சில வருடங்களுக்கு முன் ஆங்கில பட டிவிடிக்கள் வாங்க பர்மா பஜார் சென்றேன். பொதுவாக விலை குறைவான டிவிடிகளில் மூன்று அல்லது நான்கு படங்கள் இருக்கும். அதில் ஒரு படம் மட்டும் நல்ல படமாகவும், மற்றவை மொக்கை படமாகவும் இருக்கும். அப்படி நான் வாங்கிய ஒரு டிவிடியில் இருந்த ஒரு படத்தை பற்றிதான் இந்த பதிவு. நாம் பார்க்க நினைத்த படத்தை பார்த்துவிட்டு அந்த டிவிடியில் இருக்கும் மற்ற படங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நம் பழக்கம். திடீரென இந்த படம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று நான் பார்த்த படம். படத்தின் பெயர் போலீஸ் அகாடெமி.
வசூல்ராஜா, Mein Hoon Na ஆகிய படங்களின் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கதாநாயகன் தன் குணாதிசயத்துக்கு பொருந்தாத செயல் செய்யும்போது அது காமெடி ஆகி விடுகிறது. கமலஹாசன் மற்றும் ஷாருக்கான் இருவரும் கல்லூரி மாணவராக நடித்ததே படத்தின் வெற்றிக்கு காரணம். கில்லி படத்தில் கூட பிரகாஷ்ராஜ் ஐ லவ் யு செல்லம் என்று சொல்லும்போது அவர் உருவத்திற்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாமல் போனதே மிகபெயர் பெற்றது. ஒரு பாத்திரமே இப்படி என்றால், படத்தில் வரும் அனைவரும் இந்த மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் கதை இதுதான்.
அந்த நகரத்துக்கு வரும் புது மேயர், காவல் துறையில் போதிய நபர்கள் இல்லாததால், பொதுமக்களில் யார் விருப்பப்பட்டாலும் போலீஸ் ஆகலாம். அதற்கு போலீஸ் அகடமியில் சேர்ந்தால் போதும் என்று அறிவிக்கிறார். இதனால் மக்களில் பலர் ஆர்வமாக அங்கு சேர்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் போலீஸ் ஆவதற்கு அடிப்படை தகுதி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நம் ஹீரோ மகோனியும் இணைகிறார். மகோனி ஒரு முரட்டு வாலிபன். அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்பவன். மகோனியின் தந்தை தெரிந்தவர் ஒருவர் மூலம் மகோனியை இங்கு அனுப்பினாலாவது திருந்தி விட மாட்டானா என்று அனுப்புகிறார். ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார். இந்த அகடமியில் இருந்து ஓடி வந்துவிட்டால் கடுமையான ஜெயில் தண்டனை அளிக்கப்படும். அதே சமயம் அவர்களாக துரத்தி விட்டுவிட்டால் பிரச்சனை இல்லை. மகோனியுடன் சேர்ந்து குறும்புக்கார திருடன் ஒருவன், மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன், அப்பாவி பெண் ஒருத்தி, ஏழரை அடி உயர மனிதன் ஒருவன் என்று பலபேர் அங்கு இணைகிறார்கள்.
இவர்களுக்கு பயிற்சி அளிக்க கேப்டன் ஹாரிஸ் என்பவர் வருகிறார். இவர் நம்ம வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி. டென்சன் பார்ட்டி. அகடமியில் சேர்ந்திருப்பவர்களை எல்லாம் மனிதனாக கூட மதிக்காதவர். மேயரின் இந்த அறிவிப்பு அவருக்கு பிடிக்கவில்லை. எனவே இவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து அவர்களை நீக்குவதே இவரின் நோக்கம். இவருக்கு ஒரு நிபந்தனை விதிக்க படுகிறது. அதாவது மகோனியை எக்காரணம் கொண்டும் நீக்க கூடாது. அவனாக ஓடிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆரம்பிக்கிறது போட்டி. ஹாரிஸ் ஒவ்வொரு முறையும் அவர்களை முட்டாளாக்க நினைத்து தானே முட்டாளாகிறார். இவருக்கு மகோனியை பிடிக்கவே இல்லை. என்ன செய்வது அவனை நீக்க முடியாது. வேண்டுமானால் அவனை கொடுமை படுத்தி ஓட வைக்கலாம். ஆனால் மகோனி எதற்கும் அஞ்சாதவன். ஹாரிஸ் என்ன செய்தாலும் எஸ்கேப் ஆகி விடுகிறான். கடைசியில் அனைவரும் போலீஸ் ஆனார்களா? ஹாரிஸ் என்ன ஆனார்? என்பதை வயிறு வலிக்க சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோ மகோனிதான் என்றாலும், கேப்டன் ஹாரிசாக வருபவர் பின்னி எடுத்திருப்பார். இவரின் காரெக்டர் ஷோலே படத்தில் வரும் அஸ்ராணி மாதிரி வடிவமைக்க பட்டிருக்கும். ஒரு கடமை தவறாத, கறாரான காவல்துறை அதிகாரி மாதிரி தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விறைப்பாக இருப்பார். ஆனால் நமக்குத்தான் சிரிப்பாக வரும். படத்தின் இறுதி வரை தன் குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார். அதே போல படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. குறிப்பாக மிலிடரி ஆபிசராக வரும் டாக்ல்பேரி எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்குவது, மிமிக்ரி கலைஞராக வரும் லார்வேல் ஜோன்ஸ் திடீர் திடீரென மிமிக்ரி செய்வது போன்றவற்றை குறிப்பிடலாம். கடைசி வரை இவர்கள் பாத்திரம் மாறவே மாறாது.
சில தகவல்கள்...
இந்த படம் மொத்தம் ஏழு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் மூன்று பாகங்களை தாராளமாக பார்க்கலாம். மற்ற பாகங்கள் எல்லாம் சுமார் ரகம்தான்.
முதல் பாகம் வெளிவந்த ஆண்டு 1984. முதல் பாகத்தின் இயக்குனர் ஹக் வில்சன். அசால்ட்டாக ஆரம்பித்த ஒரு படம் மிகப்பெரும் வெற்றி பெரும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
முதல் பாகத்தின் வசூல் மட்டும் மற்ற அனைத்து பாகங்களின் மொத்த வசூலை விட அதிகம்.
மிகைப்படுத்தப்படாத காமெடி காட்சிகள் படத்தின் பெரிய பலம். நேரம் கிடைத்தால் பாருங்கள்...
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...
1 comments:
அதெப்படி இந்த மாதிரி 'hidden-gems' படங்களை மட்டும் பார்த்து விமர்சனம் எழுதுகிறீர்கள்?
இந்த படத்தையும் நான் பார்த்ததில்லை. சந்தர்ப்பம் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. அதற்கென்ன, அது தான் கதையை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்களே. :)
Post a Comment