ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆங்கில படத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு படம் முழுவதும் சீட் நுனியில் அமர்ந்து பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா? படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, "போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான்?" என்று கத்தியதுண்டா? படத்தில் வரும் வில்லனை கூட விரும்பியதுண்டா? அப்படி எல்லா அனுபவத்தையும் தரும் ஒரு படத்தை பற்றிதான் சொல்ல போகிறேன். இந்த படம் வெளி வந்து பலகாலம் ஆகிறது. ஆனால் சென்ற ஆண்டுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்கள்தான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையை சேர்ந்தது இந்த படம். படத்தின் பெயர் ட்யுயல் (Duel).
கதை என்னவென்றால், டேவிட் மான் என்னும் ஒரு தொழிலதிபர், பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரை தொழில் நிமித்தமாக பார்க்க தனியாக காரில் செல்கிறார். போகும் வழியில் கலிபோர்னியா பாலைவனத்தை கடக்க நேர்கிறது. அவர் போவது பட்ட பகலில் என்றாலும், சாலையில் ஒரு காக்கை குருவி கூட கிடையாது. தன்னந்தனியாக சுள்ளென்று அடிக்கிற வெயிலில் ஜாலியாக கிளம்புகிறார். போகிறவழியில் ஒரு பழைய ட்ரக் ஒன்று ரோடை அடைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் செல்கிறது. மேலும் கரும்புகையை வேறு கக்கியபடி செல்கிறது. அதனை பின் தொடர முடியாமல் ஹாரன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல், சரக்கென்று முந்தி சென்று விடுகிறார் டேவிட். மறுபடியும் பயணம் தொடர்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அவர் முந்திய ட்ரக் அசுர வேகத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. சரக்கென இவரை முந்திவிட்டு மறுபடியும் ஆமை வேகத்தில் செல்கிறது. கடுப்பான டேவிட் மறுபடியும் முந்துகிறார். பிடித்தது சனி.
ட்ரக் இவரை ஈவ் டீசிங் செய்ய ஆரம்பிக்கிறது. மூர்க்கத்தனமாக துரத்துவது, முட்டுவது போல நெருங்கி வருவது, பின் திடீரென கண்ணில் இருந்து மறைவது என்று மிரட்டுகிறது. வேலை வேட்டியில்லாதவன் எவனோ விளையாடுகிறான் என்று சாலை ஓரக்கடை ஒன்றில் இருக்கும் தொலைபேசியில் போலீஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். திடீரென அந்த ட்ரக் பலமாக டெலிபோன் பூத்தில் மோதுகிறது. மயிரிழையில் டேவிட் தப்பிக்கிறார். துரத்துபவன் வேலை வெட்டி இல்லாத சாதாரணமானவன் அல்ல, சரியான பைத்தியகாரன் என்பது புரிகிறது. அவசரமாக காரில் ஏறி பறக்கிறார். மறுபடியும் துரத்தல் விளையாட்டு. இதில் இருந்து எப்படி டேவிட் தப்பித்தார் என்பதைத்தான் ஒன்னரை மணிநேர மிரட்டலாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் முழுவதும் பொட்டல் காட்டில் நீண்ட சாலையிலேயே நடக்கிறது. படத்தின் பெயர் காரணம் படத்தை பார்க்கும்போதே புரிந்துவிடும். படத்தில் ஒரு ஹீரோ அது டேவிட், வில்லன் அந்த ட்ரக். மற்றபடி குறிப்பிடும் படியான நடிகர்கள் யாருமே இல்லை. முதலில் என்னடா கேமராவை காரில் இணைத்து விட்டார்களோ என்று தோன்றும். பின் அதுவே படத்தின் சுவாரசியத்துக்கு உதவியிருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் என்று ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு ட்ரக் வரும். இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதே அந்த மர்மதேச ட்ரக். படத்தில் டேவிட் படுகிற அவஸ்தையை நமக்கும் உண்டாக்கி இருப்பார் இயக்குனர். ட்ரக் திடீர் திடீர் என தோன்றுவதால், சாதாரண காட்சிகளில் கூட, திரையில் ஏதாவது ஒரு மூலையில் ட்ரக் வருகிறதா, தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்து விடுவோம். அந்த ட்ரக்கிடம் இருந்து தப்பிக்க நிறைய ஐடியா செய்வார். படம் பார்க்கும் நாமும்தான். ஆனால் அவை புஸ்வானமாகும்போது அந்த ட்ரக் மீது கோபம் வரும் பாருங்கள்? கடைசிவரை அந்த ட்ரக் ட்ரைவர் யார் என்று காட்டாததும் ஒரு சுவை.
சில தகவல்கள்..
இந்த படத்தை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். படம் வெளி வந்த ஆண்டு 1971. இந்த படம் பற்றி ஸ்பீல்பர்க் சொல்லும்போது, "தெரியாத ஒரு எதிரிக்குத்தான் நாம் மிகவும் பயப்படுவோம். அதையே இங்கு பயன் படுத்திகொண்டேன்." என்றார்.
படத்தில் வரும் காரையும், ட்ரக்கையும் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த காரின் சிகப்பு வண்ணம் சாலையில் தெளிவாக தெரியும். அதே நேரம் அந்த ட்ரக் மங்கலாக தெரியும். படம் பார்ப்பவர்களுக்கு தூரத்தில் வரும் ட்ரக் மங்கலாக தெரியும். அது ட்ரக்கா இல்லை நம் கற்பனையா என்று குழப்புவதற்கு இந்த ஏற்பாடு. அதே போல ட்ரக்கின் ஹெட் லைட்டுகள் பெரியதாக, பார்ப்பதற்கு யாரோ முறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணும். இதுவும் ஸ்பீல்பர்க்கின் வேலைதான்.
டேவிட்டாக வருபவர் டென்னிஸ் வீவர். ஓரளவிற்கு தைரியமான ஒரு ஆண்மகன் எப்படி பயப்படுவான் என்பதை காட்டி இருப்பார்.
படம் பலபேரின் பாராட்டுகளை பெற்றதோடல்லாமல் மிகுந்த வெற்றியும் பெற்றது.
குறிப்பிடத்தக்க காட்சிகளாக சாலை ஓரத்தில் நிற்கும் ஸ்கூல் பஸ் காட்சி, ட்ரக் சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஆகியவையை சொல்லலாம். ஒன்னரை மணிநேர சுவாரசிய பொழுதுபோக்குக்கு கியாரண்டி. நேரம் கிடைத்தால் பாருங்கள்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...
8 comments:
திரைப்படத்தை கண் முன் காட்டும் விமர்சனம்.
நான் ஏற்கனவே இப்படத்தை பார்த்து விட்டேன். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்து கொடுத்தது. அருமையான எழுத்து நடை...
Good review.Niraya thadavai Seat pinju,aani,kampi ethavathu patham pakkum pothu mokkai padathai kooda seat nunila utkarnthu paarthiruken!
71 lave vantha padama,spielberk unmaila munnodi director than.
Ramgopal varma's road film kooda ithe pola irukum,duel pathu inspire agi iruparo?
One small doubt,car,truck vida fast pogume,easya overtake seythu kankanama poga mudiyatha?
@ Advocate P.R.Jayarajan
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
@David
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ வவ்வால்
அந்த மாதிரி பாடாவதி தியேட்டர் எங்க ஊர்லயும் உண்டு :))
ஸ்பீல்பர்க் கமர்சியல் படங்கள் எடுத்தாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும்.
படத்தில் வரும் கார் அந்த காலத்தில் குடும்பங்களுக்கேன்றே தயாரிக்க பட்ட இலகு ரக
வண்டி. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. ட்ரக்குகள் பிக் அப் மெதுவாக இருந்தாலும்
120 கிமி அசுரவேகத்தில் வரும். ஸ்பீல்பர்க் இதையும் புத்திசாலித்தனமாக செய்திருப்பார். கார் பறந்து விடும். ஆனால் மிக வேகமாக செல்ல முடியாததால் சிறிது நேரத்திற்கெல்லாம் ட்ரக் நெருங்கி விடும்.
This is the first time, I came to your site. Really your site is nice. Your review about every movie is too good.
After I saw your review, I want to watch this movie immediately. I got this movie from Google videos. But for your previous hollywood movie reviews I didn't get the download link. If Possible kindly provide the movie link in your every post.
@ பழனி வேல் ராஜா க
நன்றி நண்பரே, உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்கிறேன்.
www.torrentz.com
இந்த தளத்தில் சென்று டொராண்ட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் சொன்னால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான். இதுவரை பார்த்ததில்லை. ஆன்லைனில் முயற்சி செய்கிறேன். :)
இந்தப் படத்துல அந்த ட்ரக்கோட ஹாரன் சவுண்ட் பீதிய கிளப்பும். இன்றும், m.t.c பஸ் இந்த மாதிரி ஹாரன் அடிக்கும் போது, மிரண்டு போவேன். அற்புதமான படம்
Post a Comment