விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 10, 2010

விவஸ்தை கெட்ட விளம்பரங்கள்...


உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் தொலைகாட்சி பார்ப்பவராக இருந்தால், ஒரே ஒரு தடவை மட்டும், விளம்பர இடைவேளையில் சேனலை மாற்றாமல், அந்த விளம்பரங்களை உற்று கவனியுங்கள். பெரும்பாலான விளம்பரங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவில் அடக்கி விடலாம். குளிர்பானங்கள், ஆடைகள், சோப்பு, கிரீம்கள், வாசனை திரவியங்கள் அல்லது பாடி ஸ்பிரே, இன்சூரன்ஸ் அல்லது பென்சன், மதுபானங்கள் மற்றும் சிகரெட், செல்போன் மற்றும் அது சம்பந்தமானவைகள், வீடு உபயோக பொருட்கள் (குறிப்பாக டிவி, டிவிடி), கார் மற்றும் பைக். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்று கவனித்தீர்களா?


உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஓரளவு பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளில், அதிக இளைஞர்களை (15 முதல் 25 வயதுக்குள்) கொண்ட நாடுகள் சீனா மற்றும் இந்தியா. இதில் ஜனத்தொகை சதவீத அடிப்படையில் பார்த்தால் இந்தியாதான் முதலிடம் பிடிக்கும். அதாவது இந்தியாதான் உலகிலேயே மிக இளமையான நாடு. எனவே துடிப்பு, வீரம், ஆர்வம் எல்லாம் அதிகம் இருக்கும். அதனால்தான் பல நாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வேலை தேடி வருகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். 


இப்படி அதிக இளைஞர்களை கொண்டிருப்பதால் பன்னாட்டு பொருட்களும் வந்து விற்பனைக்கு குவியும். இவை அனைத்துமே இளைஞர்களை குறிவைத்தே சந்தை படுத்த படுகின்றன. விளம்பரங்களும் இளைஞர்களை குறிவைத்தே ஒளிபரப்ப படுகின்றன. விளம்பரம் என்பது ஒரு பொருளின் நிறைவான பண்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு சாதனம். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. என்ன காட்டினாலும் ஆவென்று வாயை பிளந்து கொண்டு வாங்கி விடும் முட்டாள்தனமான இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்று அந்த நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்து விட்டது. எனவே விற்கும் பொருளுக்கும் விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒளிபரப்ப படுகின்றன. அதே போல கீழ்த்தரமான எண்ணங்களை சித்தரிக்கும் விளம்பரங்களும் அதிகம். நான் கவனித்த சில மோசமான விளம்பரங்கள்....


அக்சய் குமார் தாவுகிறார், குதிக்கிறார், திடீரென ஒரு பெண்ணை கட்டி பிடிக்கிறார். அவளிடம் இருந்து குளிர்பானத்தை பறிக்கிறார். இன்னொரு விளம்பரம், ஒரு பெண்ணிடம் இருக்கும் குளிர் பானத்தை பறிப்பதற்காக, அவளை தடவி நிலைமறக்க செய்து பின் அந்த பானத்தை குடிக்கிறான் ஒருவன். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள், குளிர் பானத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஸ்பிரைட் குடிப்பவன் எல்லாம் அதிகம் பேசமாட்டான், என்று ஒரு விளம்பரம். இது இளைஞர்களின்(இது யங்கிஸ்தான் செல்லம்!) பானம் என்று ஒரு விளம்பரம். அதாவது இதை குடிக்காவிட்டால் இளைஞன் இல்லை என்று பொருள். மேலே சொன்ன ஏதாவது குளிர்பானத்துக்கு சம்பந்தமான விளம்பரமாக இருக்கிறதா? 


நேற்று ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு விளம்பரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கும் என்பதற்கு உதாரணம். பொதுவாக வாசனை திரவியங்கள் பாலுணர்வை தூண்டும் என்பது உண்மை. ஆனால் தன்னிலை மறந்து ஒழுக்கக்கேடான செயல்களை செய்யத்தூண்டும் என்பது மிகைப்படுத்தல். இந்த பாடி ஸ்ப்ரேயை பயன்படுத்தினால் எல்லா பெண்களும் உங்களுடன் செக்சுக்கு இணங்கி விடுவார்கள் என்கிற ரீதியில் ஆக்ஸ் விளம்பரப்படுத்தி வந்தது. இப்போது அதற்கு போட்டியாக சட்டாக் களமிறங்கி உள்ளது. பரிட்சையில் பிட் அடிக்கும் மாணவன் அருகில் சென்றவுடன் பெண் கண்காணிப்பாளர் அவன் வாசனையில் மயங்கி அவனுக்கு போன் நம்பர் கொடுப்பது போல ஒரு விளம்பரம். இது இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவன் தன் வீட்டு அறையில் சட்டாக் பாடி ஸ்பிரே போட்டு கொள்கிறான். எதிர்த்த ஜன்னலில் முதலிரவு முடிந்த ஒரு பெண். இவனை பார்த்தவுடன் தன் சேலையை அவிழ்ப்பது போல ஒரு விளம்பரம். அதாவது திருமணம் முடிந்து ஒரு நாளே ஆன பெண்ணை கூட கவிழ்த்து விடலாம். அம்மா பெண்குல தெய்வங்களே, உங்களின் குரல் இதற்கெல்லாம் ஏன் உயர்வதில்லை? ஒரு பெண்ணை இதைவிட அசிங்க படுத்த முடியுமா?
முதன் முதலில் தமிழகத்தில் செல்போன் விளம்பரம் செய்யப்பட்டபோது அதில் சொன்ன கருத்து, கையில் செல்போன் வைத்திருந்தால் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் தொழிலை கவனிக்கலாம் என்று கூறி விற்றார்கள். இப்போது தலைகீழ். காதலன் ஒருவன் தன் மடியில் படுத்திருக்கும் காதலிக்கு மெச்செஜ் அனுப்புகிறான். கேட்டால் இலவச மேச்செஜாம். வெட்டி அரட்டை அடியுங்கள், உங்கள் தந்தை திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாதீர்கள், ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், நீங்கள் இரவு முழுவதும் எந்த தொந்தரவும் இல்லாமல் பேசலாம், எஸ்டீடி வசதி உள்ள போனை தாயிடம் கொடுத்துவிட்டு, மகளிடம் கடலை போடலாம், இது போல ஏகப்பட்ட வசதிகள் நிறைந்த போன்கள்தான் இப்போது விளம்பரம் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் ஒரு விளம்பரம். மகளை சினிமாவுக்கு அழைத்து செல்ல அவள் நண்பன் வருவான். அவன் மீது சந்தேகம் அடைவாள் தாய். அவனோ தாயை கிறக்கமாக பார்த்து நாம சினிமா போலாமா டார்லிங் என்பான். தாயின் கண்களும் கிறங்கும். திடீரென சுதாரித்து தன் மகளை அவனுடன் அனுப்புவாள் தாய். இதற்கும் செல்போனுக்கும் சம்பந்தம் உண்டா?


இந்த கார் பைக் காரார்கள் செய்யும் அநியாயம் அதற்கும் மேல். அவர்கள் விக்கும் கார் மற்றும் பைக் தரையிலேயே செல்வதில்லை. ஒரு விளம்பரத்தில், எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு தீவுக்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட பைக் ஓட்டும் நம்மாள் மட்டும் கப்பல் கப்பலாக பைக்கிலேயே தாவி கரை ஏறி விடுவார் (விஜய் ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் போலும்), ஜெட் விமானத்தை விட வேகமாக போவது போல, பல பெரிய வாகனங்களை பார்த்ததும் வண்டி எருமை மாடுபோல மாறி உறுமுவது போல, உங்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்று அடைமொழியுடன் பைக் மற்றும் கார் விற்கிறார்கள். அதை வாங்கி அதே போல மின்னல் வேகத்தில் பறந்து, நடு ரோடில் மல்லாக்க படுத்து வாயை பிளக்கிறார்கள் நம் இளைஞர்கள். இவர்களுக்கு ஒரு அடிப்படை விசயமே தெரியவில்லை. நம்மூர் டிராபிக்கில் அவ்வளவு வேகமாக வண்டி ஓட்ட முடியுமா என்று யோசித்து பார்க்க வேண்டும். அவர்கள் தரும் தரத்தில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு மாளாது. அப்பன் காசுதானே என்று இன்றைய இளைய சமூகம் சிறிதும் கவலைப்படுவதில்லை. இப்படி விளம்பரங்களுக்கான எந்த ஒரு வரை முறையும் இல்லாமல் மனம் போன போக்கில் பொருட்களை சந்தை படுத்துகிறார்கள். நம் இளைஞர்களோ தாம் மூளை சலவை செய்யப்படுகிறோம், ஏமாற்ற படுகிறோம் என்பதை அறியாமல், பரிதாபமாக வீழ்ந்து விடுகின்றனர். கலாச்சார மறுமலர்ச்சி, நகைச்சுவை, இன்னோவேடிவ் ஐடியாக்கள் என்று மாய சேற்றில் சிக்கி விடுகிறார்கள். எனவே ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தரம் ஆகியவற்றை சோதிக்க வேண்டுமே தவிர அது ஏற்படுத்தும் கிளுகிளுப்பை அல்ல. விளம்பரங்களுக்கு இருக்கும் தணிக்கை முறையை இன்னும் கடுமையாக்க வேண்டும். இல்லையேல் பலவீனமடைந்த, முதுகெலும்பு இல்லாத, எளிதில் ஏமாற்றவல்ல இளைய சமுதாயத்தை அவை உருவாக்கி விடும்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...


14 comments:

குசும்பன் said...

நல்லாயிருக்கு இந்த பதிவு! ஆனால் அட போடவைக்கும் விளம்பரங்களும் அதிகமாகதான் வருகின்றன!

வால்பையன் said...

என்ன செய்யுறது, விஜய்கெல்லாம் ரசிகர் இருக்குற நாட்ல இப்படி தான் விளம்பரம் வரும்!

Anonymous said...

nalla pathiva

Anonymous said...

i have i doubt .indha ads ellam namma tamilnadu tv yil varudha.just wanted to know bcos i live abroad i dont have any tamil channels.even we dont have cable connection,en pillai thappichudhu

Bala said...

@ குசும்பன்

புத்திசாலித்தனமான விளம்பரங்கள் அந்த பொருளை அனேக மக்களிடம் கொண்டு சேர்க்கும். புத்திசாலித்தனம் என்று கேணத்தனமான விளம்பரங்கள் தான் கடுப்பேற்றுகின்றன...
வருகைக்கு நன்றி

@ வால்பையன்
:))
வருகைக்கு நன்றி

@பெயரில்லா
நம்ம தமிழ் டிவிலதான் வருது. நீங்கள் தப்பித்தீர்கள். நன்றி

ஜிஎஸ்ஆர் said...

நல்ல பதிவு திருந்துவார்களா?


என்றும் அன்புடன்
ஞான்சேகர்

பருப்பு (a) Phantom Mohan said...

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை...அதே போல சில நல்ல விளம்பரமும் வந்திருக்கு...

உதாரணம் பஜாஜ் ஸ்கூட்டர் பழைய விளம்பரம் ஒன்னு இந்திய பாரம்பரியத்தை சொல்லிருப்பாங்க...பாத்திருப்பிங்க கோலத்த அளிக்கம, ஒரு பெரியவரைப் பார்த்ததும் ஒரு பெண் ஆண் மேல் வைத்த கரங்களை எடுப்பது...

இன்னொன்னு ஐடியா சிம் கார்டு...அபிஷேக் ஸ்கூல் டீச்சர்..அது சூப்பர் செண்டிமெண்டல் விளம்பரம்...

ஜெய் said...

தேவையான பதிவு பாலா.. விளம்பரம் செய்யறவங்க கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டுருக்காங்க..

கோவி.கண்ணன் said...

//தாவது திருமணம் முடிந்து ஒரு நாளே ஆன பெண்ணை கூட கவிழ்த்து விடலாம். அம்மா பெண்குல தெய்வங்களே, உங்களின் குரல் இதற்கெல்லாம் ஏன் உயர்வதில்லை? ஒரு பெண்ணை இதைவிட அசிங்க படுத்த முடியுமா?//

அந்த கேடுகெட்ட விளம்பரத்தை நானும் பார்த்தேன். ஹூம்.

Bala said...

@ ஜிஎஸ்ஆர்

அவங்க திருந்த மாட்டாங்க. ஏன்னா நம்ம இளைஞர்கள் இவற்றை வரவேற்கிறார்கள். நாமதான் மாறிக்கனும் போலிருக்கு.
வருகைக்கு நன்றி..

@பருப்பு

நல்ல விளம்பரங்கள் வராமல் இல்லை. இப்போதெல்லாம் நல்ல விளம்பரங்கள் வருவது அரிதாகி விட்டது. நன்றி பருப்பு.

@ஜெய்
எங்க போய் முடியும்னுதான் தெரியல, வாங்க ஜெய்..

@ கோவி.கண்ணன்
அந்த விளம்பரத்த கிரிக்கெட் ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் ஒளிபரப்புகிறார்கள்.
வருகைக்கு நன்றி..

Raja said...

சரியான சாட்டையடி ! சில Toilet Cleaner நிறுவனங்கள்

தங்கள் விளம்பரங்களை உணவு உண்ணும் நேரங்களில்

இடுகின்றனர். ஐடியா நிறுவனம் தனது விளம்பரத்தில்

முதுகுக்கு கீழே taatoos ஒட்டியிருக்கும் மகளை

Very nice என தாய் (?) சொல்வது போல் அமைத்திருக்கிறது.

கொள்கைக்காக பதவியை துறந்த கிரண்பேடி ariel

விளம்பரத்தில் துணி துவைக்கிறார்.சில நிறுவனங்களோ,

ஹிந்தி விளம்பரத்தினை டப்பிங் செய்து வெளியிட்டு

நம் உசுரை வாங்கி விடுகின்றனர். (உ.ம் : Castrol, Dairymilk).

எல்லாம் காலத்தில் கொடுமையய்யா...

Bala said...

//முதுகுக்கு கீழே taatoos ஒட்டியிருக்கும் மகளை

இந்த விளம்பரத்தை பார்த்து எனக்கு பயங்கர கோபம் வந்தது.

வருகைக்கு நன்றி நண்பரே

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு..

//புத்திசாலித்தனமான விளம்பரங்கள் அந்த பொருளை அனேக மக்களிடம் கொண்டு சேர்க்கும். புத்திசாலித்தனம் என்று கேணத்தனமான விளம்பரங்கள் தான் கடுப்பேற்றுகின்றன...//

உங்கள் இந்த பதில் தான் எனது கருத்தும்..

ஹரிஸ் Harish said...

பாஸ் நீங்க விருதுநகரா? விருதுநகரில் எங்கு இருக்கிறீர்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...