விடலாம் என்பது திட்டம். மதியத்தில் இருந்து உருகி உருகி ஒரு கடிதம் வேறு எழுதினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் கவ்வியது. இன்னும் சிறிது நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று நினைத்தாலே குலை நடுங்கியது. கடைசி நிமிடத்தில் ஏதோ பைத்தியம் பிடித்ததை போல உணர்ந்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சரி எதற்கு தற்கொலை என்ற காரணம் சொல்லவில்லையே? பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு.


மதிப்பெண் குறைவு என்றவுடன் ஏதோ பொது தேர்வில் கோட்டடித்து விட்டேன் என்று எண்ணாதீர்கள். பதினொன்றாம் வகுப்பு வரை நான் வகுப்பில் முதல் மாணவன். பன்னிரண்டாம் வகுப்பில் காலாண்டு தேர்வில் எல்லா பாடத்திலும் பார்டர் (ஒன்றிலும் பெயில் ஆகவில்லை). ஆனால் இத்தனை ஆண்டுகளாக நான் சாதித்து வந்த இடத்தை விட்டு கீழிறங்கி விட்டதும் மனம் தாளவில்லை. காலாண்டிலேயே இப்படி என்றால் முழு ஆண்டில் பெயில் ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயந்து விட்டேன். என்னை நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு ஏதோ துரோகம் செய்து விட்டதை போன்ற நினைப்பில் நான் எடுத்த முடிவு அது.


கேட்பதற்கே பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதல்லவா? எனக்கும் இப்போது அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் கொஞ்சம் உங்கள் பள்ளி நாட்களுக்கு சென்று பாருங்கள். அந்த மாணவன் நிலையில் இருந்து எண்ணி பாருங்கள். இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? நாம் பெற்றோர் அல்லது பெற்றோர்கள் அடங்கிய சமுதாயம். ஒரே வயதுடைய இரண்டு மாணவர்கள் ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரே காலனியிலோ இருந்து விட்டால் தொலைந்தது. எல்லாவற்றுக்கும் ஒப்பீடு. "அவனைப்பார். அவனை விட உனக்கு எல்லாம் அதிகமாகத்தானே கிடைக்கின்றது? பின் ஏன் சரியாக படிக்கவில்லை? உன் மார்க்கை நாலு பேருக்கு முன்னால் சொல்ல எனக்கு கேவலமாக இருக்கின்றது. இன்றில் இருந்து டிவி கட். கிரிக்கெட் பேட்டை எடுத்து ஸ்டோர் ரூமில் பூட்டி வைத்து விடுவேன். நாலு மணிக்கு எழுந்திரு, பன்னிரண்டு மணி வரை படி, சிரிக்காதே, சிரிப்பதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? முதலில் மார்க் எடுத்துக்காட்டு அப்புறம் சிரிக்கலாம்." இது மிகையல்ல நண்பர்களே! தற்கால மாணவர்கள் வாங்கும் வசைப்பாட்டின் ஒரு சாம்பிள்தான் இது. பத்தாம் வகுப்பில் 500க்கு 440 மார்க் எடுத்த மகிழ்ச்சியில் என் டியூசன் மிஸ்ஸிடம் போய் நின்றேன். அவர் "இவ்வளவு கம்மியா மார்க் வாங்கிருக்கியே?" என்றாரே பார்க்கலாம். நொறுங்கிப்போனேன். தெரியாமல் கேட்கிறேன் யானை கரும்பை தின்று பெரிய சைஸ் சாணி போடுகிறது என்பதற்காக, ஆட்டுக்கும் அதே கரும்பை கொடுத்து பெரிய சைஸ் சாணி போட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? எங்க ஊர் பக்கம் விளையாட்டாய் சொல்லப்படும் பழமொழி இது. “யானை லத்தி போடுதுன்னு, ஆடும் முக்கினா லத்தி வராது, புளுக்கைதான் வரும்”


இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் பெற்றோர்கள் குழந்தைகளின் போராடும் குணத்தை தெரிந்தோ தெரியாமலோ மழுங்கடித்து விடுகின்றனர். ஒரு அப்ளிகேசன் பாரம் வாங்குவதில் இருந்து, பேங்க் சலான் நிரப்புவது வரை எல்லாவற்றையுமே தந்தை பார்த்துக்கொள்வார். "டிடி எடுக்க வேண்டுமா? கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டுமா, அப்பா இருக்கேண்டா! டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமா? அப்பா இருக்கேண்டா! உன் வேலை படிப்பது. எல்லாம் உன் இடம் தேடி வரும்." இப்படி ஸ்பூனில் எல்லாவற்றையும் குழந்தைக்கு திணித்து விடுவதால், நாளை ஏதோ ஒரு இடத்தில் உண்டாகும் ஒரு சிறு ஏமாற்றத்தையோ, தோல்வியையோ தாங்கும் மனப்பக்குவத்தை இழந்து விடுகிறார்கள். தோல்வி என்பது வீழ்ச்சி அல்ல ஒரு பின்னடைவே என்று எண்ணுவதற்கு பதில், ஒரு சிறு பின்னடைவை கூட மாபெரும் தோல்வியாக மனதில் கற்பனை செய்து கொள்கிறார்கள். விளைவு மன அழுத்தம். முடிவு தற்கொலை எண்ணம்.


பெற்றோர்கள், மற்றும் பெற்றோர் ஆகப்போகிறவர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயம் அல்ல, ஜெயித்து முதல் பரிசு வாங்குவதற்கு. அது ஒரு உன்னத அனுபவம். அதில் பரிசோதனை செய்து கற்று கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாம் சொந்த அனுபவங்களாக இருக்கவேண்டும். ஒரு ஜென் கதை உண்டு. கூட்டுக்குள் இருந்த பட்டாம்பூச்சி ஒன்று தட்டு தடுமாறி வெளியே வரமுயற்சி செய்து கொண்டிருந்தது. அதை பார்த்த ஒருவன். கூட்டை பிரித்து அது வெளியே வர உதவினான். பட்டாம்பூச்சி வெளியே வந்தது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. கூட்டை பிய்க்கும் முயற்சியில் அதன் இறகுகள் நன்கு பக்குவ பட்டுவிடும். ஆனால் இவன் கூட்டை பிரித்து விட்டதால் இறகுகள் பக்குவமாகாமலேயே பட்டாம்பூச்சி வெளியே வந்துவிட்டது. ஆகவே பறக்க முடியவில்லை. இறந்து போனது. குழந்தைகள் சிறு சிறு இடர்பாடுகள் மூலம் நிறைய கற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உதவுகிறேன் என்று அந்த அனுபவங்களை அவர்கள் பெறாமலேயே செய்து விடுகிறோம்.


குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே வளரவிடுவதும், அவர்களின் விருப்பம் என்ன, கெப்பாசிட்டி என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ற சவால்களை அவர்களுக்கு கொடுத்து, அதில் வெற்றி பெறும்போது மனதார பாராட்டி, தன் குழந்தையின் சிறிய சாதனையை கூட எல்லோரிடமும் திறந்த மனதுடன் பெருமையுடன் சொல்லி பாருங்கள். உங்கள் குழந்தை மிகப்பெரிய சாதனையாளாராக வருவார்கள்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

February 7, 2011

ஒரு நாயகன் உதயமாகிறான்...
ஒரு நாயகன், உதயமாகிறான்....
ஊரார்களின், இதயமாகிறான்... 

எண்பதுகளில் வந்த தாவணி கனவுகள் படத்தில் பாக்யராஜ் சினிமாத்துறையில் மேன்மேலும் உயர்வதை குறிப்பதாக இந்த பாடல் அமைந்திருக்கும். இளையராஜாவின் துள்ளலான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாக்யராஜ் என்றில்லாமல் எந்த சினிமா நடிகன் இந்த பாடலை கேட்டாலும் மனதில் ஒரு மிதப்பு வந்து ஒரு பெரிய கனவுலகத்துக்கே அழைத்து சென்று விடும். பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி ஒரு கட்டத்தில் முதலமைச்சர் ஆவதுபோல கூட கனவுக்குள் இழுத்து சென்று விடும். 

சரி இப்போது எதற்கு இந்த செய்தி என்கிறீர்களா?


டிஸ்க்: உங்கள் மனதில் நடிகர் விஜய் பற்றி அபிமானம் இருந்தால் கடைசியில்  சிகப்பில் உள்ளவற்றை முதலில் படித்து விட்டு பிறகு அடுத்த பத்தியை தொடருங்கள். மற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள்.


சமீப காலமாக தன்னை ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாற்றிக்கொள்ள ஒரு நடிகர் முயன்று வருவது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்து ஒரு செய்தி. "ஒரு நடிகன் நாடாளகூடாது" என்று சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது. சேவை செய்யும் மனப்பான்மை, ஆட்சி நடத்தும் திறமை, கடும் உழைப்பு ஆகிய குணங்கள் இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம், ஆட்சியில் அமரலாம். 


இப்போது பிரச்சனை விஜய் கட்சி தொடங்குவது அல்ல. அவர் ஜெயிப்பதற்கு எவ்வளவு சாத்திய கூறுகள் இருக்கின்றன என்பதுதான். கட்சி தொடங்குபவர் எல்லோரும் முதலமைச்சர் ஆகிவிடுவார்கள் என்றால், சரத்குமார் உள்பட பலரும் வரிசையில் நிற்கிறார்கள், உதாரண புருஷர்களாக. ஆனானப்பட்ட சிரஞ்சீவிக்கே, அரசியல் ஆசையின் பலனாக அல்வாதான் பரிசாகத்தரப்பட்டது. சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு. விஜய் ரசிகர்கள் பலருக்கே அவர் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. படம் பிடிக்கவில்லை என்றாலும் பார்த்து விடுவார்கள். அதே போல ஓட்டும் போட்டு விடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. மேலும் விஜய் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து விட முடியாது. விஜயின் தீவிர ரசிகர்களின் பெரும்பாலானோர் ஓட்டு போதும் வயது இல்லாதவர்கள். எம்ஜிஆர் காலம் என்பது வேறு. தற்போது அரசியல் நடிகர்களின் ரசிகர்கள் பலர் தங்கள் ஜாதிகட்சியிலோ, அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியிலோ பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பது என்பது மிக கடினமான காரியம்.

அரசியல் என்று விஜய் செய்து வரும் காமெடிகள்

1. தனது மன்ற கொடியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு சில ரசிகர்களை வேண்டுமானால் மகிழ்ச்சிபடுத்தி இருக்கும். மற்றபடி ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களை பார்த்து இவர் செய்த கோமாளித்தனம் என்றுதான் அனேக மக்கள் கருதினர். மேலும் ரஜினியோ தன் மன்ற கொடியை இன்றுவரை அறிவிக்கவில்லை. ரசிகர்கள் தாங்களாகவே வடிவமைத்துக்கொண்டது அந்த கொடி.2. ரஜினியை விட பெரிய மாஸ் தனக்கு உள்ளது என்று நினைத்துக்கொண்டு லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பை வெளியிட்டு வாங்கி கட்டிக்கொண்டது.

3. இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் ஸ்டைலில் அரைநாள் உண்ணாவிரதம் இருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில்தான் இருந்தேன். நகரின் பல பகுதிகளில் இருந்தும் பலர் அதில் கலந்து கொண்டனர். பெரும்பாலான பேர் அங்கு வழங்கப்பட்ட டீ-ஷர்ட்டுக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டே கலந்து கொண்டனர். இது நான் நேரில் பார்த்தது. ரஜினி காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்ததை போல தமிழகமே திரும்பி பார்க்கும் என்று தப்பு கணக்கு போட்டு போராட்டம் காமெடி ஆனதுதான் மிச்சம்.

4. ராகுலை சந்தித்து தன்னுடைய மாஸ் என்ன என்பதை காட்ட நினைத்து பின்னர் டிஸ்குவாலிஃபைடு என்று சொன்னவுடன், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துக்கொண்டது. 

தற்போதும் சின்ன சின்ன அறிக்கைகள் விடுவது, பசு, அரிசி வழங்கி விளம்பரப்படுத்துவது, சமூக அவலங்களை கண்டு மனம் கொதித்து எழுவதை போல பாவ்லா காட்டுவதென்று அனுதினமும் காமெடி செய்து வருகிறார்.

என் மனதில் தோன்றிய கேள்விகள்

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதன் முழுமுதற் காரணம் என்ன? தன்னுடைய ஒரே ஒரு படத்தை வெளியிட சிலர் ஏற்படுத்திய தடைக்கற்கள்தான் காரணமா? அப்படியானால் தன் சொந்த படங்களை தடையில்லாமல் வெளியிடுவதற்காகத்தான் இந்த நாடகமா? "அப்படி இல்லை. திமுக ஆட்சியின் அநியாயங்கள் அதிகமானதால் தமிழ் மக்களை காப்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன்." என்றால், இதற்கு முன் கலைஞருடனும், சன் குழுமத்துடனும் கூத்தடித்தபோது இது தெரியவில்லையா? இவரது இரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் வாங்கி பஞ்சர் ஆனதாலேயே இந்த பிரச்சனை ஆரம்பம் என்று சொல்கிறார்கள். அப்படியானால் ஒரு வேளை அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆகி இருந்தால், விஜய்க்கு இந்த ஞானோதயம் வந்திருக்காதோ?


இதற்கு முன் சன் டிவியுடன் கை கோர்த்துக்கொண்டு, விஜய்யை மக்கள் மனதில் பெரிய இடத்துக்கு கொண்டு செல்வதற்காக, ஓடாத பல படங்களை ஓடியது போலவும், சமகால படங்களை குறைத்து விமர்சித்து, இருட்டடிப்பு செய்தது போலவும் பல தில்லாலங்கடி வேளைகளில் தன் தந்தை ஈடுபட்டது கூட விஜய்க்கு தெரியாதா? தனக்கு என்று ஏதாவது நடந்து விட்டால் மட்டும் சமூக ஆர்வம் எங்கிருந்து போத்துக்கொண்டு வருகிறது? ஒருவேளை நாளைக்கே இருவரும் சமரசம் ஆகிவிட்டால் இவரின் ரசிகர்களையும் சேர்த்து அனைத்து மக்களும் என்ன ஆவார்கள்? (இதற்கு பெரிய உதாரணம் சிரஞ்சீவிதான். தனது கட்சியை காங்கிரசோடு இணைத்து விட்டார் அல்லவா?)

உண்மையிலேயே விஜய் அரசியல்வாதிதான்


ஒரு அரசியல்வாதிக்கு முக்கிய தேவை, ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் குணம். அது அவரிடம் நிறைய உள்ளது. முதலில் "ரஜினியின் சிஷ்யன், விஜயகாந்தின் தம்பி" என்று அடைமொழியுடன் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர்தான் விஜய். பிற்காலத்தில் அவர்கள் இருவரையும் தூக்கி எறிந்தவர். தலைகனத்தில் ரஜினியையே இழிவாக பேசியவர். ரஜினி படத்துடன் வெளிவந்த எந்த விஜய் படமும் ஓடியதில்லை என்பது கூட அவர் அறியவில்லை.


விஜய் என்ற ஒரு நடிகர் இருக்கிறார் என்று பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது சன்டிவி. அப்போதெல்லாம் அவர்கள் இனித்தார்கள். தற்போது ஒரு சிறிய பிணக்கு என்றவுடன் அவர்களது போட்டி தொலைக்காட்சியான ஜெயாடிவியில் சன் டிவியை தாக்கி பேட்டி கொடுத்து தன் நன்றியை காட்டியுள்ளார். காவலன் வெளியாவதற்கு முன்பாக அம்மாவை சென்று சந்தித்து ஆசிகள் பெற்று, பின் காவலன் ஒருவழியாக வெளியானவுடன், மறுபடியும், "நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல." என்று அந்தர் பல்டி அடிக்கிறார்.


நேரடியாகவே தனது படத்தில் அஜீத்தை தாக்கிவிட்டு, அவருக்கு தானாகவே விட்டுகொடுப்பது போல காட்சிகள் வைத்துவிட்டு, "தான் விட்டுக்கொடுத்ததால்தான் அவர் ஜெயித்தார். தான் நினைத்தால் அவரை தோற்கடிக்க முடியும்." என்று சொல்லிவிட்டு, இப்போது எங்களை யாராலும் பிரிக்கமுடியாது என்று ஒன்றாக போஸ் கொடுக்கிறார். இவரது சகவாசத்தால் அஜித்துக்கு லாபமும் இல்லை இழப்பும் இல்லை. இன்றே கூடி குலாவிவிட்டு நாளைக்கே எட்டி உதைத்தாலும் அசாராமல் எழுந்து நின்றுவிடுவார் அஜித். ஆனால் இந்த நிகழ்வு விஜய் அவர்களின் சந்தர்ப்பவாத குணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன அவர் உண்மையிலேயே ஒரு அரசியல்வாதி என்பதற்கு. ஆனால் கண்டிப்பாக ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல.


நண்பர்களே ...


நம்மிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. ஒருவன் ஒரு விஷயத்தை சொல்கிறான் என்றால், அவன் என்ன சொல்கிறான்? என்பதை விட்டுவிட்டு, அவன் யார்?, என்ன இனம்? என்று ஆராய கிளம்பிவிடுவோம். இந்த பதிவை படிக்கும் பலர் அஜித் ரசிகனான நான் என்னவோ காவலன் படம் வெற்றி(?) அடைந்ததை பொறுக்காமலும், அவர் முதலமைச்சர் ஆவது கண்டு வயிற்றெரிச்சலில் இவ்வாறு சொல்கிறேன் என்று நினைக்கலாம். காவலன் வெற்றி அடைந்ததாலோ, விஜய் முதல்வர் ஆவதாலோ எனக்கு வயிற்றெரிச்சல் ஏற்படபோவதில்லை. (நாங்கல்லாம் கலைஞரையே பார்த்தவைங்க...). மேலே நான் கூறி இருக்கும் செய்திகளில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா? என்று பாருங்கள்.


இவை எல்லாம் என் சொந்த கருத்துக்கள்தான். என் பார்வையில் மட்டுமே எழுதப்பட்டது. ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதன் காரணம் தன் படங்களை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டுமா? 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

February 3, 2011

பட்டாசோ பட்டாசு - ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா....


டிஸ்க்: நான் கீழே சொல்லப்போகும் இரண்டு கருத்துக்களுமே நெருப்பு சம்பந்தமானவை. ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. எல்லாம் என் சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல.


பட்டாசோ பட்டாசு

"பட்டாசு ஆலையில் வெடி விபத்து". சமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் சாதாரணமாக நாம் காணும் ஒரு செய்தி. "இதற்கு யார் காரணம்?" என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. நமது அரசு பட்டாசு ஆலைகளுக்கென்றே நிறைய விதிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது. அவற்றை ஆலை நிர்வாகங்கள் பின்பற்றுகின்றனவா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். நல்ல காற்றோட்டமுள்ள, நான்கு பக்கமும் வாசல் இருக்கும் அறைகள் நல்ல இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும். ஒரு அறைக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது மாதிரியான பல சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை வெறும் சட்டங்களாக பேப்பரியிலே இருக்கின்றன நடைமுறைப்படுத்துவதில்லை. 

சிவகாசியை பொறுத்தவரை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒன்று. இங்கு சிறியதும், பெரியதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இது போக ஆயிரக்கணக்கான தீப்பெட்டி ஆலைகளும் விருதுநர், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருபவை சொற்பமே.இந்த பகுதிகளில் அடிக்கடி வருவாய்த்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வருவார்கள். சும்மா சாமி விக்ரம் மாதிரி புயலாக ஆலைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் எல்லாம் கையும் களவுமாக பிடிபடும். "அவ்வளவு நல்லவைங்களா அவுங்க?" என்று நினைக்காதீர்கள். எவ்வளவு சிக்குகிறதோ அவ்வளவு லஞ்சம் தேறும். 

பட்டாசு கொளுத்துவது என்பதே நமக்கெல்லாம் ஆபத்தாக தோன்றும். ஆனால் பட்டாசு தயாரிப்பது என்பது அதைவிட பல மடங்கு ஆபத்தானது. பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் மிக ஆபத்தானவை. சில மருந்துகள் லேசாக தரையில் நகர்த்தி வைத்தாலே பற்றிக்கொள்ளும். இல்லை கொஞ்சம் வெப்பம் அதிகமானாலே வெடித்து விடும். மிகவும் ஸ்டிரிக்ட் ஆபீசர் மாதிரி காட்டிக்கொள்ளும் அதிகாரிகள் சில நேரங்களில் ஆர்வக்கோளாரில் மருந்துகளை சகட்டு மேனிக்கு கையாண்டு விபத்தில் சிக்குவதும் உண்டு. சென்ற வருடம் ஆகஸ்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஆறு அதிகாரிகள் இறந்தது நினைவிருக்கலாம். பட்டாசு ஊழியர்களை அதிகாரிகள் கீழ்தரமாக நடத்துவதும், அடிக்கடி வசூல் வேட்டைக்கும் வருவதால், அதிகாரிகள் மருந்துகளை தொட ஆரம்பித்ததும் தொழிலாளிகள் பாதுகாப்பாக தூரத்தில் போய் நின்று கொள்வார்கள். லாப நோக்கில் விதிமுறைகளை மீறி ஆலைகளை நடத்தும் நிர்வாகமும், லஞ்ச நோக்கத்திலேயே ரெய்டுக்கு வரும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் பட்டாசு ஆலைகள் குடிப்பது என்னவோ ஏழைகளின் உயிர்தான்.


சுவாமியே சரணம் அய்யப்பா

சமீபத்தில் இறை நம்பிக்கையாளர்களிடத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் மகரஜோதி பொய்யாக ஏற்றப்படுவது என்பதுதான். கடவுள் நம்பிக்கை விஷயத்தில் பல வேறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், தீவிர பக்தர்கள் மனதில் இந்த விஷயம் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருப்பதேன்னவோ உண்மைதான். தான் இவ்வளவு நாளாக உண்மை என்று நம்பி வந்த ஒரு விஷயத்தை திடீரென பொய் என்று சொல்லும்போது தாங்க முடியாத ஏமாற்றமும், மனச்சோர்வும் ஏற்படத்தான் செய்யும்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடவுள் மறுப்பாளர்களும் (நாத்திகர்கள் என்று சொன்னால் என்னை பார்ப்பனன் என்று சொல்லி விடுவார்கள்), மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் இதை ஒரு கேலிபொருளாக ஆக்கி விட்டதுதான். என்னை பொறுத்தவரை இரண்டே பிரிவினர்தான் இருக்க முடியும், இறை நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள். மதவாதிகள் அல்லது தனது சொந்த கடவுள்களை தவிர மற்ற கடவுள்கள் எல்லாம் கெட்டவர்கள் என்பவர்கள் கூட இறை மறுப்பாளர்தான். கடவுளை உண்மையாக உணர்ந்தவர்கள், எல்லாவற்றையும் கடவுள் அம்சமாகத்தான் பார்ப்பார்கள். என் இந்து நண்பர்கள் பலர் கிறித்துவ விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறோம். இசுலாமிய மதத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் எங்களுடன் திருப்பதி வந்திருக்கிறார். இது மத நல்லிணக்கம் என்பதை விட தன்னை வழி நடத்திச்செல்லும் ஏதோ ஒரு சக்தி அது எந்த வடிவமாக பார்க்கப்பட்டாலும் அது ஒன்றுதான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே.

இறை மறுப்பாளர்கள் மகரஜோதி உள்பட பல விஷயங்களை மற்றவர்களை கிண்டல் செய்யும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள். இறை மறுப்பு என்பது தன் மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும்போது வரும் ஒரு உணர்வு. நான் உழைக்கிறேன், நான் உண்கிறேன். இதில் கடவுள் எங்கிருந்து வந்தார் என்று கேட்பார்கள். மிக சரி. இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்யபடுபவை. அந்த மட்டுக்கு அவை நல்லதுதான். ஆனால் அதுவே தன்னுடைய அகங்காரத்தின் வெளிப்பாடாக மாறும்போதுதான் பிரச்சனையே. மதங்கள் என்பவை கடவுளை ( இதற்கு சாமி என்று அர்த்தம் அல்ல. இதை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்) அடைய வழி மட்டுமே. அதனோடு அகங்காரம் சேரும்போதுதான் மதவாதம் ஆகிறது. சொல்லப்போனால் இறைமறுப்பு என்பதும் மதவாதம்தான். ஒரு வகை அகங்காரத்தின் வெளிப்பாடுதான். விவேகானந்தரின் சொல்படி இறைமறுப்பு என்பது வேறு. பகுத்தறிவு என்பது வேறு. எல்லோருக்கும் கடவுளை காணும் வாய்ப்பு வரும். அப்போது பகுத்தறிவும், இறைமறுப்பும் போன இடம் தெரியாது.

டிஸ்க்: இங்கு கடவுள் என்ற பதம் கோவில், மசூதி, சர்ச்சில் இருப்பவைகளை குறிப்பதல்ல. கடவுள் என்பதை கற்பனை செய்து பார்க்க இயலாமல் ஒவ்வொருவரும் தனக்குள் உருவாகபடுத்தி கொண்டவையே அவை.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...