விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 30, 2012

வெட்டி அரட்டை - மாட்டிக்கொண்டாள் மணிமேகலை

வணக்கம் நண்பர்களே... ஒரு மிக நீண்ட அறிவிக்கப்படாத விடுமுறைக்கு அப்புறம் உங்களை சந்திக்கிறேன். இதற்கு சில காரணங்கள் உண்டு. அதை இந்த பதிவிலேயே சொல்லி விடுகிறேன். கவர்ச்சி கன்னி தொடரை ஆரம்பித்தபடியே நிற்கிறது. இன்னும் நிறைய எழுதாமல் கிடக்கிறது. இதற்கும் காரணத்தை பதிவிலேயே கூறி விடுகிறேன்.

விமர்சன வித்தகர்கள்

பதிவுலகம் பிரபலமாக தொடங்கியதில் இருந்து, எந்த ஒரு திரைப்படத்தையும் மிக வெளிப்படையாக விமர்சிக்கும் பாங்கு அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு வெளிப்படை என்றால் மிக மிக கேவலமாக திட்டும் அளவுக்கு. இதில் ஒரு வித நேர்மை இருந்தால் கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட வெறுப்பே தெரிகிறது. ஒரு சில நண்பர்கள், தான் ரஃப் அண்ட் டஃப் ஆள் என்றும், ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆட்கள் என்றும் புரிய வைக்க வேண்டும் என்று காட்டுவதற்காக சில கெட்ட வார்த்தைகளையும் அடித்து விடுகிறார்கள். இதை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால் இவை முகம் சுளிக்க வைக்கும் என்பது உண்மை. "கடவுள் இல்லை", என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட "இருந்தா நல்லா இருக்கும்" என்று சொல்வதை ஏற்றுக்கொள்வது, அந்த கருத்து சொல்லப்பட்ட விதத்தாலேயே. விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். 


அதே போல சில பிரபல, நல்ல பதிவர்கள் படத்தின் கதையையே விமர்சனம் என்ற பெயரில் எழுதி விடுவதால், சமீப காலத்தில் வரும் மொக்கை படங்களில் உள்ள ஒரு சில சுவாரசியங்களும் படம் பார்க்கும்போது காணாமல் போய் விடுகிறது. இதனாலேயே இப்போதெல்லாம் எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை,

யூரோ கோப்பை

மேட்ச் பிக்சிங் என்று சொல்கிறார்கள். ஒரு தலைப்பட்ச முடிவுகள் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் சுவாரசியமாகவே உள்ளது. வழக்கம்போல எனது அபிமான ஜெர்மனி அரையிறுதியில் தோல்வியுற்றது. இந்த அணி இறுதி போட்டிக்கு வந்தால் ஸ்பெயினுக்கு சரியான சவாலாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அரையிறுதியில் இத்தாலியின் ஆட்டம் மிக அருமை. சொல்லப்போனால் ஸ்பெயினுக்கு இப்போதுதான் மிக கடினமான தருணம். இரண்டு அணிகளில் இத்தாலி அணியே சிறந்த அணியாக இருக்கிறது. பார்க்கலாம். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்களை பார்த்த போது அய்யோ பாவம் என்றே தோன்றியது. அப்புறம் ஆட்டம் தொடங்கும் முன் இரண்டு அணிகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்படும் நேரத்தில், ஒவ்வொரு வீரருடனும் ஒரு குழந்தை கை கோர்த்து வருகிறது. எங்கிருந்து புடிக்கிறீங்கப்பா?" என்ன அழகு....ச்சோ சுவீட்!!" என்று சொல்லத்தோன்றுகிறது.

மாட்டிக்கொண்டாள் மணிமேகலை

தொடர்ந்து பதிவுலகில் பல்வேறு பதிவுகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இந்நேரம் என்ன நினைத்துக்கொண்டு இந்த பத்தியை படிக்க தொடங்குவீர்கள் என்று எனக்கு தெரியும். அதுதான் இல்லை. இப்போது நான் சொல்லப்போவது அது அல்ல. மணிமேகலை என்ற பெண்ணை பற்றியும் அல்ல. சும்மா ரைமீங்காக வைத்த தலைப்பு அவ்வளவே.

"பெண்கள் பெரும்பாலும் தாங்கள் சைட் அடிக்கப்படுவதை விரும்புவார்கள். அதேபோல அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஆண்களை சைட் அடிப்பதிலும் கில்லாடிகள். அவர்கள் சைட் அடிக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்கவே முடியாது." இந்த அரிய தத்துவத்தை சொன்னவன், பள்ளிப்பருவத்திலேயே பல பெண்களை சைட் அடித்தும், பெண்களால் சைட் அடிக்கப்பட்டேன் என்று சொல்லிக்கொண்டும் திரிந்த அருமை நண்பன் ஒருவன். அன்றில் இருந்து இன்றுவரை எந்த ஒரு பெண்ணையுமே கையும் களவுமாக சாரி கண்ணும் சைட்டுமாக பிடித்ததில்லை. ஆனால் சென்ற வாரம் ஒரு பெண் பேருந்தில் பிடிபட்டாள். பேருந்தில் ஓரளவுக்கு கூட்டம். மாலை பள்ளி கல்லூரிகள் விடும் நேரம் என்பதால் பெரும்பாலும் யூனிஃபார்ம்களே தென்பட்டன. 

நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த ஒரு பாலிடெக்னிக் மாணவி குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு. நீங்க தப்பா நினைச்சா மாதிரிதான் நானும் நினைச்சேன். ஆனால் அவள் பார்வை ஊடுருவியது அருகில் கும்பலாக நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாணவர் கூட்டத்தை. ஒருவேளை அவளுடைய ஆள் அந்த கூட்டத்துக்குள் இருக்கிறானோ? என்னவோ? என்று நானும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல தலையை மாற்றி மாற்றி அந்த கும்பலையும் அவளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்(விளங்கிடும்....). பசங்க குழுவில் யாரும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. நான் கவனிப்பதை பார்த்ததும் அவள் முகத்தில் வந்ததே பாருங்கள் வெட்கம்.அவளது கண்கள் அலைபாய்ந்து அடங்கவே 5 நிமிடம் ஆனது. "ஹா ஹா மாட்டிக்கொண்டாயா?" என்று என்மனதில் நினைத்துக்கொண்டேன். இந்த சம்பவமே இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்(மறுபடியும் விளங்கிடும்...) என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பேஸ் புக்கில் ரசித்தது.
பேஸ்புக்கில் அவ்வப்போது உலாவுவது உண்டு. அந்த நேரத்தில் கண்ணில் தென்படும் சில பகிர்வுகள் களுக்கென்று சிரிக்க வைத்து விடும். சில நேரம் நம்மை அறியாமல் புன்னைகைக்க வைக்கும். அப்படிபட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 


பாதிக்கப்பட்டவர் போலிருக்கு.... 



என்னே கற்பனை வளம்......வடிவேலு முகம் எல்லாவற்றுக்குமே சரிப்பட்டு வருதே?


இதுவும் ஒருவகையில் உண்மைதானே..... ரஜினி ரசிகர்களே?



இந்த போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள்தான் கேட்பார்கள் போலிருக்கிறது. பதில் அதைவிட அறிவுப்பூர்வமாக இருக்கிறது..... 



புன்னகைக்காமல் இருக்க முடியவில்லையே....



இறுதியில் அது நடந்தே விட்டது..... கடந்த மாதம் என்னுடைய பிறந்த தினமான ஜூன் 10 அன்றே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 12இல் திருமணம் என்று நாளும் குறித்து விட்டாயிற்று. இது குறித்து நண்பர்களை வரவேற்று தனி பதிவில் வெளியிடுகிறேன். குடும்பஸ்தன் ஆகும் முன்னரே எத்தனை கட்டளைகள் கண்டிஷன்கள்? இப்போ புரியுதா? பதிவுலகத்துல ஏன் இத்தனை நாளாய் தலை காட்ட முடியவில்லை என்று?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க நண்பர்களே....
முழுவதும் படிக்க >>

June 1, 2012

என்ன மனுஷன்யா இவரு?

சில சொந்த வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் வெகு நாட்களாக வர முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும். வர வர தமிழ் சேனல்களின் மீதான ஈடுபாடே குறைந்து விட்டது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைக் கண்டால் கடுப்புதான் மிஞ்சுகிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். ஆனால் எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் அதில் ஃபேமிலி சென்டிமெண்ட், ஸ்லோமோஷன் காட்சிகள், அழுகை, கண்ணீர் என்று டிராமாக்களை அரங்கேற்றி கடுப்படிக்கிறார்கள்.அதிலும் சூர்யா பங்கு பெரும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில், பங்கேற்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் எல்லோருமே சூர்யாவிடம் வழிந்து தள்ளுகிறார்கள். தாங்க முடியல (பொறாமை?...... லைட்டா....) சிரிப்போலியில் இரவு 9 மணிக்கு கலகல மணி என்று கவுண்டமணி காமெடி ஒளிபரப்புவார்கள். அதை மட்டுமே ரசிக்க முடிகிறது. ஆனால் அதே நேரம் டிஸ்கவரி தமிழில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள்.



இதை பெரும்பாலானோர் பார்த்திருப்போம். Man Vs Wild என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி மிகப்பிரபலமானது. இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லி விடுகிறேன். விபத்து, இயற்கை சீற்றங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் என்னவெல்லாம் செய்து தப்பிக்கலாம்? இல்லை, உதவி வரும் வரை எவ்வாறு தாக்கு பிடிக்கலாம்? என்பதை படம் பிடித்து காட்டும் ஒரு நிகழ்ச்சி. காட்டில் தன்னந்தனி மனிதனாக பல சாகசங்களை செய்து காட்டுவார் இந்த நிகழ்ச்சியை வழங்கும் பியர் கிறில்ஸ். ஒரு சில காட்சிகள் மிரள வைக்கும், ஒரு சில காட்சிகள் பிரமிக்க வைக்கும், ஒரு சில காட்சிகள் அருவருப்பை உண்டாக்கும்.  ஏனென்றால் இவர் கையில் சிக்கும், பாம்பு, பல்லி, தவளை, பூச்சி, புழு என்று எல்லாவற்றையும் தின்று விடுவார். சில நேரங்களில் சமைத்து, பல நேரங்களில் பச்சையாக. யார் இந்த மனிதர் என்று தேடிப்பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன 

இவரது பெயர் எட்வர்ட் மைக்கேல் கிறில்ஸ் பிற்காலத்தில் எட்வர்டை பியர் ஆக மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே கராத்தே, ஸ்கை டைவிங்(பாராசூட் கட்டிக்கொண்டு விமானத்தில் இருந்து குதித்தல்), யோகா ஆகிய நிறைய விஷயங்களை மனிதர் கற்றுத்தேறிவிட்டார்.   எட்டு வயதில் இருந்தே எவரெஸ்ட் சிகரத்தின் மீது தீராத காதலைக்கொண்ட இவருக்கு, இவரது தந்தை பரிசாக எவரெஸ்ட் சிகரத்தின் போஸ்டரை பரிசளித்தாராம். அதை பத்திரமாக தன் படுக்கையறையில் ஒட்டி வைத்திருந்தாராம். தினமும் எழுவதும் அதைப்பார்த்தபடிதான், தூங்க போவதும் அதை பார்த்த பின்னர்தான். 

19ஆவது வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். 1996ஆம் ஆண்டு, பாராசூட் கட்டிக்கொண்டு குதிக்கும்போது அது சரியாக விரியாமல் போகவே 14,000 அடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். முதுகெலும்பு நொறுங்கி விட்டது. இவருக்கு மருத்துவம் அளித்த டாக்டர், "இவர் மயிரிழையில் தப்பி விட்டார். இல்லையென்றால், நிரந்தரமாக முடமாகி இருப்பார்.", என்று கூறினாராம். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்த முதல் வேலை, எவரெஸ்ட் மீது ஏறும் வேலைகளை தொடங்கியதுதான். ஒரே ஆண்டில் அதை நிகழ்த்தியும் காட்டினார்.தனது 23ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, மிக இளம் வயதில் எவரெஸ்ட் மீது ஏறிய பிரிட்டிஷ்காரர் என்ற பெருமையை பெற்றார். அந்த கணத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மண்டியிட்டு, அரைகுறை ஆக்ஸிஜனோடு தேம்பி தேம்பி அழுததையும், 20,000 அடிக்கு கீழிருந்து சூரியன் உதிப்பதை பார்த்ததையும் நினைவு கூறுகிறார்.

அதன் பிறகு நிறைய சாதனைகளை நிகழ்த்த தொடங்கினார், எல்லாமே ஒரு நல்ல நோக்கத்துக்காக பணம் திரட்டும் முயற்சியாகவே இருந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, 25,000 அடி உயரத்தில், கேஸ் பலூனில் தொங்கும் டேபிளில் உணவருந்தியது மற்றும், வட அமெரிக்காவில் இருந்து, ஐரோப்பா வரை, உறைந்த கடல் நீரில் மிகச்சிறிய படகில் பயணம் செய்து வட அட்லாண்டிக் கடலை கடந்தது. இந்த ரூட்டில்தான் டைட்டானிக் கப்பல் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.  ரத்தத்தை உறைய வைக்கும் இத்தகைய சாதனைகளை மிக அசால்டாக செய்த கிறில்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக மீடியாக்களில் தலைகாட்ட தொடங்கினார். இவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றது சேனல் 4இல் ஒளிபரப்பபட்ட Born Survivor:Bear Grylls என்ற நிகழ்ச்சிதான். பின்னர் இதே நிகழ்ச்சி, Man vs Wild என்ற பெயரில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. 

குறிப்பு:அருவருப்பான விஷயங்கள் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் என்றால், சிகப்பில் இருப்பதை படிக்காதீர்கள். 
இதில் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்தால் பிழைக்கலாம்? என்று செய்து காட்டுவார். அதிலும் உச்சகட்டமாக, ஒரு சாரைப்பாம்பை கொன்று, (உடலை தின்றபின்) அதன் தோலை மட்டும் உரித்து, அதில் தன்னுடைய சிறுநீரை சேகரித்து வைத்து, பாலைவனத்தில் தண்ணீரே கிடைக்காத நேரத்தில் பருகியதை சொல்லலாம். இதோடு மட்டுமல்லாமல், இறந்து கிடக்கும் ஆடு, எருமை, பன்றி, என்று எதையும் விட்டு வைக்காமல் தின்று விடுவார். நெருப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும். இல்லாத நேரத்தில் பச்சையாகவே தின்றுவிடுவார். அழுகிய உடல்களில் இருக்கும் புழுக்களையும் விடமாட்டார். மேலும் சில நேரங்களில் தண்ணீருக்காக வேண்டி, யானையின் சாணியை பிழிந்து நீர் அருந்தியும், ஒரு கரடியின் சாணத்தில் இருக்கும் செரிக்காத விதைகளை எடுத்து உண்டும் மிரள வைத்தார். இது போக, கண்ணில் ஒரு புழு, பூச்சி கிடைத்தாலும் விடுவதில்லை. சாப்பிடுவதோடு நில்லாமல் அவற்றின் சுவை என்ன? அதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் என்ன? என்பதையும் சொல்லுவார். 

பெரிய காட்டாற்று வெள்ளத்தை கடப்பது, செங்குத்தான மலை மீது ஏறுவது, அருவி வழியாக கீழே இறங்குவது அல்லது குதிப்பது என்று சாகசங்களையும் நிகழ்த்துவார். அதுபோக, காட்டில் இருக்கும் செடி கொடிகள், பாசிகள் அவற்றின் பண்புகள், விஷமுள்ளவை, விஷமில்லாதவை என்று எல்லாவற்றை பற்றியும் கூறிக்கொண்டே செல்வார். பல நேரங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போதுமான அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும், வேண்டுமென்றே சில ஆபத்துக்களை உருவாக்கி அதை கிறில்ஸ் எதிர்கொள்வதை போல அமைத்திருப்பதையும், இதை ஒளிபரப்புபவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். 

2012 மார்ச் மாதத்தோடு டிஸ்கவரி சேனாலோடு தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் கிறில்ஸ். இருந்தாலும் தனது அட்வெஞ்சர்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அதில் வரும் பணத்தை பெரும்பாலும் சேவை அமைப்புகளுக்கு கொடுத்து விடுகிறார். இவர் நிறைய புத்தகங்களும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய The Kid Who Climbed Everest என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. குடும்பத்தோடு தேம்ஸ் நதியில் மிதக்கும் படகில் வாழ்க்கை நடத்தி வருகிறார். தனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது தனது தந்தைதான் என்கிறார். "என் வாழ்வில் கடுமையாக எதையும் நினைக்கவில்லை. ஏனென்றால் கடுமையான நிகழ்வுகள் இல்லை என்றால் இன்று நானே இல்லை. அவைதான் என்னை உருவாக்கின. அப்படி சொல்லவேண்டுமானால், என் தந்தையின் மறைவுதான் எனக்கு மிகக்கடுமையான தருணம்." என்று கூறுகிறார். 

உழைத்துக்கொண்டே இருக்க விரும்பும் இம்மனிதரிடம், "உங்களுக்கு பிடித்த கட்டிடம் எது?", என்று கேட்டால், "மலைகள்", என்று சொல்லும் இவருக்கு பிடித்த திரைப்படம் Greystoke: The Legend of Tarzan. பொருத்தமான திரைப்படம்தான் என்கிறீர்களா?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...