விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 29, 2010

அங்காடித்தெரு - திரைப்பார்வை.


இது கண்டிப்பாக விமர்சனம் அல்ல. படத்தை பார்த்த பின் என்னுள் தோன்றியவையை எழுதுகிறேன். 



ரங்கநாதன் தெருவில் உள்ள விண்ணை முட்டும் கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் நம்மிடம் சிறிது முகம் சுளித்தால் கூட நான் எவ்வளவு
பெரிய ஆள்? உன்னை என்ன செய்கிறேன் பார்? என்று மார் தட்டி, அங்கு உள்ள சூப்பர்வைசரிடம் வத்தி வைப்போம். இனி அம்மாதிரி கடைக்கு செல்லும் போது நம்முடைய பார்வை கண்டிப்பாக அவர்களை ஊடுருவி செல்லும். இவர்களின் சிரிப்பு, கோபம், கண்ணீருக்கு பின் எத்தனை சோகம் உள்ளது என்று நம் மனது தேடும். தெருவோரங்களில், கூவி கூவி விற்கும் ஒவ்வொரு மனிதனிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி வாழ்பவர்களின் கதையை சொல்வதுதான் அங்காடித்தெரு.

இந்த படம், பிழைப்பிற்காக சென்னை வந்து, அங்கு நடக்கும் அநியாயங்கள் பொறுக்காமல், மார்கெட் ரவுடிகளை அடித்து நொறுக்கி, சென்னை நகரத்தையே திருத்தும் ஒரு மாவீரனின் கதை அல்ல. வாழ்க்கை ஓட்டத்தில் எதையும் கவனிக்காமல் பணத்தை மட்டும் தேடி ஓடும் மனிதர்கள், எல்லாவற்றையும் பணமாக பார்த்து பழகிவிட்டார்கள். பெரும் வணிக நிறுவனங்களில் பணி புரியும் கடை நிலை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் கனவுகள், சோகங்கள், ஆத்திரங்கள் இவை எல்லாம் அந்த கட்டிடத்தின் வண்ணங்களுகுள்ளே கரைந்து போயிருக்கின்றன. பணியாளனை மனிதனாய் பாராமல் மாட்டை விட கேவலமாக நடத்த செய்வது எது? பாழாய்போன பணம். அந்த பணத்தையும் தாண்டி இன்று மறக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் மகத்துவத்தை சொல்லும் உன்னதமான படம். படத்தின் கதையை கூறபோவதில்லை. வழக்கமான காதல் கதைதான். ஆனால் கதை சொல்லப்பட்ட களம் தமிழ் சினிமாவுக்கு புதிது. படத்தில் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கதாநாயகன் முகத்தில் தமிழக தென்மாவட்ட இளைஞனின் கோபம், வறுமை, அப்பாவித்தனம், பாசம் மிளிர்கின்றன. புது முகமாம். தெரியவில்லை. அஞ்சலி வாழ்ந்து காட்டி உள்ளார். பாண்டி நல்ல நண்பனாக வருகிறார். இப்படி படத்தில் எல்லோருமே அவரவர் பாத்திரங்களை திறம்பட செய்திருக்கிறார்கள். படத்தில் சறுக்கல்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவற்றை பார்க்க தேவை இல்லை.

படத்தை உலக சினிமா பார்வையில் பார்ப்பது எல்லாம் எனக்கு தெரியாது. வெயில் படம் பார்த்த பின் அதே மாதரியான ட்ரீட்மெண்டுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டுதான் படம் பார்க்க சென்றேன். நுண்ணரசியல், கலை பார்வை எல்லாம் எனக்கு தெரியாது. நான் ஒரு கடை நிலை ரசிகன் தான். என்னை அறியாமல் ஒரு சில காட்சிகளுக்கு கைதட்டினேன், அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மென்று முழுங்கியபடி வாடிக்கையாளரிடம் பேசும் காட்சி, முன்னாள் விபச்சாரி, குள்ளமான கணவனுக்கும் தனக்கும் பிறந்த ஊனமான குழந்தையை பார்த்து "நல்ல வேளை ஊனமா பிறந்தது. இல்லைனா வேற எவனுக்கோ பிறந்ததுன்னு சொல்வாங்க" என்று சொல்லும் காட்சி.

ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் தெரிகிறார். படத்தில் கலை இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர். ரங்கநாதன் தெரு உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பாடல்கள் மனதை வருடுகின்றன. படத்தில் குறை என்றால் பின்னணி இசை மட்டுமே. பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று கொத்து பரோட்டா போட்டு விடாதீர்கள். இம்மாதிரி படங்கள் வெற்றி பெறவேண்டும். இல்லையேல், வேட்டைக்காரன்கள் நம் தலை எழுத்தாகி விடும்.

பெருமை பட சொல்லுவேன். வசந்த பாலன் எங்க ஊர்காரர்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...  

முழுவதும் படிக்க >>

March 25, 2010

அதிரடி சரவெடியாய் ஒரு படம்....

நேற்று எதார்த்தமாக ஸ்டார் மூவீஸ் பக்கம் சேனலை திருப்பினேன். Face/Off படம் ஓடிக்கொண்டிருந்தது நான் முதன் முதலில் கதை புரிந்து பார்த்து முதல் படம். ஆக்சன் அதிரடிகளுக்கு பஞ்சமில்லாத படம். மூவீஸ் சேனலில் ஏறக்குறைய நூறு தடவை ஒளிபரப்பப்பட்ட படம். இந்த படத்தை பற்றி அறிமுகம் தேவை இருக்காது. இருந்தாலும் இது என் மனதை கவர்ந்த படம் என்ற முறையிலேயே இந்த பதிவை வெளியிடுகிறேன்.


படத்தின் கரு ஒரு பழைய எம்ஜியார் படம் ஆசை முகம் என்று நினைக்கிறேன் அதன் கருதான்.காஸ்டர் என்னும் ஒரு தீவிரவாதி ஆர்ச்சர் என்னும் ஒரு எப்பிஐ அதிகாரியை கொல்ல முயற்சி செய்யும் போது ஆர்ச்சரின் மகனை கொன்று விடுகிறான். இதனால் எப்பொழுதும் இறுகிய மன நிலையுடன் காணப்படுகிறான் ஆர்ச்சர். ஒரு கட்டத்தில் காஸ்டரை பிடிக்கும் முயற்சியில் ஏற்படும் சண்டையில் அவனுடைய தம்பி பிடி படுகிறான். காஸ்டர் கோமா நிலைக்கு சென்று விடுகிறான். பிறகுதான் நகரில் அவர்கள் எங்கோ வெடி குண்டு வைத்திருப்பது தெரிய வருகிறது. எனவே சிறையில் இருக்கும் காஸ்டரின் தம்பியிடம் இருந்து உண்மையை பெறுவதற்கு விபரீத முயற்சியாக ஆர்ச்சரின் முகத்தை அறுவை சிகிச்சை மூலம் கழற்றி பாதுகாப்பாக வைத்து விட்டு, அதற்க்கு பதிலாக காஸ்டரின் முகத்தை பொருத்தி காஸ்டராக மாறி சிறைக்குள் செல்கிறான் ஆர்ச்சர். இதற்கிடையே எதிர்பாராத விதமாக கோமாவில் இருந்து விழிக்கும் காஸ்டர் ஆர்ச்சரின் முகத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி கொள்கிறான். பின் இதற்க்கு சாட்சியாக இருக்கும் அனைவரையும் எரித்து கொன்று விடுகிறான்.

பிறகு தான் வைத்த வெடி குண்டை ஆர்ச்சர் கண்டுபிடிப்பது போல தானே கண்டுபிடித்து செயலிழக்க செய்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறான். பின் சிறையில் இருக்கும் நிஜ ஆர்ச்சர் முன் தோன்றுகிறான். இப்போது ஆர்ச்சர் காஸ்டராக, காஸ்டர் ஆர்ச்சராக. நிலைமை விபரீதமானது புரிகிறது. சிறையில் இருந்து தப்புகிறான் ஆர்ச்சர். பின் எவ்வாறு தன்னை ஆர்ச்சர் என்று நிரூபித்தான், காஸ்டர் பிடிபட்டானா என்பதை அதிரடி சரவெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் ஆர்ச்சர், காஸ்டர் என்ற இரு வேடத்திலும் நடித்திருப்பவர்கள் நிகோலஸ் கேஜ் மற்றும் ஜான் ட்ரோவால்டா பட தொடக்கத்தில் நிகோலஸ் காஸ்டராகவும் ட்ரோவால்டா ஆர்ச்சராகவும் வருவார்கள் பின் இருவர் முகமும் மாற்றிய பின் அவர்கள் பாத்திரமும் மாறிவிடும். காஸ்டரின் செயல்களில் ஒரு விளையாட்டுத்தனமான கொடூரம் தெரியும். ஆர்ச்சரோ மகனை இழந்த சோகத்தில் இருப்பவன். தொடக்கத்தில் நிகோலஸ் ஜாலியாக வருவார். ட்ரோவால்டா உம்மென்று வருவார். இருவரின் முகம் மாறியதும் நிகோலஸ் உம்மென்று ஆகி விடுவார். ட்ரோவால்டா ஜாலியாக ஆகி விடுவார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நடித்திருப்பார்கள். அதிலும் தன் மகனை கொன்ற காஸ்டரின் முகத்தை தன் முகத்தின் மீது ஒட்டி உள்ளார்கள் என்று ஆர்ச்சர் காட்டும் அருவருப்பான முக பாவனைகள் நிகோலசுக்கு கைத்தட்டல் வாங்கி தரும்.

ஜான் வூ படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு குறைவிருக்காது. அதே போல சென்டிமென்ட் காட்சிக்கும் பஞ்சம் இருக்காது. குறிப்பாக ஆர்ச்சருக்கும் காஸ்டரின் குழந்தைக்கும் நடக்கும் உரையாடல், காஸ்டரின் காதலி இறக்கும்போது அவனை தீவிரவாதியாக வளர்க்க வேண்டாம் என்று சொன்னபடி இறக்கும் காட்சி, ஆர்ச்சரின் மகள் தன் தந்தை யார் என்று தெரியாமல் காஸ்டர் முகத்தில் இருக்கும் தன் தந்தையையே சுடும் காட்சி என்று பல சென்டிமென்ட் காட்சிகள் படத்தில் உண்டு. ஆர்ச்சரின் மகளிடம் பழகும் காஸ்டர் (ஆர்ச்சர் முகத்துடன்) அவளுக்கு தற்காப்புக்காக ஒரு கத்தியை அளிக்க கடைசியில் அந்த கத்தியை கொண்டு அவனையே குத்தும் காட்சி சுவாரசியமானது.

படத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு நபர்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் சண்டை பயிற்சியாளர்கள். இந்த மாதிரி ஆக்சன் படங்களுக்கு ஒளிப்பதிவு மிகமுக்கியம். அதிலும் கிளைமாக்ஸ் படகு சேசிங் காட்சியில் ஒளிப்பதிவு அபாரம். அதே போல படத்தில் சண்டை காட்சிகள் மிக அபாரம். ஆபத்தான காட்சிகள் ஏராளம். சண்டை காட்சிகளை உற்று நோக்கினால் எவ்வளவு கஷ்டபட்டிருக்கிறார்கள் என்று தெரியும்

படத்தில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்...

படத்தின் இயக்குனர் ஜான்வூ. இவருக்கு ஹாலிவுட்டில் ஒரு நிரந்தர இடம் வாங்கி கொடுத்த படம் இது. இவர் இயக்கிய பிற படங்கள், ஹார்ட் டார்கெட், மிசன் இம்பாசிபிள், ப்ரோக்கன் ஆரோ..

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆலிவர்வுட்.

படம் வெளி வந்த ஆண்டு 1997. விமர்சனம் சர்ச்சைகளுக்கு இடமின்றி வசூலை வாரி குவித்த படம். இதனை விமர்சிக்கும் போது "இப்படத்தில் ட்ரோவால்டா நிகோலஸ் முகமூடியையும், நிகோலஸ் ட்ரோவால்டா முகமூடியையும் அணிந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுமே தவிர அவர்கள் நடிக்கிறார்கள் என்றே தோன்றவே தோன்றாது" என்று பாராட்டுகிறார்கள்.

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று

பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

March 23, 2010

கல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், கன்றாவி...



நேற்று மறுபடியும் சன்டிவியில் ஒரு சாமியார் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். இந்த முறை கல்கி பகவானின் அந்தரங்களை படம் பிடித்து காட்டினார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு எந்த மதத்தையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்று டைட்டில் வேறு. எனக்கு தெரிந்து கல்கி அவர்கள் அவதரித்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது. இவ்வளவு நாள் இல்லாத புலனாய்வு மூளை திடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்படி என்று தெரியவில்லை. ஒரு வேளை பேரம் படிய வில்லையா? இல்லை சன்டிவியில் காட்சி தர மறுத்தாரா ? அந்த கல்கி பகவானுக்கே வெளிச்சம் .



போனவாரம் பேஷன் டிவியை ஒரு பத்து நாட்களுக்கு இந்தியாவில் தடை செய்தார்கள். காரணம் ஆபாச காட்சிகள் ஒளி பரப்பியதால். அது சரி, ஆபாசம் என்றால் நிர்வாண காட்சி மட்டும் தானா? அதுவும் அவர்கள் ஒளிபரப்பியது இரவு 12 மணிக்கு மேல். இந்த வாரம் தென்னிந்திய அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது . மேடையில் சில நடிகைகளின் நடனம், உடைகள் எல்லாம் அந்த கால ரெகார்ட் டான்சை நினைவு படுத்தின. அழகி போட்டி பங்கேற்பாளர்களும் தன் பங்குக்கு தாராளமாக தன் அழகுக்கு மார்க் போடும்படி அனைவருக்கும் தன் அழகை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த டிவியை தடை செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் முழுவதும் காட்டவில்லையே. நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். அம்மா தாய்குலங்களே, சம உரிமை, உடையில் புரட்சி எல்லாம் வாழ்க்கை முறைக்குதானே ஒழிய, பாலுணர்வை தூண்டுவதற்காக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு என்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்பவர்கள் ஏன் புற அழகை முன் வைத்து அழகி போட்டி நடத்துகிறார்கள்?



இந்த ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் என்று பார்த்தால், யூசுப் பதான் விளாசிய மின்னல் வேக சதம் முக்கிய இடம் பிடிக்கும். அதெப்படி ஐபிஎல் போட்டிகளின் பொது மட்டும் நம்ம யூசுப்புக்கு வீரம் வருகிறது என்று தெரிய வில்லை. இந்திய அணியில் ஆடும்போது சொற்ப ரன்கள் எடுக்க கூட வக்கில்லாமல் குனிந்த படியே பெவிலியன் திரும்பும் இவர் இந்த போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குகிறார்? ஒரு வேளை இந்திய அணிக்கு வார்னே காப்டனாக இருந்தால் நன்கு ஆடுவாரோ ? இல்லை சில்பா செட்டி , காத்ரீனா, ப்ரீத்தி , மற்றும் இன்ன பிற நடன அழகிகள் மைதானத்துக்கு
வரவேண்டுமா?



அதெல்லாம் இல்லை இந்த பாழாய் போன காசு இருக்கிறதே அது செய்யும் வேலை. அதனால் தான் குடுகுடு கிழவர்கள் கூட துள்ளி குதித்து ஓட வைக்கிறது. இதற்கு யூசுப் மட்டும் என்ன விதிவிலக்கா? இது உண்மை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. யாரும் கண்டிக்க போவதும் இல்லை. அதை விடுத்து நான் கிரிக்கெட் விளையாடுவதே நாட்டுபற்றுக்குத்தான் என்று எதாவது சொன்னர்களானால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்து விடும். இந்த விஷயத்தில் நம்ம ஸ்ரீசாந்த் எவ்வளவோ மேல் இந்திய அணியோ இல்லை பஞ்சாப் அணியோ நான் வாரி வழங்குவதில் வள்ளல் என்று நிருபித்து வருகிறார். இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போதெல்லாம் இவரை விட இர்பான் பதான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்? என்று தோன்றும். யுவராஜ் விசயத்தில் இன்னும் மோசம். என்னையா காப்டன் பதவியில் இருந்து இறக்கினீர்கள்? என்ன செய்கிறேன் பார்? என்று சொல்லி வைத்தார் போல் ஒற்றை இலக்கத்தை தாண்டுவதே இல்லை. அவர் முகத்தில் காப்டன் பதவி பறி போன ஆற்றாமை தெரிகிறது. ப்ரீத்தியும் இப்பல்லாம் யுவராஜை கண்டு கொள்வதே இல்லை.விடுங்க பாஸ் இவுங்க எப்பவுமே இப்படித்தான்!!!



சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ரசிகர்களை கடைசிவரை நகம் கடிக்க வைத்து கடைசியில் சூப்பர் ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று ஜெயிக்க வேண்டிய ஒரு ஆட்டத்தை பஞ்சாபுக்கு விட்டு கொடுத்த பெருமை சென்னை அணியை சாரும் . இதே போல் இதற்கு முன் நடந்த டெல்லி மற்றும் டெக்கான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டமும் அப்படித்தான். கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை டெல்லி ஜெயிக்கும் நிலைதான் இருந்தது இறுதியில் டெக்கான் அணிக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது டெல்லி . ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. விட்டுக்கொடுத்துதான் விட்டார்களோ? இப்போது இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவும் பெரும்பாலான பேர்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. என்ன சந்தேகமா? தெரியாத மாதிரி கேக்கறீங்க? அதாங்க மாட்ச் பிக்சிங். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பார்க்கலாம். மோடிக்கே வெளிச்சம்.


இவ்வளவு இருந்தும் ஐ பி எல்லில் ரசிக்க வைத்த சில விஷயங்கள், முரளிதரனின் அதே குழந்தை தனமான ஆர்வம், கங்குலி அவ்வப்போது பிடிக்கும் அபார காட்ச்சுகள், மங்கூஸ் மட்டை, அதிகரித்து வரும் டைரக்ட் ஹிட்டுகள், பவுலர்கள் தன்னுடைய அணியினருக்கே பந்து வீசும் சுவாரசியமான தருணங்கள், இன்னும் பல ...


பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

March 19, 2010

தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....



இந்தியாவின் சக்தி வாய்ந்த ஐம்பது பிரபலங்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 28 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இவரை தென்னிந்திய சினிமாவின் பாட்ஷா என்றும் புகழ்ந்துள்ளது. இவர் இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கான காரணங்களாக அவர்கள் சொல்வது இந்தியாவின் பெரும் செலவில் எடுக்கப்படும் எந்திரன் படத்தில் நடித்து வருவது, இவர் மீதான நடிகர் சங்கத்தின் எதிர்ப்பு பலனளிக்காமல் போனது, ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்குவது முதலியவை ஆகும்.

ஒரு காலத்தில் ரஜினி ரசிகர்கள் யாருக்கும் அஜித்தை பிடிக்காது.  இதற்க்கு காரணம், சுமார் பதின்மூன்று  ஆண்டுகளுக்கு முன்னால் அஜித் அளித்த ஒரு வில்லங்கமான பேட்டி. அதில் அஜித் சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணம் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. நான் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பேன் என்று கூறினார். இது "அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்" என்று நம்ம நித்யா புகழ் பத்திரிகையில் வெளி வந்தது. இதை படித்த அனைத்து ரஜினி ரசிகர்களும் ஆத்திரம் அடைந்தனர். ரஜினியின் ரசிகர் கூட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். இயல்பாகவே மக்களிடம் அஜித் மீதான வெறுப்பு பரவி இருந்தது. அதை இன்றும் கூட மக்களிடம் காணலாம். 

நம் மக்களை பொறுத்தவரை ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். இதனை நன்கு புரிந்து கொண்டவர் ரஜினி. அதனால்தான் அவர் தன் எந்த படத்திலும் எம்ஜிஆர் அவரின் புகழை பயன் படுத்திக்கொள்ளவில்லை. இதனை புரியாத பல நடிகர்கள் தன்னை இந்த இருவரோடு ஒப்பிட்டு காணமல் போனதை பார்த்திருக்கிறோம். 

இதனை சிறிது தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் அஜித். அதன் பின் தன் வழியை மாற்றிக்கொண்டார். ஆனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவர் எதிரியாகத்தான் தெரிந்தார். ரஜினி ரசிகர்கள் விஜய்யை விரும்பியதற்கு இதுவும் ஒரு காரணம்.  அவ்வப்போது அஜித் ரஜினியுடன் பல விழாக்களில் தோன்றி வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.இது என் மனதில் ஒரு வருத்தமாகவே இருந்து வந்தது. ஆனால் அந்த வருத்தத்தை போக்கிய பெருமை நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையே சாரும். ஆமாம் அவருக்கு மட்டும் பாராட்டு விழா நடத்தாமல் விட்டிருந்தால்? அதில் அஜித்தை அழைக்காமல் விட்டிருந்தால்? அஜித் உண்மையை பேசாமல் இருந்திருந்தால்? ரஜினி எழுந்து ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால்? எதற்கு இத்தனை கேள்வி? எல்லாமே நடந்து விட்டது. 

இன்று உண்மையை கூற வேண்டுமானால் ரஜினி ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல, சில விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட அஜித்தின் மீதான மதிப்பு கூடி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேர்மை. அஜித் என்பவரின் பேச்சில் இருந்த நேர்மை. ரஜினி என்பவரின் எண்ணத்தில் இருந்த நேர்மை. ரஜினியின் அந்த ஒரு கைத்தட்டல் தன் ரசிகர்களை அஜித்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ரஜினி எழுந்து கை தட்டியதால் நிம்மதி பெருமூச்சு விட்ட அஜித் ரசிகர்கள் ஏராளம். இதில் தன்னை ரஜினி ரசிகன் அல்ல என்று சொல்லிக்கொள்ளுபவர்களும் அடங்கும். பாட்ஷா படத்தில் ஒரு பாடல் வரி வரும் "இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா.." இது எவ்வளவு உண்மை!! 
நிஜமாகவே சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாதான். 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..  
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

March 18, 2010

செம தில்லாக ஒரு படம் ...


"ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்.."என்று ஒரு பாடலில் ஒரு வரி வரும். அது எந்த அளவுக்கு உண்மை என்று இந்த படம் பார்த்தால் புரியும். சார்லி சாப்ளின் என்பவர் ஒரு கோமாளித்தனமான காமெடியன், வசனம் சரியாக பேச மாட்டார், அவர் ஊமை படங்களில் மக்களை சென்றடைந்தார் என்று நினைப்பவர்கள், இந்த படத்தைப்பார்த்தால் அப்படி சொல்ல மாட்டார்கள்.



படத்தின் கரு என்னவென்றால், ஒரு நாட்டின் தலைவன், முட்டாள்தனமாக நடப்பவன், பயந்தாங்கொள்ளி, அவனை மாதிரியே இருக்கும் இன்னொருவன் ஆள் மாறாட்டம் காரணமாக அவன் இடத்துக்கு வருகிறான். பின் நடப்பதுதான் கதை. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா? ஆமாம் இம்சை அரசன் படத்தின் கதைதான். படம் முதல் உலகப்போர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. போரில் சண்டையிட்டு தன் சுய நினைவை இழக்கும் ஒரு பார்பர்(முடி வெட்டுபவர்) , இருபது வருடங்கள் கழித்து சுயநினைவுக்கு வருகிறார். அப்போது அவர் வாழும் டோமானியா நாட்டை ஹெயக்கல் என்ற சர்வாதிகாரி ஆண்டு வருவது தெரிகிறது. அங்கு யூதர்கள் மோசமாக நடத்தப்படுவது இவருக்கு கோபம் அளிக்கிறது. சர்வாதிகாரியை எதிர்க்க துணிகிறார். அதனால் ராணுவம் இவரை கைது செய்ய நினைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பி, ராணுவ வீரன் மாதிரி உடையில் சுற்றுகிறார். இவரை பார்த்த வீரர்கள் அச்சு அசப்பில் இவர் ஹெயக்கல் மாதிரியே இருக்க, இவரை மாளிகைக்கு கொண்டு செல்கின்றனர். இதற்கிடையே ஹெயக்கல் ஒரு சிறு விபத்தில் சிக்கி சேற்றில் விழுகிறார். அவரை பார்பர் என்று நினைத்து ராணுவம் கைது செய்கிறது. ஹெய்க்கலாக இடம் மாறிய பார்பர் பொது மக்கள் மத்தியில் யாரும் எதிர்பாராத விதமாக, யூதர்களுக்கு ஆதரவாக ஒரு உருக்கமான உரை ஆற்றுகிறார். இது வானொலியில் டோமானியா முழுவதும் ஒளிபரப்பாகிறது. இதனை கேட்கும் பார்பரின் காதலி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். படம் முடிவடைகிறது.


படத்தில் காட்சிக்கு காட்சி நக்கல் நய்யாண்டிதான் . படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜ பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டவை . அவற்றின் உச்சரிப்பை பார்த்தாலே தெரியும்.

ஹெய்க்கல் - ஹிட்லர்
பென்சியோ நபோலினி - பெனிடோ முசோலினி
கார்பித்ஸ் - கோயபல்ஸ் (ஹிட்லருக்கு அடுத்த பதவியில் இருந்தவர். ஹிட்லர் செய்த படுகொலைகள் அனைத்தையும் மூடி மறைத்தவர். கடைசி வரை ஹிட்லர் நம்பிய ஒரே நபர்.)



பார்பர் மற்றும் ஹிட்லராக இரட்டை வேடங்களில் சார்லி சாப்ளின் நடித்திருக்கிறார். ஹிட்லரின் நடை உடை பாவனை அனைத்தையும் அப்படியே பிரதிபலிப்பார். ஹிட்லர் பேசும்போது அனல் தெறிக்கும். சாட்டை எடுத்து சுழற்றுவது போல இருக்கும். இதை அப்படியே செய்திருப்பார். ஹிட்லர் என்ற ஒரு கம்பீரமான மனிதர் தனியாக இருக்கும் போது எப்படி இருப்பார்? என்னென்ன சேட்டைகள் செய்வார்? அவர் முசோலினியை பார்த்து எப்படி நடுங்குவார்? என்று சகட்டுமேனிக்கு கேலி செய்திருப்பார். பல காட்சிகள் இம்சை அரசனை நினைவு படுத்துகின்றன. பார்பராக வரும் சாப்ளின் அப்பாவி யூதனின் பிம்பம். அவர் செய்யும் காமெடியில் ஒரு வேதனை தெரியும். செய்கைகளில் அசாத்திய வீரம் தெரியும். காமெடியில் நவரசத்தையும் கொண்டு வர முடியும் என்று முதன்முதலில் நான் பார்த்தது நாகேஷ் அவர்கள்தான். எதிர் நீச்சல் படத்தில் அவர் அழுவார் , சிரிப்பார் , குதிப்பார் கோபப்படுவார். சாப்ளின் நாகேஷுக்கு முன்னோடி. படத்தில் சாப்ளின் காமெடிதான் செய்வார். ஆனால் நமக்கு அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் வரும்.

இந்த படம் வெளி வந்த ஆண்டு 1940. அதாவது ஹிட்லர் உயிருடன் இருந்த போது வெளிவந்ததது. அதுவும் அமெரிக்காவும், ஜெர்மனியும் நட்பாக இருந்த காலகட்டம். அப்போது இந்த மாதிரி ஒரு படம் எடுக்க பெரிய தில் வேண்டும். ஒரு வேலை இப்படம் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் ஹிட்லர் தோற்றது, தற்கொலை செய்து கொண்டது எல்லாம் படத்தில் இடம் பெற்றிருக்கும். ஆனால் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. படத்தை தயாரித்து இருப்பது சாப்ளினின் சொந்த நிறுவனமான (நால்வரில் ஒருவர்) யுனைட்டட் ஆர்ட்டிஸ்(United Artists) நிறுவனம். சாப்ளினே எழுதி, இயக்கி, இசைஅமைத்து நடித்திருக்கிறார்.


சில சுவாரசியமான தகவல்கள்:


சாப்ளின் மற்றும் ஹிட்லர் இருவரும் உருவத்தில் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. குறிப்பாக மீசை. இருவரும் ஒரே ஆண்டில் நான்கு நாள் இடைவெளியில் பிறந்தவர்கள். ஹிட்லரின் நாசி கட்சி புகழ் அடைந்து கொண்டிருக்கும் போது சாப்ளின் சினிமாவில் உயர்ந்து கொண்டிருந்தார். இந்த படத்தை ஆதரிக்க பலரும் தயங்கியதால் சாப்ளினே தன் முழு செலவில் படம் எடுத்து வெளியிட்டார். இந்த படம் மட்டும் ஓடாமல் இருந்திருந்தால் சாப்ளின் நடு தெருவுக்கு வந்திருப்பார். இந்த படம் ஹிட்லர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர் இந்த படத்தை இரண்டு தடவை பார்த்திருக்கிறார்.


இந்த படம் சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் பேசும் படம். வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடிய இந்த படம்தான் சாப்ளின் நடித்த படங்களிலேயே பெரிய வெற்றிப்படம். தன்னை நடிகன் என்று சொல்லிகொள்ளும் இன்றைய தலைவலிகள் எல்லாம் நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க.. 


முழுவதும் படிக்க >>

March 16, 2010

பிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தின் சிறப்பு என்ன என்று கேட்டால் எல்லோரும் டக்கென சொல்வது தேர்வுகள். அதிலும் குறிப்பாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள். ஒவ்வொரு ஆண்டும், மன்னிக்கவும் அதற்க்கு முந்தய ஆண்டில் இருந்தே மாணவர்களை கசக்கி, பிழிந்து அவர்களிடம் எவ்வளவு சாறு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து பொதுதேர்வுகளுக்கு அவர்களை தயார் படுத்துகிறார்கள்.




ஒவ்வொரு நாளிதழிலும், டிசம்பர் மாதத்தில் இருந்தே மாதிரி வினா விடை, மாணவர்களுக்கு டிப்ஸ் முதலியவற்றை வழங்குகிறார்கள். பெற்றோர்கள் பாவம் தங்களால் இயன்றவரை தன் பிள்ளைகளை தனி வகுப்புகளுக்கு அனுப்பி, வீட்டில் கேபிள் இணைப்பை துண்டித்து, இரவெல்லாம் விழித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். ஒரு பன்னிரண்டாம் படிக்கும் மாணவ/மாணவியின் நாள் அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கி, நள்ளிரவு 12 மணிக்கு முடிகிறது. இடையில் அவர்கள் பார்ப்பது எல்லாம், புத்தகம், நோட்டு, வினாத்தாள், ........ கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக மாணவர்களும் தன் எதற்கு படிக்கிறோம் என்று தெரியாமலே ஒரு இயந்திரம் போல எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி, அரைத்து, விடைத்தாளில் கொட்டிவிட்டு வந்து விடுகின்றனர்.

தேர்வு நடக்கும் காலங்களில் மாணவர்களின் மன நிலை இருக்கிறதே, சொல்ல முடியாதே வேதனையான விஷயம். கிட்டத்தட்ட ஒரு மன நோயாளி போலவே ஆகி விடுகின்றனர். தேர்வு எழுதுவதற்குள், இந்த கேள்வி வருமா? இதே கேள்வி எல்லா வினாத்தாளிலும் இருக்கே? இது எத்தனை மார்க் கேள்வி? வினாத்தாள் லீக் ஆகி விட்டது என்று சொன்னார்களே? தேர்வு தள்ளி போகுமா? என்று ஆயிரம் கேள்விகள்.



தேர்வு தொடங்கும் முன் இருக்கும் அந்த பத்து நிமிட படபடப்பு. அந்த இளம் இதயங்கள் எப்படித்தான் தாங்குகிறார்களோ? சத்தியமாக அப்போதுதான் இதயம் துடிப்பது நம் காதுக்கு கேட்கும். அத்தனை சத்தமாக நம் இதயம் துடிக்கும். இந்த ஆண்டு கணித தேர்வுக்கான வினா மிகவும் கடினமாக இருந்ததாம். இதனை பார்த்த ஒரு மாணவருக்கு, அங்கேயே வலிப்பு வந்து விட்டதாம். என்ன கொடுமை?

சரி எதற்க்காக இந்த போராட்டம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் அத்தனை முக்கியமானவயா? அப்படித்தான் நம் சமூகம் ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளது. பிளஸ் 2 என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடம். இங்கு சறுக்கியவர்களுக்கு வாழ்கையே வீணாகி விடும், என்பது போன்ற தரமான அறிவுரைகளால், ஏற்கனவே பலஹீனமாக இருக்கும் நம் இளைய சமுதாயத்தினருக்கு பீதியை கிளப்பி விடுகிறோம். இதனால் பிளஸ் 2 வில் பெயில் கூட ஆக வேண்டாம், மதிப்பெண் சிறிது குறைந்தாலே தற்கொலை முயற்சிகள் நடப்பதற்கு இதுதான் காரணம். (இப்போதாவது பரவாயில்லை. நான் படிக்கும் காலங்களில் நுழைவுத்தேர்வு வேறு உண்டு). பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காதவர்கள் வாழ்கையில் நல்ல நிலைக்கே வந்ததில்லையா?? நம்மில் பலர் அப்படித்தான். எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்? உங்கள் கண் முன் எத்தனை பேர் வாழ்கை இருண்டு போனது??

முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்வு என்பது நமது கற்றல் திறனை சோதிக்கும் ஒரு கருவியே அன்றி அது நம் தலைவிதியை நிர்ணயிக்கும் கடவுள் அல்ல. மேலும் எல்லோரும் போகிறார்கள், நிறைய பணம் கிடைக்கிறது என்பதற்காக, நமக்கு வராத, திறன் இல்லாத ஒரு துறைக்குள், முட்டி மோதி இடம் பிடிப்பது என்பது முட்டாள் தனமானது. எத்தனை மாணவர்கள் பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவத்தில் சோபிக்காமல் போகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே நன்றாக தெரியும் .



எனக்கு தெரிந்த ஒரு மாணவன் கேட்ட வேதனைக்குரிய கேள்வி.."நானும் என் சகோதரனும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறோம். அவன் உயிரியல், நான் வணிகவியல். என் வீட்டுக்கு வரும் உறவினர் அனைவரும் அவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்குகிறார்கள். எல்லா கல்லூரிகளிலும் வெற்றிக்கு வழிகள் என்று அவன் சார்த்த துறை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். எனக்கு பயமாக உள்ளது. ஒரு வேளை நான் உயிரியல் படிப்பை தேர்வு செய்திருக்கலாமோ? என் துறைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லையோ என்று ". இப்படித்தான் ஒவ்வொரு மாணவனையும் நாம் குழப்பி கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு துறையிலுமே முழு ஈடுபாடுடன், படித்தால் நமக்கு நல்ல எதிர்காலம் அமையும். மதிப்பெண் என்பது நாம் தேர்வு எழுதியதர்க்குதானே தவிர நமக்கு அல்ல. ஒரு மாணவன் கணிதத்தில் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவனைப்பார்த்து "கணக்கே சரியா வரல இதெல்லாம் எங்க உருப்பட போகுது?" என்ற கேணத்தனமான கேள்வி கேட்பதை உடனே நிறுத்தவேண்டும். தொழிற்கல்விதான் உலகில் சிறந்தது அது கிடைக்காவிடில் வாழ்க்கையே இருண்டு போய் விடும் என்ற மூட நம்பிக்கையை மாணவர் மனதில் விதைக்காமல் இருக்க வேண்டும். தேர்வு என்பது கிளைமாக்ஸ் அல்ல, அது படிப்பின் ஒரு பகுதி என்று மாணவர்கள் உணரவேண்டும் .


காலையில் வீட்டில் ஒரு சின்ன டென்ஷன். என்னால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று நாம் சொல்வதுண்டு. நன்கு பக்குவப்பட்ட நமக்கே அப்படி என்றால், இன்னும் மலராத மொட்டுகள் அவரகளுக்கு எப்படி இருக்க்கும்? இதை நாம் எப்போது உணர்வோம்????


இது பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு பண்ணுங்க..
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...


முழுவதும் படிக்க >>

March 12, 2010

த்ரில்லிங்கான இரண்டு படங்கள்

என்னை கவர்ந்த படங்களை பற்றி நான் எழுதி வருகிறேன். என் ரசனைகள் எப்பொழுதும் ஒரு பக்கமாகஇருந்ததில்லை. அனைத்து விதமான படங்களையும் நான் ரசிப்பதுண்டு. அந்த வரிசையில் ஒரே மாதிரியான இரண்டு படங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

 முதல் படம் - Escape From Alcatraz 


நீங்கள் பொழுதுபோக்கு பட பிரியரா? சோக காட்சிகளை வெறுப்பவரா? லாஜிக் எல்லாம் பார்க்காதவரா? கண்டிப்பாக இந்த படம் அந்த வகைதான். படத்தில் நெஞ்சை பிழியும் காட்சிகள் எதுவும் கிடையாது. பல இடங்களில் லாஜிக் உதைக்கும். ஆனாலும் படத்தின் வேகம் மற்றும் சுவாரசியமான காட்சிகள் அவற்றை மறைத்துவிடும். 

படத்தின் கதை இதுதான்.  பிரான்க் மோரிஸ் என்பவன் ஒரு குற்றத்துக்காக அல்கற்றாஸ் தீவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்படுகிறான். அது சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை கிமீ தொலைவில் கடலில் உள்ள ஒரு தீவு. அங்கே இருப்பது ஒரே ஒரு சிறைச்சாலை மட்டும்தான்.



அந்த சிறைச்சாலையை பற்றி சொல்ல வேண்டுமானால் அது சிறைக்கெல்லாம் ஒரு சிறை. அதாவது தப்பு செய்பவர்களை சிறையில் அடைப்பார்கள். சிறையிலும் தப்பு செய்பவர்களை இந்த தீவுக்கு தான் கொண்டு வருவார்கள். இதை அந்த சிறையின் வார்டனே ஒரு தடவை சொல்வார். பயங்கர பாதுகாப்பு நிறைந்த ஒரு இடம். எல்லாமே முறைப்படி ஒழுங்காக நடக்கும். யாருக்கும் தப்பிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தப்பித்தாலும், கடலில் தான் குதிக்க வேண்டும். மறு கரை போய் சேரும்முன் உறைந்து போய் விடுவர். 

இதை அனைத்தையும் கேட்ட மறு நொடியே நம்ம ஹீரோ அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டம் போடுகிறார். தனக்கு உதவி செய்ய மேலும் மூவரை கூட்டாளியாக சேர்த்து கொள்கிறார். அந்த நால்வரும் சிறையில் இருந்து தப்பினார்களா? என்பதை சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது இந்த படம்.

முதல் பத்து நிமிடங்கள் சிறையில் நடக்கும் நிகழ்ச்சிகள் சுவாரசியம் இல்லாமல் செல்கின்றன. ஹீரோ தப்பிக்க திட்டம் தீட்டியவுடம் படம் ஜெட் வேகம் பிடிக்கிறது. முதல் கட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதற்க்கு பயன்படும் சிறிய கத்தியை வடிவமைப்பது, வெட்ட தேவையான பிளேடை திருடுவது, போன்று சின்ன சின்ன காட்சிகள் மூலம் நம்ம படத்துடம் ஒன்ற செய்து விடுகிறார் இயக்குனர். நால்வரும் ஒவ்வொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள் அவர்கள் நால்வரும் தங்களுக்குள் வேலைகளை பிரித்து கொள்கிறார்கள். என்னென்ன வேலை என்று படத்தை பார்த்தல் புரியும். படத்தில் நால்வரும் சுரங்கம் வழியாக கட்டடத்தின் உச்சிக்கு செல்வது உச்ச கட்ட த்ரில்லிங். சீட் நுனிக்கு நம்மை நகர்த்தி விடும். அவர்கள் கடலில் குதித்து தப்பி விடுவது போலவும், ஆனால் வார்டன் அவர்கள் கடலில் இறந்து விட்டதாக கூறி கேசை முடிப்பது போலவும் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். 

பிரான்க் மோரிஸ் ஆக நடித்திருப்பவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். இவரை கௌபாயாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு  சற்று வித்தியாசமாக தோன்றும்.  கெட்டப்ப மாத்தினாலும் கேரக்டர மாத்த மாட்டேங்கரானே என்று வடிவேல் சொல்வது போல இதில் வேறு கெடப் என்றாலும் அதே தெனாவட்டான லுக். கூலிக்காரன் படத்தில் விஜயகாந்துக்கும், சிறை வார்டன் ஜெய்சங்கருக்கும் நடக்கும் உரையாடல் போல இந்த படத்தில் ஒரு காட்சி வரும். கிளின்ட் ஈஸ்ட்வுட் தன் பார்வையாலேயே தன்னுடைய தெனாவட்டை காட்டியிருப்பார்.

இந்த படம் வெளி வந்த ஆண்டு 1979. இயக்குனரின்  பெயர் டான் செய்கல். 1963 இல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில்  கம்பெல் பிருஸ்  எழுதி வெளிவந்த Escape From Alcatraz என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். இரண்டு மணி நேர முழு பொழுது போக்குக்கு இப்படம் காரண்டி.

இரண்டாவது படம் - Five Man Army 
இதுவும் கிட்டத்தட்ட முந்தய படம் மாதிரிதான். ஆனால் இது சிறைக்குள் இல்லாமல் வெளியே செய்யும் சாகசங்கள். முதலில் கதையை சொல்லி விடுகிறேன்.

மெக்ஸிகோவில் அரசுக்கு எதிராக புரட்சி நடந்த காலகட்டத்தில் நடந்ததாக காட்டபடுகிறது இப்படம். புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு டச்சுக்காரர், ஆயுதம் வாங்க பணம் இல்லாததால், தங்கம் கொண்டு செல்லும் ஒரு ரயிலை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். அந்த ரயிலை கொள்ளை அடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தங்கம் இருக்கும் பெட்டிக்கு இருபுறமும், இரண்டு பெட்டிகளில் ஆயுதம் தாங்கிய வீரர்கள். அது போக ஒரு பெட்டி திறந்த வெளியாக இருக்கும். அதிலும் வீரர்கள். ரயில் செல்லும் வழியெங்கும் அவ்வப்போது வீரர்கள் தென்படுவார்கள். அவர்களிடம் ரயிலில் இருக்கும் வீரர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல கை அசைக்க வேண்டும். இல்லையேல் வண்டி நிறுத்தப்படும். இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி கொள்ளை அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு உறுதுணையாக நான்கு பேரை துணைக்கு அழைக்கிறார் டச்சுக்காரர். ஒவ்வொருவரும் ஒரு தொழில் தெரிந்தவர்கள். இந்த ஐந்து பெரும் சேர்ந்து எப்படி தங்கத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பின் என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பாக சொல்கிறது இப்படம்.


மின்னல் வேக திரைக்கதை என்றால் என்ன என்று இப்படத்தை பார்த்தால் புரியும். ஒரு நிமிடம் கூட கண்கள் திரையை விட்டு அகல மறுக்கும். இத்தனைக்கும் படத்தின் இடையில் ஒரு அரை மணி நேரத்துக்கு எந்த வசனமோ, இசையோ கிடையாது. ரயில் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும். என்னவோ நாமும் அந்த ரயிலில் பயணம் செய்வது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். என் நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தேன். படம் செல்ல செல்ல ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் (என்னையும் சேர்த்துதான்) எங்களை அறியாமலே ரயிலில் செல்வது போல பாவனை செய்து கொண்டிருந்தோம். வீடியோ கேம் விளையாடும்போது, கார் ரேசில் வண்டி திரும்பும் போதெல்லாம் நாமும் காருடன் சேர்ந்து இரண்டு பக்கமும் சாய்வோமே அது போல. 

படத்தில் வரும் ஐந்து பெரும் தங்களின் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி உள்ளார்கள் . அதிலும் முரடனாக வரும் பட்ஸ்பென்சர் சிறப்பாக செய்திருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1970. இயக்குனர்கள் டான் டெய்லர்  மற்றும் இடலோ ஜிங்கரெளி. படம் முதலில் வெளிவந்தது இத்தாலிய மொழியில்தான். பிறகு ஆங்கிலத்தில். 

உங்களுக்கு பொழுதுபோக வேண்டும், படம் உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றால் நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் பார்க்கலாம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்கள பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

March 11, 2010

என்னை கலங்க வைத்த படம் - Schindler's List



நாம் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். சில படங்கள் நாம் தியேட்டரை  விட்டு வெளியே வந்ததும் மறந்து விடும். சில படங்கள் நம் மனதை கலங்கடித்து விடும். சில படங்கள் நம் மனதில் நிலைத்து விடும். அப்படி பட்ட படம் தான் Schindler's List. 




                    ஒரிஜினல் ஷிண்ட்லர்                                         லியம் நீசன் ஷிண்ட்லராக  

இந்த படம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். 1939 ஆம் ஆண்டு நடந்த போலிஷ் யூதர்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாத்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே இந்த படம். 

படத்தின் கதை இதுதான். போலிஷ் யூதர்கள் நாஜிக்களால் கொத்து கொத்தாக ஈவு இரக்கமின்றி கொல்ல படுகிறார்கள். இது வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாது. இதனை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. எதிர்த்தால் என்ன நடக்கும் என்றும் தெரியும். இதற்கிடையே ஆஸ்கர் ஷிண்ட்லர் என்னும் ஜெர்மானியர், பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு தொழிற்சாலை தொடங்க அனுமதி வாங்குகிறார். கொல்வதற்காக கொண்டு செல்லப்படும் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமையாக தொழிற்சாலையில் வேலைக்கு சேர்க்கிறார் ஷிண்ட்லர். இதற்க்கு ராணுவமும் அனுமதி வழங்குகிறது. அவர்களை பொறுத்தவரை யூதர்கள் அடிமையாகத்தானே இருக்கிறார்கள் என்ற எண்ணம். ஆனால் ஷிண்ட்லர் அவர்களை வேலைக்கு சேர்த்தது அடிமையாக்க அல்ல. படு கொலையில் இருந்து காப்பதற்கு. யூதர்கள் சந்தோசமாக வேலை பார்க்கிறார்கள். இதற்கிடையே இரண்டாம் உலகப்போர் முடிவடைகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமையாக வைத்திருந்த காரணத்தால் ஷிண்ட்லரும் ஒரு நாஜி குற்றவாளிதான். எனவே எந்நேரமும் ரஷ்ய படையால் கொல்லப்படலாம் என்ற நிலை வருகிறது. அவர் தனது தொழிலாளர்களை விட்டு ஓட வேண்டும். யூதர்கள் அவருக்கு பிரியா விடை கொடுக்கிறார்கள்.


படத்தில் ஷிண்ட்லராக நடித்திருப்பவர் லியம் நீசன். அலட்டல் இல்லாத ஒரு தொழிலதிபராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். யூதர்களை காக்க வேண்டும் ஆனால், அதனை தன் முகத்தில் காட்டக்கூடாது. எப்பொழுதும் ஆணவம் நிறைந்த ஒரு ஜெர்மானியன் மாதிரி நடந்து கொள்வார். எந்த ஒரு கணத்திலும் யூதர்களுக்கு ஆதரவாக இருப்பதாக யூதர்களுக்கே தெரியாமல் பார்த்துக்கொள்வார். 

படத்தில் குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம் அமன் கோயத். இந்த பாத்திரத்தில் நடித்திருப்பார் ரால்ப் பீன்ஸ். அதெப்படி ஆங்கில படங்களில் மட்டும் வில்லன்கள் பாத்திரம் கதாநாயகனை விட படு நேர்த்தியாக அமைக்கப்படுகிறது?  அமன் கோயத் ஒரு நாஜி. ஷிண்ட்லரின் நண்பர். அவரின் வேலை யூதர்களை கொல்வது. வித விதமாக கொல்வது எப்படி என்று தன் ஆட்களுக்கு ஆணையிடுவது, துப்பாக்கி வேலை பார்க்கிறதா என்று சரி பார்க்க ஒரு யூதனை கொல்வது என்று மனிதர் கொன்னுட்டார். முகத்தில் தெரியும் கொலை வெறி. நாம் படம் பார்க்கும் பொது உண்மையிலேயே இவரை கொலைகாரர் என்று பலர் ஏக வசனத்தில் திட்டுவார். நடிக்கவில்லை. வாழ்ந்த்திருக்கிறார். 



படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நடிகர்கள். ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள். படத்தில் திடுக்கிட வைக்கும், நெஞ்சை பாரமாக்கும், மனதை கலங்கடிக்கும் காட்சிகள் ஏராளம். அவற்றுள் சில

1. ஒரே சமயத்தில் சுமார் 10000  யூதர்களை கொன்று எரிக்கும் இடத்தில் இருந்து எழும் சாம்பல் அந்த ஊரையே பனி போல் சூழ்ந்து கொள்ளும். எரிக்கும் இடத்தில் இருக்கும் ராணுவ அதிகாரிகளின் வெறி பிடித்த ஆர்ப்பாட்டம் நம்மை திடுக்கிட வைக்கிறது. 


2. சில சிறுவர்கள் சிறையில் இருந்து தப்பி ஒரு மலக்குழிக்குள்(septic tank) நாள் முழுவதும் இருப்பதாக காட்டுவார்கள். மேலும் நூற்றுக்கணக்கான யூத பெண்கள் முடி வெட்டப்பட்டு குளியல் அறைக்கு  கொண்டு செல்ல படுவார்கள். குளியல் அரை என்றால் தனியாக அல்ல. ஒரு பெரிய ஹாலில் ஏகப்பட்ட ஷவர்கள் பொருத்தபட்டிருக்கும். பொதுவாக அப்படி ஒரே ரூமில் அடைக்கப்பட்டால் ஷவரில் இருந்து வருவது தண்ணீராக இருக்காது, விஷ வாயுவாகத்தான் இருக்கும். எனவே கண்ணீருடன் எல்லா பெண்களும் சாவை எதிர் பார்த்து இருப்பார்கள். திடீரென அனைத்து ஷவரில் இருந்தும் தண்ணீர் பீச்சி அடிக்கும். எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் ஓ என அலறுவார்கள். நம் மனம் பதை பதைக்கும். 

3. ஆத்திரத்தில் கோயத் ஒரு தொழிலாளியை மண்டியிட வைத்து தலையில் சுடுவார். ஆனால் துப்பாக்கி சுடாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து முறை சுட்டும் துப்பாக்கி சுடாது. அப்போது கோயத்தின் முகத்தில் கொலை வெறியும், அந்த தொழிலாளி முகத்தில் சாவை எதிர்கொள்ளும் திகிலான கலக்கமும் நம் மனதை பிசையும். 

இந்த மாதிரி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ...

படத்தில் குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்

இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், படம் வெளி வந்த ஆண்டு 1993. படம் முழுவதும் கருப்பு வெள்ளைதான். நிகழ்கால காட்ச்சிகள் எல்லாம் வண்ணத்தில். இந்த படம் ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் தலை சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. ஒரு விஷயம். படம் ரொம்ப நீ.....ளமானது. மூன்றே கால் மணிநேரம். படம் பார்க்க நிறைய பொறுமை தேவை. படத்தை பார்க்கும் போது படத்தில் இருக்கும் பல காட்சிகளை நிறைய தமிழ் படங்களில் பார்த்தது போல இருக்கும் (நம்ம இயக்குனர்கள் அசகாய சூரர்கள்). 

நேரம் கிடைத்தால் கண்டிப்பா பாருங்க... 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
பிடிக்கலைனாலும் கருத்து தெரிவிங்க...
முழுவதும் படிக்க >>

March 9, 2010

ஹாக்கி இனி மெல்ல சாகும் .....


ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. நாடு முழுவதும் ஐ பி எல் ஜுரம் தொற்றி கொண்டு விட்டது. ஏறக்குறைய எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்த முறை எந்த அணி ஜெயிக்க வாய்ப்புள்ளது, நட்சத்திர வீரர்கள் எதில் அதிகம் என்ற பேச்சுகளும் அதிகம் காதில் விழுகின்றன. கிரிக்கெட் ஒரு விளையாட்டாக கருதப்பட்ட காலம் போய் இப்போது அது ஒரு மதம் ஆகி விட்டது. கிரிக்கெட் பார்க்காதவன், அதற்க்கு எதிராக விமர்சனம் செய்பவன் எல்லாம் தேசதுரோகி என்று கூறும் அளவிற்கு கிரிக்கெட் நம் வாழ்வில் ஒன்றி விட்டது.

கடந்த சில வாரங்களாக பதிவர்களால் அதிகம் அலசப்பட்ட விஷயம் என்னவாக இருக்கும்? நித்தி பிரச்சனை வருவதற்கு முன்? ஆங்... கரெக்டா சொன்னீங்க நம்ம சச்சின் எட்டிய புதிய மைல் கல். சச்சின் 200 ரன்கள் எடுத்ததுதான் எல்லோராலும் பேசப்பட்டது. எல்லா பதிவர்களும் சச்சினை பற்றி எழுதி  புண்ணியம் சம்பாதித்து கொண்டனர். சிலர் சச்சினை விமர்சித்து வாங்கி கட்டியும் கொண்டனர். இதற்கிடையே சச்சின் அந்த மாட்சில் எப்படி எல்லாம் ஆடி அந்த ரன்களை எடுத்தார் என்றும் பலர் தான் ஆராய்ச்சி மூளையை கசக்கி எழுதினர். தோனி என்பவர் எவ்வாறு சச்சினை 200 ரன்கள் எடுக்க விடாமல் நாட்டுக்கு துரோகம் செய்ய முயன்றார், கடந்த காலங்களில் அவருக்கு எதிராக பலர் எவ்வாறு சதி திட்டம் தீட்டினர் என்றும் தன் கற்பனை சக்தியை கொண்டு முடிந்தவரை எழுதி களைத்து விட்டனர். இது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாள் கழித்து பாருங்கள் எல்லா பதிவர்களுக்கும் எழுதுவதற்கு பொதுவான ஒரு விஷயம் ஐ பி எல் தொடர்தான்.  ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வந்து விட்டால் போதும், ஆளுக்கொரு விமர்சனம், அலசல்கள், புள்ளி விபரங்கள், கருத்துக்கள் பதிவுலகமே போட்டி போட்டுக்கொண்டு எழுதும். பதிவுலகம் என்றில்லை பிரபல நாளிதழ்கள் கூட விளையாட்டு மலர் என்று இலவச இணைப்பு போட்டு விட்டு, பெரும்பாலும் கிரிக்கெட் செய்திகள் தான் வெளியிடும். 

அது சரி... கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா? இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து ஆம் என்ற பதில் தான் ஒவ்வொரு இந்தியன் வாயில் இருந்து வரும். கிரிக்கெட்டில் தோற்றால் ஒரு இந்தியனுக்கு மான பிரச்சனை. அவனால் வெளியில் தலை காட்ட முடியாது. தன் பேவரிட் சச்சினோ, சேவாக்கோ டக் அவுட் ஆனால் சாப்பாடு இறங்காது. ஒவ்வொரு உலக கோப்பை தொடரிலும் நமது அணியின்  மோசமான செயல்பாட்டால் ரசிகர்கள் அவர்கள் வீட்டை தாக்குவது போன்ற அதிகப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர். 2007 உலக கோப்பை போட்டியில் நடந்தது அனைவரும் அறிந்ததே. 

சரி முந்தாநாள் உலக கோப்பை ஹாக்கியில் நமது பாரம்பரியம் மிக்க இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதே, அதை யாராவது கண்டு கொண்டோமா? உள்நாட்டில்,அதுவும்  தலை நகரத்தில் நடக்கும் இந்த தொடரில், ஒரே ஒரு ஆட்டம் தவிர, மற்ற எதிலும் நம் அணியால் வெற்றி பெற முடியவில்லையே?  சச்சினுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் பொங்கி எழும் நாம் சம்பள பாக்கி கூட தராமல் இழுத்தடிக்கப்படும் ஹாக்கி அணியை திரும்பி கூட பார்க்கவில்லையே ஏன்? நான் சச்சினை குறை சொல்லவில்லை.  இவற்றை கவனிக்கும் நாளைய சமுதாயத்தின் மனதில் ஒரு ஆழமான கருத்தை விதைக்கிறோம். கிரிக்கெட் விளையாடினால் முதல் மாத சம்பளமே அரை லட்சம். (பார்த்திவ் படேல் ஒரு தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல், அணியில் இடம் பெற்ற  ஒரே   காரணத்துக்காக லட்சக்கணக்கில் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே)  

நான் கடந்த ஒரு வாரமாக நடக்கும் ஹாக்கி போட்டிகளை கவனித்து வருகிறேன். அதில் நாம் வீர்கள் விளையாடும் போது ஒரு விதமான சோகமே மனதில் எழுந்தது. பந்தை விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வீரனின் மனநிலை என்னவாக இருக்கும்? "ஒரு வேளை நான் கிரிக்கெட் ஆடி இருந்தால் இந்நேரம் என்னை ஐ பி எல் இல் ஏலம் எடுத்து இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம்" என்று நினைத்தபடி ஆடி கொண்டிருப்பானோ ? என்று எண்ண தோன்றியது. இருக்கலாம். அதில் என்ன தவறு. அது உண்மைதானே. ஆனால் இது ஒரு மோசமான முன்னுதாரணம். இப்படி ஒவ்வொரு வீரனும்  எண்ண தொடங்கினால் அதுவே அந்த விளையாட்டின் அழிவுக்கான  ஆரம்பம். இதனை நாம் நம்மை அறியாமலே நம் குழந்தைகள் மனதில் விதைக்கிறோம். முன்பெல்லாம் 5 வயது சிறுவர்களுக்கு பொம்மை வாங்கும் போது ஹாக்கி மட்டையோ இல்லை உதை பந்தோ வாங்குவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் விளையாடும் பொருள் என்றால் அது கிரிக்கெட் பேட்  தான்.

நாம் நமக்கே தெரியாமல் நமது தேசிய விளையாட்டை சாகடித்து கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதோ  விளையாடுவதோ ஒரு தவறே அல்ல. ஆனால் நமக்கு அடுத்து தலை முறையினரிடம் கிரிக்கெட் தவிர்த்து மற்ற எதுவும் விளையாட்டே இல்லை என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அது தான் தவறு . இந்த நிலை இன்னும் தொடர்ந்தால்

ஹாக்கி இனி மெல்ல சாகும் ..... 
முழுவதும் படிக்க >>

March 6, 2010

சாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா?


கடவுளின் பெயரால் காம லீலைகள் நடத்துபவர்கள் பெருகியது யார் குற்றம்? கடவுளின்  குற்றமா? இப்படி ஒரு வசனம் பராசக்தி படத்தில் வரும்.

 ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு சாமியார் பிரச்சனை கிளம்பினால் நம்ம அறிவு ஜீவிகள் கையில் எடுப்பது,    கடவுள் இல்லை என்ற வாதத்தை தான். மக்கள் மூடர்கள், நான்தான் அறிவாளி, என் பேச்சை கேளுங்கள் என்று கிளம்பி விடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெரும் மடத்தனம் தான். என்னை பொறுத்த வரை குற்றங்களுள் பெரும் குற்றம்(பாவங்களுள் பெரும் பாவம் என்றுதான் எழுத நினைத்தேன்) ஒருவன் தவறு செய்யும் போது அவன் செய்ததை குத்தி  காட்டுவது (கவனிக்கவும் சுட்டி காட்டுவது அல்ல), இந்த ஒரு நிகழ்வையே காரணம் காட்டி அவனது வாழ்வாதாரமான அடிப்படை  நம்பிக்கைகளை தகர்க்க முயற்சி செய்வது, அல்லது அவனது இழி நிலையை பயன்படுத்தி தன் பக்கம் இழுப்பது. இதை யார் செய்தாலும்  அது குற்றம் தான். அது ஆத்திகனோ நாத்திகனோ, எந்த மதத்தை சார்ந்தவனோ, அல்லது மதம் சாராமல் தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்பவனோ இதற்கு விதி விலக்கல்ல.

மதம் என்பது பாதை தானே ஒழிய ஒரு சங்கமோ, அமைப்போ, கட்சியோ அல்ல. அதை பின்பற்றுபவன் மனிதன்தானே ஒழிய அவன் அந்த மதத்தின் உறுப்பினர் அல்ல. வழிபாடு, சடங்கு போன்றவை எல்லாம் ஒரு ஆத்மா திருப்திக்காகவே செய்யப்படுகிறது. இவற்றை செய்யவில்லை என்றால் கடவுள் ஒன்றும் கோபித்துக்கொள்ள போவதில்லை. உங்கள் நண்பர் திருமணத்திற்கு செல்கிறீர்கள். பரிசுப்பொருள் வாங்கி செல்கிறீர்கள். நீங்கள் பரிசுப்பொருள் வாங்கி செல்லா விட்டாலும் அவர் ஒன்றும் கோபித்து கொள்ள போவதில்லை. பின் ஏன் வாங்கி செல்கிறீர்கள்? ஒரு ஆத்மா திருப்தி. இது ஒரு மொக்கையான உதாரணம் தான். இப்படி நம் வாழ்க்கையில் பல நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடி சென்றால் கடைசியில் மிஞ்சுவது மன அழுத்தம் தான்.  மனசாட்சியுடன் அல்லது தனியாக இருக்கும் போது நம்முடன் நாமே பேசிக்கொண்டிருப்போம் நமக்குள் ஒருவர் இருப்பதாக நினைத்துக்கொண்டு. இது நமக்கு ஒரு வடிகால். இதில் கொண்டு போய் பகுத்தறிவை புகுத்தினால் மனசாட்சியுடன் பேசுவது கூட மூட நம்பிக்கையாகதான் தோன்றும். சில பேர் பிச்சைக்கரர்களுக்கு உதவுவது என்பது அவர்களை சோம்பேறி ஆக்கும் செயல் என்பார்கள். ஆனால் உதவி செய்வது என்பது நல்ல மனதின் வெளிப்பாடு என்றும் சிலர் சொல்வார்கள் . இதில் எதை எடுத்துக்கொள்வது? என்னைக்கேட்டால் இரண்டாவதுதான் சரி. 

சரி நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு பிரச்சனை என்று வந்தால் அதன் பின்னணியை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி திட்டுவது, பின் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே தவறை செய்வது. இது மக்கள் செய்யும் தவறு. இதற்கு அடிப்படை காரணம் சரியான புரிதல் இல்லாமை. அதனை சரி செய்தால் போதும். புலன்களை அடக்க வேண்டும் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆன்மிகம் என்றால் பட்டை பூசி கொள்வது, காவி அணிந்து கொள்வது, கடவுளுக்கு பூஜை செய்வது என்று அர்த்தம் கிடையாது. புலன்களை கடக்க வேண்டும். அதாவது புலன்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டு விட வேண்டும். தும்மல் வந்தால் மனதில் ஒரு புத்துணர்ச்சி கிளம்பும். இதை  பலரும் அனுபவித்திருக்க கூடும்.  ஆனால் அதற்காக நாள் முழுவதும் தும்மல் வரவைத்து அதை அனுபத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? நம் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படும். தும்மல் என்பது எப்படி இயல்பானதோ அதே மாதிரிதான் பாலுணர்வும். அது இயல்பானது. அது ஏற்படும்போது அடக்குவது ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் அதிலேயே உழன்று கிடப்பது அதை விட  ஆபத்தானது. இதைத்தான் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன. 

அறிவியல் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கும் ஒரு பாடம் எதையுமே Define செய்தால் தான் அதை நம்ப முடியும். ஆனால் Define செய்ய முடியாத சில விஷயங்களும் நம்மிடையே உள்ளன. (இதை படித்த உடனே பலருக்கு கோபம் வரும். அப்படி எதுவும் கிடையாது என்று). அறிவியல் அறிஞர்கள் கூட அப்படி பட்ட விஷயங்களுக்கு Let us assume that, என்று கூறுவார்கள். X-ray என்று பெயர் வைக்கப்பட்டது எப்படியோ அதே மாதிரிதான். Define செய்ய முடியாத ஒன்றுக்கு சொல்லப்படும் பெயர்கள் தான் வேறு. சரி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை வேண்டாம். அதற்க்கு ஒரு பதிவு பத்தாது. 

ஒன்று மட்டும் உறுதி. நம்மை கடவுளிடம் கொண்டு செல்ல யாராலும் முடியாது. அவர் ஒன்றும் சிகரம் அல்ல. அடைவதற்கு. உணர வேண்டும். அதற்க்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. விவேகானந்தர், கடவுளை உனக்குள்ளே தேடு என்றார். தேநீரை சுவைத்து பருகு. தேநீர் கோப்பையை கொண்டாடாதே என்கிறது ஜென் தத்துவம். யார் நல்ல கருத்துக்கள்  சொன்னாலும் கேட்கலாம் தவறில்லை. ஆனால் சொன்னவரை கடவுளாக கொண்டாடுவதுதான் தவறு.  இதை எப்போது நாம் உணருகிறோமோ அப்போது இந்த மாதிரி சாமியார் பிரச்சனைகள் வராது. எந்த சாமியார் பின்னாலும் மக்கள் ஓட மாட்டார்கள்.  

போராட தெரியாதவன் தான் கடவுள் பின்னால் செல்வான் என்று நண்பர் ஒருவர் தன் பதிவில் சொல்லி இருக்கிறார். உண்மை, முற்றிலும் உண்மை. ஆனால் எல்லோருக்கும் அந்த குணம் வந்து விடாதே? எந்த ஒரு செயலும் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் நடக்காது. அது யார் மீது என்பது தான் வேறு படும். போராட தெரியாதவன் கடவுள் பின்னால் சென்றால் தவறில்லை. ஆனால் போராடாமல் கடவுள் பின்னால் செல்வது தான் தவறு. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் கருத்து தெரிவிங்க..

முழுவதும் படிக்க >>

March 2, 2010

நித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி செய்தி.

மீண்டும் ஒரு சாமியார் சர்ச்சை. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. சன் நியூஸ் சேனலில் சற்றுமுன் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதும் மனம் பதறி விட்டது. தத்ரூபமாக அவரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தா. குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும் என்று சொன்னவர். ஒரு ஓட்டல் அறை மாதிரி தெரிகிறது. ஒரு கட்டிலில் ஒரு இளம்பெண்ணுடன் சல்லாபிக்கும் பகிர் காட்சிகள். அந்த பெண் ஒரு நடிகை என்று சொல்கிறார்கள். R  என்ற எழுத்தில் தொடங்கும் நடிகை என்று clue வேறு தருகிறார்கள். நான் ஓரளவிற்கு கண்டு பிடித்து விட்டேன். கருப்பாக உயரமாக இருக்கிறார். பாரதிராஜா பட நாயகி என்று நினைக்கிறேன். உண்மை முழுவதும் தெரிவதற்குள் பெயர் சொல்வது சரியாகாது. 

அட போங்கடா யாரையுமே நம்ப முடியல. நடிகை முகம் காட்ட படவில்லை என்றாலும் சாமியார் முகம் தெளிவாக தெரிகிறது. ஆன்மீகத்தை வெளியே தேடாதே. உனக்குள் தேடு என்று விவேகானந்தர் சொன்னது ஞாபகம் வருகிறது. மக்களே இனியாவது திருந்துங்கள். இது பற்றி இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகத்தில் கும்முவார்கள்.  அப்போது நானும் சேர்ந்துக்கிறேன் 

யார் எப்படி போன என்ன. நமக்கு நம்ம கவலைதான் முக்கியம்.  மறக்காம ஓட்டு போடுங்க. உங்க கருத்துக்கள தெரிவிங்க. சாமியார்கள் பின்னாடி மக்கள் ஓடுவது பற்றி உங்கள் கருத்து என்ன. இது தவறா? இல்ல ஒரு சில பேர் தப்பானவன்களா இருக்கலாம் அதுக்காக எல்லா சாமியார்களையும் அப்படி சொல்ல கூடாது என்கிறீர்களா? 
முழுவதும் படிக்க >>

எனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly


நான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன்.  எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது.   அங்கு பெரும்பாலும் ஆங்கில  படங்கள் மட்டுமே திரை இடப்படும். எனக்கு விவரம் (சினிமா பார்த்து கதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு) தெரிந்த நாள் முதல் பார்த்த படங்கள் ஏராளம். இதன் பின் டிவி சேனல்கள் வந்த பின் பெரும்பாலும் பொழுது ஸ்டார் மூவிஸ், HBO, போன்ற சேனல்களில் தான்  கழியும். முதலில் சண்டைக்காட்சிகளுக்காக, பின் கிளு கிளு காட்சிகளுக்காக , பின் கதைக்காக, பின் மேக்கிங்குக்காக என என் ரசிப்புத்தன்மை பல மாற்றங்கள் அடைந்துள்ளன. நான் ஒன்றும் பெரிய உலக திரைப்பட விமர்சக வித்தகன் கிடையாது. ஒரு சராசரி ரசிகனின் பார்வையிலேயே படங்களை பார்ப்பேன்.   இப்போதெல்லாம் அண்ணன் ஹாலிவுட் பாலா  மாதிரி ஆட்கள் உதவியுடன் படங்கள் பார்க்க தொடங்கி உள்ளேன். பல படங்கள் பார்த்தாலும் நினைவில் நிற்கும் படங்கள் கொஞ்சம் தான். அவற்றை பற்றி என் பார்வையில் எழுதலாம் என்று கருதியே எழுதுகிறேன். 

எனக்கு சிறு வயது முதல் கௌபாய் படங்கள் என்றால் பிடிக்கும். அவர்கள் உடுத்தும் ஸ்டைல், துப்பாக்கியால் சுடும் லாவகம் எல்லாம் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் அந்த படங்களின் கதை புரியாமல் பார்த்ததுண்டு. பின் பெரியவன் ஆனதும் வெகு நாட்கள் இடைவெளியில் நான் பார்த்த படம் தான் The Good, the Bad, and the Ugly. முதல் முறையாக கதை புரிந்து பார்த்த படம். படம் வெளி வந்த ஆண்டு 1965. கதை சுருக்கம் இதுதான்.


படத்தில் மூன்று ஹீரோக்கள். ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வைத்துதான் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ப்லோண்டி நல்ல(?) திருடன் - the Good, 
எஞ்சேல் ஐஸ் கெட்ட திருடன் -  the Bad, 
டுகோ கேவலமான திருடன் - the Ugly. 

இந்த மூவரில் ப்லோண்டியும், டுகோவும் சந்தர்ப்பவாத நண்பர்கள்.  நேரம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் மாட்டி விடும் எண்ணத்தில் இருப்பவர்கள். இருவரும் ஒரு ராணுவ வீரனின் மரண வாக்கு மூலமாக ஒரு புதையல் இருக்கும் இடத்தை அறிந்து அதை எடுக்க செல்கின்றனர். டுகோ எல்லா பணத்தையும் தானே அடைய நினைக்கிறான். ஆனால் அவனுக்கு புதையலை அடைய பாதி வழிதான் தெரியும். இன்னொரு பாதி ப்லோண்டிக்குதான் தெரியும். எனவே புதையலை அடைந்தவுடன் அவனை தீர்த்து விடலாம் என்று நினைக்கிறான் டுகோ. இதற்க்கிடைய எஞ்சேல் ஐஸ் என்னும் முன்னால் ராணுவ வீரன் அந்த புதையல் இருக்கும் இடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அவனும் புதையலை நோக்கி பயணிக்கிறான். இந்த மூவரும் சரியாக புதையல் இருக்கும் இடத்தில் சந்திக்கிறார்கள். புதையலை யார் அடைந்தார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ். 


படத்தில் ப்லோண்டியாக நடித்திருப்பவர் நம்ம கிளின்ட் ஈஸ்ட்வூட். இவர் வாயில் சுருட்டு வைத்திருக்கும் தோரணையும், கண்களை சுருக்கி விடும் தெனாவெட்டான லுக்கும், சரியான மேன்லியான ஹீரோ. எதையுமே நிதானமாக, புத்திசாலிதனமாக செய்யும் ஹீரோ.  







எஞ்சேல் ஐஸ்ஆக நடித்திருப்பவர் லீ வான் கிளீப். ஆளை பார்த்தாலே கள்ளத்தனம் நிறைந்தத ஒரு ஓநாயின் குணம் தெரியும்.  அப்படியே ப்லோண்டியின் குணம். ஆனால் செயலில் ஒரு கொடூரம் இருக்கும். நேர்வழி ஒத்து வராது. குறுக்கே யார் வந்தாலும் போட்டு தள்ளி விட்டு போய் கொண்டே இருப்பான். முதல் காட்சியில் இவரின் குணாதிசயத்தை கட்டும் விதமாக வரும் காட்சியே சான்று (மூன்று பேருக்கும் அவரவர்  குணாதிசயத்தை காட்டும் காட்சி உண்டு) .





படத்தில் பட்டய கிளப்பியிருக்கும் ஒரு பாத்திரம் என்றால் அது டுகோ தான். டுகோவாக நடித்திருப்பவர் எலி வாலாச். எதையுமே முந்திரி கொட்டை மாதிரி அவசரப்பட்டு செய்து விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரு திருடன். எவ்வளவு தான் கேவலப்பட்டாலும் அதை சிறிதும் முகத்தில் காட்டிகொள்ளாமல் கேவலப்படுத்தியவர்களை அவர்கள் முதுகுக்கு பின்னாடி கெட்ட வார்த்தையால் திட்டுபவன்.  இவர் ஒவ்வொரு முறையும் ப்லோண்டியிடம் எதாவது சில்மிஷம் செய்து கடைசியில் அது இவருக்கே வினையாக முடிவது சுவாரசியம். 




படத்தில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் 

1. படத்தின் இசை. எனியோ மோர்ரிகோனே இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ஒரு விசில் சப்தம் உலக பிரசித்தம். இப்போதும் பல கௌபாய் படங்களில் அந்த சப்தம் பயன் படுகிறது. படத்தில் வரும் அமானுஷ்யமான அமைதி படதிர்ற்கு வலு சேர்க்கிறது. 

2. படத்தில் ஒரு தூக்கு கயிறு ஒரு கதா பாத்திரமாக வரும்.  ப்லோன்டிக்கும் டுகோவிற்கும் நடுவே உள்ள நட்பின் சின்னமாக இந்த கயிறு வரும். 

3. படத்தில் பெண்களே இல்லை(அய்யய்யோ). ஒரே ஒரு பெண் வருவார். அவரும் ஒரு நிமிடம் மட்டுமே.

4. படத்தின் இயக்குனர் செர்ஜியோ லெயோன் இத்தாலியை சார்ந்தவர். ஸ்டைலிஷ்ஆன கௌ பாய் படங்கள் எடுத்தவர். இந்த படம் அவர் எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று போற்ற பட்டது. 

5. படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் (uncut version மூன்று மணி நேரம்). இவ்வளவு நீளமான ஒரு படத்தை பொறுமையாக பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தை உடைத்த படம் என்று பல விமர்சகர்களால் பாராட்ட பட்ட படம். 

6. படத்தின் கிளைமாக்ஸ் கல்லறை காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுவாரசியமானவை. அதுவும் கடைசியில் டுகோவை தூக்கு கயிற்றில் மாட்டிவிட்டு ப்லோண்டி செல்லும் காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நேரம் கிடைத்தால் பாருங்கள். 

பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க. 
உங்க கருத்த இங்க பதிவு பண்ணுங்க.  
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...