விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 4, 2011

பொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்

இந்த ஆண்டு எங்கள் மாவட்டத்தில் பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது. அதிலும் கடமுடா என்று இடி மின்னல் வேறு. கடந்த வாரம் விழுந்த ஒரு இடியில் என் மோடம் உயிரிழந்து விட, எனது லேப்டாப் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. இப்போது சரியாகி விட்டாலும் மோடம் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மேலும் பணியிடத்தில் வேலை அதிகம் என்பதால், சுத்தமாக பதிவுலகம் பக்கம் தலைக்காட்டவே முடியவில்லை. பிற நண்பர்களின் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. நண்பர்கள் மன்னிப்பார்களாக. 


பிறப்பால் ஒரு இந்து என்பதால் இந்து கோயில்களுக்கு அதிகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். மேலும், பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அதிகம் சென்றதில்லை. ஆகவே இந்து கோயில்களை வைத்தே இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு காலத்தில் திருப்பதி கோவிலில் மட்டுமே இருந்த முறை, தற்போது பெரும்பாலான கோயில்களில் வந்துவிட்டது. அது சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, விதவிதமான வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அவரவர் வசதிக்கேற்ப விரைவாகவோ, சாவகாசமாகவோ சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கும் முறை. 


சமீபகாலமாக இந்த முறை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் கூட நடைமுறைக்கு வந்து விட்டது. ஒரு காலத்தில், திருச்செந்தூர் சென்றால் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை சாமி தரிசனம் செய்து விடலாம். இப்போதெல்லாம் ஒரு முறை சாமி தரிசனம் செய்வதற்கே வெகு நேரம் ஆகி விடுகிறது. இதன் முக்கிய காரணமாக, ஒரு குறிப்பிட்ட தினத்தில், நிறைய மக்கள் கோவிலுக்கு வருவதால், அந்த கூட்டத்தை சமாளிக்கும் விதமாக இந்த மாதிரி நீண்ட வரிசைகளை அமைத்து, அதற்கு கட்டணம் வசூலிப்பதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் அல்லவா.  அது ஓரளவுக்கு உண்மைதான். விசேச நாட்கள் மட்டுமல்லாது, இப்போதெல்லாம் எல்லா தினங்களிலுமே கோவில்களில் கூட்டம் பெருகி விட்டது. 


ஆனால் இந்த ஆண்டு, ஒரு கோவில்களில் நான் கண்ட விஷயத்தை சொல்கிறேன். கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே மூன்று விதமான வரிசைகள் தென்பட்டன. பொது தரிசன வரிசை, பத்து ரூபாய் வரிசை மற்றும் 100 ரூபாய் வரிசை. இதில் 100 ரூபாய் வரிசையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால் முதல் இரண்டு வரிசைகளில் சம அளவிலான கூட்டம் இருந்தது. ஆனால் வரிசையின் நீளத்தை வைத்து பார்த்தால், பத்து ரூபாய் வரிசை சீக்கிரம் 'கடவுளை' அடைந்து விடும் தோன்றியதால் அதில் சேர்ந்து கொண்டோம். இரண்டு வரிசைகளும் ஒரு வளைவில் திரும்பின. திரும்பியவுடன்தான் தெரிந்தது, கோவில் நிர்வாக எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறது என்று. அந்த வளைவுக்கு அப்பால் நீளும் வரிசையில், பொது தரிசன வரிசையில் சென்றவர்கள், எங்களைவிட 15 நிமிடம் முன்பாகவே தரிசனம் செய்து விட்டார்கள். எங்கள் வரிசை பாம்பு போல வளைந்து வளைந்து சென்று இறைவனை அடைந்தது. 


தொடக்கத்தில் பொது தரிசன வரிசை மிக பெரியதாக இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி, எல்லோரையும் பத்து ரூபாய் வரிசைக்கு வர வைத்திருக்கிறார்கள். நாமும் "பத்து ரூபாய்தானே?" என்று கடவுளை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இந்த வரிசையில் வந்து ஏமாந்து விடுகிறோம். எவ்வளவு பெரிய வியாபார தந்திரம் பாருங்கள். பிறகு, "சரி நாம கொடுத்த காசு சாமிக்குத்தானே போய் சேர்ந்திருக்கு" என்று மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தோம். இந்த மாதிரி தலங்களுக்கு செல்லும்போது என் மனதை அரிக்கும் ஒரு கேள்வி. அதென்ன, பொது தரிசனம், சிறப்பு தரிசனம்? அவசர தரிசனம் என்றுதானே இருக்கவேண்டும்? காசு கொடுத்தால் அவருக்கென்ன கடவுளே நேரில் வந்து ஸ்பெஷல் தரிசனம் கொடுத்து விடப்போகிறாரா? அவருக்கு வேறு வேலை இருப்பதால், காசு கொடுத்து கடவுளை அவசரமாக பார்த்து விட்டு செல்கிறார். அதை அவசர தரிசனம் என்று சொல்வதுதானே சரி? இப்போதெல்லாம் பல கோவில்களில் பொது தரிசனமே குறைந்த பட்சம் 5 ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்கிறது. 


என்னை பொறுத்தவரை, கோவிலுக்கு செல்வதானால், முதலில் கால அட்டவணை போட்டு கொண்டு செல்லக்கூடாது. அவசரமாக கடவுளை பார்ப்பதற்கு, பார்க்காமலேயே இருந்து விடலாம். இல்லை என்றால், கூட்டம் இல்லாத தினமாக பார்த்து, கூட்டம் இல்லாத நேரங்களில் கோவிலுக்கு செல்லலாம். மேலும் பலர், படித்தவர்களாக இருந்தாலும், குறுக்கே புகுவதை பெரிய சாகசமாக நினைப்பார்கள். கோவிலுக்கு செல்வது என்பது, முண்டி அடித்துக்கொண்டு, கடவுளை பார்ப்பதல்ல. நிதானமாக சென்று, மன பாரங்களை இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக வீடு திரும்புவது. கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் விதமாக இந்தமாதிரி வரிசை முறைகளை கோவில் நிர்வாகங்கள் நீக்கி விடுவதே சிறந்தது. ஏனென்றால் எவ்வளவு பணம் இருந்தாலும், இந்த மாதிரி அவசர தரிசன வரிசை இல்லாவிட்டால் பண வசதி படைத்தவர்களும், பொது தரிசன வரிசைக்கு வந்து விடுவார்கள். மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம். இவை என் கருத்துக்கள் மட்டுமே. இது குறித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

முழுவதும் படிக்க >>

September 27, 2011

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....

முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும். 

காட்சி :1 

தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.


அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"

அவன்,"ஆமா.."

அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்." 

அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள். 

ஆம் அவள் அவனது அண்ணி. 

காட்சி :2 

"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான். 

"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய். 

"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான். 

"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள். 

"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது. 

அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள். 

அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய். 


காட்சி - 3 

முதலில் சிறியதாய் இருக்கும் அது, ஒரு பெண்ணின் விரல் பட்டதும், மெதுவாக நீண்டு பெரியதாகிறது. 


விளக்கம்: 
ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த மூன்று காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள். 

காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம் 
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம் 
காட்சி 3 - ஆக்ஸ் டியோடரண்ட் (நீள்வதற்கு காரணம் 35% எக்ஸ்ட்ராவாம்) 


நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

September 21, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 4

நண்பர் அந்நியன் 2 உள்பட நிறைய பேர் "தமிழ்மணம் பட்டை எங்கே?" என்று கேட்டிருக்கிறார்கள். முதல் காரணம் முதலில் இருந்தே அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றொரு காரணம், வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக இணைத்து விட்டேன். ஆனால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் பதிவிற்கு மேலே இருக்கிறது. எப்படி கீழே கொண்டு வருவதென்று தெரியவில்லை. ஓட்டுப்போடணும்னா சிரமம் பார்க்காம, மேலே உள்ள தமிழ்மண பட்டையிலும் ஒரு அழுத்து அழுத்துங்க. இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளில் என்னை கவர்ந்த வீரர்களை பற்றி எழுதுகிறேன். இந்த பட்டியல் மிக பெரியது என்பதால், மிகவும் கவர்ந்த வீரர்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறேன். 



பாகிஸ்தான் 

இந்திய அணியின் சொந்த சகோதரன். அடிக்கடி உரசல் வரும். அந்த உரசல் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கும். உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இல்லாத பரபரப்பு, இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு உண்டு. மேலும் இரு அணி வீரர்களும், மற்ற அணிகளோடு ஆடுவதை விட ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். மிகுந்த சர்ச்சைகள் நிறைந்த, அதிரடி திருப்பங்கள் மிகுந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு. அதில் என்னை கவர்ந்த சில வீரர்கள் உள்ளனர். 

இன்சமாம் உல் ஹக் 


1992 உலகக்கோப்பையின் ஹீரோ. மிக அழகான, பெண்களுக்கு பிடித்த வீரராக திகழ்ந்தவர். மிக மிக மெதுவாக செயல்படும் ஒரு வீரர். இவ்ரது பெயரை சொன்னதுமே, கூடவே ஞாபகம் வருவது ரன் அவுட். இவருக்கும் ரன் அவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஆனால் பாகிஸ்தானின் அபாயகரமாக வீரர்களுள் இவரும் ஒருவர். 

சயீத் அன்வர்


பாகிஸ்தான் வீரர்களிலேயே மிக அமைதியான வீரர். இவரும் முகத்தில் எந்த வித சலனமும் காட்டமாட்டார். சிரித்துக்கொண்டே சிக்சர் அடித்து பவுலர்களை கடுப்பேற்றுவதில் கில்லாடி. அதே போல கொஞ்சம் கூட களைப்படையாமல் நீண்ட நேரம் ஆடக்கூடியவர். 

வக்கார் யூனிஸ்


பாகிஸ்தான் முதன்மை பவுலர்களில் ஒருவர். பந்து வீச்சில் 90களில் குறிப்படத்தக்க ஒருவராக திகழ்ந்தவர். பாகிஸ்தான் அணியில் நீண்ட காலம் நிலைத்து ஆடுவது என்பது கஷ்டம். இவர் நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் ஆடியவர். 

மொஹம்மத் யூசுஃப் 


இவர் சரியான விடாக்கண்டன். பாகிஸ்தான் அணி படு மட்டமாக ஆடி பாதாளத்தில் கிடக்கும்போது இவர் களத்தில் இறங்கி வெற்றிகரமாக மீட்பார். இவரை அவுட் ஆக்குவது என்பது மிக சிரமமான காரியம். முதலில் ஒரு கிருத்துவராக, யூசுஃப் யுகானாவாக இருந்தவர், பின்னர் இசுலாமுக்கு மாறி மொஹம்மத் யூசுஃப் ஆனார். 

ஷாஹித் அப்ரிடி


இன்று வரை பாகிஸ்தான் ரசிகர்களின் கனவு நாயகன். ஒரே படத்தின் மூலம் மாதவன் பல பெண்கள் மனதில் இடம் பிடித்ததை போல, ஒரே ஆட்டத்தில் பல பெண்களின் கனவு நாயகனாக மாறியவர். மிக அழகான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். மரண அடிக்கு பெயர் போனவர். பெரும்பாலும் ஒன்றிரண்டு பந்துகளிலேயே அவசரப்பட்டு அவுட் ஆகி விடுவார். ஆனால் அப்படி ஆகாமல் நிலைத்து விட்டால், பவுலர் பாடு திண்டாட்டம்தான். சமீபகாலமாக பவுலிங்கில் சிறந்து விளங்குகிறார். 

சக்லைன் முஷ்டாக்


தொண்ணூறுகளில் ஆட்சி செய்த ஒரு சில ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். மிக மிக மெதுவாக பந்து வீசுவார். இவரது சிறப்பம்ஸமே, இவர் வீசும் டாப் ஸ்பின்தான். அதாவது பந்து வெகு நேரம் காற்றிலேயே பறந்து வரும். எந்த இடத்தில் தரையில் படும் என்று கணிக்க முடியாது. குறுகிய போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 

அப்துல் ரசாக்


ஒரு காலத்தில் சச்சினை வீழ்த்த வேண்டுமா? கொண்டு வா ரசாக்கை, என்ற நிலை இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சச்சின் இவரது பந்து வீச்சில் திணறி வந்தார். பாகிஸ்தானின் இடைப்பட்ட ஓவர்களை வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதில் வல்லவர். மேலும் பேட்டிங்கிலும் கொஞ்சம் அபாயகரமானவர்தான். இவரது நடை உடை பாவனைகளில் எல்லாம் பெண்ணின் சாயல் இருக்கும். 

வாசிம் அக்ரம் 


கிரிக்கெட்டின் சிறந்த பவுலர்களில் இவரும் ஒருவர். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. ரிவர்ஸ் ஸ்வீங் என்ற முறையை திறமையாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியவர். நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையிலும் சிக்கியவர். 


இலங்கை 

பாகிஸ்தான் அணி போலவே இலங்கை அணியும் இந்திய கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. விடா முயற்சிக்கு பெயர் பெற்ற ஒரு அணி. எந்த ஒரு தொடரையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

முத்தையா முரளிதரன் 


கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு நல்ல மனிதராகவும் இவரை எனக்கு பிடித்திருக்கிறது. எந்த ஒரு கள்ளம் கபடமும் இல்லாத மனிதராக விளங்கும் இவர், கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவர். நிறைய சர்ச்சைகளை தாண்டி, சாதித்து காட்டியவர். நாடுகள் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு வீரர்.


சனத் ஜெயசூரியா


தொண்ணூறுகளில் பல பவுலர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர். ஈவு இரக்கமற்ற வீரர்களுள் ஒருவர். இலங்கை உலகக்கோப்பை வென்றதில் இவர் பங்கு சிறப்பானது. மிக சிறந்த பீல்டரும் கூட. இவர் களத்தில் விளையாடுவதை பார்த்தால், இவருக்கு 41 வயது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். 

அரவிந்த டி சில்வா 


இவரப்பார்த்தால் எமதர்மன் தோளில் கதாயுதத்தை சுமந்து கொண்டு வருவது போல இருக்கும். இலங்கையின் உலகக்கோப்பை நாயகன். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாமல், டெக்னிக்கலாக ஆடுவதிலும் வல்லவர். துல்லியமாக பந்து வீசி தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதிலும் வல்லவர். 

சமீந்தா வாஸ் 


90களில் குறிப்பிடத்த்க்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். நீண்டகாலம் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அதிகம் அவதிப்படுவர். ஆனால் காயமில்லாமல் அதிக காலம் அணியில் ஆடியவர். 

ரோஷன் மகானமா


நான் பார்த்த முதல் இலங்கை வீரர். 1994 என்று நினைக்கிறேன். அப்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். நிலையாக நின்று சாதிப்பார். இவர் ஒரு ஸ்லோ பாய்சன். மெதுமெதுவாக எதிரணியை வீழ்த்துவார். 1996 உலகக்கோப்பையில், அரையிறுதியில் இந்தியாவின் கோப்பை கனவில் மண் அள்ளி போட்டவர். 

அர்ஜுனா ரணதுங்கா 


எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஒரு சிறந்த கேப்டன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அணியை இக்கட்டான நேரத்தில் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இவரைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர். 

லசித் மலிங்கா 


தற்காலத்தில், பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர். இவரது ஜெட் வேக யார்க்கர்களை சமாளிக்க முடியாமல் நிறைய வீரர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். வித்தியாசமாக ஹேர்ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்தவர். இவரைப்பார்த்தால் எனக்கு மயில்சாமி ஞாபகம் வருகிறது. 


உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 20, 2011

பதிவுலக சாதி வெறியர்களே....


தலைப்பை பார்த்ததும் கடுப்பாகி இருப்பீர்களே? "சொல்ல வந்துட்டாண்டா இவன் பெரிய யோக்கியன். முதலில் இவன் என்ன ஜாதி? இவன் யார் மத்தவங்களை பத்தி சொல்றதுக்கு?" என்று நினைப்பீர்கள். வேறு சிலர், "இவன் எந்த ஜாதியை பற்றி சொல்லப்போகிறான்?" என்று ஆவலோடு வருவீர்கள். சில மாதங்களுக்கு முன் இன உணர்வை பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் கூறி இருந்த சில கருத்துக்களை இங்கும் பயன்படுத்துகிறேன்.  


மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக, நிற உணர்வாக, மொழி உணர்வாக, எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாகரிகம், பண்பாடு வளர வளர இந்த உணர்வை மனிதன் மறைத்து வைத்திருக்கிறானே ஒழிய, மறப்பதில்லை அல்லது மறக்க விரும்புவதில்லை. என்னை பொருத்தவரை இது தவறல்ல. ஏனென்றால் இன உணர்வில்லாமல், மனிதனால் சமூகத்தில் வாழ முடியாது. அவன் தனித்து விடப்பட்டு விடுவான். ஒரு சினிமா நடிகன் முதல் பிறந்த ஊர் வரை நாம் எதனோடாவது நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். "நான் அஜீத் ரசிகன், நான் விருதுநகர்காரன்" என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இதுவும் இன உணர்வே. 


இன உணர்வுக்கும், இன வெறிக்கும் நூல் அளவே வித்தியாசம் இருக்கிறது. "நம் இனம் சிறந்தது." என்று நினைப்பது, இன உணர்வு. "நம் இனம் மட்டுமே சிறந்தது, மற்ற இனங்கள் எல்லாம் இருக்கவே தகுதி அற்றது." என்று நினைப்பது இன வெறி. இன உணர்வு இருக்கும் எல்லோருக்குமே இன வெறியும் இருக்கும் என்பதுதான் வேதனையான உண்மை. ஆனால் இந்த இன வெறி என்பது நாம் வளர்க்கும் நாய் போல. அது நமக்கு கட்டுப்பட்டது. நம் அனுமதி இன்றி யாரும் அதை சீண்டி விட முடியாது. அப்படி மற்றொருவரால் என்று சீண்டப்படுகிறது என்றால், நம்மை அறியாமலேயே நாம் அவருக்கு அடிமை ஆகி விட்டோம் என்று அர்த்தம். ஆகவே ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதி இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் இன வெறியை யாராலும் தூண்ட முடியாது. 


மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம், இன உணர்வும் இருக்கும், அது சம்பந்தமான மோதல்களும் இருக்கும். அதற்கு பதிவுலகமும் விலக்கல்ல. ஆண்-பெண், மேல் சாதி - கீழ் சாதி, அஜீத் - விஜய், திமுக-அதிமுக என்று மோதல் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது அல்லவா?   சிறுபான்மை இனம் என்பது ஒரு குறிப்பிட்ட இனம் கிடையாது. ஒரு இடத்தில் எந்த இனம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுதான் சிறுபான்மை இனம். சிறுபான்மை இனத்தில் இருக்கும் எல்லோருமே பண்பாளர்களாக, மற்ற இனங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? உதாரணத்துக்கு, ஒரு அலுவலகத்தில் விஜய் ரசிகர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்கள் எல்லோரும் அஜீத் ரசிகர் என்றால், அங்கே அந்த விஜய் ரசிகர் என்பது சிறுபான்மை. 


எப்போதுமே சிறுபான்மை இனத்துக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை இருக்கும். பெரும்பான்மையினர் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட நம்மை கேலி செய்வதற்காகவே செய்வது போல தோன்றும். பெரும்பான்மை என்பதால் அவர்களும் சும்மா இருப்பதில்லை. அவ்வப்போது சீண்டுவார்கள். சில காலம் கழித்து அந்த அலுவலகத்தில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை அஜீத் ரசிகர்களை விட அதிகரித்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அஜீத் ரசிகர்கள் என்ன செய்தார்களோ அதையே இவர்களும் செய்ய தொடங்குவர். ஆகவே யார் செய்தாலும் அது சரி ஆகாது. ஆனால் சமீப காலத்தில் இணையத்தில் நடந்து வரும் சில செயல்கள் மிக அருவருப்பாக உள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக தளங்களில், ஒரே இனத்தை சேர்ந்த சிலர், தங்களில் மன வக்கிரத்தை, மாற்று இனத்தை இழித்து பேசுவதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட இனம் என்று இல்லாமல் எல்லா இனத்தினரும் செய்து வருகின்றனர். ஆகவே குறிப்பிட்டு யாரையும் சொல்வது தவறு. அதே போல எல்லோரும் செய்வதால் அது சரி ஆகி விடாது. அது உங்கள் சொந்த விஷயம், அதில் யாரும் தலையிடக்கூடாது என்று நினைத்தால், அதை யார் பார்வைக்கும் படாத வண்ணம் மறைப்பதுதான் சிறந்தது. ஆனால் நம் நோக்கமே அதை நாலு பேர் படித்து, குறிப்பாக நாம் திட்டி இருக்கும் இனத்தவன் படித்து கடுப்பாகவேண்டும். அதுதான் கெத்து என்று நினைக்கிறோம். பிரச்சனையே இங்கேதான் தொடங்குகிறது. 


இது ஒரு புறம் இருக்க, பதிவுலகில் சமூக ஆர்வலர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் வேலை என்னவென்றால், சாதி ஒழிப்பு என்ற பெயரில், ஏதாவது ஒரு சாதியையோ, அல்லது மதத்தையோ மிக கேவலமான முறையில் விமர்சிப்பது. இதை படித்ததும், சம்பந்தப்பட்ட இனத்தவர் மனதால் தூண்டப்படுவார். அந்த பதிவில் வந்து அசிங்கமாக பின்னூட்டமிடுவார். இது ஒன்று போதாதா? உடனே சம்பந்தப்பட்ட இரண்டு இனங்களும் ஆஜர். மாறி மாறி கெட்டவார்த்தைகள், அர்ச்சனைகள் என்று களை கட்டிவிடும். சில நல்லவர்கள், மூன்றாவதாக ஒரு இனத்தையும் இதில் இழுத்து விட்டு, புண்ணியம் தேடி கொள்வார்கள். இங்கே நடப்பது சாதி ஒழிப்பு அல்ல. மறைமுக சாதி வெறி தூண்டல். இந்த மாதிரி கட்டுரைகள் பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்தே எழுதப்படுகிறது. இதன் காரணம் முதலிலேயே சொல்வது போல சிறுபான்மையினரே ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருப்பார்கள். 


பொதுவாக தாழ்வு மனப்பான்மை என்பது இயலாமையின் வெளிப்பாடு. ஆக நாம் திட்ட வேண்டும் என்று நினைக்கும், நம்மால் திட்ட முடியாத ஒரு இனத்தை இன்னொருவன் நம்மை விட கேவலமாக திட்டியவுடன் நமக்கு சந்தோஷம் உண்டாகிறது. புத்துணர்ச்சி அடைகிறோம். அங்கே சென்று நம் பங்குக்கு வக்கிரத்தை வெளிப்படுத்துகிறோம். நமக்கு தெரியாமலே நம் சாதி வெறி தூண்டப்படுவது இப்படித்தான். சாதி வெறி என்றல்ல, எல்லா இன வெறியுமே இப்படித்தான் வெளிப்படுகிறது. அதே போல நம் இனத்தை இன்னொருவன் திட்டியவுடனும் நம் சாதி வெறி தூண்டப்படுகிறது. அவ்வளவு நாள் நாம் சாதி வெறியை வெளிக்காட்டாமல் இருந்ததன் காரணம், அதற்கு ஒரு காரணம் கிடைக்கவில்லையே என்பதுதான். இப்போது அது கிடைத்துவிட்டது. "அவன்தான் முதலில் திட்டினான்." என்று நாமும் சாக்கு சொல்கிறோம். 


உண்மையிலேயே சமூக நோக்குடைய பதிவுகள் என்பது, ஒரு பக்க சார்பு நிலை இல்லாமல் இருப்பதே. ஏனென்றால் இன உணர்வை தொடுவது என்பது மிக சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். கொஞ்சம் தப்பினாலும், நம் நோக்கமே மாறிவிடும். நம் வார்த்தைகளுக்கு புது அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டுவிடும். கடுமையாக சாடுவது என்பது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது என்று அர்த்தமல்ல. கட்டுரைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது, அவர்களுக்கு மேலும் வெறியை அதிகப்படுத்துமே தவிர, வேறு எந்த பயனும் அளிக்காது. அதே போல நண்பர்களே, நம்ம ஜாதிக்காரனை, நம்பலாம், எதிர் சாதிக்காரனையும் நம்பலாம். ஆனால் ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண வருகிறான் பாருங்கள். அவன்தான் மிக ஆபத்தானவன். 

எதிர்கால இந்தியா ஒரு குறிப்பிட்ட ஜெயந்தி விழாவில் 

சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே..... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 16, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 3


லட்சம் ஹிட்ஸ் பெற்றது மகிழ்ச்சி என்றால் அதற்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தது அதை விட பல மடங்கு மகிழ்ச்சி. இந்த ஆதரவை தொடர்ந்து பெற எப்போதும் முயற்சிப்பேன். சாதி வெறி குறித்து ஒரு பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சோம்பல் காரணமாக அதை நாளைக்கு ஒத்தி வைத்து விட்டேன். லைட் வெயிட்டாக கிரிக்கெட் பதிவு போட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று நான் கேள்விபட்ட இரண்டு செய்திகள் கடுப்பை கிளப்பின. 

செய்தி ஒன்று : ஆசிய கோப்பையை ஜெயித்த இந்திய ஹாக்கி அணிக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கியது. 

செய்தி இரண்டு: நான்காவது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் பயிற்சியை கட் அடித்து விட்டு, எல்லா இந்திய கிரிக்கெட் வீரர்களும் 75,000 ரூபாய் பணம் கட்டி மினி ரேஸ் கார் ஓட்ட சென்றது. நாம் நாட்டில் விளையாட்டின் தரம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? 

(பருத்திவீரன் ஸ்டைலில் படிக்கவும்...)


இங்கிலாந்து 

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளிலேயே என்னால் அதிகம் கண்டுகொள்ளப்படாத நாடு. இந்திய அணி 90களில் இங்கிலாந்துடன் குறைந்த தொடர்களிலேயே பங்கேற்று இருக்கிறது. இந்த அணியில் என்னை கவர்ந்த சில வீரர்கள் இருக்கிறார்கள்

பால் கோலிங்வுட் 

இவரை கிரிக்கெட்டில் மிஸ்டர் டிபெண்டபுள் என்று அழைக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் கைகொடுக்கும் ஒரு வீரர். அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றி பெரும் வரை களத்தில் நின்று மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்தவர். இங்கிலாந்தில் மிகச்சிறந்த பீல்டர்களில் முதலிடம் இவருக்குத்தான். பவுலிங்கிலும் அசத்துவார். முகம் எப்போதுமே சாந்தமாகவே இருக்கும் 

ஆன்ட்ரூ பிளின்டாப் 


இவர் சின்ன போத்தம் என்று அழைக்கப்பட்டவர். மிக ஆக்ரோஷமான வீரர். முதலில் இவரைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் 20 வயது வீரரான இவர் ஆஸ்திரேலியாவுடன் ஒரு போட்டியில் அடித்து நொறுக்கி வெற்றியை நிலைநாட்டினார். அதன் பின்னரே எல்லோராலும் கவனிக்க பட்டார். மிக ஆபத்தான வீரர். காயத்தால் அடிக்கடி அவதிபட்டவர். பல பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு. 

அலேக் ஸ்டூவர்ட்


வெகு காலமாக இவர் விக்கெட் கீப்பராக இருந்தவர். பெரும்பாலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்குவார். கிரிக்கெட் இலக்கணத்தோடு விளையாடுபவர்களில் இவரும் ஒருவர். இவரைப் பார்த்தால் எனக்கு டிராவிட் ஞாபகம்தான் வரும். தொண்ணூறுகளில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம். 

இயான் போத்தம்


இன்று வரை இங்கிலாந்து என்றவுடன் எல்லோரும் சொல்லும் பெயர் இயன் போத்தம். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். முதலில் ஸ்லிம்மாக இருந்தாலும் போக போக உடல் பருமனாகி விட்டார். ஆனாலும் அவரது ஆட்ட நேர்த்தி குறையவே இல்லை. லார்ட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்து நொறுக்கி இங்கிலாந்தை ஜெயிக்க வைத்தது உலகபிரசித்தம். இவர் ஒரு கால்பந்து வீரரும் கூட. 

கெவின் பீட்டர்சன் 


குறுகிய காலத்தில் மிக பிரபலம் ஆன ஒரு வீரர். நல்ல உயரமான, உடல் கட்டுடைய, ஸ்மார்ட்டான வீரர். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர். கிரிக்கெட்டின் தற்கால அதிரடி ஆட்டக்காரர்களில் இவர் குறிப்பிடதக்கவர். ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்சர் அடித்து காட்டியவர். இவருக்கு ரிவர்ஸ் ஸ்வீப் மிகுந்த புகழை பெற்று கொடுத்தது. 

மார்க்கஸ் டிரெஸ்கோதிக்


குறுகிய காலமே ஆடினாலும் என் மனம் கவர்ந்த ஒரு வீரர். 2000 - 2003 வரையிலான போட்டிகளில் இங்கிலாந்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். நெடு நேரம் நிலைத்து ஆடும் ஒரு அதிரடி ஆட்டக்காரர். குனிந்து நிற்காமல் நிமிர்ந்த படியே இவர் ஆடுவது வித்தியாசமாக இருக்கும். 


வெஸ்ட் இண்டீஸ் 

ஒரு காலத்தில் கிரிக்கெட்டையே தங்கள் கைக்குள் வைத்திருந்த ஒரு அணி. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரனையும் பார்த்து எல்லோரும் பயப்படுவர். ஆனால் 1996 உலகக்கோப்பைக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சரிவை சந்தித்த அணி, 2008 வாக்கில் ஒரு மகா மட்டமான அணியாக காட்சி அளித்தது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. 

பிரயன் லாரா


சச்சினுக்கு இணையாக வைத்து பேசப்பட்டவர். இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான வீரர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மிக ஸ்டைலிஷ் ஆன வீரர். பல பெண் ரசிகைகள் உண்டு. நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நான் சிறுவனாக இருக்கும்போது பலர் லாரா மாதிரி ஸ்டைலில் ஆட முயற்சிப்பார்கள் 

கர்ட்லி ஆம்ப்ருஸ்


சும்மா பனைமரம் மாதிரி உயரம். ஆளை பயமுறுத்தும் ஒரு வேகம். இவை எல்லாம் இருந்தும் முகத்தில் தெரியும் ஒரு அப்பாவித்தனம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு வீரர். வெஸ்ட் இண்டீஸ் உருவாக்கிய தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். 

கொர்ட்னி வால்ஷ்


இவரும் ஆம்புரூசும் ஜோடி போட்டுக் கொண்டு பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். இவரும் தன் வேலை ஒன்றிலேயே குறிக்கோளாக இருப்பார். தேவை இல்லாத சண்டைகளில் ஈடு பட மாட்டார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர். 

சிவ்நாராயண் சந்தர்பால்


பல வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒற்றை ஆளாக தாங்கி வருபவர். ஆஸ்திரேலியாவுக்கு பெவன் எப்படியோ, வெஸ்ட் இண்டீசுக்கு சந்தர்பால் அப்படி. மிக மிக நிதானமாக ஆடுவார். ஆனால் அடுத்து விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். மூன்று ஸ்டம்ப்களும் தெரியும்படி இவர் பேட்டிங் பிடிப்பது வினோதமாக இருக்கும். கால்களை வேகமாக நகர்த்தி ஆடும் ஒரு வீரர். 
  
கார்ல் ஹூப்பர்


மிக மிக அசமந்தமான ஒரு வீரர். மெதுவாக ஆட ஆரம்பித்து, கடைசியில் அடித்து நொறுக்கி விடுவார். ஆனால் முகத்தில் எந்த விதமான சலனமும் காட்டமாட்டார். பேட்டிங்தான் இப்படி என்றால் பந்துவீச்சு இன்னும் மோசம். நடந்து வந்து மிக மெதுவாக வீசுவார். ஒரு ஓவரை இரண்டரை நிமிடத்துக்குள் வீசி முடிக்கும் திறமையாளர். விக்கெட் வீழ்த்தினாலும் ரியாக்சன் காட்டமாட்டார். இவரை பார்த்ததும் எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் ஞாபகம் வரும். 

ஜிம்மி ஆடம்ஸ்


இவரை உண்மையிலேயே ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் மட்டுமல்லாது, வெகு காலம் விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். அணிக்கு தேவையான சமயங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இவரைப்பார்த்தால் எனக்கு ஹெல்பாய் திறப்பட நடிகர்  Ron Perlman ஞாபகம்தான் வருகிறது. 

கிரீஸ் கெய்ல் 


இன்றுவரை பவுலர்கள் அச்சப்படும் வீரர்களுள் இவரும் ஒருவர். இவரை வீழ்த்தி விட்டால் பெரிய கடமை முடிந்து விட்டதை போல எதிரணியினர் ரிலாக்ஸ் ஆவார்கள். இவரை சிறிது நேரம் களத்தில் நிற்க விட்டு விட்டால் அதற்கப்புறம் அவுட் ஆக்குவது சிரமம். அது மட்டுமல்லாமல், சளைக்காமல் அடித்து நொறுக்கி கொண்டே இருப்பார். இவர் கைகள் அவ்வளவு பலமா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு, சிக்சர் அடித்தால் பந்து வெகு தொலைவில் போய் விழும். கிரிக்கெட்டை சுவாரசியமாக்கியதில் இவருக்கும் பங்கு உண்டு. 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் , அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...