விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 31, 2011

மங்காத்தாவை மிஞ்சிய வேலாயுதம்




தீபாவளிக்கு வந்த மூன்று படங்களையும் பார்த்து பெரும் குழப்பம் ஏற்பட்டு, "எந்த படம் நல்ல படம்?", என்று தெரியாமல் கன்பியூஸ் ஆகி, இப்போதுதான் தெளிந்திருக்கிறேன். மேலும் பதிவெழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. ஆதலால், வெகு நாட்களுக்கு பிறகு திரை விமர்சனம் ஒன்றை எழுதப்போகிறேன். நடு நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

நடு நிலை விமர்சனம் #1 


தீபாவளிக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, தீபாவளிக்கப்புறம் அப்படியே தலை கீழாக இருக்கிறது. ஏழாம் அறிவு மண்ணை கவ்வ, லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடும், கோடிக்கணக்கான மக்களின் ரசனையோடும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது வேலாயுதம். கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆகவே நான் ரசித்ததை மட்டும் சொல்கிறேன். முன்னெப்போதும் விட விஜய் மிக இளமையாக இருக்கிறார். அதிலும் மாயம் செய்தாயா பாடலில் செமே கியூட். சிக்ஸ் பேக் சூர்யாவிடம் இல்லாத வசீகரம் இவரிடம் உள்ளது. இது வரை மிக சீரியஸான அண்ணன் தங்கை பாசத்தை இப்படியும் காட்டலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். பாசமிக்க அண்ணனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். கிராமத்தில் அவர் அடிக்கும் லூட்டியாகட்டும், அவரைப்பற்றிய பில்டப் வசனங்களுக்கு அப்பாவியாக ரீயாக்ஷன் கொடுப்பதாகட்டும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். 

ஆக்சன் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம். அதிலும் அந்த ரயில் காட்சி, மிக சிறப்பானதாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் மோதலில் அனல் பறக்கிறது. எல்லாம் செய்துவிட்டு அமைதியாக செல்லும் இடத்தில் விஜய் மனதை அள்ளுகிறார். விஜய் மீது எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் ஒரே மாதிரி நடிக்கிறார் என்று. ஒரு மாஸ் படம் இதை விட சிறப்பாக எப்படி இருந்து விட முடியும் என்று தெரியவில்லை. விஜய்க்கு அடுத்த படியாக படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஜெனிலியா. இதுவரை லூசுப்பெண்ணாகவே பார்த்து வந்த இவர் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். விஜய் மீது காதல் கொள்வதாகட்டும், பின்னர் அதை மனதில் மறைப்பதாகட்டும், ஜெனிலியா நெஞ்சை கொள்ளை கொள்கிறார். 

ஹன்ஸிகா, சந்தானம் சொல்வது போல வெண்ணையில் செய்த சிலை போல இருக்கிறார். அப்பாவி கிராமத்து பெண் கேரெக்டரை அருமையாக செய்திருக்கிறார். இன்னும் ஒரு வருடத்துக்கு இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப்போவது உறுதி. சந்தானம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் தியேட்டரே சிரிப்பலையில் மிதந்தது. படத்தின் பெரும் பலங்கள் , கேமரா மற்றும் பின்னணி இசை. கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அந்த ரயில் காட்சியில் எங்கெல்லாம் கேமரா வைத்திருந்தார்கள் என்றே தெரியவில்லை. அதே போல விஜய் ஆண்டனி, ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஆடியோவிலேயே மிகப்பெரிய ஹிட். படத்தில் பார்க்கும்போது மிக அருமை. ஜில்லாக்ஸ் பாடலுக்கு கால்கள் தாளம்போடுவதை தடுக்க முடியவில்லை. 

கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டுமே 7 கோடி வசூல் ஆகி உள்ளதாம். இது வேலாயுதத்தை விட அதிகமான திரை அரங்குகளில் வெளியான எந்திரனுக்கு இணையானது. மேலும் இது போட்டியே இல்லாமல் வந்த மங்காத்தாவின் பத்து நாள் வசூல் என்பதை மனதில் கொள்க. இனி மாஸ் ஓப்பனிங் யாருக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். சிகரெட் பிடிக்கவில்லை, தண்ணி அடிக்கவில்லை, கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனாலும் தன் அப்பாவித்தனத்தாலேயே மாஸ் காட்டுகிறார் விஜய். எம்ஜியாருக்கு அப்புறம் சம காலத்தில் யாராலுமே இதை செய்ய முடியாது என்பது உறுதி. 

வேலாயுதம் - 1000வாலா பட்டாசு 



நடுநிலை விமர்சனம் #2 

கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதாம் சரி. லாஜிக் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. 


"கெமிக்கல் பேக்டரிக்குள் செல்லும் தண்டவாளம் நேராக விஷ வாயு கண்டெய்னரில் சென்று ஏன் முடிகிறது?" என்று நான் கேட்கபோவதில்லை. "அந்த பார்வை தெரியாத பெண் கத்தியவுடன், அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் அனைவரும் அமைதி ஆவது எப்படி?" என்று நான் கேட்கப்போவதில்லை. ஜெனிலியா ஏதோ ஒரு டி‌வி சேனலில் வேலை பார்க்கிறார். "ஆனால் அங்கே எப்போதுமே ஜெயா டிவியே ஓடிக்கொண்டிருப்பதை ஏன்?" என்று நான் கேட்கப்போவதில்லை. "கதாநாயகனுக்கு இருக்கும் முறைபெண்கள் எல்லோருமே சேட்டு வீட்டு பெண்கள் போலவும், லூசாகவும் இருப்பது ஏன்?" என்று கேட்கப்போவதில்லை. "இறுதிக்காட்சியில் இருவரும் அந்த சின்ன கேமராவின் பிரேமுக்குள்ளேயே சண்டை போடுவது ஏன்?" என்று கேட்கபோவதில்லை. கிளைமாக்ஸில், "அவ்வளவு நேரம் அந்த அண்டர் கிரவுண்ட் சண்டை லைவ் ரிலே ஓடிக்கொண்டிருக்கும் வரை காவல் துறையும் அதை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்ததா?" என்றும் கேட்கபோவதில்லை. ஒரு உள்துறை அமைச்சர் ஒரு வார்டு கவுன்சிலர் ரேஞ்சுக்கு இறங்கி வேலை செய்வதை பற்றியும் நான் கேட்கபோவதில்லை. 

சிங் இஸ் கிங் (Singh is King) படத்தில் வரும் கோழி பிடிக்கும் சீனை அப்படியே ஆட்டைய போட்டிருக்கிறார்கள். மிக மிக நல்லவராக வரும் விஜய், பெண்களின் சேலையை உருவுவதும், ஜெனிலியாவின் டிக்கியில் தட்டுவதும், ஜெனிலியாவை உடை மாற்றும் அறையில் பார்த்ததும், தானும் பதிலுக்கு திறந்து காட்டுவதும் அப்பாவித்தனமாம். விஜய்க்கு நடிக்க தெரியாது என்ற பேச்சு பரவலாக இருக்கிறதல்லவா, ஆகவே பெரும்பாலான காட்சிகளில் முகத்தை அஷ்ட கோணலாக வைத்து நடிக்க முயன்று கடுப்பேற்றுகிறார். 

ரயில் விபத்தை அடிப்படையாகக்கொண்ட அன்ஸ்டாப்பாபுள் (Unstoppable) படத்தை ஐந்து நிமிடத்துக்குள் எடுத்து, அதில் சூப்பர் ஹீரோவை நுழைத்த உத்தி ராஜாவுக்கு மட்டுமே கை வந்த கலை. அந்த படத்தின் இயக்குனர் இதை பார்த்தார் என்றால், ஏதோ ஸ்பூஃப் என்று நினைத்துக்கொள்வார். ஜெனிலியா மிக வறட்சியாக இருக்கிறார். அதற்கெல்லாம் சேர்த்து ஹன்ஸிகா மிக செழிப்பாக இருக்கிறார். பலான படத்தில் பிட்டு போடுவார்களே அதே போல இந்த படத்தில் இரண்டு பிட்டுகளில் சாரி காட்சிகளில் பயன்பட்டிருக்கிறார். எம்‌எஸ் பாஸ்கர் மாதிரி ஒரு "மாமா" அமையமாட்டாரா என்று எல்லோரும் நிச்சயம் ஏங்குவார்கள். இந்த படத்துக்கு சந்தானம் பிளஸ் பாயிண்டா இல்லை மைனஸ் பாயிண்டா என்று தெரியவில்லை. 

நீங்கள் தியேட்டருக்கு நிறைய பஞ்சு எடுத்து சென்றாலும், உங்கள் காது ஜவ்வு கிழிவதை யாராலும் தடுக்க முடியாது. ரீரிக்கார்டிங்கும் வேலாயுதமாக மாறி காதை படம் பார்க்கிறது. விஜய் ஆண்டனி தான் ஆட்டைய போட்ட பழைய மெட்டுக்களையே திரும்ப டின்கரிங் செய்து கொடுத்திருக்கிறார். ஜில்லாக்ஸ் பாடல், சுக்ரன் படத்தில் வரும் சாத்திக்கடி போத்திக்கடி பாடலை நினைவூட்டுகிறது. இறுதிக்காட்சியில் சாமர்த்தியமாக தன் கட்சி கொடியை இணைத்து விட்டு அதுவும் பொய் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்கள். தல வந்தாச்சு என்று சொன்னவுடன், மிரண்டு ஓடுவது போல நடித்திருக்கிறார் விஜய். கலாய்ச்சிட்டாராமாம்... 

இதையும் ரத்தத்தின் ரத்தங்கள் காவலன் மாதிரியே கொஞ்ச நாளைக்கு கொண்டாடுவார்கள். அப்புறம் மறந்து விடுவார்கள். வேலாயுதம் விஜய்யின், வில்லு, குருவி, வேட்டைக்காரன், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் இணைகிறது. இதுக்குமேல முடியல.... 

வேலாயுதம் - என்னத்த சொல்ல... 

நடுநிலை விமர்சனம் #3 


அடப்போங்கப்பா... நானும் எத்தனை நடுநிலை விமர்சனம்தான் எழுதுறது? அப்படியே எழுதினாலும் ஒத்துக்கவா போறீங்க. அப்படி எழுதினா விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லுவீங்க. இப்படி எழுதினா சைக்கோன்னு சொல்வீங்க. எதுக்கு வம்பு? அதனாலதான்தான் இப்படி ஒரு சைக்கோ விசிலச்சான் குஞ்சாக மாறிட்டேன். உங்களுக்கு எந்த விமர்சனம் பிடிச்சிருக்கோ அதை படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க . ஏன்னா விமர்சனத்தை படிச்சுட்டு படம் பாக்கிறவுங்க ரொம்ப கம்மி. சந்தோசத்துக்குதானே விமர்சனம் படிக்கிறீங்க. அதை நான் ஏன் கெடுக்கணும். அதுக்காக மாத்திப்படிச்சு கடுப்பானா நான் பொறுப்பு கிடையாது. இதுக்கு நீங்க போட போற கமெண்ட்ஸ் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னா நமக்கு ஹிட்ஸ்தான் முக்கியம். தளபதி பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம். சொன்னாங்க. 

பி கு: இந்த படத்தில் வேலாயுதம் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடையாது. அவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்ததே பெரிய பரிசுதான். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

October 28, 2011

தீபாவளிக்கு சினிமா பார்த்ததன் விளைவு....



டிஸ்க்: இது வழக்கம்போல கற்பனையே. வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. சீரியசாக எடுத்துக்கொண்டு காண்டு ஆகாதீர்கள். தீபாவளி அன்று ஐநூறு ரூபாயை தொலைத்த என் உணர்ச்சிகளை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும். 

































































முழுவதும் படிக்க >>

October 24, 2011

பட்டாசு போல... மத்தாப்பு போல

நண்பர்களே, என் சார்பாக இவர்கள் எல்லாம் உங்களிடம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். 



















முழுவதும் படிக்க >>

October 22, 2011

எனக்கு அறிவாளியாக ஆசையாக இருக்கிறது



முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் உள்ள குக்கிராமத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கொண்டு, எந்த வேலையும் செய்யாமலேயே காலத்தை கழித்து வந்தான். முப்பாட்டன் காலத்து சொத்துக்கள் இருந்ததால் அவனது ஜீவனத்துக்கு குறைவொன்றும் இல்லை. எப்போது தெருவில் சென்றாலும் கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செல்வான். யாருமே இவனை மதிக்கமாட்டார்கள். மாறாக அதே ஊரில் ஏழை பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மதித்தார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. தன் நண்பனிடன் கேட்டான் 

"அதெப்படி?, அவன் அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிறான். ஆனால் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள். என்னை எவனும் மதிக்க மாட்டேங்கறான்?"

நண்பர் கூறினார், "அவனை எல்லோரும் அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் அறிவாளி என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டால், உன்னையும் எல்லோரும் மதிப்பார்கள்." 

அந்த நொடியே, நம்மாளுக்கு அறிவாளி ஆகிவிட வேண்டும் என்ற பேராவல் உண்டானது. ஆனால் எப்படி என்ற உபாயம்தான் தெரியவில்லை. நண்பரின் ஆலோசனைக்கிணங்க ஊருக்கு வெளியே உள்ள ஒரு சாமியாரை பார்த்து, அவரிடம் பேசி, அறிவாளியாகும் வழியை கண்டு பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன், அந்த சாமியாரை சந்திக்க சென்றான். 

தியானத்தில் இருந்த சாமியாரின் முன்னால் தவிப்புடன் அமர்ந்திருந்தான். வெகு நேரம் கழித்து கண் திறந்த சாமியார், அவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன், மெலிதாக புன்னகைத்தார். பிறகு, "தெளிவாக சொல். நீ அறிவாளி ஆக வேண்டுமா? அல்லது அறிவாளி போல காட்டிக்கொள்ள வேண்டுமா?", என்று கேட்டார். 

இவன் திருதிருவென முழித்தான். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சாமி?", என்று கேட்டான். 

அவர், "அறிவாளி ஆவதற்கு வருடங்கள் ஆகும். ஆனால் அறிவாளி போல காட்டிக்கொள்வதற்கு கண நேரம் போதும். அறிவாளியாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமயத்தில் மாட்டிக்கொண்டு விழிக்க நேரிடும்.", என்று கூறினார். 

இவன் உடனே, "அப்படியானால் நான் அறிவாளியாக வேண்டாம். அறிவாளி போல காட்டிக்கொண்டால் போதும்." என்று கூறினான். 

சாமியார் இவன் காதில் ஏதோ சொல்ல, இவன் முகம் பிரகாசமானது.

அடுத்த நாளே அவன் பெயர் அந்த நாடு முழுவதும் பிரபலம் ஆனது. இவன் பின்னால் பலர் வரத்தொடங்கினர். அவனை அறிவாளி என்று ஒரு கூட்டம் தலையில் வைத்து கொண்டாடியது. வெளியூர் சென்றிருந்த அவனது நண்பருக்கு மகா ஆச்சர்யம். இவனிடம், "எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லோரிடமும் அறிவாளி என்ற பெயர் பெற்றாய்?", என்று கேட்டார். 

அவன், "இன்று இரவு நடக்கும் இலக்கிய கூட்டத்துக்கு வா. உனக்கே புரியும்." என்று கூறினான்.  

அன்று இரவு இருவரும் அந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெருங்கூட்டம். அறிஞர் ஒருவர் தனக்கு தெரிந்த கருத்துக்களை மக்களிடம் கூறிக்கொண்டிருந்தார். 

அவர் பேசி முடித்தவுடன், நம்மாள் எழுந்து, நீங்கள் கூறுவது அத்தனையும் பொய். எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்." என்று அடித்து பேசினான். 

அவர் சில சான்றுகளை எடுத்துக்காட்டினார். இவன், "இல்லையில்லை. இவை எல்லாம் போலியாக தயாரிக்கபட்டவை. உங்களை நம்ப முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க முடியுமா?" என்று சவால் விட்டான். அவர் அமைதியாகி விட்டார். 

இப்படியே வரிசையாக ஒவ்வொருவரின் கருத்துக்கும் எதிர்கருத்தை தெரிவித்து, நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டான். எல்லோரும் பயந்து பின்வாங்கினார்கள். இவன் நண்பனிடம், "பார்த்தாயா?,  இருக்கிறது என்று சொல்வதற்கு நிறைய அறிவும், சான்றுகளும் தேவை. இல்லை என்று சொல்வதற்கு அறிவும், சான்றுகளும் தேவை இல்லை. இருக்கிறது என்று நிரூபிக்க நிறைய கால அவகாசம் வேண்டும். இல்லை என்று நிரூபிக்க, கண நேரம் போதும். என்னிடம் விவாதம் செய்யும் அனைவரும், ஒரு கட்டத்தில் பின் வாங்கி விடுவதால், மக்களும் என்னை அறிவாளி என்று ஒப்புக்கொண்டு விட்டனர்." என்று பெருமிதம் பொங்க கூறினான். 

இந்த கதையை படிக்கும்போது, நம்மூரில் இருக்கும், பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். 


- சுகி. சிவம் 
(சிற்சில மாற்றங்களுடன்)
ஏமாற்றாதே, ஏமாறாதே, புத்தகத்திலிருந்து






உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

October 21, 2011

வெட்டி அரட்டை - வம்பு வழக்கு.



வணக்கம் நண்பர்களே, ரொம்ப நாளைக்கு முன்னால் கழுத்தை அறுத்த ஏர்டெல் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதை இங்கும் நினைவு கூறுகிறேன். இப்போது பிரச்சனை எனக்கு ஏர்டெல்லுக்கும் இல்லை. எனக்கு இணைப்பு கொடுத்த உள்ளூர் ஏஜென்சிக்கும் எனக்கும். இன்னும் மோடம் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஆகவே பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. எப்போது இந்த பிரச்சனை தீரும் என்றும் தெரியவில்லை. ஆகவே பதிவுலக நண்பர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (தீபாவளி அன்று கூற இயலுமா என்று தெரியவில்லை).

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகள். 


ஒரு சில புதிய நடைமுறைகளோடு தொடங்கி, பாதி முடிந்திருக்கும் இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளையுமே வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. சொந்த மண்ணில் ஆடிய இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமும் வேகமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. அணியின் முக்கிய வெற்றிக்கு பங்காற்றும் பீல்டிங்கும், பவுலிங்கும் படு சொதப்பலாக இருக்கிறது. அதிலும் மிகவும் எதிர்பார்த்த ஸ்வான் மூன்று போட்டிகளிலுமே ஏமாற்றமே அளித்தார். விக்கெட் கீப்பர் கீஸ்வெட்டருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. "அவர் இங்கிலாந்து அணியில் ஆடுகிறாரா? இல்லை இந்திய அணியில் ஆடுகிறாரா?", என்று அவர்களுக்கே சந்தேகம் வந்திருக்கும். மாறாக இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். குறிப்பாக விராட் கோலி, கம்பீர் மற்றும் தோனி தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். ஓப்பனிங்தான் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. இந்த தொடரில் சேவாக் மற்றும் யுவராஜ் இல்லாமல் இருப்பது, இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே. 

பீதியை கிளப்பும் படங்கள் 


ஒருகாலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாக இப்போது இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் ரிலீஸ் ஆகின்றன. அதிலும் இந்தி படமான ரா ஒண்ணும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது . மற்றபடி முன்னணி நடிகர்களின் படமான வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு மட்டுமே ரிலீஸ் ஆகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த இரண்டு படங்களுக்குமான புரோமோக்களே பீதியை கிளப்பும் வகையில் இருக்கின்றன. எந்த படமுமே தோல்வியை தழுவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. 


முதலில் வேலாயுதம். படத்தின் ட்ரெயிலர் பட்டையை கிளப்பி விட்டது என்று சில விஜய் ரசிகர்கள் சொன்னதை கேட்டு நானும் ட்ரெயிலர் பார்த்தேன். அப்படி என்ன பட்டையை கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. வழக்கமான படங்கள் போலவே இருக்கிறது.குல்லா அணிந்து வரும் ஒரு காட்சியில் விஜய் அந்நியன் போல வாய்ஸ் மாற்றி பேசுகிறார். அது இன்னும் பீதியை அதிகப்படுத்தி விட்டது. இதற்கு மேல் படம் வந்த பிறகு சொன்னால்தான் நன்றாக இருக்கும். இது இப்படி என்றால் ஏழாம் அறிவு இன்னும் மோசம். படத்தின் ட்ரெயிலர் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்தாலும், முருகதாஸின் பேட்டிகள்தான் பீதியை கிளப்புகின்றன. "நீங்க எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர்பார்க்கிறீர்களோ, அதை விட மேலே மேலே மேலே இருக்கும்!", என்று சொல்கிறார். இது ஓவர் கான்ஃபீடன்சா? இல்லை படம் உண்மையிலேயே அப்படி இருக்குமா? என்று தெரியவில்லை. வரட்டும் பார்க்கலாம். 

ரஜினி என்ற ஊறுகாய் 


இதை நான் சொல்லவில்லை. பிரபல பதிவராக வலம்வரும் நண்பர் பி.பி. அவர்கள் கூறியது. ஷாருக்கான் ரஜினியை ஏமாற்றி, தன் படத்தில் ஊறுகாயாக பயன்படுத்தி விட்டார் என்று கூறி உள்ளார். மேலும் எந்திரன் படம் ஒரு காப்பி என்றும், ரஜினி பெரிய பிராடு என்றும் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். "எந்திரன் காப்பியா? இல்லையா?", என்ற விவாதம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ரஜினியை ஏமாற்றி ஷாரூக் நடிக்க வைத்திருக்கிறார் என்பது ஏற்க முடியாதது. இது ஒரு பிசினஸ் தேவை என்பது இருவருக்குமே தெரிந்திருக்கும். அதே போல நட்பு அடிப்படையில் ரஜினி தெரிந்தே நடித்திருக்கலாம். ரஜினி சம்பந்தமாக எந்த செய்தி வந்தாலும் அது ரசிகர்களை பொறுத்தவரை அது இனிமையான செய்திதான். ஆகவே அவர்கள் கூப்பாடுதான் போடுவார்கள். அது மாற்ற முடியாதது. இப்போதும் எங்கள் ஊரில் ரா ஒண்ணுக்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


ரஜினி ஒரு பிராடு. இந்த கூற்றை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. வேற ஏதாவது சொன்னால் நல்லா இருக்கும். இதை பற்றியும் இப்போது விவாதம் செய்ய தேவை இல்லை என்று நினைக்கிறேன். மேலே உள்ள கருத்துக்களை இந்த பதிவில் எழுத காரணம், கட்ட கடைசியாக அவர் தெரிவித்த கருத்துக்கள்தான். "நானும் எவ்வளவோ பதிவுகள் எழுதி இருக்கிறேன். அதற்கெல்லாம் வந்து கருத்து தெரிவிக்காத நீங்கள், இப்போது ஓடோடி வந்திருக்கிறீர்களே?", என்று கூறி இருந்தார். என்னை செருப்பால் அடித்தது போல இருந்தது. ஆகவே, "நமக்கு அங்கே கருத்து தெரிவிக்க என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று வந்துவிட்டேன். மேலும், "ரஜினியை திட்டியதால் மாற்று கருத்து தெரிவிக்கிறீர்கள், ஆனால் ரஜினியை புகழ்ந்து எழுதி இருந்தால் பாராட்டி இருப்பீர்கள்." என்று கூறி இருக்கிறார். வாஸ்தவம்தான். ஆனால் தங்கள் அபிமானத்தை பற்றி தரக்குறைவாக பேசியதை தாளாமல்தானே கருத்து தெரிவிக்கிறார்கள்? சரி விடுங்கள். என் மனதை அரித்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி,  கருத்தை பதிவு செய்வதற்கு, என்ன யோக்கியதை வேண்டும்? தொடர்ந்து படித்து கருத்து தெரிவிப்பவர்கள் மட்டுமே ஒரு பதிவிற்கு கருத்து தெரிவிக்க வேண்டுமா? தொடர்ந்து படித்து, ஆனால் எப்போதுமே பின்னூட்டமிடாதவர்கள் கருத்து தெரிவிக்க கூடாதா?

தமிழ் மணம்?


நண்பர் பன்னிக்குட்டி அவர்கள் பய(ங்கர)டேட்டா ஒன்றை வெளியிட, பின் விளைவுகளாக நடந்தவை பெரும்பாலான பேருக்கு தெரியும். இதில் மதவெறி என்று வேறு இழுத்து விடுகிறார்கள். அதை எல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால், அடிப்படை பிரச்சனை, தமிழ் மணம் பற்றி தவறான தரவு ஒன்றை பன்னிக்குட்டி கூறியதால், அதனை கண்டிக்கும் விதமாக பெயரிலி என்ற ஒருவர் இட்ட பின்னூட்டங்கள்தான். அவர் தன்னை தமிழ் மணத்தின் பிரதிநிதியாக கூறிக்கொள்கிறார். ஒரு பதிவரின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமானால், அதற்கென்ற நாகரிகமான ஒரு முறை இருக்கிறது. அதிலும், ஒரு புகழ்பெற்ற திரட்டியின் பிரதிநிதி என்பவர் எந்த மாதிரியான வார்த்தை பிரயோகங்களை கையாள வேண்டும் என்று கூட தெரியாமல் நடந்து கொண்டது சரியல்ல. இங்கே யாரும் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஆகவே அவரவர் தங்களின் ஆணவ கிரீடத்தை இறக்கி வைத்தால்தான் பிரச்சனை தீரும். இல்லை என்றால் முடிவு ஒன்றுதான். அது ஒன்றுமில்லை. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

October 7, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 5

நெட் இணைப்பு இன்னும் பிரச்சனையாகவே இருப்பதால் இங்கே சரிவர தலைக்காட்ட முடியவில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை. இந்த தொடர் முடியும் தருவாயில் இருப்பதால், இதை விரைவாக வெளியிடுகிறேன். இதுவரை எனக்கு பிடித்த பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறினேன். தற்போது இந்திய அணியில் என்னை கவர்ந்தவர்களை பற்றி கூறுகிறேன். பொதுவாக சொந்த அணியில் ஒரு சிலரைத்தவிர எல்லோருமே பிடித்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே சட்டென நினைவுக்கு வரும் வீரர்களை பற்றி மட்டும் கூறுகிறேன். 


சவுரவ் கங்குலி


இன்றும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்பதன் முதல் காரணம் இவர்தான்.  சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது ஆட்டத்திறமை மட்டுமல்லாமல், இவரது ஆளுமைக்காகவும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள், என்னையும் சேர்த்து. இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர். 

மொஹமது அசாருதீன்


என் முதல் கிரிக்கெட் கதாநாயகன். சிறப்பான ஆட்டக்காரர். இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், இவர் மீதுள்ள அபிமானம் காரணமாக இவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. சமீபத்தில் மகனை பறிகொடுத்துள்ளார். இவ்ரது மகனுடைய முகம் இளவயது அசாருதீனை நினைவுபடுத்துகிறது. 

சச்சின் டெண்டுல்கர்


கிரிக்கெட் என்று எழுதிய பிறகு, அடுத்து என்ன வார்த்தை எழுதுவது? என்று நினைத்தால், மனதில் வருவது டெண்டுல்கர்தான். தன் வாழ்நாள் முழுவதையுமே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற வீரன். இவ்வளவு புகழ், பணம் சம்பாதித்த பிறகும், இன்னமும் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் வாழ்கிறார். அதிக பெண் ரசிகைகளை பெற்றவர்.
  
ராகுல் டிராவிட்


"கிரேட் வால் ஆப் இந்தியா" என்று ரசிகர்களாலும், "ஜாமி" என்று சக வீரர்களாலும் அழைக்கப்படும் இவர், கிரிக்கெட் உலகின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் ஓவர்சீஸ் நாயகன். அரை கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து அக்தர் பந்தை வீச, அதை அசால்டாக அடிக்க, பந்து அங்கேயே கிடக்கும்.  அக்தர் வெறுத்து போய் விடுவார்.

அஜய் ஜடேஜா


இவர் உள்ளூர் நாயகன். உள்ளூர் ஆடுகளங்களில் தூள் பறத்தி விடுவார். எப்போதுமே சிரித்தபடியே ஆடுபவர். 

ஹேமாங் பதானி


மிக சிறந்த பேட்ஸ்மேன். பல இந்திய வீரர்கள் மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடும்போது, இவர் கூலாக ஆடுவார். அதே நேரம் அதிரடியாகவும் ஆடுவார். பிரபலமான வீரராக வர வேண்டியவர், என்ன காரணம் என்று தெரியவில்லை, சோபிக்க முடியாமல் போனது. 

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்


இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை துவக்கி வைத்தவர். இவர் அடிக்கும் பந்துகள் வெகு தொலைவில் சென்று விழாது. மாறாக, செங்குத்தாக மேலே எழும்பி, எல்லை கோட்டை தாண்டி விழும். ஷாட் அடித்த பின் தோள்பட்டையை ஒரு உலுக்கு உலுக்கி, மூக்கை உறிஞ்சுவார் (போக்கிரியில் விஜய் செய்வது போல), இது மிக பிரபலம். 

வீரேந்தர் சேவாக்


இவருக்கு புல்டோசர் என்றுதான் பெயர் சூட்டவேண்டும். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இடித்து தள்ளி போய்க்கொண்டே இருப்பார். ஒரு பேட்டியில் "எனக்கு ஆடுகளங்களைப்பற்றி கவலை இல்லை. பந்து வீச ஒரு பவுலர் இருந்தால் போதும்." என்று கூறினார். பல கேப்டன்கள் இவரை வீழ்த்த வியூகங்களை வகுத்து, இவர் அவுட் ஆகி விட்டாலே பெரிய கடமை முடிந்து விட்டதை போல பெருமூச்சு விட்டதுண்டு. 

வி‌வி‌எஸ் லக்ஷ்மன்


இன்றும் ஆஸ்திரேலியர்களிடம் அதிகம் திட்டு வாங்கும் வீரர் இவராகத்தான் இருக்கும். இவரை ஐந்தாம் நாள் வீரர் என்று அழைக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சுக்கு சாதகமான ஐந்தாவது நாளில் நிலைத்து ஆடும் திறமை மிக்கவர். டெஸ்ட் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.   

ராபின் சிங் 


கடும் உழைப்பாளி. இந்திய அணியின் மோசமான 90களின் இறுதியில், ஒற்றை ஆளாக அணியில் போராடியவர். இடைப்பட்ட ஓவர்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக பங்களித்தவர். நல்ல பீல்டர். 

சுரேஷ் ரேய்னா


முதலில் அணியில் இடம்பிடித்து, பிறகு நீக்கப்பட்டு, மறுபடியும் இடம்பிடித்தவர். பிறகு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். பயமறியாத இளம் வீரர். எனவேதான் பவுன்சர்களை அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகி விடுகிறார். இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். 

யுவராஜ் சிங்


இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். இந்திய அளவில் பெண் ரசிகைகளை அதிகம் பெற்றவர். ஆகவே சர்ச்சைகளும் அதிகம். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்றும் கூறப்படுகிறது. 

கபில்தேவ்


உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆக்ரோஷம் என்பது பந்து வீச்சில் இருக்கவேண்டும், என்று செய்து காட்டியவர். திலகரத்னேவை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியதை லைவாக பார்த்ததை இன்றும் மறக்கவில்லை. "நீங்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டீர்களா?", என்ற கேள்விக்கு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குமுறி அழுதார். 

இர்பான் பதான்


முதலில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆகி, அல்ரவுண்டராக மாறியவர். ஒரு காலத்தில், ஒப்பனர்களை வீழ்த்துவதையே குறிக்கோளாக வைத்திருந்தார். இவருக்கும் தோனிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இவரை அணியில் சேர்க்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். காயங்களால் அதிகம் அவதிப்பட்டவர்.  

ஜவகல் ஸ்ரீநாத்


கபில்தேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வேகப்பந்து வீச்சாளர். 2003 உலககோப்பை முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். ஆட்டம் சூடு பிடித்து விட்டால், ஓட்டு மொத்த போட்டியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் இந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர். 

அனில் கும்ப்ளே


90களில் கிரிக்கெட்டை கலக்கிய சுழல்பந்து மும்மூர்த்திகளுள் ஒருவர். கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி.  பல போட்டிகளில் ஒரு அரை மணி நேரத்துக்குள், ஒட்டுமொத்த ஆட்டத்தையுமே தலை கீழாக மாற்றி இருக்கிறார். 

ஹர்பஜன் சிங்


கும்ப்ளேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சுழற்பந்து வீச்சாளர். முரளிதரன் மாதிரி இவரும், "பந்தை எறிகிறார்", என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்து சாதித்தவர். இவர் பெயரை சொன்னவுடன், ஸ்ரீசாந்தும், சைமண்ட்சும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

அஜீத் அகார்க்கார்


வெகு வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது யார்க்கர்கள் மிக பிரபலம். ரன்களை வாரி வழங்கினாலும், சரியான நேரத்தில் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். 

ஜாகீர்கான்


இந்திய பவுலிங்கின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய காரணம் இவரது அதிரடியான பந்துவீச்சுதான். காயங்களால் அதிகம் அவதிப்படுகிறார். 

நயன் மோங்கியா


சொல்லிக்கொள்ளும்படியான ஒரு விக்கெட் கீப்பர். இவர், கலூவிதரானா, மொயின்கான் ஆகிய மூவரும் களத்தில் ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார்கள். இவரது "ஐகோ... சபா சபா" ஆகிவற்றை அர்த்தம் புரியாமேலேயே நாங்கள் தெருவில் ஆடும்போதும் கத்தி இருக்கிறோம். 

மகேந்திரசிங் தோனி


கேப்டன் கூல் என்று பெயரெடுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் இருந்து வந்து கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். இவரது குண்டக்க மண்டக்க பேட்டிங் ஸ்டைலே இவரது ஸ்பெஷல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர். 
   

-முடிந்தது 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...