இந்த பதிவுலகத்தில் யாருக்கும் தன் சொந்த கருத்துக்களை சொல்லவும் உறுதிப்படுத்தவும் உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு அதை விமர்சனம் செய்யவும் உரிமை இருக்கிறது. ஆனால் பிறரின் மனதை புண்படுத்தாமல் சொல்வதில்தான் அதன் வெற்றியே அடங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவை எழுதுகிறேன். பதிவை படித்துவிட்டு "வந்துட்டாண்டா அதிபுத்திசாலி!!", என்று யாரும் கிளம்பி விடவேண்டாம். தவறு இருந்தால் தயங்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுலகம் என்றில்லாமல் எங்கு பார்த்தாலும் இருக்கும் ஒரு விஷயம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது. கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சமுதாய ஏற்றதாழ்வுகள் சார்ந்த கம்யுனிச சிந்தனையாகவே இருக்கின்றன. நான் கம்யுனிசத்தை முழுமையாக படித்தவன் இல்லை. அதே போல கடவுளையும். இரண்டிலும் எனக்கு சில புரிதல்கள் உள்ளன. அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நண்பர் ஒருவர் கம்யுனிசம் மீது மிகுந்த பற்று உடையவர். அவரிடம் "நண்பரே, கேரள அரசின் பாரபட்சம் உங்களுக்கு தெரியவில்லையா? வங்காளம் இந்நேரம் சொர்க்கம் ஆகி இருக்க வேண்டுமே? சீனாவில் ஊழல் நடக்கவில்லையா?" இது மாதிரியான கேள்விகள் கேட்டால் அவர் சொல்லும் பதில், "அவர்கள் எல்லாம் போலி கம்யுனிஸ்டுகள். சந்தர்ப்பவாதிகள். இவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்பதால் கம்யுனிசம் எப்படி தவறானதாக, போலியாக இருக்க முடியும்?" என்று கேட்டார். அன்பே சிவத்தில் கமல் சொல்வது போல "காதல் மாதிரி கம்யுனிசமும் ஒரு பீலிங் அல்லது உணர்வு. அது கட்சி அல்ல, சங்கம் அல்ல. சக மனிதனிடம் இருக்கவேண்டிய அன்பின் வெளிப்பாடே கம்யுனிசம். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியே கம்யுனிசம்." என்றும் கூறினார். "சரி அப்படியென்றால் நிறைய பேர் அதனை எதிர்க்கிறார்களே?" என்று கேட்டதற்கு, "கம்யுனிசத்தை யாருக்கும் புகட்ட முடியாது. அது புரிதலில் வரும். உணர்தலில் வரும். இன்று எதிர்ப்பவர்கள் எல்லாம் அரைகுறையாக கம்யுனிசத்தை படித்து தவறாக புரிந்து கொண்டவர்கள்." என்றும் விளக்கம் கூறினார். இவர் மட்டுமல்ல இன்று கம்யுனிச தத்துவம் பேசும் யாரை கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.
இது இவர்களின் நம்பிக்கை அல்லது புரிதல். சரி இதே பதிலை நான் கடவுள் நம்பிக்கையை வைத்து சொன்னால் கேட்பார்களா? மாட்டார்கள். நான் சொல்கிறேன், கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி ஒரு சில பேர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதால் கடவுளே இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம்? அவர்கள் எல்லாம் போலி மதவாதிகள், போலி சாமியார்கள். அவர்களை வைத்து கடவுள்களை மதிப்பிடுவது தவறு. கம்யுனிசம் போல கடவுளும் ஒரு பீலிங்தான். அதாவது உணர்வு. கடவுளை, கடவுளின் இருப்பை ஒருவருக்கு புகட்ட முடியாது. அவரால் மட்டுமே உணர முடியும். மதம் என்பது கட்சி அல்ல, சங்கம் அல்ல. கடவுளை அடைவதற்கான வழி. அதனை தவறாக புரிந்து கொண்டு மனிதன் அடித்துக்கொண்டால் அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்? இன்று கடவுளை எதிர்ப்பவர்கள் எல்லாம் அரைகுறையான விஷயங்களை படித்து புரிந்து கொண்டு எதிர்ப்பவர்கள். இன துவேசம் காரணமாக ஒருவன் நல்ல விஷயங்களே சொன்னாலும் ஏற்க மறுப்பவர்கள்.
உதாரணமாக "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!" இது கீதையில் சொன்னது. உங்களை பொறுத்தவரை பார்ப்பனன் கட்டி விட்ட கதை.நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மூலதனம் புத்தகத்தையே யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்பவர்கள் யார் எழுதினார்கள் (அவர்களை பொறுத்தவரை) என்றே தெரியாத, எப்போது எழுதப்பட்டது என்றும் தெரியாத ஒரு புத்தகத்தின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியம் இருப்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்? நன்றாக என்பதற்கு பரிபூர்ணமாக என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதே போல "கடமையை செய் பலனை எதிர்பாராதே!", என்று சொல்வது மக்களின் எதிர்பார்ப்புகளை நீர்த்து போக செய்யும் முதலாளித்துவ வார்த்தையாம். கடமையை செய்யும்போது அதில் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் வேலை சரியாக நடக்காது. என்பதாகவும் அர்த்தம் கொள்ளலாமே? இல்லை மற்றவர்களுக்கு நன்மை செய்வது நம் கடமை அதற்கான பலனை எதிர்பார்க்க கூடாது என்றும் கொள்ளலாமே?
சரி விதி என்பது சோம்பேறிகளின் வார்த்தை என்பதும் வாதமாக இருக்கிறது. விதி என்பது யாரோ ஒருவர் நாம் பிறக்கும்போதே எழுதி வைத்தது என்று சொன்னால் சிரிப்பாகத்தான் வரும். இதை அப்படி பிடித்து கொண்டு வாதம் செய்வது தவறானது. விஞ்ஞானம் சொல்வது போல ஒரு பொருள் ஒரு நிலையில் இருக்கும்போது அதன் சூழல், அதனுள் இருக்கும் ஆற்றல், போன்றவற்றினால் அதன் பயணம் பாதிக்கப்படும். வெளியில் இருந்து செலுத்தப்படும் ஆற்றல் எல்லாமே அதன் உள்ளிருப்பை பொறுத்தே எதிர்வினையை உருவாக்கும். இதுதான் விதி.
சரி உங்கள் கடவுள்தான் சகலகலா வல்லவர் ஆயிற்றே அவர் நினைத்தால் நடக்காதது எதுவுமே கிடையாதே பின் ஏன் மனிதருக்குள் இந்த ஏற்றதாழ்வுகள்? என்று கேள்வி கேட்கிறார்கள். இதை பற்றி சொல்வதானால் பெரிய ஆராய்ச்சியே நடத்த வேண்டும். அந்த அளவுக்கு இதனுள் பல நுட்பமான, குழப்பமான விஷயங்கள் அடங்கி உள்ளன. அவற்றை பற்றி விளக்கி கூறும் அளவுக்கு இன்னும் நான் அறிவை பெறவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இதை சொன்னது விஞ்ஞானம். இது கடவுளுக்கும்தான். இதன்படியே உலகத்தில் இருப்பவர்களுக்கு நன்மையையும் தீமையும் நடக்கிறது. பிறப்பு, இறப்பு இவற்றுக்கு அப்பாற்பட்டு சில செயல்கள் நடக்கின்றன. நாம் பார்ப்பது, வசிப்பது எல்லாமே ஒரு மாயைதான். சிரிப்பாக இருக்கின்றதா? இதே கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் Matrix, Avataar போன்ற படங்கள். உடல் ஒரு இடத்தில், எண்ணங்கள் ஒரு இடத்தில். ஒரு மாய உலகத்தில் அனைவரும் அடிமையாக இருப்பது போல காட்டி இருப்பார்கள். சமுதாய ஏற்றதாழ்வுகள் என்பது பணம், தங்கம் போன்றவற்றுக்கு மதிப்பு கொடுத்து மனிதனாகவே உருவாக்கி கொண்டது.
"உலகத்தை கடவுள் படைத்தார் என்றால் அவரை யார் படைத்தது?" என்றும் கேள்வி கேட்கிறார்கள். கடவுள் என்று பெயர் வைத்து அவர், இவர் என்றெல்லாம் சொல்வது ஒரு வசதிக்குத்தான். அவருக்கு உருவமும் கிடையாது, முதல் முடிவும் கிடையாது. அண்டவெளியை போல Infinity. நமக்கு மேலே ஒரு சக்தி என்று சொல்வது தலைக்கு மேலோ வானத்திலோ அல்ல. நம்மை விட உயர்வான என்று பொருள் கொள்ள வேண்டும். கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் எல்லாமே, தியானத்தின் உன்னதத்தை உணர்த்த அமைக்கப்பட்டவை. அவை வழிபாட்டு கூடங்கள். அவற்றுக்கு நகையோ, பணமோ, பொருளோ காணிக்கையாக அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்வது மனிதனின் மூடத்தனம். பழங்கால விரதங்கள், சடங்குகள் எல்லாவற்றிலும் ஒருவித அறிவியல் உண்மை அடங்கி இருந்ததும், காலப்போக்கில் அவை மாறி வெறும் சம்பிரதாயங்களாகி விட்டதும் கவலைக்குரியது. இருந்தாலும் அவற்றை செய்வதால் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறதென்றால் தவறில்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை போரடித்துவிடும். போராட்டத்தை போக்க கடவுளை கேட்க தேவை இல்லை. போராட தேவையான சக்தியை கடவுளிடம் கேட்கலாம்.
நம் செயல்கள், வாழ்க்கை போன்றவற்றை பற்றி விவேகானந்தர் எழுதி உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்ற புத்தகங்களை படியுங்கள். இது இந்து மத நூலல்ல அவர்கள் மட்டும் படிப்பதற்கு. இது வேதம் அல்ல பார்ப்பனர்கள் மட்டும் படிப்பதற்கு. ஒரு ஆராய்ச்சிக்காக வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் முன்கூட்டியே எதையும் முடிவு செய்து கொள்ளாமல் படியுங்கள். இவை எல்லாமே ஒரு பாமரனுக்கு தேவை இல்லை. அவனை பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு. எந்த ஆதரவும் இல்லாத ஒருவனும் இந்த உலகில் இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அந்த பிடிப்புதான். பகுத்தறிவு என்று அதிலும் கை வைத்து விடாதீர்கள்.
ஐன்ஸ்டீன் சொன்னது.."ஒரு சிறு குழந்தை மிகப்பெரிய நூலகத்தினுள் நுழையும் போது அதன் கண்முன்னே லட்சக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி இருப்பதை பார்க்க முடியும். அவற்றை யார் எழுதியது, ஏன் எழுதினார்கள் என்று கண்டு பிடிக்கும் திறன் அதற்கில்லை. முழுவதும் படிப்பதும் சாத்தியம் இல்லாதது. கடவுள் என்னும் நூலகத்தின் முன்னால் உலகின் மிகப்பெரிய அறிவாளி மனிதனும் இந்த குழந்தையை போலத்தான்".
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
5 comments:
இறைசக்தியைப் பற்றி நமக்கு சரியாக புரிந்து கொள்ளும் அறிவு நமக்கு வளரவேண்டுமே தவிர இல்லையென்று கண்மூடித்தனமாக மறுப்பது சரியல்லதான்.
உடனே சிலைவணக்க்த்திற்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக பேசக்கூடாது எனப் பொருள் அல்ல.
இவைதான் ஆன்மீகம் என்றால் எதிர்க்கலாம், இவையும் ஆன்மீகம் என்றால் ஏற்கலாம், ஏன், எப்படி என சிந்திக்கலாம்.
நல்ல பகிர்வு வாழ்த்துகள்
மிக நன்றாக வந்திருக்கிறது உங்கள்
பதிவு பாலா. கடவுள் காற்று மாதிரிதான்
அவரவர்கள் உணர்ந்து தான்
தெரிந்துகொள்ளமுடியும்.
வாதங்களின் வழியாக சென்று அடைய
முடியாத இடம் கடவுள்.
மறுப்பாளர்களை விட்டுத்தள்ளுங்கள்.
எனக்கும் மார்க்ஸையும் பிடிக்கிறது.
கிருஷ்ணனையும் பிடிக்கிறது.
கம்யூனிசத்தை வைத்தே கம்மியூன்ச்டுகளுக்கு இறைநம்பிக்கையை நியாயப்படுத்திய உங்கள் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுக்கள்
@ நிகழ்காலத்தில்...
மிக சரியாக சொன்னீர்கள். தாங்கள் வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@ santhanakrishnan
//எனக்கும் மார்க்ஸையும் பிடிக்கிறது.
கிருஷ்ணனையும் பிடிக்கிறது.
எனக்கும்தான்
நன்றி நண்பரே...
@ எப்பூடி..
வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
கடவுளைப்பற்றிய சந்தேகங்கள் யாருக்கும் இல்லாமல் இருக்கமுடியாது...கடவுள் என்ற கான்செப்ட்..மனிதன் உருவாக்கியதுதான்..இயற்க்கைத்தான் எல்லாம்..
உங்கள் கட்டுரையும் விளக்கமும் தெளிவாக படிக்கத்தூண்டும் விதமாக அமைந்துள்ளது..நிறைய பேசலாம் போல இருக்கிறது...
என்னைப்பொருத்த வரையில் தன்னம்பிக்கை இல்லாதவனே கடவுளை நம்புகிறான்..அவனுக்கு ஒரு பிடிப்பிற்க்கு ஒரு கொம்பு தேவைப்படுகிறது.இல்லையேல் அந்தரத்தில் இருப்பதாக ஒரு பய உணர்வு..தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நம்பிக்கையே ஒரு பிடிப்பு ஆயுதம்..
உங்களின் மெயில் அட்ரஸ் என்ன சார்...
Post a Comment