பகுதி 6 - கிரிக்கெட்டின் ஆதிக்கம்.
1996 உலகக்கோப்பை தொடங்குபோது இருந்த உற்சாகம் அது முடியும்போது இல்லை. ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு குணம் உண்டு. மாபெரும் தோல்வி தந்த அதிர்ச்சியை ஒரு சிறு வெற்றி மீட்டெடுத்து விடும். அடுத்த சில வருடங்களுக்கு இந்திய அணி மாபெரும் வெற்றி என்று எதையும் பெறவில்லை என்றாலும், அவ்வப்போது பெற்ற சில வெற்றிகள் கிரிக்கெட் என் உள்ளத்தில் நிலைத்து வேரூன்ற காரணியாகிவிட்டன. 96 முதல் 99 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் வெறியனாகிப்போனேன்.
உண்பது, பருகுவது, பேசுவது என்று எல்லாமே கிரிக்கெட்தான். நீளமாக எது கிடைத்தாலும் அது பேட். உள்ளங்கையில் அடங்கியது எல்லாம் பந்து. டப்பா, பேப்பர் உருண்டை, ஏன் சில சமயம் மக்கா சோள துண்டு கூட பந்தாகி இருக்கிறது. நடக்கும்போது வெறும்கையில் பந்து வீசிக்கொண்டோ அல்லாத மட்டையை வீசிக்கொண்டோதான் நடப்பேன். எந்த நாளிதழை பார்த்தாலும் முதலில் படிப்பது கிரிக்கெட் நியூஸ்தான். அப்போது ஏற்பட்ட பழக்கம், இப்போது எந்த நாளிதழை படித்தாலும் கடைசி பக்கத்தில் இருந்துதான் படிக்கிறேன். கிரிக்கெட் சம்பந்தமாக கிடைக்கும் தகவல்கள், படங்கள் ஆகியவற்றை திரட்டி இரண்டு போட்டோ ஆல்பங்கள் தயார் செய்தேன். அதற்கான படங்களை சில சமயம் விலைக்கு வாங்குவேன். பல சமயம் திருடுவேன். எங்கள் பள்ளி நூலகத்தில் ஸ்போர்ட்ஸ்டார் புத்தகம் இருக்கும். துல்லியமாக பல படங்கள் அதில் இருப்பதால் அதன் பக்கங்களை கிழித்து எடுத்து வந்து விடுவேன்.
அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் பற்றிய அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தேன். அப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் முதலிடத்தில் இருந்தார். அதிக சதமடித்தவர்கள் பட்டியலிலும் அவரே முதலிடத்தில் இருந்தார். அவர் அடித்திருந்தது 17 சதங்கள். அப்போது அந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது வியப்பாக இருக்கிறது. 1997 வாக்கில் (தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு தொடரில், ஜிம்பாப்வேக்கு எதிராக என்று நினைக்கிறேன்) அதை கடந்த சச்சின் அதன் பின் அதைவிட மூன்று மடங்கு சதங்கள் அடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
1996 உலகக்கோப்பை ரணம் ஆறுவதற்கு முன் அடுத்தடுத்து இரண்டு தொடர்களில் இந்தியா விளையாடியது. ஒன்று சிங்கப்பூரில் நடந்த சிங்கர் டிராபி, மற்றொன்று ஷார்ஜாவில் நடந்த கொக்ககோலா கோப்பை. சிங்கர் டிராபியில் இலங்கையே முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்த தொடரில்தான் ஜெயசூர்யா 17 பந்துகளில் அரைசதமும், 48 பந்துகளில் சதமும் அடித்து சாதனை புரிந்தார். அதற்கு முன்னர் அந்த சாதனை அசார் வசம் இருந்தது. பிற்காலத்தில் அப்ரிடி 37 பந்துகளில் சதமடித்து இதை முறியடித்தாலும், இன்னும் அரைசத சாதனை ஜெயசூர்யா வசமே உள்ளது. இந்தியா சார்பில் வேகமாக அரைசதம் அடித்த சாதனை அஜீத் அகார்கர் வசம் உள்ளது. அவர் அரைசதம் அடித்தது 21 பந்துகளில். தற்போது அதிவிரைவான இந்திய சதத்துக்கு சொந்தக்காரர் சேவாக். நியூசிலாந்துக்கு எதிராக 60 பந்துகளில் சதமடித்த அடியை வெட்டோரி வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார். மழை பெய்கிறது. இந்தியாவுக்கு கடின இலக்கு நிர்ணயிக்கிறார்கள். சேவாக் எளிய இலக்காக மாற்றுகிறார். மீண்டும் மழை. மீண்டும் கடின இலக்கு. மீண்டும் சேவாக் ஆட்டத்தை மாற்றுகிறார். "ஆட்டம் முடிந்ததும் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது." என்று சொன்னது சேவாக் அல்ல. வெட்டோரி.
1996 இல் ஷார்ஜாவில் நடந்த தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. முதன்முறையாக 300 ரன்களை கடந்தது இந்த தொடரில்தான். முதலில் சச்சினும் சித்துவும் 230 ரன்கள் சேர்க்க (அப்போது அதுதான் அதிக பாட்னார்ஷிப் ) பின்னால் வந்த ஜடேஜா மற்றும் அசார் பெங்களூருவை ஞாபகப்படுத்தினார்கள். பெங்களூருவில் வக்கார் யூனுசுக்கு விழுந்த அடி இந்த முறை அட்டா உர் ரஹ்மான் என்ற இளைஞருக்கு விழுந்தது. கொஞ்ச காலமே கிரிக்கெட் ஆடியவர். ஆள் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் மாதிரியே இருப்பார். பிற்காலத்தில் மேட்ச் பிக்சிங்கில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர். இந்த தொடரில் ஓரளவுக்கு நன்றாக ஆடினாலும், இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் மூன்று புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் விக்ரம் ரத்தோர், வைத்யா, மற்றும் ராகுல் டிராவிட். மூன்றுபேருமே அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் ராகுல் டிராவிட் தனது விடா முயற்சியாலும், திறமையாலும் இந்திய அணியின் கேப்டன் அந்தஸ்து வரை உயர்ந்தார். மற்ற இருவரும் காலப்போக்கில் காணாமல் போனார்கள். வைத்யா எங்கே இருக்கிறார் என்று தெரிய்வில்லை. விக்ரம் ரத்தோரை ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் பார்த்தேன். டக் அவுட்டில் தாடிவைத்து அமர்ந்திருப்பார்.
ஷார்ஜாவுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அந்த போட்டிகள் அப்போது உருவாகி இருந்த புதிய சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பினார்கள். அதற்கு முன் அது பிரைம் ஸ்போர்ட்ஸ்ஆக இருந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பே சேனலாக மாறி விட்டதால் ஆட்டங்களை பார்க்க முடியாமல் போனது. நான் வெறி கொண்ட வேங்கையானேன். இந்த தொடரில் ஒரு பந்து கூட பார்க்க முடியாமல் போனது. இதில் புதிதாக வந்த கங்குலி என்ற ஒரு இளைஞன் மிக சிறப்பாக ஆடி முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்தான் என்று கேள்விபட்டேன். வெகு காலத்துக்கு கங்குலி முதலில் அணிக்கு வந்தது 1996தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் களமிறங்கி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடி இருக்கிறார் என்று அப்போது தெரியாது.
அது எங்கள் வீட்டில் கேபிள் டிவி வந்த சமயம். என் வீட்டு பெண்களின் சன்டிவி ஆசையும், எங்களது கிரிக்கெட் ஆசையும் கேபிள் கனெக்ஷன் கொடுக்க வைத்தது. அப்போதெல்லாம் கேபிள் டிவி கனேக்ஷன் என்பது மிகப்பெரிய பாவம். பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று நம்பினார்கள். பிரைம்ஸ்போர்ட்சில் கிரிக்கெட்டைவிட அதிகம் ஒளிபரப்பியது அப்போது WWF ஆக இருந்து தற்போது WWE ஆகி உள்ள மல்யுத்தவிளையாட்டு. கிரிக்கெட் போலவே இதுவும் என் ரத்தத்தில் கலக்க தொடங்கியது. இருந்த ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலும் கைவிட்டு போன சோகத்தில் தூர்தர்ஷனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆபத்பாந்தவனாக வந்தது ESPN என்னும் புதிய சேனல். இதில் இந்தியா அல்லாத பிற அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை அதிகம் ஒளிபரப்புவார்கள். முதலில் இது தனியாகத்தான் இருந்தது. 2002 வாக்கில்தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்தது. இந்திய வீரர்கள் அல்லாத பிற அணிகளின் வீரர்களும் என்னை கவரத்தொடங்கினார்கள். நிறைய வீரர்கள் ஒன்றிரண்டு தொடர்களில் சிறப்பாக ஆடுவார்கள் திடீரென காணாமல் போய் விடுவார்கள்.
ESPN சேனலில் நான் அதிகம் பார்த்தது ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளைத்தான். இதற்கிடையே இந்திய அணியில் அசாருக்கு எதிராக உருவாகி இருந்த அதிருப்தி காரணமாக கேப்டன் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்று கேள்வி எழுந்தது. ஜடேஜாவா, சச்சினா என்று பார்க்கையில் சச்சினே என்று அனைவருக்குமே தோன்றியதால் சச்சினே புதிய கேப்டன் ஆனார். 23 வயதில் மிகப்பெரிய பொறுப்புகளோடு இலங்கை சென்ற சச்சினுக்கு தோல்வியே கிடைத்தது. இந்த தொடரில் அவரைத்தவிர யாருமே சரியாக ஆடவில்லை. முதல் வெற்றியை பெற்றது இந்தியாவில் நடந்த டைட்டன் கோப்பை தொடரில்தான்.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்ற டைட்டன் கோப்பை இந்தியாவில் நடந்தது. தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கமே இருந்தது. இந்திய அணியினர் படு சொதப்பலாக ஆடினார். இடையில் கோல்கத்தாவை நினைவு படுத்தும் வகையில் ரசிகர்களின் தாக்குதல் வேறு நடந்தது. பின்னர் அசாருதீன் வந்து ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு வேண்டினார் .இத்தொடரில் கங்குலி ஓரளவுக்கு ஆடினார். அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடிய விதம் என்னை அவருக்கு ரசிகனாக்கியது. தென்னாபிரிக்கா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இறுதிபோட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி. பெங்களூருவில் நடந்த அந்த ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. சின்னசாமி ஸ்டேடியத்தை என் மனம்கவர்ந்த ஸ்டேடியம் ஆக்கியதில் இந்த ஆட்டத்துக்கும் பங்கு உண்டு. தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை ஸ்ரீநாத், கும்ப்ளே என்ற இரு மண்ணின் மைந்தர்கள் மட்டையை விளாசி காப்பாற்றினார்கள். இந்த ஆட்டத்தை கும்ப்ளேவின் தாயார் உணர்ச்சி பொங்க பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது. இறுதிபோட்டியில் இந்தியாவின் சுழலுக்கு பணிந்தது தென்னாபிரிக்கா. சச்சின் கேப்டனாக முதல் கோப்பையை வென்றார்.
-தொடர்ந்து பேசுவோம்......
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
16 comments:
////உண்பது, பருகுவது, பேசுவது என்று எல்லாமே கிரிக்கெட்தான். நீளமாக எது கிடைத்தாலும் அது பேட். உள்ளங்கையில் அடங்கியது எல்லாம் பந்து. டப்பா, பேப்பர் உருண்டை,/// ஒன்றின் மீது தீவிர ஈடுபாடு கொள்வது ஒரு போதை மாதிரி, "மேட்ச் ஒன்று இருக்கு வா" என்றால் நண்பகல் கொளுத்தும் வெயிலிலும் உணவை மறந்து விளையாட போய்விடுவேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த தொடர்களை எல்லாம் நினைவில் வைத்து எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த அளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகனாக இருந்துள்ளீர்கள் என்று புரிகிறது
தெரியாத தகவல்கள் உங்கள் தொடர் மூலம் தெரிந்துக்கொல்கிறேன்.. நன்றிகள்..
கிரிக்கெட்ட அம்புட்டு ரசிச்சீங்களோ..
நன்று.. நன்று..
பழைய மேட்சுகளின் வீடியோ பார்ப்பது போல் இருந்தது!
நல்ல பகிர்வும் தொகுப்பும்.
///அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் பற்றிய அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தேன். /////
அது ஒரு காலம் அழகிய காலம்... உண்மை தாங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
@கந்தசாமி.
நீங்களும் நம்மள மாதிரிதானா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மிக்க நன்றி நண்பரே.
@Madhavan Srinivasagopalan மிக்க நன்றி நண்பரே...
@சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@Chitra
நன்றி மேடம்.
@♔ம.தி.சுதா♔
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
கிட்டத்த நம் இருவரின் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நேரமும் ஒன்றாக உள்ளது . அந்த பெங்களூர் மேட்ச் மறக்கமுடியாத ஒன்று அதே போல்தான் இறுதி போட்டியும். அன்றிலிருந்து இன்று வரை தென்னாப்ரிக்க அணிக்கும் இறுதி போட்டிகளுக்கும் ராசி இல்லை
உங்க கிரிகெட் தொடர் தொடர்ந்து படிக்கிறேன். பின்னூட்டம் இடுவதில்லை. தொடருங்கள்
எந்த நாளிதழை பார்த்தாலும் முதலில் படிப்பது கிரிக்கெட் நியூஸ்தான். அப்போது ஏற்பட்ட பழக்கம், இப்போது எந்த நாளிதழை படித்தாலும் கடைசி பக்கத்தில் இருந்துதான் படிக்கிறேன்.நானும் உங்கள் மாதரி தான் .. முதலில் கிரிக்கெட் நியூஸ்.. i will start with last page and end first page..
Post a Comment