விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 13, 2010

நடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தான்




பொதுவாக ஊடகங்கள் என்பது மக்களுக்கு பல தகவல்களை அளிக்கவும், செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கவும், நல்ல கருத்துக்களை பரப்பவும்தான் அப்படிங்கறது என்னோட கருத்து. இந்த ஊடகங்களை பல சமூக ஆர்வலர்கள் தங்களின் கொள்கைகளை பரப்பவும் பயன் படுத்துகிறார்கள். திரைப்படங்கள் மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கள் ஊருக்கு மட்டும்தான் உபதேசம் என்கிற ரீதியில் இருப்பதுதான் உண்மையான நிலை. சட்டம், நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாசாரம், தேசபக்தி இவை எல்லாம் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு வலியுறுத்தப்பட்டாலும், இவை எல்லாம் சாதாரண பொது ஜனங்களுக்கு மட்டும்தான் என்பது மாதிரியாகத்தான் இவர்களின் நடவடிக்கை இருக்கிறது. இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம்.

சமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் அடிபடும் ஒரு செய்தி என்னவென்றால் "புதுப்பட சிடி விற்றவர் கைது". இது போன்ற நேரங்களில் திரைத்துறையினர் ஒன்று திரண்டு ஆட்சியாளர்களை சந்திப்பது வாடிக்கை. கஷ்டப்பட்டு எடுக்குற திரைப்படங்களை நோகாமல் திருட்டு சிடி போட்டு விற்று எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். ஒரு சினிமாவ நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது என்று ஆதங்க படுகிறார்கள். சிடி விற்பவர்கள் திருடர்கள் என்றால், பிறநாட்டு படங்களை ஆட்டைய போட்டு நோகாமல் படமெடுக்கும் இவர்களை என்ன சொல்வது? திருட்டு சினிமா எடுப்பவர்கள் என்று சொல்வதா? பிற நாட்டு சினிமாகாரர்கள் எல்லாம் இதற்க்கு எதிராக கிளம்பினால் என்ன ஆகும்?


மூன்று நாளைக்கு முன்னால் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். படத்தில் அருமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதிகார வர்க்கம் ஏழைகளை எப்படி சுரண்டுகிறது என்று நக்கல் செய்திருந்தார்கள். நான் படம் பார்த்தது ஒரு பாடாவதி தியேட்டர். ஒரு டிக்கெட் 60 ரூபாய். டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்தது வெறும் 15 ருபாய். இதற்கு பெயர் சுரண்டல் இல்லையா? கருத்து படத்தில் சொன்னால் மட்டும் போதாது காரியத்திலும் இருக்கவேண்டுமே. பின் எப்படி நம்மாள் தியேட்டருக்கு வருவான்? ஒரு பாடாவதி தியேட்டரில், மூட்டை பூச்சி கடிக்கு நடுவே அநியாய விலை கொடுத்து படம் பார்ப்பதை விட, வசதியாக, வீட்டில் படுத்துக்கொண்டே குறைந்த விலையில் படம் பார்ப்பதையே விரும்புவான். தியேட்டர்காரனும் என்ன செய்வான் பாவம்? போட்ட பணத்தை எடுக்க வேண்டும். இப்பலாம் படம் பத்துநாள் தாண்டினாலே பெரிய சாதனை. இளைய தலைமுறைகள் தனக்கு பிடித்த, பிடிக்காத நடிகனின் படத்தை திட்டவாவது வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவார்கள். இரண்டாம் வாரம் தியேட்டர் காத்தாடும். அதனால் முதல் வாரத்திலேயே அடுத்த மூன்று வார வசூலை செய்து விடுவார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாத நிலையே இருக்கிறது. மாயாஜாலில் குசேலன் படத்துக்கு நான் கொடுத்த விலை 180 ரூபாய். அவர்கள் சொன்ன காரணம், டிக்கெட் 100 ரூபாய், 80 ரூபாய்க்கு உங்களுக்கு நொறுக்கு தீனி மற்றும் குளிர் பானம் வழங்கப்படும் என்றார்கள். இடைவேளையில் 7 ரூபாய் மதிப்புள்ள ஒரு மினி செவன் அப் பாட்டில், 10 ரூபாய் மதிப்புள்ள குர்குரே பாக்கெட், 5 ரூபாய் மதிப்புள்ள பாப் காரன் பாக்கெட் ஒன்றும் கொடுத்தார்கள். இதன் விலை 80 ரூபாயாம். எவனாவது தியேட்டருக்கு வருவான்?



சமீபத்தில் நடிகர்களின் சம்பளம் பற்றிய பட்டியல் ஒன்று ஒரு பத்திரிகையில் வந்தது. அது வெளியே தெரிந்த தொகை. இது மட்டும் இல்லாமல் கருப்பு பணமாக வேறு வாங்குகிறார்கள் என்று கேள்வி. படத்தின் தயாரிப்பு செலவில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளம்தான். அதே போல முன்னணி நடிகர்கள் யாரும் தன் படம் தோல்வி அடைவது பற்றி கவலையே இல்லாமல் அடுத்த படம் நடிக்க சென்று விடுகிறார்களாம். தன் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்தாலே தயாரிப்பாளர் பெரும் லாபம் அடைவார். இதை மட்டும் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கே சம்பளத்தை குறைப்பதில் உடன்பாடு இல்லாத போது சாமான்யன் மட்டும் அதிக பணம் கொடுத்து ஒரு மொக்கை படத்தை பார்க்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள்? திருட்டு சிடி வெளிவருவதற்கு கண்டிப்பாக தியேட்டர் மற்றும் திரைதுறையினரின் உதவி உண்டு. ஜக்குபாய் படம் ரீ ரெகார்டிங் இல்லாமலே சிடி வெளி வந்துவிட்டது. அப்படியானால் கருப்பாடு எங்கே இருக்கிறது? அதை விடுத்து நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் நீங்கள் தான் அயோக்கியர்கள் என்று பொதுமக்களை பார்த்து சொல்வது எந்த வகையில் நியாயம்?



மதுரைக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புதுப்படம் வெளிவருவதும் மதுரையில்தான். புதுபட திருட்டு சிடி வருவதும் மதுரையில்தான். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில படங்களுக்கு மட்டும் சிடிக்கள் கிடைக்காது. வாரணம் ஆயிரம், தமிழ் படம் முதலிய படங்களுக்கு மதுரையில் சிடியே கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவை அஞ்சா நெஞ்சரின் புதல்வர் தயாநிதியின் படங்கள். அதே நேரத்தில் அசல் பட சிடி தாராளமாக கிடைத்தது. முதல்வன் படம் கலைஞரை கிண்டல் செய்வது போலிருக்கிறது என்ற காரணத்தால் படத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், படம் வெளியாகி இரண்டாம் நாள் லோக்கல் கேபிள் டிவியில் மூன்று வேளை படம் ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் மதுரையில் உள்ள தயா டிவியில் புதுப்படங்கள் தங்கு தடையின்றி ஒளிபரப்படுகின்றன. இதனை தட்டிகேட்க திரையுலகத்தை சேர்ந்த எவனுக்காவது தைரியம் இருக்கிறதா? கிடையாது. அதனால் இளிச்சவாயன் பொதுஜனம்தான் சிக்கியவன். அவன் தலையில்தான் மிளகாய். தன் பக்கம் இருக்கும் எந்த தவறையும் சிறிது கூட திருத்திக்கொள்ளாமல், பெரும் தவறுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, திருட்டு சிடி தேச துரோகம் என்பது போன்ற பிரச்சாரங்கள் ஊருக்கு மட்டும் உபதேசமாகத்தான் உள்ளன. ஒன்று மட்டும் உறுதி. தமிழில் தரமான படங்கள் வரப்போவதுமில்லை, டிக்கெட் விலை குறையப்போவதுமில்லை, திருட்டு சிடி ஒழியப்போவதுமில்லை...



பல காலமாக கத்தி கதறிக்கொண்டிருந்த சுற்று சூழல் ஆர்வலர்களின் குரல் இப்போதுதான் நம் ஆட்சியாளர்களின் காதில் சன்னமாக கேட்க தொடங்கி இருக்கிறது. ஆமாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இன்னும் சில வருடங்களில் நிலக்கரி தீர்ந்து விடும். மின்சாரத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். என்ன செய்யலாம்? மின் வெட்டை அமல் படுத்தலாம். எல்லோரையும் சூரிய சக்தியை பயன் படுத்த அறிவுறுத்தலாம். முடிந்தால் சட்டம் இயற்றலாம். இவற்றை எல்லாம் அனுபவிக்க போவது யார்? இளிச்சவாயன் பொது ஜனம்தானே? மின்சாரத்தை சேமிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும் மக்களில் ஒருவர்தானே? அவர்கள் தேவ தூதர்கள் இல்லையே? வாரம்தோறும் விழா, வண்ணமயமான அலங்காரங்கள், கலர் கலராக மின் விளக்குகள் உபயம் திருட்டு மின்சாரம். இன்று அரசியல்வாதிகளின் விழாக்களுக்கும், பொதுகூட்டங்களுக்கும்தான் மின்சாரம் அதிக அளவில் திருடப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? சாலைகளை விரிவாக்கம் செய்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? அதெப்படி தலைவர்கள் வீடு இருக்கும் தெருவில் மட்டும் மின் தடை படுவதில்லை? சாக்கடை அடைத்துக்கொள்வதில்லை, மழைநீர் தேங்குவதில்லை? சட்டம் திட்டம் பற்றாக்குறை எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?





நாடே பட்டினியால் வாடிக்கொண்டிருந்த போது அரண்மனையில் உல்லாசமாக இருந்த இடி அமினுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மக்களின் துயரத்தை தானும் அனுபவித்து, அத்துயரத்தில் இருந்து மக்களை காப்பவனே உண்மையான தலைவன். அப்படி யாரும் நாட்டில் இருப்பதாக தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. உபதேசம் ஊருக்கு மட்டும்தான். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் சுறா பட கதை போல ஏற்கனவே அரைத்து சலித்ததுதான். ஆனால் இதை அடிக்கடி ஞாபகம் வைத்துகொள்வதும் நம் கடமைதான். ஞாபகப்படுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கம்.



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 12, 2010

பத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்.....


தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிவித்து கொள்வது என்னவென்றால், எழுத்து என்றால் என்னவென்றே தெரியாமல் மனம்போன போக்கில் எழுதிய என் வலைப்பக்கமும் பத்தாயிரம் ஹிட்டுகளை எட்டி உள்ளது. இதற்க்கு உறுதுணையாய் இருந்த விஜய், அஜித், தோனி, சச்சின், நித்தியானந்தா, கலைஞர் (பின்னே இவர்கள் இல்லை என்றால் எதைப்பற்றி எழுதுவது?) என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் மேலும் மேலும் எனக்கு உறுதுணையாக இருக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 


இந்த பதிவில் வரும் கருத்துக்களை எழுத்துப்பிழை இருந்தாலும் பொறுத்துக்கொண்டு படித்த நண்பர்களுக்கும், முரணான கருத்துக்களுக்கு பின்னூட்டம் இட்டு குட்டிய தோழர்களுக்கும், தங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசிய வாக்காளர் பெருமக்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி. பத்தாயிரம் ஹிட்டுகள் வாங்கிய மகிழ்ச்சியில் எண் பத்தாயிரம் பற்றி ஏதாவது ஒரு தகவலை வெளியிடலாம் என்று பார்த்தால் ஒன்றும் சிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை மட்டும் சொல்கிறேன். 


அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஏப்பம் விடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் அதே போன்ற ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ருபாய் (20 ஐநூறு ருபாய் நோட்டுகள்) லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அதை அப்படியே வாயில் போட்டு விழுங்கி உள்ளார். அவரை பிடிக்கவந்த காவலர்களில் ஒருவர் படக்கென அவர் வாயில் கையை விட்டு பணத்தை எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 


ஆங்கிலயர்கள் காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தி வந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டின் படம் இது. இந்த நோட்டு மட்டும் இப்போது புழக்கத்தில் இருந்திருந்தால் அந்த அதிகாரி சிக்கி இருக்கவே மாட்டார். பணத்தை எளிதில் விழுங்கி இருக்கலாம். அவரை பிடிக்க வந்த காவலர்களும் குற்றத்தை நிரூபிக்க மல ஜல பரிசோதனை போன்ற வேறு வழிகளை கையாள வேண்டி இருந்திருக்கும். எங்கள் ஊரில் ஒரு சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார். வழக்கத்துக்கு மாறாக (?!!) நல்லவர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் வந்து நின்றுகொள்வார். சின்ன சின்ன விதிமீறல் செய்யும் நபர்களுக்கு இம்சை அரசன் ஸ்டைலில் வித்தியாசமான தண்டனை கொடுப்பது அவர் வழக்கம். அதாவது சைக்கிளில் ட்ரிபிள்ஸ் செல்பவர்களை நிறுத்தி அந்த சைக்கிளை தூக்கி கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை நடந்து போக சொல்வார். மேலே கூறிய லஞ்ச அதிகாரிகளையும் இந்த மாதிரி தவறு செய்யும் இடத்திலேயே தண்டித்தால்தான் லஞ்சம் குறையும். பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அந்த அதிகாரியை பத்தாயிரம் ரூபாய்க்கு பத்துரூபாய் ஐந்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி தின்ன சொல்லியிருக்க வேண்டும். எது எப்படியோ, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மட்டும் நிஜம்.

நேற்று நாளிதழை திருப்பிய எனக்கு ஒரு செய்தி கண்ணுக்கு புலப்பட்டது. அது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி என்ற செய்திதான். எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. பொதுவாக இந்தியா அணி கிரிக்கெட் ஆடினால், அணி தோற்கும் நிலையில் இருந்தால் கூட கதற கதற கடைசி பந்து வரை மேட்ச் பார்ப்பது என் வழக்கம். 1996 உலககோப்பை அரையிறுதியில் கூட கடைசி நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். நேற்றும் இதே நிலைதான். இலங்கை 143 ரன்களை கடந்த பிறகும் கடைசி வரை ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் காலையில் பேப்பரில் வேறு மாதிரி செய்தியை படித்தவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டேன். பின்னர் பார்த்தால் அது மகளிர் கிரிக்கெட்டாம். அதுவும் நேற்று இந்திய ஆண்கள் அணி இலங்கையை எடுக்கவிடாமல் போராடிய அதே 144 ரன்கள். இலங்கை 79 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய மகளிர் அணி அரையிறுதியில். அடுத்து அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறார்கள். இதில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு கம்மி என்றாலும், சோம்பேறி ஆண் சிங்கங்கள் செய்யத்தவறியதை, பெண் சிங்கங்கள் செய்து முடிப்பார்கள் என்று நம்புவோமாக... 


இந்த வாரம் எதிர்பாராத விதமாக சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவீஸ் நிகழ்ச்சி பார்க்க வேண்டிய அவலம் நேர்ந்தது. ஒரு காலத்தில் ஆர்வமாக நான் பார்த்து வந்த நிகழ்ச்சி. பேசாமல் இந்த நிகழ்ச்சிக்கு சன் பிக்சர்சின் டாப் 10 மூவீஸ் என்று பெயர் மாற்றி விடலாம். பெரும்பாலான படங்கள் சன் குழுமத்தின் படங்கள். மற்ற படங்கள் சன் குழுமத்தின் விசுவாசமிக்க நிறுவனங்களின் படங்கள். அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் நான்காம் இடத்தில் 'தம்பிக்கு இந்த ஊரு' என்ற ஒரு அற்புத காவியம் இருக்கிறது. ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ தம்பிக்கு இந்த ஊரு படம் அசல் படத்தை விட சிறந்த படமா என்று தெரியவில்லை. (நன்றாக கவனியுங்கள் , அசல் சிறந்த படம் என்று சொல்லவில்லை..) சன் பிக்சர்ஸ் அசல் படத்தை வாங்க முயற்சி செய்து, சிவாஜி ப்ரோடக்சனால் நிராகரிக்கப்பட்டதாம். ஒருவேளை அசல் சன் கைக்கு போயிருந்தால் சுறா ரிலீஸ் வரை அசல் முதலிடத்தில் இருந்திருக்கும். என்ன கொடுமை பிரபு இது? தன் பாதங்களை நக்கி சுத்தம் செய்யும் நிறுவனங்களின் படங்களை திட்டமிட்டு வெற்றி பெற்றதை போல் மாயை ஏற்படுத்துவதில் சன்னுக்கு நிகர் சன்னேதான். சன் இணைய தளத்தில் இந்த டாப் 10 நிகழ்ச்சியை பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்றால், படங்கள் வசூல் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இது படம் பார்க்க செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று. எனக்கு ஒரு சந்தேகம், நாடோடிகள் என்ற படம் கொஞ்ச நாள் கூட டாப் 10 இல் இல்லை. வாரணம் ஆயிரம் என்ற படம் பத்துபடங்களில் இடம்பெறவே இல்லை. இதன் காரணம் என்ன? சன் டிவி தனக்கு இருக்கும் நல்ல பெயரை சுய லாபத்துக்காக துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அது என்றைக்கு என்றுதான் தெரியவில்லை.


கடைசியாக கொஞ்சம் உருப்படியான மேட்டர் பற்றி பார்க்கலாம். பள்ளிகளுக்கு அதிக பட்ச கட்டண நிர்ணயம் செய்துள்ளது நம் அரசு. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். இதே போல சட்டங்கள் இதற்கு முன் இருந்ததில்லையா? நம் நாட்டில் சட்ட திட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அதனை நிறைவேற்றுவதில்தான் பிரச்சனையே அடங்கி இருக்கிறது. இதுவரை வெளிப்படையாக கேட்டு வந்த பள்ளிகள் இனி மறைமுகமாக கேட்பார்கள். பொறியியல் கல்லூரிகளில் அதிக தொகை கேட்டால் பெற்றோர்கள் தாராளமாக புகார் செய்யலாம் என்று சொன்னதை கேட்டு எத்தனை பெற்றோர்கள் புகார் செய்தார்கள்? இல்லை எத்தனை கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது என்று அறிய ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்குழு இன்ஸ்பெக்சன் வரும். மிக கறாரான ஆசாமிகள்தான் வருவார்கள். அவர்கள் கல்லூரிகளில் உள்ள வசதிகளில் குறை கண்டுபிடிப்பதே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். காரணம் கல்லூரிகளின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கம் அல்ல. எத்தனை குறை கண்டுபிடிக்கிறார்களோ அவ்வளவு பணம் நிவாகத்திடம் இருந்து கறந்து விடலாம். இது போன்ற நிலைமை இந்த பள்ளி கட்டண விசயத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த சட்டம் வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் இதனை நடைமுறைப்படுத்தும் விதத்தில்தான் உண்மையான வெற்றியே அடங்கி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

May 10, 2010

விவஸ்தை கெட்ட விளம்பரங்கள்...


உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் தொலைகாட்சி பார்ப்பவராக இருந்தால், ஒரே ஒரு தடவை மட்டும், விளம்பர இடைவேளையில் சேனலை மாற்றாமல், அந்த விளம்பரங்களை உற்று கவனியுங்கள். பெரும்பாலான விளம்பரங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவில் அடக்கி விடலாம். குளிர்பானங்கள், ஆடைகள், சோப்பு, கிரீம்கள், வாசனை திரவியங்கள் அல்லது பாடி ஸ்பிரே, இன்சூரன்ஸ் அல்லது பென்சன், மதுபானங்கள் மற்றும் சிகரெட், செல்போன் மற்றும் அது சம்பந்தமானவைகள், வீடு உபயோக பொருட்கள் (குறிப்பாக டிவி, டிவிடி), கார் மற்றும் பைக். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்று கவனித்தீர்களா?


உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஓரளவு பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளில், அதிக இளைஞர்களை (15 முதல் 25 வயதுக்குள்) கொண்ட நாடுகள் சீனா மற்றும் இந்தியா. இதில் ஜனத்தொகை சதவீத அடிப்படையில் பார்த்தால் இந்தியாதான் முதலிடம் பிடிக்கும். அதாவது இந்தியாதான் உலகிலேயே மிக இளமையான நாடு. எனவே துடிப்பு, வீரம், ஆர்வம் எல்லாம் அதிகம் இருக்கும். அதனால்தான் பல நாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வேலை தேடி வருகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். 


இப்படி அதிக இளைஞர்களை கொண்டிருப்பதால் பன்னாட்டு பொருட்களும் வந்து விற்பனைக்கு குவியும். இவை அனைத்துமே இளைஞர்களை குறிவைத்தே சந்தை படுத்த படுகின்றன. விளம்பரங்களும் இளைஞர்களை குறிவைத்தே ஒளிபரப்ப படுகின்றன. விளம்பரம் என்பது ஒரு பொருளின் நிறைவான பண்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு சாதனம். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. என்ன காட்டினாலும் ஆவென்று வாயை பிளந்து கொண்டு வாங்கி விடும் முட்டாள்தனமான இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்று அந்த நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்து விட்டது. எனவே விற்கும் பொருளுக்கும் விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒளிபரப்ப படுகின்றன. அதே போல கீழ்த்தரமான எண்ணங்களை சித்தரிக்கும் விளம்பரங்களும் அதிகம். நான் கவனித்த சில மோசமான விளம்பரங்கள்....


அக்சய் குமார் தாவுகிறார், குதிக்கிறார், திடீரென ஒரு பெண்ணை கட்டி பிடிக்கிறார். அவளிடம் இருந்து குளிர்பானத்தை பறிக்கிறார். இன்னொரு விளம்பரம், ஒரு பெண்ணிடம் இருக்கும் குளிர் பானத்தை பறிப்பதற்காக, அவளை தடவி நிலைமறக்க செய்து பின் அந்த பானத்தை குடிக்கிறான் ஒருவன். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள், குளிர் பானத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஸ்பிரைட் குடிப்பவன் எல்லாம் அதிகம் பேசமாட்டான், என்று ஒரு விளம்பரம். இது இளைஞர்களின்(இது யங்கிஸ்தான் செல்லம்!) பானம் என்று ஒரு விளம்பரம். அதாவது இதை குடிக்காவிட்டால் இளைஞன் இல்லை என்று பொருள். மேலே சொன்ன ஏதாவது குளிர்பானத்துக்கு சம்பந்தமான விளம்பரமாக இருக்கிறதா? 


நேற்று ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு விளம்பரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கும் என்பதற்கு உதாரணம். பொதுவாக வாசனை திரவியங்கள் பாலுணர்வை தூண்டும் என்பது உண்மை. ஆனால் தன்னிலை மறந்து ஒழுக்கக்கேடான செயல்களை செய்யத்தூண்டும் என்பது மிகைப்படுத்தல். இந்த பாடி ஸ்ப்ரேயை பயன்படுத்தினால் எல்லா பெண்களும் உங்களுடன் செக்சுக்கு இணங்கி விடுவார்கள் என்கிற ரீதியில் ஆக்ஸ் விளம்பரப்படுத்தி வந்தது. இப்போது அதற்கு போட்டியாக சட்டாக் களமிறங்கி உள்ளது. பரிட்சையில் பிட் அடிக்கும் மாணவன் அருகில் சென்றவுடன் பெண் கண்காணிப்பாளர் அவன் வாசனையில் மயங்கி அவனுக்கு போன் நம்பர் கொடுப்பது போல ஒரு விளம்பரம். இது இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவன் தன் வீட்டு அறையில் சட்டாக் பாடி ஸ்பிரே போட்டு கொள்கிறான். எதிர்த்த ஜன்னலில் முதலிரவு முடிந்த ஒரு பெண். இவனை பார்த்தவுடன் தன் சேலையை அவிழ்ப்பது போல ஒரு விளம்பரம். அதாவது திருமணம் முடிந்து ஒரு நாளே ஆன பெண்ணை கூட கவிழ்த்து விடலாம். அம்மா பெண்குல தெய்வங்களே, உங்களின் குரல் இதற்கெல்லாம் ஏன் உயர்வதில்லை? ஒரு பெண்ணை இதைவிட அசிங்க படுத்த முடியுமா?




முதன் முதலில் தமிழகத்தில் செல்போன் விளம்பரம் செய்யப்பட்டபோது அதில் சொன்ன கருத்து, கையில் செல்போன் வைத்திருந்தால் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் தொழிலை கவனிக்கலாம் என்று கூறி விற்றார்கள். இப்போது தலைகீழ். காதலன் ஒருவன் தன் மடியில் படுத்திருக்கும் காதலிக்கு மெச்செஜ் அனுப்புகிறான். கேட்டால் இலவச மேச்செஜாம். வெட்டி அரட்டை அடியுங்கள், உங்கள் தந்தை திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாதீர்கள், ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், நீங்கள் இரவு முழுவதும் எந்த தொந்தரவும் இல்லாமல் பேசலாம், எஸ்டீடி வசதி உள்ள போனை தாயிடம் கொடுத்துவிட்டு, மகளிடம் கடலை போடலாம், இது போல ஏகப்பட்ட வசதிகள் நிறைந்த போன்கள்தான் இப்போது விளம்பரம் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் ஒரு விளம்பரம். மகளை சினிமாவுக்கு அழைத்து செல்ல அவள் நண்பன் வருவான். அவன் மீது சந்தேகம் அடைவாள் தாய். அவனோ தாயை கிறக்கமாக பார்த்து நாம சினிமா போலாமா டார்லிங் என்பான். தாயின் கண்களும் கிறங்கும். திடீரென சுதாரித்து தன் மகளை அவனுடன் அனுப்புவாள் தாய். இதற்கும் செல்போனுக்கும் சம்பந்தம் உண்டா?


இந்த கார் பைக் காரார்கள் செய்யும் அநியாயம் அதற்கும் மேல். அவர்கள் விக்கும் கார் மற்றும் பைக் தரையிலேயே செல்வதில்லை. ஒரு விளம்பரத்தில், எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு தீவுக்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட பைக் ஓட்டும் நம்மாள் மட்டும் கப்பல் கப்பலாக பைக்கிலேயே தாவி கரை ஏறி விடுவார் (விஜய் ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் போலும்), ஜெட் விமானத்தை விட வேகமாக போவது போல, பல பெரிய வாகனங்களை பார்த்ததும் வண்டி எருமை மாடுபோல மாறி உறுமுவது போல, உங்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்று அடைமொழியுடன் பைக் மற்றும் கார் விற்கிறார்கள். அதை வாங்கி அதே போல மின்னல் வேகத்தில் பறந்து, நடு ரோடில் மல்லாக்க படுத்து வாயை பிளக்கிறார்கள் நம் இளைஞர்கள். இவர்களுக்கு ஒரு அடிப்படை விசயமே தெரியவில்லை. நம்மூர் டிராபிக்கில் அவ்வளவு வேகமாக வண்டி ஓட்ட முடியுமா என்று யோசித்து பார்க்க வேண்டும். அவர்கள் தரும் தரத்தில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு மாளாது. அப்பன் காசுதானே என்று இன்றைய இளைய சமூகம் சிறிதும் கவலைப்படுவதில்லை. 



இப்படி விளம்பரங்களுக்கான எந்த ஒரு வரை முறையும் இல்லாமல் மனம் போன போக்கில் பொருட்களை சந்தை படுத்துகிறார்கள். நம் இளைஞர்களோ தாம் மூளை சலவை செய்யப்படுகிறோம், ஏமாற்ற படுகிறோம் என்பதை அறியாமல், பரிதாபமாக வீழ்ந்து விடுகின்றனர். கலாச்சார மறுமலர்ச்சி, நகைச்சுவை, இன்னோவேடிவ் ஐடியாக்கள் என்று மாய சேற்றில் சிக்கி விடுகிறார்கள். எனவே ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தரம் ஆகியவற்றை சோதிக்க வேண்டுமே தவிர அது ஏற்படுத்தும் கிளுகிளுப்பை அல்ல. விளம்பரங்களுக்கு இருக்கும் தணிக்கை முறையை இன்னும் கடுமையாக்க வேண்டும். இல்லையேல் பலவீனமடைந்த, முதுகெலும்பு இல்லாத, எளிதில் ஏமாற்றவல்ல இளைய சமுதாயத்தை அவை உருவாக்கி விடும்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

காதல் கசக்குதய்யா....


பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு இன்றுதான் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொண்டேன். நான் எழுதிய தோனி சொல்ல மறந்த கதை என்ற பதிவை பல இணைய நண்பர்கள் தரவிறக்கம் செய்து மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார்கள். அது சுற்றி சுற்றி இன்னொரு பதிவாக வேறொரு தளத்தில் வந்து என் பதிவை விட மிக அதிக வோட்டுகள் வாங்கி விட்டது. அது நம்ம கிருஷ்ணா அவர்களின் பதிவு. அந்த தளத்தில் சென்று இது என்னுடையது என்று கருத்து தெரிவித்தேன். அவர் நினைத்திருந்தால் அதை அப்படியே விட்டிருக்கலாம். ஏனென்றால் இது என்னுடைய பதிவு என்பதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. ஆனால் நான் சொன்னதை நம்பி தன் பதிவில் என் வலைப்பக்கத்தின் இணைப்பை தந்து தன் பெருந்தன்மையை நிருபித்துவிட்டார். ஒவ்வொரு பதிவுக்கும் இருநூறு ஹிட் வாங்கவே கஷ்டப்படும் என் மாதிரி புதியவனுக்கு ஒரே பதிவில் இரண்டாயிரத்துக்கும் அதிக ஹிட்டுகள். "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை". நன்றி கிருஷ்ணா அவர்களே...


சமீபத்தில் நம்ம தலயோட ஆருயிர் ரசிகர் யோகநாதன் அவர்கள் தனக்கு முகம் தெரியாத ஒருவரிடம் இருந்து காதல் குறுந்தகவல்கள் வருவதாக சொல்லியிருந்தார். உடனே என் பழைய நினைவுகளை பதிவாக போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவரும் அதையே சொல்ல, விளைவுதான் இந்த பதிவு. 


ஒவ்வொரு பையனுக்கும் தன் விடலைப்பருவத்தில் காதல் கண்டிப்பாக வரும். எனக்கும் வந்தது. எங்கள் ஊரில் ஆண் பெண் இருவருக்கும் தனிதனி பள்ளிகள். இரண்டும் வெவ்வேறு துருவங்கள். எனவே பத்தாம் வகுப்பு படிக்கும் வரை என் வயது பெண்களின் அருகாமை இருக்கவே இல்லை. அதனாலோ என்னவோ எனக்கு காதல் பற்றி அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. அதன் பின் சிறு சிறு அனுபவங்கள் ஏற்பட்டன. எனக்கு காதல் வந்தது என்று சொல்ல முடியாது. என் வயது பசங்க எல்லாம் என் ஆளு உன் ஆளு என்று பேசிக்கொண்டிருக்கும் போது நமக்கு மட்டும் ஆளு இல்லையே என்று நினைப்பேன். கண்ணில் படும் பெண்ணை எல்லாம் இவள்தான் நம் ஆளு என்று முடிவு கட்டிக்கொள்வேன். ஆனால் அவள் கண்டிப்பாக வேறு ஒருவனின் ஆளாகத்தான் இருப்பாள். இவர்கள் எல்லோரையும் தாண்டி என்னைப்பார்த்தவள் அவள்தான். அவள் பெயர் மீனா. என்னை இமைகொட்டாமல் பார்ப்பாள். எனக்குத்தான் கூச்சமாக இருக்கும். ஆனால் அப்போது என் மனம் காதல் செய்வது என்று முடிவு கட்டவில்லை. எனக்கு ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று நினைத்தது கூட நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டும் என்றுதான். என் நோக்கம் எல்லாம் திருட்டு தம், பலான சினிமா என்று இருந்தது. நான் அவதான் என் ஆள் என்று நண்பர்களிடம் பெருமையாக கூறிவேன். ஆனால் அவளிடம் பேசியதே கிடையாது. காரணம் எனக்கு பயங்கர கூச்சம். அந்த வயது வரை எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் என்றால் அது என் அம்மாதான். 



அப்போது என் குடும்பத்தில் நிகழ்ந்த சில அதிரடி சம்பவங்களால் என் வாழ்க்கை திசை மாறியது. என் கவனமும் மாறியது. பின் கல்லூரியில் சேர்ந்தேன். மீனாவை மறந்து போனேன் என்று சொல்வதை விட, இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டேன். என்னுடைய நடவடிக்கைகள் மாறின. கண்ணில் படும் சப்பை பிகர் கூட அழகாக தெரிந்தாள். எனக்கு கூச்சம் போயிருந்தது (குறைந்திருந்தது). ஆனால் அந்த இடத்தை திமிர் நிரப்பி இருந்தது. எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும், அலட்சியமான ஒரு பார்வை பார்த்துவிட்டு போய் விடுவேன். பிறகு நான் செய்ததை நினைத்து நொந்து கொள்வேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் மாறமுடியவில்லை. நானாக வலிய சென்று பேசியதில்லை. அவர்களாக பேசினால் நன்றாக பேசுவேன். இதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை பெண்கள் மத்தியில் பெற்று தந்தது. முதலில் திமிர் பிடித்தவன், நடிக்கிறான் என்று சொன்னவர்கள் கூட, இவன் இயல்பே இப்படித்தான் என்று சொன்னார்கள். என் வகுப்பில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் பேவரிட் ஆனேன். ஏனென்றால் எனக்கு பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. ஆண் நண்பர்களிடம் எப்படி பேசுவேனோ அதே தோரணையில் தான் பெண்களிடமும் பேசுவேன். இது அவர்களுக்கு இன்னும் பிடித்து போனது. இவன் தேவையில்லாமல் வழிவதில்லை என்ற பெயர் வாங்கி கொடுத்தது. அதே போல ஆண் நண்பர்களும் என்னுடன் நன்கு பழகினார்கள்.

எங்கள் செட்டில் எனக்குதான் நண்பர்கள் அதிகம். யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதில்லை. பேசினால் தோழமையான, தண்மையான வார்த்தைகளே வரும். இதனால் எல்லா டிபார்ட்மென்ட்களிலும் ஆண் பெண் பேதமில்லாமல் நண்பர்கள் இருந்தார்கள். பேசும்போது நகைச்சுவை தெறிக்கும். அதனால் என்னை சுற்றி நண்பர்கள் இருந்துகொண்டே இருந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஒரு உண்மை புரிந்தது. எனக்கு நண்பர்கள் அதிகம். நான் பேசுவதை கேட்பார்கள், சிரிப்பார்கள். ஆனால் காதலி என்று ஒருத்தி இல்லை. இனி அமையாது. ஏனென்றால் அனைவரும் நண்பர்கள், என்னால் அவர்களை வேறு கோணத்தில் பார்க்க இயலாது.


அப்போதுதான் என் நண்பன் எனக்கு ஒரு அரிய யோசனை ஒன்றை கூறினான். "டேய் நம்ம செட்டுல பார்த்தா வேலைக்காகாது. பேசாம ஜூனியர ட்ரை பண்ணு." என்றான். அவன் சொன்னதை வேதவாக்காக கொண்டு, என்னவளை தேடினேன். ஒருவழியாக அவளை கண்டுபிடித்தேன். பெயர் நர்மதா. சாயலில் மீனாவை(நடிகை அல்ல. என் பள்ளி பருவத்தில் வந்தவள்.) ஒத்திருப்பாள். நான் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில்தான் அவளும் வருவாள். தினமும் அவளை கவனிக்க தொடங்கினேன். அவளை நெருங்கி பேசிவிடவேண்டும் என்று நினைப்பேன். திடீரென ஏதோ ஒன்று என்னை தடுத்தது. ஆம் வெகு நாட்களாக காணாமல் போயிருந்த ஒன்று. கூச்சம். எவ்வளவோ முயற்சி செய்தும் அவளிடம் பேச முடியவில்லை. மறுபடியும் என் நண்பனிடம் ஐடியா கேட்டேன். "மச்சி பெண்களிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியாதவர்களுக்கேன்றே ஒரு வழி இருக்கிறது. நீங்கள் இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து வந்தால் அன்று அவளிடம் சேம் பின்ச் என்று சொல் கண்டிப்பா சாக்லேட் வாங்கி தருவா." என்றான். நான் அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். பேருந்தில் ஏறினேன். அவள் அமர்ந்திருந்த சீட்டின் அருகில் நின்று கொண்டேன். எனக்கும் கூச்சத்துக்கும் பெரிய போராட்டம். அவளை பார்த்தேன். என்னை பார்த்ததும் புன்னகைத்தாள். அட என்னை தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன். கஷ்டப்பட்டு மென்று விழுங்கிக்கொண்டே "சேம் பின்ச்" என்றேன். அவள் காதில் விழவில்லை போலும். "என்ன அண்ணா சொன்னீங்க?" என்றாள். தலையில் பெரிய இடி விழுந்தது போலிருந்தது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

பேருந்து நிறுத்தத்தில் சோகமாக நின்று கொண்டிருந்தேன். அருகில் ஒரு பெண். பார்த்தால் என் கண்களை நம்ப முடியவில்லை. மீனா. அட என்ன கொடுமைடா. என்னை பார்ப்பதற்காக நிற்பது போலிருந்தது. மனதில் சிறு ஆறுதல். பின்னால் இருந்து என் நண்பன் முதுகில் தட்டினான். "என்னடா இங்கே" என்றேன். "இல்லைடா நானும் என் ஆளும் படத்துக்கு போறோம்." என்றான். "எங்கேடா அவ?" என்று கேட்டேன். இதோ என்று மீனாவை காட்டினான். ஏற்கனவே தலையில் இறங்கிய இடி இதயத்திலும் இறங்கியது. என் நண்பனும் கூச்ச சுபாவம்தான். ஆனால் புத்திசாலி. பிடித்துக்கொண்டான். எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடிக்கொண்டே வந்துவிட்டேன். அதிலிருந்து எந்த பெண் மீதும் ஈடுபாடு காட்டவே இல்லை. என் நண்பர் கூட்டம் பெருகியது. 


நான் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த போது, எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மின்னஞ்சல் வரும். கொஞ்சலான வார்த்தைகள் கொட்டி கிடக்கும். என் நண்பர்களுக்கு குறும்பு அதிகம். அதனால் எவனாவது ஒருவன்தான் கலாய்க்கிறான் என்று அதை கண்டு கொள்ள வில்லை. ஆனால் மின்னஞ்சல் வருவது நிற்க வில்லை. ஒரு வழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது. மின்னஞ்சல் வருவதும் நின்று விட்டது. இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. திடீரென ஒருநாள் ஒரு போன் கால். "நான் உங்கள் ஜூனியர். என் பெயர் சரண்யா. உங்கள் நண்பி ரம்யாவின் தங்கை." என்று. நான் ரம்யாவை பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டதால், சரண்யாவிடம் ஆர்வமாக விசாரித்தேன். அவள், "என்ன என்னை பற்றி ஒன்னும் கேட்க மாட்டேங்கறீங்க?" என்று கேட்டாள். என்னடா ரூட்டு மாறுகிறது என்று நினைப்பதற்குள், "என் அக்கா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா. நான் உங்களை கல்லூரியிலேயே பார்த்திருக்கிறேன். ஆனால் பேச கூச்சமாக இருக்கும். ஆனால் இப்போதான் தைரியம் வந்தது." என்று பேசிக்கொண்டே இருந்தாள். அடிக்கடி பேச ஆரம்பித்தாள். ஒரு நாள் பேச்சு வாக்கில் என்னை காதலிப்பதாக சொன்னாள். எனக்கு அப்போது வேலை இல்லை. அதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. மழுப்பிக்கொண்டே இருந்தேன். பின்னொருநாள் அவள் அக்கா ரம்யாவை சந்தித்தேன். அவள் வேறு டிபார்ட்மென்ட். ஆனால் நல்ல பழக்கம். சந்தித்து வெகு நாட்கள் ஆனதால் பல விஷயங்கள் பேசினோம். "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை." என்று சொன்னாள். பின் அலுவலகத்தில் சக பணியாளர் ஒருவர் தன்னை காதலிப்பதாக சொல்லி அதை தான் மறுத்த விசயத்தையும் சொன்னாள். நானும் பேச்சு வாக்கில் எனக்கு படிக்கும் காலத்தில் வந்த காதல் மின்னஞ்சல்கள் பற்றிய விஷயத்தை சொன்னேன். அவள் முகம் மாறியது. அமைதியாகவே இருந்தாள். என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்க்கு அவள், "நீ இன்னும் அதை நினைவில் வைத்திருப்பாய் என்று நினைக்கவில்லை. ஒரு உண்மையை சொல்கிறேன். அந்த மின்னஞ்சல்களை அனுப்பியது நான்தான். உன்மேல் அளவு கடந்த காதலால் அப்படி செய்துவிட்டேன். என்னால் இப்போது உன்னை மறக்க முடியவில்லை. அதனால்தான் இன்னொருவர் சொன்ன காதலை கூட நிராகரித்து விட்டேன். நீ ரொம்ப நல்லவன். என்னுடன் ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு" என்றாள்.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அக்காவும் தங்கையும் மாறி மாறி காதலை சொன்னார்கள். இருவரின் காதலையுமே ஏற்க முடியாது என்று எனக்கு தெரியும். அக்காவை கூப்பிட்டு தங்கை காதல் சொன்ன விஷயத்தை சொன்னேன். அவள் பக்குவமானவள். ஏற்றுக்கொண்டாள். அவள் மற்றும் அவள் தங்கையால் ஏற்பட்ட மனகஷ்டத்துக்கு மன்னிப்பு கேட்டாள். பின் அவள் தங்கையுடன் பேசினாள். தங்கை என்னிடம் வந்து பயங்கரமாக அழுது சண்டை போட்டாள். முதலில் அமைதியாக பேசிய நான் ஒரு கட்டத்தில் கோபம் தாளாமல் திட்டிவிட்டேன். அவள் கோபத்துடன், "நீ பெரிய இவனா?" என்று திட்டிவிட்டு சென்று விட்டாள். அக்கா வந்து, "உனக்கு பெரிய தொந்தரவு தந்துவிட்டேன். உனக்கு என் மேல் காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் காதலை என்னால் மறக்க முடியாது. குட் பை!" என்று சொல்லி விட்டு சென்றாள். பின் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் எண்ணை மாற்றி விட்டாள். 


அந்த கால கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலில் நான் இருந்தேன். ஆனால் இப்போது இந்த கதையை யாரிடம் சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இது காதல் கதையோ காமெடி கதையோ என் வாழ்வில் நடந்த உண்மை கதை. இப்போதும் பழைய ஞாபகங்களில் மூழ்கும் போது நினைவில் வருவது மீனாதான். நானும் அவளும் காதலித்தது இல்லை. ஆனால் அந்த இளம் வயதில் காதலி என்று நான் நினைத்தது அவளைத்தான். ஆனால் இப்போது அவள் மாற்றான் மனைவி. அவளை காதலியாய் நினைக்க முடியாது. இனி ஒரு பெண் என் வாழ்வில் வந்தாலும் அவள் மீனாவாக இருக்க முடியாது...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்க பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

May 5, 2010

சச்சினுக்கு நோபல் பரிசு...


எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. 

அடுத்த ஆண்டு நோபல் பரிசு வழங்குவதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன. சச்சின் டெண்டுல்கர் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படுகிறார், ஒரு இணையதளத்தில் அவருக்கான வாக்கெடுப்பு நடக்கிறது. இப்போது வாக்கெடுப்பில் முன்னணியில் இருப்பவர் ரிக்கி பாண்டிங். சச்சின் மிகவும் பின்தங்கி உள்ளார். எனவே இந்த தகவலை அனைவருக்கும் பரப்புங்கள். உடனடியாக வாக்களியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் சச்சினுக்கு வாக்களியுங்கள்.

இதுதான் எனக்கு வந்த தகவல். கடைசி வரியை படித்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் சச்சினுக்கு வாக்களித்தால்தான் இந்திய குடிமகனா? பிறகு ஒருவழியாக சமாதானம் ஆனேன். சரி இந்தியா சார்பில் சச்சின்தான் பரிந்துரைக்கப்படுகிறார். ஆகவே அவர் வென்றால் இந்தியா வெல்லும். எனவே ஒரு இந்திய குடிமகன் என்ற வகையில் சச்சினுக்குதான் வாக்களிக்க வேண்டும்.

பிறகு வெகு தாமதமாகத்தான் என் உருப்படாத அறிவு விழித்துக்கொண்டது. அடங்கொய்யால.... விளையாட்டுக்கும் நோபல் பரிசுக்கும் சம்பந்தமே கிடையாதே? விளையாட்டுக்கென்று நோபல் பரிசு கொடுப்பதில்லேயே? என்று யோசித்தேன். பின் ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டேன். அடுத்ததாக நோபல் பரிசு கொடுப்பதற்கு தனி அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஏன் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று யோசித்தேன். அப்படி நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சீன பிரதிநிதிகள்தான் நோபல் பரிசு வெல்வார்கள். அதிலும் கழக கண்மணிகளுக்கு அமோக வாய்ப்பிருக்கிறது. அவர்கள்தான் சொல்லி அடிப்பதில் கில்லி ஆயிற்றே... இப்போதெல்லாம் எனக்கு இந்த விருதுகளில் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எப்போது தளபதிக்கு முனைவர் பட்டம் கொடுத்தார்களோ அப்போதிருந்து அதில் நம்பிக்கை போய்விட்டது. எப்போது இரட்டை அர்த்த காமெடியன் விவேக்குக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்களோ அதிலும் நம்பிக்கை போய் விட்டது. இன்னும் இவர்கள் விட்டு வைத்திருப்பது பாரத ரத்னா ஒன்றுதான். அது கூடிய விரைவில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒபாமாவுக்கு (அமைதிக்காக??!!) வழங்கப்பட்டதில் இருந்து நோபல் பரிசிலும் நம்பிக்கை போய் விட்டது. இதை வென்று சச்சின் என்ன சாதிக்க போகிறார்?


சரி நான் சொல்ல வந்தது அதுவல்ல. நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படை உணர்ச்சிகளை லேசாக உரசிவிட்டால் பொங்கி விடுவார்கள். ஆகவேதான் சில இவர்களை உசுப்பிவிட்டு அவ்வப்போது குளிர் காய்ந்து கொள்கிறார்கள். இதற்கு சான்றாக, சச்சின் பிறந்தநாள் கேக்கில் இந்திய கொடி, சானியா மிர்சா திருமணம், குஷ்பு-கற்பு,ஜெயராம், நித்யா, அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் மீது எழும் சர்ச்சைகளையும் குற்றசாட்டுகளையும் சொல்லலாம். இது நாடு முழுவதும் நடக்கிறது. இதே நிலைதான் கர்நாடகாவினருக்கும். அங்கே காவிரியை காக்காவிட்டால் அவன் கன்னடத்துக்கு துரோகி. இந்த உணர்ச்சியை சிலர் பயன் படுத்திக்கொள்கிறார்கள். இப்படித்தான் கொஞ்ச காலம் முன்னால் தாஜ்மகாலுக்கு ஓட்டு போடுங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டு போடுங்கள், அப்போதுதான் உலக அதிசய கமிட்டி(அட பேர் நல்ல இருக்கே!) தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் இந்தியனா? தமிழனா? என்றெல்லாம் உணர்ச்சிவசமாக பேசினார்கள். சரி உலக அதிசயத்தை தேர்ந்தெடுப்பதற்கு இவர்கள் யார்? என்று யாராவது யோசித்தார்களா? யோசித்து விட்டால் நாம் தமிழன் இல்லையே? இந்தியன் இல்லையே? ஏதோ ஒரு நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள, தன் இணையம் அதிக ஹிட்டுகள் வாங்க செய்யும் கேவலமான செயல் என்று எத்தனை பேருக்கு தெரியும்? இதில் கொடுமை என்னவென்றால் ஓட்டுபோட்ட அனைவரும் படித்தவர்கள்.


அதே மாதிரிதான் ஏதோ ஒரு நாதாரி பொழுதுபோகாமல் கிளப்பி விட்ட வதந்தியை நம்பி, சச்சினுக்கு ஓட்டு போடுங்கள் என்று எல்லோருக்கு குறுந்தகவல் அனுப்பி விடுகிறோம். இது ஒரு சின்ன உதாரணம்தான். முன்பெல்லாம் மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தபால் அட்டை வரும். அதில் இதை 50 பேருக்கு அனுப்பா விட்டால் வீட்டுக்குள் பிசாசு குடிபுகும் என்று பீதியை கிளப்பி விடுவார்கள். காலம் மாறிவிட்டது. இது கணிப்பொறிகளின் காலம். அதனால்தான் இதே பீதியை மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக கிளப்பி விடுகிறார்கள். இப்போது குறுந்தகவலுக்கு கட்டணம் என்று வந்ததும் இவ்வகையான வதந்திகளும் அதிகரித்து விட்டன. எனக்கு சமீப காலமாக வந்த சில குறுந்தகவல்கள்...


1. ஓம் விநாயகா (இந்த இடத்தில் காளி, பராசக்தி, சிவன், ஜீசஸ், அல்லா என சீசனுக்கு ஏற்ற மாதிரி மாறும்) ..இதை பத்துபேருக்கு அனுப்புங்கள். நாளை நல்ல செய்தி வரும். இல்லா விட்டால் பத்து ஆண்டுகளுக்கு குடும்பம் சீரழியும்.


2. சச்சினுக்கு ஓட்டு போடுங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால்....


3. இது அதிர்ஷ்ட தேவதையின் படம் (மின்னஞ்சல்) இதை அனுப்பியவுடன் ஜப்பானை சேர்ந்த ஒரு நாதாரிக்கு ஒரு கோடி லாட்டரி விழுந்தது, அனுப்பாத ஒருவருக்கு பக்கவாதம் வந்தது உடனே 20 பேருக்கு அனுப்புங்கள்.


4. www.ajaalkujaal.com இந்த தகவலை பத்துபேருக்கு அனுப்பி, 50 ரூபாய் டாக்டைம் இலவசமாக பெறுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறது. (நான் போஸ்ட் பெய்ட் இணைப்பு வைத்துள்ளேன் எனக்கு எப்படி வேலை செய்யும்?).


இவற்றுக்கெல்லாம் அசராதவர்களுக்கேன்றே தனியாக ஒரு ஐடியா கைவசம் இருக்கிறது.


பத்துமாத குழந்தைக்கு உடனே இதய சிகிச்சை செய்யவேண்டும். நீங்கள் இந்த தகவலை அனுப்பினால் பத்து பைசா கிடைக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு அனுப்பி உங்கள் மனிதத்தன்மையை காட்டுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு இதயம் இருந்தால் அனுப்புங்கள். சந்தேகமாக இருந்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.(0000000). 


நம்மில் பலபேர் அந்த எண்ணை சோதிப்பதில்லை. என் நண்பன் ஒருவன் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வகையாக வாங்கி கட்டிக்கொண்டான். அது யாருடைய எண் என்றே தெரியவில்லை. இதே போல ரத்தம் தேவை போன்ற தகவல்களும் வரும். நம் மக்கள் ரத்த தானம் செய்ய முன் வரமாட்டார்கள். எனவே அவர்கள் நோக்கம் அந்த தகவல் பரவ வேண்டும் அவ்வளவுதான். என்னை மாதிரி ஆர்வகோளாறுகள் அந்த எண்களுக்கு தொடர்புகொண்டால் எண் உபயோகத்தில் இருக்காது. இதில் பாதிக்க படுவது நாம் இளைய தலைமுறைதான். பரீட்சை நேரத்தில் இந்த மாதிரி தகவல் வந்தால் உடனே அனுப்பி விடுவார்கள். பெயில் ஆகிவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.




இப்படி செய்வதால் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை. ஆனால் நிஜமாகவே பரப்பவேண்டிய செய்திகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. நண்பர்களே! ஒரே ஒரு வேண்டுகோள் கடவுள் ஒன்றும் மெசேஜ் கவுன்ட்டர் அல்ல. நாம் எத்தனை தகவல் அனுப்புகிறோம் என்று எண்ணிப்பார்த்து அருள் பாலிக்க. அதே போல இலவச டாக்டைம் கொடுக்கும் அளவிற்கு தாராள பிரபுகள் அல்ல நாம் செல்போன் நிறுவனங்கள். அவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பல வழிகள் உள்ளன. எனவே இதுபோல் தகவல்கள் வந்தால் அனுப்பியவருக்கு தொடர்பு கொண்டு உறுதி படுத்திக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தமான தகவல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. மெசேஜ் பார்வட் செய்தால் பத்துபைசா கிடைக்கும் என்று சொல்வது நம்பும்படி இல்லை. யாராவது உறுதி படுத்துங்களேன். எது எதுக்கோ பகுத்தறிவை பயன்படுத்தும் நாம், இந்த சின்ன விஷயத்திலும் பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லையே?


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்க...


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...