விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 21, 2013

கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். 

வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் மொக்கையாகவே எழுதிக் கொண்டிருப்பது? இந்த முறை உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போகிறேன். இது ஒன்றிரண்டு கட்டுரையோடோ, அல்லது அதற்கு மேலாகவோ தொடரலாம். நான் கண்ட கேட்ட சில தகவல்களை வைத்து இந்த கட்டுரையை எழுத முடிவு செய்து இருக்கிறேன். இதில் பகிரப்படும் சில தகவல்கள் உங்களை திடுக்கிட செய்யலாம். என் நோக்கம் குறிப்பிட்டு யாரையும் தாக்குவதோ, இழிவு படுத்துவதோ அல்ல. தங்கள் குழந்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, பெயருக்கு பின்னால் பிஇ என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டுக்கொண்டாலே அவர்கள் வாழ்க்கை உருப்பட்டுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்களில் ஒரே ஒருவருக்கு கூட இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்துமானால், அதுவே எனக்கு போதும். 


இந்த கட்டுரை கல்வித்தந்தைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஒரு சிலரின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது. கல்விப் பணிக்கேன்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு சில விஷக்கிருமிகள் பற்றியே இந்த கட்டுரைத்தொடர். அதற்கு முன், பொறியியல் கல்லூரிகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி கூறி விடுகிறேன்.

ஒரு கல்லூரி தொடங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்குரிய நிலத்தை வாங்குவதில் இருந்து, கல்லூரி அட்மிஷன் வரை ஆயிரம் கடல், ஆயிரம் மலைகளை தாண்டி குதிக்கவேண்டும். ஒரே ஒரு வீட்டை கட்டி அதில் குடி புகுவதற்குள் எத்தனை அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது? அப்படி இருக்க, பல நூறு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கல்லூரி என்றால் சும்மாவா? குடிநீர், மின்சாரம், பஞ்சாயத்து யூனியன், சுகாதாரம், என்று அரசுத்துறையின் சுமார் ஆறு டசன் துறை அதிகாரிகளிடம் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல, இதற்குள்ளாகவே நமது பாதி முதலீடு, அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு சென்று விடும். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஆயிரம் கடல் மலைகளை தாண்டி எதற்கு இந்த நவீன சிந்துபாத்கள் செல்கிறார்கள்? அங்கே குவிந்து கிடக்கும் கரன்சி என்னும் பேரழகியை சந்திப்பதற்கே. 


 சரி கட்டிடம் கட்டியாகி விட்டது. அடுத்தது என்ன? கட்டிடத்தை கல்வி நிறுவனம் என்று கூற வேண்டும் அல்லவா? இங்கேதான் வருகிறது கல்வித்துறை. இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மட்டும் குழப்பம் இல்லை. கல்லூரிக்கல்வியிலும் குழப்பம் உள்ளது. ஒரு கல்லூரிக்கு உரிமம் வழங்கும் உரிமை இரண்டு அமைப்புகளிடம் உண்டு. ஒன்று UGC என்று அழைக்கப்படும் யூனிவெர்சிடி கிராண்ட் கமிஷன். மற்றொன்று  AICTE என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன். இதில் முதலாமவர் கொஞ்சம் இளகிய மனதுக்காரர். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விடுவார். பொறியியல் கல்வி தொடங்க வேண்டுமானால் ஸ்ட்ரிக்ட் ஆபீசரான AICTE அப்ரூவல் இல்லாமல் முடியாது. இதற்கும் நிறைய ஏஜெண்டுகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். எப்படி வண்டியே ஒட்டத்தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் லைசென்ஸ் வாங்கி விட முடியுமோ? அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்) அவ்வளவே. முதலில் AICTE அனுமதி பெற்று நிறுவனத்தை தொடங்கி விட்டு, பிறகு  AICTE அனுமதி  இல்லாமல் UGC அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு மேலும் சில கோர்ஸ்களை கல்லூரியில் இணைத்து விட முடியும். இத்தகைய கோர்ஸ்களில் படித்து வெளி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் AICTE படி செல்லாது, ஆனால் UGC படி செல்லும். இந்த குழப்பத்தால், பல மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. இந்த AICTE, UGC குழப்பம் நன்கு படித்தவர்களுக்கே புரியாது. பாமர மக்கள் எம்மாத்திரம்?  பல லட்சம் பணம் கட்டி படித்து வாங்கிய சான்றிதழ் செல்லாது என்ற இடி கடைசியிலேயே இவர்களுக்கு தெரியவரும். அதற்க்கப்புறம் புலம்புவதை தவிர வேறு வழியில்லை.  


சரி AICTE அனுமதி வாங்கியாச்சு. கல்லூரி தொடங்கி விடலாமா? முடியாது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி ஒரு பல்கலைகழகத்தோடு இணைந்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை வேறு வழியே இல்லை. பெரியண்ணன் அண்ணா பல்கலைக்கழகத்தோடு நம்மை இணைத்துக் கொண்டேயாக வேண்டும். அவரும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்தான். அவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்.  இதற்கு ஏஜெண்டுகள் இருந்தாலும், அரசியல் காற்றும் சாதகமாக நம் பக்கம் வீசவேண்டும். இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே கட்டி முடிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் இருக்கும் தயா பொறியியல் கல்லூரி இதற்கு ஒரு சான்று. இதை கட்டியவர் துரை தயாநிதி அழகிரி. கல்லூரி கட்டி முடித்துவிட்ட நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.  விளைவு கல்லூரி பாழடைந்த பங்களாவாக மாறி வருகிறது. 


இத்தனை அப்ரூவல்களையும் வாங்கிய பிறகே ஒரு பொறியியல் கல்லூரியால் அட்மிஷன் தொடங்க முடியும். முதல் முறை அப்ரூவல் வாங்குவது மட்டுமே சிரமமான காரியம். அதன் பிறகு எல்லாம் எளிதாக நடந்துவிடும். ஆண்டுக்கொரு முறை, AICTEயில் இருந்தும் , அண்ணா பல்கலைகழகத்தில் இருந்தும் வல்லுனர்கள் கல்லூரியை பார்வையிட வருவார்கள். அவர்களை சரிக்கட்டினால் போதும். 

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் சுமார் 3350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 65% கல்லூரிகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 570. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

-ஆதங்கம் தொடரும் 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

பிகு: நண்பர்களே கல்வித்தந்தைகள் குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் கட்டுரையில் அதிக தகவல்கள் தர உதவியாக இருக்கும். நன்றி 
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...