வணக்கம் மக்களே. எல்லோருக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள். லேட்டா சொல்றேன்னு நினைக்காதீங்க. புத்தாண்டு வாழ்த்தை அந்த ஆண்டில் எல்லா நாளும் சொல்லலாம்தானே?(என்ன ஒரு லாஜிக்?) தவிர பதிவுலகத்தில் அப்பப்ப சில சந்தேகங்களை கிளப்பி விட்டுக்கொண்டே இருப்பார்கள். சமீபத்தில், "ஆங்கில புத்தாண்டு கொண்டாடுகிறாயே நீயெல்லாம் தமிழனா?" என சந்தேகத்தை கிளப்பி விட்டு விட்டார்கள். ஏற்கனவே தமிழ் புத்தாண்டு என்றைக்கு வருகிறது என்று குழப்பத்தில் இருந்து வருகிறேன். ஆகவே உக்காந்து யோசித்து என்னைக்கு கொண்டாடினா என்ன? ஒண்ணும் உருப்படியா செய்வது கிடையாது. ஆகவே ஒரு மனிதன் எத்தனை புத்தாண்டுகள் வேண்டுமானாலும் கொண்டாடலாம். என்ற முடிவுக்கு வந்து விட்டேன். So Happy New Year Folks... சென்ற ஆண்டில் கண்டு கொள்ளாமல் இருந்து இந்த ஆண்டு என் மனதில் இடம் பிடித்த இருவர் படங்களை பதிவின் கடைசியில் காண்க. இருவர் பெயரும் ஒன்றே.
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் இவன் ரொம்ப நல்லவன்
வேற யார். தமிழர்கள்தான். மறுபடி தமிழர்களை கேணையர்களாக்க ரெடியாகிவிட்டது சன்டிவி. கடந்தவாரம் பாதியை ஒளிபரப்பாமல் டீலில் விட்ட நட்சத்திர கலைவிழாவை மறுபடியும் இந்தவாரம் தொடரப்போகிறார்களாம். ஆகவே இந்தவாரமும் முழுவதும் உட்கார்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால் நான் தமிழனாச்சே.
உங்கம்மா, அக்கா போட்டோவை கொடு...
இந்த வசனம் ஞாபகம் இருக்கா? புவனேசுவரி விவகாரத்தில் நடிகைகளின் பெயர்களை வெளியிட்டதற்காக நடிகர் சங்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் பேசிய ஆவேச பேச்சு. அதாவது தேவை இல்லாமல் சினிமா கலைஞர்களை குறிப்பாக நடிகைகளை இழிவு படுத்தும் விதமாக செய்திகள் படங்களை வெளியிடும் பத்திரிக்கைகளை சாடும் விதமாக இவர் அவ்வாறு கொந்தளித்து பேசினார். சில நாட்களுக்கு முன் ஆடுகளம் ஆடியோ வெளியீடு சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தெரியாத்தனமாக பத்மஸ்ரீ விவேக் அவர்கள் பேசிய பேச்சை கேட்டு தொலைத்தேன். இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற காரணம் புரிந்தது. கதாநாயகி டெய்ஸியை பார்த்து "உன்னை வெள்ளாவியில வச்சு வெளுத்தாகளா?, வெயிலே படாம வளத்தாகளா' என்ற பாடல் வரியை மேற்கோள் காட்டினார். முத்தாய்ப்பாக, "டெய்ஸி அவர்களின் அழகை பற்றி சொல்ல வேண்டுமானால் சூப்பர் பிகர்!!" என்று சொல்லியபடி ரசிகர்களை பார்த்து சிரித்தார். அதாவது "சினிமா என்பது என் வீடு. அதில் வரும் நாயகிகள் எல்லாம் என் பொண்டாட்டி மாதிரி. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், ஆனால் மற்றவர்கள் எல்லோரும் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்!" என்பது மாதிரிதானே இருக்கிறது. யார் யாருக்கோ பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். முதலில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரியார் திருவாளர் விவேக்குக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
சரியான சவாலும் சம்மட்டி அடியும்.
2010 இறுதியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. அதுவும் வெகு நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வாயிலாக. இந்திய தென்னாபிரிக்க அணிகள் ஒரு புறமும், ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மறுபுறமும் ஆடி வருகின்றன. இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகள் உண்மையிலேயே இரு அணிகளுக்கும் சரியான சவால். இருவரும் விடாக்கண்டன், கொடாக்கண்டனாக விளையாடி வருகிறார்கள். தர வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதினால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டி உள்ளார்கள். இதோ இந்த பதிவை நான் எழுதி கொண்டிருக்கும் நாள்தான் கடைசி போட்டியின் கடைசி தினம். இன்று வரை கோப்பை யாருக்கு என்று முடிவு செய்ய முடியாத ஒரு இழுபறி நிலை. சரியான சவால்தான்
மறுபுறம் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை சம்மட்டியாக அடித்து விட்டது. இன்று வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் மீதம் இருக்கும் நிலையில், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே பத்திரிக்கைகள் ரிக்கி பாண்டிங்கை திட்டி தீர்த்து விட்டன. இறுதிப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி என்றால் அதை அவர்களால் தாங்கி கொள்ளவே முடியாது. உலகக்கோப்பை நெருங்கி வரும் நேரத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் ஒரு பெரும் இடியாக இறங்கி உள்ளது ஆஷஸ் தோல்வி.
என் பதிவின் எதிரொலி
பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் ஒரு செய்தி வெளியிட்டு, அது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுத்தால் உடனே, "தினமலர் செய்தி எதிரொலி, தூர்வாறப்பட்ட குளம்!!" என்று செய்தி வெளியிடுவார்கள். நான் சில நாட்களுக்கு முன் விருதுநகரை பற்றி பதிவு ஒன்று எழுதி இருந்தேன். தற்போது விருதுநகரை சுற்றி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆகவே சொல்கிறேன், "என் பதிவின் எதிரொலி, சரிசெய்யப்படும் சாலைகள்!!", "யாருப்பா அது, பொய் பொய்ன்னு கத்துறது? என்னது தேர்தல் வர்றதாலதான் ரோடு போடுராங்களா?, என் பதிவால் இல்லையா? செல்லாது செல்லாது. ஒத்துக்க முடியாது. என் பதிவ பாத்துட்டுதான் ரோடு போடுறாங்க." என்னங்க நான் சொல்றது கரெக்ட்தானே?
நான் என்ன சொல்ல வர்றேன்னா
உங்களுக்கு நம்ப முடியாத இரண்டு விஷயங்கள் சொல்கிறேன்.
விஷயம் #1
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதல் இரண்டு ரேங்குக்குள் வந்துவிடுவேன். ஏதாவது ஒரு தேர்வில் மூன்றாவது ரேங்க் வந்துவிட்டால் ஒரு வாரத்துக்கு சாப்பாடு இறங்காது. பிறகு பத்தாவது, பிளஸ்டூ படிக்கும்போது, ரேங்க் முக்கியமல்ல மார்க்குத்தான் முக்கியம் என்று உயிரைக்கொடுத்து படித்தேன். அந்த கால கட்டத்தில் ரேங்கும் வரவில்லை, மார்க்கும் வரவில்லை. கல்லூரியில் படிக்கும்போது, ரேங்கும் ஒரு பொருட்டில்லை, மார்க்கையும் மதித்தது கிடையாது. முடிந்தவரை படிப்பது, தெரிந்தவரை எழுதுவது. அவ்வளவுதான். ரேங்கும் மார்க்கும், கூடவே மெடலும் தேடி வந்தது.
விஷயம் #2
பதிவுலகத்தில் எழுத தொடங்கும் முன் ஒரு சில நண்பர்களின் வலைப்பக்கத்தை பார்க்கும்போது ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு நன்றி, 50 வோட்டுக்கு நன்றி என்றெல்லாம் படிக்கும்போது, நாமும் இப்படி ஹிட்டுக்கள், வோட்டுகள் வாங்க வேண்டும் என்று விரும்பியதுண்டு. பிறகு அப்படி வோட்டு விழாத போது மிகவும் வருந்தி இருக்கிறேன். நூறு பதிவு எழுதுவதற்குள் ஒரு லட்சம் ஹிட்டுகள் வாங்கி விடவேண்டும் என்று கூட முடிவு கட்டி இருந்தேன். (இது 102 ஆவது பதிவு, ஹிட்டுகள் 44 ஆயிரத்தி சொச்சம்). பிறகு இரண்டையும் விட்டு தள்ளிவிட்டேன். அப்புறம் என்ன டாஷுக்கு ஹிட் கவுண்டரும், தமிழிஷ் ஓட்டு பட்டையும் என்று கேட்கிறீர்களா? எல்லாம் ஒரு கணக்குக்குத்தான்.
உண்மை ஒன்று சொல்கிறேன். நம்ப மிக கஷ்டமாக இருக்கும். இதுவரை தமிழ்மணம் வலைத்தளத்துக்கு இரண்டே தடவைதான் சென்றிருக்கிறேன். முதன் முதலாக பதிவு எழுத தொடங்கியபோது என் பதிவை இணைக்க முயற்சி செய்தபோது ஒருமுறை(இணைந்து விட்டதா என்று இன்று வரை திரியவில்லை). சென்ற மாதம் ஓட்டு போட சொல்லி ஒரு மெயில் வந்தது. அப்போது ஒருமுறை. ஓட்டு வாங்கும் நண்பர்களையோ, முதல் இருபது இடத்தில் இருக்கும் திறமையாளர்களையோ நான் குறை சொல்லவில்லை. ஹிட்டுக்காகவும், வோட்டுக்காகவும், முக்கியமாக ரேங்குக்காகவும் எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை தேவை அற்றது. நாம் மன நிறைவுக்காக எழுதி அது பலருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக ரேங்க் நிச்சயம். ரேங்க் கிடைக்கவில்லையே என்றால் கூட கவலை இல்லை. நாம்தான் ரேங்குக்கு எழுதவில்லையே?
ஒரு பஞ்ச் டயலாக் "மார்க்குக்காக மட்டுமே படிக்கிற படிப்பும், ஹிட்டுக்காக மட்டுமே எழுதுற பதிவும், எதுக்கும் உதவப்போறதில்லை.
சாப்பாட்டுக்கடை
எல்லா உணவு வகைகளும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு கடை உள்ளது.
டீ - 1 ரூபாய் ,
சாப்பாடு - 2 ரூபாய்,
தாலி மீல்ஸ் - சைவம் - 12.50 ரூபாய்
அசைவம் - 22 ரூபாய்
சப்பாத்தி - 1 ரூபாய்
தோசை - 4 ரூபாய்
பிரியாணி - 8 ரூபாய்
கோழி மசாலா - 24 ரூபாய்
மீன் - 17 ரூபாய்
மிகவும் குறைவான வருமானம் உள்ள ஏழைகளுக்காவே இயங்கும் இந்த கேண்டின் இருக்கும் இடம், இந்தியா பாராளுமன்ற வளாகம். இதனால் பயன் பெரும் ஏழைகள் வேறு யாருமல்ல. நம் எம்பிக்கள்தான்.
2011 இல் என் மனதில் இடம்பிடித்த அந்த இரண்டு பேர்
|
இரண்டு அமலாக்கள்
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
|
முழுவதும் படிக்க >>