விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 22, 2010

என்ன கிழித்து விட்டார் மணிரத்னம்?


இந்த ராவணன் படம் வந்தாலும் வந்தது கொஞ்சநாள் கற்பனை வறட்சியில் காய்ந்து போய் உட்கார்ந்து இருந்த பதிவுலகம் பின்னால் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக்கொண்டு எழுந்து விட்டது. படத்தை சிலாகித்து ஒரு சில விமர்சனங்கள் வந்தாலும், வழக்கம்போல் கிழித்து தோரணம் கட்டிய பதிவுகள் ஏராளம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த பதிவுலகம் பல கூறுகளாய் சிதறி போய் இருக்கிறது. தன்னுடைய நலனுக்காக அல்லது தன் நண்பனின் (தோழனின் அல்ல) கருத்துக்களுக்கு ஒத்து ஊதுவதற்கு என அவ்வப்போது ஒன்று கூடும். பின் முரண் பட்டு நிற்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும், மூன்று குழுக்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒன்றை ஆதரிக்கும் கூட்டம், எதிர்க்கும் கூட்டம், எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டம் அவ்வப்போது தன் கட்சியை மாற்றிக்கொண்டே இருக்கும். 

இந்த பதிவுலகம் எனக்கு கொஞ்ச நாள்தான் அறிமுகம். ஆனால் இதில் இருந்து நான் அறிந்து கொண்டது ஏராளம். குறிப்பாக உலகப்படம் என்றால் என்ன என்று பதிவுலகம் வந்த பின்தான் அறிந்து கொண்டேன். என்னை பொறுத்தவரை உலகப்படம் என்றால் என்ன? என்று கேட்டால், உள்ளூர் படங்களை மட்டம் தட்டுவதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் என்றே சொல்வேன். பதிவுலகில் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் மனதில் தான்தான் இந்த உலகில் புதிய கருத்துக்கள் சொல்லவேண்டும். தான் சொல்வதுதான் சரி, என்கிற எண்ணம் இருக்கிறது. எவன் என்ன சொன்னாலும் இந்த நாட்டாமையின் தீர்ப்பே இறுதியானது என்று மார்தட்டுகிறார்கள். அவர்களின் நண்பர்களும் "ஐயோ நாங்கள் இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். ஆகவே அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது!!" என்று புரியாமலேயே வழிமொழிகிறார்கள். 

ஒரு பிரபலம் சொன்ன சில வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன். "ஒரு சில மனிதர்கள் மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்கள். யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் செய்வதே அவர்களின் வேலை. எல்லோரும் கொண்டாடும் ஒரு விஷயத்தை தூற்றினால் தன்னை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள் என்பது இவர்களின் அற்பமான ஒரு எதிர்பார்ப்பு. இவர்கள் செய்யும் எதிர்மறை விமர்சனங்களில் எந்த வித நல்ல நோக்கமும் கிடையாது." அந்த பிரபலத்தின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர் சொன்ன கருத்துக்களை பற்றி ஆராயாமல், அவர் யார், அவர் யோக்கியதை என்ன என்று பின்புலத்தை ஆராய கிளம்பி விடுவார்கள்.


சமீபத்தில் வெளிவந்த ராவணனுக்கும் இதே கதிதான். இந்த படத்துக்கு வந்த விமர்சனங்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு இயக்குனரை மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே எழுதப்பட்டவையாக தோன்றுகிறது. "எனக்கு பிடித்தமாதிரி படம் எடுக்காவிட்டால் விமர்சனம் செய்வேன்." என்கிறார்கள். உனக்கு என்ன பிடிக்கும்?, ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே! ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல.


சரி எந்த படம்தான் உனக்கு பிடிக்கும்? சத்தியமாக கிம் கி டுக் தமிழில் படம் எடுக்க போவதில்லை. உனக்குத்தான் உலகப்படம் புரியுமே? கொரிய மொழியிலேயே போய் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே? மணிரத்னம் பார்ப்பனராம். அய்யா! சாமி! சத்தியமாக மணிரத்னம் மாதிரி ஆட்களால் பார்ப்பனீயம் பரப்பப்படவில்லை. உங்களால் தான் பரப்பப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள். என் மனதார கூறுகிறேன், இதுவரை என்னுடம் பேசும் யாரையும் நான் வேறாக பார்த்ததில்லை. இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கலராக இருந்தால் கூட பார்ப்பனரா என்று எட்டி பார்க்க வைத்து விட்டீர்கள். 

ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கு படத்தில் இருப்பதாக நீங்கள் கூறும் நுண்ணரசியல் புரிவதில்லை. ஆனால் விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று நீங்களே அவனுக்கு கற்று கொடுக்கிறீர்கள். இதுதான் உண்மை. பம்பாய் படம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட படம் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதில் ஒரு சாராரை மட்டும் கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். ராவணன் படத்தில் முக்கிய விஷயத்தை பற்றி கூறாமல் ஒரு மூன்று பேரை மட்டும் வைத்து சப்பை கட்டு கட்டுகிறாராம் மணிரத்னம். பொதுவாக மணிரத்னம் படங்கள் பொதுவில் நடக்கும் ஒரு பிரச்சனை ஒரு தனிப்பட்ட குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்ற கதை அம்சத்தில்தான் இருக்கும். இதுவே நான் கண்டது. மற்றவை எதுவும் எனக்கு அவர் படத்தில் தெரிவதில்லை. ஆகவே மணிரத்னம் செய்யும் அயோக்கியத்தனங்களும் என் கண்ணில் படுவதில்லை. கண்ணில் பட்டால்தானே அவை என்னை பாதிக்கும்? நல்ல வேளை விக்ரம் பார்ப்பனராக இல்லாமல் போய்விட்டார். இல்லாவிட்டால் அவர்மீதும் சேற்றை வாரி இறைப்பீர்கள். இப்போது நீங்கள் வாரி இறைக்கும் சேறு சரியாக விக்ரம் மீது மட்டும் படாமல் கவனமாக மணிரத்னம் மீதும், அமிதாப் குடும்பம் மீதும், அம்பானி மீதும் மட்டும் படுமாறு இறைக்கிறீர்களே? இதன் காரணம் என்ன என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

படைப்பு என்பதற்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, மணிரத்னம் படைப்பாளியா என்று கேட்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடுமைகளை படத்தில் காட்டாமல் விட்டு விட்டார் என்று கதறுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது? அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு, அனுதாபத்தை பெற்று அதையே வியாபாரம் ஆக்கி கொண்டிருப்பதை தவிர? உங்களை ஒப்பிடுகையில் மணிரத்னம் செய்வது ஒன்றும் தவறில்லை. பெரிய பெரிய சமூக ஆர்வலர்களை உதாரணம் காட்டி இவர்கள் செய்வதுதான் உண்மையான படைப்பு என்று கூறுகிறீர்கள். ஒருவேளை மணிரத்னம் அப்படி எடுத்துவிட்டால் மட்டும் மெச்சி விடுவீர்களா? மணிரத்னம் அவர்களிடமிருந்து காப்பி அடிக்கிறார் என்று அதே பல்லவியை பாடுவீர்கள்.


இந்த படம் எடுப்பதற்கு அவர்கள் பட்ட சிரமம் என்ன என்று உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா? பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று மணிரத்னம் நினைத்திருந்தால் இப்படி மிகுந்த சிரமப்பட்டு படம் எடுக்க வேண்டியதில்லை. பல புதிய தொழில்நுட்பங்கள் மணிரத்னத்தால் தமிழுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. மணிரத்னம் வியாபாரிதான். யார் இல்லை என்று சொன்னது? ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி படம் எடுப்பவர்கள் மட்டும் வியாபாரிகள் இல்லையா? லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படம் பார்த்த போது இதே போல நம்முடைய இதிகாசங்களையும் ஆங்கிலப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மணிரத்னம் நினைத்திருந்தால் இதை ஆங்கிலத்தில் இன்னும் பிரமாண்டமாக எடுத்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மணிரத்னம் கடல் கடந்து தவறான செய்திகளை பரப்புகிறார் என்று புலம்பி இருப்பீர்கள். விமர்சனம் என்பது ஒரு படத்தில் இருக்கும் தவறுகளை சுட்டி காட்டுவதாக மட்டும் இருந்து விடக்கூடாது. புதுமையான விஷயங்களை பாராட்டும் விதமாகவும் இருக்கலாம். ஒரு படைப்பாளியின் படைப்புகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

18 comments:

KUTTI said...

அட்டகாசம் சார்,

விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருக்கீறீர்கள்.சிறப்பான பதிவு. ராவணன் பற்றிய என் விமர்சனம். இங்கே...
http://feelthesmile.blogspot.com/2010/06/blog-post_19.html

தவறு இருந்தால் குறிப்பிடவும்.

மனோ

http://rkguru.blogspot.com/ said...

அருமையான விமர்சனம் வாழ்த்துகள்...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

Anonymous said...

//விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள் //

very true

Muthu said...

அன்புள்ள பாலா,

நன்றாக எழுதியுள்ளீர்கள். அவரது பெரும்பாலான திரைப்படங்களைப்போலவே நிறைகளும் குறைகளும் கொண்டதாகவே உள்ளது இப்படம்.

நான் கண்ட மிக முக்கிய குறை வசனகர்த்தா. வசனம் பல இடங்களில் பொருந்தாமல் போய் சில வசனங்களுக்கு தியேட்டரே சிரித்ததுதான் மிச்சம்.

சில இடங்களில் ஹாலிவுட் மீதான ஈர்ப்பு Obsession அளவுக்கு போய்விட்டதோ என்றும் எண்ணத்தோன்றியது.

இன்னொன்று, அவர் தனக்கென ஒரு குறிப்பிட்ட படிவத்தை (Template) உருவாக்கி அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஒரு இயக்குநராக ஒரே பாணியிலான படங்கள் ஒரு வித சோர்வைத்தான் தரும். புதிய முயற்சிகள், உத்திகள் மற்றும் பாணிகள்தான் ஒரு படைப்பாளியை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

ஒன்று நிச்சயம். தமிழ் சினிமாவில் அவர் ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்புடன்
முத்து

karthi said...

"ஒரு படைப்பாளியின் படைப்புகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது"

good post.

உண்மைத்தமிழன் said...

பொங்கித் தீர்த்திருக்கிறீர்கள் பாலா..!

ஹேட்ஸ் ஆஃப்..

உங்களுடைய சுதந்திரமான, காத்திரமான, உண்மையான, வெளிப்படையான கருத்துக்களுக்கு எனது சல்யூட்..!

கடைசி வரிகள் நிதர்சனம்..!

Bala said...

@MANO
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
அடிக்கடி வாங்க..

@ rk guru
வருகைக்கு நன்றி நண்பரே...

@பெயரில்லா
அடிக்கடி வாங்க... பெயர் சொல்வதில் தவறில்லையே?

Bala said...

@ Muthu
நண்பரே மணிரத்னம் படங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என்பது என் வாதமல்ல. தன் அறிவுஜீவி தனத்தை காட்டக்கூடாது என்று தான் சொல்கிறேன். மணிரத்தினம் தன் பாணியை விட்டு வெளியே வந்தால் , அதே அறிவு ஜீவிகள் வழக்கமான மணி சாரின் டச் மிஸ்ஸிங் என்று கூட எழுதுவார்கள்.
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி. அடிக்கடி வாங்க

Bala said...

@ karthi

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

Bala said...

@ உண்மைத் தமிழன்
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி. தங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு தேவை.
நான் முதல் முதலில் படிக்க தொடங்கியது உங்கள் ப்ளாக்தான். நன்றி நண்பரே...

"ராஜா" said...

கலக்கல் ... என்ன சொல்ல ராவணன் நல்ல படம் .. அத தவிர வேற எதுவும் சொல்வதற்கு இல்லை ..

நம்ம கட பக்கம் வாங்க ...

எப்பூடி.. said...

நெத்தியடி சார்,

இந்த அரைவேக்காடுகள் இருக்கும்வரை நல்ல இயக்குனர்கள் என்று பெயரெடுத்த எந்த இயக்குனரும் வெற்றியை காண்பது கடினம். இந்த பார்ப்பனியம் புடலங்காய் எல்லாம் பதிவுலகத்துக்கு வந்த பின்னர்தான் தெரியும். தங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் போலவும் , தொழிலாளர்களின் உரிமையை தட்டிகேட்க வந்த குலவிளக்குகள் போலவும் , பெண்களின் காவல் தெய்வங்கள் போலவும், நாத்திகர்களாகவும் காட்டிக்கொள்வது இன்று பதிவுலகின் போலி நாகரிகமாக மாறிப்போய்விட்டது( நம்ம மணி படத்தை விமர்சித்து பெரியாளாகலாம் என நினைப்பதை போல).இவர்களில் 99 வீதமானவர்கள் தமது வாழ்வில் தாங்கள் கூறும் புரட்சிகரமான விடயங்களையும் பின்பற்றப்போவதில்லை, எல்லாம் வெறும் சீப் பப்ளிசிட்டி.

RajaS said...

// உனக்கு என்ன பிடிக்கும்?, ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே! ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல. //
உங்கள் விமர்சனம் அட்டகாசம் ...எனக்கு சில சந்தேகம் மணிரத்னம் ( பார்ப்பான் ) என்பதால் மட்டும் தான் இந்த திரை படத்தை குறை சொல்கிறார்கலா என்று தெரியவில்லை வேறு யாராவது இத்தரை படத்தை இயக்கி இருந்தால் நல்ல படம் தான் என்று சொல்லுவிர்கள் ..சாப்பாடு பிடிதிற்கு ஆனால் சமையல் செய்பவரை பிடிக்கவில்லை என்பது போல் உள்ளது // மணிரத்னம் பார்ப்பனராம். அய்யா! சாமி! சத்தியமாக மணிரத்னம் மாதிரி ஆட்களால் பார்ப்பனீயம் பரப்பப்படவில்லை. உங்களால் தான் பரப்பப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள். என் மனதார கூறுகிறேன், இதுவரை என்னுடம் பேசும் யாரையும் நான் வேறாக பார்த்ததில்லை. இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கலராக இருந்தால் கூட பார்ப்பனரா என்று எட்டி பார்க்க வைத்து விட்டீர்கள். //

நான் நினைத்த வரிகளை அப்படி பதிவு செய்து உள்ளீர்கள் ....

Anonymous said...

"மணிரத்னம் நினைத்திருந்தால் இதை ஆங்கிலத்தில் இன்னும் பிரமாண்டமாக எடுத்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மணிரத்னம் கடல் கடந்து தவறான செய்திகளை பரப்புகிறார் என்று புலம்பி இருப்பீர்கள்."

valanthalumyesum, thalanthalum yesum. Ithuthan ulagam... Ungal karuthukal arumai.

Bala said...

@எப்பூடி

வர வர திரை விமர்சனம் என்பது படத்தை பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுவதாகி விட்டது. அது போல ஜாதியை எதிர்க்கிறேன், கடவுளை மறுக்கிறேன் அன்று சொல்லி அதையே ஒரு சாதி ஆகிவிட்டார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

@ RajaS* Forever *
உங்கள் எண்ணம் மட்டுமல்ல. எண்ணற்ற பதிவர்களின் எண்ணமும் இதுதான். பொதுவாக சாதி சங்க தலைவர்கள் இந்த மாதிரியான தூண்டல்களால்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். அதே கன்றாவிதான் இங்கும் நடக்கிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...


@ பெயரில்லா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
பெயருடனே வரலாமே?

சேலம் தேவா said...

எல்லா படங்களின் பின்னால் இருக்கும் உழைப்பு இவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை .விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியின் திறமையை போகிற போக்கில் கேவல படுத்துகிறார்கள்.உங்கள் பதிவு அதை நன்றாக வெளிபடுத்துகிறது.

santhanakrishnan said...

மணிரத்னத்தை அதிகம்
விமரிசிக்க காரணம்
அவர் பிராமணர்,
முதலாளித்வவாதி
என்பதால் மட்டுமல்ல
அவரிடம் நிறைய
எதிர்பார்க்கும்
நிலை இருப்பதால்தான்.
உலகப் படத்தை
அளவுகோலாக வைத்துப்
பார்க்காமல்,
சில தமிழ் படத்தை வைத்துப்
பார்த்தாலே மணி கொஞ்சம்
தேய்ந்துகொண்டிருப்பது போல்
தான் எனக்கும் படுகிறது.
உங்கள் கோபம் மணியின் ரசிகன்
என்ற முறையில்
எனக்கும் பிடித்திருக்கிறது.

ரஹீம் கஸ்ஸாலி said...

பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே! ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல////
சூப்பர் சூப்பர் சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...