விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 21, 2012

வெட்டி அரட்டை - ஆதீனம்.... ஐ(யய்யோ)பி‌எல்


இது உண்மையா பொய்யா?
சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட்டும், மல்யுத்தமும் மிகவும் பிடித்தவை. இங்கே மல்யுத்தம் என்று நான் குறிப்பிடுவது WWF என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களே அதைத்தான். கிரிக்கெட் புரிய ஆரம்பித்த வயதில் இருந்தே மல்யுத்ததையும் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டேன். அதில் வரும் வீரர்கள், அவர்கள் களத்தில் நுழையும்போது ஒலிக்கப்படும் இசை என்று ஒவ்வொன்றையும் ரசித்தேன். பதின்ம வயது வரை கூட அதில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றே நம்பி வந்தேன். வீரர்கள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் காரசாரமாக திட்டிக்கொள்வது, அவர்கள் அணிக்குள்ளாகவே துரோகம் செய்து கொள்வது, உணர்ச்சி மிக்க தருணங்களுள் கண்ணீர் ததும்ப அழுவது, என்று அனைத்து இளம் ரசிகர்களையும் கட்டிப்போடும் ஒரு விளையாட்டு அது.

இன்றும் ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே போகும் ஒரு விளையாட்டு இந்த மல்யுத்தம்தான். இந்த விளையாட்டின் சிறப்பம்சமே, முதலில் மந்தகதியில் தொடங்கி, முடிவு நெருங்க, நெருங்க, இருக்கை நுனிக்கே நம்மை வரவைத்து விடுவார்கள். எந்த நேரத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்லவே முடியாத அளவுக்கு த்ரில்லிங்காக இருக்கும். வாரா வாரம் நடக்கும் இந்த விளையாட்டின் முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமோ, அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நடக்கும். அதிலும் உச்ச கட்டமாக, ரஸ்ல்மேனியா(Wrestle Mania) என்று ஒரு போட்டி வருடத்துக்கு ஒருமுறை நடக்கும். இது கிட்டத்தட்ட உலகக்கோப்பை போல மொத்த சுவாரசியங்களின் அம்சமாக இருக்கும். 

இதற்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரெக்கார்டுகளை தானே முறியடித்து வருகிறது. இந்த போட்டியில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சில வீரர்களை பாத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வரலாற்றை போலவே இதிலும் கெட்டவர்கள் கையே ஓங்கி இருக்கும். நல்லவர்கள் பெரும்பாலும் தோற்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கெட்டவர்களின் ஒட்டுமொத்த வெற்றிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நல்லவர்களின் ஒரே ஒரு வெற்றி அமைத்து விடும். அந்த நேரத்தில் ஏற்படும் உணர்ச்சி பெருக்குக்கு அளவே கிடையாது. கவர்ச்சிக்கும் கிளுகிளுப்புக்கும் கூட இதில் பஞ்சமில்லை. சில நேரங்களில் ஹாலிவுட் நடிகர்கள் கூட இந்த அரங்குகளில் தோன்றியிருக்கிறார்கள்.

பதின்ம வயதை கடக்கும்போதுதான், இவை அனைத்தும் உட்டாலக்கடி என்பதை புரிந்து கொண்டேன். வீரர்கள் வாங்கும் அடி அனைத்தும் உண்மை. ஆனால் அதில் நடக்கும் துரோகம், பழிவாங்கல், ஆக்ரோஷம், ஆனந்தம் அனைத்தும் பொய் என்பதை உணர்ந்து கொண்டேன். இவை அனைத்தையும் புரிந்து கொண்டாலும், ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியாது. என்னால் மட்டுமல்ல, பெரும்பாலானோர்களால் அது முடியாது. ஏனென்றால் நல்லவர்கள் அரிதாகத்தான் இதில் ஜெயிப்பார்கள். 

ஒரு வீரர் இன்னொரு வீரரை தாக்கும்போது, அவருக்கு குறைந்த பட்ச வலி ஏற்படுவது போலவே தாக்குகிறார், அடி வாங்கியவர் அதிக பட்ச வலி ஏற்பட்டதைப்போல நடிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதே போல எல்லா போட்டிகளின் முடிவையும் முதலிலேயே நிர்ணயித்து விடுவார்கள், பிறகு அதன் சுவாரசியத்தை கூட்ட நிறைய அம்சங்களை சேர்ப்பார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என்னதான் இவர்களைப்பற்றி புரிந்து கொண்டாலும், இதை இன்றும் நான் ரசிப்பதை என்னால் மறுக்க முடியாது. ஒரு அதிரடி சினிமா போல, சுவாரசியமாக இருப்பதால் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஒரே வித்தியாசம், முன்பெல்லாம் உணர்ச்சி பொங்க பார்த்தேன். இப்போதெல்லாம் சும்மா ஜாலிக்காக பார்க்கிறேன். யார் ஜெயித்தாலும், தோற்றாலும் வருத்தம் ஏற்படுவதில்லை. 

உலகளவில், ஒலிம்பிக் போட்டிகளில் நடக்கும் மல்யுத்தத்துக்கும், இதற்கு துளியளவும் சம்பந்தமே இல்லை என்றாலும், “இது அந்த மல்யுத்தம் அல்ல, ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் வேறொரு விளையாட்டு.” என்று மனதுக்கு பழகி விட்டது.

“சரி, இப்போ எதுக்கு இத்தனை விஷயங்களை பேசுகிறாய்?” என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள கட்டுரையை எழுதி முடித்தபின் மல்யுத்தம் என்ற வார்த்தைக்கு பதில் கிரிக்கெட் என்றும், WWF என்ற வார்த்தைக்கு பதில் ஐ‌பி‌எல் என்றும் மாற்றி எழுதினாலும் என் எண்ணத்தின் வெளிப்பாடு அப்படியே பொருந்துகிறது. ஆமாம் ஐ‌பி‌எல் உண்மையான கிரிக்கெட் அல்ல. ஆனாலும் ஐ‌பி‌எல் எனக்கு சுவாரசியமாகவே இருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் சென்னை மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற ரீதியில் ஐ‌பி‌எல் போட்டிகளை பார்ப்பேன். இப்போது, யார் ஜெயித்தாலும் பரவாயில்லை, அந்த மூன்று மணிநேர சுவாரசியத்துக்காக மட்டுமே பார்க்கிறேன். 

சும்மா சொல்லக்கூடாது இந்த வருடம், முன்னெப்போதும் பொலில்லாமல், சர்ச்சைகளுக்கும், சுவாரசியங்களுக்கும் பஞ்சமே இல்லை. லீக் ஆட்டத்தின் கடைசி தினம் வரை, அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போகும் அணிகள் எவை என்பதை மர்மமாகவே மெயிண்டேயின் செய்தது மிக அருமை. என்னை பொறுத்தவரை இது கிரிக்கெட் அல்ல. கிரிக்கெட் போலவே நடத்திக்காட்டப்படும் ஒரு சுவாரசிய தனியார் ரியாலிட்டி ஷோ.

'ஆ'.... தீனமும் சில அல்பைகளும்
இப்போது ஊடகங்களின் ஹாட் டாபிக், மதுரை ஆதீனம் குறித்த சர்ச்சைதான். என்னை பொறுத்தவரை ஒரு சமய சங்கம் என்பது அந்த குறிப்பிட்ட சமயத்தின் சேவைமையமாக செயல் பட வேண்டும். அந்த சமயத்தின் அடிப்படை விஷயங்களை எல்லோருக்கும் எடுத்து கூறவேண்டும். இந்து மாதத்தின் அடிப்படையே, ‘தான்’ என்ற அகங்காரத்தை விட்டோழிப்பதுதான். அதை நோக்கியே அனைவரும் பயணம் செய்ய வேண்டும். ஆனால் முன்னாள் ஆதீனமும், இந்நாள் ஆதீனமும் பேசும் பேச்சுக்களை பார்த்தால், “நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். வாயை மூடிட்டு போங்கடா வெண்ணைகளா…”, என்பது போல இருக்கிறது. இது அகங்காரத்தின் உச்சம். 

இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னும் இவர்களின் பின்னால் செல்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை. நித்தி அந்த தப்பு செய்தார் இந்த தப்பு செய்தார் என்பதை குறித்து சர்ச்சை எழுப்ப தேவை இல்லை. எப்போது ‘தான்’ என்று நினைக்க தொடங்கி விட்டாரோ அப்போதே அவரும் ஒரு சாதாரண மனிதரே. அவர்கள் சாமியார்கள் அல்ல. சமய சங்கத்தலைவர்கள். அவ்வளவே....

இது இப்படி இருக்க, இதை வைத்து சில நண்பர்கள் இந்து மதத்தையே இழிவு படுத்தும் நோக்கில் எழுதி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன்பே சொன்னது போல ஒரே ஒருவரை வைத்து ஒரு ஒட்டுமொத்த சமுதாயமும் மதிப்பிடப்படுமானால் அதற்கு இரண்டே காரணங்களாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவரது அறியாமை காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட இந்த விஷயத்தில் போதிய அறிவு இல்லாமையே இப்படி நினைக்க, பேச, எழுத, காரணமாக இருக்கும். மற்றொன்று விஷமத்தனம். அதாவது வேண்டுமென்றே ஒன்றை பழிப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்கும்போது, இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு பழிப்பது. இது இந்து மதத்துக்கு மட்டும் நடக்கும் விஷயமல்ல. அந்தந்த கால கட்டத்தில் எல்லா பிரிவினருக்கும் நடப்பதுதான். இப்போது இங்கே நடக்கிறது.

நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?
மாவோயிஸ்டுகள். இந்த பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு உத்வேகம் பிறப்பதை விட சமீபகாலமாக வெறுப்பே ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து, அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து அவர்களைக் காப்பதற்காக உருவான ஒரு அமைப்பு என்பது மாறி, “எங்கே மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய் விடுவார்களோ?” என்கிற எண்ணம் இந்த மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்டு விட்டோதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அரசாங்கம் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது காட்டும் வெறுப்பையே இவர்கள் ஏனைய மக்களிடம் காட்டுவது போல தெரிகிறது. 

கலெக்டர் கடத்தல், ரயிலுக்கு குண்டு வைத்தது என்று தங்களை இப்போது மக்கள் விரோத சக்திகளாக காட்டத்தொடங்கி இருக்கிறார்கள் இந்த மாவோயிஸ்டுகள். இவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா, ஒபியம் முதலியவற்றையும் பயிரிடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இது இப்படி இருக்க, இவர்களைப்பற்றி இன்னுமும் சிலர் வெக்கமில்லாமல், கலெக்டர் கடத்தல் முதற்கொண்டு இவர்கள் செய்வது சரி என்பது போல எழுதி வருவது கடுப்பை கிளப்புகிறது.

மேலே நான் கூறி உள்ள எல்லா செய்திகளுக்குள்ளும் ஒழிந்திருப்பது ஒரே கருத்துதான். எந்த ஒரு விஷயமும் அது எந்த காரணத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதை விட்டு தடம் மாறி போக தொடங்கும்போது, நிச்சயமாக மக்கள் மத்தியில் மதிப்பை இழக்க தொடங்குகின்றன. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, சமய அமைப்பாக இருந்தாலும் சரி, வலைத்தளமாக இருந்தாலும் சரி, தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் சரி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

May 17, 2012

கனவுக்கன்னி - 1 (15+)

நமது புராணங்களிலும் சரி படைப்புகளிலும் சரி சிருங்கார ரசம் என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட்டே வந்திருக்கிறது. விளக்கமாக சொல்வதாக இருந்தால், நூறு பக்கத்தில் ஒரு படைப்பு எழுதப்பட்டால் அதில் பாதி பக்கங்களுக்கும் மேலே அதில் வரும் பெண்களை வர்ணிப்பதிலேயே செலவளிக்கப்படுகின்றன. ஆக எல்லா படைப்புகளுமே காதல், காமத்தை தொட்டு செல்ல தவறுவதில்லை. இத்தகைய விஷயங்களை ஏட்டில் படைக்கும்போது இருக்கும் சிரமங்களை விட அதை தெருக்கூத்தாகவோ, நாடகமாகவோ, திரைப்படமாகவோ காட்சிப்படுத்தும்போது அதிக சிரமம் இருக்கிறது. காரணம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. எழுத்தாளர் எழுத்தாக வடிக்கும்போது அது குறித்த கற்பனையை படிப்பவரிடமே விட்டு விடுகிறார். ஆனால் காட்சி படுத்தும்போது உண்மையிலேயே நடப்பதால், அது சிலரை திடுக்கிட வைக்கலாம், முகம் சுழிக்க வைக்கலாம், நெளிய வைக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி அத்தகைய விஷயங்கள் நாம் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் அரங்கேறியே இருக்கின்றன. சரி எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்று கேட்கிறீர்களா? 

இப்படி பட்ட காட்சிகள் தெருக்கூத்து, நாடகங்களில் அரங்கேறும்போது எவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக திரைப்படங்களில் ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் சினிமாவில் வேண்டுமென்றால் ஒரே காட்சியை எந்த ஆங்கிளில் வேண்டுமானாலும் எடுத்து காட்டி விட முடியும். எவ்வளவு குளோஸ் அப்பிலும் எடுத்து காட்டி விட முடியும். அதே போல திரைப்படங்களின் ரீச் என்பது பட்டி தொட்டிகள் வரை சென்றடையக் கூடியது. சினிமாவில் பெண்கள் தோன்றுவதையே ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட அந்த காலத்தில், கவர்ச்சியாக தோன்றி அதிர வைத்தவர்களும் உண்டு. மனிதனுக்கு பழைய விஷயங்களை அசை போடுவது எப்போதுமே அலாதியானதுதான். அதே ரீதியில் நோஸ்டால்ஜிக்க்காக ஒரு தொடர் எழுத வேண்டும் என்று நினைத்தபோது தோன்றியதே இந்த தொடர். 


அன்றைய இளைஞர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை தூக்கத்தை தொலைக்க காரணமான கவர்ச்சி நடிகைகள் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கண்டிப்பாக இது ஆபாசமான ஒரு தொடர் அல்ல. சில நேரங்களில் ஆபாசத்தை தொடலாம். என்னால் முடிந்த அளவுக்கு தகவல்களை திரட்டி அளிக்க முயற்சி செய்கிறேன். இது குறித்து தகவல்களை தேடினால், நாம் தேடுவது ஒன்று ஆனால் கிடைப்பது விவகாரமான இன்னொன்றாக இருக்கிறது. இந்த தொடரில் எல்லா நடிகைகளைப் பற்றியும் கூறப்போவதில்லை. அப்படி எழுத தொடங்கினால் மிக நீண்ட தொடராகிவிடும். ஆகவே கவர்ச்சியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்களை பற்றி மட்டுமே எழுதப்போகிறான். எப்படி எழுதுவது? எங்கே இருந்து தொடங்குவது? என்று குழப்பமாக இருந்ததால், தமிழ் சினிமாவின் காலகட்டங்களின் அடிப்படையில் பிரித்து எழுதலாம் என்று முடிவு கட்டி இருக்கிறேன். 

1950களில்......... 

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி 

தமிழ் சினிமாவில் 1931 முதல் பேசும் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை தமிழ் சினிமா என்று சொல்வதை விட, தென்னிந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்ற எல்லா மொழி திரைப்படங்களும் சென்னையை மையமாகக்கொண்டே தயாரிக்கப்பட்டன. ஆகவே ஒரே நடிகர்கள் பல்வேறு மொழிகளில் நடிப்பது சர்வ சாதாரணமாக இருந்த கால கட்டம் அது. 1936இல் மூன்றாவது முறையாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட தேவதாஸ் (முதல் முறை ஊமைப்படம், இரண்டாவது முறை பெங்காலி) திரைப்படத்தில் தன்னுடைய பதினான்கு வயதில் அறிமுகமான இப்பெண், 1939இல் பதினேழு வயது இளம்புயலாக தமிழ் திரை உலகில் நுழைந்தார்.


திரைப்படத்தின் பெயர் குமார குலோத்துங்கன். அந்த பெண்ணின் பெயர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயீ. இப்படிசொன்னால் யாருக்கும் தெரியாது. டிஆர் ராஜகுமாரி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வளமான குரல், நடன திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர். முதல் படம் சுமாராக போனாலும் அடுத்த படமான, கச்ச தேவயானி ஹிட் ஆக அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944இல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஹரிதாஸ் வெளியாகி இவரது புகழை உச்சியில் ஏற்றியது. 1944 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம் 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌கே தியாகராஜபாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு கமர்ஷியல் மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப்படமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.  படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான். மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம்.  உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும்சரி டி‌ஆர் ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார்.  அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது. 1948இல் அதை விட பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவர தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆனார். 


தியாகராஜபாகவதர், சின்னப்பா என்று அன்றைய தல தளபதிகளோடு நடித்தவர், அடுத்ததாக வந்த டி‌ஆர் மகாலிங்கத்தோடும் ஜோடி சேர்ந்தார். இவர் டி‌ஆர் ராஜகுமாரியை விட இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.  1940களில் திரையுலகை கலக்கி வந்த இவர், 50களில் திரையுலகை தன் முழு பிடியில் கொண்டு வந்து விட்டார். அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னேறிக்கொண்டிருந்த, எம்‌ஜி‌ஆர், சிவாஜி கணேசன் இருவரோடும் ஜோடி சேர்ந்தார். முத்தாய்ப்பாக மனோகரா படத்தில் சிவாஜி கணேசனுக்கு சித்தியாகவும் நடித்திருப்பார். மனோகராவின் தந்தையை மயக்கி அவரது ஆசை நாயகியாகி ஆட்சியை கைப்பற்றும் வேடத்தில் நடித்தார் இந்த போதை தரும் கண்களுக்கு சொந்தக்காரர். இப்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், உற்று கவனியுங்கள். அவரது உடையலங்காரத்தில் உள்ள கவர்ச்சியை. அதற்கடுத்து வந்த நடிகைகளே அணிய பயந்த பயங்கர லோ கட் ஆடைகளை சர்வ சாதாரணமாக அணிந்திருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி வில்லி ஆனவரும் இவர்தான். ஒரே காலகட்டத்தில் கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் கலக்கியவர். பியு சின்னப்பாவின் பொருத்தமான ஜோடி என்று பலரால் பாராட்டப்பட்டவர். 


ஆர்‌ஆர் பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக திரைப்படக்கம்பெனி தொடங்கி, தன் சகோதரர் டிஆர் ராமண்ணா இயக்க நிறைய படங்களை எடுத்தார். எம்‌ஜி‌ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படத்தை தயாரித்தவர் இவரே. எம்‌ஜி‌ஆரின் மாஸ் ஹிட் படமான குலேபகாவலியை தயாரித்தவரும் இவர்தான். அதே போல தியாகராயநகரில் தியேட்டர் ஒன்றை கட்டி, திரைப்பட நடிகைகளில் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை என்ற பெயரும் பெற்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்து வந்தவர் 1963 ஆம் ஆண்டோடு நடிப்புக்கு முழுக்கு போட்டார். கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.  


 எங்கள் வீட்டருகில் இருக்கும் பெரிசு ஒருவர், "இந்தக்காலத்துல இருக்குறவா எவா நல்ல இருக்கா? டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா? அவ கண்ண பார்த்தாலே போதை ஏறும்." என்று சொல்ல கேட்டிருக்கிறேன். கவர்ச்சி மட்டும் இல்லாமல், நடிப்பிலும் தான் திறமைசாலி என்று நிரூபித்த இந்த பெண், தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இவர் ஒரு தமிழர் என்பதும், இதன் பின் தமிழகத்தை கலக்கிய கவர்ச்சி நடிகைகள் எவரும் தமிழர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த பகுதி
1950களின் இறுதி, வைஜெயந்தி மாலா, ராஜசுலோச்சனா மற்றும் சிலர்..... 

இந்த பதிவு குறித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவியுங்கள்..... 

முழுவதும் படிக்க >>

May 8, 2012

டாக்டருன்னா இளக்காரமா? ரசிகர் ஆவேசம்



நேற்று ரொம்ப சீரியஸான பதிவு எழுதி விட்டதால் இன்றைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். இதை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளவும். அப்புறம் நேற்று நான் எழுதிய பதிவை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி விட்டதாக மெயில் வந்தது. அது சர்ச்சைக்குரிய பதிவு என்பதால் நீக்கி விட்டார்களாம். அது சரி ஒரு மதத்தை தாக்கினாலே விடமாட்டார்கள். எல்லா மதத்தையும் தாக்கினால் விடுவார்களா. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. இனி இந்த மாதிரி கருத்துள்ள பதிவுகள் எழுதும்போது அதை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது போலிருக்கிறது. சரி விடுங்க. இன்றைய பதிவுக்குள் செல்வோம் 













முழுவதும் படிக்க >>

May 7, 2012

மதவெறியன் பேசுகிறேன்.....

பதிவுலகம் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்வது வாடிக்கை. ஆனால் ஒரு சில பிரச்சனைகளுக்கு வருடம் முழுவதும் சீசன்தான். அதில் முக்கியமானது மதங்களைப் பற்றிய பிரச்சனை. முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவில் கூறி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் என் எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த கருத்துக்களை ஏதோ மற்றவர்களுக்கு நாட்டாமை பண்ணுவதற்காக  நான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. சொல்லப்போனால் படித்தவர்களுக்கு நாட்டாமை செய்ய யாராலும் முடியாது. ஏனென்றால் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு தற்கால படித்தவர்களுக்கு பொறுமை கிடையாது என்பதுதான் உண்மை. 


இன உணர்வு குறித்து இதற்கு முன் எழுதிய கட்டுரையில் நான் சில கருத்துக்கள் குறிப்பிட்டிருந்தேன். எந்த உயிரினமுமே இன உணர்வு இல்லாமல் வாழ்ந்து விட முடியாது. சிந்திக்கும் திறன் குன்றிய விலங்குகளே இப்படி என்றால், மனிதன் மட்டும் இதற்கு எப்படி விதி விலக்காக முடியும்? எல்லா மனிதனுக்குமே அவனது அறிவிற்கு ஏற்றபடி இன உணர்வு இருக்கவே செய்யும். இன உணர்வு என்பது, சாதி, மத, இன, மொழி அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூட அவசியம் இல்லை. மிக சிறிய விஷயங்களில் கூட இன உணர்வு தோன்றும். நான் மதுரைக்காரன், நான் பொறியியல் படித்தவன், நான் நாத்திகன் என்று ஏதாவது ஒரு இனத்தோடு நம்மை பொருத்திக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். இது இல்லாமல் வாழவே முடியாது என்பதே உண்மை. 

இது இப்படியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு இனத்தை எப்போது சந்திக்கிறானோ அப்போதே பிரச்சனை தொடங்குகிறது. சமயம் வரும்போது அவனை மட்டம் தட்ட காத்துக் கொண்டிருக்கிறான். சரி விஷயத்துக்கு வருவோம். நடக்கும் விஷயம்  ஒன்றே ஒன்றுதான். ஆனால் அதை பார்க்கும் கண்கள்தான் வித விதமான கலர் கண்ணாடிகளை அணிந்து கொள்கின்றன. பிரச்சனை இங்கேதான் தொடங்குகிறது. நான் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியர் சொன்ன விஷயம். "உன் மதம் சிறந்தது என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. ஆனால் அடுத்தவரின் மதம் மட்டமானது என்று சொல்ல உரிமை கிடையாது." இந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. 

மதத்துக்கும் கடவுளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மதங்கள் கடவுளை உருவாக்கவில்லை. கடவுளும் மதத்தை உருவாக்கவில்லை. கடவுளுக்காக மனிதன் மதத்தை உருவாக்கினான். பின்னர் மனிதனுக்காக மதங்கள் கடவுள்களை உருவாக்கி கொண்டது. என்னை பொறுத்தவரை இருப்பது ஒரே கடவுள்தான். ஆனால் அதை வழிபடும் முறைதான் வெவ்வேறு. அந்த வழிபடும் முறையை தொகுத்து உருவாக்கப்பட்ட வழிமுறைதான் மதம். ஆக கடவுளை வணங்கும் முறையைதான் மதம் என்று சொல்கிறோம். சில மதங்களில் கடவுளை மட்டும் வணங்குகிறார்கள். சில மதங்களில் கடவுளோடு சேர்த்து கடவுளின் அம்சங்களாக கருதப்படும் தூதர்களையும் வணங்குகிறார்கள். அவ்வளவே வித்தியாசம். 


எப்படி ஒரு சில நித்தியானந்தாக்களால் ஒட்டுமொத்த இந்துக்களுமே அயோக்கியர்கள் என்று மதிப்பிட முடியாதோ அதே போல ஒரு சில கசாப்களால் ஒட்டுமொத்த இசுலாமியத்தையும் மதிப்பிட முடியாது. ஆனால் இன்று நடப்பது அதுதான். அடுத்த மதத்தில் ஏதாவது தவறு நடந்து விடாதா? எவனாவது ஒரு அயோக்கியன் மாட்டிக்கொள்ள மாட்டானா? அதை வைத்து அந்த மதத்தில் இருப்பவர்களை இழித்தும், பழித்தும் பரிகாசம் செய்தும் அத்தனை நாள் தனக்குள் இருந்த அந்த மதவெறி பிடித்த மிருகத்தின் பசியை தற்காலிகமாக போக்கி கொள்ள மாட்டோமா? என்று வெறி பிடித்த மிருகமாக அலைகிறார்கள்.  இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு உண்மையான இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ அல்லது வேறு எந்த கடவுளையும் நம்புபவராகவோ இருக்க முடியாது. அடுத்தவனின் பலவீனத்தையும் அவனது இக்கட்டான சூழ்நிலையையும் பயன்படுத்தி, அவனை பரிகாசம் செய்து, நம் கடவுளை வணங்க செய்வது விபசாரத்தை விட கேவலமான ஒரு செய்கை. இப்படி செய்பவர்களும், செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

தன்னுடைய கடவுளின் மீதோ, அல்லது தன்னுடைய மதத்தின், மீதோ தீவிர நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி அடித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு இருக்க வேண்டியது அன்பு மற்றும் பொறுமை.இவர்களை ஒப்பிடுகையில் நாத்திகர்கள் எவ்வளவோ மேல். தங்களின் சித்தாந்ததை தாங்களே காக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் அப்படியல்ல. தங்கள் கடவுள்தான் உலகத்திலேயே சிறந்தது, உயர்ந்தது, சக்தி வாய்ந்தது என்று நம்புகிறார்கள் அல்லவா? அந்த சக்தி வாய்ந்த கடவுளை மீறி உங்கள் மதத்தை யார் என்ன செய்து விட முடியும்? அப்படி இருக்க, நம் மதத்துக்கு நாம் ஏன் வக்கீலாக மாற வேண்டும்? மதத்தை காக்கும் வீரனாக மாற வேண்டும்? அப்படியானால் நம் கடவுள் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்?

மதம் என்பது ஒரு கட்சியோ அல்லது சங்கமோ அல்ல. அது ஒரு வழி. கடவுளை அடையும் வழி. அதை ஒரு சங்கமாக மாற்றிய பெருமை ஆறறிவு படைத்த, உலகிலேயே மிக அறிவாளியான மிருகமான மனிதனுக்கு உண்டு. நல்ல ஆன்மிகவாதி, படித்தவன், இறைநம்பிக்கையாளன், நல்ல மனிதன் இவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான பண்பு இருக்கிறது. அது எல்லோருக்கும் சம அளவில் மரியாதை கொடுப்பது மற்றும் இன வேறுபாடு இல்லாமல் அன்பு செலுத்துவது. அப்படி இல்லாத எவனும் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்றோ, படித்தவன் என்றோ, இறை நம்பிக்கையாளன் என்றோ, நல்ல மனிதன் என்று சொல்லிக்கொள்ள தகுதி இல்லை. அடுத்தவர் மனம் புண்படாமல் உங்கள் கருத்தை உங்களால் ஆணித்தரமாக சொல்ல முடிந்தால் மார்தட்டிக் கொள்ளலாம், "நான் படித்தவன்", என்று. இல்லை என்றால் மன்னித்து விடுங்கள் அந்த தகுதி நமக்கில்லை.  

எங்கோ படித்த ஒரு கதை. கடவுள் மனிதனை படைத்து, தன்னைப்பற்றிய உண்மையை சிறு துண்டுகளாக உடைத்து உலகமெங்கும் போட்டு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அதை தேடும்படி செய்தாராம். மனிதர்களும் அதை தேடி அலைந்தார்களாம். அவ்வப்போது தங்களுக்குள் அடித்து கொண்டார்களாம். ஒரு நாள் உண்மையின் ஒரு துண்டை ஒரு மனிதன் கண்டுபிடித்து விட்டானாம். உடனே கடவுளின் உதவியாளர் பதறினாராம். "மனிதனுக்கு உண்மை கிடைத்து விட்டது. இனி உங்களை கண்டு பிடித்து விடுவார்கள்.".  அதற்கு கடவுள் சொன்னாராம், "கவலைப்படாதே, இந்த உண்மையை கண்டு பிடித்தவன் கடவுள் ஆகி விடுவான், அவன் பின்னே ஒரு கூட்டம் சேரும், எல்லோரும் மறுபடியும் தங்களுக்குள் அடித்து கொள்வார்கள்."

இதுதான் நடக்கிறது. அந்த உண்மை என்ன என்பதை யாரும் கேட்பதில்லை. கேட்க தயாராகவும் இல்லை. அதை கண்டு பிடித்து சொன்னவரை கடவுளாக்கி நமக்குள்அடித்து கொள்கிறோம். கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் தெரியும் அனைத்து தூதர்கள் சொன்னதும் ஒரே உண்மையின் வெவ்வேறு துண்டுகள்தான் என்று. 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...