நான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்துள்ளேன். தலைப்பை பார்த்தவுடன் எந்த மாதிரி படங்கள் பற்றி எழுத போகிறேன் என்று தெரிந்திருக்கும். நான் மிகவும் விரும்பிய இரண்டு ஹாரர் வகை படங்கள் பற்றிதான் சொல்ல போகிறேன். இரண்டுமே இருவேறு வகையான ட்ரீட்மென்ட் கொடுத்தவை.
ஒரு ஹாரர் படத்துக்கு என்ன தேவை என்று கேட்டால் நம்மில் பலரும் சொல்லும் விஷயம் அதிரடியான காட்சி அமைப்புகள், திடுக்கிட வைக்கும் இசை மற்றும் பயமுறுத்தும் மேக்கப்புகள். இவை இல்லாமல் திகில் படம் எடுக்க முடியுமா? முடியும் என்று நிருபித்துள்ளார் படத்தின் இயக்குனர்.
மேலே சொன்ன விஷயங்கள் நான் சொல்லப்போகும் முதலாவது படத்தை பற்றியது. இந்த படம் வெளிவந்த போது அவ்வளவாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் இதனுடன் வெளிவந்த படம் 2012. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது.
படத்தின் கதை என்னவென்றால், கேட்டி மற்றும் மைக்கா என்ற தம்பதிகள் புதிதாக ஒரு வீட்டில் வந்து தங்குகிறார்கள். கேட்டி தன்னை சிறு வயது முதல் பேய்கள் துரத்துகின்றன. அவை இங்கும் வந்துவிடும் என்று கூறுகிறாள். நிபுணர் ஒருவரை வைத்து அவளை சோதித்ததில் அவளை துரத்துவது பேய் அல்ல துர்தேவதை அல்லது பிசாசு(Demon) என்று தெரிகிறது. அது அவள் எங்கே சென்றாலும் விடாது. அதனை எந்த விதத்திலும் தொடர்புகொள்ளவோ, தொந்தரவு தரவோ கூடாது. இதற்க்கு வேறு ஒரு நிபுணரை பாருங்கள் என்று சொல்கிறார். ஆனால் மைக்கா நடப்பவை அனைத்தையும் காமிராவில் படம் பிடிப்பது, பிசாசுடன் தொடர்பு கொள்வது என்று அதனை தொந்தரவு செய்ய தொடங்குகிறான். நாளுக்கு நாள் அதன் நடமாட்டம் அதிகரிக்கிறது. பின் அது இவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய தொடங்குகிறது. இறுதியில் என்ன நடந்தது என்று நம் இதய துடிப்பை எகிற வைத்து சொல்கிறது இந்த படம்.

இப்படி ஒரு சப்பை கதையை வைத்துக்கொண்டு நிறைய ஹாரர் படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த படத்தின் சிறப்பே கதையை சொன்ன விதம்தான். அதாவது போலீஸ் ஒரு வீட்டில் இருந்து ஒரு வீடியோ டேப்பை எடுக்கிறார்கள். அதில் பதிவாகி இருக்கும் காட்சிகளே படமாக விரிகிறது. அதாவது படம் முழுவதும் சாதாரண ஹேண்டி காமிராவில் எடுக்க பட்டிருக்கும். டிஸ்கவரி, நேசனல் கியாக்ரபி உள்ளிட்ட சேனல்களில் காட்டுவார்களே, அதேபோல ஒழுங்கில்லாத கோணத்தில் யாரோ படம் எடுக்கதேரியாத ஒருத்தர் எடுத்தது போலவே இருக்கும். காமிரா அசைவில் இருக்கும் போது இருவரில் ஒருவர் மட்டுமே காமிராவில் தெரிவர் (அதாவது மற்றொருவர் படம் பிடித்து கொண்டிருப்பதாக அர்த்தம்). இருவரும் காமிராவில் தெரிந்தால் காமிரா ஸ்டாண்டில் மாட்டி வைக்கைப்பட்டுள்ளது என்று அர்த்தம். சரி சரி மொக்கை போதும். இப்படி ஹேண்டி காமிராவில் எடுத்திருப்பதனால், ஏதோ உண்மையிலேயே நடந்த காட்சிகளை படம் பிடித்தது போன்ற ஒரு கலக்கத்தை படம் ஏற்ப்படுத்தி விடுகிறது.

பெரும்பாலான காட்சிகளில் இருவரும் தூங்கி கொண்டே இருக்கிறார்கள். காமிரா அந்த அறையை படம் பிடித்துக்கொண்டே இருக்கும். நம் இதயம் எப்போது என்ன நடக்குமோ என்று துடிக்கும். இந்த படத்தை கேள்விப்பட்டு தரவிறக்கம் செய்து நான் பார்த்து என் நண்பன் ஒருவனுக்கு சிபாரிசு செய்தேன். அவன் தன் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த படம் நல்லா இருக்கும் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறான் கதையை சொல்லாமலே. அவர்களும் லேப்டாப் முன்னால் அமர்ந்து பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். முதலில் ஒன்றும் தெரியவில்லை. பின் வீட்டில் அனைவரும் தூங்கியபின், நடு இரவின் அமானுஷ்யத்தில் படம் பார்ப்பதை உணர்ந்து இருக்கிறார்கள். படத்தை முழுவதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். இது எனக்கும் ஏற்பட்டது.
படத்தின் சுவாரசியங்கள் சில...
படத்தில் பின்னணி இசை என்று எதுவும் கிடையாது. வசனம் மட்டுமே. அதுவும் ஆன் தி ஸ்பாட் ரெகார்டிங் போல ஒழுங்கற்றதாக இருக்கும். எனவே படம் முழுவதும் ஒரு அமானுஷ்ய அமைதி இருக்கும்.
படத்தில் கடைசி வரை பேயை காட்டவே மாட்டார்கள்.
படத்தின் பட்ஜெட் நம்பினால் நம்புங்கள் வெறும் 15000 டாலர். வசூல் 100 மில்லியன் டாலர்.
படத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள். ஒவ்வொரு வெர்சனிலும் ஒரு மாதிரி. எல்லாமே கலங்கடிப்பவைதான்.
படத்தின் இயக்குனர் ஓரேன் பெலி ஒரு உலகமகா பயந்தாங்கொள்ளியாம். அதை உருப்படியாக பயன் படுத்த இந்த படத்தை எடுத்தாராம். ஒவ்வொரு மனிதனும் உச்ச கட்டமாக பயப்படுவது தான் தூங்கிய பிறகு தன் அறையில் என்ன நடக்கிறது என்று தெரியாததால்தான். அதை திரையில் பார்க்கும் போது நம் அறையில் கூட இப்படித்தான் நடக்குமோ என்றே அஞ்சுகிறார்கள். இதுதான் படத்தின் வெற்றி.
நேரமிருந்தால் பாருங்கள்.
இரண்டாவது படம்:
முதல் படத்தை பார்க்க துணிச்சல் வேண்டும். நான் சொல்லப்போகும் இரண்டாவது படத்தை பார்க்க மிகுந்த நெஞ்சுரம் வேண்டும். அதாவது கல் நெஞ்சக்காரர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த படத்தை பற்றி நிறையபேர் எழுதி இருக்கிறார்கள். என்னால் இந்த படத்தை மறக்கவே முடியாது. எங்கள் ஊரில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கில படம் தமிழில் வந்தது. அதன் பெயர் 'ஆதிவாசிகளும், அபாய அழகிகளும்'. பெரியதாக 'A' வேறு போட்டிருந்தார்கள். ஆகா என்று சப்புக்கொட்டிக்கொண்டே தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். என்னைப்போல் பலரும் வந்தார்கள். கூட்டம் அள்ளியது. படம் தொடங்கியது. இடைவேளை முடிவதற்குள் பாதி கூட்டத்தை காணவில்லை. என்னைப்போல் சில அசகாய சூரர்கள் மட்டுமே முழுவதும் பார்த்தார்கள். இந்த படத்தை பார்த்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது இது அந்த படத்தின் அப்பனுக்கெல்லாம் அப்பன் என்று.

படத்தின் கதை ஒன்றும் புதியதல்ல. அமேசான் காட்டுக்குள் ஆதிவாசிகளை ஆராய்ச்சி செய்ய சென்ற ஒரு குழு காணாமல் போகிறது. அவர்களை கண்டுபிடிக்க செல்லும் டாக்டர் மன்றோ குழுவினரிடம் ஒரு வீடியோ டேப் சிக்குகிறது. அதில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்பட்டமாக படமாக்க பட்டிருக்கிறது.

படத்தின் பாதி பகுதி நல்ல காமிராவிலும், பாதி பகுதி சாதாரண வீடியோ காமிராவிலும் படமாக்கப்பட்டது போல காட்டியிருப்பார்கள். அதாவது படத்தின் இரண்டாவது பாதி முழுவதும் காட்டில் நடந்ததை அவர்களே படமாக்கி இருப்பதை போல காட்டி இருப்பார்கள். பொதுவாக ஹன்னிபல் (நர மாமிசம் உண்பவர்கள்) பற்றிய படம் என்றால் அவர்களை கொடூரமாகவும், நம்மவர்களை நல்லவர்கள் போலவும் காட்டுவார்கள். ஆனால் இதில், தலைகீழாக காட்டி இருப்பார்கள். ஆராய்ச்சி செய்ய போனவர்கள் தங்கள் டாகுமெண்டரி நன்றாக வரவேண்டும் என்று வேண்டுமென்றே ஹன்னிபல்களை துன்புறுத்தி அதனை படம் பிடித்து கொள்வார்கள். ஒரு கட்டத்தில் ஆதிவாசி பெண் ஒருவரை அவர்கள் கற்பழித்து விட பழி வாங்கும் நடவடிக்கையாக ஹன்னிபல்கள் இவர்களை வேட்டை ஆடுகிறார்கள். அதில் தனக்கு டாகுமெண்டரி நன்றாக வரவேண்டும் என்று கருதும் ஒரு ஆராய்ச்சியாளர், தன் நண்பர்களை ஹன்னிபல்கள் வேட்டை ஆடுவதை கூட வீடியோ எடுக்கிறார். முடிவில் அவரும் இறக்கிறார்.

படம் முழுவதும் வன்முறைக்காட்சிகள். எந்த காட்சியையும் இலை மறை காய் மறையாக காட்டுவதில்லை. ஆற அமர காட்டுகிறார்கள். முதலில் ஆராய்ச்சியாளர்கள் ஹன்னிபல்களை கொளுத்துவது, வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது என்று கொடூரமான காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள் என்றால், இறுதி காட்சியில் ஹன்னிபல்கள் இவர்களை துரத்தி துரத்தி கொல்வது கொடூரத்தின் உச்சம். இந்த மாதிரி நேரங்களில் ஏற்படும் கூச்சல், குழப்பம், மரண ஓலம் அனைத்தும் ஆச்சு பிசகாமல் அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் ஒருவரை ஈட்டியால் குத்தி அவர் உடலை உண்ணும் காட்சியை ஏதோ மறைந்திருந்து நிஜமாகவே படமெடுத்திருப்பது போல காட்டியிருப்பார்கள். படத்தில் மனிதனை தவிர மற்ற உயிரினங்களை உண்மையிலேயே கொன்றிருக்கிறார்கள். இந்த படத்தைப்பார்த்து நீங்கள் உண்மையிலேயே வாந்தி எடுக்கவில்லை என்றால் நீங்கள் பெரிய ஆள்தான் (நான் எடுக்கவில்லை).
படத்தின் அடிப்படை மெசேஜ் என்னவென்றால், படித்த நாகரிகமுள்ள நாம் எவ்வாறு காட்டு மிராண்டிகளை விட கேவலமாக நடந்து கொள்கிறோம் என்பதே ஆகும்.
படத்தின் சுவாரசியங்கள் சில...
படம் வெளி வந்த ஆண்டு 1980. இந்த படம் பெரும் அதிர்வை ஏற்ப்படுத்தியது என்பதை சொல்லவும் வேண்டுமா.
இந்த படத்தின் இயக்குனர் ருக்கேரோ டியோடேடோ. Snuff படம் எடுக்கிறார் என்று இவரை பிடித்து கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தி விட்டார்கள். Snuff படம் என்றால் ஒருவரை உண்மையிலேயே கொன்று அதனை படம் பிடிப்பது. பின் தான் நிரபராதி என்று நிருபித்து இவர் வெளி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை தடை செய்து விட்டார்கள் . இந்த படம் பின்னாளில் வந்த நிறைய படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்துள்ளது.
தில் இருந்தா பாருங்க. தயவு செய்து குழந்தைகள் பெண்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம்..
பிடிச்சிருந்த ஒட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>