விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 29, 2013

சினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு


வணக்கம் நண்பர்களே,


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் பிஸியாகி விட்டதால் பதிவுலக ஜோதியில் கலக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் நண்பர்கள் எழுதிய நிறைய விஷயங்களை படிக்க முடியாமல் போய் விட்டது. குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். அதென்ன இரண்டு மாதங்கள்? என்று நினைக்கிறீர்களா? அதன் பிறகு பொறுப்புள்ள அப்பாவாக எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கப்போவதால் கொஞ்சம் எழுத தடைபடலாம். எல்லாம் தற்காலிகம்தான். பதிவுலகம் தரும் உற்சாகம் என்னை மீண்டும் இங்கேயே இழுத்து வந்து விடும். கோடை விடுமுறைக்கு சென்று விட்டு அடுத்த வகுப்பில் முதல் நாள் வந்து அமர்ந்திருக்கும் மாணவர் போல உணர்கிறேன். மொக்கை போதும் இனி பதிவுக்குள் செல்லலாம். சொல்லப்போனால் இனிமேல்தான் சூர மொக்கை ஆரம்பம் ஆகப்போகிறது. எடுத்த எடுப்பிலேயே சீரியஸ் பதிவுகள் வேண்டாம் என்று நினைத்ததால் இந்த பதிவு. 

பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தானும் ஒரு பதிவர் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் எதை எழுத என்று தெரியாது. என்னைபோன்ற அரைவேக்காடுகள், கவிதை, கட்டுரை என்று விஷப்பரீட்சையில் இறங்கினால் இரண்டே பதிவுகளில் கடையை மூடி விட்டு செல்ல வேண்டியதுதான். இதற்காகத்தான் இருக்கவே இருக்கிறது சினிமா விமர்சனப்பதிவுகள். தமிழர்கள் எதில் சோடை போனாலும், தான் பார்த்த படத்தை பற்றி அடுத்தவர்களோடு அரட்டை அடிப்பதில் சோடை போவதே இல்லை. ஆகவே எதைப்பற்றி எழுதுவது? என்ன எழுதுவது? என்று எதுவுமே (என்னே எழுத்து நடை? இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு  'எ' வார்த்தைகள், ஹி ஹி)   தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது? கவலையை விடுங்கள். பதிவுலகில் நான்கு ஆண்டுகள் கொட்டிய குப்பையை கிளறி உங்களுக்கு சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்.


விமர்சனங்கள் பலவகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

உலகத்தர விமர்சனம் 
இந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன், மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே? என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து. அது சரி? அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது? இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். "வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!", என்று  காதலா காதலா படத்தில் கமலாஹாசன் சொல்வது போல, உங்களை பிட்டுப்பட ரசிகன் என்று யாரும் கலாய்க்கவும் மாட்டார்கள், மாறாக உங்களை மிகவும் மதிக்கவும் தொடங்குவார்கள். இந்த வகை விமர்சனங்களில் உள்ள ஒரே ரிஸ்க், பின்னூட்டங்களில் யாராவது படத்தை பற்றி விவாதிக்க தொடங்கினால் போச்சு, குட்டு வெளிப்பட்டு விடும். ஆகவே, கூடியமட்டும் பின்னூட்டங்களில் படத்தை பற்றி விவாதிக்காமல் திசை திருப்பி விடுங்கள்.


நடுத்தர விமர்சனம்
இவை மிகவும் சாஃப்ட் ரக விமர்சனங்கள். இதில் பெரும்பாலும் தாய்மொழி படங்களும், அவ்வப்போது பிறமொழி படங்களும் இடம்பெறும். இதற்கு பெரிய அனுபவ அறிவு எல்லாம் தேவை இல்லை. மேலும் படத்தில் பணியாற்றி இருப்பவர்கள் மீது சாஃப்ட் கார்னர் இருக்கும் யாரும் இவ்வகை விமர்சனங்கள் எழுதலாம். பத்து நிறைகள் என்றால் இரண்டே இரண்டு குறைகள் என்ற விகிதத்தில் எழுதவேண்டும். டீசண்டான ஸ்டில்கள் மட்டுமே பதிவில் இடவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்தபின் தியேட்டருக்கு சென்ற பயணக்கட்டுரை, இடைவேளையில் நீங்கள் சாப்பிட்ட பாப்கார்ன், கோன் ஐஸ், உங்கள் குழந்தைகள் செய்த அடம்,  ஆகியவற்றை இணைக்க மறக்காதீர்கள். பாசிடிவ் விமர்சனம் என்பதால் இந்த வகை விமர்சனங்களில் ரிஸ்க் மிக குறைவு. ஆனால் இதை விரும்பி படிப்பவர்களும் குறைவு. 

கட்டாந்தர விமர்சனம் (அ) தரை டிக்கெட் விமர்சனம்  
இது மிகவும் எளிது. படத்தை பற்றி எழுதாமல், ஹீரோவில் தொடங்கி, லைட்மேன் வரை அனைவரையும் கலாய்த்து எழுதவேண்டும். நடுநடுவே ...த்தா, ....ம்மா ,தக்காளி, பப்பாளி போன்ற வார்த்தைகளை சென்சார் இல்லாமல் சேர்க்க வேண்டும். இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையாம். வட்டார வழக்குகளாம். பதிவுலக தமிழறிஞர் ஒருவர் கூறினார். ஆகவே பயப்பட வேண்டாம். படம் பார்க்க வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பியது முதல், நடுவே டிராஃபிக் போலீஸிடம் திட்டு வாங்கியது, டாஸ்மாக்கில் சரக்கடித்தது, டிக்கெட் கவுண்ட்டரில் பான்பராக் போட்டு துப்பியது, டைட்டில் போட்டதும் தூங்கியது, நடுவே இண்டர்வெலில் கழிப்பறை சென்றது என்று விடாமல் எழுதவேண்டும். ஆனால் படத்தை பற்றி மட்டும் எழுதக்கூடாது. டீசண்டான ஸ்டில்களை எக்காரணம் கொண்டும் போடக்கூடாது. படத்தில் நடித்த நடிகைகளின் கவர்ச்சி ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதில் உள்ள ரிஸ்க், உங்கள் பதிவை படிக்காமலேயே, ஸ்டில்களை மட்டும் பார்த்து பின்னூட்டம் இடுபவர்கள்தான் அதிகம். ஆகவே, "கஷ்டப்பட்டு நாம் எழுதியதை படிக்கவில்லையே?", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. "இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே?", என்று யாராவது கேள்வி கேட்டால், நீங்கள் அளிக்க வேண்டிய பின்னூட்டம் "ஹி ஹி....", அவ்வளவுதான்.  

நடுநிலை விமர்சனம் 
இது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் எதிர் நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே எழுத வேண்டும். இரண்டுக்கும் தேவை ஒரே திறமைதான். நம்மாள் நடித்தால் அதை தாறுமாறாக புகழ தெரிந்திருக்க வேண்டும். எதிரி நடித்திருந்தால் தாறுமாறாக கலாய்க்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வகை படங்களுக்கு விமர்சனங்கள் ஒரே பதிவோடு முடிவதில்லை. உங்கள் நாயகனை உயர்த்தி நீங்கள் பதிவிட்டால், அவரை கலாய்த்து வேறொருவர் பதிவெழுதி இருப்பார். அதற்கு எதிர்வினையாக இன்னொரு பதிவு எழுதவேண்டும். இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வகை விமர்சனங்களில் உள்ள இன்னொரு அம்சம், உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடிட்டர் திறமை வெளிப்பட சிறந்த வாய்ப்பாக அமையும். படத்தின் தினசரி கலெக்சன், வார கலெக்சன், ஏரியா வாரியாக கலெக்சன் என்று அள்ளி விடவேண்டும். எந்த ஆடிட்டர் ஒழுங்காக கணக்கு காட்டி இருக்கிறார்? ஆகவே நீங்களும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கூடவே சில வலைதளங்களையும் உதவிக்கு சேர்த்து கொள்ளலாம். 

சரி இனி விமர்சனம் எழுதும் முறையை பற்றி பார்க்கலாம். 

ஒரு விமர்சனம் சரியாக மக்களை சென்றடைய முதலில் தேவையானது சரியான தலைப்பு. உதாரணமாக, 'பரதேசி -திரை விமர்சனம்' என்று தலைப்பிட்டால் ஒரு பயல் எட்டிப்பார்க்க மாட்டான், மாறாக, 'பரதேசி, படத்துக்கு போகும் முன் நீ யோசி', என்று டைட்டில் வைத்தால் சூப்பராக இருக்கும். 

முதல் பத்தி விமர்சனத்தின் முன்னுரை. இதிலேயே விமர்சனத்தை தொடங்கி விடக்கூடாது. இது படத்தின் இயக்குனரையோ, நாயகனையோ அல்லது வேறு ஒருவரையோ குறிப்பிட்டு இருக்கவேண்டும். உதாரணமாக, "பொதுவாக நான் பாலா படங்களை பார்ப்பதில்லை." என்று தொடங்க வேண்டும். இல்லை, "ஆயுத எழுத்து படத்தோடு மணிரத்னம் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.", என்று கூறவேண்டும். மணிரத்னம் மற்றும் பாலாவின் ஒவ்வொரு படங்களுக்கும் இப்படித்தான் நாம் எழுதி இருப்போம் என்பதெல்லாம் இங்கே மறந்து விடவேண்டும்.  இந்தப்படத்தை பார்த்த காரணத்தை விதியின் மீதோ அல்லது நண்பர்கள் மீதோ போட்டு விடவேண்டும். 

அடுத்த பத்தியில் படத்தின் முழுகதையையும் கூறி விடவேண்டும். படத்தின் முக்கிய டுவிஸ்டை இங்கே சொல்லி விடக்கூடாது. படம் பார்க்கும் போது சுவாரசியம் கெட்டுவிடும் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. தொடர்ந்து பதிவை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக. கதையை எழுதும் போது மேலே நான் கூறிய வகைகளில் எந்த வகையில் எழுத விரும்புகிறோமோ அதற்கெற்றார் போல எழுத்து நடை அமையை வேண்டும். உதாரணமாக, தரை டிக்கட் வகையில் விமர்சனம் எழுத வேண்டுமானால், கெட்ட வார்த்தைகளை, சாரி வட்டார வார்த்தைகளை தாராளமாக கலந்து விட வேண்டும். 

 அடுத்த பத்திகளில்,  நாயகனில் தொடங்கி, இயக்குனர், இசையமைப்பாளர், என்று எல்லோரையும் துவைத்து எடுக்கும் இடம் இதுதான். ஈவு இறக்கம் எல்லாம் காட்டக்கூடாது. கதாநாயகிக்கு என்று தனிபத்தி ஒதுக்க வேண்டும். படத்தில்தான் கதாநாயகிக்கு சரியான அங்கீகாரம் கிடக்கவில்லை என்பதற்காக நாமும் அதையே செய்யலாமா? விமர்சனத்திலாவது அங்கீகாரம்  கொடுப்பது நம் கடமை அல்லவா? 

அடுத்த பத்திகளில் படத்தின் லாஜிக் ஓட்டைகளை கண்டு பிடித்து பட்டியலிட்டு காட்ட வேண்டும். இந்த இடத்தில்தான் படத்தின் முக்கிய டுவிஸ்டுகள் அனைத்தையும் கூறிவிட வேண்டும். யாராவது கேட்டால், "நான் என் கடமையைதான் செய்தேன்?", என்று கூலாக கேள்வி கேட்கலாம்.

இறுதி பத்தி. இதுதான் மிக முக்கியமானது. இந்த பத்தியை படித்து விட்டுத்தான்  உங்களை பின்னூட்டத்தில் கடித்து குதறப்போகிறார்கள். படத்தை பற்றி நாலே வரிகளில் கூறவேண்டும். பார்க்கலாமா, வேண்டாமா, யார் பார்க்கலாம், பார்த்தே ஆகவேண்டுமா, என்றெல்லாம் நீங்கள் கருத்து கூறும் இடம் இதுதான். 

இறுதி பஞ்ச்: படத்தை பற்றி நச்சென்று ஒரு பஞ்ச் வைக்கும் இடம். இது படத்தின் சம்பந்தப்பட்டவரை நருக்கென்று குட்டு வைப்பது போல இருக்க வேண்டும். உதாரணமாக "அலெக்ஸ் பாண்டியன் : தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்...." 

என்ன நண்பர்களே, நீங்களும் சினிமா விமர்சனம் எழுத கற்றுக் கொண்டீர்களா? உங்களுக்கு இதில் வேறேதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.  

பிகு: ஒருவழியாக டாக்குடர் அவர்களை இழுக்காமல் ஒரு பதிவு எழுதி விட்டேன். அய்யயோ பிகுவில் அவரது பெயரை பயன்படுத்தி விட்டேனே? ஹி ஹி.....

உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..... 

13 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அப்படி இப்படி என்று காமடி செய்து, ஒரு படத்தைப் பார்ப்பது தற்கொலைக்குச்சமம் என்று படத்தின் பெயரையும் சொல்லிவிட்டீர்கள். லொள்ளூ..
நன்றாகச் சிரித்தேன்

Unknown said...

Welcome Back thala :)

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனங்களைப் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வை (தலைப்புகள் உட்பட நல்ல யோசனைகள்) அருமை...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

welcome bala

விமர்சனம் எழுதும் முறை பற்றியே விமர்சனமா நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கள் என்று உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்

சீனு said...

அப்பாவாகப் போவதற்கு வாழ்த்துக்கள், மீண்டும் களத்தில் இறங்கி கலக்குங்கள்...

சினிமா விமர்சனப் பதிவர்கள் அத்தனை பேரையும் மொத்தமாய் கலாய்த்து விட்டீர்கள், நல்லவேளை இனி நான் அதுபற்றி எழுதப் போவதில்லை...

டாக்டருக்காகவே பின்குறிப்பு எழுதும் உங்களை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்..

மே 1 சிறப்புப் பதிவு எதுவும் உண்டா

பால கணேஷ் said...

பாலா... நீண்ட நாளைக்குப் பின்னால சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம். பொறுப்பான தகப்பனா ஒரு ப்ரமோஷன் கிடைக்க இருக்கறதுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

சினிமா விமர்சனங்களை நல்லாவே அலசிக் காயப் போட்டுட்டீங்க! படத்தோட வசனங்களை மனப்பாடம் பண்ணி விமர்சனத்துல குறிப்பிடற கலையப் பத்தி எதுவுமே சொல்லலையே? ஹி... ஹி...!

டாகுடரைப் பத்தி மட்டுமா எழுதாம விட்டீங்க? பதிவுலகை கலக்கிய பவர் ஸ்டார், சமீபத்துல அகில உலகையும் கலக்கின டெரர் ஸ்டார் பத்திககூட குறிப்பிடாம விட்டுட்டீங்களே!

Sundar said...

வாழ்த்துக்கள் பாலா.. எனக்கு ஒரு சந்தேகம். சோலார் ஸ்டார், பவர் ஸ்டார் நடிச்ச படங்களை கலாய்க்காமல் விமர்சனம் எழுத முடியுமா பாலா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா.....

JR Benedict II said...

இருந்தாலும் தரை டிக்கட் விமர்சனம் வாசிக்க செமையாக இருக்கும் பாஸ்

ராஜ் said...

அப்பா ஆவதருக்கு என் வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதினாலும் உங்க டச் அப்படியே இருக்கு.

Unknown said...

ஹிஹி வழக்கம் போல அருமை

ம.தி.சுதா said...

மிக நீண்ட நாளின் பின்னர் புன்னகையுடன் ஒரு சந்திப்பு

Ganesan said...

நானும் ஒரு குட்டி பிளாக்கர் ஆகலாம்னு யோசிக்க தோணுது! ஆனால் பாலா பக்கங்களை படிப்பதோடு நிறுத்தி கொள் என என் பட்டறிவு சொல்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள ஹாசியம் மிக அருமை. அடிக்கடி படிக்க தோன்றுகிறது. நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...