விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 9, 2012

யார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்


இன்று காலையில் இரண்டு படங்கள் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? முதல் படத்தை பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். இரண்டாவது படம் தெலுங்கில் அமராவதி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, யார் என்று மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள படம். இந்த படத்தை பற்றி ஒரு சிறு செய்தி கூட தெரியாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தேன். எனக்கு படம் மிகவும் பிடித்துப்போனது. வழக்கமான சஸ்பென்ஸ் படம்தான் என்றாலும், கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கிறார்கள். கதை ஒன்றும் புதிதில்லை. 



அந்த நகரத்தில் திடீர் திடீரென்று 108 ஆம்புலன்சுக்கு, "நிறைமாத கர்ப்பிணி உயிருக்கு போராடுகிறார்." என்று அழைப்பு வருகிறது. சென்று பார்த்தால், அங்கே கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருந்த சிசு திருடப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க, ஒரு வருடம் பணி விடுப்பில் இருக்கும் வெங்கட் என்ற காவல் அதிகாரி வரவழைக்கப்படுகிறார். அவர் விடுப்பில் சென்றதன் காரணம், அவரது மனைவி லதா.  திருமணத்துக்கு முன், இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் லதா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அது அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சரியாக கவனிக்காவிட்டால், திடீரென்று மயக்கம் ஏற்பட்டு, காது மூக்கில் இருந்து ரத்தம் கசிய தொடங்கி விடும். ஆகவே அவளை திருமணம் செய்து கொண்ட வெங்கட், ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, அவளை கூடவே இருந்து கவனித்து கொள்கிறான். டிபார்மெண்டில் இருந்து அவசர அழைப்பு வர, லதாவின் வற்புறுத்தலால், அரைமனதுடன் வேலைக்கு செல்கிறான். 



ஆறு பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு, ஏழாவது பெண்ணிடம் இருந்து சிசு திருடப்படும்போதே, போலீசில் ஒருவன் மாட்டிக்கொள்கிறான். பார்ப்பதற்கு மனநிலை சரியிலாதவன் போலிருக்கும் அவன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறான். வெங்கட் அவனை தனி அறையில் வைத்து விசாரிக்கிறான். அவன் சிறையில் இருந்தாலும், வெளியே சிசு திருட்டு தொடர்கிறது.  மொத்தம் ஒன்பது சிசுக்கள் திருடப்பட்ட நிலையில் அவனது கைரேகை, அங்க அடையாளங்களை வைத்து போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. இதன் மூலம் அவனின் பயங்கரமான பின்னணி தெரிய வருகிறது. (இந்த பிளாஷ்பேக் படத்தில் முதல் காட்சியிலேயே வந்துவிடும்) பணக்கார வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் மூத்த மகன் சீனு, அந்த செல்வந்தரின் மகள் அமராவதியிடம், இனம்புரியாத அன்புடன் பழகுகிறான். விடலைப்பருவத்தில் இருக்கும் இருவரும் நெருங்கிப்பழகுவதை சகிக்காத அமராவதியின் தந்தை, வேலைக்காரியை கண்டிக்கிறார். இருந்தாலும் சீனு கேட்பதாக இல்லை. அமராவதியிடம் வேறு யார் பாசம் செலுத்தினாலும் அவர்களை தாக்கும் அளவுக்கு இவனுக்கு அன்பு வெறி அதிகரிக்கிறது.  அமராவதி, பத்து என்ற எண்ணின் மீது மிகுந்த பைத்தியமாக இருக்கிறாள். எதுவானாலும் அவளுக்கு பத்து வேண்டும். ஆகவே அவளுக்கு பிடித்த பத்து முத்துக்களை எடுத்துக்கொண்டு அவள் தந்தை இல்லாத நேரத்தில் சென்று கொடுக்கிறான். எதிர்பாராத விதமாக இருவரும் தடுக்கி கட்டில் மேல் விழ, அதை அச்சிறுமியின் தந்தை பார்த்து விடுகிறார். கடும் கோபமுற்ற அவர், சீனுவை கழுத்தை அறுத்து ஆற்றில் வீசுகிறார். அதை பார்த்த சீனுவின் தாயையும் கார் ஏற்றி கொன்று விடுகிறார் ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் ஒரு மனோதத்துவ நிபுணரால் காப்பாற்றப்பட்டு வளர்கிறான். 

பெரியவனாக வளர்ந்து தன் தாயை கொன்ற முதலாளியை பழி தீர்க்கிறான் சீனு. பிறகு வெளியூரில் திருமணமாகி குடியேறிய தன் சிறுவயது தோழியை(காதலியை) காண செல்கிறான். அங்கே அமராவதி கணவனோடு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, கோபமுற்று அவனை கொடூரமான முறையில் கொள்கிறான். அங்கே நடந்த களேபரத்தில் அமராவதியின் தலையில் அடிபட்டு அவள் பைத்தியம் ஆகிறாள். அவளை காப்பாற்றி தன்னுடனே வைத்துக்கொள்கிறான் சீனு. தனக்கு பத்து பிள்ளைகள் என்றும், அவை எங்கே என்றும் திரும்பதிரும்ப இவனிடம் கேட்கிறாள். அந்த சீனுதான் இப்போது போலீசில் சிக்கி இருப்பவன். இதுதான் அவன் பத்து பெண்களின் சிசுக்களை திருட காரணம் என்று கருதும் போலீசுக்கு, இன்னொரு சந்தேகம் வருகிறது. அதாவது, குறிப்பிட்டு அந்த 9 பெண்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்? 9ஆவது திருட்டு நடந்த வீட்டின் அடுத்த வீட்டிலும் ஒரு நிறைமாத கர்ப்பிணி இருந்தாள். ஆனால் அவளுக்கு ஒன்றுமே நிகழவில்லையே? அப்படியானால் அந்த பத்தாவது பெண் யார்? இதற்கெல்லாம் பின்னணி என்ன என்ற கேள்வியில் குழம்புகிறது. முடிவில் அந்த பத்தாவது பெண், வேறு யாருமல்ல, போலீஸ் அதிகாரி வெங்கட்டின் மனைவி லதாதான் என்ற செய்தி எல்லோரையும் அதிர வைக்கிறது. 



பத்து பெண்களுமே, ஒரே நாளில் ஒரே ஆஸ்பத்திரிக்கு செக் அப்புக்கு வந்தவர்கள். அவர்களுக்கு திரீட்மெண்ட் கொடுத்த லேடி டாக்டரும், தற்கொலை செய்திருக்கிறார். இத்தனை நிகழ்வுகளுக்கும் என்ன காரணம்? குறிப்பிட்ட பத்து பெண்களை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? சீனு சிறையில் இருந்த போதும், வெளியே திருட்டு நடந்தது எப்படி? என்று பல முடிச்சுகளை திரைக்கதையின் மூலம் போட்டு, சஸ்பென்ஸை ஏற்றி இருக்கிறார்கள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதாலோ என்னவோ, இந்தப்படத்தை நான் மிகவும் ரசித்தேன். நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள், திடுக்கிட வைக்கும் இசை என்று சிறப்பாகவே இருந்தது. படத்தில் அமராவதியாக பூமிகா நடித்திருக்கிறார். கதை முழுவதுமே இவரை சுற்றி பின்னப்பட்டிருந்தாலும், கொஞ்ச நேரமே தோன்றி இருக்கிறார். வெங்கட் ஆக நடிகர் ரவி பாபு நடித்திருக்கிறார் . இவர் யாவரும் நலம் படத்தில் மாதவனின் நண்பராக ஒரு போலீஸ் அதிகாரி வருவாரே. அவரே தான். இவரது மனைவியாக சினேகா நடித்திருக்கிறார். இவருக்கும் படத்தில் அதிகம் வேலை இல்லை. இரண்டு பரிச்சையமான நாயகிகள் படத்தில் இருந்தாலும், அதிக காட்சிகளில் தோன்றுவதும், மனதை கொள்ளை கொண்டவரும், காவல் துறை அதிகாரியாக வரும் சிந்தூராதான். மிக அழகான இவரை, பேண்ட் சட்டையில் ரொம்ப கடுமையான அதிகாரியாக காட்டி இயக்குனர் என் சாபங்களை சம்பாதித்துக்கொண்டார். 



படத்தில் ஒளிப்பதிவு, இசை மற்றும் எடிட்டிங் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சஸ்பென்ஸ் படம் என்றாலே இருட்டில்தான் எடுக்கவேண்டும் என்றில்லாமல், தேவையான அளவுக்கு இருட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள், அதே போல பெரும்பாலான காட்சிகளில் ஒருவர் வசனம் பேசும்போது, அவரது முகத்தை காட்டாமல், எதிரே இருப்பவரின் ரியாக்சன்களையே அதிகம் காட்டுவதால், டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. இது ஒரு மிகச்சிறந்த பொழுது போக்குப்படம். கர்ப்பிணி பெண்களை கொலை செய்வதாக காட்டவிட்டாலும், அவர்களின் சிசுக்கள் திருடுவதாக காட்டுவது(திருடும் காட்சியை காட்டாவிட்டாலும் கூட), பெண்கள் மனதை கண்டிப்பாக பாதிக்கும்.  



பி.கு:எனக்கு ஒரு சந்தேகம். படத்தின் தொடக்கத்தில், இதய பலவீனமானவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் பார்ப்பதை தவிர்க்கவும் என்று போடுகிறார்கள். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே அமர்ந்த பிறகு இப்படி போட்டால், யார் வெளியே எழுந்து செல்வார்கள்? அதற்கு போஸ்டரிலேயே போட்டிருக்கலாமே? இதே மாதிரிதான் அருந்ததிக்கும் போட்டார்கள்..... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

ஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி




 பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இரண்டு வித்தியாசமான படங்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் ஒரு ஹிச்காக் படம். மற்றொன்று தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்கு படம்.  ஆல்பிரட் ஹிச்காக். இந்த மனிதரை பற்றி முன்பே நான் கேள்விபட்டிருந்தாலும்,  சமீபத்திலேயே இவரது படங்களை நான் பார்க்க தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அறியாமல் இவரது ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன். இவரது படங்கள் அனைத்தும், சஸ்பென்ஸ் படங்கள் எத்தனை வகையில் எல்லாம் எடுக்கலாம் என்பதற்கு உதாரணங்கள். ஒவ்வொரு படமும் ஒரு வித அனுபவம். சஸ்பென்ஸ் படத்தில் கொலையை காட்டவேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்று கொலையே இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படம் எடுப்பார். சஸ்பென்ஸ் படத்தில் நகைச்சுவையே இருக்கக்கூடாதா? அடுத்த படம் நெடுக நகைச்சுவை காட்சிகள் இருக்கும். சஸ்பென்ஸ் படத்தில் கண்டிப்பாக எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டுமா? திருப்பமே இல்லாமல் உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் படம் என்று அடுத்த படத்தை எடுத்து காட்டுவார். அந்த வகையில் மிக எளிமையான, திருப்பங்கள் இல்லாத, வித்தியாசமான சஸ்பென்ஸ் படம்தான் தி ரியர் விண்டோ (The Rear Window - 1954).




படத்தின் கதை மிகவும் சிறியதுதான். ஜெஃப் ஒரு புகைப்படக்கலைஞர். புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் விபத்தில் சிக்கிவிட, இடுப்பில் இருந்து ஒரு கால் முழுவதும் மாவுக்கட்டு. காலை மடக்க கூட முடியாது. நடமாட வேண்டுமானால் வீல் சேர்தான். தினமும் இவர் வீட்டுக்கு வரும் நர்ஸ் ஒருவர், இவர் உடலை சுத்தம் செய்துவிட்டு, சில உதவிகள் செய்துவிட்டு சென்று விடுவார். மீதி நேரம் முழுவதும் இவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. மெதுவாக நடந்து சென்று தன் அறையில் இருக்கும் பின் பக்க ஜன்னல் வழியாக கவனிக்க தொடங்குகிறார். அந்த ஜன்னல் வழியாக அவர் கண்களுக்கு ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள அத்தனை வீடுகளும், அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளும் அரைகுறையாக தெரிகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வினோதமாக தோன்றுகிறது. ஜாலியான ஒரு நடன நங்கை, குடிகார பேச்சிலர் இசைக்கலைஞர், சிற்ப கலைஞரான பெண்மணி, நடுத்தர தம்பதிகள், புதிதாக திருமணமான இளம்ஜோடிகள், நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் ஒரு சேல்ஸ்மேன் என்று பல சுவாரசியமான மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அவர்களை பார்த்தபடி தினமும் பொழுதை போக்குகிறார். 



தினமும் தான் பார்த்த நிகழ்ச்சிகளை அந்த நர்சிடமும், அவ்வப்போது வீட்டுக்கு வரும் காதலியிடமும் பகிர்ந்து கொள்கிறார். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கும், அவளது சேல்ஸ்மேன் கணவனுக்கும் சண்டை நடப்பதை பார்க்கிறார். பின்னர் நடு இரவில் அந்த சேல்ஸ்மேன் அடிக்கடி போவதும், வருவதுமாக இருக்க, இவருக்கு சந்தேகம் பிறக்கிறது. ஒருவேளை அவன் தன் மனைவியை கொலைசெய்திருப்பானோ? என்று நினைத்த இவர், பைனாகுலர் மூலம் கவனிக்க தொடங்குகிறார். இதை நர்சிடமும், காதலியிடமும் சொல்கிறார். அவர்கள் இவரிடம், "இது உங்கள் மன பிரமை" என்று சொல்கிறார்கள். மேலும் அவரது காதலி, "அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது சட்டத்துக்கு புறம்பானது.", என்றும் கூறுகிறாள். இருந்தாலும் அடக்க முடியாத ஆர்வத்தால் ஜெஃப் தன் காவல்துறை நண்பர் ஒருவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல, அவரும் அங்கே சென்று விசாரித்து விட்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவர்கள் வீட்டை காலி செய்து போகிறார்கள், மனைவி முந்தின நாள் இரவே புறப்பட்டு போய்விட்டாள்." என்று கூறுகிறார். ஆனால் தான் சந்தேகப்படுவது உண்மை என்று முற்றிலும் நம்பும், ஜெஃப் தொடர்ந்து ஆராய தொடங்குகிறார். உண்மையில் அங்கே நடந்தது என்ன? ஜெஃப்பின் கூற்று உண்மையா? என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் ஹிச்காக். 



படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஜன்னலில் இருந்து ஒரு மனிதர் பார்ப்பது போலவே எடுத்திருக்கிறார்கள். ஒரு ஜன்னலுக்கு பின்னால் நடக்கும் காட்சிகளை வைத்து த்ரில்லர் கொடுக்க முடியுமா? அது ஹிச்காக்குக்கு மட்டுமே சாத்தியம். குறைந்த செலவில், அப்பார்மெண்ட் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜெஃப் ஆக நடித்திருப்பவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஸ்டூவர்ட். இவரது குரலே மிக வித்தியாசமாக, கம்பீரமாக இருக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகன் படம் நெடுக உட்கார்ந்து கொண்டே படத்தில் ஆளுமை செலுத்துவது எவ்வளவு கடினம்? அதை செய்து காட்டி இருக்கிறார் ஸ்டூவர்ட். அதே போல பெரிய ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு எல்லாம் நடிக்கவில்லை. ஒரு சாதாரண மனிதன், ஜன்னல் வழியாக எப்படி பயந்து பயந்து பார்ப்பானோ அப்படித்தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் உச்ச நட்சத்திரமாக மாறிப்போனார். அவரது காதலியாக நடித்திருப்பவர், கிரேஸ் கெல்லி. ஹிச்காக்கின் ஆஸ்தான கதாநாயகி. மிக அழகாக இருக்கிறார். இயல்பாக நடித்து மனதை கொள்ளை கொள்கிறார். வெளியான காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன இந்தப்படம், அருமையான பொழுது போக்குப்படம். இன்னொரு படத்தை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 



முழுவதும் படிக்க >>

March 8, 2012

உணவுப்பிரியரா நீங்கள்?


தமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களை 'தின்று கெட்டவர்கள்' என்று கூறுவார்கள். அதில் எங்கள் ஊர் விருதுநகரும் ஒன்று. அதிக வெரைட்டியான உணவு வகைகள் இல்லாவிட்டாலும், இங்கே சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் ஒரே உணவை வித்தியாசமாக காம்பினேசனில் வெளுத்துக்கட்டுவார்கள். இந்த ஊரில் சமையலில் வல்லவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். விருதுநகர் என்றவுடன் நினைவுக்கு வரும் ஒரு உணவுப்பண்டம் பரோட்டாதான். பரோட்டா என்பது வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் முற்றிலும் மாறுபட்ட உணவாக இருக்கிறது. இந்த ஊருக்குள் பரோட்டா எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த உணவே இப்போது இந்த ஊரின் அடையாளம் ஆகிப்போனது. அதே போல இங்கே தயாரிக்கும் பரோட்டாவானது பிற நகரத்தை போலால்லாமல் வேறு விதமாக தயாரிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவை 'விருதுநகர் பரோட்டா' என்று ஸ்பெஷலாக குறிப்பிடப்படுகிறது. இன்றும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹோட்டல்களின் பெயரோடு 'விருதுநகர்' என்று அடைமொழி இருப்பது, இங்கே அந்த குறிப்பிட்ட வகை பரோட்டை கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டவே.



பரோட்டை மைதா மாவை நன்கு பிசைந்து, வில்லைகளாக உருட்டி, அதனை பேப்பர் போல பரப்பி, பிறகு சுருட்டி எண்ணையில் பொரிப்பதாகும். குறைவான எண்ணையில் புரட்டி எடுப்பதை பரோட்டா என்றும், நிறைய எண்ணையில் பொரித்து எடுப்பது விருதுநகர் பரோட்டா என்றும் வழங்கப்படுகிறது. ஆனால் எங்கள் ஊரில், இதை வெறும் பரோட்டா என்றும், குறைந்த எண்ணையில் சமைப்பதை வாட்டுப்பரோட்டா என்றும் அழைக்கிறார்கள். விருதுநகரிலோ அல்லது அந்த பெயருள்ள கடைகளிலோ, பரோட்டா என்று கேட்டால், எண்ணை பரோட்டாதான் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 



எண்ணையில் பொரித்தாலும் விருதுநகர் பரோட்டா முரடாக முறுக்கு போல இருப்பதில்லை. கொஞ்சம் மொருமொருப்புடன், அதே நேரம் மிருதுவாகவும் இருக்கும். ஆகவே சரியாக தயாரிக்கப்பட்ட எண்ணை பரோட்டாவின் சுவையே தனி. இதை உண்ணும் முறையும் இங்கே வேறுபட்டே இருக்கிறது. இங்கே பரோட்டாவை பிய்த்து குருமாவில் தொட்டு சாப்பிடுவதில்லை. மாறாக, பரோட்டாவை நன்கு உதிர்த்து, அதன் மீது கோழி குருமாவோ அல்லது, சால்னாவோ விட்டு, பிறகு அதன் மீது மட்டன் சுக்கா அல்லது ஆட்டுக்குடல் குழம்பை ஊற்றித்தருவார்கள். சைவம் சாப்பிடுபவர்களுக்கு, சைவக்குருமா மீது, காளான் குழம்பை ஊற்றி தருவார்கள். இந்த கலவையில் நன்கு ஊறிய பரோட்டா மிக்க சுவை மிகுந்ததாக இருக்கும்.   இதை விட இன்னொரு சூப்பர் காம்பினேசன் இருக்கிறது. அதுதான் சாம்பார் பரோட்டா. பரோட்டாவை சாம்பாரில் ஊறவைத்து சாப்பிடும்போது கிடைக்கும் சுவை நம்மை அதற்கு அடிமையாக்கி விடும். 



தற்காலத்தில் நிறைய பரோட்டா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிற ஊர்களில் பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டாலும், இங்கே வழங்கப்படும் பெயர்களை மட்டும் கூறுகிறேன். 



கொத்து பரோட்டா: இதை முட்டை பரோட்டா என்றும் கூறுவார்கள் பரோட்டாவை உதிர்த்து, சூடான கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியோடு கலந்தது நன்கு கொத்துவார்கள். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, கொஞ்சம்  சால்னாவையும் ஊற்றி மேலும் கொத்துவார்கள். கடைசியில் மிளகு சேர்த்து பரிமாறுவார்கள். மிக சூடாக உண்ணுவதற்கு அருமையாக இருக்கும். இப்போது இதில் சிக்கன் துண்டுகளையும், மட்டன் துண்டுகளையும் கூட சேர்த்து கொத்தி, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து என்று வெரைட்டியை கூட்டுகிறார்கள். சைவ கொத்துப்பரோட்டாவில், முட்டைக்கு பதில் சில காய்கறிகளை சேர்ப்பார்கள்.



வீச்சு பரோட்டா: மைதா வில்லைகளை, பேப்பர் போல பரப்பிய பிறகு சுருட்டாமல் அப்படியே மடித்து கல்லில் போட்டு எடுப்பதே வீச்சு பரோட்டா. இதற்கு தனி சுவை உண்டு. மேலும் மடிப்பதற்கு முன்பாக, சூடான கல்லில் பரப்பி, அதில் முட்டை,  சால்னா  மிக்ஸை ஊற்றி, அதன் பிறகு மடித்து செய்வது, முட்டை வீச்சு என்று அழைக்கப்படுகிறது. இதனை பிற ஊர்களில் சிலோன் பரோட்டா என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.



சில்லி பரோட்டா: இது லேட்டஸ்ட் வருகை. பரோட்டாவை துண்டுகளாக நறுக்கி, சில்லி சிக்கன் செய்வது போலவே சிக்கனுக்கு பதிலாக பரோட்டா துண்டுகளை கலந்து செய்கிறார்கள். இடையே ட்ரையாகவும், அல்லது கொஞ்சம் குழம்பு போலவும் இரு விதமாக செய்வார்கள்.



இப்போதும், விருந்துகளில் எத்தனை பதார்த்தங்கள் இருந்தாலும், அதில் பரோட்டா தவறாமல் இடம்பெறுகிறது. அதே போல குடும்பத்தோடு வெளியே ஹோட்டலுக்கு சென்றால், பரோட்டா தவறாமல் ஆர்டர் செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து காரில் வருபவர்கள், இந்த பரோட்டாவை வாங்குவதற்கே காரை ஊருக்குள் திருப்புகிறார்கள். மேலும் ரயிலில் வருபவர்கள் தங்கள் உறவினரை பார்சல் வாங்கி வரச்செய்து, வண்டி ரயில் நிலையத்தில் நிற்க்கும்போது பெற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால் இப்போது பரோட்டா ஆரோக்கியமான உணவு கிடையாது என்று சொல்வதைக் கேட்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 

பிற்சேர்க்கை:

சமீபத்தில் ருசிக்காக உணவை சாப்பிட்டால் அது சமூகத்தை சீரழிக்கும் என்று கம்யூனிச கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. அவர்கள் கூறிய கருத்தை நிலை நிறுத்த பல்வேறு கதைகளை இதனோடு முடிச்சு போட்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை, ருசிக்காக உணவை சாப்பிடுவது தவறே இல்லை. ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக வித விதமாக ஆர்டர் செய்து அதனை அப்படியே வீணடிப்பதுதான் தவறு. எங்கள் ஊரில் பரோட்டா கடைகளில் விழும் இலைகளைப்பார்த்தால் தெரியும். உழைப்பாளிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் மிக ருசியான உணவு பரோட்டாதான். பரோட்டா  சால்னாவின் ருசியால் இலையை சுத்தமாக வழித்து விட்டுத்தான் கை கழுவுவார்கள். அதே போல பணம் இருக்கிறது என்பதற்காக கண்டதையும் ஆர்டர் செய்பவர்கள் கண்டிப்பாக ருசிக்காக சாப்பிடுவதில்லை. சும்மா பந்தாதான். பிடித்த ஐட்டமாக இருந்தாலும் நம்மால் சாப்பிட முடிந்த அளவு மட்டுமே ஆர்டர் செய்யவேண்டும். சாப்பிடும் விஷயத்தில் மட்டும் கவுரவம் பார்க்க கூடாது. இலையை சுத்தமாக வழித்தாலும் தப்பில்லை. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
முழுவதும் படிக்க >>

March 7, 2012

நான் என்ன தப்பு செஞ்சேன்?


என் நண்பன் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்போதுமே அரசு அதிகாரிகள், மற்றும் அரசு துறைகளின் மீது மாறாத வெறுப்பு உண்டு. எப்போது அவர்களைப் பற்றி பேசினாலும் ஒரு வித ஏளனத்தோடே பேசுவான். குறிப்பாக போலீஸ்காரர்களை அவன் மதிப்பதே இல்லை. ஏனென்றால் அவனது அக்காவின் கணவர் மிகப்பெரிய ஏலக்காய் வியாபாரி. சிறு வயதில் வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக இன்று கோடிகளுக்கு அதிபதி ஆகி இருக்கிறார். அவரிடம் வாரம் ஒருமுறை அந்த ஊர் காவல்துறை அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, மாமூல் வாங்கி செல்வார்களாம். அதை பார்த்து பார்த்து, இவனுக்கு காவல்துறை மீதிருந்த மரியாதையே போய்விட்டது. அரசு துறைகளை அவன் வெறுப்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. இவனது தந்தையின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள்.



அவனது தந்தை ஒரு அரசு அதிகாரி. எழுபதுகளில் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சிறு பதவியில் பணியை தொடர்ந்தவர். அரசாங்கத்தின் மீதும், அவர் சார்ந்த துறையின் மீது மிகுந்த காதல் கொண்டவர். 'பலகாரக்கடைக்காரர்கள்', என்ற புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த ஒரே ஆண் வாரிசான அவர், இயல்பிலேயே லஞ்சம் வாங்குவதை வெறுத்தார். இதனால் சம்பந்தப்பட்ட அந்த கிளை அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர். பத்திரப்பதிவு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் முறைகேடுகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் கடைசி வரை அவர் தன் நேர்மையை விட்டுக்கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சர்வீஸ் வெற்றிகரமாக கடந்து விட, தொடங்கியது சனி. வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக, சில மாதங்கள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை. மெடிக்கல் லீவில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே அலுவலகப்பணிகளை செய்து வந்துள்ளார். இது பெரும்பாலான அரசு அதிகாரிகள் செய்வதுதான். லீவ் முடிய இரண்டு நாள் இன்னும் மீதமிருக்கையில், அலுவலகத்துக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை மும்முரமாக அரசு அதிகாரிகளை நோட்டம் விட்ட காலகட்டம். இவர் தன் மேஜைக்கு வந்து டிராயரை இழுக்க, உள்ளே கத்தையாக கொஞ்சம் பணம். பணத்தை எடுக்கப்போனவர், ஏதோ ஒன்று உள்ளே நெருட பணத்தை தொடாமலேயே டிராயரை மூடி விட்டார். திடீரென்று அவரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விட்டனர். 



இவர் அலுவலகத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில், அலுவலக பியூன், அந்த டேபிள் டிராயரை லஞ்சப்பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி இருக்கிறான். பியூனுக்கு விரிக்கப்பட்ட வலையில் இவரும் மாட்டிக்கொண்டு விட்டார். இவர் செய்த ஒரே நல்ல காரியம், அந்த பணத்தை கையால் தொடாமல் இருந்ததுதான். தொட்டிருந்தால் அதில் தடவப்பட்டிருந்த அந்த ரசாயனம், இவரை குற்றவாளி என்று நிரூபித்திருக்கும். தேவை இல்லாமல் அலுவலகத்துக்கு அன்று சென்றது, அலுவலகப்பணிகளை வீட்டில் இருந்தே கவனித்தது (பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை வீட்டில் வைத்தே பரிமாற்றம் செய்வார்கள்) இவருக்கு எதிராகத் திரும்பியது.  ஒரு மாதிரி இரண்டு பக்கமும் பேலன்ஸ்ஆக இருக்கும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்தது, தொண்ணூறுகளின் இறுதியில். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், கடைசியாக ஒரே ஒரு பையன் (என் நண்பன்). ரசாயன பரிசோதனையில் குற்றத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால், வழக்கு வலுவிழந்தது. ஆனாலும் இன்ன பிற காரணங்களால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது. 



நீதிபதிகளின் இடமாற்றம், ஒரு பக்க சார்புள்ள நீதிபதிகள், தப்பான ஆளை கைது செய்தாலும், அதை பூசி மொழுக நினைத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சரியாக சிக்கிக்கொண்ட பியூனின் தில்லாலங்கடி வேலைகள் என்று வழக்குக்கு பல்வேறு இடையூறுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு பிரமோஷன், இங்க்ரீமெண்ட், போனஸ் என்று எல்லாமே கட். மேலும் அரை சம்பளம் மட்டுமே கிடைத்தது. பெண்கள் அனைவருக்கும் திருமணம், மகனின் பட்டப்படிப்பு என்று எல்லாம் சேர்ந்து இவரை நடுரோட்டுக்கு இழுத்து வந்துவிட்டது. "எதை தின்றால் பித்தம் தீரும்?", என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இவர், பல்வேறு வக்கீல்களை சந்தித்து, அவர்களின் பணத்தாசையால் கடனாளியாகவும் ஆனார். ரிட்டைர்டும் ஆகி விட்டார். ஒரு கட்டத்தில் இவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரியே இவரிடம், "அன்னைக்கு வந்ததுதான் வந்துட்டோம், வெறும் கையோடு போகக்கூடாதுன்னுதான், வழக்கு பதிவு செஞ்சோம்....சாரி.", என்று கூறினாராம். இவரும் விரக்தியான சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து விட்டார். ஒரு வழியாக கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் வனவாசத்துக்கு பிறகு, 2011 இறுதியில் வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் இவரது நற்பெயர், சொத்து, சுயமரியாதை எல்லாம் போய்விட்டது. 



"சரி தீர்ப்புதான் வந்துவிட்டதே? இனி கவலை இல்லை.", என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இவர் மீது வழக்கு பதிவு செய்த அந்த தினத்தில் இருந்து இவர் ரிட்டையர் ஆன தினம் வரையிலான இவரது பாக்கி சம்பளம் வரவேண்டி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் இவருக்கு வழங்கப்படவேண்டிய பணி உயர்வுகள், அதற்கேற்ற சம்பள உயர்வுகள், போனஸ் ஆகியவை இவருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனோடு ஆறாவது சம்பள கமிஷன் கணக்கு வேறு இணைகிறது. இவற்றை எல்லாம் கணக்கிட வேண்டும் என்றால் தனியாக ஒருவர் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டி வரும். இவற்றிற்காக இவர் அலையோ என்று அலைந்து, வேலையை தொடங்கி விட்டார். இதனிடையே அரசு அதிகாரிகளின் பணி உயர்வு குறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, இவருக்கு மேலும் இரண்டு பதவி உயர்வுகள் வழங்க வேண்டுமாம். ஆக மறுபடியும் கணக்கை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதற்காக இவர் சமர்ப்பித்த ஆவணங்கள், சென்னை மற்றும் இவர் வேலை பார்த்த இரண்டு மூன்று மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பலமுறை தாவி தாவி சுற்றி வர வேண்டியிருக்கும். அரசு இயந்திரத்தை பற்றித்தான் தெரியுமே. இவரது ஆவணங்கள் திருவாரூர் தேர் மாதிரி ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இவரும், "கொஞ்சம் அயர்ந்தாலும் தேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு போயி விடுவார்கள்.", என்று கவனமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார். இடையே வக்கீல் ஒருவர், "இந்த பணத்திற்கு உங்களுக்கு வட்டி கிடைக்காது, ஆனால் வழக்கு ஒன்றை பதிவு செய்தால் வட்டியும் கிடைக்கும் அதே போல ஒரே மாதத்தில் பணத்தையும் வசூலித்து விடலாம். எனக்கு ஒரு 20% கொடுங்க.", என்றாராம். இவர், "பொதும்டா சாமி....", என்று அவரை கையெடுத்து கும்பிட்டு விட்டு, "நானே பாத்துக்கிறேன்." என்று வயதான காலத்தில் இன்று வரை பல அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். 



இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை. ஆனால் தவறே செய்யாத ஒருவர், தன் வாழ்நாளில் நிம்மதி அனைத்தையும் இழந்து, ரிட்டையர் ஆன பிறகும், ஓய்வில்லாமல் மன ஊளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கிறார். என்னங்க நியாயம் இது?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 


முழுவதும் படிக்க >>

March 6, 2012

வாசகர் பலவிதம்....



மு.கு: இந்த கட்டுரை சும்மா ஜாலிக்காக, நகைச்சுவை நோக்குடன் மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் குறிப்பிட்டோ, புண்படுத்தும் நோக்கத்துடனோ, எழுதப்படவில்லை.



ஏற்கனவே ஒருதடவை பதிவர்கள் பலவிதம்னு ஒரு கட்டுரை எழுதி பல்பு வாங்கினது பத்ததா? இவன் திருந்தவே மாட்டானான்னு நீங்க நினைக்கலாம். ஒவ்வொரு முறையும் நான் இந்த மாதிரி கிண்டலாக பதிவுலகம் பற்றி எழுதும்போது, அதில் நானும் ஒருவன் என்பதை மறப்பதே இல்லை. மேலும் நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வது ஒரு வித தற்காப்புதான். சரி. பதிவுலகில் நாமெல்லாம் மாங்கு மாங்கென்று எதற்காக எழுதுகிறோம்? ஒரு சிலர், "ஆத்ம திருப்திக்காக!", என்றும், "எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது ஒரு கனவு, ஆனால் அது நிறைவேறாத நிலையில் இப்படி ஒரு பிளாக் தொடங்கி எழுதிக்கொண்டிருக்கிறேன்.", என்று சொல்வார்கள். ஆனால் என்னதான் எழுதினாலும் அதை மற்றவர்கள் படிக்கவில்லை என்றால் ஏமாற்றமே மிஞ்சும். ஒரே ஒருவராவது அதை படித்துவிட மாட்டார்களா? என்ற ஏக்கம் இருக்கும். குறைந்தது தன் துணையாவது படிக்கவேண்டும் என்று டைப் செய்துவிட்டு டிராஃப்டில் உள்ளதை மனைவி/கணவனை படிக்க சொல்லும் பதிவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அதை படித்து நொந்து நூடுல்ஸ் ஆவார்கள் என்பது வேறு விஷயம். பின்னே அவர்களை எப்படி தண்டிப்பது? ஆக எல்லோருமே வாசகர்களை நோக்கியே எழுதுகிறோம். அவர்களை எப்படி வகைப்படுத்தலாம்? என்று யோசித்தபோது, பதிவர்களை வகைப்படுத்தியதை போல அவ்வளவு எளிதல்ல, என்று தெரிந்தது. இதில் நம்ம ஊர் ஜாதிகளைப்போல நிறைய பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் உள்ளன. ஆகவே மிகபொதுவாக வரிசைப்படுத்தியே எழுதி விடுகிறேன். கவனிக்க, வாசகர்களுள் பதிவர்களும் அடக்கம். ஏனென்றால், ஒரு பதிவிற்கு கமெண்ட் போடுவது பெரும்பாலும் பிற பதிவர்களே.



பாசிடிவ் வாசகர் - இவர்கள் மிக நல்லவர்கள். நாம் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அதை பாஸிட்டிவாகவே பார்ப்பவர்கள். நம்மை ஊக்கப்படுத்துவதையே தொழிலாக கொண்டவர்கள். இவர்கள் பதிவுலகிற்கு ரொம்ப முக்கியம். இவர்கள் இல்லாவிட்டால் பலபேர் பதிவு எழுதுவதையே விட்டு விடுவார்கள். 

நெகட்டிவ் வாசகர்-இவர் அப்படியே எதிர்பதம். என்ன எழுதினாலும் அதில் குறை கண்டுபிடிப்பவர். ஸ்பெல்லிங் மிஸ்டெக்கை கூட கொக்கி போட்டு காட்டுபவர்கள். இவர் மனதில் ஒரு ப்ரூஃப் ரீடர் என்ற நினைப்பு இருக்கும். அதே போல ஒரு தடவை இப்படி விமர்சித்து நல்ல பெயர் கிடைத்து விட்டதால் அதை மெயிண்டேன் செய்வதற்காக கடைசிவரை அதே வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர். 

கடவுள் வாசகர் - அதிகப்படியான வார்த்தையாக இருந்தாலும், இப்படியும் ஒரு குரூப் இருக்கிறது. இவர்கள் பதிவுகளை படிக்க மட்டுமே செய்வார்கள். கமெண்டோ, மெயிலோ அனுப்புவதில்லை. இப்படிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டுபிடிபப்து ஒரு பதிவருக்கு தேவை இல்லாத வேலை. இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் முக்கியம். அதை ஆராய வேண்டிய அவசியும் இல்லை. ஆகவே தான் கடவுள் என்றேன். 



கமல் டைப் வாசகர்-இவரது கருத்துரைகள் சுத்த தமிழில் மிக நீளமாக இருக்கும். ஆனால் என்ன சொல்ல வருகிறார், என்பது எத்தனை முறை படித்தாலும் புரியாது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு மாதிரி தோன்றும். இவர்களுக்கு பதில் சொல்வது என்பது மிக கடினமான காரியம். 

செந்தில் டைப் வாசகர் - இவரிடும் கருத்துக்கள் சிம்பிளாக இருக்கும். ஆனால் நம்மால் விளக்கம் சொல்ல முடியாது. ரொம்ப நேரம் விவாதத்துக்கு பிறகு மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பார்கள். ஒண்ணு இங்க இருக்கு இன்னொன்னெங்கே?... அதான் இது... ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பார்கள். 

வடிவேலு டைப் வாசகர் - இவரும் ஒரு வகையில் செந்திலுக்கு உறவுக்காரர்தான். "ஏம்பா தம்பி, பொண்ண கைய்ய புடிச்சு இழுத்தியா?", என்று கேட்டால், "என்ன கையபுடிச்சு இழுத்தியா?", என்று திரும்ப திரும்ப கேட்பார். கமெண்ட்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டினாலும் இது நிற்காது.

மணிரத்னம் டைப் வாசகர் - இவரது கமெண்ட்கள் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும். அருமை, கலக்கல், வாழ்த்துக்கள், நன்றி என்று மட்டும் சொல்வார்கள். என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது மிக கடினம். இவர் சில நேரம் பதிவுகளை படிக்காமல் கமெண்ட் போடுகிறாரோ என்று கூட தோன்றும். உதாரணமாக பெண் பதிவர் ஒருவர், தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பதிவாக எழுத, நம்மாள், "கலக்கல்" என்று கமெண்ட் போட்டு மாட்டிக்கொள்வதுண்டு.  

அகழ்வாராய்ச்சி வாசகர் - இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர் கமெண்ட் போடும் முன் பல ஆண்டுகளுக்கு முன்னால் நாம் எழுதிய கட்டுரைகளை தோண்டி துருவி ஆதாரமாக காட்டி எழுதுவார். நாமே மறந்து விட்ட பல பதிவுகளை நம்மை திருப்பி படிக்க வைப்பவர். 



உரையாடல் வாசகர்-பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், கருத்து பெட்டியை, சாட் செய்வதற்காக பயன்படுத்துபவர். "நீங்க நலமா? நேத்து உங்கள ரோட்ல பார்த்தேன், கொஞ்சம் இளச்ச மாதிரி தெரியுது",ன்னு, கமெண்ட் பகுதியிலேயே நம்மோடு சாட் செய்பவர். ஆரம்ப காலத்தில் பிற பதிவர்களின் கமெண்ட் பெட்டிகளை பார்த்து நான் குழம்பியே போயிருக்கிறேன். 

வெண்ணிறஆடை மூர்த்தி டைப் வாசகர் - பெயரை பார்த்ததுமே உங்களுக்கு புரிந்திருக்கும். இவர் இடும் கருத்துக்கள் எப்போதுமே ஒரே அர்த்தத்தில் இருப்பதில்லை. இரட்டை அர்த்தம் அல்லது பல அர்த்தங்களை கொண்டிருக்கும். அதே போல, நாம் எழுதிய பதிவிற்கு நமக்கே தெரியாமல் புது அர்த்தம் கற்பித்து விடுவார்கள். அதுவும் சரியாக பொருந்தி விடும். அப்புறம் என்ன, நாமும் ஹி ஹி என்று கமெண்ட் போட்டு சமாளிக்க வேண்டியதுதான். 

லேட் பிக் அப் வாசகர் - இவர்கள் போன பதிவிற்கு இந்த பதிவில் வந்து கமெண்ட் போடுவார்கள். முதலில் நமக்கு குழப்பம் வந்தாலும், நாமும் சுதாரித்து கொண்டு பதில் கூற வேண்டும். இல்லை அவரிடமே விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. 

கருணாநிதி டைப் வாசகர் - வாய்ப்பேச்சில் இவரை அடித்துக்கொள்ள முடியாது. ஏகப்பட்ட சுட்டிகள், தரவுகள் என்று அசத்துவார்கள். கொஞ்சம் ஏமாந்தால், கம்பியூட்டர் கண்டு பிடிக்காத காலத்தில் இருந்தே பதிவுக்ளை படித்து வருவதாக கூறுவார்கள். நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தவறு. ஏனென்றால் சம்பந்தமில்லாமல் பேசி நம்மையே குழப்பி விடுவார்கள். ஆகவே பொழுது போகவில்லை என்றால் மட்டும் இவரோடு வாதிடுங்கள். 

குழாயடி வாசகர் - இவர் எப்போதும் தனியாக வருவதில்லை. ஜோடியாகவோ அல்லது குருப்பாகவோதான் வருவார். ஜோடி என்றவுடன் வேறு மாதிரி அர்த்தம் கொள்ளாதீர்கள். அந்த இருவருக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் உங்கள் கமெண்ட் பகுதியில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மாறி மாறி அடித்து கட்டி உருண்டு கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் இருவரையும் சமாதான படுத்துவதே பெரும்பாடாகி விடும்.

வார்த்தை விளையாட்டு வாசகர் - நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இன்னொரு பிரிவினர். இவருக்கு விளக்கம் சொல்லும் நேரத்தில் இன்னும் நான்கு பதிவு எழுதி விடலாம். சாமர்த்தியமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி, நாம் வாயில் இருந்தே உண்மைகளை வரவைத்து விடுவார். சில நேரங்களில் அவர்கள் சொல்வதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்ள வைத்து விடுவார். 



பீட்டர் வாசகர் - இவர் எப்போதும் ஆங்கிலத்திலேயே கமெண்ட் போடுவார். அதுவும் தெளிவாக இருந்தால் பரவாயில்லை. ungal pathivai naan oththu kolla mudiyathu, ithu muththilum thavaranadhu என்று தமிழை ஆங்கிலத்தில் எழுதி படுத்திவிடுவார். அதுவும் பக்கம் பக்கமாக எழுதி, படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இவர்களால் சமூகத்துக்கு ஒரு நன்மை நடந்திருக்கிறது. இவர்கள் இல்லை என்றாள் கூகிள் டிரான்ஸ்லிடெரேசன் என்று ஒன்று கிடைத்திருக்குமா?

பல்பு வாசகர் - அவசரப்பட்டு ஏதாவது பேசிவிட்டு, பிறகு பல்பு வாங்குபவர்கள். ஒரு பதிவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் உள்குத்து பதிவு ஒன்றை, பகடி அல்லது சிறுகதை வடிவில் எழுத, அது தெரியாத நம்மாள், "அருமையான கதை.", என்று கமெண்ட் போட்டு பல்பு வாங்குவார். நான் நிறைய வாங்கி இருக்கிறேன். 

அழைப்பிதழ் வாசகர்-இவர்கள் கண்டிப்பாக பதிவர்கள்தான். ஒரு பதிவர் தன் பதிவை படிக்க வேண்டும் என்று நினைத்தாலோ, புதிதாக தான் ஒரு பதிவு எழுதி இருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு கமெண்ட் போடுவார். இவர்களின் கமெண்டை பார்த்தாலே, ஆசாமி இன்று புதிதாக பதிவு எழுதி இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம். இதற்கு உதாரணம் வேறு யாரும் இல்லை. நான்தான்.

மேலே நான் கூறி இருக்கும் பதிவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல. அது அவர்களின் இயல்பு. மற்றபடி அப்படி இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அடுத்து நான் கூறப்போகும் சில வாசகர்கள், முற்றிலும் தவறான நோக்கத்தோடே இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்து விடுவோம். 



கோர்த்து விடும் வாசகர் - நல்ல போய் கொண்டிருக்கும் வண்டியை ரூட்டை திருப்பி விடுவது மாதிரி,  கமெண்ட் பகுதியில் வந்து எதையாவது கொழுத்தி போட்டு விட்டு போயி விடுவார்கள். உதாரணமாக, தலித்கள் பற்றிய கட்டுரையில், சம்பந்தமே இல்லாமல், "தேவர் வாழ்க!" என்று கமெண்ட் போட்டு விட்டு வந்து விடுவார். இல்லாவிட்டால், "ஏண்டா அம்பி, இது நோக்கே நன்னா இருக்கா", என்று வேறு பாஷையில் பேசி கோர்த்து விட்டு விடுவார். இந்துக்களை பற்றி விமர்சித்திருக்கும் ஒரு கட்டுரையில், "முஸ்லீம்கள் மட்டும் என்ன ஒழுங்கா?", என்று குட்டையை குழப்பி விட்டு விடுவார். இவர்களின் நோக்கம் நியாயம் கேட்பது அல்ல. எல்லோர் வாயையும் கிண்டி, அதன் மூலம் ஜாலியாக பொழுதை போக்குவதுதான். 

அட்ரஸ் இல்லா வாசகர் - இவரது பெயர் Anonymous. இவருக்கு கெட்ட வார்த்தை பேசுவது மட்டுமே தொழில். ஒருவரது பதிவுகள் பிடிக்காத பட்சத்தில், முகத்துக்கு நேராக கலாய்க்காவோ, விமர்சிக்கவோ முடியாமல் போன விரக்தியில், இப்படி அட்ரஸ் இல்லாமல் வந்து குரைத்து விட்டு செல்பவர். இவர்களது கமெண்ட்கள் பெரும்பாலும் பதிவுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.

அந்நியன் வாசகர் - இப்படி ஒரு குரூப் இருக்கிறது என்று நம்மில் பலபெருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு இருப்பது மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களோடு நன்றாக பழகி வரும் மரியாதைக்குரிய சக பதிவருக்கு கூட இருக்கலாம். இந்த டைப் வாசகர்களுக்கு குறைந்தது இரண்டு ஐடிக்கள் இருக்கும். ஒன்று ஊரறிந்த நல்ல ஐடி, மற்றொன்று தன் உண்மை முகத்தை காட்டும் கள்ள ஐடி. நீங்கள் விஜய்யை கலாய்த்து பதிவெழுதி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நல்ல ஐடியில் வந்து, மிக பண்பாக பேசுவார். அதே நேரம் தன்னிடம் இருக்கும் கள்ள ஐடியில் வந்து கெட்ட வார்த்தையில் திட்டுவார். சில அப்பாவி பதிவர்கள் இரண்டு பெரும் வேறு வேறு ஆள் என்று நம்பி விடுவார். இவர்கள் எழுதும் பதிவிற்கு நாம் கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டோம் என்றால், இவர் சாந்தமாகவே பேசுவார். ஆனால் உடனே இன்னொரு ஐடியில் வந்து நம்மை திட்டுவார்.ஒவ்வொருவரின் திறமைக்கு ஏற்ப ஐடிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனக்கு தெரிந்த சக பதிவர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஐடிக்கள் உள்ளன. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 



ஒரு வழியாக இந்த பதிவு முடிவுக்கு வந்து விட்டது. இந்த லிஸ்டில் நீங்கள் எந்த வகை வாசகர் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஆள் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதுபோக வேறு எதுவும் பிரிவிருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள். 


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...