விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

March 7, 2012

நான் என்ன தப்பு செஞ்சேன்?


என் நண்பன் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்போதுமே அரசு அதிகாரிகள், மற்றும் அரசு துறைகளின் மீது மாறாத வெறுப்பு உண்டு. எப்போது அவர்களைப் பற்றி பேசினாலும் ஒரு வித ஏளனத்தோடே பேசுவான். குறிப்பாக போலீஸ்காரர்களை அவன் மதிப்பதே இல்லை. ஏனென்றால் அவனது அக்காவின் கணவர் மிகப்பெரிய ஏலக்காய் வியாபாரி. சிறு வயதில் வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக இன்று கோடிகளுக்கு அதிபதி ஆகி இருக்கிறார். அவரிடம் வாரம் ஒருமுறை அந்த ஊர் காவல்துறை அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, மாமூல் வாங்கி செல்வார்களாம். அதை பார்த்து பார்த்து, இவனுக்கு காவல்துறை மீதிருந்த மரியாதையே போய்விட்டது. அரசு துறைகளை அவன் வெறுப்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. இவனது தந்தையின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள்.அவனது தந்தை ஒரு அரசு அதிகாரி. எழுபதுகளில் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சிறு பதவியில் பணியை தொடர்ந்தவர். அரசாங்கத்தின் மீதும், அவர் சார்ந்த துறையின் மீது மிகுந்த காதல் கொண்டவர். 'பலகாரக்கடைக்காரர்கள்', என்ற புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த ஒரே ஆண் வாரிசான அவர், இயல்பிலேயே லஞ்சம் வாங்குவதை வெறுத்தார். இதனால் சம்பந்தப்பட்ட அந்த கிளை அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர். பத்திரப்பதிவு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் முறைகேடுகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் கடைசி வரை அவர் தன் நேர்மையை விட்டுக்கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சர்வீஸ் வெற்றிகரமாக கடந்து விட, தொடங்கியது சனி. வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக, சில மாதங்கள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை. மெடிக்கல் லீவில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே அலுவலகப்பணிகளை செய்து வந்துள்ளார். இது பெரும்பாலான அரசு அதிகாரிகள் செய்வதுதான். லீவ் முடிய இரண்டு நாள் இன்னும் மீதமிருக்கையில், அலுவலகத்துக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை மும்முரமாக அரசு அதிகாரிகளை நோட்டம் விட்ட காலகட்டம். இவர் தன் மேஜைக்கு வந்து டிராயரை இழுக்க, உள்ளே கத்தையாக கொஞ்சம் பணம். பணத்தை எடுக்கப்போனவர், ஏதோ ஒன்று உள்ளே நெருட பணத்தை தொடாமலேயே டிராயரை மூடி விட்டார். திடீரென்று அவரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விட்டனர். இவர் அலுவலகத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில், அலுவலக பியூன், அந்த டேபிள் டிராயரை லஞ்சப்பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி இருக்கிறான். பியூனுக்கு விரிக்கப்பட்ட வலையில் இவரும் மாட்டிக்கொண்டு விட்டார். இவர் செய்த ஒரே நல்ல காரியம், அந்த பணத்தை கையால் தொடாமல் இருந்ததுதான். தொட்டிருந்தால் அதில் தடவப்பட்டிருந்த அந்த ரசாயனம், இவரை குற்றவாளி என்று நிரூபித்திருக்கும். தேவை இல்லாமல் அலுவலகத்துக்கு அன்று சென்றது, அலுவலகப்பணிகளை வீட்டில் இருந்தே கவனித்தது (பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை வீட்டில் வைத்தே பரிமாற்றம் செய்வார்கள்) இவருக்கு எதிராகத் திரும்பியது.  ஒரு மாதிரி இரண்டு பக்கமும் பேலன்ஸ்ஆக இருக்கும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்தது, தொண்ணூறுகளின் இறுதியில். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், கடைசியாக ஒரே ஒரு பையன் (என் நண்பன்). ரசாயன பரிசோதனையில் குற்றத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால், வழக்கு வலுவிழந்தது. ஆனாலும் இன்ன பிற காரணங்களால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது. நீதிபதிகளின் இடமாற்றம், ஒரு பக்க சார்புள்ள நீதிபதிகள், தப்பான ஆளை கைது செய்தாலும், அதை பூசி மொழுக நினைத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சரியாக சிக்கிக்கொண்ட பியூனின் தில்லாலங்கடி வேலைகள் என்று வழக்குக்கு பல்வேறு இடையூறுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு பிரமோஷன், இங்க்ரீமெண்ட், போனஸ் என்று எல்லாமே கட். மேலும் அரை சம்பளம் மட்டுமே கிடைத்தது. பெண்கள் அனைவருக்கும் திருமணம், மகனின் பட்டப்படிப்பு என்று எல்லாம் சேர்ந்து இவரை நடுரோட்டுக்கு இழுத்து வந்துவிட்டது. "எதை தின்றால் பித்தம் தீரும்?", என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இவர், பல்வேறு வக்கீல்களை சந்தித்து, அவர்களின் பணத்தாசையால் கடனாளியாகவும் ஆனார். ரிட்டைர்டும் ஆகி விட்டார். ஒரு கட்டத்தில் இவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரியே இவரிடம், "அன்னைக்கு வந்ததுதான் வந்துட்டோம், வெறும் கையோடு போகக்கூடாதுன்னுதான், வழக்கு பதிவு செஞ்சோம்....சாரி.", என்று கூறினாராம். இவரும் விரக்தியான சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து விட்டார். ஒரு வழியாக கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் வனவாசத்துக்கு பிறகு, 2011 இறுதியில் வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் இவரது நற்பெயர், சொத்து, சுயமரியாதை எல்லாம் போய்விட்டது. "சரி தீர்ப்புதான் வந்துவிட்டதே? இனி கவலை இல்லை.", என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இவர் மீது வழக்கு பதிவு செய்த அந்த தினத்தில் இருந்து இவர் ரிட்டையர் ஆன தினம் வரையிலான இவரது பாக்கி சம்பளம் வரவேண்டி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் இவருக்கு வழங்கப்படவேண்டிய பணி உயர்வுகள், அதற்கேற்ற சம்பள உயர்வுகள், போனஸ் ஆகியவை இவருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனோடு ஆறாவது சம்பள கமிஷன் கணக்கு வேறு இணைகிறது. இவற்றை எல்லாம் கணக்கிட வேண்டும் என்றால் தனியாக ஒருவர் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டி வரும். இவற்றிற்காக இவர் அலையோ என்று அலைந்து, வேலையை தொடங்கி விட்டார். இதனிடையே அரசு அதிகாரிகளின் பணி உயர்வு குறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, இவருக்கு மேலும் இரண்டு பதவி உயர்வுகள் வழங்க வேண்டுமாம். ஆக மறுபடியும் கணக்கை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதற்காக இவர் சமர்ப்பித்த ஆவணங்கள், சென்னை மற்றும் இவர் வேலை பார்த்த இரண்டு மூன்று மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பலமுறை தாவி தாவி சுற்றி வர வேண்டியிருக்கும். அரசு இயந்திரத்தை பற்றித்தான் தெரியுமே. இவரது ஆவணங்கள் திருவாரூர் தேர் மாதிரி ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இவரும், "கொஞ்சம் அயர்ந்தாலும் தேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு போயி விடுவார்கள்.", என்று கவனமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார். இடையே வக்கீல் ஒருவர், "இந்த பணத்திற்கு உங்களுக்கு வட்டி கிடைக்காது, ஆனால் வழக்கு ஒன்றை பதிவு செய்தால் வட்டியும் கிடைக்கும் அதே போல ஒரே மாதத்தில் பணத்தையும் வசூலித்து விடலாம். எனக்கு ஒரு 20% கொடுங்க.", என்றாராம். இவர், "பொதும்டா சாமி....", என்று அவரை கையெடுத்து கும்பிட்டு விட்டு, "நானே பாத்துக்கிறேன்." என்று வயதான காலத்தில் இன்று வரை பல அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை. ஆனால் தவறே செய்யாத ஒருவர், தன் வாழ்நாளில் நிம்மதி அனைத்தையும் இழந்து, ரிட்டையர் ஆன பிறகும், ஓய்வில்லாமல் மன ஊளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கிறார். என்னங்க நியாயம் இது?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 


41 comments:

விக்கியுலகம் said...

மாப்ள நிதர்சனம் என்ன சொல்லுதுன்னா..ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம்..ஒரு குற்றவாளியும் தண்டிக்கபடக்கூடாது!

Kumaran said...

சில வேலை பணி காரணமாக இந்த பக்கம் வர இயலவில்லை.அதற்கு முதலில் மன்னிப்பு.

மனசாட்சி said...

ம்...வலி வேதனை

மாற்று தான் என்ன ?

Kumaran said...

சிறப்பான பகிர்வு.தங்களது உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது..சிந்திக்க வைக்கிறது.

// இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை. ஆனால் தவறே செய்யாத ஒருவர், தன் வாழ்நாளில் நிம்மதி அனைத்தையும் இழந்து, ரிட்டையர் ஆன பிறகும், ஓய்வில்லாமல் மன ஊளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கிறார். என்னங்க நியாயம் இது? //

இதுதான் இன்றைய உலகம் சகோ, என மனதிலும் நீண்ட நாட்களாக உலா வந்த கேள்வி இது.நல்லவர்கள் யாரென்றே இந்த சமுதாயம் பெரும்பாலும் அடையாளம் கண்டு கொள்வதில்லை..என்ன சொல்வது கலி முற்றிவிட்டது போலும்.

தங்களது பணி இனிய தொடர்ந்திட வேண்டும்..நிறைய எழுதுங்கள்.தங்களது வாசகனாக (ரசிகனாக) ஆனதில் பெருமிதம் கொள்கிறேன்.நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Sankar Gurusamy said...

அவரை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.. நம் அரசுத்துறைகளின் பொறுப்பின்மை உலகறிந்ததுதானே. ஆனாலும் தனக்கென்று வரும்போது வலிக்கத்தான் செய்கிறது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

NAAI-NAKKS said...

:(
:(
:(

கணேஷ் said...

ரொம்பவே வலிக்குது பாலா... என்னதான் செய்யறது இந்த அரசு யந்திரத்தை. நாமளும் இந்தியன் தாத்தாவாயிட்டா என்னன்னு விபரீத யோசனைல்லாம் வருது. (வர்மம் கத்துக்கலாமா?)

NKS.ஹாஜா மைதீன் said...

நல்லவர்களுக்கு நாலாம் பக்கமும் கஷ்டம்தான்...இந்த மாதிரி நடப்பதால்தான் சில நல்லவர்களும் மாறி விடுகின்றனர்...

அரசன் சே said...

வேற எந்த பேச்சும் இதற்கு நிரந்தர தீர்வு ஆகாது ...
ரமணா மாதிரி போட வேண்டியது தான் ...
பின்ன என்னங்க எத்தனை நாள் தான் இந்த அராஜகம் நீடிக்கும் ..

Yoga.S.FR said...

வணக்கம் பாலா!அரச நிர்வாகம் எப்படீன்னு தெரிஞ்சது தானே?பாவம் அவர்.விரைவில் விடிவு கிட்ட ஆண்டவனை வேண்டுவோம்!

DhanaSekaran .S said...

கண்ணீர் தரும் பதிவு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

செய்தாலி said...

நல்ல பதிவு
ம்ம்ம்...
என்ன சொல்வதென்ற தெரியல சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படி ஒரு அரசு ஊழியரே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் போதுகூட அங்கே அரசு ஊழியர்கள் போக்கில் எந்த மாற்றமும் வரவில்லை. எல்லாம் சுயநலமாகி விட்டது.

பி.அமல்ராஜ் said...

நல்ல பகிர்வு... நினைக்கவே கடுப்பாகிறது..

புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே!
தாங்கள் எழுதியுள்ளது போல பல சம்பவங்களை நான் கேட்டிருக்கிறேன். இது, தீராத நோய்
ஆகும்!

புலவர் சா இராமாநுசம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//விக்கியுலகம் said... [Reply]
மாப்ள நிதர்சனம் என்ன சொல்லுதுன்னா..ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம்..ஒரு குற்றவாளியும் தண்டிக்கபடக்கூடாது!

//

இந்த கொள்கையால் தான் தவறு செய்தவர்கள் தப்பிக்கின்றனர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

துப்பாக்கி Vs பில்லா 2

shanmugavel said...

//இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை.//

அப்படி சொல்ல முடியாது.சில நிகழ்வுகளில் நிரபராதிகளும் தண்டிக்கபட்டு விடுகிறார்கள்.நட்சத்திர வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

மிக வேதனையான விஷயம்.இதை என்னவென்று சொல்வது ?இதர்கு யார் பொறுப்பு?ஊழ்வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதா?அவந்தான் சொல்ல வேண்டும்.

அன்புடன் அருண் said...

அன்புள்ள பாலா,

தங்களின் "நிதான" எழுத்துக்களின் நீண்ட நாள் ரசிகன் நான்! இது என் முதல் கருத்துரை!
மிக வேதனையான நிகழ்வு!மனது வலிக்கிறது!சமுதாயத்தை (நானும் ஒரு அங்கமே) நினைத்து பயமும் அதிகரிக்கிறது!
என் மனதில் நெடுநாள் ஒரு எண்ணம் உண்டு!அரசு ஊழியர்களின் (80%)அராஜகத்திற்கு இது ஒன்று தான் தீர்வு! ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது!
"அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளி/கல்லூரிகளில் தான் பயில வேண்டும்" - என்ற சட்டம். இதில் அனைவரும் (MLA, Collector, Doctor, Engineer, Teacher, Clerks, Police etc ) உள்ளடக்கம்.இது முதலில் கசக்கும். நாளடைவில் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்.

உங்கள் நண்பர் குடும்பம் விரைவில் பிரச்சினைகளில் இருந்து விடுபடும் என்றே நம்புகிறேன்! ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து நம்பிக்கையை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்!

நன்றி!

தனிமரம் said...

அவருக்கு விடிவு பிறக்கட்டும் அரச நிறுவாகம் இப்படித்தான் .

பாலா said...

@விக்கியுலகம்
மாப்ள நீங்க சொல்றதுதான் கரெக்ட். இதுதான் காலக்கொடுமை.

பாலா said...

@Kumaran

மன்னிப்பெல்லாம் தேவை இல்லை நண்பரே. நேரம் கிடைக்கும்போது படித்தால் போதும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@மனசாட்சி

மாற்றுதான் என்ன நண்பரே? தெரியவில்லையே?

பாலா said...

@Sankar Gurusamy
கடந்த பத்து வருடங்களாக நண்பருடன் பழகி வருவதால், அவருடைய தந்தை தினமும் படும் அல்லல்கள் அனைத்தும் சொல்லி இருக்கிறார் நண்பரே. மிகுந்த வேதனை. மிக்க நன்றி

பாலா said...

@NAAI-NAKKS

வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

ஹா ஹா போற போக்க பார்த்தா அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

உண்மைதான் நண்பரே என் நண்பனுக்கு அரசாங்கத்தின் மீது எந்த விட மரியாதையும் கிடையாது.

பாலா said...

@அரசன் சே

உண்மைதான் நண்பரே, எந்த இடத்தில் இருந்து திருத்த தொடங்க்வது என்றே தெரியவில்லை. நன்றி நண்பரே

பாலா said...

@DhanaSekaran .S

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@செய்தாலி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஒருவேளை இவரும் மற்றவர்கள் போல லஞ்சம் வாங்கி இருந்தால் காப்பாற்றி இருப்பார்களோ என்னவோ? கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@பி.அமல்ராஜ்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@புலவர் சா இராமாநுசம்

கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

ஆமாம் நண்பரே இங்கே நிரபராதியாக இருப்பதை விட குற்றவாளியாக இருப்பதுதான் பாதுகாப்பானது போலும்

பாலா said...

@shanmugavel

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்.

பாலா said...

@அன்புடன் அருண்

உங்களின் முதல் கருத்துரையை கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே. நீங்கள் சொல்வது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நடப்பது எப்போது? தெரியவில்லை நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி

பாலா said...

@தனிமரம்

மிக்க நன்றி நண்பரே

கிரி said...

பாலா சிறப்பாக எழுதி இருக்கீங்க.

உண்மையில் அவர்கள் தவறாக கைது செய்து விட்டார்கள் அதனால் அதை மறைக்க ஒருவரின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்கள். சிலரின் ஈகோ எவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விட்டது. படிக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவரின் நிலை நினைத்து.

இவ்வளவு வருடங்களில் அவர் அனுபவித்து இருக்கும் வேதனைகள், பலரின் தூற்றல்கள் செய்யாத தவறுக்கு தண்டனை என்று... நினைத்துபார்த்தாலே ஆயாசமாக இருக்கிறது.

சிறு ஆலோசனை.. நீங்கள் எழுதும் போது அதிகபட்சம் ஏழு வரிகளுக்கு மேல் எழுதாதீர்கள் அப்போது தான் மற்றவர்கள் படிக்க எளிமையாக இருக்கும். பத்தி நீண்டதாக இருந்தால் படிக்க சிரமமாக இருக்கும்.

பாலா said...

உண்மைதான் நண்பரே. இதை விதி என்று சொல்வதா இல்லை வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.

உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே. ஆனால் நான் எழுதும் பதிவின் நீளத்தை வைத்து பார்த்தால், எண்ணிலடங்கா பத்திகள் வந்து விடுமே? சரி இனி வரும் பதிவுகளில் இதை பின்பற்றுகிறேன். நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...