விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 27, 2010

தலைவா எங்கள காப்பாத்து…


முன்குறிப்பு: இந்த பதிவு ரஜினிக்கு ஆதரவானதா? இல்ல எதிரானதா? யாராவது சொல்லுங்களேன்?


அப்பாடா ஒரு வழியாக எந்திரன் படத்துக்கு டிக்கட் பதிவு செய்தாகி விட்டாயிற்று. தலைவர் படத்தை முதல்நாள், முதல் காட்சியே பார்ப்பதே ஒரு தனி சந்தோசம்தான். எங்கள் ஊரில் முன்பதிவு வசதி (முதல் காட்சிக்கு) இல்லாத காரணத்தால் மதுரையில் நண்பர் உதவியுடன் முன்பதிவு செய்தேன். என்னது டிக்கெட் விலை எவ்வளவா? அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், "இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச?" அப்படின்னு வருமான வரி ரெய்டு வந்துடும். தென் தமிழக மக்கள் ஒருவர் மீது அபிமானம் வைத்து விட்டால் அவர்கள் காட்டும் அன்புக்கு எல்லையே இருக்காது. அதுவும் ரஜினி ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.




ஒவ்வொரு ரஜினி படம் வந்து, சில வருடங்கள் கடந்த பிறகு, ஒரு அமைதி நிலவும். ரஜினி அடுத்த படம் நடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். அந்த இடைப்பட்ட காலத்தில் "ரஜினி அவ்வளவுதான், அவருக்கேது ரசிகர்கள்? எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க..." அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்."இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும்?" அப்படின்னு மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கூட்டம் அள்ளும். "ரஜினிக்கு மவுசு போயிடுச்சு, எல்லாம் கலாநிதி மாறன் தயவில்தான் நடக்கிறது." என்று சொல்பவர்களைக் கேட்டால் சிரிப்பாகத்தான் வருகிறது.

ரஜினியின் படத்தை முதல் நாளில் அத்தனை காட்சிகளும் பார்க்கும் ரசிகர்கள், தினம் ஒரு தடவை வீதம் படம் ஓடும் அத்தனை நாட்களும் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் ரஜினியே வேண்டாம் என்றாலும் கேட்கபோவதில்லை. "நீ கவலப்படாத தலைவா. உன்ன பாக்குரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு பண்ணலாம்." என்று சொல்பவர்கள். ரஜினி படம் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இரண்டொரு தடவை ரஜினி படத்தை பார்க்க தவறுவதில்லை.


இந்த அளவுகடந்த அபிமானத்தை பயன்படுத்திதான் தியேட்டர்காரர்களும், டிஸ்டிரிபியுட்டர்களும் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ரஜினி படத்தை வாங்க ஏகப்பட்ட போட்டி. அதிக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதைவிட அதிக லாபம் சம்பாதித்து விடுகிறார்கள். ஒவ்வொரு ரஜினி படமும் தன் முந்தைய சாதனைகளை தகர்ப்பது அனைவரும் அறிந்ததே. அந்த சாதனை டிக்கட் விலையிலும் முறியடிக்கப்பட்டு வருவது முற்றிலும் உண்மை. சிவாஜி பட டிக்கட் விலை நூற்றைம்பது ரூபாய். இப்போது எந்திரன் டிக்கட் முன்னூறு ரூபாய்க்கு விற்கபடுகிறது. இதை வாங்குவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. இதுபோக ஒரு குறிப்பிட்ட காட்சியை ரசிகர் சிறப்பு காட்சியாக ரசிகர்மன்றம் வாங்கி விடும். அந்த காட்சிக்கு இன்னும் அதிக விலைக்கு டிக்கட் விற்கபடுகிறது. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வித்தை அறிந்தவர்கள் சன் பிக்சர்ஸ். இப்போது அவர்கள் கையில் இருப்பது பெருமாள். என்ன செய்வார்கள்? ரஜினி என்ற கரும்பில் இருந்த சர்க்கரையை பிழிந்து எடுத்ததோடு மட்டுமல்லாமல், சக்கையையும் விற்று காசாக்கி விட்டார்கள். எந்திரனை ரசிகர்கள் வரவேற்றாலும், அவர்கள் மனதில் சன் பிக்சர்ஸை நினைத்து சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது. மற்ற நடிகர்களைப்போல ரஜினியையும் எக்ஸ்ப்லாய்ட் செய்கிறார்களே என்று.


இவை அனைத்தும் என் மனதிலும் இருக்கிறது. "தலைவா, உங்கள் படத்தை பார்ப்பதாலோ? புறக்கணிப்பதாலோ? சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆகவே புறக்கணிப்பது என்பது முட்டாள்தனமானது என்று எல்லா ரஜினி ரசிகனுக்கும் தெரியும். அதே சமயம் ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்கிறேன். அதிக விலையில் டிக்கட் விற்ககூடாது என்று கூறி விட்டால் மட்டும் போதாது. அந்தந்த பகுதி ரசிகர் மன்றங்கள் மூலம் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள செய்யவேண்டும். இது தயாரிப்பாளர்கள் பிரச்சனைதான் என்றாலும், அதில் தலையிடும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இறுதியாக ஒரே வேண்டுகோள். தயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்."


"உங்கள் படங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களை நீங்கள் கவனியுங்கள். தலைவா எங்கள காப்பாத்து...."

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

September 23, 2010

புனைவு எழுதுவது எப்படி?


எல்லோரும் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து விட முடியாது. அதற்காக செய்து விட முடியாது என்று அர்த்தம் அல்ல. தன் பாணியில் எளிய வழியில் செய்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை ஸ்டார்டிங்க் டிராபிள். ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் எனக்கு இந்த பிரச்சனை வரும். மற்றவர்களை போல நிறைய பெண் நண்பிகள் வேண்டும், நன்றாக பேசவேண்டும், எழுதவேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே ‘எப்படி’ வகையான புத்தகங்கள். பெண்களை கவர்வது எப்படி, கழட்டி விடுவது எப்படி என்கிற வகையில் பல ஆயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் என்னால் முடிந்த சில எப்படி பதிவுகள் எழுதுகிறேன். ஏதோ பொதுநல நோக்கில் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். பதிவு எழுத மேட்டரே தேரலையா? கவலையை விடுங்கள். ஒரு எப்படி பதிவு போடுங்கள். என்னை மாதிரி ஹி ஹி ஹி... 



புனைவு எழுதுவது எப்படி?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா பதிவர்களும் என்ன எழுதுவது என்று தெரியாமல், கையை பிசைந்து கடைப்பக்கமே வராமல் அறிவிக்கப்படாத பந்த் போல பதிவுலகமே அமைதியாக இருக்கும். அப்போது எல்லோருக்கும் தீனி போடுவது போல இருப்பது இந்த புனைவு ஒன்றுதான். வெறும் வாய்க்கு அவல் மாதிரி. எல்லோருக்கும் புனைவு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கும். சரி எப்படி எழுதுவது? எனக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்கிறேன். 

நீங்கள் ஒரு ஆண் பதிவாரா? சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன? உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன? அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன? அந்த சம்பவத்தை அப்படியே எளிமை படுத்தி விடுங்கள். அவ்வளவுதான். எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலு மேடையில் தனக்கு நடந்ததை வேறொருவனுக்கு நடந்ததை போல சொல்வாரே அதே போல.

பெண்கள் எழுதும் புனைவில் வரும் நாயகன் கண்டிப்பாக பொம்பளை பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும். கஞ்சா, குடிப்பழக்கம், இருப்பது கூடுதல் வசதி. அவனை அவன் மனைவி என்ன வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். செக்ஸ் சம்பந்தமான வார்த்தைகள் அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் புனைவில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது, சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்ற யாருக்கும் புரியவே கூடாது. ஏதோ சமுதாய நோக்கில் எழுதப்பட்ட சிறுகதை என்று நினைத்துக்கொள்வார்கள். வண்டை வண்டையாய் எழுதி விட்டு, இறுதியில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று டிஸ்க்லைமர் போட மறக்காதீர்கள். லேபிலும் புனைவு என்று இருக்கட்டும். 

புனைவை நீங்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று இல்லை. மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு எதிர்வினையாக கூட இந்த மாதிரி புனைவுகளை எழுதலாம். தமிழ் பட ரசிகர்களுக்கு அம்மா சென்டிமெண்ட் எப்படி வீக்நெஸ்ஸோ அதே போல பதிவர்களுக்கு ஒரு வீக்நெஸ் உண்டு. அதனை பயன்படுத்தி புனைவு எழுதவேண்டும். அதாவது பெண் பதிவர்கள் என்றால் நடத்தையை குறிவைக்கவேண்டும். ஆண் பதிவர்கள் என்றால் மிக சுலபம். ஆண்மை, ஆணாதிக்கம் அல்லது பார்ப்பனீயம். அவ்வளவுதான். 

புனைவு என்பது அணு ஆயுதம் போல. அது ஏற்படுத்தும் தாக்கத்தை விட பின் விளைவுகள்தான் அதிகம். அதற்கு உங்களுக்கு இருக்க கூடாத முக்கிய குணம் சூடு மற்றும் சொரணை. உங்களைப்போலவே காண்டாக இருக்கும் ஒரு நண்பரை உங்கள் பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட செய்யுங்கள். தர்ம அடி விழும்போது அதனை பங்கு போட உதவும். சில சமயம் புனைவு எழுதியவரை விட்டு விட்டு, கமெண்ட் போட்டவரை துவைத்த சம்பவம் எல்லாம் சரித்திரத்தில் உண்டு. கண்டிப்பாக நீங்கள் புனைந்த கதாபாத்திரத்தின் அசல் உங்களை ஏதாவது பஞ்சாயத்துக்கு கூட்டி சென்று விடுவார். உங்களை வினவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள். வடிவேலு மாதிரி என்ன கைய பிடிச்சு இழுத்தியா? அப்படின்னு திரும்ப திரும்ப கேளுங்கள். இல்லயேல் முத்தமிழ் அறிஞர் மாதிரி புறநானூறு, சிலப்பதிகாரம் என்று சம்பந்தம் இல்லாமல் அடித்து விடுங்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகி பஞ்சாயத்து கலைந்து விடும். 

இந்த பஞ்சாயத்து களேபரங்கள் வாரக்கணக்கில், சிலநேரம் மாதக்கணக்கில் கூட நடக்கும். அத்தனை பதிவர்களும் இது சம்பந்தமாக விவாதிப்பார்கள், கண்டனம் தெரிவிப்பார்கள். கும்மி அடிப்பார்கள். பதிவுலகமே விழாகோலம் பூண்டிருக்கும். சமுதாயத்தில் கிரிக்கெட், அரசியல் என்று ஏதாவது ஒரு புது நிகழ்வு நடக்கும்போது பஞ்சாயத்து கலைந்துவிடும். புது விஷயங்களை பற்றி பதிவு எழுத சென்று விடுவார்கள். நாமும் சோர்ந்து கிடந்த பதிவுலகத்துக்கு புத்துயிர் அளித்த திருப்தியோடு நம் வேலையை பார்க்க கிளம்பிவிட வேண்டியதுதான். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.... 


படங்கள்: குசும்பு அவர்களுக்கு நன்றி

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

September 21, 2010

விஜய்யை தாக்கும் ஆர்யா?


நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இந்த பதிவுலகத்துக்கு வந்த நாள் முதல் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு வகையான மாற்றுப்பார்வையோடு அணுகவேண்டும் என்று நாம் தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன மாற்றுப்பார்வை என்று கேட்கிறீர்களா? என்னடா தப்பு கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்பதுதான். அந்த வகையில் சென்ற வாரம் இரண்டாவது முறையாக (எந்திரன் ட்ரெய்லர் பார்க்கும் காரணத்துக்காக) பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்க சென்றேன். முதல் தடவை என் குருட்டு பார்வையில் தட்டுப்படாத சில விஷயங்கள் தற்போது பார்த்த மாற்றுப்பார்வையில் சிக்கியது.



பார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், புனைவு என்கிற பெயரில் பல வக்கிரங்கள் மற்றும் ஆபாசங்கள் என படத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும்.... (அடடாடா... மாற்றுப்பார்வையாளருக்கே உரிய எழுத்து நடை வந்து விட்டது போலிருக்கே?) சில நாட்களுக்கு முன்னாள் இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விஷயமாக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது சம்பந்தமே இல்லாமல் விஜய் அவர்களை ஒரு டீவி நிகழ்ச்சியில் கலாய்த்தது மற்றும் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் கொதித்து எழுந்த பின்புதான் விஜயின் மாஸ்சை பார்த்து தமிழகமே மிரண்டது. சம்பந்தப்பட்ட டீவி சேனல் மன்னிப்பு தெரிவித்தாலும் விடாமல் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.


விஜய் ரசிகர்கள் யாரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்கவில்லையா? அல்லது கவனிக்க தவறி விட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஒரு மாற்றுப்பார்வையாளனின் கடமை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும் விஜய் அவர்களை சம்பந்தம் இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். முதலாவதாக படத்தில் சந்தானத்தின் சலூன் பெயர் தல-தளபதி. ஏன் தளபதி-தல என்று வைத்தால் குறைந்து போயி விடுவார்களா? தல – தளபதி சலூன் என்று பெயர் வைத்து விட்டு, போர்டில் மட்டுமே விஜய் படம் இருக்கும். சலூனில் திரும்பும் இடமெல்லாம் அஜித் படம்தான் ஒட்டப்பட்டிருக்கும். படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஆர்யாவின் தங்கையின் அறிமுகக்காட்சி. அதில் அவர் தங்கை தன் நண்பிகளிடம், “ஹேய் இப்ப இருக்குற தமிழ் ஹீரோக்களிலேயே அஜித்துக்குதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு பெர்சனாலிட்டி இருக்கு.” என்று சொல்வார். இதுவும் விஜய் டீவியில் ஒரு பெண் சொன்ன கருத்து போலத்தான். அஜித்துக்கு பெர்சனாலிட்டி இருக்கு என்று சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவருக்கு மட்டும்தான் இருக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவரது சமகால நடிகரான, விஜய் அவர்களுக்கு இல்லை என்று உள்நோக்கத்தோடே இந்த வசனத்தை அணுக வேண்டும்.


இன்னொரு காட்சியில் சந்தானம் ஆர்யா இருவரும் திரைப்படத்துக்கு செல்வார்கள். அந்த அரங்கில் வில்லு மற்றும் ஏகன் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அங்கிருக்கும் ரசிகர் கூட்டம், அஜித்தின் பேனருக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருப்பார்கள். விஜய் பேனர் அம்போவென இருக்கும். இது ஒரே நேரத்தில் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்தும் செயல். இதுவும் படத்தின் இயக்குனரான ராஜேஷின் காழ்புணர்ச்சியையே காட்டுகிறது. கடைசியில் இருவரும் எந்த படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் படம் ஓடிக்கொண்டிருக்கும் பகுதி நோக்கித்தான் செல்வார்கள். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி படத்திலும் அஜித் புகழ் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதே காட்சியில் அஜித்தின் ரசிகர்கள் ஸ்மார்ட்டாகவும், விஜய் ரசிகர் மொட்டை தலையுடனும் இருப்பார். உடனே சந்தானம் அவரிடம் உன் ஹேர்ஸ்டைல பார்த்தா ஜெய்சங்கர் ரசிகர்னு நெனச்சேன், நீ விஜய் ரசிகரா? என்று கேவலமாக கேட்பார். அதே போல வில்லு படத்தைப்பார்த்து சந்தானம், உங்க ஆள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று சொல்வார். இது வில்லு படம் தோல்வி அடைந்ததை குத்திக்காட்டுவதற்காக வேண்டுமென்றே வைக்கப்பட்ட வசனம். அஜித் ரசிகர்களிடம், உங்க அளவுக்கு அவுங்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) அறிவில்லை என்ற பொருள் படும்படி பேசுவார். 


படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அஜித்தின் அடிவருடியாகவே இருந்து விட்டு போகட்டும். அதற்காக ஊர்அறிந்த ஒரு மாஸ் நடிகரை கலாய்ப்பது கண்டனத்துக்குரியது. கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் என்கிற முறையில் என் கண்டனங்களை முதலில் பதிவு செய்கிறேன்.
இன்னும் பத்து படங்களை கூட தாண்டாத புது தயாரிப்பாளர் ஆர்யா அவர்களே, உங்களைப்போல பலபேரை சந்தித்து அவர்களை எல்லாம் புறந்தள்ளி, மேலே வந்தவர் எங்கள் தளபதி என்பதை மறவாதீர். இன்று நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் இளைய தளபதியின் தொண்டனாக என் கண்டனங்களை பதிவு பண்ணுகிறேன். அடுத்த படத்தின் தொடக்கத்தில் நீங்கள் மன்னிப்பு கோரினாலும் விடப்போவதில்லை. புறக்கணிப்போம் ஆர்யாவின் படங்களை...

டிஸ்க்:இந்த பதிவை  விஜய் அவர்களை கலாய்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

September 16, 2010

எரிகிற வீட்டில்...

முன் குறிப்பு: கொஞ்சம் பெரிய பதிவுதான். முழுவதும் படித்து விடுங்கள்...

"எரிகிற வீட்டில் பிடுங்கியது எல்லாம் லாபம்!" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். அது லாபம் என்று பொருள். இப்படித்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியோ, போபார்ஸ் ஊழல் பற்றியோ, அணு ஆயுத ஒப்பந்தம் பற்றியோ சொல்லவில்லை. இவற்றை பற்றி எல்லாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. சொல்லப்போனால் இது எல்லாம் நம்மை எரிக்கும் பெரும் நெருப்புகள். நம்நாட்டை முற்றிலும் சாம்பல் ஆக்காமல் அணையாது. ஆனால் இந்த நெருப்புக்கு நடுவே ஆங்காங்கே கிடைத்த வரை லாபம் என்று பலரும் மொள்ளமாரித்தனம் செய்கிறார்கள். 



எப்படியும் எரிந்து சாம்பல் ஆகப்போகிறது, நாமே கொள்ளை அடித்தால் என்ன? என்ற எண்ணம்தான் காரணம். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சென்னை மற்றும் பெங்களூரு முதலிய பெருநகரங்களில் வசிக்கும் தென் தமிழக நண்பர்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு டிக்கெட் மற்றும் திரும்பி வர ரிட்டன் டிக்கெட் எடுப்பது. இதற்கு பெரும் அடிதடியே நடக்கிறது. முன்பெல்லாம் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில்தான் ரயில்கள் நிரம்பி வழியும். ஆனால் தற்போது எல்லா நாளும் திருநாள் போல ரயில்கள் கூட்டமாகவே வருகின்றன, கூட்டமாகவே போகின்றன. ஏஜெண்டுகளை முடக்க அரசு புது திட்டம் அறிவித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. எனவே மக்கள் அடுத்த சேவையான பேருந்து பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.


இதற்கான முன் பதிவுக்கும் மக்களிடையே பலத்த போட்டி ஏற்படுகிறது. அதனால் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதாரணமாக பண்டிகை காலங்களில் மதுரையில் இருந்து மட்டும் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் கூட சில சமயம் சிறப்பு பேருந்துகள் விடப்படும். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் அதுவும் யாருக்கும் அது சிறப்பு பேருந்து என்று தெரியாத வகையில் விடப்படும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன். பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் இடம்பிடிக்க மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெரிய ரகளையே நடக்கும்.


ஆகவே அவர்களாக முடிவு செய்து ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு சிறப்பு பேருந்து வந்தவுடன் வரிசையில் இருக்கும் முப்பத்தைந்து பேருக்கு மட்டும் கவுண்டரில் டோக்கன் கொடுப்பார்கள் அதன் விலை ஐந்து ரூபாய். அதிக லாபம் காரணமாக பிற்காலத்தில் பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதான் பேருந்தில் போகிறவனே டிக்கெட் எடுப்பானே? அப்புறம் என்னத்துக்கு இந்த பத்து ரூபாய்? சரி இடம் பிடித்து தருவதற்கு கூலி என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி சிறப்பு பேருந்துகளில் மற்ற பேருந்துகளை விட டிக்கெட் விலை சுமார் நூறு ரூபாய் வரை அதிகம் இருக்கும். சிறப்பு பேருந்துகளோ பெயருக்கேற்றார்போல இல்லாமல் சுந்தரா டிராவல்ஸ்சை மிஞ்சும் வகையில் இருக்கும். இந்த சிறப்பு பேருந்தில் வரும் கண்டக்டர் பண்ணும் அலும்பை பார்த்தால் ஏதோ பஸ் ஓனர் போல இருக்கும்.


தான் சொந்த பேருந்தை இலவசமாக அளிப்பது போல முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ஒரு டிக்கெட்டின் விலை 340 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவர் 350 ரூபாய் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். குதிக்க ஆரம்பித்து விடுவார். அதுவும் அவரிடம் மீதி சில்லறையான(?!) பத்து ரூபாய்யை கேட்டு விட்டால் ஏதோ ஒரு பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்ப்பார். அதன் அர்த்தம் அந்த பத்து ரூபாய் அவருக்கு சொந்தம் என்று அர்த்தம். இது பற்றி பொதுமக்கள் யாரும் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எப்படியாவது ஊருக்கு போய் சேர வேண்டும் அவ்வளவுதான். பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் மீதி சில்லறை கேட்பதை ஒரு கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை நினைத்து பாருங்கள். ஒரு பெரியவர் தான் வைத்திருந்த 500 ரூபாயில், 150 ரூபாய்க்கு சரக்கடித்து விட்டு, மீதி 350 ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு விழித்ததை பார்த்திருக்கிறேன்.


சரி மற்ற நாட்களில் விடப்படும் முன்பதிவு இல்லாத பேருந்துகளின் கதை இன்னும் மோசம். பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது வேகம் பிடித்து வந்து நிற்கும். கண்டக்டர் கலெக்டர் போல கம்பீரமாக இறங்கி வருவார். யாரிடமும் எதுவும் சொல்லமாட்டார். கூட்டம் அது முன்பதிவுக்கான பேருந்தா? இல்லையா? என்று குழம்பி விடுவார். தூரமாக தனியாக நின்று கொள்வார். யாராவது ஒருவர் மெதுவாக கண்டக்டரிடம் பேச்சுக்கொடுப்பார். “சார் ஏதாவது சீட்டு காலியா இருக்கா?” என்று. உடனே அவர், "ஒண்ணே ஒண்ணுதான் காலியா இருக்கு. ஒரு அம்பது ரூபா அதிகம் ஆகும் பரவாயில்லயா?" என்று கேட்பார். ஆகா இடம் கிடைத்து விட்டது! என்று பேருந்தில் போய் அமர்ந்து கொள்வார். பேருந்து கிளம்பி டிக்கெட் எல்லாம் வாங்கி முடித்தபின் அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தால், அங்கேயும் அதே கதையைத்தான் கண்டக்டர் விட்டிருப்பார். பேருந்தில் எல்லோருக்கும் இதே நிலைதான். எதற்கு இந்த எச்ச பொழப்பு?


சரி அரசுபேருந்து என்றாலே இப்படித்தான் என்று தனியாரிடம் சென்றால் இதைவிட மோசம். சாதாரணமாகவே ஒரு டிக்கெட்டின் விலை 300க்கு மேலேதான் ஆரம்பிக்கும். அதுவே பண்டிகை காலங்கள் என்றால் 500தான் ஆரம்ப விலை. ஒரு பேருந்துக்கு ஐந்து சீட்டுகள் வீதம் நிறுத்தி வைத்திருப்பார்கள். கடைசி கட்டத்தில் யாராவது அவசரமாக வருவார்கள். அப்போது சொன்ன விலைக்கு வாங்கி விடுவார்கள் என்று. இப்போது அப்படி எல்லாம் கிடையாது. முதலில் அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று விடுகிறார்கள். பின் வருபவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொல்லாமல் கொஞ்சம் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலே இருக்கும். இப்படித்தான் போன வாரம் என் நண்பன் எடுத்த டிக்கெட்டின் விலை 700 ரூபாய். அவன் அதற்கு கவலைப்படவே இல்லை. டிக்கெட் கிடைத்ததே பெரிய விஷயம் என்றான். பேருந்தில் ஏறுவதற்கு காத்திருந்தபோது வந்தது அதிர்ச்சி. அந்த டிராவல்ஸ் நிறுவனம், நான்கைந்து டெம்போ வேன்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணிகளை ஏற்றினார்கள். அதாவது திரையரங்குகளில் எக்ஸ்ட்ரா சீட்டு போடுவார்களே அதுபோல. நண்பனும் அதே மாதிரி ஒரு வேனில் ஏற்றப்பட்டான். அந்த வேனுக்கு முறையான பெர்மிட் இருக்கிறதா? ஓட்டுனர் திறமையானவார்தானா? என்று யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வேன் டிரைவரை பார்த்தால் பள்ளி மாணவர் போல இருந்தார். இதுபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் ஊர் போய் சேரவேண்டும் அவ்வளவுதான்.


யார் சொன்னது பணத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது என்று? அதைவிட வேகமாக மனிதர்களின் மதிப்புதான் குறைந்து வருகிறது. பொதுமக்களின் அவசர நிலையை எப்படியெல்லாம் இந்த போறம்போக்குகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள். அது சரி எரிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்தானே?


பி.கு: அம்பானி திருடுறான், கொக்ககோலாகாரன் திருடுறான், இதை எல்லாம் கேட்க யோக்யத இல்லை. பாவம் பாட்டாளி ஏதோ பணக்கஷ்டத்துல இப்படி பண்றான் என்று எல்லாம் பின்னூட்டம் இடாதீர்கள். இவனை கேட்கவே யோக்யதை இல்லாத போது அம்பானியை எப்போது கேட்பது? 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

September 14, 2010

ஒரு அம்மாஞ்சி ஹீரோவின் கதை...


எந்த வயது மனிதனாக இருந்தாலும், தன் மனதில் தான் பெரிய ஹீரோ என்ற நினைப்பு இருக்கும். குறைந்தபட்சம் பாத்ரூம் கண்ணாடியிலாவது ஹீரோ மாதிரி மேனரிசங்கள் செய்து மகிழ்ந்து கொள்வான். எப்போதும் அதே போல தான் செய்யவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொள்வான். சரியாக தெருவில் இறங்கி நடக்கும்போது கூச்சம் காரணமாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய கேணத்தனமான மேனரிசங்களையே தொடர்வான். எல்லா பெண்களும் தன்னை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று எண்ணுவான். ஆனால் ஏதாவது ஒரு பெண் டைம் என்ன என்று கேட்டால் மென்று முழுங்குவான். பின் அந்த பெண் சென்றவுடன் தன் தலையில் தட்டிக்கொள்வான். இது வேறு யாருமல்ல நான்தான். நான் மட்டுமல்ல. சமூகத்தில் நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தன் காதலைக்கூட எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிப்பவர்கள். ஹீரோ என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர்கள் அனைவருக்குள்ளேயும் ஒரு ஹீரோ இருக்கிறான். ஆஹா நம்மள மாதிரியே ஒரு ஹீரோ என்று நினைக்க வைக்கும் படம்தான் நான் இப்போது சொல்லப்போகும் படம்.



நான் ஹிந்தி மொழியில் புலவர் எல்லாம் கிடையாது. எக் காவ் மே எக் கிசான் ரகுதாத்தா என்ற அளவுக்குத்தான் ஹிந்தி தெரியும். அதனால் சப்டைட்டிலே துணை என்று படம் பார்ப்பவன்.ஒரு சில படங்கள்தான் சப்டைட்டில் இல்லாமல் பார்த்தாலும் புரியும். இது அந்த வகையை சேர்ந்த படம். ஷாருக் மீது இருக்கும் நன்மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்திய படம். படத்தின் பெயர் ரப் னே பனா தி ஜோடி (கடவுள் அமைத்துக்கொடுத்த ஜோடி). இந்த படம் வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டாலும், நண்பன் ஒருவனின் வற்புறுத்தலால் நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் கதை இதுதான்.

சுரிந்தர் அல்லது சூரி ஒரு நல்ல மாணவன். ஒழுக்கமானவன். நன்கு படித்து பஞ்சாப் மின்வாரியத்தில்(சரிதானே?) வேலைபார்ப்பவன். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். மொத்தத்தில் சரியான பழம். ஒருநாள் தன் ஆசிரியரின் மகள் தானி திருமணத்துக்கு செல்கிறான். அந்த ஆசிரியருக்கு சூரியை மிகப்பிடிக்கும். ஆனால் அவரது மகள் தானியோ நேர்மார். ஜாலி பேர்வழி. சந்தோசம் என்றால் நடுரோடு என்று கூட பார்க்காமல் துள்ளி குதித்து விடுவாள். அவளுக்கு இயல்பாகவே சூரி மீது ஒரு வெறுப்பு இருக்கிறது. அவன் சரியான பழம் என்று. கிட்டத்தட்ட அந்நியன் சதா மாதிரி. திருமணத்துக்கு போன இடத்தில் எதிர்பாராதவிதமாக மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறக்க, திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு படுத்த படுக்கை ஆகிறார் ஆசிரியர். கடைசியாக தானியை தன் செல்ல மாணவன் சூரி கையில் பிடித்து கொடுத்துவிட்டு இறக்கிறார். ஏற்கனவே காதலன் மற்றும் தந்தை இறந்த சோகத்தில் இருக்கும் தானி எதுவும் பேசாமல் கம்மென்று சூரியை திருமணம் செய்து அமிர்தசரசில் குடியேறுகிறாள்.


அவள் மனதில் சோகத்தை தவிர எதுவும் இல்லை. உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் என்னால் உங்களை காதலிக்க முடியாது. என்னுள் காதல் இல்லை. உங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கொஞ்சம் அவகாசம் தாங்க என்று சொல்கிறாள். சூரி உடைந்து போகிறான். அவன் விரும்புவது ஜாலியான தானியை. ஆனால் தானியோ சுத்தமாக மாறிவிட்டாள். சிரிப்பது கூட கிடையாது. என்ன செய்வது?



தன் மனைவியின் எந்த விஷயத்திலும் குறுக்கிடாமல் தள்ளியே இருக்கிறான். அவளும் இவனுக்கு சமையல் செய்து, பணிவிடை செய்து கடனே என்று வாழ்கிறாள்.. ஒரு நாள் நடனப்பள்ளி ஒன்றில் சேர விரும்புவதாக தானி சொல்கிறாள். அவள் ஆசைப்பட்டு கேட்டதால் உடனே சம்மதிக்கிறான் சூரி. ஆனால் தன் மனைவி நடனமாடுவதை பார்ப்பதற்கு, நண்பன் ஒருவன் உதவியுடன் கலாட்டாவான ஒரு இளைஞனாக மாறுவேடத்தில் நடனப்பள்ளிக்கு செல்கிறான். அங்கே எல்லோருடைய கைகளிலும் ஒரு எண் தரப்படுகிறது. அதே எண் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் இருவரும் ஜோடி. இருவரும் பயிற்சி செய்து இறுதிபோட்டியில் பரிசு வெல்லவேண்டும். சூரி கையில் இருப்பது எண் 21. தானி கையில் இருப்பதும் அதுவே. சூரி தன் மனைவி தன்னை அடையாளம் கண்டு கொள்வாள் என்று பயப்படுகிறான். ஆனால் அவளுக்கு சூரியை அடையாளம் தெரியவில்லை. எனவே ராஜ்கபூர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான். 


கொஞ்சம் கொஞ்சமாக இருவரின் நட்பும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தானி ராஜ்கபூரை காதலிக்க தொடங்குகிறாள் அவன் சூரி என்பதை அறியாமலேயே. ராஜ்கபூர் தானியை ஊரை விட்டு ஓடிவிடலாம் என்று அழைக்கிறான். அவள் என்ன பதில் சொல்வாள் என்று ராஜ்கபூராக ஆர்வத்துடனும், சூரியாக கண்ணீருடனும் காத்திருக்கிறான். தானி என்ன பதில் சொன்னாள்? ராஜ்கபூர் ஜெயித்தானா இல்லை சூரி ஜெயித்தானா என்றுகொஞ்சம் கண்ணீர் நிறைய காமெடி என்று சொல்லி இருக்கிறார்கள்.



இந்த படத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் அந்நியனில் வரும் அம்பி ரெமோ கான்செப்ட் மாதிரி இருக்கும். ஆனால் இதன் பாதிப்பு வேறு. சூரியாகவும், ராஜ்ஆகவும் ஷாரூக் கலக்கி இருக்கிறார். சூரியாக வரும்போது அப்பாவியான, ஒரு சராசரி குடும்பத்தலைவனை நினைவு படுத்துகிறார். ராஜ்கபூராக வரும்போது நவநாகரிக மாணவனை கண்முன் நிறுத்துகிறார். தானியாக வரும் அனுஷ்கா ஷர்மா முகத்தில் அவ்வப்போது ஆயிரம் எக்ச்ப்ரசன்கள். கணவனை காதலிக்கவும் முடியாமல், ஒரு பாவமும் அறியாத அவனை வெறுக்கவும் முடியாமல், தன்னை சந்தோசப்படுத்தும் ராஜ்கபூரின் காதலை ஏற்கவும் முடியாமல், விடவும் முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு எந்த ஒரு பெண்ணுக்கும் இயல்பாக இருப்பது. 


படத்தில் சுவாரசியமான, நெகிழவைக்கும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக ராஜ்கபூர் தானியுடன் போட்டி போட்டு வயிறு முட்ட பானிபூரி தின்று விட்டு, சூரியாக மாறி வீட்டுக்கு வருவார். வீட்டில் தானி இவருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி செய்து வைத்து காத்திருப்பாள். சொல்லமுடியாமல் அதையும் சாப்பிட்டு விட்டு இரவில் வயிற்று வலியுடன் புலம்புவது சுவாரசியமான காட்சி. அதே போல ரக்ஷா பந்தன் அன்று எங்கே தன் மனைவி தனக்கே ராக்கி கட்டி விடுவாளோ என்று ஓடி ஒளியும் காட்சியும் ரசிக்கத்தக்கது. கடைசி நாள் இரவு ராஜ்கபூரிடம் என்னை ஊரை விட்டு கூட்டிட்டு போய்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் தானியை கட்டிக்கொண்டு சூரியாக இருக்கும் ஷாரூக் அழும் காட்சி, தான் ஒரு கையாலாகதவன் தன் மனைவியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று அவரின் எண்ணத்தை கண்ணில் கொண்டு வரும்.


அதே போல நான் ஓடி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றபின் உருவத்தில் ராஜ்கபூராக இருக்கும் சூரி ஆனந்தகண்ணீர் வடிப்பார். என மனைவி நல்லவள். என்னை நேசிக்கிறாள் என்ற மமதை அதில் தெரியும். இறுதி காட்சியில் சூரி, ராஜ்கபூர் இருவரும் ஒன்றுதான் என்று தெரியும்போது, அதற்கு முன் நடந்த அனைத்தும் தானி கண்ணில் காட்சிகளாக ஓடும் காட்சி கண்டிப்பாக நெஞ்சை தொடும். துஜ் மே ரப் திக்தா ஹை (உன்னில் கடவுளை காண்கிறேன்) என்ற ஷ்ரேயா கோஷல் பாடும் பாடல் கேட்டால் கண்ணில் நீர் முட்டுகிறது. படத்தில் இந்த பாடல் வரும் இடம் அப்படி. படத்தை பார்த்தால் கண்டிப்பாக இதன் நீளம் தெரியாது. படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அவை எனக்கு பெரிதாக படவில்லை. படம் மெகா ஹிட் ஆகியது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

September 3, 2010

என் கதாநாயகர்கள்....



ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் பலபேரை ஆதர்ச நாயகர்களாக நினைத்திருப்பார்கள். சினிமா அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிப்பதற்கு முன் நிஜ மனிதர்கள்தான் அவர்களின் ஹீரோக்கள். ஒரு குழந்தைக்கு அதன் தந்தைதான் முதல் ஹீரோ. பின் அதன் பள்ளி ஆசிரியர்கள். தன் வாத்தியார் மாதிரி உடுத்தவேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும், சிகரெட் பிடிக்கவேண்டும் என்று கற்பனை வளர்த்தவர்கள் பலபேர்.இந்த ரசனை ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபடும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்த பிறகும், தங்களின் ஆசிரியர்கள் மட்டும் மனதில் இருந்து மறைவதில்லை. 







நானும் ஒவ்வொரு காலகட்டங்களில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களைப்பற்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஆனந்தராஜ் வாத்தியார். இவர்தான் என் ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். நான் பார்த்த முதல் வாத்தியார். (எங்க வீட்ல எல்கேஜி, யுகேஜி பற்றியெல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது). அவர் கொஞ்சம் இளவயதுக்காரர். அப்போது ரஜினி நடித்த ராஜாதி ராஜா படம் வந்திருந்தது. அதே ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார். குரல் சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும். மாணவர்களை திட்டுவது கூட நக்கலாகத்தான் இருக்கும். 



கந்தசாமி வாத்தியார். இவர் எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர். இவரை பார்த்தாலே பாதி மாணவர்கள் கால்சட்டை ஈரமாகிவிடும். பார்ப்பதற்கு காதல் தண்டபாணி போல இருப்பார். வகுப்பறையில் மாணவர்களை துரத்தி துரத்தி அடிப்பார். எனக்கு கணிதத்தை விதைத்தவர். கணிதத்தில் பெயில் ஆனதற்கு அவர் என் முதுகில் கொடுத்த பஞ்ச் இன்னும் ஞாபகம் இருக்கிறது.


ஆண்டவர் சார். எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியர். முதல் முறையாக உயர்நிலை வகுப்புக்கு வந்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த என்னை சீர் படுத்தியவர். நான் வாழ்க்கையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அது இவருக்காகத்தான் இருக்கும். இவர் விதைத்த ஆங்கிலம் தான் இன்று நான் பேசும் இலக்கணப்பிழை இல்லாத ஆங்கிலம். இன்றும் பெருமையாக சொல்வேன் நான் பேசும் ஆங்கிலத்தில் சொற்பிழையோ, இலக்கண பிழையோ இல்லை என்பதற்கு இவர்தான் காரணம். நடத்தை முறைகள், பேசும் முறைகள் என்று என் நடை உடை பாவனைகளை மாற்றியவர். செம கெத்தாக இருப்பார். இன்றும் இவரை ரோடில் பார்த்தால் இனம் புரியாத நடுக்கம் மனதில் எழுகிறது. நா குளறுகிறது. கை தானாக வணக்கம் வைக்கிறது.


பழனிச்சாமி சார். இவர் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர். சின்சியாரிடியை நான் கற்று கொண்டது இவரிடம்தான். அறுபது வயது முதியவர். இவரின் கடைசி செட் மாணவர்கள் நாங்கள்தான். அதன் பின் ரிட்டையர் ஆகிவிட்டார். பேச்சில் ஒரு கம்பீரம் இருக்கும். எப்பவும் கடுமையாகவே பேசுவார். எல்லா மாணவர்களுக்கும் இவர் மீது வெறுப்பு இருந்தது. ஆனாலும் ஒரு மரியாதை இருந்தது. அதற்கு காரணம் வகுப்பில் இவர் நடந்து கொள்ளும் முறை. ஒரு தடவை மாணவர்கள் பலர் வகுப்பில் செக்சு புத்தகத்தை படித்து மாட்டிக்கொண்டபோது, இவர் நா தளுதளுத்து அறிவுரை வழங்கியதை யாரும் மறக்க மாட்டார்கள். இப்போதும் அதே எளிமையோடு பழைய சைக்கிளில் பவனி வருகிறார்.


ஆனந்த அபூர்வசாமி வாத்தியார். மாணவர்கள் என்றாலே அதிகம் கிண்டல் செய்யப்படுபவர்கள் தமிழாசிரியர்கள்தான். எனக்கு தெரிந்து அதிகம் கிண்டல் செய்யப்படாத ஒரு தமிழாசிரியர் இவராகத்தான் இருக்கும். பேச்சில் ஒரு பெரிய கூட்டத்தையே பலமணிநேரம் கட்டிப்போட முடியும் என்று பலமுறை நிரூபித்தவர். இன்றும் என்னுடைய உடல் மொழியில் பல இவரை ஒத்திருக்கும். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்பதால் இயல்பாகவே நிறைய கேட்ட வார்த்தைகள் வந்து விழும். பல கில்மா விஷயங்களை சிறிதும் ஆபாசம் இல்லாமல் மாணவர்களிடம் விளக்கி பக்குவப்படுத்தியவர். கொஞ்சம் முன் கோபம் அதிகம். 


ப்ரொபசர் பழனி செல்வம். எங்கள் கல்லூரி வாழ்க்கையை பற்றி நண்பர்களிடம் பேசும்போது கண்டிப்பாக இவரைப்பற்றி பேசாமல் இருப்பதில்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ப்ரொபசரா இருந்தா இவரை மாதிரிதான் இருக்கணும். கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவர் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அடங்காப்பிடாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர் மிகத்தன்மையாக ஆனால் தீர்க்கமாக பேசுவார். அதனால் அவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு விடுவார்கள். எப்படி என்று யாருக்கும் தெரியாது. நான் ஆசிரியனாக பணிபுரிய முடிவெடுத்தபின் இவரை மாதிரிதான் இருக்கவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இன்றும் சொல்லிகொள்கிறேன். மாணவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து கோபம் வரும்போதெல்லாம், "அவ்வளவு ஈசியாடா வாத்தியார் வேலை?" என்று இவர் என் கண்முன் தோன்றி சிரிக்கிறார்.


இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஆசிரியர் என்னோடு பயணித்து தன் சுவடுகளை என்மீது விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஆசிரியர் இல்லை என்றால் யாரும் இல்லை.


அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...



முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...