விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

December 7, 2011

இவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா


எல்லோருக்கும் இவரை பிடிக்க என்ன காரணம்? யோசித்து பார்த்தேன். என்னவென்று தெரியவில்லை. இந்த பதிவின் தலைப்புதான் நினைவுக்கு வந்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!!!!!!

பி.கு: சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால், பத்து நாளைக்கு பதிவுலகம் பக்கம் தலை காட்ட முடியாத காரணத்தாலேயே இந்த அட்வான்ஸ் பதிவு...... 


முழுவதும் படிக்க >>

December 2, 2011

மறக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன்

மு.கு: வழக்கம் போல இதுவும் கொஞ்சம் நீளமான பதிவுதான். 

ஜெயா டிவியில் திங்கள்தோறும் இரவு, மதன் டாக்கீஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறார்கள். எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களுள் மதனும் ஒருவர். மிக குழப்பமான விஷயத்தை எளிதாக புரியும்படி லோக்கல் தமிழில் சொல்வதில் வல்லவர். இந்த நிகழ்ச்சியில், திரைவிமர்சனத்தோடு சில சுவாரசியமான செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் சொன்ன செய்தியால் கவரப்பட்டு, அதன்பின் நான் சேகரித்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா புகழும் மதன் டாக்கீஸுக்கே.... சினிமா என்பது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு ஊடகம். உலகில் எந்த நாடுமே இதற்கு வீதி விலக்கல்ல. இந்த சினிமாத்துறை மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர். உயர்ந்த இடத்துக்கு சென்று, பிறகு தடாலென கீழே விழுந்து காணாமல் போனவர்கள் சிலர். ஒரு சூரியனின் பிரகாசத்தால் சில நட்சத்திரங்கள் நம் கண்களுக்கு தெரியாமலேயே போய் இருக்கின்றன. அப்படிபட்ட ஒருவரைப்பற்றித்தான் இப்போது சொல்லப்போகிறேன்.திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக பேரை கவர்ந்தவர் யார் யார் என்று உங்களைப்பார்த்து கேட்டால், கண்டிப்பாக நம் பொது அறிவுக்கு ஏற்றவாறு பட்டியலிடுவோம். இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆனால் எல்லோரது பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு நடிகர் யார் என்றால் அது சார்லிசாப்ளின்தான். அதே போல கதாநாயகர்களில் சிறந்த ஸ்டண்ட்மேன் யார் என்று கேட்டால் உடனே சொல்லும் பெயர் ஜாக்கிசான். அதிக வன்முறை இல்லாமல், இயல்பாக, நகைச்சுவையாக அதே சமயம் ஆபத்தான சண்டைக்காட்சிகள் அமைப்பதில் அவர் வல்லவர். எனவே அனைவருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. சார்லிசாப்ளினும், ஜாக்கிசானும் கலந்த ஒரு நடிகர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எவ்வளவு பெரிய புகழ் பெற்றிருப்பார்? மக்களை எப்படி மகிழ்வித்திருப்பார்? கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது? ஆனால் உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் வாழும்வரை அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. அந்த மனிதரின் பெயர் கீட்டன் பஸ்டர் (Keaton Buster).


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் நாகேஷுக்கும், சந்திரபாபுவுக்கும் என்ன வித்தியாசம்? நாகேஷ் முக பாவனை, உடல் மொழி, டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவார். சந்திரபாபு, முக பாவனைகளை குறைத்து உடல் மொழி, மற்றும் சின்ன சின்ன ஸ்டண்ட்களில் அசத்துவார். இதே வித்தியாசம்தான் சாப்ளினுக்கும் கீட்டனுக்கும். சாப்ளின் அதிகம் நடிப்பார். ஸ்டண்ட் குறைவு. கீட்டன் முகம் மரக்கட்டை போல இருக்கும். உடல் நடிக்கும். உடல் நடிக்கும் என்றால், வித்தியாசமான நடை உடை பாவனை என்று அர்த்தம் அல்ல. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை அசால்ட்டாக செய்வார். அதை சாகசமாக செய்யாமல் நகைச்சுவையாக செய்வார். உதாரணமாக சாலையில் நின்று கொண்டு வேகமாக வரும் காரில் மோதி விழுவது, உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று விழுவது போன்றவை. இவரது சில ஸ்டண்ட்களை பார்க்கும்போது உண்மையில் இவர் மனிதன்தானா? இல்லை ரப்பர் பொம்மையா? என்று கூட தோன்றும். இவரது சில ஸ்டண்ட்கள் ஜாக்கிசான் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை கிளிக் செய்து பாருங்கள் கீட்டன் எடுக்கும் ரிஸ்கை 

இவரது உண்மையான பெயர் ஜோசப் பிரான்சிஸ் கீட்டன். பதினெட்டு மாத குழந்தையாக இருக்கும்போது உயரமான படிக்கட்டில் இருந்து, எக்குத்தப்பாக உருண்டு விழுந்திருக்கிறார்.அந்த குழந்தை விழுந்த ஜோரில் எழுந்து நின்றதாம். சாதாரணமாக வேறு யாராவது விழுந்திருந்தால் மரணம் நிச்சயம். இதை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஹாரி ஹவுர்டினி என்ற சர்க்கஸ் கலைஞர் வைத்த பட்டப்பெயர்தான் 'பஸ்டர்'. அதாவது மரண அடி என்று சொல்வோமே? கிட்டத்தட்ட அந்த மாதிரியான வார்த்தை. சிறு குழந்தையாக இருக்கும்போது, இவரது தந்தையும், ஹாரி ஹவுர்டினியுடன் சேர்ந்து நிறைய சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டுவார்களாம். இவர் சாகசம் செய்து காட்டும் பொருட்களில் கீட்டனும் அடக்கம். டாம் அண்டு ஜெர்ரியில் அடிபட்டவுடன் பூனை தாறுமாறாக போயி விழுமே? அதே போல நிஜமாகவே மேடையில் நிகழ்த்தி காட்டுவார்களாம். தந்தை கோபத்தில் மகனை அடிப்பது போல காட்சி என்றால், இவரது தந்தை கீட்டனை அடிக்காமல், வேகமாக தள்ளுவார். குழந்தை கீட்டன் தாறுமாறாக போய் விழுவார். சில நேரம் அவரை தூக்கி அப்படியே கூட்டத்துக்குள் வீசுவாராம்.  பிற்காலத்தில் இது குறித்து கீட்டன் சொன்னது, "என் தந்தை என்னை தூக்கி எறிந்து எந்த தருணத்திலும் எனக்கு அடிபட்டதில்லை. அதே போல என் திரைப்படங்களிலும் எனக்கு காயம் ஏற்பட்டதில்லை. இதன் அடிப்படை ரகசியமே விழும்போது நம் கை, கால்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதுதான். சில நேரம் தவறி இருந்தால் மரணம் நேரும் ஆபாயம் கூட இருந்திருக்கிறது. ஒரு பூனை எப்படி விழும்போது அடிபடாமல் தப்பிக்கிறதோ அதே முறையை நானும் பின்பற்றினேன்." என்றாராம். ஆனால் குழந்தையாக இருக்கும்போதே இத்தகைய திறமை இவருக்கு வந்தது ஆச்சர்யம்.


திரைப்படத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த கீட்டன், ஒரு கட்டத்தில் அர்பக்கிள் என்ற இயக்குனரை சந்தித்திருக்கிறார். இவர்தான் சார்லிசாப்ளின் மற்றும் கீட்டன் என்று இரு சிகரங்களை உருவாக்கியவர். அவரிடம் விளையாட்டாக சினிமா கேமரா பற்றி கற்றுக்கொண்டு, பின் அவரிடமே வேலைக்கு சேர்ந்து, உதவி இயக்குனர் அளவுக்கு உயர்ந்து விட்டார். 1920இல் வெளிவந்த தி ஷாப்ஹெட் படம் ஹிட் ஆக, அதன் பின் கீட்டன் தனியே படங்களை இயக்க தொடங்கினார். அடுத்த பத்து வருடங்களுக்கு கீட்டன் படங்களை எடுத்து தள்ளினார். எல்லாமே நன்கு ஓடிய படங்கள். 1927இல் தி ஜெனரல் என்ற அமெரிக்க உள்நாட்டு போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு படத்தை எடுத்தார். இந்த படம் செம பிளாப் ஆனது. இதன் பின்னர் இவர் பணி புரிந்த எம்‌ஜி‌எம் நிறுவனம் இவரை மரியாதை குறைவாக நடத்த தொடங்கியது. இவரை சுதந்திரமாக செயல்படவிடாமல், கட்டுப்படுத்த தொடங்கியது. அதன் பிறகு படங்களை இயக்கினாலும் பின்னால் இருந்து இயக்கியது எம்‌ஜி‌எம் நிறுவனம்தான். மனதோடிந்து போன ஒரு கட்டத்தில் எம்‌ஜி‌எம் உடன் தகராறு செய்ய அவரை வெளியே துரத்தி விட்டது. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளிவந்த ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்கள் இயக்கத்தொடங்கிய கீட்டன் ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் இருந்து தனித்து வாழ ஆரம்பித்தார்.


திருமணவாழ்விலும் ஏகப்பட்ட சங்கடங்களை சந்தித்த கீட்டன், திரைப்படத்துறையாலும் புறக்கணிக்கப்பட்டார். துண்டு துக்கடா வேடங்களில் எல்லாம் நடித்தார். சார்லி சாப்ளினின் லைம் லைட் படத்தில் கூட ஒரே ஒரு காட்சியில் கீட்டன் நடித்திருப்பார். தீவிர குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். குடிப்பழக்கம் அவரை முழுவதும் ஆக்கிரமிக்க, காப்பகத்தில் சேர்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். தோல்வி, அவமானம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை கீட்டனை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது.  வளமான காலகட்டத்தில் இவர் கட்டிய ஒரு ஆடம்பர வீட்டுக்கு, இவருக்கு பிறகு 1950களில் தங்க வந்த ஜேம்ஸ் மேசன் என்ற நடிகர் அந்த வீட்டினுள் ஏராளமான பிலிம் ரீல்களை கண்டெடுத்திருக்கிறார். அழிய தொடங்கி இருந்த அவற்றை உடனடியாக பாதுகாத்து, நல்ல பிலிம் ரீல்களுக்கு மாற்றி இருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் கீட்டன் சும்மா எடுத்து வெளியிடாமல் இருந்தவை. இவை அனைத்துமே மாஸ்டர் பீஸ் இவை வெளியே வந்ததும்தான் கீட்டன் பீவர் மறுபடியும் பிடிக்க ஆரம்பித்தது. இவரது படங்களை தேடி அலைய ஆரம்பித்தார்கள். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், எந்த படத்தின் தோல்வி இவரது வாழ்க்கையையே புரட்டி போட்டதோ அதே "தி ஜெனரல்" படம்தான் இவரது ஆகச்சிறந்த படமாக இப்போது கொண்டாடப்படுகிறது. தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கீட்டனை லேட்டாகத்தான் உலகம் புரிந்து கொண்டது. 1966இல் நுரையீரல் புற்றுநோயால் உலகை விட்டு பிரிந்தார் கீட்டன். 

இவர் வாழ்ந்த காலகட்டம் என்பது சார்லிசாப்ளின் என்பவர் உலகை நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்த அதே காலகட்டம். சொல்லப்போனால் சாப்ளினை விட கீட்டனே அப்போது மிகப்பிரபலம். பிறகு சாப்ளினின் புகழ் வளர வளர கீட்டனை எல்லோரும் மறந்து போனார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்திலேயே, மிக ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை வன்முறை இல்லாமல், வெறும் நகைச்சுவையாக காட்டிய கீட்டன் பஸ்டரை இந்த உலகம் மறந்தது வேதனை. இன்றும் சார்லிசாப்ளினை பல பேருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பஸ்டரை பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நேரம் இருக்கும்போது யூடியூபில், keaton buster என்று தேடிப்பாருங்கள். அதில் வரும் அத்தனை படங்களும் வயிற்றை பதம் பார்ப்பவை. அவரின் சாகசங்கள் அனைத்தும் வாயடைக்கச் செய்யும்.  மறக்கப்பட்ட ஒரு உன்னத கலைஞனை நினைவுபடுத்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>

November 30, 2011

வெட்டி அரட்டை - அரசியல், சினிமா, கிரிக்கெட்அப்போ ஹர்பஜன் இப்போ ஹர்விந்தர்கடந்த வாரம் முழுவதும் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் மிக பரபரப்பாக ஒளிபரப்பப்பட்ட இந்த சண்டைக்காட்சி பல இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதே போல அரசியலையே சேவையாக செய்துவரும் பல நல்ல மனிதர்கள் வயிற்றில் புளியையும் கரைத்திருக்கிறது.  இது குறித்து செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களுமே மறைமுகமாக கிண்டலாகவே வெளியிட்டன. ஒரு பெரிய மனிதருக்கு பொது இடத்தில் வைத்து ஒரு இளைஞனிடம் அறை வாங்குவதை போல பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. ஆனால், "இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா நாங்கள்? இதை எல்லாம் பார்த்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? என்று தங்கள் அவமானத்தையும் மறந்து தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் சரத் பவார் போன்ற நல்லவர்கள். அதானே? இதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா? என் கவலை எல்லாம் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைப் பற்றித்தான். இனி அவர்கள் நிலைமை என்ன? கருணாநிதி


செல்வி ஜெயலலிதா அவர்கள் அதிரடியாக விலையேற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சாபத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஒரேயடியாக இப்படி மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் நியாயம்? மக்கள் பணத்தை பிடுங்கி அரசாங்க பானையை நிரப்புவதை விட, அரசாங்க பானையில் இருக்கும் ஆயிரம் ஓட்டைகளை அடைத்தாலே பானை தானாக நிறைந்து விடும். வரி ஏய்ப்பு, ஊழல், கள்ள மார்க்கெட், லஞ்சம், முறைகேடு, மோசடி என்று எல்லா ஓட்டைகளையும் அரசு அடைப்பதாலும், அரசாங்கத்தின் அனாவசிய செலவீனங்களை குறைப்பதாலும் கூட இதை சாத்தியப்படுத்த முடியும். உதாரணமாக, பெட்ரோல், தொலைபேசி, பயணச் செலவுகள், சில்லறை செலவுகள் ஆகியவற்றை குறைக்கலாம். ஆனால் இது எல்லாம் எக்காலத்திலும் சாத்தியமல்ல என்பது மட்டும் நிச்சயம்.


எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 59 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்ததை போல இருக்கிறது தமிழக அரசு. இதை சரியாகப் பயன்படுத்தி அரசியல் ஸ்டண்ட் அடிக்க, திமுகவுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் அவர்களோ, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி சொதப்புவது கண்டிப்பாக தோல்வியில்தான் முடியும். இந்நேரத்துக்கு மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது, போராட்டம் நடத்துவது என்று நிறைய அரங்கேற்றி இருக்கலாம். வெளியில இருக்கிற கொஞ்சநஞ்ச திமுக பிரமுகர்களையும் கம்பி எண்ண வச்சுட்டா எண்ண பண்றதுன்னு நினைத்திருக்கலாம். பாவம் கலைஞர். அவருக்கு இருக்கிற கவலைகளில் இதை எல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருக்கிறது? அவரே கனிமொழி வெளியே வருவாரா? மாட்டாரா? என்ற டென்சனில் இருந்தார். அப்புறம் இதெல்லாம் எப்படி ஞாபகத்தில் வரும்? முதலில் வீடு அப்புறம்தானே நாடு?  

ஏழாம் அறிவுகடந்த சில நாட்களாக ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கிடையேயான விளம்பர யுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். கலைஞர் செய்தியையும், ஜெயா செய்தியையும் ஒரே நேரத்தில் கேட்பது போலிருந்தது. நிறைய பத்திரிக்கைகளில் இந்த விளம்பரங்கள் அருகருகில் வெளிவந்து கிச்சு கிச்சு மூட்டின. "இது மசாலா வெற்றி அல்ல ஒரிஜினல் வெற்றி", என்று ஒரு தரப்பும், "தமிழ் மக்களின் ஆதரவு பெற்றி ஒரே படம்." என்று இன்னொரு தரப்பினரும் மாறி மாறி காமெடி செய்தனர். இப்போ என்னடான்னா 80 வருட திரை வரலாற்றிலேயே அதிகம் வசூல் செய்த படங்கள் என்று எந்திரன், சிவாஜிக்கு அப்புறம் ஏழாம் அறிவு படத்தை காட்டுகிறார்கள். இது பொய் என்று சொன்னால் உடனே எல்லோரும், நிறைய வலைதளங்களின் லிங்க்களை கொடுப்பார்கள். இது பொய் என்று நான் சொல்ல போவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 2008இல் குருவி என்று ஒரு படம் வெளிவந்தது. இந்த படத்தின் 150வது நாள்(!!) விளம்பரத்தில் இதன் வசூல் சிவாஜியை முறியடித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆதவனுக்கும் அதே போல விளம்பரம் வந்தது.


தெளிவா ஒரு சந்தேகம் கேட்கிறேன் (அதெப்படி தெளிவா ஒரு சந்தேகம்? மயக்கம் என்ன பார்த்த எஃபெக்டோ?). திரு உதயநிதி அவர்கள் அப்போ சொன்னது உண்மை என்றால் இப்போ சொல்வது பொய்தானே?  இல்லை, இப்போ சொல்வதுதான் உண்மை என்றால் அப்போ சொன்னது பொய்தானே? ரெண்டாவது சொன்னதுதான் சரி என்றால், அப்போவே பொய் சொன்னவர் இப்போ சொல்ல மாட்டார்னு என்ன நிச்சயம்? இப்போ சொல்வதுதான் பொய் என்றால்  அப்போ சொன்னது மட்டும் எப்படி உண்மை என்று நம்ப முடியும்? (புரியவில்லை என்றால் கோபப்படாமல் மறுபடியும் படிக்கவும்) அநேகமாக ஒரு கல், ஒரு கண்ணாடி எந்திரனையும் முறியடிக்கும் என்று நம்பலாம். சில நண்பர்கள் உதயநிதி, சூர்யாவை வைத்து விஜய்க்கு எதிராக ஏதோ வேலை  செய்வதாகவும் சொல்கிறார்கள். அதன் விளைவே, "ரஜினிக்கு அடுத்தபடியாக சூர்யா." என்பதை நிலைநிறுத்தும் இந்த முயற்சி என்றும் சொல்கிறார்கள். சூர்யா தம்பி,  "உன் வாழ்க்கை உன் கையில்".


"விஜய்யின் 52 படங்களையும் வேலாயுதம் வசூலில் விழுங்கி விட்டது." என்று சொல்கிறார்கள். அப்படியானால் இனி வரும் விஜய் படங்களை கில்லியுடன் ஒப்பிடாமல் வேலாயுத்துடன் ஒப்பிடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் மேலே சொன்ன உதயநிதி கதை இதற்கும் பொருந்தும். எங்கள் ஊரில் வேலாயுதத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள். இன்னும் ஏழாம் அறிவு ஓடிக்கொண்டிருக்கிறது. "இதன் மூலம் என்ன சொல்லவருகிறாய்? எனக்கு தெரியும். என்ன இருந்தாலும் நீ அஜீத் ரசிகன்தானே? அப்படித்தான் பேசுவாய்." என்று நினைப்பீர்கள். நான் அஜீத் ரசிகன்தான். ஆனால் அந்த தியேட்டர் ஓனர் அஜீத் ரசிகன் அல்ல.  

கோச்சடையான்


இந்த படமாவது வருமா? இல்லை இன்னும் கொஞ்ச நாளில் வேறு ஒரு பட அறிவிப்பு எதுவும் வெளிவருமா? என்று தெரியவில்லை. எதுவானாலும் ரஜினி பட அறிவிப்பு வந்தால் அது மகிழ்ச்சியே. அடுத்த அறிவிப்பு வரும் வரை இதுதான் அடுத்த ரஜினி படம் என்ற நம்பிக்கை தொடரும். படம் அடுத்த ஆகஸ்டில் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியோ, பதிவுலக நண்பர்களுக்கு வாயில் மெள்ளுவதற்கு அவல் கிடைத்து விட்டது. ரஜினி குறித்து பாராட்டி, சிலாகித்து, ரசித்து, கிண்டல் செய்து, மட்டம் தட்டி, வயிற்றெரிச்சலை கொட்டி, காப்பி பேஸ்ட் செய்து, நிறைய பதிவுகள் தேத்தலாம். மறுபடியும் ரஜினியின் ஆரம்பகாலத்தில் இருந்து அவரது நடவடிக்கைகளை கிண்டல் செய்தும், சிலாகித்தும் எழுதலாம். கமான் ஸ்டார்ட்..... 

கொலவெறி


இந்த பாடல் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது என்று சொல்கிறார்கள். இந்த பாடலில் இன்னும் ஒரு வரியை கூட கேட்டிராத பாவாத்மாக்களில் நானும் ஒருவன். ஏனோ இந்த பாடலை கேட்கவேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை. இருக்கும் இடத்தில் இருந்து யூடியூபை தட்டினால் அடுத்த நொடியே பாடலை கேட்கமுடியும். இருந்தும் தோன்றவில்லை. இதே மாதிரிதான் 'எவண்டி ஒன்ன பெத்தான்' பாடலையும் வெகு நாட்கள் கழித்து கேட்டு காண்டு ஆனேன். பிறகு திரையில் பார்க்கும்போது நன்றாக இருக்கும் என்று நம்பி கண் பார்வை பறிபோனதுதான் மிச்சம். படம் வந்த பிறகு பாடலை ஒளியும் ஒலியுமாக பார்ப்பது என்று முடிவு கட்டி விட்டேன்.  

கிரிக்கெட் 


இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி டெஸ்ட் போட்டியும் சரி, நேற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியும் சரி, கடைசி நேரத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ நிலைமைதான். இப்படியே எல்லா போட்டிகளிலும் நடந்தால் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு கூடும். எனக்கென்னவோ மேட்ச் அந்த நிலைமைக்கு போனதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. நிறைய மிஸ்பீல்டிங், சொதப்பலான பவுலிங் என்று முதலிலேயே சிரத்தை இல்லாமல் ஆடினார்கள். கிரீஸ் கெய்லையும், டிவைன் பிராவோவையும் ஏன் அணியில் சேர்க்கவே மாட்டேன்கிறார்கள்?


மறுபக்கம் தென்னபபிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் சம அளவில் பலத்தை வெளிப்படுத்தின. இதே மாதிரி சம அளவில் தொடங்கிய இலங்கை பாகிஸ்தான் போட்டிகள், மெல்ல மெல்ல பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விட்டது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வெகு விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு இந்த தொடர் ஒரு சாட்சி. அதே நேரம் "இலங்கை அணி ஜெயவர்தனே, சங்கக்காரா மற்றும் மலிங்காவை மட்டுமே நம்பி இருக்கிறதோ?", என்று எண்ணத்தோன்றுகிறது.

இப்போதைக்கு வெட்டி அரட்டை அவ்வளவுதான்.... 

உங்களது கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

November 23, 2011

மழலைகள் உலகம் - தொடர் பதிவு


இந்த தொடர் பதிவுக்க அழைத்த நண்பரே சீனுவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மழலைகள் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்த போது வழக்கம்போல கொஞ்சம் சொந்த அனுபவங்களையும், கொஞ்சம் அறிவுரையும் (வாத்தியார் என்றாலே இப்படித்தானா?) கூறலாம் என்று முடிவு கட்டினேன். 

என் குழந்தைப்பருவம்.

என் குழந்தைப்பருவம் உண்மையிலேயே மிக ஜாலியான ஒரு பருவம். எங்கள் வீட்டில் பிள்ளைகள் எண்ணிக்கை மிக அதிகம். அதே போல என் தந்தையின் உடன் பிறந்த இரண்டு அத்தைகள், ஒரு சித்தப்பா என்று அவர்களின் பிள்ளைகளும் அதிகம். ஏதாவது பண்டிகை, திருவிழா என்றால் எங்கள் வீடே குழந்தைகளால் நிரம்பி இருக்கும். ஒன்றாக விளையாடுவது, பட்டாசு வெடிப்பது, பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது என்று செம கலாட்டா நடக்கும். அதே போல எங்கள் தெருவிலும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் அதிகம். நாங்கள் வசிக்கும் காம்பவுண்டில் மட்டுமே ஒரு கிரிக்கெட் அணிக்கு தேவையான அளவுக்கு ஆண் குழந்தைகள் உண்டு. விடுமுறை விட்டு விட்டால் தெருவே கலங்கி விடும். பல பல்புகள், பாத்திரங்கள், ஓடுகள் நொறுங்கும்.


நான் குறைந்த காலத்திலேயே பேச துவங்கி விட்டதால் மிக திருத்தமாக பேசுவேனாம். ஆகவே நான் மழலை பேசியது மிக குறைவு. அதே போல சிறிய வயதிலேயே நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டதால் அவை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பெரும்பாலான பெரியவர்கள் "குழந்தைக்கு என்ன புரியப்போகிறது?", என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள்வாங்கும் திறன் மிக அதிகம். ஆகவே அப்போது புரியாவிட்டாலும் சிறிது காலம் கழித்து அதனை புரிந்து கொள்வார்கள். அதே போல குழந்தைகள் தமக்கு நேர்ந்த அவமானங்கள், தோல்விகள் ஆகியவற்றை மறப்பதில்லை. அதில் இருந்து வெளியே வந்து விட்டாலும், அவை மாறாத தழும்புகளாக இப்போதும் மனதில் இருக்கிறது. 

அடுத்த தலைமுறை

எனக்கு அடுத்த தலைமுறை என்பது என்னை விட மிக புத்தி கூர்மை உள்ளதாக உள்ளது. அவர்களுக்கு தேவையான விஷயத்தை நாம் அளித்தால் அவர்களே அதை எளிதில் உள்வாங்கி கொள்கிறார்கள். ஆனால் பொறுமையும், மன உறுதியும் குறைவாக இருக்கிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதற்கு காரணம் நம் சமூகமே என்பதில் சந்தேகமே இல்லை. ஆசிரியர் என்பதாலேயே இளைய தலைமுறையோடு பழகும் வாய்ப்பு என்பது எனக்கு மிக அதிகம். கல்லூரி படிப்பை முடித்து 7 ஆண்டுகள் ஆன பிறகு, இன்னும் கல்லூரி பருவத்திலேயே இருப்பது என் வரப்பிரசாதம். இவற்றில் இருந்து நான் கற்றுக்கொண்டது, "எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.", இதுதான் இன்றைய தலைமுறையின் மன நிலை. இது சரிதான். ஆனால் அதே சமயம், மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது 

பெற்றோர்களுக்கு.... 


ஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே பெருத்த ஏமாற்றங்களை சந்திக்காமல் இருந்தால் அது நல்ல மன நிலையுடன் வளர வாய்ப்பிருக்கிறதாம். அதே போல சிறு வயதில் அதன் மனதில் பதியும் எந்த ஒரு பாதிப்பும் பிற்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே இதற்கு தக்கவாறு நடந்து கொள்வது பெற்றோரின் கடமைதான்.

பத்து வயதுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பல மடங்கு உயரும் என்று எங்கோ படித்த நினைவு. ஆகவே நாம் குழந்தைகள் வழக்கமாக கற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு, மேலும் சில மொழிகளை கற்கும் வாய்பை ஏற்படுத்தி கொடுப்பது நம் கடமை. 

தற்காலத்தில் பெரியவர்களிடமே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் படிக்கும் பழக்கம் என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பது அனுபவஸ்தர்களுக்கே தெரியும். ஆகவே நம் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது நம் கடமை. 

சில பெற்றோர்கள் நாம் குழந்தைகள் படிப்பை தவிர்த்து, தனித்திறன்களிலும் பங்கு பெற்று பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான். அப்புறம், "எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு படிப்பை கவனி.", என்று சொல்லி விடுவார்கள். இது முற்றிலும் தவறு. நான் மேடையில் நாடகம், மிமிக்ரி என்று தொடங்கிய பிறகு என் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் அதன் பிறகுதான் அதிகரித்தது. இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது. 

மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். அந்த கணத்தில் நாமும் நம் மழலை பருவத்திற்கு சென்றுவிடுவோம். மழலைகள் உலகம் மகத்தானது. இந்த பதிவை யார்வேண்டுமானாலும் தொடரலாம். எல்லோருக்குமே மழலை உலகம் பற்றிய கருத்துக்கள் இருக்குமல்லவா?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

November 17, 2011

அஜீத் என்ற அமெரிக்க கைக்கூலி


ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம். 


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள். 


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

தன்னம்பிக்கைக்கு மறுபெயர் இவர்தானோ?


நான் இரண்டு மனிதர்களின் பெயர்களை கூறுகிறேன். உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள். ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மற்றும் ஜீன் டொமினிக் பாபி. முதலாவது மனிதரை பெரும்பாலானோர் கேள்விபட்டிருப்போம். நான் முதலாமவரை பற்றி தேடும்போது இரண்டாமாவரை பற்றி தெரிந்து கொண்டேன். சரி இரண்டு பேரை பற்றியுமே கூறி விடுகிறேன்.


ஜீன் டொமினிக் பாபி மிகவும் புகழ் பெற்ற பிரெஞ்சு பத்திரிக்கையாளர். தனது 43ஆவது வயதில் பக்கவாதத்தால் எல்லா பக்கமும் தாக்கபட்ட அவர் 20 நாட்கள் கோமாவில் இருந்திருக்கிறார். கண்விழித்து பார்த்தால், அவரால் தன் உடலின் எந்த பாகத்தையுமே அசைக்க முடியவில்லை. கண் இமைப்பதை தவிர வேறு எதுவுமே அவரால் செய்ய முடியாது. இந்த நோய்க்கு லாக்டு இன் சிண்ட்ரம் (Locked in syndrome) என்று பெயர் சொல்கிறார்கள். அதாவது ஒருவர் உடலில் தன்னார்வ தசைகள் எல்லாம் செயலிலந்து போகுமாம். அனிச்சை செயல்கள் மட்டுமே சாத்தியம். சிந்திக்க முடியும். ஆனால் பேசவோ, எழுதவோ முடியாது. கிட்டத்தட்ட உயிருள்ள ஒரு தாவரம் மாதிரி.


இந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆசை. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு புத்தகம் எழுத விரும்பினார். வெறும் கண்ணாசைவை மட்டும் வைத்து எழுதியும் முடித்தார்.  இவருக்கு உதவியாக இருந்தவர் கிளாட் மெண்டிபிள் என்னும் பெண். பிரெஞ்சு எழுத்துக்களை வரிசையாக வாசிப்பார் கிளாட். குறிப்பிட்ட எழுத்து வந்ததும் கண்ணாசைப்பார் பாபி. அதை எழுதிக்கொள்வார். வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி பயன்படும் எழுத்துக்களை முதலில் எழுதி வைத்திருப்பாராம். இப்படியே ஒரு வார்த்தை, பிறகு வாக்கியம் என்று எழுதுவார்கள். இந்த புத்த்கம் எழுத பத்து மாதங்கள் ஆனதாம். இந்த புத்தகம் வெளிவந்து ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று தீர்ந்தது. புத்தகம் வெளிவந்த மூன்றாவது நாளில், தன் கடைசி ஆசை நிறைவேறிய மன நிறைவில், இமைத்து கொண்டிருந்த கண்களை நிரந்தரமாக மூடினார் பாபி.

ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் என்பவர் புகழ்பெற்ற பிரபஞ்ச அறிவியல் அறிஞர். பதின்ம வயதில் இவரை மோட்டார் நியூரான் டிசீஸ் (Motor neuron disease) என்னும் நரம்பியல் நோய் தாக்கி இருக்கிறது. நடக்கும்போது நிலை தடுமாறி போத்தென்று தரையில் விழுந்து பலமுறை தலையில் அடிபட்டிருக்கிறது. 21 வயதில் நோய் முழுமையாக தாக்க, டாக்டர்கள் இன்னும், "இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே ஹாக்கிங்க்ஸ் உயிரோடு இருப்பார்.", என்று கூறி விட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல் இயக்கத்தை இழக்க தொடங்கியிருக்கிறார். தன் 40 வயதில்  ஒட்டுமொத்தமாக உடலில் இயக்கம் நின்றுவிட்டது. இடையில் நிமோனியா வேறு தாக்க, அதற்கு கொடுத்த கடுமையான வைத்தியம் காரணமாக பேச்சும் நின்றுபோனது. "ஆனால் மூளை இயக்கத்தை நிறுத்தவில்லையே. அது போதும்!"., என்று நினைத்தவர் தன் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும், புத்தகங்கள் எழுதுவதையும் மட்டும் நிறுத்தவே இல்லை.


ஸிபீச் சிந்தஸைசர் (Speech synthesizer) என்ற கருவியை வாங்கி தாடையில் பொருத்திக்கொண்டார். இது நம் தாடை அசைவை வைத்து வார்த்தைகளை ஒலியாக மாற்றி தரும் கருவி. கேட்க நன்றாகத்தான் இருக்கும். மிகவும் வலியை தரும் ஒரு பேசும் முயற்சி. இதற்கு பேசாமேலேய இருந்துவிடலாம் என்று நினைக்க தோன்றும். மேலும் நாம் நினைக்கும் வார்த்தையை உருவாக்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.  இந்த நிலையிலும் மனம் தளராது பல கருத்தரங்குகளிலும், மேடைகளிலும் தோன்றி உரையாற்றி இருக்கிறார் ஸ்டீபன். தன் பேச்சுக்களை முதலிலேயே பேசி ரெக்கார்ட் செய்து கொள்வாராம். ஆனால் லைவ் கலந்துரையாடல்களில் அது சாத்தியமல்ல. அப்போதுதான் அவர் பேச எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது விளங்கும்.  ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்க சுமார் 7 நிமிடங்கள் எடுத்துக்கொண்டாராம்.


இவர் எழுதிய புத்தகங்கள், A Brief History of time, Black Holes and Baby Universes போன்றவை உலகப்புகழ் பெற்றவை. தற்போது உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருகிறார். "இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கு இந்த பொன்னுலகமே இருக்கிறது.", என்று சொன்னவர் காரல் மார்க்ஸ். இவரது வார்த்தைகள் போராட்டத்தின் உன்னதத்தை சொல்கின்றன. அதற்கு இந்த இருவரை தவிர வேறு சிறப்பான உதாரணம் யாராக இருக்க முடியும்? இவங்களுக்கு முன்னால, நமக்கு இருப்பதெல்லாம் என்னங்க கஷ்டம்?

கார்ல் மார்க்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. தோழர்களுக்கு எதிராக பொதுபுத்தி கட்டுரை ஒன்று எழுதலாம்னு நினைச்சேன். மறந்துட்டேன். அப்புறம் எழுதுறேன்.

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...