விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 14, 2010

ஹீரோக்கள் செய்ய வேண்டியது...




ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை ஆகியவை வெளியிடப்படுகிறது. ஒரு ஆண்டில் வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெற்றுவிட முடியாதுதான். ஆனால் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 130 படங்கள் வெளி ஆகி உள்ளன (இந்த எண்ணிக்கையும் குறைவுதான்). இதில் சில்வர் ஜூபிளி, அதாவது 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் எதுவுமே இல்லை. நூறு நாட்கள் ஓடிய படங்கள் என்றால், அயன், கந்தசாமி மற்றும் நாடோடிகள்தான். இந்த ஆண்டு இன்னும் மோசம். பாதி வருடம் கழிந்த பிறகும் ஹிட் என்று சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் படங்கள் ஐம்பது நாள் தாண்டினாலே பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அதனாலென்ன? வசூல்தான் இப்போதெல்லாம் கணக்கு என்று பார்த்தால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்பதே உண்மை. உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது, வெற்றி பட தயாரிப்பாளர் என்று பெயரைத்தவிர... அதே நிலைதான் கில்லியிலும்.


மறுபுறம் சிறிய பட்ஜெட், முற்றிலும் புதுமுகங்கள், துரோகம் டைப் படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மக்களை நம்பி எடுப்பதில்லை. அவர்களின் குறி சாட்டிலைட் சேனல்கள். எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் அது ஒரு நல்ல தொகைக்கு ஏதாவது ஒரு சேனலுக்கு விற்பனை ஆகி விடுகிறது. இதுவும் ஒரு வகை லாபம்தான். இது தயாரிப்பு நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் என் நண்பன் சொன்னது. ஆக பிரச்சனை பெரிய ஹீரோக்களுக்குதான். அவர்களை பொறுத்தவரை சினிமா ஒரு சூதாட்டம் போல ஆகிவிட்டது. ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதே மிதப்பில் நான்கைந்து படங்கள் மொக்கையாக கொடுப்பது. பின் ஏதாவது ஒரு வெற்றியை கொடுத்து, விட்டதை பிடிப்பது என்று போய்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். அவர்களும் இந்த சூதாட்டத்தில் சிக்கி கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஹீரோக்கள் என்ன செய்ய வேண்டும்?


ஒரு சராசரி ரசிகன் என்ன நினைக்கிறான் என்பதை ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புதிய பார்முலா வெற்றி பெறுகிறதென்றால் அந்த பார்முலா புதியதாக இருப்பதால்தான் என்பதை அவர்கள் உணரவேண்டும். ஹீரோக்கள் இது புரியாமல், அதே பார்முலாவை தானும் பின்பற்றுகிறார்கள். நம் மக்கள் மிகுந்த பாசம் உடையவர்கள். ஓட்டு போடுவதில் இருந்து, சினிமா பார்ப்பது வரை தன் ஆதர்ச நாயகனை விட்டு கொடுப்பதே இல்லை. எவ்வளவு திட்டினாலும் பின் அவனின் பட ரிலீசின் போது முதல் நாள் காட்சிக்கு முண்டி அடிப்பார்கள். இதன் காரணம் தன் நாயகன் இந்த படத்திலாவது நன்றாக நடித்து விட மாட்டானா? என்ற ஆதங்கம்தான்.அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் முடிந்து வரும்போது அடுத்த படம் வரட்டும். கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். வேட்டைக்காரன் படத்தில் கூட இரண்டுபேர், "சுறா வரட்டும். என்ன நடக்குதுன்னு பார்." என்று பேசிக்கொண்டே சென்றனர். இது தெரியாமல் என் ரசிகர்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்று தப்பு கணக்கு போட்டு நடித்தால் கொஞ்ச நாளில் கூட்டம் காணாமல் போய் விடும். இதை உணர்ந்து கொண்டதால்தான் எம்ஜியார் மற்றும் ரஜினி சிகரத்தை தொட முடிந்தது. 


கதை தேர்வு. இது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோக்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், கச்சேரி ஆரம்பம் பட இயக்குனர் பேசினார். படத்தின் கதையை பற்றி அவர் சொல்லும்போது இந்த கதையை மிகுந்த கவனத்தோடு, எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கினேன் என்று பொருள் படும்படி கூறினார். இதை கேட்டதும் நான் அதிர்ந்து விட்டேன். பலருக்கு தெரியுமோ தெரியாதோ கச்சேரி ஆரம்பம் படம், சித்தார்த், இலியானா நடித்த ஆட்டா என்ற தெலுங்கு படத்தின் அப்பட்டமான காப்பி. இத்தனைக்கும் அந்த படம் தெலுங்கில் சரியாக போகவில்லை. திருடிய ஒரு கதையை தன் கதை என்று எப்படி அந்த இயக்குனர் தைரியமாக சொல்கிறார் என்று தெரியவில்லை. எனவே ஹீரோக்கள் தனக்குரிய கதையை தேர்வு செய்யும்போது இது போல போலிகளை கண்டு பிடிக்க வேண்டும். சில ஹீரோக்கள் தன்னிடம் வரும் இயக்குனர்களிடமே சில பிற மொழி படங்களை சொல்லி அதே போல எடுங்கள் என்று சொல்வதும் நடக்கிறது. 



தன் தகுதிக்குரிய படங்கள் நடிப்பது சிறந்தது. அந்த காலத்தில் கதாநாயகனை சூப்பர்மேனாக சித்தரித்ததின் காரணம் மக்களின் அறியாமை. தற்போது அது செல்லாது. ஆகவே இயல்பான காட்சிகள் உள்ள படங்கள் நடிப்பது சிறந்தது. அப்படி நடித்தால் அது அவார்டு படமாகிவிடும் என்று நடிகர்கள் பயப்படுகிறார்கள். ஷோலே படம் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த அக்மார்க் கமர்சியல் படம். எந்த மிகையும் படத்தில் இருக்காது. தமிழ் என்று பிரசாந்த் நடித்த ஒரு படம் வந்தது. அந்த படம் பக்கா கமர்சியல் படம். ஆனால் எந்த ஒரு காட்சியிலும் ஹீரோவை சூப்பர் மேனாக காட்டி இருக்க மாட்டார் இயக்குனர். ஆகவே இந்த மாதிரி இயல்பான கமர்சியல் படங்களை ஹீரோக்கள் தேர்ந்தெடுக்கலாம்.


வறட்டு ஈகோவை விட்டொழிக்க வேண்டும். எந்த ஒரு மொழி திரைப்படத்திலும் இல்லாத ஒரு அம்சம் நம் தமிழ் சினிமாவில் உண்டு. தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ படங்கள் வருவது மிக அரிது. அப்படி வந்தாலும் அது இரண்டு வளரும் நாயகர்களின் படமாக இருக்கும் (நாணயம், பட்டியல்), இல்லை ஒரு மாஸ் ஹீரோ மற்றும் ஒரு மொக்கை ஹீரோ படமாக இருக்கும்(பிரண்ட்ஸ்). நான் பல ஆங்கில படங்கள் பார்க்கும் போது இதை தமிழில் எடுத்தால் இந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று கற்பனை செய்வேன். அது பெரும்பாலும் நடக்கவே நடக்காத காம்பினேசனாக இருக்கும். ராக், சேவிங் பிரைவேட் ரயன் போன்ற படங்களில் எண்ணற்ற ஹீரோக்கள் நடித்திருப்பார்கள். அதே போல ஹிந்தியிலும் இது நடக்கிறது. தமிழ் சினிமாவில் இது நடப்பதில்லை. இப்போது இருக்கும் நிலையில் பார்த்தால் நடக்கவே நடக்காது. மணிரத்னம் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய நாவல்களை திரைப்படமாக ஆக்கலாம். ஆனால் அதில் முன்னணி நாயகர்கள் எல்லோரும் நடிக்க வேண்டி இருக்கும். அது நடப்பது சந்தேகமே என்றார். ராவணனில் கூட விக்ரமுக்கு இணையாக பிரித்விராஜ்தான் நடிக்க வேண்டி உள்ளது.


படத்தின் கதை காட்சி அமைப்புகளில் நாயகர்களின் தலையீடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தன் அனுபவத்தால் ஹீரோக்கள் ஒரு சில கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லை, அவை ஆக்கப்பூர்வமாக இருக்கும் வரை. அதுவே படத்தின் செம்மைக்கு எமனாக ஆகி விடுகிறது. ஒரு நடிகனின் வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது. திரைக்கதையில் அட!! போட வைக்கும் காட்சிகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது தன் ஆதர்ச நாயகன் செய்யும்போது இன்னும் குஷி ஆகி விடுகிறார்கள். இது தெரியாமல், என் ரசிகர்கள் என்னை இப்படி பார்க்கத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து அவர்களை சோதிக்க கூடாது. எத்தனை ரசிகர்கள் இன்னொரு ஹீரோ நடித்த ஒரு படத்தில் தன் நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்று பொருத்தி பார்த்து ஏங்கி இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும். சக நடிகனை தாக்கி நடிப்பது தன் ரசிகனை வேண்டுமானால் குஷி படுத்தும். அதுகூட கொஞ்ச நாளைக்குதான். பின் அதுவே போரடித்து விடும். தற்போதுள்ள நிலையில் எல்லா நடிகருக்குமே இந்த மாதிரி மோதல் உள்ளது. சராசரி சினிமா ரசிகனுக்கு சம்பந்த பட்ட நடிகரின் மீது வெறுப்பையே வரவழைக்கிறது. இதுவும் ஒரு காரணம். 


தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். தற்போதுள்ள எந்த முன்னணி ஹீரோவுக்கும் அது சுத்தமாக இல்லை. சும்மா வெறுமனே வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டால் படம் வெற்றி பெற்று விடுமா? தோல்வி என்பது வீழ்ச்சியல்ல தன் தவறுகளை மக்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டும். இல்லை என்றால் கடையில் ஈ ஓட்ட வேண்டியதுதான். ஒரு பேட்டியில் பார்த்திபன் உள்ளே வெளியே என்ற படத்தை எடுத்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனி அப்படி ஒரு படம் எடுக்க மாட்டேன் என்று கூறினார். இது கூட அவர் சொந்த படம் என்பதால்தான். நம்மை சுற்றி நாலுபேர் வெற்றி, வெற்றி, தலைவர் வாழ்க... என்று கோஷம் போட்டால்தான் நாம் மாஸ் ஹீரோ என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இப்படி எண்ணியதன் விளைவே ரெட், புதிய கீதை மாதிரியான படங்கள். இப்போது கூட நண்பர்களுடன் பேசும்போது விஜய் ஏன் சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்று கேட்டிருக்கிறேன். அப்படி நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.


சம்பளம். மிகுந்த சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். ஒரு படத்தின் தயாரிப்பில் பெரும்பங்கு அதன் நாயகர்களுக்கே சம்பளமாக தரப்படுகிறது. தன் சம்பளத்தின் வரம்பை கதாநாயகர்கள் நிர்ணயிக்க வேண்டும். அப்படியில்லாமல் தயாரிப்பாளர் நிர்ணயிப்பதால்தான் பிரச்சினையே. ரேசில் ஜெயிக்கும் குதிரையின் மீது அதிக பணம் கட்டுவது போல ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஹீரோக்களின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சில தோல்விகளுக்கு பிறகு சம்பளத்தை குறைக்க அவர்களின் தன்மானம் தடுக்கிறது. எனவே தன் சம்பளத்தை நெறி படுத்த வேண்டும்.


பதிவின் நீளம் கருதி இத்தோடு முடித்து கொள்கிறேன். இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி: இந்த கட்டுரை எந்த ஒரு நடிகரையும் குறி வைத்து எழுதப்படவில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்ட உதாரணம் கூட அவ்வப்போது மனதில் தோன்றியதே..


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

16 comments:

Madumitha said...

பாலா
நீங்கள் சொன்ன எதையும்
அவர்கள் செய்ய மாட்டார்கள்.
நாம் தான் செய்ய வேண்டும்.
நல்ல படமில்லையேறால் எவர்
நடித்திருந்தாலும் புறக்கணிக்க
வேண்டும்.
படத்திற்கு கதை வேண்டும்.
கதாநாயகனை துதி பாடுவதை
நிறுத்த வேண்டும்.
நியாயமான விலையில் டிக்கெட்.
வசதியான தியேட்டர்.
இதேல்லாம் ஊர் கூடி தேர் இழுக்க
வேண்டிய விஷயம்.
இப்ப பாருங்க.. படம் பார்க்கிற நாம்
இப்படி செய்யல்லாம்..அப்படி
செய்யலாம்னு யோசிக்கிறேம்.
படம் எடுக்கிற குரூப் இதைப்பத்தில்லாம் யோசிக்கிற மாதிரி தெரியல..
இப்ப புதுசா ஒரு கூட்டம் கிளம்பிருக்கு. விளம்பரத்தால
படத்தை ஓட்டிடலாமுனு..
அதையும் மறுக்க வேண்டியது நாம் தான்.

"ராஜா" said...

//சுறா வரட்டும். என்ன நடக்குதுன்னு பார்." என்று பேசிக்கொண்டே சென்றனர்.

தல காவல்காரன் வரட்டும் .. அப்புறம் என்ன நடந்குதுன்னு பாருங்க

//இப்படி எண்ணியதன் விளைவே ரெட், புதிய கீதை மாதிரியான படங்கள்.

ரெட் படத்தை அதோடு சேர்த்து எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்..

என்னதான் இவங்க மொக்க படம் கொடுத்தாலும் வசூல் ஆகுதுல்ல ... இல்லைனா திருப்பி திருப்பி அதே மாதிரி படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைப்பார்களா? விடுங்க இத ஆரம்பிச்சி வச்சதே ரஜினிதான...

பதிவுக்கு நேரடியாக சம்பந்தம் இல்லை என்றாலும் நீங்கள் சொல்ல வருகின்ற விசயங்களுக்கு மறைமுகமாக சம்பந்தம் உடைய ஒரு கேள்வி உங்களுக்கு, திரை துரையின் போக்கு மாற வேண்டும் என்று கமல் என்ற நடிகன் எடுக்கும் முயற்ச்சிகள் வீணாய் போவதற்கு ரஜினியும் ஒரு காரணம் என்பதை ஒத்து கொள்கிறீர்களா?

Bala said...

//ரெட் படத்தை அதோடு சேர்த்து எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்..

வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது.

//என்னதான் இவங்க மொக்க படம் கொடுத்தாலும் வசூல் ஆகுதுல்ல

பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்பதே உண்மை. உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது

// ரஜினியும் ஒரு காரணம் என்பதை ஒத்து கொள்கிறீர்களா

ரஜினி படம் நடித்திருக்காவிட்டால் கமலின் படங்கள் ஓடி இருக்கும் என்று சொல்கிறீர்களா? இந்த கட்டுரையில் சொல்லி இருக்கும் ஒரு சில விஷயங்கள் கமலுக்கும் பொருந்தும். அப்படி பார்த்தால் ரஜினி படங்கள் வராத காலகட்டங்களில் வந்த கமல் படங்கள் கூட ஓடி இருக்க வேண்டுமே? ரஜினி படங்கள் கூட காலத்திற்கேற்ப மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

"ராஜா" said...

//உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது

அதுக்கு விக்ரம் காரணம் கிடையாதே... அது தயாரிப்பாளர் முன்னர் செய்த தவறுகளே காரணம்

//வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது.

ஆமாம் அந்த படங்களே வெறித்தனமான ரசிகர்களுக்காகத்தானே.... நீங்கள் விருதுநகர் என்பதால் கேட்கிறேன் ... தமிழ் படம் பக்கா மசாலா என்று சொல்லுகிறீர்கள் அது எத்துனை நாள் ஓடியது ... ரெட் எத்துனை நாள் ஓடியது விருதுநகரில்..

//ரஜினி படம் நடித்திருக்காவிட்டால் கமலின் படங்கள் ஓடி இருக்கும் என்று சொல்கிறீர்களா?

தல நான் சொல்ல வந்த விசயம் தாங்கள் புரிந்து கொள்ளவில்லை... இன்று எல்லா நடிகர்களும் கமல் வழியில் போக பயந்து ரஜினி வழியில் செல்ல காரணம் ... ரஜினி அவர்களுக்கு கற்று கொடுத்த பாடம் ... மக்களை முட்டாளாக்கினால் வெற்றி பெறலாம் ... மக்களை, ரசிகர்களை மேலும் மேலும் முட்டாளாக்கும் கலை அது ... அதே சமயம் கமல் அவர்களின் ரசனையை முன்னேற்ற முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார் .. இவர் ஒரு சான் ஏற்றினால் அடுத்த ரஜினி படம் ஒரு முழம் இறக்கி விடும்... ஏன் திரைப்படங்களில் லாஜிக் சரியாக அமைய மிக யோசித்து படம் எடுக்கும் சங்கரே .. ரஜினியை வைத்து குப்பை படம்தானே தர முடிந்தது .. அதுவும் வெற்றி பெற்றதே... ஏன் அந்த வழியை மற்ற ஹீரோக்கள் பயன்படுத்தினால் கூடாது என்கிறீர்கள் ... இன்றைய தோல்விகள் நாளைக்கே அவர்களுக்கு வெற்றியாக மாறக்கூடாதா?

Bala said...

//அது தயாரிப்பாளர் முன்னர் செய்த தவறுகளே காரணம்

காரணம் அதுவல்ல. படம் பிரமாண்டமாக வர வேண்டும் என்று வரம்பு மீறி செலவு செய்ததே. என்னதான் செலவு செய்தாலும் தூள் மாதிரி படங்கள் வெளி நாடுகளில் அவ்வளவாக மார்கெட் ஆகாது. ஆகவேதான் படம் பிச்சுகிட்டு ஓடினால் கூட அதிக லாபம் எடுக்க முடியாது.

தமிழை ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன். அதே போல ரெட் மாதிரி படங்கள் முதன் முதலில் நன்கு வரவேற்பு பெரும். ஆனால் அதே வரிசையில் தொடர்ந்து படம் வந்தால் கண்டிப்பாக படுத்து விடும்.

தலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது. அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.

Bala said...

ரூட்டை சரியாக பிடித்து விட்டீர்கள். சங்கர் படம் கலை படமல்ல. அவர் எடுத்தது அனைத்தும் கமர்சியல் படம்தான். அப்படி நடித்தால் படம் நன்றாக ஓடும் என்றுதான் நானும் கூற வந்தேன். முதன் முதலில் சங்கர் காம்பிநேசனில் ரஜினி நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் கலெக்சனை அள்ளிய படம் அது. வரிசையாக அப்படி நடந்தால் அதுவும் மண்ணை கவ்வும் என்பதில் சந்தேகம் அல்ல. அதே போல இப்போதுள்ள இளம் நாயகர்கள் நடித்து வெளி வரும் படங்களை ஒப்பிடுகையில் சிவாஜி ஒன்றும் குப்பை படம் அல்ல.

Yoganathan.N said...

நல்ல ஆய்வு. கண்டிப்பாக அத்தனை கருத்துக்களுடனும் ஒத்துப் போகிறேன்.

@ராஜா
I can't believe you are defending 'Red'. எனக்கு தெரிந்த வரையில் தல அதிக பெண் ரசிகர்களை இழப்பதற்கு இப்படம் பெரும் பங்காற்றியது :(
அதே சமயம், மதுரையில், அஜித்திற்கு இரட்டிப்பு புகழ் வந்ததும் இப்படத்தின் மூலம் தான். ஆனால், படத் தரம் என்று வருகையில், நண்பர் பாலாவுடன் ஒத்துப் போகிறேன்.

அஜித், விஜய் என்ன தான் மொக்கை படங்கள் கொடுத்தலும் வசூலை அள்ளித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது (நீங்கள் சொன்னது போல்). அதுவும் இப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள் எனலாம்.

@பாலா
மற்றவர்களைப் பற்றி தெரியாது. ஆனால், அஜித்தைப் பொருத்தவரை, இவர் நட்புக்காக, கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்காக, புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நிறைய படம் பண்னி தன் சொந்த career-ஐ பாழாக்கிக் கொண்டார். அதற்காக இவருக்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஒத்து வராது என சொல்லவில்லை. தன் சொந்த சுயநலத்திற்காக, நல்ல இயக்குணர்களை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பண்ணினால் எங்கெயோ போய்விடுவார். அவருடைய ஒரே குறை. எனது கருத்து.

Yoganathan.N said...

//தலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது. அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.//

சொன்னாலும் சொல்லாவிட்டாலும், கமல் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டதிற்கு எடுத்துச் சென்றார், இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். He did his best to change Thamiz audiences' mentality towards film but most of the times, in vain. மேதமை காட்டும் வகையில் என்று சொல்கிறீர்கள், அது எனக்கு புலப்படவில்லை.

பி.கு நான் கமல் ரசிகனும் அல்ல. ரஜினியை வெறுப்பவனும் அல்ல. :)

"ராஜா" said...

// I can't believe you are defending 'Red'. எனக்கு தெரிந்த வரையில் தல அதிக பெண் ரசிகர்களை இழப்பதற்கு இப்படம் பெரும் பங்காற்றியது

எனக்கு அந்த படம் பிடித்திருந்தது... ஒருவேளை மதுரைகாரனாக தல நடித்ததால்கூட இருக்கலாம்... பெண்களுக்கு பிடிக்காமல் போனதால் அது நல்ல படம் இல்லை என்று என்னால் ஒத்துகொள்ள முடியாது..

//தலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது.

ராஜபார்வை, குணா இதுல என்ன மேன்மைதனத்தை காட்டினார் அவர்.. படத்தின் கதாபாத்திரதிற்கு தேவை பட்டால் அதை போல நடிப்பார் உதாரணம் அன்பே சிவம்..

//அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.

காமெடி பண்ணாதீங்க தல...

சகலாகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள், ஏன் இப்ப வந்த வேட்டையாடு விளையாடு எல்லாமே அவர் நடித்த படங்கள் தானே .. வேட்டையாடு விளையாடு ஹிட் ஆனவுடனே அவர் அதை போன்ற ஹீரோயசம் படங்களில் நடிக்க போய் இருக்கலாம் ... மறுபடியும் உன்னை போல் ஒருவன் என்று பரிசோதனை முயற்சியில் இறங்கினார்... மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் நாம் தனி பாதையில் போகத்தான் வேண்டும்.. மக்களுக்கு பிடித்த மாதிரி படம் தர கமல் ஏன் வேண்டும் பேரரசு , ஹரி போதாதா?

ரஜினி ரசிகர் என்பதால் கமலை கண்மூடித்தனமாக எதிர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்...
எனக்கும் ரஜினியின் படங்கள் பிடிக்கும்... ஆனால் பாட்சாவை விட அன்பே சிவம் என்னை அதிகம் ரசிக்க வைத்தது ,

Yoganathan.N said...

//பெண்களுக்கு பிடிக்காமல் போனதால் அது நல்ல படம் இல்லை என்று என்னால் ஒத்துகொள்ள முடியாது..//

அப்படி சொல்லவில்லை. நான் முன்பே சொன்னது போல ரெட் எனக்கு ஜனா, ஜி, ஆஞ்சனேயா வரிசையில் தான் எப்போதும்.
பெண்கள் ரசிகர் பட்டாளத்தை பெரிய அளவில் இழந்த காரணத்தால் தான் இப்படம் எனக்கு பிடிக்க்வில்லை என்று சொல்ல மாட்டேன். :)
அசல் படத்தின் உங்கள் விமர்சனம் படித்து உங்களுக்கு ரெட் போன்ற படமும் பிடித்திருக்காது என்று கணித்துவிட்டேன், வேறொன்றும் இல்லை.
ஆங்கிலத்தில் சொல்வது போல், taste differs. :)

"ராஜா" said...

ரெட் நன்றாக வந்திருக்க வேண்டிய படம் ... இயக்குனரின் அனுபவின்மையால் சொதப்பி இருப்பார்.. மற்றபடி அதில் வரும் காதல் காட்சிகள் எனக்கு பிடிக்கும் ஜீ படமும் அதே போல்தான்....

ரெட் மொக்க படம் என்று சொல்ல்லிக்கொண்டு திரிபவர்களுக்கு அது காதலை மையமாக கொண்டு எடுக்க பட்ட படம் என்பதுகூட தெரியாது...

Bala said...

@yoganathan

//அஜித்தைப் பொருத்தவரை, இவர் நட்புக்காக, கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்காக, புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக

நானும் ஒத்து கொள்கிறேன். அட்டகாசம் படத்தில் தல வாங்கியது வெறும் முப்பதாயிரம் ரூபாய். மேலே சொன்ன கருத்துக்கள் எல்லாம் எல்லாருக்கும் பொருந்தாது.



//மேதமை காட்டும் வகையில் என்று சொல்கிறீர்கள், அது எனக்கு புலப்படவில்லை.

மேதைமை தன்மை என்றால் ஹீரோயிசத்தை சொல்லவில்லை. அவர் பயன் படுத்தும் சொல்லாடல்கள் மக்களுக்கு புரிவதில்லை. உதாரணமாக நான் மிகவும் ரசித்த ஒரு படம் ஹே ராம். அது நம்ம ஏரியாவில் ஏன் ஓடவில்லை என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும். பலருக்கு படம் புரியவில்லை. வசனம் புரியவில்லை. "கமல் உனக்கு நிறைய தெரிந்திருக்கிறது. ஆனால் தெரிந்தவை அனைத்தையும் ஒரே படத்தில் போட்டு திணிக்கிறாய்" இது நான் சொன்னது அல்ல. பாலசந்தர் சொன்னது. ஹே ராம் வேறு யாராவது எடுத்திருந்தால் வெற்றியில் இன்னொரு இந்தியன் ஆகி இருக்கும். ஏனென்றால் இந்தியன் கமல் தலையீடு இல்லாமல் வந்த படம். கமல் தலையீட்டால் மண்ணை கவ்விய இன்னொரு படம் ஆளவந்தான். எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சொல்ல வரும் கருத்து மக்களை சென்றடையவில்லை என்றால் தோல்விதான். உன்னைப்போல் ஒருவனில் காமன் மென் அமெரிக்கன் ஆங்கிலம் பேசவேண்டிய அவசியம் இல்லை. அப்படி பேசியதால் அவர் மேல்தட்டு காமன் மேனாகத்தான் பார்க்கப்பட்டார். சாதாரண காமன் மேனாக அல்ல. இதுவும் ஹீரோயிசத்தின் வெளிப்பாடே.

Bala said...

@yoganathan

கமல் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவில்லை என்று யார் சொன்னது? அவர் படங்கள் தோல்வி அடைய ரஜினி படங்கள் காரணம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. அதனால் தான் அவர் கடவுளா என்று கேட்டேன். அப்படி பார்த்தால் கமல் மகராசன், காதலா காதலா, தெனாலி, வசூல்ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கவே கூடாது. மகராசன் படம் பார்த்திருக்கிறீர்களா? வசூல் ராஜாவில் ஆழ்வார் பேட்டை ஆண்டவா என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? இது நாயகன் துதிதானே? ஆங்கில படங்களில் உள்ள சில காட்சிகளை தமிழ் படுத்தி தந்திருக்கிறார். அதாவது நம் மக்கள் பார்க்காத ஆங்கில படங்களில் உள்ள காட்சிகளை. அதனால் அவை பிரமாதமாக தெரிகின்றன. 3000 Miles to Graceland என்ற படத்தை பார்த்திருக்கிறீர்களா? பார்த்தவுடன் நம்மை கவர்வது கதாநாயகனின் கிருதா. அதை அப்படியா விருமாண்டியில் வைத்திருப்பார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினி உள்ளூரிலேயே காய்ச்சி விற்கிறார். கமல் வெளிநாட்டு கடத்தல் சரக்கை விற்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவரால் நாடோடிகள், சுப்ரமணியபுரம் மாதிரி படங்களில் நடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் அவற்றில் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்கள் கிடையாது.

Bala said...

@ "ராஜா"

//ரஜினி ரசிகர் என்பதால் கமலை
கண்மூடித்தனமாக எதிர்கிறீர்கள்

தலைவரே...என் ப்ரோபைலை போய் பாருங்கள். எனக்கு பிடித்து படங்களுள் அன்பே சிவமும் ஒன்று.
மீதியை முந்தய பதிலில் போய் படித்து கொள்ளுங்கள்.

Unknown said...

மற்றைய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படம் போட்டு தளபதிக்கு மட்டும் மூணு படங்கள் போட்டிருப்பது தளபதி மீதான உங்க அதிகபட்ச அன்பை காட்டுகிறது பாஸ் !!


அப்புறம் கில்லி வசூல் ரீதியில் வெற்றிப்படம்!!

பாலா said...

@மைந்தன் சிவா

நண்பரே எந்த விட உள்நோக்கத்தோடும் அந்த படங்களை நான் சேர்க்கவில்லை. நீங்கள் தப்பா நினைச்சா நான் என்ன செய்வது. அப்படி நினைத்திருந்தால் அஜீத் படம் இடம் பெறாமல் கூட பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதே போல தனுஷ் படம் இடம்பெறவே இல்லையே. அப்போ நான் தனுஷ் ரசிகன் என்று சொல்வீர்களா?

கில்லியை வெற்றிப்படம் என்று சொல்பவருக்கு, தூள் சூப்பர் ஹிட் என்று சொல்ல மனம் வரவில்லயா? அந்த தகவல்கள் முன்பொரு காலத்தில் சினிமா வல்லுனர் ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் எழுதியது.

Related Posts Plugin for WordPress, Blogger...