விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 30, 2010

பதிவுலகமும் சில சந்தேகங்களும்...


சமீபத்தில் குமரன் குடிலுக்கு சென்று வந்தேன். அந்த குடிலின் சொந்தக்காரர் தனக்கு புரியாத சில விஷயங்களை பற்றி கூறி இருந்தார். அவருடைய சந்தேகங்கள் பல எனக்கும் உண்டு. முன்பே சொன்னது போல இந்த பதிவுலகத்துக்கு வந்தபிறகு நிறைய கற்றுக்கொண்டேன். எவ்வளவுதான் புத்தகங்கள், படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்.


ஆணாதிக்கம்

நான் ஒரு ஆசிரியன். மற்றவர்களை விட இளைய சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன். ஒரு பெண் தவறு இழைக்கிறாள் (ஆண் செய்தாலும் தவறு தவறுதான்). "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா? ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது. இதே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?


என் தோழி ஒருத்தியுடன் வெகு நாட்கள் கழித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். படித்து முடித்தவுடன் போய் ஒரு பெரிய நிறுவனத்தில் உட்காரவில்லை. இரண்டாண்டு படாதபாடு பட்டு ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பின், தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் எண்ண முடியாத அளவுக்கு சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறாள். பெரிய கம்பெனிகள் நடத்தும் Off Campus நேர்முக தேர்வுகளில்தான் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஒரு தேர்வு பாக்கி இல்லாமல் ஆவலுடன் வருவார் அவளின் தந்தை. அவர் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கல்லூரியில் தன் பிள்ளையை சேர்க்க வரும்போது ஒரு தந்தையின் முகத்தில் இருக்குமே அதே போல. என்ன நடக்கிறதென்று தெரியாது. ஆனால் நம் மகள் நேர்முக தேர்வுக்கு வருகிறாள், அவளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். தற்போது அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை காதலிப்பதாக சொன்னாள். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொன்னாள். தன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். அவளின் பெற்றோர்கள் கேட்பதாக இல்லை. இது குறித்து என்னிடம் அவள் சொன்ன வார்த்தை, "ரொம்ப ஓவரா பண்றாரு எங்கப்பா. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல. அதனால இங்க தனியா ஒரு ரூம் எடுத்திட்டேன். செல் நம்பர் கூட மாத்திட்டேன். என்னை என்ன அவுங்க அடிமைன்னு நினச்சுட்டான்களா?" . இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே? ஒருவேளை இதுதான் சம உரிமையோ? இதை சுட்டிக்காட்டுவது ஆணாதிக்கமா? 

பார்ப்பனீயம்

பார்ப்பனியம் என்றால் என்ன என்று ஒரு பதிவர் தெளிவாக எழுதி இருந்தார். அதாவது பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை குறிப்பது அல்ல. தனக்கு கீழே இருக்கும் ஒருவன் வளர விடாமல் தடுப்பது, அவனை மட்டம் தட்டுவது எல்லாமே பார்பனீயம்தான். தீர்ந்தது சந்தேகம். ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது. மேலும், "ஐ டி துறையில் இருக்கும் மேலதிகாரிகள், தன் கீழே வேலை பார்க்கும் ஒருவனை சட்டைக்குள் எட்டிப்பார்க்கிறார்கள் பூணூல் தெரிகிறதா? என்று, எல்லாம் பார்ப்பனனின் திமிர்!!!" என்றும் எழுதி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை பிடித்து தொங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒருவன் கருத்து தெரிவிக்கிறான். உடனே அவன் சட்டைக்குள்ளே எட்டிப்பார்த்து அதையும் எழுதுகிறார்கள். இவர்களில் யார் பிராமணன்? யார் பார்ப்பனன்? என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா? இயல்பாகவே மற்றவர்கள் மீது அவனுக்கு எழும் கோபத்தில் பொரிந்து தள்ளுகிறான். உடனே எட்டிப்பார்த்து "பார்ப்பனனின் திமிரை பார்த்தீர்களா?" என்கிறார்கள். அட எதுதான் பார்ப்பனீயம்?

முதலாளித்துவம் 


குமரனுக்கு வந்தது போல எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று கைவலிக்க நிறைய பதிவர்கள் எழுதி வருகிறார்களே? இவர்கள் யாரும் வேலையே பார்க்கவில்லையா? ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா? ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா?


கடவுள் நம்பிக்கை 

பதிவுலகம் என்றில்லை எல்லா இடத்திலும், எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்ப்புவாதம் என்று ஒன்று உண்டு. இது அதிகம் இருப்பது கடவுள் மற்றும் மத சம்பந்தமான விஷயங்களில். முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக? பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும்? மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று "உங்கம்மா ஒரு தே...." என்றால் அவன் என்ன செய்வான்? அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன்? என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! 

இதை எத்தனை நாத்திகர்கள் செய்கிறார்கள்? நாத்திகர் என்பது தங்களை மட்டப்படுத்த ஆத்திகர்கள் வைத்த பெயராம். அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயர் கூட உங்களை நீங்களே சொரிந்து கொள்ள வைத்து கொண்ட பெயர்தானே. பகுத்தறிவுக்கும், நாத்திகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லவில்லை. நம்புகிறேன். அதே போல்தான் உங்கள் கொள்கையை நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் அதை சொல்லும் விதத்தில் வார்த்தை பிரயோகங்கள் மனதை புண்படுத்துவது போல இருப்பது ஏன்? உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா? இந்த கேள்வியை கடவுளை ஆபாசமாக திட்டி எழுதும் பல பதிவர்களிடம் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஏனோ பதில்தான் வரவில்லை. மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன் கடவுள்மறுப்பு, சாதி மறுப்பு, பார்ப்பனீய ஒழிப்பு என்று ஒரு சாதி உருவாகி இருக்கிறதே ஒழிய வேறொன்றும் நிகழ்ந்து விடவில்லை. என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் மாபெரும் சந்தேகங்கள் இவை. யாராவது தீர்த்து வைத்தால் நல்லது.

பிடிச்சிருந்தா மறக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...     

முழுவதும் படிக்க >>

June 28, 2010

அஜித்குமார் ஆடும் மங்காத்தா
தலயின் ஐம்பதாவது படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ரேசில் முழு கவனம் செலுத்தி வரும் தல வரும் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அஜித் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று கவுதமும் சொல்லியதாக செய்திகள் வந்தன. இதில் திடீர் திருப்பமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போவது கவுதம்மேனன் அல்ல. சென்னை 600028, சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கிய வெங்கட்பிரபு என்று. படத்தை தயாரிப்பது க்ளவுட் நைன் தயாநிதி அழகிரியேதான். முன்பே கூறியது போல அஜித் ரேசில் இருந்து ஜூலையில் (ரேஸை விட்டு விட்டு) திரும்புகிறார், படப்பிடிப்பு ஆகஸ்டு முதல் தொடங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு ஜூலை கடைசியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா "மங்காத்தா". படம் ஆக்சன் கலந்த காமெடி படமாக இருக்குமாம். தலைப்பை பார்த்தால் Cat and Mouse கதை மாதிரி தோன்றுகிறது. அதாவது Catch me if You can மாதிரி. படத்திற்கு வேறு சில தலைப்புகளும் பரிசீலனையில் இருக்கிறதாம். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்துக்கு இணையாக நாகார்ஜுனாவும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் எதையும் உறுதியாக கூற முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். எது எப்படியோ தல ரசிகர்களை பொறுத்தவரை இது ஒரு இனிப்பான செய்திதான்.உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக முடிவுகள் வருகின்றன. சென்ற முறை இறுதி போட்டியில் பங்கேற்ற இத்தாலி மற்றும் பிரான்சு அணிகள் இரண்டுமே முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களை ஏமாற்றி உள்ளன. இரண்டு அணிகளின் ஆட்டத்தை பார்க்கும்போது ஒரு சுரத்தே இல்லாமல் விளையாடுவது போல இருந்தது. என்ன பிரச்சனையோ? 16 அணிகளின் நாக் அவுட் முறை சுற்று தொடங்கி உள்ளது. இந்த முறை ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இந்த சுற்றிலேயே பெரிய அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி, போர்சுகல் மற்றும் ஸ்பெயின். ஏற்கனவே ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், போர்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணியில் ஏதாவது ஒன்றுதான் காலிறுதிக்கு முன்னேற முடியும். எனவே இந்த சுற்றில் மேலும் இரு பெரிய அணிகள் வெளியேறிவிடும். இது அடுத்த சுற்றுகளின் சுவாரசியத்தை குறைத்து விடும். மேலும் காலிறுதியில் அர்ஜென்டினாவும் ஜெர்மனியும் மோதுகின்றன. 


இந்த உலககோப்பையில் ரேப்ரீகளும் தன் பங்குக்கு ஆடி இருக்கிறார்கள். முக்கிய ஆட்டங்களில் ஆப்சைடு கோல்களை கவனிக்காமல் விட்டது, கோல்களை அளிக்காமல் விட்டது, பெனால்டி தராமல் விட்டது என்று நிறைய தவறுகள் நடந்தன. நேற்றைய ஆட்டத்தில் கூட இங்கிலாந்து வீரர் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் சென்ற பிறகே ஜெர்மனி கீப்பர் அதை பிடித்தார். நியாயமாக அது கோல்தான். இப்போட்டியில் மூன்று கோல் வித்தியாசத்தில் ஜெர்மனி வென்று விட்டாலும் முக்கிய ஆட்டத்தில் இது போன்ற தவறான முடிவுகள் வீரர்களின் நம்பிக்கையை குலைக்கும் என்பது உறுதி. சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் அணிகள் ஆடிய ஆட்டம் என்று நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் ஹோண்டுராஸ் வீரர் ஒருவர் பந்தை கையால் தொட அதை ரெப்ரீ கவனிக்க வில்லை. இல்லையேல் சுவிட்சர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்க முடியும். இதே மாதிரி சில தவறுகள் இத்தாலி ஆடிய ஆட்டத்திலும் நடந்தது. எவ்வளவுதான் சொன்னாலும் விளையாட்டு என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம். ஏற்று கொள்ளத்தான் வேண்டும். இனி வரும் போட்டிகளிலாவது ரேப்ரிக்கள் கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சானிய மிர்சா என்ற பெண் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பெயரை உலகளவில் எடுத்துச்சென்றதில் பெரும் பங்கு ஆற்றியவர். ஆனால் அதன்பின் சர்ச்சைகள், திருமணம் என்று தடம் மாறி விட்டார். தற்போது அந்த இடத்தை பிடித்திருப்பவர் சாய்னா நெக்வால். இவர் ஆடுவது டென்னிஸ் அல்ல. பாட்மிண்டன். சீன வீரர், வீராங்கனைகளே ஆட்சி செய்து வந்த பாட்மிண்டன் ஆட்டத்தில் (முதல் ஏழில் ஆறு சீனர்கள்) கால்பதித்து, இந்தியாவின் பெயரை பதித்து வருகிறார் இந்த இருபது வயது புயல். தன் சாதனைகளின் மைல் கல்லாக இந்த ஆண்டு விளையாட்டு தர வரிசையில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தி இருக்கிறார். இன்னும் இவர் படைக்க வேண்டிய சாதனைகள் அதிகம் இருக்கின்றன. அதற்குள் இவரை விளம்பர கம்பெனிகள் புக் செய்து, பணத்தாசை காட்டி, ஆட்டத்தை கோட்டை விட செய்யாமல் இருந்தால் நல்லது. 


ஒருவழியாக எல்லாரும் விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு கடுப்புடன் கிளம்பி சென்றுவிட்டார்கள். எனக்கும் விடுமுறைதான். சன் குழுமம் மற்றும் கலைஞர் டிவிகளில் மாற்றி மாற்றி செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்கள் கடமையை செவ்வனே செய்து விட்டார்கள். மாறாக ஜெயாடிவியில் செம்மொழி மாநாட்டை பற்றி எப்படியாவது மக்களிடம் கெட்ட எண்ணத்தை உருவாக்கி விடவேண்டும் என்று மாறி மாறி செய்திகளிலும், இன்ன பிற நிகழ்ச்சிகளிலும் புலம்பி தள்ளி விட்டார்கள். அவர்கள் சொன்ன காரணம் ஈழத்தில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது மாநாடு தேவையா?, தமிழக மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது மாநாடு தேவையா? என்று மேம்போக்காக இருந்ததே ஒழிய ஒரு முனைப்புடன் கூறியதாக தெரியவில்லை. செம்மொழி மாநாட்டையும் சும்மா சொல்லக்கூடாது. வழக்கமாக கட்சிகள் மூன்றாண்டு அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாபெரும் மாநாடு ஒன்று நடத்தும். இந்த முறை திமுக தன் கட்சி மாநாட்டை செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடத்தி உள்ளது. கலந்து கொண்டவர்கள் எல்லோரும் திமுக அபிமானிகள் அல்லது அபிமானிகளாக நடிப்பவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் எப்படியாவது திமுகவின் சாதனைகளை, கலைஞரின் புகழை பற்றி ஜால்ரா அடித்து விடவேண்டும் என்று எல்லா தமிழறிஞர்களும் முனைப்புடன் இருந்தனர். பட்டி மன்றம் ஒன்று நடந்தது. அதில் பேசியவர்கள் எல்லோரும் தலைப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினார்கள். தலைவரை பற்றி இருபது நிமிடம் பேசினார்கள். உச்சகட்ட கூத்து கவி அரங்கத்தில்தான். தமிழின் புகழ் பாட வந்த புலவர்கள் (என்று சொல்லி கொள்பவர்கள்) அரசனை புகழ்ந்து பிச்சை எடுக்கும் அன்னக்காவடி போல கலைஞரை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். 


நான் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு கால் மணி நேரம் கூட பார்க்கவில்லை. ஜால்ரா சத்தம் தாளாமல் என் காதில் இருந்து ரத்தம் வந்து விட்டது. கலைஞர் எப்படி ஐந்துநாள் பொறுமையாக இருந்தார் என்று தெரியவில்லை. என்னதான் தன்னை புகழ்ந்து பேசினாலும் அதுவும் சலித்து விடாதா? எனக்கு ஒரு சந்தேகம். இப்படி மாறி மாறி புகழ்ந்து தள்ளுகிறார்களே இவர்கள் கடைசிவரை இப்படியே இருப்பார்களா? ஒருவேளை ஆட்சி மாறி வேறு ஒரு முதல்வர் வந்துவிட்டார் என்று வைத்துகொள்வோம். என்ன செய்வார்கள்? கலைஞர் என்பவர் உயிருடன் இருக்கும் வரைதான் இந்த மாதிரி ஜால்ரா எல்லாம். கலைஞர் மறைந்து விட்டால் இந்த ஜால்ராக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இது கலைஞருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தான் இறந்து விட்டால் ஒரு பயலும் நம்மை பற்றி ஒரு வார்த்தை கூட புகழ மாட்டான். குறைந்த பட்சம் தான் இருக்கும் வரையாவது காது குளிர கேட்டுவிட்டு கண் மூடலாம் என்று நினைக்கிறார் போலும். 

சமீபத்தில் வந்த ஒரு குறுந்தகவல் "கலைஞர் ரஜினியை விட பல மடங்கு அறிவாளி. ஏனென்றால் அருணாசலத்தில் ரஜினி முப்பது நாளில் முப்பது கோடி செலவழிக்க கஷ்டப்பட்டார். கலைஞர் ஒரே வாரத்தில் 380 கோடி செலவு செய்து அசத்தி விட்டார்." பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 22, 2010

என்ன கிழித்து விட்டார் மணிரத்னம்?


இந்த ராவணன் படம் வந்தாலும் வந்தது கொஞ்சநாள் கற்பனை வறட்சியில் காய்ந்து போய் உட்கார்ந்து இருந்த பதிவுலகம் பின்னால் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக்கொண்டு எழுந்து விட்டது. படத்தை சிலாகித்து ஒரு சில விமர்சனங்கள் வந்தாலும், வழக்கம்போல் கிழித்து தோரணம் கட்டிய பதிவுகள் ஏராளம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த பதிவுலகம் பல கூறுகளாய் சிதறி போய் இருக்கிறது. தன்னுடைய நலனுக்காக அல்லது தன் நண்பனின் (தோழனின் அல்ல) கருத்துக்களுக்கு ஒத்து ஊதுவதற்கு என அவ்வப்போது ஒன்று கூடும். பின் முரண் பட்டு நிற்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும், மூன்று குழுக்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒன்றை ஆதரிக்கும் கூட்டம், எதிர்க்கும் கூட்டம், எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டம் அவ்வப்போது தன் கட்சியை மாற்றிக்கொண்டே இருக்கும். 

இந்த பதிவுலகம் எனக்கு கொஞ்ச நாள்தான் அறிமுகம். ஆனால் இதில் இருந்து நான் அறிந்து கொண்டது ஏராளம். குறிப்பாக உலகப்படம் என்றால் என்ன என்று பதிவுலகம் வந்த பின்தான் அறிந்து கொண்டேன். என்னை பொறுத்தவரை உலகப்படம் என்றால் என்ன? என்று கேட்டால், உள்ளூர் படங்களை மட்டம் தட்டுவதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் என்றே சொல்வேன். பதிவுலகில் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் மனதில் தான்தான் இந்த உலகில் புதிய கருத்துக்கள் சொல்லவேண்டும். தான் சொல்வதுதான் சரி, என்கிற எண்ணம் இருக்கிறது. எவன் என்ன சொன்னாலும் இந்த நாட்டாமையின் தீர்ப்பே இறுதியானது என்று மார்தட்டுகிறார்கள். அவர்களின் நண்பர்களும் "ஐயோ நாங்கள் இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். ஆகவே அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது!!" என்று புரியாமலேயே வழிமொழிகிறார்கள். 

ஒரு பிரபலம் சொன்ன சில வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன். "ஒரு சில மனிதர்கள் மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்கள். யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் செய்வதே அவர்களின் வேலை. எல்லோரும் கொண்டாடும் ஒரு விஷயத்தை தூற்றினால் தன்னை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள் என்பது இவர்களின் அற்பமான ஒரு எதிர்பார்ப்பு. இவர்கள் செய்யும் எதிர்மறை விமர்சனங்களில் எந்த வித நல்ல நோக்கமும் கிடையாது." அந்த பிரபலத்தின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர் சொன்ன கருத்துக்களை பற்றி ஆராயாமல், அவர் யார், அவர் யோக்கியதை என்ன என்று பின்புலத்தை ஆராய கிளம்பி விடுவார்கள்.


சமீபத்தில் வெளிவந்த ராவணனுக்கும் இதே கதிதான். இந்த படத்துக்கு வந்த விமர்சனங்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு இயக்குனரை மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே எழுதப்பட்டவையாக தோன்றுகிறது. "எனக்கு பிடித்தமாதிரி படம் எடுக்காவிட்டால் விமர்சனம் செய்வேன்." என்கிறார்கள். உனக்கு என்ன பிடிக்கும்?, ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே! ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல.


சரி எந்த படம்தான் உனக்கு பிடிக்கும்? சத்தியமாக கிம் கி டுக் தமிழில் படம் எடுக்க போவதில்லை. உனக்குத்தான் உலகப்படம் புரியுமே? கொரிய மொழியிலேயே போய் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே? மணிரத்னம் பார்ப்பனராம். அய்யா! சாமி! சத்தியமாக மணிரத்னம் மாதிரி ஆட்களால் பார்ப்பனீயம் பரப்பப்படவில்லை. உங்களால் தான் பரப்பப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள். என் மனதார கூறுகிறேன், இதுவரை என்னுடம் பேசும் யாரையும் நான் வேறாக பார்த்ததில்லை. இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கலராக இருந்தால் கூட பார்ப்பனரா என்று எட்டி பார்க்க வைத்து விட்டீர்கள். 

ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கு படத்தில் இருப்பதாக நீங்கள் கூறும் நுண்ணரசியல் புரிவதில்லை. ஆனால் விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று நீங்களே அவனுக்கு கற்று கொடுக்கிறீர்கள். இதுதான் உண்மை. பம்பாய் படம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட படம் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதில் ஒரு சாராரை மட்டும் கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். ராவணன் படத்தில் முக்கிய விஷயத்தை பற்றி கூறாமல் ஒரு மூன்று பேரை மட்டும் வைத்து சப்பை கட்டு கட்டுகிறாராம் மணிரத்னம். பொதுவாக மணிரத்னம் படங்கள் பொதுவில் நடக்கும் ஒரு பிரச்சனை ஒரு தனிப்பட்ட குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்ற கதை அம்சத்தில்தான் இருக்கும். இதுவே நான் கண்டது. மற்றவை எதுவும் எனக்கு அவர் படத்தில் தெரிவதில்லை. ஆகவே மணிரத்னம் செய்யும் அயோக்கியத்தனங்களும் என் கண்ணில் படுவதில்லை. கண்ணில் பட்டால்தானே அவை என்னை பாதிக்கும்? நல்ல வேளை விக்ரம் பார்ப்பனராக இல்லாமல் போய்விட்டார். இல்லாவிட்டால் அவர்மீதும் சேற்றை வாரி இறைப்பீர்கள். இப்போது நீங்கள் வாரி இறைக்கும் சேறு சரியாக விக்ரம் மீது மட்டும் படாமல் கவனமாக மணிரத்னம் மீதும், அமிதாப் குடும்பம் மீதும், அம்பானி மீதும் மட்டும் படுமாறு இறைக்கிறீர்களே? இதன் காரணம் என்ன என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

படைப்பு என்பதற்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, மணிரத்னம் படைப்பாளியா என்று கேட்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடுமைகளை படத்தில் காட்டாமல் விட்டு விட்டார் என்று கதறுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது? அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு, அனுதாபத்தை பெற்று அதையே வியாபாரம் ஆக்கி கொண்டிருப்பதை தவிர? உங்களை ஒப்பிடுகையில் மணிரத்னம் செய்வது ஒன்றும் தவறில்லை. பெரிய பெரிய சமூக ஆர்வலர்களை உதாரணம் காட்டி இவர்கள் செய்வதுதான் உண்மையான படைப்பு என்று கூறுகிறீர்கள். ஒருவேளை மணிரத்னம் அப்படி எடுத்துவிட்டால் மட்டும் மெச்சி விடுவீர்களா? மணிரத்னம் அவர்களிடமிருந்து காப்பி அடிக்கிறார் என்று அதே பல்லவியை பாடுவீர்கள்.


இந்த படம் எடுப்பதற்கு அவர்கள் பட்ட சிரமம் என்ன என்று உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா? பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று மணிரத்னம் நினைத்திருந்தால் இப்படி மிகுந்த சிரமப்பட்டு படம் எடுக்க வேண்டியதில்லை. பல புதிய தொழில்நுட்பங்கள் மணிரத்னத்தால் தமிழுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. மணிரத்னம் வியாபாரிதான். யார் இல்லை என்று சொன்னது? ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி படம் எடுப்பவர்கள் மட்டும் வியாபாரிகள் இல்லையா? லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படம் பார்த்த போது இதே போல நம்முடைய இதிகாசங்களையும் ஆங்கிலப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மணிரத்னம் நினைத்திருந்தால் இதை ஆங்கிலத்தில் இன்னும் பிரமாண்டமாக எடுத்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மணிரத்னம் கடல் கடந்து தவறான செய்திகளை பரப்புகிறார் என்று புலம்பி இருப்பீர்கள். விமர்சனம் என்பது ஒரு படத்தில் இருக்கும் தவறுகளை சுட்டி காட்டுவதாக மட்டும் இருந்து விடக்கூடாது. புதுமையான விஷயங்களை பாராட்டும் விதமாகவும் இருக்கலாம். ஒரு படைப்பாளியின் படைப்புகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 18, 2010

ராவணன் என் பார்வையில்...


அதிக ஹிட்டுகள் வாங்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் புதியதாக ப்ளாக் எழுதுபவரா? உங்கள் வலைப்பக்கத்துக்கு அதிக ஹிட்டுகள் வேண்டுமா? என்ன செய்யலாம்? ஒன்றும் பிரச்சனை இல்லை. அந்தந்த சீசனுக்கு ஏற்றாற்போல் பதிவு போடவேண்டும் என்றில்லை. குறைந்த பட்சம் தலைப்பாவது அப்படி இருக்க வேண்டும். உதாரணமாக ராவணன் படம் வெளி ஆகி உள்ளது. உங்கள் தலைப்பில் ராவணன் என்று இருக்குமானால் அதிக ஹிட்டுகள் வரும். இதோ நான் செய்தது மாதிரி.

ராவணன் என் பார்வையில்...

இது கண்டிப்பாக ராவணன் பட விமர்சனம் அல்ல. இன்று மாலைதான் படம் பார்க்க போகிறேன். படம் பார்த்து விட்டு என் கருத்துக்களை எழுதுகிறேன். நீங்கள் கடுப்பாகாதீர்கள். வந்தது வந்து விட்டீர்கள் மிச்சத்தையும் படித்து விடுங்கள். 

ராமாயணத்தை பற்றி தமிழ் ஆர்வலர்கள் பல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒன்று ராமாயணம் திரித்து எழுதப்பட்டது. அதாவது ஆரிய ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என்று எழுதப்பட்டது. ஆரியனான ராமனை கதாநாயகனாக காட்ட வேண்டும் என்று எண்ணி ஒரு திராவிடனான ராவணனை கிட்டத்தட்ட ஒரு பெண் பித்தன் போலவே உருவாக படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனக்கும் இந்த சந்தேகம் வெகு நாட்களாகவே இருக்கிறது. அதாவது புராணங்களில் காட்டப்படும் பாத்திரங்களை இரண்டாக பிரிப்பார்கள். ஒன்று தேவர்கள் மற்றொன்று அசுரர்கள். தேவர்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் பிம்பம் என்னவாக இருக்கும்? நன்றாக மொழு மொழு என்று சேவிங் செய்த சிவப்பான, ஸ்லிம்மான ஒரு இளைஞன். 

அசுரன் என்றால் என்ன பிம்பம் தோன்றும்? ஆஜாகுபானுவான, கருப்பான, கடா மீசையுடன் கூடிய ஒரு ஆள். அதாவது தேவர்களின் உருவம் எல்லாம் வட இந்தியர்கள் போலவும், அசுரர்கள் எல்லாம் தென்னிந்தியர்கள் போலவும் உருவக படுத்தப்பட்டுள்ளது. புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே.


ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சூர்ப்பனகையை தண்டிக்க வேண்டும் என்றால் நிறைய வழி இருக்கிறது. அதற்கு அவளின் பெண்மையை அவமானப்படுத்துவதுதான் வழியா? ராமன் அல்லது இலக்குவன் யாராவது ஒருவரின் தங்கைக்கு இப்படி நேர்ந்தால் சும்மா இருப்பார்களா? ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். ராவணன் செய்த தவறு தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணை பலவந்தமாக இழுத்து வந்தது. மற்றபடி அவன் எந்த தவறும் செய்யவில்லை. 

என்னுடைய பாமர பார்வைக்கு ராவணன் ஒரு சுத்த வீரனாகத்தான் தெரிகிறான்...

ராவணன் - நல்லவன். 

ஒன்னும் நெனச்சுக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க....


முழுவதும் படிக்க >>

June 17, 2010

அஜித்குமார்...ஆர்ப்பாட்டலலிதா... கால்பந்து


வருகிறார் தல...


அஜித் தன்னுடைய ஐம்பதாவது படத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார் என்று அவரின் ரசிகர், ரசிகர் அல்லாதோர் என அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். இதற்கிடைய அவர் ஐம்பதாவது படம் தயாநிதி அழகிரிக்காக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், என்பது முதன்முதலில் வந்த செய்தி. இடையில் நடிகர் சங்க களேபரம், பிரச்சனை என்று கிளம்பி, போங்கடா என்று கார் ஓட்ட சென்று விட்டார். பின் "கண்டிப்பாக திரும்பி வருவேன் படப்பிடிப்பு அக்டோபரில்!" என்று ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

நடுவே கவுதம் வேறு, "நான் அஜித்தின் ஐம்பதாவது, ஐம்பத்தொன்றாவது படம் இரண்டையும் இயக்குகிறேன். எல்லாம் ரெடி, அஜித் வந்தால் படப்பிடிப்பு ஆரம்பம்." என்று பேட்டி கொடுத்தார். திடீரென ஒரு வதந்தி பரவியது. அதாவது அஜித்துக்கு ஏற்கனவே இந்த பேனரில் படம் நடிக்க இஷ்டம் இல்லை. மறுக்க முடியாமல் தான் ஒத்துகொண்டார். படப்பிடிப்பை இழுத்தடித்தால் கடுப்பாகி கழற்றி விட்டு விடுவார்கள் என்று இப்படி செய்கிறார் என்று. இப்போது அஜித் தன் கார் பந்தயத்தை பாதியில் விட்டு விட்டு, உடனடியாக திரும்பி வருகிறார் என்று ஒரு செய்தி கசிகிறது. எனக்கென்னமோ தயாரிப்பு தரப்பில் விடுக்கப்பட்ட "ஸ்பெஷல்" வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . எனக்கு முதலிலேயே க்ளவுட் நைன் பேனரில் அஜித் நடிப்பது ஒரு உறுத்தலாகவே இருந்தது. அஜித்துக்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பது, படத்தை கூவி கூவி விற்பது இதெல்லாம் ஒத்துவராது. ஆனால் அவற்றை எல்லாம் செய்தாக வேண்டும். இவற்றை தவிர்க்கவே அவர் இழுத்தடித்திருக்கலாம். மேலும் அஜித் வருவது இன்னும் மர்மமாகவே உள்ளது. அப்படியே வந்தாலும் படப்பிடிப்புக்குதான் வருகிறார் என்றும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.


காது கிழியுது... 

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஜோராக தொடங்கி விட்டன. வழக்கம்போல் உற்சாகத்துக்கு ஒன்றும் குறைவில்லை. விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் ஊதும் நீண்ட குழல் போன்ற ஒரு வாத்தியம் ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய வாத்தியமாம். அநியாயத்துக்கு ஊதி தள்ளுகிறார்கள். சத்தம் காதை கிழிக்கிறது. டிவியில் பார்க்கும் நமக்கே இப்படி என்றால், மைதானத்தில் விளையாடுபவர்களை நினைத்து பாருங்கள். விளையாடி முடிந்து ஒருநாள் முழுவதும் காதில் ங்கொய்... என்று கேட்டு கொண்டே இருக்கும். வீரர்கள் எல்லாம் கதறிக்கொண்டு புகார் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் பிபா ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டது.


தடுமாறும் பெரிய அணிகள்...

முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி அணிகள் எல்லாம் தடுமாற்றமாக ஆடுகின்றன. அதிரடியான பிரான்ஸ் அணி கோல் அடிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் முடியவில்லை. வலுவான கிரீஸ் அணி கொரியாவின் நண்டு பிடி ஸ்டைல் ஆட்டத்தில் மண்ணை கவ்வியது. நைஜீரியாவை துவைத்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டைனா கோல் அடிக்கவே கஷ்டப்பட்டது. ஒரு வழியாக ஒரே ஒரு கோல் போட்டு பெருமூச்சு விட்டது. இதே நிலைதான் பிரேசிலுக்கும். கொஞ்சம் கவனம் பிசகி இருந்தாலும் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட நிலைதான் பிரேசிலுக்கும் நடந்திருக்கும். இங்கிலாந்தின் கோல்கீப்பர் செய்த சிறு தவறால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இத்தனைக்கும் அமெரிக்கா அப்படி ஒன்றும் நன்றாக ஆடவில்லை. ஜெரார்ட், ரூனி ஏமாற்றம் அளித்தனர். நடப்பு சாம்பியன் இத்தாலியின் நிலை இன்னும் மோசம். ஒரு கட்டத்தில் தோல்வியை நெருங்கி கொண்டிருந்தது இத்தாலி. வெற்றி பெறவேண்டும் என்பதை விடுத்து ஒரு கோலாவது அடித்து டிரா செய்து விடவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது. அவர்கள் ஆட்டத்தில் ஒரு சிரத்தையே இல்லை. இத்தாலிக்கு மயிரிழையில் தப்பிய ஆபத்து ஸ்பெயினை பிடித்துக்கொண்டது. இதை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போர்சுகல் அணியின் ஆட்டம் படுமோசம்.

முதல் சுற்றில் நான் எதிர்பார்த்த ஜெர்மனி அணி நன்றாகவே செயல் பட்டது. பொதுவாகவே ஆஸ்திரேலியா அணி எனக்கு பிடிக்காது (கிரிக்கெட்டும் ஒரு காரணம்). ஜெர்மனி துவைத்து எடுத்து விட்டது. அவர்களின் ஆட்டத்தில் வழக்கமாக காணப்படும் ஒரு அசுர வேகம் வெளிப்பட்டது. தோல்வியை நெருங்கினால் ஆஸ்திரேலியா எடுக்கும் ஒரு ஆயுதம், வார்த்தை விளையாட்டு. ஜெர்மனி வீரர்களை நக்கல் செய்து வெறுப்பேற்ற தொடங்கினர். ஆனால் ஜெர்மனி அதற்கு அசரவில்லை. முதல் சுற்றுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து எந்த முடிவும் செய்து விட முடியாது. முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள் எல்லாம் புதிய எழுச்சியுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். 

பி.கு: பெரிய அணிகள் ஆடும் முக்கிய ஆட்டங்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி நடு இரவு பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. காலையில் கொட்டாவியை கட்டுப்படுத்த முடியவில்லை ...அஆவ்வ்வ்


ஆர்ப்பாட்டலலிதா... 


ஆளும் திமுக அரசு, இலவசங்கள், செம்மொழி மாநாடு, அரசு ஊழியர்களுக்கு ஐந்துநாள் விடுமுறை என்று அடித்து ஆடிக்கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது அதிமுக. அரசுக்கு எதிராக பிரச்னையை கிளப்ப எந்த ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்து திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக செய்யும் ஒரே காரியம் ஆர்ப்பாட்டம். ஒவ்வொரு ஊரிலும் சுழற்சி முறையில் "அம்மாவின் ஆணைக்கிணங்க" என்று பேனர் மாட்டிக்கொண்டு உப்புசப்பில்லாத விசயங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். "ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்லப்பா!!" என்று முணுமுணுத்துக்கொண்டு மக்களும் இலவச டிவி வாங்க கிளம்பி கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே மக்களை மயக்கும் வித்தையை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு. அடுத்த தேர்தலில் மைனாரிட்டி திமுக, மெஜாரிட்டி திமுக ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.


தூங்காதே தம்பி தூங்காதே..
இன்று காலை தினமலர் வெளியிட்ட செய்தி. என்னத்த சொல்ல? நீங்களே பாருங்கள்.
 நன்றி தினமலர்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 14, 2010

ஹீரோக்கள் செய்ய வேண்டியது...
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை ஆகியவை வெளியிடப்படுகிறது. ஒரு ஆண்டில் வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெற்றுவிட முடியாதுதான். ஆனால் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 130 படங்கள் வெளி ஆகி உள்ளன (இந்த எண்ணிக்கையும் குறைவுதான்). இதில் சில்வர் ஜூபிளி, அதாவது 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் எதுவுமே இல்லை. நூறு நாட்கள் ஓடிய படங்கள் என்றால், அயன், கந்தசாமி மற்றும் நாடோடிகள்தான். இந்த ஆண்டு இன்னும் மோசம். பாதி வருடம் கழிந்த பிறகும் ஹிட் என்று சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் படங்கள் ஐம்பது நாள் தாண்டினாலே பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அதனாலென்ன? வசூல்தான் இப்போதெல்லாம் கணக்கு என்று பார்த்தால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்பதே உண்மை. உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது, வெற்றி பட தயாரிப்பாளர் என்று பெயரைத்தவிர... அதே நிலைதான் கில்லியிலும்.


மறுபுறம் சிறிய பட்ஜெட், முற்றிலும் புதுமுகங்கள், துரோகம் டைப் படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மக்களை நம்பி எடுப்பதில்லை. அவர்களின் குறி சாட்டிலைட் சேனல்கள். எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் அது ஒரு நல்ல தொகைக்கு ஏதாவது ஒரு சேனலுக்கு விற்பனை ஆகி விடுகிறது. இதுவும் ஒரு வகை லாபம்தான். இது தயாரிப்பு நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் என் நண்பன் சொன்னது. ஆக பிரச்சனை பெரிய ஹீரோக்களுக்குதான். அவர்களை பொறுத்தவரை சினிமா ஒரு சூதாட்டம் போல ஆகிவிட்டது. ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதே மிதப்பில் நான்கைந்து படங்கள் மொக்கையாக கொடுப்பது. பின் ஏதாவது ஒரு வெற்றியை கொடுத்து, விட்டதை பிடிப்பது என்று போய்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். அவர்களும் இந்த சூதாட்டத்தில் சிக்கி கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஹீரோக்கள் என்ன செய்ய வேண்டும்?


ஒரு சராசரி ரசிகன் என்ன நினைக்கிறான் என்பதை ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புதிய பார்முலா வெற்றி பெறுகிறதென்றால் அந்த பார்முலா புதியதாக இருப்பதால்தான் என்பதை அவர்கள் உணரவேண்டும். ஹீரோக்கள் இது புரியாமல், அதே பார்முலாவை தானும் பின்பற்றுகிறார்கள். நம் மக்கள் மிகுந்த பாசம் உடையவர்கள். ஓட்டு போடுவதில் இருந்து, சினிமா பார்ப்பது வரை தன் ஆதர்ச நாயகனை விட்டு கொடுப்பதே இல்லை. எவ்வளவு திட்டினாலும் பின் அவனின் பட ரிலீசின் போது முதல் நாள் காட்சிக்கு முண்டி அடிப்பார்கள். இதன் காரணம் தன் நாயகன் இந்த படத்திலாவது நன்றாக நடித்து விட மாட்டானா? என்ற ஆதங்கம்தான்.அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் முடிந்து வரும்போது அடுத்த படம் வரட்டும். கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். வேட்டைக்காரன் படத்தில் கூட இரண்டுபேர், "சுறா வரட்டும். என்ன நடக்குதுன்னு பார்." என்று பேசிக்கொண்டே சென்றனர். இது தெரியாமல் என் ரசிகர்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்று தப்பு கணக்கு போட்டு நடித்தால் கொஞ்ச நாளில் கூட்டம் காணாமல் போய் விடும். இதை உணர்ந்து கொண்டதால்தான் எம்ஜியார் மற்றும் ரஜினி சிகரத்தை தொட முடிந்தது. 


கதை தேர்வு. இது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோக்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், கச்சேரி ஆரம்பம் பட இயக்குனர் பேசினார். படத்தின் கதையை பற்றி அவர் சொல்லும்போது இந்த கதையை மிகுந்த கவனத்தோடு, எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கினேன் என்று பொருள் படும்படி கூறினார். இதை கேட்டதும் நான் அதிர்ந்து விட்டேன். பலருக்கு தெரியுமோ தெரியாதோ கச்சேரி ஆரம்பம் படம், சித்தார்த், இலியானா நடித்த ஆட்டா என்ற தெலுங்கு படத்தின் அப்பட்டமான காப்பி. இத்தனைக்கும் அந்த படம் தெலுங்கில் சரியாக போகவில்லை. திருடிய ஒரு கதையை தன் கதை என்று எப்படி அந்த இயக்குனர் தைரியமாக சொல்கிறார் என்று தெரியவில்லை. எனவே ஹீரோக்கள் தனக்குரிய கதையை தேர்வு செய்யும்போது இது போல போலிகளை கண்டு பிடிக்க வேண்டும். சில ஹீரோக்கள் தன்னிடம் வரும் இயக்குனர்களிடமே சில பிற மொழி படங்களை சொல்லி அதே போல எடுங்கள் என்று சொல்வதும் நடக்கிறது. தன் தகுதிக்குரிய படங்கள் நடிப்பது சிறந்தது. அந்த காலத்தில் கதாநாயகனை சூப்பர்மேனாக சித்தரித்ததின் காரணம் மக்களின் அறியாமை. தற்போது அது செல்லாது. ஆகவே இயல்பான காட்சிகள் உள்ள படங்கள் நடிப்பது சிறந்தது. அப்படி நடித்தால் அது அவார்டு படமாகிவிடும் என்று நடிகர்கள் பயப்படுகிறார்கள். ஷோலே படம் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த அக்மார்க் கமர்சியல் படம். எந்த மிகையும் படத்தில் இருக்காது. தமிழ் என்று பிரசாந்த் நடித்த ஒரு படம் வந்தது. அந்த படம் பக்கா கமர்சியல் படம். ஆனால் எந்த ஒரு காட்சியிலும் ஹீரோவை சூப்பர் மேனாக காட்டி இருக்க மாட்டார் இயக்குனர். ஆகவே இந்த மாதிரி இயல்பான கமர்சியல் படங்களை ஹீரோக்கள் தேர்ந்தெடுக்கலாம்.


வறட்டு ஈகோவை விட்டொழிக்க வேண்டும். எந்த ஒரு மொழி திரைப்படத்திலும் இல்லாத ஒரு அம்சம் நம் தமிழ் சினிமாவில் உண்டு. தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ படங்கள் வருவது மிக அரிது. அப்படி வந்தாலும் அது இரண்டு வளரும் நாயகர்களின் படமாக இருக்கும் (நாணயம், பட்டியல்), இல்லை ஒரு மாஸ் ஹீரோ மற்றும் ஒரு மொக்கை ஹீரோ படமாக இருக்கும்(பிரண்ட்ஸ்). நான் பல ஆங்கில படங்கள் பார்க்கும் போது இதை தமிழில் எடுத்தால் இந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று கற்பனை செய்வேன். அது பெரும்பாலும் நடக்கவே நடக்காத காம்பினேசனாக இருக்கும். ராக், சேவிங் பிரைவேட் ரயன் போன்ற படங்களில் எண்ணற்ற ஹீரோக்கள் நடித்திருப்பார்கள். அதே போல ஹிந்தியிலும் இது நடக்கிறது. தமிழ் சினிமாவில் இது நடப்பதில்லை. இப்போது இருக்கும் நிலையில் பார்த்தால் நடக்கவே நடக்காது. மணிரத்னம் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய நாவல்களை திரைப்படமாக ஆக்கலாம். ஆனால் அதில் முன்னணி நாயகர்கள் எல்லோரும் நடிக்க வேண்டி இருக்கும். அது நடப்பது சந்தேகமே என்றார். ராவணனில் கூட விக்ரமுக்கு இணையாக பிரித்விராஜ்தான் நடிக்க வேண்டி உள்ளது.


படத்தின் கதை காட்சி அமைப்புகளில் நாயகர்களின் தலையீடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தன் அனுபவத்தால் ஹீரோக்கள் ஒரு சில கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லை, அவை ஆக்கப்பூர்வமாக இருக்கும் வரை. அதுவே படத்தின் செம்மைக்கு எமனாக ஆகி விடுகிறது. ஒரு நடிகனின் வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது. திரைக்கதையில் அட!! போட வைக்கும் காட்சிகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது தன் ஆதர்ச நாயகன் செய்யும்போது இன்னும் குஷி ஆகி விடுகிறார்கள். இது தெரியாமல், என் ரசிகர்கள் என்னை இப்படி பார்க்கத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து அவர்களை சோதிக்க கூடாது. எத்தனை ரசிகர்கள் இன்னொரு ஹீரோ நடித்த ஒரு படத்தில் தன் நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்று பொருத்தி பார்த்து ஏங்கி இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும். சக நடிகனை தாக்கி நடிப்பது தன் ரசிகனை வேண்டுமானால் குஷி படுத்தும். அதுகூட கொஞ்ச நாளைக்குதான். பின் அதுவே போரடித்து விடும். தற்போதுள்ள நிலையில் எல்லா நடிகருக்குமே இந்த மாதிரி மோதல் உள்ளது. சராசரி சினிமா ரசிகனுக்கு சம்பந்த பட்ட நடிகரின் மீது வெறுப்பையே வரவழைக்கிறது. இதுவும் ஒரு காரணம். 


தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். தற்போதுள்ள எந்த முன்னணி ஹீரோவுக்கும் அது சுத்தமாக இல்லை. சும்மா வெறுமனே வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டால் படம் வெற்றி பெற்று விடுமா? தோல்வி என்பது வீழ்ச்சியல்ல தன் தவறுகளை மக்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டும். இல்லை என்றால் கடையில் ஈ ஓட்ட வேண்டியதுதான். ஒரு பேட்டியில் பார்த்திபன் உள்ளே வெளியே என்ற படத்தை எடுத்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனி அப்படி ஒரு படம் எடுக்க மாட்டேன் என்று கூறினார். இது கூட அவர் சொந்த படம் என்பதால்தான். நம்மை சுற்றி நாலுபேர் வெற்றி, வெற்றி, தலைவர் வாழ்க... என்று கோஷம் போட்டால்தான் நாம் மாஸ் ஹீரோ என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இப்படி எண்ணியதன் விளைவே ரெட், புதிய கீதை மாதிரியான படங்கள். இப்போது கூட நண்பர்களுடன் பேசும்போது விஜய் ஏன் சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்று கேட்டிருக்கிறேன். அப்படி நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.


சம்பளம். மிகுந்த சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். ஒரு படத்தின் தயாரிப்பில் பெரும்பங்கு அதன் நாயகர்களுக்கே சம்பளமாக தரப்படுகிறது. தன் சம்பளத்தின் வரம்பை கதாநாயகர்கள் நிர்ணயிக்க வேண்டும். அப்படியில்லாமல் தயாரிப்பாளர் நிர்ணயிப்பதால்தான் பிரச்சினையே. ரேசில் ஜெயிக்கும் குதிரையின் மீது அதிக பணம் கட்டுவது போல ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஹீரோக்களின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சில தோல்விகளுக்கு பிறகு சம்பளத்தை குறைக்க அவர்களின் தன்மானம் தடுக்கிறது. எனவே தன் சம்பளத்தை நெறி படுத்த வேண்டும்.


பதிவின் நீளம் கருதி இத்தோடு முடித்து கொள்கிறேன். இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி: இந்த கட்டுரை எந்த ஒரு நடிகரையும் குறி வைத்து எழுதப்படவில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்ட உதாரணம் கூட அவ்வப்போது மனதில் தோன்றியதே..


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 11, 2010

சிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்

சிங்கம் திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் உலவிய ஒரு குறுந்தகவல் (SMS)  மிக பிரபலமானது. அது எனக்கும் வந்தது.  நண்பர் ஒருவர் உதவியோடு, என் கற்பனையையும் பயன்படுத்தி அந்த குறுந்தகவலை காட்சிப்படுத்தி இருக்கிறேன். 

Disclaimer: வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே... சீரியஸா எடுத்துக்காதீங்க...
பாக்குறியா?
:
:
:
பாக்குறியா?
:
:
:
சிங்கம்.....சிங்கம்.....நீ இப்போ...அசிங்கம்....

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 8, 2010

விஜய்யும் நானும் ஒன்னு...


விஜய்யும் நானும் ஒன்னு என்றவுடன், யார்டா இவன், இன்னொரு காமெடியன் என்று கிளம்பி விடாதீர்கள். எனக்கும் விஜய்க்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான். பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது எனது ஐம்பதாவது பதிவு. பதிவெழுத தொடங்கி சுமார் நான்கறை மாதங்கள் ஆகின்றன. எனக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கும் அளவிற்கு திறமை கிடையாது. ஏனோதானோவென்று ஒரு கோர்வை இல்லாமல் சொல்ல வந்த கருத்துக்களை தட்டு தடுமாறியே சொல்லி இருக்கிறேன். அதனை பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு படித்து புரிந்து கொண்ட வாசக நண்பர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து படித்து, பாராட்டி பின்னூட்டமிட்டு, விமர்சித்து, என் தவறுகளை சுட்டிக்காட்டிய சக பதிவுலக நண்பர்களுக்கும், என் போன்ற கத்துக்குட்டிகளை தட்டிக்கொடுத்து உத்வேகம் கொடுத்த மூத்த பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். பின் வழக்கம்போல் என் பதிவுகளுக்கு செய்திகளை வாரி வாரி வழங்கிய, முதல்வர் கலைஞர், டாக்டர் விஜய், ஐபிஎல், லலித் மோடி, ஆங்கில பட இயக்குனர் மற்றும் இன்ன பிற பிரபலங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என் பதிவில் பாலோயர்கள் லிங்கை இணைக்க முடியவில்லை. எனவே என்னை தொடர்பவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி யாராவது இருந்தால் உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்க்கிறேன். 

நண்பர் வரவழைத்த குபீர் சிரிப்பு. 


இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உண்மையா என்று தெரியாது. ஆனால் கேட்டவுடன் எனக்கு குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. நம் விஜய டி.ராஜேந்தர் அவர்கள் தன்னுடைய வீராசாமி என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம். வீராசாமி பாத்திரத்தில் கூட அவரே நடிக்க போகிறாராம். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். இது உண்மையா? இல்லை நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதா? என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது தெளிவுபடுத்துங்களேன்? 


ஒரு மீள் பதிவு. 

இதுவரை ஐம்பது பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு சில பதிவுகளே உருப்படியான பதிவுகளாக எனக்கு திருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. நான் முதன் முதலில் எழுதிய ஒரு பதிவு நான் என்ன இளிச்சவாயனா? இதன் இரண்டு பாகங்களையும் இங்கே மீள் பதிவு செய்கிறேன்...


நான் என்ன இளிச்சவாயனா? இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க? 

பொதுவா நம்மள யாராவது தெரிஞ்சே ஏமாத்துனா (நான் நம்ம அரசியல்வாதிகள சொல்லல) இந்த கேள்விய கேக்கலாம். ஆனா அப்போதெல்லாம் கேட்பது இல்லை . ஒரு சட்டத்த எல்லாரும் கடை பிடிக்கணும் அப்படின்னு சொல்லும்போது, யாருமே அத செய்யாம, நம்மை மட்டும் கடை பிடிக்க சொன்னா உடனே சொல்கிற வார்த்தை இது. அதாவது ஒருவன் நல்ல விசயங்களை செய்ய வேண்டுமானால் முதலில் அவனை சுற்றி உள்ள எல்லோரும் அதை செய்ய வேண்டும். முதலில் எவன் செய்கிறானோ அவனை அந்த சமூகமே இளிச்சவாயன் என்று அன்போடு அழைக்கும். இல்லை நாமே நம்மை அந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். இது நான் சொன்னது அல்ல. நம்ம மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வேதனைக்குரிய விஷயம். கண்டிப்பாக செய்ய வேண்டிய செயலுக்கே இப்படி ஒரு கேள்வி கேட்டு செய்யாமல் இருக்க வழி தேடும்போது, நாமே மனமுவந்து செய்ய வேண்டிய சில காரியங்களை எப்படி செய்ய முடியும்? சரி நம்மில் சிலருக்கு அப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன?

பட்டியலிடுவோம் நியாயமான காரணங்களை: 

1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு 
2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு. 
3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.
4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரியாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல 
5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது. 
6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது ? 
7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்?
8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க. 
9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.
10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.

இப்படி நமக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதும் கூட.மேற்கூறியவற்றுள் ஒரு காரணம் இருந்தால் கூட நம் செயலை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் மேற்கூறிய அனைத்தும் ஒருவனிடம் இருந்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தானே? ஆம் எர்னஸ்டோவிடம் இவை அனைத்தும் உண்டு. ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர். கை நெறைய சம்பளம், கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் "நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் " இந்த இடம் ஏன் இப்படி இருக்கு? இங்கு எவ்வாறு படிக்க முடியும்? நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்" என்று சொன்னாரே ஒழிய "எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்?" என்று கேட்கவில்லை.

எல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது. ஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம். பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை. ஒரு ஜென் குரு சொன்னது "நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்."

இன்று பல பேருடைய சட்டையை அலங்கரிப்பது இந்த படம்தான் ஆனால் இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் என்றே பலர் கருதுகின்றனர். உண்மையான ஒரு ஹீரோவின் உருவம் வெறும் அலங்காரத்திற்கு பயன் படுவது வேதனைக்குரியது. இவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள். திரைப்படங்களை மிஞ்சும் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி ஆக சித்தரிக்கப்பட்டு இன்றைய தலை முறையிடம் இருட்டடிக்கப்படுகிறார். சே குவேரா தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது, பெயர் புகழுக்காக அல்ல. மானிட குலத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் மட்டுமே. இனி ஒவ்வொரு முறையும் நான் என்ன இளிச்ச வாயனா? என்ற கேள்வி தோன்றும் போது, இவரின் முகம் உங்கள் கண் முன் தோன்றட்டும்.

நம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும். 


முதல் பாகத்தில் எழுதப்பட்டது பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே சொல்லியாகி விட்டது (நான் ஆண் என்பதால்). அதனால் இரண்டாம் பாகம் பொதுவாக் இருக்கும் என நம்புகிறேன். 

பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் மற்றும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு பொருளாதாரமும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். வெறும் கையை வைத்துக்கொண்டு முழம் போடா முடியுமா. முழம் போடலாம். பதிவும் போடலாம். வேறு ஒன்னும் செய்து விட முடியாது. சரிதானே. 


நமக்கு நல்ல மனது. பணமும் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் நாம் இருப்பது ஒரு வெளி நாடு. அங்கே ஏற்கனவே அரசியல் குழப்பங்கள் கோடி கட்டி பறக்கின்றன. எந்த பிடி கிடைக்கும் எப்படி உச்சாணி கொம்புக்கு தாவலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. சிக்கினால் போதும் தரை டிக்கெட் எல்லாம் தடி எடுக்கிற தண்டல் காரன் ஆகிவிடும். (அஜித் விஷயத்தில் நடந்த மாதிரி). போதும்டா சாமி. நல்லது செய்யப்போய் உதை பந்து ஆகி விடுவோம். சும்மா இருப்பதே மேல். பொம்பளதானே என்று ஆளாளுக்கு மட்டம் தட்டுகிறார்கள். எகத்தாளம் வேறு. என்ன செய்வது? பேசாமல் இப்போது இருப்பதே மேல். தேவை இல்லாமல் மாட்டிக்கொள்ள நான் என்ன இளிச்சவாயனா? (மன்னிக்கவும் பெண்பால் தெரியவில்லை).

சேவை செய்ய போகிறேன் என்று தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோது கையில் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது அக்னஸ்-இன் கைகளில். தன்னை காப்பாத்தி கொள்ளும் அளவுக்கு கூட பொருள், பின்புலம் இல்லாத நிலையில் அவரிடம் இருந்தது அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டும் தான். தனக்காக யாசகம் கேட்கவே தயங்கும் நேரத்தில் பிறருக்காக தெரு தெருவாக யாசகம் கேட்டு அலைந்தவர். யாசகம் கேட்ட கையில் காறி துப்பியவனை பார்த்து "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று சொல்லாமல் "இது எனக்கு போதும். என் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கள்." என்று கேட்டவர். அவரின் அன்புள்ளத்தை அறியாமல் தெரேசா மத மாற்றம் செய்கிறார் என்று சேற்றை வாரி இறைத்தபோதும், புத்தம் புதிய காரை போப் பரிசாக கொடுத்தபோதும், எந்தவித சலனமும் ஏற்படாமல் தன் சேவையே கண்ணாக இருந்தவர். 


வயதான சொந்த தாய் தந்தையரையே தொட்டு பராமரிக்க கூசும் மனிதர்கள் மத்தியில், தொழு நோயாளிகளை எந்த வித தயக்கமும் இல்லாமல் தொட்டு அரவணைத்தவர். தொழு நோயாளிகளை தொடும் போதெல்லாம் கடவுளையே தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சொல்வார். உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று உண்டென்றால் அது உதாசீனம்தான். அதுவும் நோயால் பீடிக்க படும் போது நம் மனம் நம்முடைய உறவுகளை நோக்கித்தான் செல்லும். அப்போது உதாசீனப்படுத்தப்பட்டால் அது நோயின் வேதனையை விட அதிகமாக வலிக்கும். இதை முழுமையாக உணர்ந்தவர். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் உண்டு. ஆனால் உலகத்தில் பிறந்த அனைவருக்கும் கிடைத்த ஒரே தாய் .....அன்னை தெரேசா.

இப்போதும் உலக அழகிகள் பட்டம் வெல்ல வேண்டுமா? அவர்கள் சொல்வது "எனக்கு பிடித்த பெண் தெரேசா தான் "
இப்படி பட்டம் வெல்ல மட்டுமே அவர் பெயர் பயன் படக்கூடாது. எல்லோராலும் தெரேசா ஆக முடியாது. ஆனால் எல்லோராலும் அன்பு செய்ய முடியும். அன்னை அவர்கள் சொன்னது "நீ மனிதர்களை பற்றி மதிப்பீடு செய்து கொண்டிருந்தால் ஒருக்காலும் அன்பு செய்ய உனக்கு வாய்ப்பிருக்காது"

அன்பு காட்டுவதற்கு பணம் தேவை இல்லை. உள்ளம் நிறைய கருணை இருந்தால் போதும். அன்பு செய்தால் எல்லோரும் தெரேசாவாகலாம் 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...