விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 20, 2010

திரை விமர்சனம் எழுதுவது எப்படி?


பதிவுலகத்தில் எழுதப்படாத சட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒன்று ஏதாவது புது படம் ஒன்று வெளியாகி விட்டால் அதற்கு கண்டிப்பாக விமர்சனம் எழுதவேண்டும். அந்த படத்தை பார்த்து விட்டாலும், நாம் பார்த்த படம் நல்ல இருக்கா? இல்லையா? என்று குழம்பி பதிவுலகத்தில் வரும் விமர்சனங்களை படித்து அது நல்ல படமா? இல்லை மொக்கை படமா? என்று முடிவு செய்து கொள்பவர்கள் பலர். ஒரு சிலர் தங்களின் நாயகன் நடித்த படங்களை எப்படி விமர்சனம் செய்திருக்கிறார்கள்? என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அவர்களின் நோக்கம் படம் சூப்பர் என்று விமர்சனம் வரவேண்டும். இல்லாவிட்டால் கேவலமாக பின்னூட்டம் இட்டுவிட்டு வேறு ஏதாவது தளத்தில் அந்த படத்தை பாராட்டி இருக்கிறார்களா? என்று தேட சென்று விடுவார்கள். 

எது எப்படியோ திரை விமர்சனம் என்பது ஒரு பதிவருக்கு இன்றியமையாதது ஆகி விட்டது. ஆனால் என் போன்ற பெரும்பாலான பதிவர்களுக்கு இதுதான் பெரிய பிரச்சனை. படத்தை பார்க்கும்போது ஒரு விமர்சன பார்வையோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எந்தமாதிரியான பார்வை என்று தெரியவில்லை. அப்புறம் எப்படி படத்தை பற்றி விமர்சனம் எழுதுவது? சரி பல விமர்சனங்களை படித்தவன் என்ற முறையிலும், சில நண்பர்கள் கூறிய கருத்தை வைத்தும் ஒரு திரை விமர்சனம் என்றால் எப்படி எழுத வேண்டும் என்று நான் கற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... (பதிவு கொஞ்சம் நீளமானதுதான்....)

திரை விமர்சனம் எழுத நினைப்பவர்கள் முதலில் திட்டுகளுக்கு பயப்படக்கூடாது. எப்படி எழுதினாலும் பின்னூட்டத்தில் ரைடு கிடைக்கபோவது நிச்சயம். ஆகவே அதனை கண்டு கொள்ளக்கூடாது.

திரைவிமர்சனங்கள் ஐந்து வகைப்படும். ஒவ்வொன்றாக பார்க்கலாம்...


முதலாவது அலசல் விமர்சனம். 

நம்ம யூத் பதிவர் கேபிள் அண்ணன் டைப் விமர்சனம். இந்த வகை விமர்சனங்கள் எழுத நிறைய பொறுமை வேண்டும். அதாவது கொடுத்த காசை கணக்கு பார்க்க கூடாது. இவ்வகை விமர்சனம் எழுத வேண்டுமானால் இரண்டுதடவை படம் பார்க்க வேண்டும். முதல்தடவை பதிவு எழுத, இரண்டாவது தடவை படத்தை ரசிக்க. இதற்கு குறைந்தபட்சம் பத்து டெக்னிகல் வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். லாங் ஷாட், மிட்ஷாட், டிம்லைட், மைல்ட் ரீரெகார்டிங் போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே பயன்படுத்த வேண்டும். உதாரணமாக "காதலி தன காதலனை முதன் முதலாக சந்திக்கும் காட்சி டிம்லைட்டில் கவிதை போல சொல்லி இருப்பார்கள். இதற்கு ஏதுவாக மைல்ட் ரீரேகார்டிங்கில் ரகுமான் பின்னி இருப்பார்." என்பது மாதிரியான வார்த்தைகள் அதிகம் இடம்பெறவேண்டும். இவற்றை படம் பார்க்கும் போது யாரும் செக்பண்ணுவதில்லை. ஆதலால் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள். மேலும் திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைகிறது, தூக்கி நிறுத்துகிறது என்று பொத்தாம் பொதுவாகவும் எழுதலாம். விமர்சனத்தில் ஆங்காங்கே படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் என் கூட வேலைபார்த்த ஒருவரின் வாழ்கையில் என்று ஒரு கதையை இரண்டொரு பத்திகளுக்கு எழுதி நிரப்பலாம். விமர்சன முடிவில் பஞ்ச லைன் வைத்து எழுதுவது சிறப்பு. உதாரணம் வேட்டைக்காரன் : ஹன்டிங் தி பீப்புள். முக்கியமான விஷயம் இம்மாதிரி விமர்சனங்களை படம் வெளிவந்து இரண்டு நாளைக்குள் எழுதி விடவேண்டும். ஏனென்றால் அதற்குள் நிறையபேர் பார்த்து விடுவார்கள். இவ்வகை விமர்சனங்கள் ஸ்பாய்ளர்களாக இருப்பதால் படம் பார்க்கும் முன்னரே மக்கள் இதனை எதிர்பார்ப்பார்கள்.


இரண்டாவது வகை மாற்றுப்பார்வை விமர்சனம்


இவ்வகை விமர்சனங்களுக்கு கடைசியில் பன்ச்லைன் கொடுக்க தேவை இல்லை. மாறாக பன்ச்லைனையே தலைப்பாக வைக்கலாம். உதாரணமாக ராவணன் - மணிரத்னத்தின் துவைக்காத கோவணம். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட தேவை இல்லை. நீங்கள் பார்த்த படம் நன்றாக இருந்தாலும் நல்லாவே இல்லை என்று சொல்லவேண்டும். அதற்கு காரணமாக பார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரேபியா மொழியில் வெளிவந்த அல் இஸகா கில்மா என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று அடித்து விடவேண்டும். யாரும் இந்த படத்தை பார்த்திருக்க போவதில்லை. படத்தில் வரும் வசனங்களை பற்றி கவலைப்பட தேவை இல்லை. "இது மதுரை பாஷையே அல்ல!!" என்று கூறவேண்டும். மதுரை பாஷைக்கு எதுவும் இலக்கணம் இல்லாததால் யாரும் கேள்வி கேட்கமுடியாது. முதல் காட்சியில் நாயகன் ஜிப் போடாமல் வருவார். இரண்டாவது காட்சியில் ஜிப் போட்டிருக்கும் என்று உங்கள் லாஜிக் கண்டுபிடிக்கும் திறமையை உபயோகிக்க வேண்டும். கண்டிப்பாக படத்தை தயாரித்தவர் ஒரு முதலாளியாகத்தான் இருப்பார். ஆகவே, "இயக்குனர் முதலாளிகளுக்கு குடைபிடிக்கிறார். இவரெல்லாம் ஒரு படைப்பாளியா?" என்று ஆங்காங்கே கேள்வி எழுப்ப வேண்டும். கதைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தெலுங்கானா? காவிரி பிரச்சனை பற்றி ஒரு சில பத்திகள் எழுதி, "இவற்றிற்கு இயக்குனர் என்ன சொல்ல போகிறார்?" என்று கேள்வி கேட்க வேண்டும். இம்மாதிரி விமர்சனங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் வரும் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. நிறைய பின்னூட்டங்கள் உங்களை திட்டி வரும். கவலைப்படாதீர்கள். அப்படி திட்டுபவர்களுக்கு ஆணாதிக்கவாதி, பார்ப்பனன் என்று பட்டம் கொடுங்கள். திரும்பி பார்க்காமல் ஓடி விடுவார்கள். 


மூன்றாவது வகை சன் டிவி விமர்சனம்

ஒண்ணுமே இல்லாத ஒரு படத்தை ஆஸ்கார் ரேஞ்சுக்கு எழுதுவது, பொதுவாக இந்த மாதிரி விமர்சனங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களால் எழுதப்படுவது. இதற்கு பெரிய சினிமா ஞானம் எல்லாம் தேவை இல்லை. உங்களுக்கு ஒரு நடிகரை பிடித்திருக்கிறதா அவர் என்ன செய்தாலும் பாராட்டி எழுதுங்கள். உதாரணமாக, "இந்த படம் ஆப்பிரிக்காவில் அபார வெற்றி! ரசிகர் உற்சாகம்!!" என்று எழுதி சில காட்டுவாசிகள் ஆடும் வீடியோ இணைப்பை கொடுக்கலாம். மேலும், "நேற்று நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள் எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது, கண்டிப்பாக வெற்றி." என்று ரீல் விடலாம். தியேட்டர் ஈயாடினாலும் வேறு எதாவது கூட்டத்தில் எடுத்த படத்தை போட்டு கூட்டம் அலை மோதுகிறது என்று எழுதலாம். கவனியுங்கள் இவை எதுவுமே படத்துக்கு சம்பந்தம் இல்லாதவை. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? "எனக்கு படம் பிடித்திருக்கிறது என் போன்றவர்களுக்கு பிடிக்கும், உங்களை யார் பார்க்க சொன்னது?" என்று அந்தர் பல்டி அடிக்கலாம். படத்தை பற்றி எழுதவேண்டுமானால், அனல் பறக்கிறது, சூடு பிடிக்கிறது, துள்ளலாக இருக்கிறது என்று அடித்துவிடலாம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த படம்தான் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் என்று தைரியமாக சொல்லுங்கள். யாரும் எழுதி வைத்துக்கொள்ள போவதில்லை. பின் நீங்கள் உங்கள் நண்பர்கள் நாலுபேருடன் சேர்ந்து படத்தை பற்றி நல்லவிதமாக பின்னூட்டம் இட்டுக்கொள்ளுங்கள். இவ்வகை விமர்சனத்துக்கு ஓட்டுகள் அதிகமாக விழும். ஏனென்றால் படம் நல்லா இல்லனாலும் ரசிகன் ஒட்டு போடுவான். 


நாலாவது வகை ஆப்பு விமர்சனம் 

இது ஒரு குறிப்பிட்ட நடிகரின் எதிர் போட்டியாளரின் ரசிகர்களால் எழுதப்படுவது. உங்கள் குறிக்கோள் ஒன்றுதான். படத்தை நாரடிக்கவேண்டும். பின் விமர்சன பார்வை எதற்கு? அந்த நடிகரை பற்றி முதலில் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அப்படியே எழுதுங்கள். ஐயோ, அம்மா, கொலைவெறி முதலிய வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துங்கள். பின் படத்தில் வரும் காட்சிகளை இஷ்டம்போல் கலாய்த்து விடுங்கள். "அம்மா செண்டிமெண்டா தாங்க முடியலடா சாமி, நடனம் இவருக்கு நடனம் ஒரு கேடா?, கிளைமாக்ஸ் உச்சகட்ட காமெடி." என்று எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். பின்னூட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால் விவாதத்தை திசை திருப்பி விடலாம். பிரச்சனை இல்லை. இந்த வகை விமர்சனத்துக்கும் ஓட்டுகள் அதிகம் விழும். பின்ன? தனக்கு பிடிக்காத ஒரு நடிகரை பற்றி கலாய்த்து எழுதினால் ஒட்டு போடாமல் என்ன செய்வார்கள்? 


கடைசி வகை தியேட்டர் விமர்சனம்...

இது லேட்டஸ்ட் டிரெண்டு...
இது ரொம்ப எளிய வகை விமர்சனம். இதற்கு படம் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. படம் ஓடும்போது தூங்கினாலும் பிரச்சனை இல்லை. முதலில் ஊரிலேயே எந்த மொக்கை தியேட்டரில் அந்த படம் ஓடுகிறது என்று பார்த்து அங்கு செல்லுங்கள். பின் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் தொடங்கி, டிக்கெட் கவுன்டர், பாத்ரூம், பழைய போஸ்டர்கள், சீட், சவுண்ட் சிஸ்டம் பற்றி விலாவாரியாக எழுதுங்கள். கிண்டலாக எழுதுவது மிக முக்கியம். பின் உங்கள் அருகில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். உதாரணமாக பக்கத்து சீட்டில் இருப்பவர் பான்பராக்கை துப்பிக்கொண்டே இருந்தார், ஒரு ஜோடி ஓரமாக அமர்ந்திருந்தார்கள், இன்டர்வெல்லில் ஒரு குடிமகன் வாந்தி எடுத்தார் என்று எல்லாவற்றையும் எழுதலாம். இடையிடையே தியேட்டரில் சவுண்டு விட்டது, கமென்ட் அடித்தது என்று நீங்களாக கற்பனை செய்து எழுதலாம். இந்த வகை விமர்சனம் பாதுகாப்பானது. அனைவரும் ரசிக்ககூடியது.

என்ன நண்பர்களே சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி என்று கற்றுகொண்டீர்களா? இனி நீங்களே மேலே கூறியவற்றுள் உங்களுக்கு எந்த வகை விமர்சனம் வசதியானது என்று பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள். ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் மாற்றக்கூடாது. அதே மாதிரிதான் எல்லா விமர்சனங்களையும் எழுத வேண்டும். 

டிஸ்க்: மேலே உள்ள விமர்சனங்களின் வகைகளை படிக்கும்போது சக பதிவர் பெயர் ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல...


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

14 comments:

Anonymous said...

charu nivetha better than u .

எப்பூடி.. said...

நீங்க என்னத்தை சொன்னாலும் நாங்க இந்த கம்மியூநிசம், ஆணாதிக்கம், முதலாளித்துவம், பார்ப்பனியம் என்பவற்றால் ஆன கண்ணாடியால் பார்த்து மொள்ளமாரித்தனமாகவும் முடிச்சவுக்கித்தனமாக்கவும்தான் எழுதுவோம் :-)

santhanakrishnan said...

இப்படியும் எழுதலாம் தானே..
நீங்கள் சொன்ன மாதிரியே
படித்தவுடன் சிலர் பெயர்
ஞாபகம் வரத்தான் செய்கிறது.

அவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

Bala said...

@பெயரில்லா

சும்மா சொன்னா எப்படி? எந்த அடிப்படையில்னு சொன்னா நல்லா இருக்கும்.
பெயர் சொல்றதுல தப்பில்லையே?

@எப்பூடி..

:) :)

@ santhanakrishnan

மறுபடியும் சொல்றேன் அதுக்கு நான் பொறுப்பல்ல
:))

Kiruthigan said...

விமர்சனத்துக்கு ஒரு நிதர்சனம்...
தடாலடி..

Bala said...

நன்றி Cool Boy

"ராஜா" said...

// ராவணன் - மணிரத்னத்தின் துவைக்காத கோவணம்.

சூப்பர் தலைப்பா இருக்கே ... நான் இப்பவே பதிவு எழுதி வச்சிடுறேன்... எந்திரன் - ஷங்கரின் துவைக்காத கோவணம்

Bala said...

நண்பரே... ஒவ்வொரு ரஜினி படம் வரும் முன்னரும், வந்த பின்னரும் இதுபோல பல கருத்துரைகள் வரும். ஆனால் அவற்றை எல்லாம் வீழ்த்தி படம் வெற்றி பெரும் என்பது பலமுறை நிரூபிக்க பட்டுள்ளது.

அப்படியே எழுதினாலும் இந்த பஞ்ச லைன் தான் சரியாக இருக்கும்.
எந்திரன் - சங்கரின் கிழிந்து போன காஸ்ட்லி கோமணம்..

Yoganathan.N said...

நல்ல அலசல். உங்களது ஆதங்கம் நன்றாகவே புலப்படுகிறது. பல பதிவர்கள் கண் முன்னே வந்து போனார்கள், தவிர்க்க முடியவில்லை.
நண்பரே, ஒரு சின்ன உதவி. இந்த ஐந்து பிரிவுகளில், நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்று சொல்லிவிடுங்கள். ஹிஹி

smart said...

உங்களுக்கு ஒரே பட்டம் 'முதலாளித்துவ கைக்கூலி' அப்படின்னு சொல்லிபுட்டு மாற்றுப்பார்வை விமர்சனம் எழுதப் போய்விடுவார்கள் நமது பகுத்தறிவு சிகாமணிகள்.

DR said...

//--டிஸ்க்: மேலே உள்ள விமர்சனங்களின் வகைகளை படிக்கும்போது சக பதிவர் பெயர் ஏதாவது ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.//-- சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே-ப்பு.

//--நம்ம யூத் பதிவர் கேபிள் அண்ணன் டைப் விமர்சனம்--//

அவர்களுக்கு என்று ஒரு தனி பாணி...

ரிஷபன்Meena said...

நல்ல நகைச்சுவை. ரசித்துப் படிக்க முடிந்தது.

”க்ளிஷே” ஜாலிப் பட்டாசு, சரவெடி, போன்ற அருஞ்சொற்களையும் ஆங்காங்கே சேர்த்துக்கிடனும்.

Ramesh said...

பயங்கரமான அலசலா இருக்கே.. சூப்பருங்க..

Anonymous said...

சூப்பர் பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...