விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 11, 2013

விஸ்வரூபம் போன்ற படங்களை என்ன செய்யலாம்?

; நான் விஸ்வரூபம் படத்தை பார்த்து விட்டேன். "படம் வெளிநாடுகளில் பட்டையை கிளப்பி வருகிறது", என்று எல்லோரும் கூறினாலும் எங்கள் ஊரில் தியேட்டர்கள் காத்தாடுகிறது என்பதே உண்மை.(ஒருவேளை வெளிநாடுகளில் படத்தின் நிலைமை என்னவென்று நமக்கு தெரியாது என்பதால் புருடா விடுகிறார்களோ?) என் உறவினர் ஒருவர் தீவிர கமல் பக்தர். அவரிடம் அவரது நண்பர் வழக்கமாக ஒவ்வொரு கமல் படம் வெளிவரும்போது கேட்கும் அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்டார். "உங்க ஆளுக்கு புரியுர மாதிரி படம் எடுக்கவே தெரியாதா?" என்பதுதான் அவர் வழக்கமாக கேட்கும் கேள்வி. பூஜா குமார் கமலை பின்தொடர்ந்து ஒரு டிடெக்டிவை ஏன் அனுப்புகிறார் என்பதையே நான் அரைமணி நேரம் அவருக்கு(கமல் பக்தருக்கு) விளக்கினேன். இது இப்படி இருக்க, தாலிபான், ஒசாமா, எஃப்‌பி‌ஐ, சீசியம் என்று நான் இறங்க அவர் சொன்னது, "கிழிஞ்சது போ.... ". இதுவே ஒரு C சென்டர் ரசிகனின் ஒற்றைவரி விமர்சனம்.&nbsp


சரி அதை விடுங்கள். "அதென்னமோ இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்களே? அதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?" என்று கூறுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நான் ஒரு கருத்தை சொல்லப்போக, கடந்த ஒரு மாதகாலமாக பல தளங்களில் வந்த அதே செட்ஆஃப் கருத்துகளை மறுபடியும் ஒரு முறை என் தளத்தில் வந்து பகிருவார்கள். இசுலாமிய கருத்துரையாளர்களுக்கு மாலேகான், மோடி, காஷ்மீர் என்று ஒரு அஜெண்டா. இந்து கருத்துரையாளர்களுக்கு, நபி, பர்தா, மலாலா என்று இன்னொரு அஜெண்டா. இவை இரண்டையும் தாண்டி இருவருமே வெளி வர விரும்ப மாட்டார்கள். ஆகவே அதை பற்றி பேசி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம். 


ஒரு இந்துவாக என் கருத்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லா இசுலாமியர்களும், தீவிரவாதிகளோ, கொடிய எண்ணம் கொண்டவர்களோ அல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, எல்லா இந்துக்களும், இந்துத்வாவாதிகளோ, ஆர்‌எஸ்‌எஸ்காரர்களோ, இசுலாமியர்களை விரோதிகளாக எண்ணுபவர்களோ அல்ல. தங்களது கடவுள்கள் குழுவில் அல்லா சாமியையும், ஏசப்பாவையும்  சேர்த்துக் கொண்டவர்களே அநேகம். சரி இதைப்பற்றி இன்னொரு நாள் இன்னும் விலாவாரியாக எழுதுகிறேன். 

நான் இந்த பதிவில் சொல்லவேண்டியதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று விட்டேன். பார்த்தீர்களா? இப்படித்தான் எல்லா விவாதங்களும் சென்று விடுகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் என்ற ஒரு படம் இல்லை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை சொன்னவுடன் உங்களுக்கு ஒரு உருவம் ஞாபகத்துக்கு வரும். அது நம் தமிழ் சினிமா உருவாக்கி வைத்துள்ள பிம்பம்.  அதையே இங்கே பட்டியலிட போகிறேன்.  இதே மேட்டரை பலபேர் ஏற்கனவே பட்டியலிட்டு விட்டாலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக. 

படத்தில் வரும் பாத்திரங்களை சில பிரிவுகளாக பிரித்துள்ளேன்.

துணை பாத்திரங்கள் 

தீவிரவாதி - பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லீம்

போலி சாமியார் - ஒரு இந்து சாமியார் (பெயர் ஏதோ ஒரு ஆனந்தாவாக இருக்கும்)

அம்மு குட்டி (அ) ஓமண குட்டி - கேரளாவை சேர்ந்த ஒரு பெண். இவளுக்கு எப்போதுமே தமிழ் ஆண்கள் மீது ஒரு கண் உண்டு. ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ஹி ஹி...  

நாயர் - இவர் அம்முகுட்டியை கல்யாணம் செய்த அப்பாவி. டீக்கடை நடத்துபவர்

மடிசார் மாமி - இவர் அம்முகுட்டியின் தமிழ் சாரி ஆரிய வெர்ஷன். இவரது ஆத்துக்காரர் யாரென்பது தெரியவே இல்லை

கிளப்பில் நடனம் ஆடுபவள் -  கிறித்துவ பெண் 

விபசாரம் செய்பவள்#1 - வாழ்க்கை இழந்த (வில்லனால் கெடுக்கப்பட்ட) தாழ்ந்த சாதி பெண்

விபசாரம் செய்பவள்#2 - ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார கிறித்துவ பெண்

விபசார விடுதி நடத்தும் பெண் - வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு தெலுங்கு பேசுபவள் 

சேட் - மக்களை ஏமாற்றும் வட்டிதொழில் செய்யும் முட்டாள் வட இந்தியர் 

ரொம்ப நல்ல பெரியவர் - வயதான பள்ளி ஆசிரியர் அல்லது சுதந்திர போராட்ட தியாகி

போலீஸ் கமிஷனர் - வில்லனுக்கு துணை போய், அவனிடம் அறை வாங்கும் அளவுக்கு கேவலமான மாமா

பட்லீ அல்லது செட் அப் - நுனி நாக்கில் தமிழ் பேசும் ஆங்கிலோ இந்திய பெண் 

கறிக்கடை பாய் - பத்து இந்துக்கள் கடை வைத்திருக்கும் இடத்தில் மத நல்லிணத்துக்காகவே கசாப்பு கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லீம். 

ஃபாதர் - அதே தெருவில், அதே காரணத்துக்காக அங்கியை மாட்டிக்கொண்டு குறுக்கா மறுக்கா நடக்கும் கிறித்துவர்


குருக்கள் - ஒரு சண்டை காட்சிக்கு லீடாக ரவுடிகளால் கலாய்க்கப்படும் ஒரு அப்பாவி. மற்ற நேரங்களில் நாயகன் அல்லது காமெடியன்களால் கலாய்க்கப்படுபவர்

 நர்ஸ் - நகைச்சுவை நடிகர்களால் கையை பிடித்து இழுக்கபடுபவர் 

வில்லன் மனைவி - கணவனுக்காக கோயில் கோயிலாக சுற்றும் தீவிர இந்து பக்தை. 

பத்திரிக்கை நிருபர் - தாடி வைத்தவர். வில்லனால் கொல்லப்படுபவர் 

திருநங்கை - காமெடி காட்சியில் கதாநாயகனை துரத்துபவர் அல்லது பாடல் காட்சியில் நகைச்சுவை நடிகரை சுற்றி ஆடுபவர். 

வில்லன்கள் 

லோக்கல் ரவுடி வில்லன் - தீவிர இந்து. குறிப்பாக முருகன், சிவன், முனியசாமி ஆகியோரை கும்பிடுபவன். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் 

ரெட்டி - படிக்காத ஆந்திர அரசியல்வாதி. பெண் பித்து பிடித்த கொலைகார வில்லன் 

பீகாரி - படிக்காத வட இந்திய தாதா. பெண் பித்து பிடிக்காத கொடூர கொலைகார வில்லன். 

அமெரிக்க ஐரோப்பிய வில்லன் - போதைக்கும் பெண்ணுக்கும் அடிமையான ஒரு கிறித்துவன் 

தேசத்தை அச்சுறுத்தும் தீவிரவாத வில்லன் - முதலில் தாடி வைத்து, பிறகு அதை மழித்து கொண்டு சுற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் 

கெட்ட சைக்கோ கொலைகாரன் - ஒரு கிறித்துவன்


பெண்களை கடத்துபவன் - கிறித்துவன்

கடத்த பட்ட பெண்களை ஏலம் எடுப்பவன் - துபாய் ஷேக் அல்லது முஸ்லீம் 

வில்லனின் முக்கிய அடியாள் - முஸ்லீம். திருந்தும் நேரத்தில் வில்லனால் கொல்லப்படுபவன் 


கதாநாயகன் மற்றும் கதாநாயகி
ஏழை கிறித்துவன் - மீன் பிடிப்பவன், சாராயம் குடிப்பவன். கேரஜ் வைத்து மெக்கானிக்காக இருப்பவன்

பணக்கார கிறித்துவன் - அடிப்படையில் நல்லவன் ஆனால் கடத்தல் தொழில் செய்பவன். விஸ்கி குடிப்பவன்.  (இந்துவாக பிறந்தவன்)


ஏழை இசுலாமியன் - இப்படி ஒரு பாத்திரம் மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் தாதா வில்லனின் அடியாள் (இந்துவாக பிறந்தவன்)

பணக்கார இசுலாமியன் - மிக மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் லோக்கல் தாதா (இந்துவாக பிறந்தவன்)

தலித் (அ) தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் - அநாதை, சேரியில் வளர்ந்தவன்.(உயர்ந்த சாதியில் பிறந்தவன்)

தமிழ் பட கதாநாயகன் (90%) - வேறு சாதியில்(தாழ்த்தப்பட்ட சாதியில் அல்ல) பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிராமணன் ஆக வாழ்பவன் அல்லது பிராமணனாக பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரியில் வாழ்பவன்  

பணக்கார கதாநாயகி - மாடர்ன் டிரெஸ் போட்ட, படித்த திமிர் பிடித்த வெகுளியான லூசுப்பெண்


ஏழை கதாநாயகி - தாவணி காட்டிய, படிக்காத வெகுளியான லூசுப்பெண்

மிடில் கிளாஸ் நாயகி - சுடிதார் போட்ட  காலேஜ் போகும் வெகுளியான லூசுப்பெண் 

புதுமைப்பெண் கதாநாயகி - பேண்ட் ஷர்ட் போட்டவள்,  நாயகனை மணக்கும் வரையில் பெண்ணுரிமை பேசுபவள் அதன் பிறகு லூசுப்பெண்  

 இப்போவே கண்ணை கட்டுது. இதுக்குமேல நம்மால் முடியாது. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள். 

இது ஒரு தவறான பிம்பம் என்றாலும்  இதை உருவாக்கிய பெருமை (அ) சிறுமை திரை துறையையே சாரும். இது மாற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் மாறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. யாரும் தட்டிக்கேட்கவும் போவதில்லை. அப்படியே கேட்டாலும், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று பதில் வரும். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க. 
முழுவதும் படிக்க >>

January 21, 2013

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.....



பொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழுமையான பதிவல்ல. டக்கென்று நினைவுக்கு வந்தவையை பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் சினிமாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தவர்கள் ஏராளம். ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கிய திரைப்படங்கள் எண்ணிலடங்கா. அந்த வகையில் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் சம்பாதித்த பெயரை தாங்களாகவே கெடுத்துக்கொண்டதும் உண்டு. அதன் சிறு உதாரணப்பட்டியலே இந்த பதிவு.

சுரேஷ் கிருஷ்ணா...

இவர் சிறந்த இயக்குனரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமான விஷயம்தான். பல மொழிகளில் நிறைய படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் இவரது பெரும்பாலான அதிரடி ஹிட்டுக்கள் மாஸ் ஹீரோ படங்களின் மூலமே வந்திருக்கின்றன. இவரது பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையும், பாட்ஷாவும்தான். இந்த இரண்டு படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தது இந்த படங்களுக்கு அப்புறம்தான். சுரேஷ் கிருஷ்ணாவின் படங்கள் அந்தந்த மொழியில் உள்ள மாஸ் ஹீரோக்களின் ஸ்டார் வேல்யூவில் ஓடின என்று கூறப்பட்டாலும், பாட்ஷா படத்தின் இம்பாக்ட் இவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் போய் அமர்த்தியது. ஆனால் அதை சரிவர பயன்படுத்தாத இவர் சொல்லி சொல்லி அட்டர் பிளாப் படங்களை இயக்கினார்.

மாற்று மொழிகளில் ஹிட் படங்களை அவ்வப்போது கொடுத்து வந்த இவரால் தமிழ் படங்களில் ஆவரேஜ் படத்தை கூட தர இயலவில்லை. ரஜினியின் வீரா படத்துக்கப்புறம் தமிழில் இவர் கொடுத்த ஒரே ஆவரேஜ் படம் பாபாதான். அட்டர் பிளாப் ஆகவேண்டிய இந்த படத்தை ரஜினியின் பிம்பம் காப்பாற்றியது சிலர் பாபாவை ரஜினியின் தோல்விப்படம் என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பார்த்தால் இது ஆவரேஜ் படம்தான். ஆனால் ரஜினி படம் என்பதால் இதை தோல்வி கணக்கில் சேர்க்கிறார்கள். எப்படி சச்சின் 50 ரன் எடுத்தாலும் சரியாக ஆடவில்லை என்று சொல்கிறார்களோ அதே போல.

தமிழில் இவர் கொடுத்த அட்டர் பிளாப்புகளின் பட்டியல்

சிவசக்தி- சத்யராஜ் பிரபு நடித்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்

ஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் பிளாப்.

சங்கமம் -வெளியான ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பட்ட முதல் படம்

ஆளவந்தான் - மிகுந்த பொருட்செலவில் கமல் பின்னனியில் இருந்து
இயக்கப்பட்டு தாணுவை அழிக்க வந்தான்.

கஜேந்திரா-ராஜமௌலியின் சிம்மாத்ரி படத்தின் தமிழ் ரீமேக். இன்றும் விஜயகாந்தை கலாய்த்து யூ டியூபிள் பகிரப்படும் பல விடியோக்கள் இந்த படக்காட்சிகளே. உதாரணமாக விஜயகாந்த் தன்னுடைய ரத்தத்தில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் ஏராளம்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம் - இந்த படத்தில் நடித்ததை தனுஷே மறந்திருப்பார்

இளைஞன் - கலைஞரின் கை வண்ணத்தில் வந்த தாய்க்காவியம்.

ஆறுமுகம் -அண்ணாமலையின் கொடூர அன் அபீசியல் ரீமேக்.

மற்ற மொழிகளில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இவர் ஹிட் கொடுத்து வந்தாலும் தமிழை பொறுத்தவரை ஹிட் என்பது இவருக்கு எட்டாக்கனிதான்.


அகத்தியன்...

இந்த பெயருக்கு பத்தாண்டுகளுக்கு முன் திரை உலகினர் மத்தியில் பெரிய  மரியாதை உண்டு. வித்தியாசமான கதைகளை கண்ணியமான முறையில் படமாக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்கள் மிக மெதுவாக நகர்பவை. ஆனால் கதையின் அழுத்தம் அதை மறக்கடித்து விடும். முதலில் ஜாலியாக மதுமதி, வான்மதி போன்ற மெல்லிய நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், தமிழ் சினிமாவில் ஒரு புது காதல் டிரெண்டை உருவாக்கிய காதல் கோட்டை என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அந்த காலத்தில் எல்லோராலும் மதிக்கப்பட ஒரு காதல் படம் இது. இதன் விளைவாக நிறைய காதல் படங்கள் இதே சாயலில் வரத்தொடங்கின. இதற்கு அடுத்த படம் இவர் மீதான மதிப்பை இன்னுமும் உயர்த்தியது. அந்தப்படம்தான் கோகுலத்தில் சீதை. நவரச நாயகன் கார்த்திக் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படமே உதாரணம். இதற்கடுத்து வெளிவந்த விடுகதை வித்தியாசமான படம் என்றாலும் இதுதான் இவரது சறுக்கலுக்கு ஆரம்பம். அடுத்து வெளியான காதல் கவிதை படமும் மண்ணைக்கவ்வியது

நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த ராமகிருஷ்ணா என்ற படத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த படத்தை எந்த மொக்கை இயக்குனர் எடுத்திருப்பார்? என்றே நினைத்தேன். அகத்தியன் என்று தெரிந்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. படு குப்பை. அதே போல காதல் சாம்ராஜ்யம் என்ற குப்பை படத்தையும் பல ஆண்டுகளாக எடுத்து இழுத்து பறித்து  வெளியிட்டார்கள். இதற்கப்புரம் இவர் படம் இயக்கவே இல்லை. மீண்டும் வந்து முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

எஸ் ஜே சூர்யா...

இவர் மீது இன்னமும் எனக்கு ஆதங்கம் உண்டு. இவர் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர். அப்படியே இருந்திருந்தால் இந்த பட்டியலில் இவர் சேர்ந்திருக்க மாட்டார். இவர் சொல்லும் விஷயங்கள் ஆபாசமாக இருந்தாலும் இவரது படங்களின் கரு உளவியல் ரீதியான விஷயங்கள் பற்றியதாக இருக்கும். தலயை முதன் முதலில் வாயை பிளந்து ரசிக்க வைத்த இயக்குனர். முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்த இவரது பாதிப்பு இன்னுமும் போகவில்லை. நடிகர் விஜய் தோல்வியால் துவண்டு கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தூக்கிவிட்டு வழி காட்டியவர். பின்னர் அடுத்தடுத்த வந்த நியூ, அ....ஆ படங்களில் சொல்ல வந்த கருத்தை விட அதை மார்க்கெட்டிங் செய்ய ஆபாச ஜிகினாவை அளவுக்கு அதிகமாக சேர்த்து அ..ஆ என்ற அவரேஜ் படத்தில் வந்து நிற்கிறார். கடைசியாக இவர் தெலுங்கில் இயக்கிய கோமரம் புலி மரண அடி வாங்கியது. தற்போது இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக வேறு அவதாரம் எடுத்திருக்கிறார். பயமாக இருக்கிறது.

பேரரசு...

நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்கவே முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். திருப்பாச்சி, மற்றும் சிவகாசி என்ற இரண்டு படங்களும் தமிழ் திரைப்படங்களை மறுபடியும் எண்பதுகள் நோக்கி இழுத்து சென்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அதே இரண்டு படங்கள்தாம் விஜய் தன்னை ரஜினியை தாண்டி எம்‌ஜி‌ஆர் என்று நினைக்க வைத்தது. முதல் இரண்டு படங்கள் கொடுத்த மார்க்கெட்டை வைத்து வரிசையாக பிளாப் படங்களை இறங்கு வரிசையில் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு. திருப்பதி, பழனி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என்று இப்போதும் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார். இதில் திருப்பதி படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது பெற்றது ஆச்சர்யம். தமிழகத்தை கலக்கிய இவர், தற்போது மலையாளக்கரையோரம் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறார்.

சக்தி சிதம்பரம்...

இவர் குறித்து எனக்கு பல வருத்தங்கள் உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துரே இவரது சொந்த ஊர். இவரது தம்பி மகன் எனக்கு நெருங்கிய நண்பர். இவரது முதல் மூன்று படங்களான என்னம்மா கண்ணு, லவ்லி  மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இதற்கடுத்து இவர் எடுத்தவை எல்லாமே கர்ண கொடூரங்கள். கதையம்சம், நகைச்சுவை ஆகியவைக்கு முக்கியத்துவம் தராமல், இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்று இறங்கு முகத்தில் செல்கிறார். இவரது இறங்கு முகத்தையும், நமீதாவின் பரிணாம(!) வளர்ச்சியையும் ஒரே தராசில் வைக்கலாம்.

காதல் கிறுக்கன் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த கையோடு, மகா நடிகனை வெளியிட்டார். படத்தில் பிற படங்களை கிண்டல் செய்து வைத்த காட்சிகளும், நமீதாவின் பங்களிப்பும் கொஞ்சம் வெற்றியை தர, அடுத்தடுத்து  வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், நமீதாவையுமே நம்பி மகா மட்டமான படங்களை வெளியிட்டார். இங்கிலீஷ்காரன் ஹிட் அடிக்க, அடுத்து வந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா எல்லாம் பிளாப் ஆனது. தொடர்ந்து வந்த குரு சிஷ்யன் என்ற படம் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் மச்சான்  படத்தில் விவேக் நடிக்கிறார் என்பது இந்த படமும்எப்படி இருக்கும் என்பதற்கு பெரிய சான்று.

சேரன்...

இவர் மீதும் ஒரு காலத்தில் பெரிய மேதை என்ற மாயை இருந்தது. இவரது படங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஆனால் கனமான கதையம்சத்தோடு நகர்பவை. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். பாண்டவர் பூமி அவரேஜ் என்றாலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பல நடிகர்களை அணுகி கடைசியில் வெறுத்துபோய் இவரே கதாநாயகனாக நடித்த இவரது ஆட்டோகிராப் படம் ஒரு புதிய டிரெண்டை அமைத்தது. அதற்கடுத்து வந்த தவமாய் தவமிருந்து யாரும் சொல்லாத தந்தை மகன் பாசத்தை சொல்லி வெற்றி பெற்றது. சேரன் படம் என்றாலே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகவே தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சிகாரமான படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.

இதன் பின் இவர் இயக்குவதை விட, நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். மற்ற இயக்குனர்களை மாதிரி நிறைய அட்டர் பிளாப் படங்களை இவர் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களில் இவர் இயக்கியது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று மாயக்கண்ணாடி மற்றொன்று பொக்கிஷம். இரண்டுமே சூர மொக்கை படங்கள். சேரன் மீது வைத்த அபிமானத்துக்காக மூன்று மணிநேரம் கழுத்தறுபட்டு வர முடியுமா? போதாதற்கு எப்போதுமே ஒரே மாதிரி ரியாக்சன் கொடுக்கும் அவரேதான் படத்தின் நாயகன்.  தியேட்டர் பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இதில் நொந்து போன அவர் ரசிக்க தெரியவில்லை என்று மக்களை திட்டினார். இனி வரும் காலங்களில் சேரனின் படங்கள் எப்படி இருக்க போகின்றன என்று தெரியவில்லை.

சுராஜ்...

இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி நிறைய ஹிட் கொடுத்தவர் அல்ல. சொல்லபோனால் இவர் படங்கள் அனைத்தும் அவரேஜ் ரேஞ்சை கூட தாண்டியதில்லை. தன்னுடைய முதல் படமான மூவேந்தர், சூர்யவம்சம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதே சரத்குமார், தேவயானி ஜோடி நடித்து வெளிவந்தது. இந்த ஜோடிக்கு சூர்யவம்சம் கொடுத்த அபிமானத்தில் மூவேந்தரை தேத்தி விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் அட்டர் பிளாப். பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி. முதன்முதலாக இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, தலைநகரம் என்ற படத்தை இவர் இயக்கினார். படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்றவர் வடிவேலு. இன்றும் நாய் சேகராக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகமாக டிவியில் ஒளிபரப்பபடுகின்றன. இதற்கடுத்து இவர் இயக்கி வெளிவந்த மருதமலை மீண்டும், வடிவேலு என்ற ஒரே நடிகருக்காக ஓடியது. இதைத்தான் இந்த இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார்.  அடுத்தடுத்து வந்த படங்களுள் படத்துக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் காமெடி காட்சிகள் இருந்தால் படத்தை ஒட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.

விளைவு, வரிசையாக மரணமொக்கை படங்கள். படிக்காதவன் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லிக்கொண்டது எல்லோரும் நம்பினார்கள். மாப்பிள்ளை மறுபடியும் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லியது. யாருமே நம்பவில்லை. ஏனென்றால் படம் அப்படி. தற்போது அலெக்ஸ் பாண்டியன். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது.

இந்த பட்டியல் நிறைவானதல்ல. எனக்கு தெரிந்த ஒரு சில இயக்குனர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

இந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது அவர்களின் பட்டியல் இதோ

கவுதம் மேனன்
பாலா
செல்வராகவன்
மிஷ்கின்

உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க....
முழுவதும் படிக்க >>

January 3, 2013

விவாதம் செய்ய கற்றுக்கொள்வோமா?

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகியவையே இந்த சின்ன இடைவெளிக்கு காரணம். இந்த குறுகிய இடைவெளியில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ரஜினி பிறந்தநாள்+திட்டுகள், சச்சின் ஓய்வு+கருத்துக்கள், மோடி வெற்றி+புலம்பல்கள், பாலியல் பலாத்கார விஷயம் என்று. இவற்றைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். "வருட தொடக்கத்தில் ஏதாவது நல்ல விஷயம் சொல்லலாமே?", என்று யோசித்ததன் பலனாகவே இந்த பதிவை எழுத நினைத்தேன்.

மு.கு.: இந்த பதிவினுள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ்(சிகப்பில்) கருத்துக்கள் கலந்தே இருக்கின்றன. இரண்டை பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டுமென்றே எழுதினேன். அதே போல ஒன்றிரண்டு தனிமனித உதாரணங்களும் தவிர்க்க முடியாததாகி விட்டது. கருத்துக்கள் அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.


விவாதம் என்பது ஆண்டாண்டு காலமாக மனிதர்களுக்குள் நடந்து வரும் ஒரு நிகழ்வு. இங்கே விவாதம் என்பது மனிதன் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள மொழியை கண்டுபிடித்த பிறகு நடப்பவைகளையே குறிக்கும். சரி பண்டைய கால, விவாதங்களைப்பற்றி, அதன் வரலாற்றைபற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டாம். சம காலத்தில் விவாதம் செய்வது எப்படி?, உண்மையில் அது எப்படி நடக்கிறது?, நம்மோடு விவாதம் செய்பவரை எப்படி எதிர்கொள்வது?, அவர்களை எப்படி வெற்றி கொள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

விவாதம் மற்றும் விதண்டாவாதம்

மாற்றுக்கருத்து உடையவர்கள், அல்லது எதிரிகள் மட்டுமே விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்பதல்ல. தனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது, தெரியாத கருத்துக்கள் வந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு வைக்கப்படும் சான்றுகளைப் பொறுத்து, ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது, ஆகியவையே விவாதத்தின் பலன்கள் ஆகும். ஒரு புத்தகத்தில் நாம் படித்த அல்லது புரிந்து கொண்ட (நம் பாயிண்ட் ஆப் வியூவில்) விஷயங்களை பிறருடன் விவாதிப்பதன் மூலம், நம் புரிதலில் உள்ள குறைபாடுகளை களையவும், அல்லது புதிய விழிப்புணர்வுகளை பெறவும் முடியும்.

விதண்டாவாதம் என்பது, எதிராளி என்ன கருத்து சொன்னாலும், அதில் உள்ள பொருளை எடுத்துக்கொள்ளாமல், நாம் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது, அல்லது அவரை எப்படியாவது வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பது. இத்தகைய விதண்டாவாதத்தின் மூலம் நன்மை எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.

விவாதம் செய்வது எப்படி?

இதில் அடிப்படையான விஷயம் நீங்கள் யாருடன் விவாதம் செய்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் விவாதம் செய்பவர்களின் தராதரத்தை பொறுத்து உங்களின் வார்த்தை பிறையோகங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக இளைஞர்கள் அல்லது மாணவ சமூகத்தோடு பேசுகையில், சமகால, மிகவும் எளிய பதங்களை பயன்படுத்துவது நல்லது. மாறாக, மிக கடினமான, தத்துவார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தினால் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டாகும். அதே போல கல்வி அறிவு இல்லாத மக்களிடம் பேசுகையில், ஹிக்ஸ் போசான், ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் என்று அடுக்கினீர்கள் என்றால், உங்கள் விவாதம் தோல்வியில் முடிந்து விடும். "நல்ல கருத்து செறிவுள்ள பதிவுகளை இங்கே யாரும் படிப்பதில்லை". இதுதான் பெரும்பாலான நல்ல பதிவர்களின் மன வருத்தமாக உள்ளது. இங்கே பதிவுகளை படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொழுது போக்கிற்காக படிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நம் கருத்து போய் சென்றடைய வேண்டுமானால், நாம் வளைந்து போய்த்தான் ஆகவேண்டும். அதற்காக தரம் தாழ்ந்து எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை.


நம் பதிவுகள் அல்லது விவாதங்களின் உண்மைத்தன்மை மிகவும் முக்கியம். அதிக தகவல்கள் மற்றும் சான்றுகள் உள்ள விவாதங்களை எதிர்கொள்வது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம்தான். ஆகவே ஒரு செய்தி பற்றி விவாதிப்பதற்கு முன் அதற்கான அடிப்படைத்தகவல்கள், அல்லது சான்றுகளோடு களத்தில் இறங்குவது சிறந்தது. சான்றுகளின் நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.

ஆனால் நடப்பது என்ன?

சத்தியமாக சொல்கிறேன் நீயா? நானா? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடப்பது விவாதமே அல்ல. அது ஒரு நாகரிகமான சண்டை அவ்வளவுதான். சில நேரங்களின் அந்த நாகரிகமும் மீறப்பட்டு விடுகிறது. இதே நிலைமைதான் எல்லா இடங்களிலுமே. முன்கூட்டியே ஒரு முடிவோடுதான் விவாத களத்திலேயே இறங்குகிறோம். விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஈகோ இருக்க கூடாது என்பது என் கருத்து. ஈகோ இருந்தால் அடுத்தவர்களின் பேச்சு நம் மண்டையில் ஏறாது.  ஆனால் இங்கே விவாதத்தில் ஈடுபடுவதே நம் ஈகோவிற்கு தீனி போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். 

விவாதத்தில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது, கருத்து மோதல்களில் தனிமனித அடையாளங்கள் இருக்க கூடாது. அதாவது கருத்தோடு மோத வேண்டுமே தவிர தன்னுடைய அடையாளத்தை அதற்கு பயன்படுத்த கூடாது. "நான் யார் தெரியுமா?", "என்னிடமே இப்படி பேசுகிறாயா?"  போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர் விவாதம் செய்ய வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல தனிமனித தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். பதிவுலகில் பெரும்பாலும் விவாதங்கள் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களே நடக்கின்றன.  சில பதிவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன். காரணம் என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே நம் கருத்தை எதிர்க்காமல், நம்மை தாக்க தொடங்கி விடுவார்கள். உதாரணமாக, தீவிர கமல் பக்தரான பதிவர் ஒருவர், தன்னுடைய பதிவிற்கு யாராவது எதிர் கருத்து தெரிவித்து விட்டால், உடனே பயன் படுத்தும் வார்த்தை, "டேய் மெண்டல் நடிகரின் ரசிகனே!!". இதற்குமேல் அவரிடம் என்ன பேசினாலும், அது எடுபடாது.


ஆத்திக, நாத்திக, இடது, வலது, நட்ட நடு, என்று வித்தியாசமே இல்லாமல், நேரிடையாக தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் பதிவர்களை தவிர்ப்பதே நல்லது. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், சத்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்துவிட்டு வாருங்கள். இல்லை கொஞ்சம் தூண்டி விட்டு அவர்கள் ஆடுவதை வேடிக்கை பாருங்கள். சில நேரங்களில் டாக்டர் ரசிகர்களை நான் இப்படி செய்ததுண்டு. இது நல்லதல்ல. 

விவாதங்களை எதிர்கொள்ளுவது எப்படி?

தன்னுடைய கருத்து பிறருக்கு போய் சேரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு பொறுமை மிக அவசியம். நம் மீதான விவாதங்களை எதிர்கொள்வதற்கு முதலில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அவசியம். எதிராளியை பேச விடுங்கள். அவர் பேசி தீர்க்கட்டும். இடையில் குறுக்கிடாதீர்கள். அறிவாளிகளின் அடையாளம், அமைதி அல்லது மவுனம். முட்டாள்களைக்கூட அறிவாளிகளைப்போல காட்டிவிடும் திறமை மவுனத்துக்கு உண்டு. அந்தோ பரிதாபம்! முட்டாள்கள் அமைதியாக இருப்பதில்லை. முதலில், வாதிடுபவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். 

நான் முன்பே சொன்னது போல நம்மை தூண்டி விட்டு நாம் ஆடுவதை வேடிக்கை பார்க்க சிலர் ஆசைப்படுவார்கள். இல்லை, நம்மை தவறு செய்ய தூண்டுவதற்காக விதண்டாவாதம் செய்வார்கள். இந்த மாதிரியான நேரங்களில் அமைதி  ஒரு சிறந்த ஆயுதம். எந்த நேரத்திலும் நம் நிதானத்தை இழந்து விடாமல், அமைதியாக அதே நேரம் அவர்களுக்கு உறைக்கும் விதமாக பதில் கூறவேண்டும். இந்த விஷயத்தில் சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் பொறுமை அசாத்தியமானது. அவரது கருத்துக்களோடு பல விதங்களில் நான் மாறுபட்டாலும், இந்த விஷயத்தில் அவரைபாராட்டியே ஆகவேண்டும். 

அதே போல ஒரு சிலரிடம் விவாதிக்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அது விதண்டாவாதம் என்று தெரிந்துவிடும். அப்படிபட்ட நேரங்களில் நாகரிகமாக அதை தெரிவித்து விட்டு, மேலும் விவாதத்தை வளர்க்காமல் விட்டுவிடலாம். குறைந்த பட்சம் கால விரையமாவது தவிர்க்கப்படும். இதை அப்படியே தலை கீழாகவும் புரட்டி பார்க்கலாம். நமக்கு தெரியாத தகவல்கள் அல்லது சான்றுகளை வைத்து ஒருவர் நம்மிடம் வாதம் செய்ய வருகிறார் என்றால், அதைப்பற்றி மூச்சு விடக்கூடாது. வாதத்தை வேறுபக்கம் திசை திருப்பி, இந்தப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்கு தெரிந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி அடிக்கவேண்டும், தெரியாத ஏரியாவில் அண்டர் பிளே செய்வதே சிறந்தது. 

விவாதத்தில் வெற்றி பெறுவது எப்படி?

நாம் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும். "Argument never Ends". விவாதங்கள் எந்த காலத்திலுமே முடிந்ததில்லை. அந்த விவாதத்தில் ஈடுபட்டதன் நோக்கம் எதுவோ அதைப்பொருத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். மற்றபடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதோடு விவாதங்கள் முடிந்து விடுகின்றன. உங்களின் கருத்துக்களை நீங்கள் ஆணித்தரமாக நிறுவி விட்டதால் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டாதாகாது. அங்கே நடந்த விவாதம் இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதமாக இருந்தால் அது இருதரப்புக்கும் வெற்றி. இல்லை இருவருக்குமே தோல்வி அவ்வளவுதான். சரி கருத்துப்பரிமாற்றம் உங்கள் நோக்கம் இல்லையெனில்,


எதிராளிகளின் ரியாக்சன்களை  வைத்து உங்கள் வெற்றி தோல்விகளை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். உதாரணமாக, "மதங்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன்", என்று சொல்லிக்கொண்டு, மதங்களை, கடவுள்களை தரக்குறைவாக திட்டுபவர்களின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை புண்படுத்துவதே. சம்பந்தப்பட்டவர்கள் கொதித்தெழுந்து பதிலுக்கு வண்டை  வண்டையாக திட்ட தொடங்கினால் அது கட்டுரையாளரின் வெற்றி. "சாதிக்கெதிரான முழக்கம்", என்ற பெயரில் ஒரு சாதியை உயர்த்தி ஒரு சாதியை தாழ்த்தி எழுதிய கட்டுரையில், விவாதம் என்ற பெயரில், பல சாதிக்காரர்கள் அடித்துக் கொண்டால், அங்கே வெற்றி பெறுவது ஏதாவது ஒரு சாதி அல்ல. கட்டுரையாளரே. 

ஒரு முக்கிய விஷயம். நீங்கள் விவாதத்தில் ஈடுபடுவது, உங்கள் கருத்துக்களை பிறருக்கு எடுத்துரைப்பதற்காக அல்ல, பொழுது போகவேண்டும் அல்லது யாரையாவது காமெடி பீஸ் ஆக்கவேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு தேவை அசாத்திய பொறுமை மற்றும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வு. பதிவுலகுக்கு வந்த புதிதில் பல நேரங்களில் பலரிடம் வெட்டியாக தூண்டி விட்டு, சண்டை போட்டு, பொழுது போக்கியதுண்டு. இப்போதும் சில நேரங்களில் அப்படி செய்வதுண்டு. இப்படிப்பட்ட விவாதங்களால் துளியளவும் பயனில்லை என்பதை புரிந்துகொண்டால் போதும். மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று மத உணர்வுகளை புண்படுத்துவதை விடவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பிரபலங்களை வாய்க்கு வந்தபடி வசை பாடுவதை விடவும், என் கடவுளின் பெருமையை சொல்ல, அடுத்தவர் கடவுளை தூற்றுவதை விடவும், புரட்சி என்ற பெயரில் சாதிவெறியை, தீவிரவாதத்தை தூண்டுவதை விடவும்,  இப்படி வெட்டி அரட்டை அடிப்பதில் தவறே இல்லை. ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டால் போதுமானது.

நாம் ஒருவரின் கருத்துக்கு மட்டுமே எதிரியே ஒழிய, அவருக்கெ எதிரி அல்ல.

பி.கு: கூடிய மட்டும் வெட்டி அரட்டை அடிப்பதை தவிர்ப்பதே நல்லது.  ஹி ஹி 

உங்க கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

முழுவதும் படிக்க >>

November 28, 2012

வெட்டி அரட்டை - ஏதோ சொல்லணும்னு தோனிச்சு....



பதிவு எழுத வந்து மூன்றாவது ஆண்டு முடியப்போகிற தருவாயில் மற்றுமொரு மைல்கல்லை தொட்டிருக்கிறேன். மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் என்பது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதற்கு துணைபுரிந்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

முகு: அணில் ரசிகர்கள் இந்த தளத்தை எந்த காரணத்துக்காக படிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். ஆகவே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஒரு பத்தி இருக்கிறது. தயவுசெய்து படிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?

ஏன் இந்த பாரபட்சம் 


இந்த கேள்வியை ஆயிரம் தடவை கேட்டுவிட்டார்கள். நானும் என் பங்குக்கு கேட்கிறேன். சென்னையில் மட்டும் ஏன் மின் வெட்டு நேரம் குறைவாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சென்னையில் இருந்து வழக்கமாக தீபாவளி அன்று சொந்த ஊருக்கு வரும் நண்பன் இந்த முறை வரவில்லை. அதே போல வந்தவர்கள் எல்லோரும் ஒரே நாளில் திரும்பி விட்டார்கள். காரணம் 'அவங்க ஊரில்' மின்வெட்டு கிடையாதாம். இந்த ஊரில் கரண்ட் இல்லாமல் கொஞ்ச நேரம் கூட அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம். தமிழகத்தின் பிற நகரங்களில் ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்‌எல்‌ஏக்கள் இருக்கும் ஏரியாக்களில் மட்டும் மின்வெட்டு கிடையாதாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மனிதர்கள். நாமெல்லாம் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் போல, ஒட்டுக்காக வளர்க்கப்படும் பிராணிகள்தானே?


இதை விட கொடுமை காற்றாலைகளால் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்த தனியார்களுக்கு உரிய தொகையை கொடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கிறது. இதனால், மேலும் உற்பத்தி செய்யவோ, காற்றாலைகளை அமைக்கவோ தயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டும் மாநில அரசு இந்த விஷயத்தில் யாரை குற்றம் சாட்டப்போகிறது? "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது", என்று ஒரு காலத்தில் அரசியல் செய்தார்கள். இன்னும் சில காலங்களில் "வட தமிழகம் ஒளிர்கிறது, பிற தமிழகம் இருள்கிறது", என்று அரசியல் முழக்கங்கள் கேட்கலாம். அதே போல  ரேஷன் முறைப்படி குடும்பத்துக்கு இத்தனை யூனிட் கரண்ட் என்ற முறை விரைவில் வரும். இல்லாவிட்டால், மின் விநியோகத்தில் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு எல்லாம் வரலாம். தற்போது தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம் கெஞ்சுவது போல இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கரண்ட் விடுமாறு சென்னை மக்களிடம் கெஞ்சும் காலம் வரும்.  இவை எல்லாம் கற்பனை என்றாலும் நடக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒன்று மட்டும் நிச்சயம். இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த பிற தமிழக மக்களின் தொழில்கள் முடங்கி, பஞ்சம் பிழைப்பதற்காக எல்லோரும் சென்னை நோக்கி படையெடுப்பார்கள். ஏதோ சொல்லணும்னு தோனிச்சு......

ஒபோடெவும், இடி அமினும்


உகாண்டா என்ற பெயரைக்கேட்டவுடன் நினைவுக்கு வருவது இடி அமின் தாதா என்ற மனிதர்தான். விடுதலை அடைந்த முதல் பத்து வருடத்துக்கு ஒபோடே கையில் சிக்கி குற்றுயிரும் குறையுயிறுமாய் இருந்த உகாண்டா, அடுத்த எட்டுவருடத்தில் இடி அமின் கையில் சிக்கி மீண்டு வரவே முடியாத அளவிற்கு சமாதி கட்டப்பட்டது. இவர்கள் இருவரும் கூட்டாளிகளே. ஒபோடே அதிபராக இருந்த காலத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் இடிஅமின். பின் இருவருக்கும் முட்டிக்கொள்ளவே, ஒபோடெவை ஒழித்துக்கட்டி ஆட்சியை பிடித்தார், ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத இடிஅமின். எட்டே ஆண்டுகள்தான். மக்களை, நாட்டின் இயற்கை வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டினார். நாட்டின் முக்கிய பொறுப்புகளில் எல்லாம் அவரது இனத்தை சேர்ந்த அடியாட்களையே அமர்த்தினார். அவர்களை அடியாட்கள் என்று சொல்லக்காரணம், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், வரும் பணத்தை எல்லாம் கொள்ளை அடிப்பதிலேய குறியாக இருந்தவர்கள். தட்டிக்கேட்பவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். எல்லா கொள்ளையிலும் ஒரு பெரும்பங்கு இடிஅமினுக்கு உண்டு. 


இப்படியே சென்றால் எத்தனை நாளைக்குத்தான் அந்த நிறுவனம் நடக்கும்? இப்படி ஒன்றிரண்டு வருடங்களிலேயே திவாலான நிறுவனங்கள் ஏராளம். சரி பணத்துக்கு என்ன செய்வது? எனவே இடிஅமின் அடுத்ததாக உகாண்டாவின் பொருளாதாரத்துக்கு பெரும் உதவி செய்து வந்த ஆசியர்களின் (பெரும்பான்மையான இந்தியர்கள்) வணிக நிறுவனங்களை கைப்பற்றினார். துரத்தி அடிக்கப்பட்ட ஆசியர்கள் அகதிகளாக உலகெங்கும் தஞ்சம் புகுந்தார்கள். வளம் கொழித்த அந்த நிறுவனங்களும் விரைவில் திவாலாகின. தொழில் நடந்தால்தானே லாபம் வரும்? லாபம் எல்லாம் வகை தொகை இல்லாமல் கொள்ளை அடிக்கப்பட்டால்?  நாடே பசி பட்டினியில் வாடியது. இதைப்பற்றி எல்லாம் இடிஅமின் கவலைப்படவே இல்லை. விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவிக்கும் பயிர்களை ஏற்றுமதி செய்து கிடைத்த பணத்தில், கோடிக்கணக்கில் விஸ்கியும் டிரான்சிஸ்டரும் இறக்குமதி செய்து, இலவசமாக ராணுவ வீரர்களுக்கு சப்ளை செய்தார்.
   

மக்கள் அனைவரும் பசியில் செத்துக்கொண்டிருக்க, ஹாய்யாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். மொத்தத்தில் ஒரு ஒட்டுமொத்த தேசத்தையே ஒரு சிறு கொள்ளைக்கூட்டம் சூறையாடி,இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொண்டது. கொள்ளைக் கூட்டத்தலைவன் இடிஅமீன். கடைசி வரை அவர் மக்களிடம், "எல்லாம் உங்கள் நலனுக்குத்தான்.", என்றே சொல்லி வந்தார். அதையும் அவர்கள் நம்பினார்கள். நம்பித்தானே ஆகவேண்டும். வேறு வழி? அவர்களுக்கு இடிஅமினை தவிர வேறு யாரையும் தெரியாதே? உலகமே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவ்வளவு கொடுமைகளை செய்த இடிஅமீன், ஹிட்லர் போல தற்கொலை செய்து கொண்டோ, முசோலினி போல தலைகீழாக தொங்கவிடப்பட்டோ, கேவலமாக இறக்கவில்லை. சவுதி அரேபியாவில் தன் முதுமையை ஜாலியாக கழித்து இயற்கயாகவே இறந்தார். 

ஒரு இடிஅமின் கையில் சிக்கியதற்கே ஒரு நாடு இப்படி ஆனதென்றால்....சரி விடுங்க ஏதோ சொல்லணும்னு தோனிச்சு...... 

பிஞ்ச செருப்பும் பிய்யாத செருப்பும். 


பதிவுலகில் எனக்கு சமீபத்தில் கிடைத்த ஒரு பட்டம் 'பிஞ்ச செருப்பு'. (புது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்துக்கு இந்த பெயரை வைக்க விரும்பினால் என்னை அணுகவும்) தமிழகத்தின் தற்கால டாக்டர், எதிர்கால முதல்வர், மாஸ் ஹீரோ, வசூல் நாயகன் ஒருவரின் வளர்ச்சி கண்டு வயிற்றெரிச்சல் தாளாமல் அவரை கலாய்ப்பதற்காகவே நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருவதால், உச்ச கட்ட கோபத்துக்கு உள்ளான டாக்டர் அபிமானி ஒருவர் இந்த பட்டத்தை கொடுத்திருக்கிறார். அவர் வெளிப்படையாக என் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதால் அவரது தளத்தில் கருத்துரை இடுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவேதான் இங்கே கூறுகிறேன்.  ஒரு படத்தின் வெற்றியை பற்றியோ, அல்லது வசூல் பற்றியோ அதை வெளியிடும் இணையதளத்தின் நம்பகத்தன்மை பற்றியோ நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இவற்றால் எனக்கு பைசா பிரயோசனம் கிடையாது. 


அவரது படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் எனக்கென்ன? நான் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன். நான்தான், "எதையோ மிதித்து கொண்டு பதிவெழுதும் பிஞ்ச செருப்பு" என்று, "எதையுமே மிதிக்காத" அந்த பிய்யாத செருப்புக்கு தெரிகிறதல்லவா? அப்புறம் என்னத்துக்கு திரும்ப திரும்ப என் செருப்பை வந்து முகர்ந்து பார்த்து, "அய்யோய்யோ இவன் எதையோ மிதித்து விட்டான்!!!", என்று புலம்புகிறார்? கடைசியாக அந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம்தான் சென்றேன். அங்கேதான் எதையோ மிதித்து விட்டேன் போலிருக்கிறது.  பொதுவாக எங்கள் நண்பர் குழுவில் ஒரு கருத்து உண்டு. "மனப்பக்குவம் இல்லாத சிறுவர்களே அவருக்கு ரசிகராக இருப்பார்கள்." என்று என் நண்பர்கள் கூறுவார்கள். "நான் அப்படி எல்லாம் இல்லை." என்று சொல்லுவேன். ஆனால் என் கூற்று சில நேரங்களில் தவறாகி விடுவதுண்டு என்று இப்போது புரிகிறது.

பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல் ஒன்று 


சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம், வசூலில் அவரது முந்தையை சாதனைகளை முறியடித்திருக்கிறதாம். அதே போல மங்காத்தா, பில்லா படங்களில் வசூல்களை அனாயாசமாக முந்தி எந்திரனை வீழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பல இணையதளங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

ஏதோ சொல்லணும்னு தோனிச்சு..... 

உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க..... 

முழுவதும் படிக்க >>

November 21, 2012

வெட்டி அரட்டை பில்லா vs துப்பாக்கி, விமர்சனம்

வணக்கம் நண்பர்களே..... 

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். முதலில் என் திருமணத்திற்கு பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம்மை வாழ்த்துவதற்கு உலகம் முழுவதும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்காரணமும் இணையமும், பதிவுலகமும்தான். மிக்க நன்றி.... 

விமர்சனம்

கொஞ்ச நாளைக்கு முன்னால் ரிலீஸ் ஆன ஒரு படத்தை பற்றி என் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் என்று தலைப்பு வைத்து விட்டாலும் இவை என் சொந்த கருத்துக்களே. படித்து விட்டு, படம் வந்து இத்தனை நாள் கழித்து இது தேவையா? என்று காண்டானால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

கதாநாயகன் ராணுவத்தில் பணிபுரிபவர். விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். அங்கே குழப்பம் விளைவிக்கும் தீவிரவாதிகளை எப்படி தீர்த்துக்கட்டுகிறார் என்பதை அதிரடி திருப்பங்களுடனும், சண்டை காட்சிகளுடனும் கூறி இருக்கிறார்கள். இப்படி மூன்றே வரிகளில் கதையை சொல்லிவிட்டாலும் அதை எப்படி திரைக்கதைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதிலேயே இயக்குனரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நாயகன் தன் வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நடித்திருக்கிறார். அதிலும் தன்னுடைய வழக்கமான ஸ்டைலை கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். "ராணுவ உடை இவருக்கு பொருந்துமா?", என்று பலருக்கு சந்தேகம் உண்டு. ஆனால் கச்சிதமாக பொருந்துகிறது. ஏன் எல்லா மிலிட்டரிகாரர்களும் சொல்லி வைத்தார் போல புல்லட் வண்டி ஓடுகிறார்கள்? என்று தெரியவில்லை.  

இவருக்கு கைவந்த கலையான சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அதிலும் இறுதியில் வில்லனும் இவரும் மோதும் காட்சிகள் அனல் பறக்கின்றன. நிறைய இடங்களில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்திருக்கிறார். 

படத்தின் இன்னொரு பலம் வில்லன். சமீப காலமாக கதாநாயகனை விட வில்லன்கள் அழகாக இருக்கிறார்கள். அதே போல கதாநாயகனை விட வில்லன்கள் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள். என்னதான் வில்லன் அறிவாளியாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனோடு ஒண்டிக்கு ஒண்டி மோதி இறப்பது தமிழ் சினிமாவின் மரபு. வில்லன் இறக்கும் காட்சி நம்ப முடியாததாக இருக்கிறது. படத்தில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. குறிப்பாக கதாநாயகனை மடக்குவதற்கு அவன் தங்கையையே பயன்படுத்துவது, அதையே வில்லனை மடக்குவதற்கு கதாநாயகன் பயன்படுத்தி கொள்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். "தீவிரவாதிகள் என்பவர்கள் வேற்று கிரகத்தில் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருப்பவர்கள்." என்று இயக்குனர் நாம் வயிற்றில் புளியை கரைக்கிறார். வில்லனுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் அந்த ஊரில் வசிக்கும் சாதாரண மக்களாகவே இருப்பதும் அதிர்ச்சி தரும் திருப்பங்கள். "அவர்கள் சமூகத்தின் மீது கோபம் கொண்டவர்கள்.", என்று சொன்னவர்கள் எதற்காக கோபம் கொண்டவர்கள் என்றும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை கிளைமாக்ஸும், இடைவேளைக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும். வில்லன் இடத்துக்கே சென்று அவன் ஆட்களை அடித்து நொறுக்கும் காட்சியில் நாயகன் சிக்சர் அடிக்கிறார்.

படத்தின் பெரிய மைனசே கதாநாயகியும் அவர் வரும் காதல் காட்சியும்தான். கதாநாயகி அடாவடிப்பெண் என்பதை நிரூபிப்பதற்காகவே மெனக்கெட்டு மொக்கையான காட்சிகளை திணித்திருக்கிறார் இயக்குனர். மிக அழகான நடிகையான  இவரை இவ்வளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டி இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. காஸ்டியும் டிசைனருக்கு வேலையே இல்லை போல. அதே போல மேக்கப்மேனும் தூங்கிக்கொண்டே வேலை பார்த்திருக்கிறார். நல்ல காமெடி நடிகர் இருந்தும்  காமெடி சுத்தமாக எடுபடவில்லை.படத்தின் நீளம் கருதி காமெடி காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒன்றிரண்டு காமெடி காட்சிகளுமே கதாநாயகி வரும் காட்சிகள்தான். அவையும் சகிக்கவில்லை. என்ன ஆயிற்று இசையமைப்பாளருக்கு? பாடல்கள் ஒன்றுகூட எடுபடவில்லை. வெளியில் கேட்பதற்கு சுமாராக இருந்த பாடல்கள் கூட படத்தில் மொக்கையாக இருக்கின்றன. அதே போல பின்னணி இசையும் என்னை கவரவில்லை. படத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக அமைக்கிறேன் பேர்வழி என்று அவசரமாக எடிட் செய்திருக்கிறார்கள். மக்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

படத்தில் நாயகன் பேசும் வசனங்கள் நச்சென்று இருக்கின்றன. தேசப்பற்று, நாட்டைக்காப்பதில் ஒவ்வோரு மனிதனுக்கும் உள்ள பங்கு என்று மெய் சிலிர்க்கும் வசனங்கள் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது, படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் மிகச்சிறந்த ஒரு என்டர்டெயினர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் பெரிய பிரச்சனையை கிளப்புமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை. 

இவரது போட்டி நடிகரான வெள்ளை நடிகரின் படத்தை விட இது வசூல் சாதனை புரிந்துள்ளது என்பதும், வெள்ளை நடிகரின் ரசிகர்களே மறைமுகமாக படத்தை ரசிக்கிறார்கள் என்பதும், எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல் தரும் செய்திகள். என்ன வேணா சொல்லுங்கள் எங்க அண்ணன் மறுபடியும் ஃபார்ம்முக்கு வந்து விட்டார் என்பதை எந்த கொம்பனிடமும் அடித்து கூறுவோம். 

பின்குறிப்பு: கொஞ்ச நாளைக்கு முன்னால் கே டிவியில் ராணுவ வீரன் படம் ஒளிபரப்பினார்கள். அதற்கு விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்ததின் விளைவே இந்த பதிவு. இது ராணுவ வீரன் படத்தை பார்த்தபின் எனக்கு தோன்றியவை. நீங்க இது வேற படத்தோட விமர்சனம்னு நினைச்சீங்களா? அந்த படத்தை பார்த்து நொந்து போனது தனிக்கதை. அதை அப்புறம் சொல்றேன். More Over, அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை....  


அட XXXX..... அப்போ தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு தானே கேக்குறீங்க? 

பில்லா படத்துல தல சொன்னது , "I am Back.....". அதே மாதிரி நானும் பதிவுலகத்துக்கு திரும்பி வந்துட்டேன் அதனால சொல்கிறேன் ...... "I am Back...."

துப்பாக்கி படத்துல டாக்குடர் சொல்ற மாதிரியே, தினமும் காலையில் நான் வேலைக்கு கிளம்பும்போது என் மனைவி என்னிடம் "சீக்கிரம் வந்திடுங்க..... I am Waiting...." அப்படின்னு சொல்றா. போதுமா......... 



அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.... 



முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...