விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 28, 2010

அக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...


அக்கிரமம், அநியாயம், கொடுமை இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால். நாளிதழில் நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகிறேன். 


என்று தணியும் இந்த மதிப்பெண் தாகம்? என்று கேட்க தோன்றுகிறது. நேற்று நாளிதழை புரட்டி கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி திடுக்கிட வைத்தது. பத்தாம் வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த மாணவி பெயில் ஆகவில்லை. முன்பெல்லாம் தேர்வில் தோல்வி அடைந்தால் மட்டுமே நேரும் இந்த கொடுமை இப்போது மதிப்பெண் குறைந்தாலே நடக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு யார் காரணம்? மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறமையை எடைபோடும் சமூகமா? தன் பிள்ளை பெறும் மதிப்பெண்தான் தன் கவுரவத்தை நிர்ணயிக்கிறது என்று மற்றவர் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்ணை சுட்டிக்காட்டியே வளர்க்கும் பெற்றோர்களா? ஒரு சின்ன தோல்வியை (சொல்லப்போனால் இது தோல்வியே அல்ல ) கூட ஏற்றுகொள்ளாத மனப்பக்குவத்துடன் வளரும் இளம் தலைமுறையினரா? எது எப்படியோ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுபவன்தான் சிறந்தவன், ஒழுக்க சீலன், வாழ்க்கையில் உருப்படுவான் போன்ற எண்ணங்களை குழந்தைகளிடம் விதைப்பதை இந்த சமூகம் என்று கை விடுகிறதோ அப்போதுதான் விடிவு காலம் வரும்.


தேனியில் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்த சுமார் பதினைந்து மாணவர்களின் மீதான பகையை மனதில் தேக்கி வைத்து, அவர்களின் ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்டில் பச்சை மையால் கிறுக்கி சரியான நேரத்தில் பழிதீர்த்துள்ளார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர். அவரிடம் மாணவர்கள் முறையிட்டதற்கு அப்படித்தான் செய்வேன், முடிந்ததை பார் என்று சொல்லி உள்ளார். தன் மீது அபாண்டமாக அந்த மாணவர்கள் பழி சுமத்தி இருந்தார்களானால் அதை நேர்மையான முறையில் எதிர்கொள்வதே முறை. அதை விட்டுவிட்டு இப்படி சின்ன புத்தியுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நாதாரிகளை எதை கொண்டு சாத்துவது? இந்த லட்சணத்தில் ஆசிரியப்பணி அறப்பணி என்று வாய் கிழிய பேச்சுவேறு. ஒரு ஆசிரியன் என்ற முறையில் இதற்கு நான் தலை குனிகிறேன். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவர் காட்டி உள்ள வழியை பார்த்தீர்களா? உங்களுக்கு கீழே உள்ள ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவனுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். அதை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. இதைத்தான் அந்த பன்னாடை இந்த மாணவர்களுக்கு கற்பித்து உள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விஷயம் பேமஸாக இருக்கும். இப்போது பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் ஐநூறு பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் வந்தாயிற்று. ஒரு கல்லூரி கட்டுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஏகப்பட்ட சம்பிரதாயங்கள், ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே அனுமதி அளிக்கப்படும். தற்போது சுமார் 67 பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அடிப்படை வசதி இல்லை என்று நோட்டிஸ் அனுப்ப போகிறார்களாம். அப்படியானால் முதலில் அனுமதி அளித்தபோது எல்லாம் சரியாக இருந்ததா? இல்லாவிடில் அனுமதி அளித்திருக்க கூடாதே? இதெல்லாம் இல்லை. இவர்களுக்கு இது ஒரு தொழில். சரியாக கவனிக்காமல் அனுமதி அளிப்பது. பின் இது நொட்டை அது நொள்ளை என்று சொல்லி காசு பார்ப்பது. இவர்கள் செய்யும் ஆய்வினை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு கல்லூரியில் ஒன்றுக்குமே உதவாத கணிப்பொறிகளை காட்டி அனுமதி பெற்றதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அது ஒரு அமைச்சரின் கல்லூரி. இப்படி எதுவுமே சரியில்லாமல் இயங்கும் கல்லூரிகள் இருநூற்றுக்கும் மேல். இவை எல்லாம் பெரிய கைகளின் கல்லூரி என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. என்னத்த சொல்ல? 

மகாராஷ்ட்ராவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசு வழங்க இருக்கும் வீடுகளுக்கு 65 எம்எல்ஏக்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒரு படத்தில் "அரசியல்வாதிகள் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை கூட விட்டு வைக்க மாட்டார்கள்" என்று ஒரு வசனம் வரும். அதுதான் நினைவுக்கு வருகிறது.


மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மூன்று மணிநேரமாக இருந்த மின்வெட்டு இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. முதலில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, மூன்று மணிநேரமாக அதிகரித்து பின் இரண்டு மணிநேரமாக ஆக்கியது, என்னவோ பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்திவிட்டு ஐம்பது காசு குறைப்பார்களே? அதே போலுள்ளது. இருந்தாலும் இது வரவேற்ப்புக்குரியதே . அதே போல பதிவு செய்து ஒருமாதம் கழித்து கிடைக்கும் சமையல் எரிவாயு நேற்று எங்கள் வீட்டில் இரண்டே நாளில் கிடைத்தது. இவையெல்லாம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும்கட்சி செய்யும் தாஜா என்றே நினைக்க தோன்றுகிறது. இனி வரும் நாட்களில் இதுமாதிரியான பல இன்ப அதிர்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.


வரும் தேர்தலில் மைனாரிட்டி திமுக அரசை தோற்கடித்து அமோக வெற்றிபெறுவோம் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார். எனக்கென்னவோ கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆட்களாக இழந்து இவர்தான் மைனாரிட்டி பொதுசெயலாளராக ஆகி விடுவாரோ என்று தோன்றுகிறது. மேலும் அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் நமக்கு தேவை இல்லை. பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் என்று கூறி உள்ளார். இவர் ஆட்சியில் இருந்தபோது ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு புதிய தலைமை செயலகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இவருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியம் தெரியவில்லையா? ஒரு வேளை ஆட்சிக்கு வந்து தன் பங்குக்கு இவரும் ஒரு தலைமை செயலகம் கட்டினால் என்ன ஆகும்? இவர்கள் ஆட்சி செய்தால் அங்கே, அவர்கள் ஆட்சிசெய்தால் இங்கே. கேட்கவே நன்றாக இருக்கிறது. இதற்கு பேசாமல் இருவரும் தங்கள் கட்சி அலுவலகத்திலேயே அவையை நடத்தலாம். மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாகிறது பாருங்கள்...


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களையும் தயங்காம பதிவு பண்ணுங்க...


5 comments:

Yoganathan.N said...

//ஒரு ஆசிரியன் என்ற முறையில்//

நீங்கள் ஒரு ஆசிரியர் என்பது இப்போது தான் எனக்கு தெரியும். நீங்கள் அலசியுள்ள அத்தனை விஷயங்களுக்கும் ஒத்துப் போகிறேன்.

ஒரு சந்தேகம். மின் உற்பத்தி என்பது மனிதனினால் உருவாக்கப்படுவது தானே... அது எப்படி இதில் தடை ஏற்படலாம்? மின்சாரம் ஒன்றும் இயற்கை வளத்திலிருந்தோ அல்லது தீர்ந்து போகும் வளங்களிலிருந்தோ உற்பத்தி செய்வதில்லையே. அப்புறம் எப்படி தமிழ் நாட்டில் மட்டும் இந்த பிரச்சனை? விளங்கவில்லை.

Bala said...

@Yoganathan

ஆசிரியர் என்றவுடன், வேஷ்டியுடன், தலைப்பாகையுடன் கற்பனை செய்து விடாதீர்கள்.
குறைவான அளவு மின் உற்பத்தி செய்வதனால் எல்லோருக்கும் வழங்க முடியாத நிலை. இதில் பல விஷயங்கள் உள்ளன.

Unknown said...

MK will now start thinking how to bring his vast family into the business of electricity production as probably this is the one field their family has not enetered in full swing. He need not worry about investment as he has major portion of the public money swindled through 2 g auction.
As far as the opposition leader she is happy till such time she is not disturbed with corruption cases.
Poor tamils. They have no other go.

sorry. I dont know the procedure for typing the comments in tamil. if you can guide from next letter i shall type in tamil.

Bala said...

// jeyachandran

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

தமிழில் டைப் செய்ய பல வழிகள் உள்ளன. நான் பின்பற்றுவதை சொல்கிறேன்.

http://www.google.com/transliterate/

இந்த தளத்துக்கு சென்று இடது மூலையில் தமிழ் என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின் அப்படியே தமிழில் டைப் செய்யுங்கள். உதாரணமாக
நன்றி வணக்கம் என்பதற்கு nandri vanakkam என்று டைப் செய்யுங்கள். பின் காப்பி பேஸ்ட் செய்யுங்கள். முதலில் குழப்பமாக இருக்கும். பின் பழகி விடும்.
நன்றி

jeyachandran s said...

அன்பு நண்பரே
தங்கள் உதவிக்கு நன்றி
தமிழில் கருத்துக்களை பதிவு செய்யும் முறை அறிந்து கொண்டேன்.
மிக்க மகிழ்ச்சி. மீண்டும் நன்றி. ஜெயச்சந்திரன் .எஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...