பொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழுமையான பதிவல்ல. டக்கென்று நினைவுக்கு வந்தவையை பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் சினிமாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தவர்கள் ஏராளம். ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கிய திரைப்படங்கள் எண்ணிலடங்கா. அந்த வகையில் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் சம்பாதித்த பெயரை தாங்களாகவே கெடுத்துக்கொண்டதும் உண்டு. அதன் சிறு உதாரணப்பட்டியலே இந்த பதிவு.
சுரேஷ் கிருஷ்ணா...
இவர் சிறந்த இயக்குனரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமான விஷயம்தான். பல மொழிகளில் நிறைய படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் இவரது பெரும்பாலான அதிரடி ஹிட்டுக்கள் மாஸ் ஹீரோ படங்களின் மூலமே வந்திருக்கின்றன. இவரது பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையும், பாட்ஷாவும்தான். இந்த இரண்டு படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தது இந்த படங்களுக்கு அப்புறம்தான். சுரேஷ் கிருஷ்ணாவின் படங்கள் அந்தந்த மொழியில் உள்ள மாஸ் ஹீரோக்களின் ஸ்டார் வேல்யூவில் ஓடின என்று கூறப்பட்டாலும், பாட்ஷா படத்தின் இம்பாக்ட் இவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் போய் அமர்த்தியது. ஆனால் அதை சரிவர பயன்படுத்தாத இவர் சொல்லி சொல்லி அட்டர் பிளாப் படங்களை இயக்கினார்.
மாற்று மொழிகளில் ஹிட் படங்களை அவ்வப்போது கொடுத்து வந்த இவரால் தமிழ் படங்களில் ஆவரேஜ் படத்தை கூட தர இயலவில்லை. ரஜினியின் வீரா படத்துக்கப்புறம் தமிழில் இவர் கொடுத்த ஒரே ஆவரேஜ் படம் பாபாதான். அட்டர் பிளாப் ஆகவேண்டிய இந்த படத்தை ரஜினியின் பிம்பம் காப்பாற்றியது சிலர் பாபாவை ரஜினியின் தோல்விப்படம் என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பார்த்தால் இது ஆவரேஜ் படம்தான். ஆனால் ரஜினி படம் என்பதால் இதை தோல்வி கணக்கில் சேர்க்கிறார்கள். எப்படி சச்சின் 50 ரன் எடுத்தாலும் சரியாக ஆடவில்லை என்று சொல்கிறார்களோ அதே போல.
தமிழில் இவர் கொடுத்த அட்டர் பிளாப்புகளின் பட்டியல்
சிவசக்தி- சத்யராஜ் பிரபு நடித்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்
ஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் பிளாப்.
சங்கமம் -வெளியான ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பட்ட முதல் படம்
ஆளவந்தான் - மிகுந்த பொருட்செலவில் கமல் பின்னனியில் இருந்து
இயக்கப்பட்டு தாணுவை அழிக்க வந்தான்.
கஜேந்திரா-ராஜமௌலியின் சிம்மாத்ரி படத்தின் தமிழ் ரீமேக். இன்றும் விஜயகாந்தை கலாய்த்து யூ டியூபிள் பகிரப்படும் பல விடியோக்கள் இந்த படக்காட்சிகளே. உதாரணமாக விஜயகாந்த் தன்னுடைய ரத்தத்தில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் ஏராளம்.
பரட்டை என்கிற அழகு சுந்தரம் - இந்த படத்தில் நடித்ததை தனுஷே மறந்திருப்பார்
இளைஞன் - கலைஞரின் கை வண்ணத்தில் வந்த தாய்க்காவியம்.
ஆறுமுகம் -அண்ணாமலையின் கொடூர அன் அபீசியல் ரீமேக்.
மற்ற மொழிகளில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இவர் ஹிட் கொடுத்து வந்தாலும் தமிழை பொறுத்தவரை ஹிட் என்பது இவருக்கு எட்டாக்கனிதான்.
அகத்தியன்...
இந்த பெயருக்கு பத்தாண்டுகளுக்கு முன் திரை உலகினர் மத்தியில் பெரிய மரியாதை உண்டு. வித்தியாசமான கதைகளை கண்ணியமான முறையில் படமாக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்கள் மிக மெதுவாக நகர்பவை. ஆனால் கதையின் அழுத்தம் அதை மறக்கடித்து விடும். முதலில் ஜாலியாக மதுமதி, வான்மதி போன்ற மெல்லிய நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், தமிழ் சினிமாவில் ஒரு புது காதல் டிரெண்டை உருவாக்கிய காதல் கோட்டை என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அந்த காலத்தில் எல்லோராலும் மதிக்கப்பட ஒரு காதல் படம் இது. இதன் விளைவாக நிறைய காதல் படங்கள் இதே சாயலில் வரத்தொடங்கின. இதற்கு அடுத்த படம் இவர் மீதான மதிப்பை இன்னுமும் உயர்த்தியது. அந்தப்படம்தான் கோகுலத்தில் சீதை. நவரச நாயகன் கார்த்திக் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படமே உதாரணம். இதற்கடுத்து வெளிவந்த விடுகதை வித்தியாசமான படம் என்றாலும் இதுதான் இவரது சறுக்கலுக்கு ஆரம்பம். அடுத்து வெளியான காதல் கவிதை படமும் மண்ணைக்கவ்வியது
நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த ராமகிருஷ்ணா என்ற படத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த படத்தை எந்த மொக்கை இயக்குனர் எடுத்திருப்பார்? என்றே நினைத்தேன். அகத்தியன் என்று தெரிந்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. படு குப்பை. அதே போல காதல் சாம்ராஜ்யம் என்ற குப்பை படத்தையும் பல ஆண்டுகளாக எடுத்து இழுத்து பறித்து வெளியிட்டார்கள். இதற்கப்புரம் இவர் படம் இயக்கவே இல்லை. மீண்டும் வந்து முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.
எஸ் ஜே சூர்யா...
இவர் மீது இன்னமும் எனக்கு ஆதங்கம் உண்டு. இவர் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர். அப்படியே இருந்திருந்தால் இந்த பட்டியலில் இவர் சேர்ந்திருக்க மாட்டார். இவர் சொல்லும் விஷயங்கள் ஆபாசமாக இருந்தாலும் இவரது படங்களின் கரு உளவியல் ரீதியான விஷயங்கள் பற்றியதாக இருக்கும். தலயை முதன் முதலில் வாயை பிளந்து ரசிக்க வைத்த இயக்குனர். முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்த இவரது பாதிப்பு இன்னுமும் போகவில்லை. நடிகர் விஜய் தோல்வியால் துவண்டு கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தூக்கிவிட்டு வழி காட்டியவர். பின்னர் அடுத்தடுத்த வந்த நியூ, அ....ஆ படங்களில் சொல்ல வந்த கருத்தை விட அதை மார்க்கெட்டிங் செய்ய ஆபாச ஜிகினாவை அளவுக்கு அதிகமாக சேர்த்து அ..ஆ என்ற அவரேஜ் படத்தில் வந்து நிற்கிறார். கடைசியாக இவர் தெலுங்கில் இயக்கிய கோமரம் புலி மரண அடி வாங்கியது. தற்போது இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக வேறு அவதாரம் எடுத்திருக்கிறார். பயமாக இருக்கிறது.
பேரரசு...
நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்கவே முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். திருப்பாச்சி, மற்றும் சிவகாசி என்ற இரண்டு படங்களும் தமிழ் திரைப்படங்களை மறுபடியும் எண்பதுகள் நோக்கி இழுத்து சென்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அதே இரண்டு படங்கள்தாம் விஜய் தன்னை ரஜினியை தாண்டி எம்ஜிஆர் என்று நினைக்க வைத்தது. முதல் இரண்டு படங்கள் கொடுத்த மார்க்கெட்டை வைத்து வரிசையாக பிளாப் படங்களை இறங்கு வரிசையில் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு. திருப்பதி, பழனி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என்று இப்போதும் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார். இதில் திருப்பதி படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது பெற்றது ஆச்சர்யம். தமிழகத்தை கலக்கிய இவர், தற்போது மலையாளக்கரையோரம் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறார்.
சக்தி சிதம்பரம்...
இவர் குறித்து எனக்கு பல வருத்தங்கள் உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துரே இவரது சொந்த ஊர். இவரது தம்பி மகன் எனக்கு நெருங்கிய நண்பர். இவரது முதல் மூன்று படங்களான என்னம்மா கண்ணு, லவ்லி மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இதற்கடுத்து இவர் எடுத்தவை எல்லாமே கர்ண கொடூரங்கள். கதையம்சம், நகைச்சுவை ஆகியவைக்கு முக்கியத்துவம் தராமல், இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்று இறங்கு முகத்தில் செல்கிறார். இவரது இறங்கு முகத்தையும், நமீதாவின் பரிணாம(!) வளர்ச்சியையும் ஒரே தராசில் வைக்கலாம்.
காதல் கிறுக்கன் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த கையோடு, மகா நடிகனை வெளியிட்டார். படத்தில் பிற படங்களை கிண்டல் செய்து வைத்த காட்சிகளும், நமீதாவின் பங்களிப்பும் கொஞ்சம் வெற்றியை தர, அடுத்தடுத்து வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், நமீதாவையுமே நம்பி மகா மட்டமான படங்களை வெளியிட்டார். இங்கிலீஷ்காரன் ஹிட் அடிக்க, அடுத்து வந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா எல்லாம் பிளாப் ஆனது. தொடர்ந்து வந்த குரு சிஷ்யன் என்ற படம் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் மச்சான் படத்தில் விவேக் நடிக்கிறார் என்பது இந்த படமும்எப்படி இருக்கும் என்பதற்கு பெரிய சான்று.
சேரன்...
இவர் மீதும் ஒரு காலத்தில் பெரிய மேதை என்ற மாயை இருந்தது. இவரது படங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஆனால் கனமான கதையம்சத்தோடு நகர்பவை. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். பாண்டவர் பூமி அவரேஜ் என்றாலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பல நடிகர்களை அணுகி கடைசியில் வெறுத்துபோய் இவரே கதாநாயகனாக நடித்த இவரது ஆட்டோகிராப் படம் ஒரு புதிய டிரெண்டை அமைத்தது. அதற்கடுத்து வந்த தவமாய் தவமிருந்து யாரும் சொல்லாத தந்தை மகன் பாசத்தை சொல்லி வெற்றி பெற்றது. சேரன் படம் என்றாலே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகவே தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சிகாரமான படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.
இதன் பின் இவர் இயக்குவதை விட, நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். மற்ற இயக்குனர்களை மாதிரி நிறைய அட்டர் பிளாப் படங்களை இவர் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களில் இவர் இயக்கியது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று மாயக்கண்ணாடி மற்றொன்று பொக்கிஷம். இரண்டுமே சூர மொக்கை படங்கள். சேரன் மீது வைத்த அபிமானத்துக்காக மூன்று மணிநேரம் கழுத்தறுபட்டு வர முடியுமா? போதாதற்கு எப்போதுமே ஒரே மாதிரி ரியாக்சன் கொடுக்கும் அவரேதான் படத்தின் நாயகன். தியேட்டர் பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இதில் நொந்து போன அவர் ரசிக்க தெரியவில்லை என்று மக்களை திட்டினார். இனி வரும் காலங்களில் சேரனின் படங்கள் எப்படி இருக்க போகின்றன என்று தெரியவில்லை.
சுராஜ்...
இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி நிறைய ஹிட் கொடுத்தவர் அல்ல. சொல்லபோனால் இவர் படங்கள் அனைத்தும் அவரேஜ் ரேஞ்சை கூட தாண்டியதில்லை. தன்னுடைய முதல் படமான மூவேந்தர், சூர்யவம்சம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதே சரத்குமார், தேவயானி ஜோடி நடித்து வெளிவந்தது. இந்த ஜோடிக்கு சூர்யவம்சம் கொடுத்த அபிமானத்தில் மூவேந்தரை தேத்தி விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் அட்டர் பிளாப். பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி. முதன்முதலாக இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, தலைநகரம் என்ற படத்தை இவர் இயக்கினார். படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்றவர் வடிவேலு. இன்றும் நாய் சேகராக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகமாக டிவியில் ஒளிபரப்பபடுகின்றன. இதற்கடுத்து இவர் இயக்கி வெளிவந்த மருதமலை மீண்டும், வடிவேலு என்ற ஒரே நடிகருக்காக ஓடியது. இதைத்தான் இந்த இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார். அடுத்தடுத்து வந்த படங்களுள் படத்துக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் காமெடி காட்சிகள் இருந்தால் படத்தை ஒட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.
விளைவு, வரிசையாக மரணமொக்கை படங்கள். படிக்காதவன் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லிக்கொண்டது எல்லோரும் நம்பினார்கள். மாப்பிள்ளை மறுபடியும் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லியது. யாருமே நம்பவில்லை. ஏனென்றால் படம் அப்படி. தற்போது அலெக்ஸ் பாண்டியன். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது.
இந்த பட்டியல் நிறைவானதல்ல. எனக்கு தெரிந்த ஒரு சில இயக்குனர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
இந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது அவர்களின் பட்டியல் இதோ
கவுதம் மேனன்
பாலா
செல்வராகவன்
மிஷ்கின்
உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க....
முழுவதும் படிக்க >>