நண்பர் அந்நியன் 2 உள்பட நிறைய பேர் "தமிழ்மணம் பட்டை எங்கே?" என்று கேட்டிருக்கிறார்கள். முதல் காரணம் முதலில் இருந்தே அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றொரு காரணம், வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக இணைத்து விட்டேன். ஆனால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் பதிவிற்கு மேலே இருக்கிறது. எப்படி கீழே கொண்டு வருவதென்று தெரியவில்லை. ஓட்டுப்போடணும்னா சிரமம் பார்க்காம, மேலே உள்ள தமிழ்மண பட்டையிலும் ஒரு அழுத்து அழுத்துங்க. இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளில் என்னை கவர்ந்த வீரர்களை பற்றி எழுதுகிறேன். இந்த பட்டியல் மிக பெரியது என்பதால், மிகவும் கவர்ந்த வீரர்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறேன்.
பாகிஸ்தான்
இந்திய அணியின் சொந்த சகோதரன். அடிக்கடி உரசல் வரும். அந்த உரசல் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கும். உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இல்லாத பரபரப்பு, இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு உண்டு. மேலும் இரு அணி வீரர்களும், மற்ற அணிகளோடு ஆடுவதை விட ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். மிகுந்த சர்ச்சைகள் நிறைந்த, அதிரடி திருப்பங்கள் மிகுந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு. அதில் என்னை கவர்ந்த சில வீரர்கள் உள்ளனர்.
இன்சமாம் உல் ஹக்
1992 உலகக்கோப்பையின் ஹீரோ. மிக அழகான, பெண்களுக்கு பிடித்த வீரராக திகழ்ந்தவர். மிக மிக மெதுவாக செயல்படும் ஒரு வீரர். இவ்ரது பெயரை சொன்னதுமே, கூடவே ஞாபகம் வருவது ரன் அவுட். இவருக்கும் ரன் அவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஆனால் பாகிஸ்தானின் அபாயகரமாக வீரர்களுள் இவரும் ஒருவர்.
சயீத் அன்வர்
பாகிஸ்தான் வீரர்களிலேயே மிக அமைதியான வீரர். இவரும் முகத்தில் எந்த வித சலனமும் காட்டமாட்டார். சிரித்துக்கொண்டே சிக்சர் அடித்து பவுலர்களை கடுப்பேற்றுவதில் கில்லாடி. அதே போல கொஞ்சம் கூட களைப்படையாமல் நீண்ட நேரம் ஆடக்கூடியவர்.
வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் முதன்மை பவுலர்களில் ஒருவர். பந்து வீச்சில் 90களில் குறிப்படத்தக்க ஒருவராக திகழ்ந்தவர். பாகிஸ்தான் அணியில் நீண்ட காலம் நிலைத்து ஆடுவது என்பது கஷ்டம். இவர் நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் ஆடியவர்.
மொஹம்மத் யூசுஃப்
இவர் சரியான விடாக்கண்டன். பாகிஸ்தான் அணி படு மட்டமாக ஆடி பாதாளத்தில் கிடக்கும்போது இவர் களத்தில் இறங்கி வெற்றிகரமாக மீட்பார். இவரை அவுட் ஆக்குவது என்பது மிக சிரமமான காரியம். முதலில் ஒரு கிருத்துவராக, யூசுஃப் யுகானாவாக இருந்தவர், பின்னர் இசுலாமுக்கு மாறி மொஹம்மத் யூசுஃப் ஆனார்.
ஷாஹித் அப்ரிடி
இன்று வரை பாகிஸ்தான் ரசிகர்களின் கனவு நாயகன். ஒரே படத்தின் மூலம் மாதவன் பல பெண்கள் மனதில் இடம் பிடித்ததை போல, ஒரே ஆட்டத்தில் பல பெண்களின் கனவு நாயகனாக மாறியவர். மிக அழகான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். மரண அடிக்கு பெயர் போனவர். பெரும்பாலும் ஒன்றிரண்டு பந்துகளிலேயே அவசரப்பட்டு அவுட் ஆகி விடுவார். ஆனால் அப்படி ஆகாமல் நிலைத்து விட்டால், பவுலர் பாடு திண்டாட்டம்தான். சமீபகாலமாக பவுலிங்கில் சிறந்து விளங்குகிறார்.
சக்லைன் முஷ்டாக்
தொண்ணூறுகளில் ஆட்சி செய்த ஒரு சில ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். மிக மிக மெதுவாக பந்து வீசுவார். இவரது சிறப்பம்ஸமே, இவர் வீசும் டாப் ஸ்பின்தான். அதாவது பந்து வெகு நேரம் காற்றிலேயே பறந்து வரும். எந்த இடத்தில் தரையில் படும் என்று கணிக்க முடியாது. குறுகிய போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அப்துல் ரசாக்
ஒரு காலத்தில் சச்சினை வீழ்த்த வேண்டுமா? கொண்டு வா ரசாக்கை, என்ற நிலை இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சச்சின் இவரது பந்து வீச்சில் திணறி வந்தார். பாகிஸ்தானின் இடைப்பட்ட ஓவர்களை வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதில் வல்லவர். மேலும் பேட்டிங்கிலும் கொஞ்சம் அபாயகரமானவர்தான். இவரது நடை உடை பாவனைகளில் எல்லாம் பெண்ணின் சாயல் இருக்கும்.
வாசிம் அக்ரம்
கிரிக்கெட்டின் சிறந்த பவுலர்களில் இவரும் ஒருவர். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. ரிவர்ஸ் ஸ்வீங் என்ற முறையை திறமையாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியவர். நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையிலும் சிக்கியவர்.
இலங்கை
பாகிஸ்தான் அணி போலவே இலங்கை அணியும் இந்திய கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. விடா முயற்சிக்கு பெயர் பெற்ற ஒரு அணி. எந்த ஒரு தொடரையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
முத்தையா முரளிதரன்
கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு நல்ல மனிதராகவும் இவரை எனக்கு பிடித்திருக்கிறது. எந்த ஒரு கள்ளம் கபடமும் இல்லாத மனிதராக விளங்கும் இவர், கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவர். நிறைய சர்ச்சைகளை தாண்டி, சாதித்து காட்டியவர். நாடுகள் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு வீரர்.
சனத் ஜெயசூரியா
தொண்ணூறுகளில் பல பவுலர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர். ஈவு இரக்கமற்ற வீரர்களுள் ஒருவர். இலங்கை உலகக்கோப்பை வென்றதில் இவர் பங்கு சிறப்பானது. மிக சிறந்த பீல்டரும் கூட. இவர் களத்தில் விளையாடுவதை பார்த்தால், இவருக்கு 41 வயது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அரவிந்த டி சில்வா
இவரப்பார்த்தால் எமதர்மன் தோளில் கதாயுதத்தை சுமந்து கொண்டு வருவது போல இருக்கும். இலங்கையின் உலகக்கோப்பை நாயகன். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாமல், டெக்னிக்கலாக ஆடுவதிலும் வல்லவர். துல்லியமாக பந்து வீசி தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதிலும் வல்லவர்.
சமீந்தா வாஸ்
90களில் குறிப்பிடத்த்க்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். நீண்டகாலம் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அதிகம் அவதிப்படுவர். ஆனால் காயமில்லாமல் அதிக காலம் அணியில் ஆடியவர்.
ரோஷன் மகானமா
நான் பார்த்த முதல் இலங்கை வீரர். 1994 என்று நினைக்கிறேன். அப்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். நிலையாக நின்று சாதிப்பார். இவர் ஒரு ஸ்லோ பாய்சன். மெதுமெதுவாக எதிரணியை வீழ்த்துவார். 1996 உலகக்கோப்பையில், அரையிறுதியில் இந்தியாவின் கோப்பை கனவில் மண் அள்ளி போட்டவர்.
அர்ஜுனா ரணதுங்கா
எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஒரு சிறந்த கேப்டன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அணியை இக்கட்டான நேரத்தில் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இவரைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர்.
லசித் மலிங்கா
தற்காலத்தில், பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர். இவரது ஜெட் வேக யார்க்கர்களை சமாளிக்க முடியாமல் நிறைய வீரர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். வித்தியாசமாக ஹேர்ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்தவர். இவரைப்பார்த்தால் எனக்கு மயில்சாமி ஞாபகம் வருகிறது.
உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....