விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 21, 2013

கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1



செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். 

வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் மொக்கையாகவே எழுதிக் கொண்டிருப்பது? இந்த முறை உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போகிறேன். இது ஒன்றிரண்டு கட்டுரையோடோ, அல்லது அதற்கு மேலாகவோ தொடரலாம். நான் கண்ட கேட்ட சில தகவல்களை வைத்து இந்த கட்டுரையை எழுத முடிவு செய்து இருக்கிறேன். இதில் பகிரப்படும் சில தகவல்கள் உங்களை திடுக்கிட செய்யலாம். என் நோக்கம் குறிப்பிட்டு யாரையும் தாக்குவதோ, இழிவு படுத்துவதோ அல்ல. தங்கள் குழந்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, பெயருக்கு பின்னால் பிஇ என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டுக்கொண்டாலே அவர்கள் வாழ்க்கை உருப்பட்டுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்களில் ஒரே ஒருவருக்கு கூட இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்துமானால், அதுவே எனக்கு போதும். 


இந்த கட்டுரை கல்வித்தந்தைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஒரு சிலரின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது. கல்விப் பணிக்கேன்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு சில விஷக்கிருமிகள் பற்றியே இந்த கட்டுரைத்தொடர். அதற்கு முன், பொறியியல் கல்லூரிகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி கூறி விடுகிறேன்.

ஒரு கல்லூரி தொடங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்குரிய நிலத்தை வாங்குவதில் இருந்து, கல்லூரி அட்மிஷன் வரை ஆயிரம் கடல், ஆயிரம் மலைகளை தாண்டி குதிக்கவேண்டும். ஒரே ஒரு வீட்டை கட்டி அதில் குடி புகுவதற்குள் எத்தனை அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது? அப்படி இருக்க, பல நூறு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கல்லூரி என்றால் சும்மாவா? குடிநீர், மின்சாரம், பஞ்சாயத்து யூனியன், சுகாதாரம், என்று அரசுத்துறையின் சுமார் ஆறு டசன் துறை அதிகாரிகளிடம் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல, இதற்குள்ளாகவே நமது பாதி முதலீடு, அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு சென்று விடும். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஆயிரம் கடல் மலைகளை தாண்டி எதற்கு இந்த நவீன சிந்துபாத்கள் செல்கிறார்கள்? அங்கே குவிந்து கிடக்கும் கரன்சி என்னும் பேரழகியை சந்திப்பதற்கே. 


 சரி கட்டிடம் கட்டியாகி விட்டது. அடுத்தது என்ன? கட்டிடத்தை கல்வி நிறுவனம் என்று கூற வேண்டும் அல்லவா? இங்கேதான் வருகிறது கல்வித்துறை. இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மட்டும் குழப்பம் இல்லை. கல்லூரிக்கல்வியிலும் குழப்பம் உள்ளது. ஒரு கல்லூரிக்கு உரிமம் வழங்கும் உரிமை இரண்டு அமைப்புகளிடம் உண்டு. ஒன்று UGC என்று அழைக்கப்படும் யூனிவெர்சிடி கிராண்ட் கமிஷன். மற்றொன்று  AICTE என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன். இதில் முதலாமவர் கொஞ்சம் இளகிய மனதுக்காரர். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விடுவார். பொறியியல் கல்வி தொடங்க வேண்டுமானால் ஸ்ட்ரிக்ட் ஆபீசரான AICTE அப்ரூவல் இல்லாமல் முடியாது. இதற்கும் நிறைய ஏஜெண்டுகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். எப்படி வண்டியே ஒட்டத்தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் லைசென்ஸ் வாங்கி விட முடியுமோ? அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்) அவ்வளவே. முதலில் AICTE அனுமதி பெற்று நிறுவனத்தை தொடங்கி விட்டு, பிறகு  AICTE அனுமதி  இல்லாமல் UGC அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு மேலும் சில கோர்ஸ்களை கல்லூரியில் இணைத்து விட முடியும். இத்தகைய கோர்ஸ்களில் படித்து வெளி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் AICTE படி செல்லாது, ஆனால் UGC படி செல்லும். இந்த குழப்பத்தால், பல மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. இந்த AICTE, UGC குழப்பம் நன்கு படித்தவர்களுக்கே புரியாது. பாமர மக்கள் எம்மாத்திரம்?  பல லட்சம் பணம் கட்டி படித்து வாங்கிய சான்றிதழ் செல்லாது என்ற இடி கடைசியிலேயே இவர்களுக்கு தெரியவரும். அதற்க்கப்புறம் புலம்புவதை தவிர வேறு வழியில்லை.  


சரி AICTE அனுமதி வாங்கியாச்சு. கல்லூரி தொடங்கி விடலாமா? முடியாது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி ஒரு பல்கலைகழகத்தோடு இணைந்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை வேறு வழியே இல்லை. பெரியண்ணன் அண்ணா பல்கலைக்கழகத்தோடு நம்மை இணைத்துக் கொண்டேயாக வேண்டும். அவரும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்தான். அவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்.  இதற்கு ஏஜெண்டுகள் இருந்தாலும், அரசியல் காற்றும் சாதகமாக நம் பக்கம் வீசவேண்டும். இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே கட்டி முடிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் இருக்கும் தயா பொறியியல் கல்லூரி இதற்கு ஒரு சான்று. இதை கட்டியவர் துரை தயாநிதி அழகிரி. கல்லூரி கட்டி முடித்துவிட்ட நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.  விளைவு கல்லூரி பாழடைந்த பங்களாவாக மாறி வருகிறது. 


இத்தனை அப்ரூவல்களையும் வாங்கிய பிறகே ஒரு பொறியியல் கல்லூரியால் அட்மிஷன் தொடங்க முடியும். முதல் முறை அப்ரூவல் வாங்குவது மட்டுமே சிரமமான காரியம். அதன் பிறகு எல்லாம் எளிதாக நடந்துவிடும். ஆண்டுக்கொரு முறை, AICTEயில் இருந்தும் , அண்ணா பல்கலைகழகத்தில் இருந்தும் வல்லுனர்கள் கல்லூரியை பார்வையிட வருவார்கள். அவர்களை சரிக்கட்டினால் போதும். 

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் சுமார் 3350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 65% கல்லூரிகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 570. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

-ஆதங்கம் தொடரும் 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

பிகு: நண்பர்களே கல்வித்தந்தைகள் குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் கட்டுரையில் அதிக தகவல்கள் தர உதவியாக இருக்கும். நன்றி 

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு தகவல்களை சேகரித்ததற்கே முதலில் பாராட்டுக்கள்...

உங்களுக்கு தெரியுமா...?-வில் கல்வி ஒரு சிறந்த "தொழில்" என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது...

நன்றி... மேலும் தொடர வாழ்த்துக்கள்...

வவ்வால் said...

//அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்//

உண்மையில் நடைமுறை தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.

பணம் புழங்குவது வாஸ்தவம் தான், ஆனால் நடைமுறை வேறு.

கட்டிடம் இல்லாமல் அனுமதி இல்லை, கல்லூரி பணி ஆரம்பிக்க கொடுக்கும் அக்னாலஜ்மெண்டை அனுமதி என குழப்பிக்கொண்டுள்ளீர்கள்.

மேலும் பல நூறு ஏக்கர் எல்லாம் இடம் தேவையில்லை, மாநகர பகுதி என்றால் 2.5 ஏக்கரும், மற்றப்பகுதிகள் என்றால் 5 ஏக்கர் இடமும் இருந்தால் போதும். பல நூறு கோடிகளும் தேவையில்லை, சுமார் 5 கோடியில் அனைத்தும் முடித்து விடலாம். இது முதலாண்டு சேர்க்கை நிலைக்கு ,ஒவ்வொரு ஆண்டுக்கும் படிப்படியாக கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.

பணமே கொடுக்காமல் கூட அப்ரூவல் வாங்கலாம், ஆனால் அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்திருக்க வேண்டும், எப்படி கொடுப்பாங்கனு கேட்கிறிங்களா, அனுமதிக்கு விண்ணப்பித்ததும் ஒரு பதிவு எண் கொடுப்பார்கள், அதன் அடிப்படையில் தான் அப்ரூவல் பிராசஸ் நடக்கும், முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி மறுக்க சரியான காரணம் கட்டாமால் பின்னால் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தால் வழக்குப்போட்டு அனுமதி வாங்கிவிடுவார்கள் :-))

ஆன் லைன் முறையில் எல்லாமே முடித்துக்கொள்ள முடியும் ,பைசா செலவில்லாமல் சாத்தியம் ஆனால் முழுமையாக விதிகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

எம்பிஏ போன்றவற்றிற்கு AICTE approval தேவையில்லை என சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் கைட் லைன்ஸ் தான் வழங்கலாம் ,கட்டுப்படுத்தக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

AICTE,அண்ணா பல்கலை எல்லாம் பல் இல்லாத பாம்புகள், அவர்களாள் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, தனியார் கல்லூரிகளின் லாபி எல்லாவற்றுக்கும் வழக்குப்போட்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வைத்து உடைத்து விடும்.

பால கணேஷ் said...

Good attempt bala. Nice writeup. Continue.

r.v.saravanan said...

நல்ல தகவல்கள் பாலா தொடருங்கள்

Unknown said...

நல்ல தகவல்கள் . 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்க பட்ட கல்லூ ரிகள் தான் , தற்போது தரமான கல்வியை தந்து கொடு இருக்கிறன

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்

உண்மைதான் நண்பரே. கல்விதான் இப்போது வளம் கொழிக்கும் தொழில். கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@வவ்வால்

உங்கள் கருத்துக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@பால கணேஷ்

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி சார்,

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி சார்

பாலா said...

@Gnanam Sekar

அப்படியும் சொல்ல இயலவில்லை நண்பரே. 15 ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிய நிறுவனங்களே தரமான கல்வியை தந்து கொண்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

Anonymous said...

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ, வீட்டுக்கு ஒரு என்ஜினியர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்..எல்லோரும் சாப்டுவேர் என்ஜினியர் ஆகிவிட்டால் சாப்பாடு கிடைத்துவிடுமா?

vimalanperali said...

ஒருவிதமான மூளைபாய்சன் சசெய்யப்பட்டுஇருக்கிறோம் நாம்,நாம் ஒருவித வடிவைமைம்மு உள்ளாகி இருக்கிறோம்.அந்த வடிவமைப்பே இப்படியாய் தொடர்கிறாது,கேப்பை நெய் வடிகிறது என்று சொன்னால்,,,,,,,,,,,நெய் வடிய வைக்க இந்கே ஏற்பாடுகள் ஏராளம்.அதற்கு நம் சமூகமும் ஆட்பட்டுப்போவது மிகவும் கொடுமையாய்/

Manimaran said...



பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே தவிர தரம் மட்டும் அதல பாதாளத்தில் உள்ளது.தற்போதைய சூழலில் கலைக் கல்லூரியைவிட பொறியியல் சீட் கிடைப்பது எளிதான விசயமாக இருக்கிறது.93-ல் நான் சேரும்போது வெறும் 39 கல்லூரிகள்தான். அப்போது ரிசல்ட் நாளிதளில்தான் வரும்...தற்போதைய எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.....

நல்லதொடர்...வாழ்த்துக்கள்..

Siva said...

can anyone say who is responsible to remove entrance exam to join engineering colleges in DMK period?

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல் சேகரிப்புகள்..பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு :

Visit : http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_25.html

Manimaran said...

உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.. http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_25.html

மாலை நேரத்து மயக்கம் said...

hello bro i am staring my new blog
need ur help op update me and develop myself

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

துரை செல்வராஜூ said...

வலைச்சரத்தின் வழியாக வந்தேன்!.. நல்ல பதிவுகளைக் கண்டு மகிழ்ந்தேன்!.. வாழ்க.. வளர்க!..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வவ்வால் சொல்வது படி நடக்கலாம் அதற்கு கால தாமதம் ஆகும் என்று நினைக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அடுத்த பதிவு இல்லையே. தொடருங்கள்

கேரளாக்காரன் said...

என்ன பாலா ஆளையே காணும். தலைவா விமர்சனம் எழுதுங்க பாஸ், படிக்க ஆர்வமா இருக்கோம்

Tamil said...


See article here
https://www.biofact.in/?m=1

Related Posts Plugin for WordPress, Blogger...