விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 9, 2012

யார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்


இன்று காலையில் இரண்டு படங்கள் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? முதல் படத்தை பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். இரண்டாவது படம் தெலுங்கில் அமராவதி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, யார் என்று மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள படம். இந்த படத்தை பற்றி ஒரு சிறு செய்தி கூட தெரியாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தேன். எனக்கு படம் மிகவும் பிடித்துப்போனது. வழக்கமான சஸ்பென்ஸ் படம்தான் என்றாலும், கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கிறார்கள். கதை ஒன்றும் புதிதில்லை. அந்த நகரத்தில் திடீர் திடீரென்று 108 ஆம்புலன்சுக்கு, "நிறைமாத கர்ப்பிணி உயிருக்கு போராடுகிறார்." என்று அழைப்பு வருகிறது. சென்று பார்த்தால், அங்கே கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருந்த சிசு திருடப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க, ஒரு வருடம் பணி விடுப்பில் இருக்கும் வெங்கட் என்ற காவல் அதிகாரி வரவழைக்கப்படுகிறார். அவர் விடுப்பில் சென்றதன் காரணம், அவரது மனைவி லதா.  திருமணத்துக்கு முன், இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் லதா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அது அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சரியாக கவனிக்காவிட்டால், திடீரென்று மயக்கம் ஏற்பட்டு, காது மூக்கில் இருந்து ரத்தம் கசிய தொடங்கி விடும். ஆகவே அவளை திருமணம் செய்து கொண்ட வெங்கட், ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, அவளை கூடவே இருந்து கவனித்து கொள்கிறான். டிபார்மெண்டில் இருந்து அவசர அழைப்பு வர, லதாவின் வற்புறுத்தலால், அரைமனதுடன் வேலைக்கு செல்கிறான். ஆறு பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு, ஏழாவது பெண்ணிடம் இருந்து சிசு திருடப்படும்போதே, போலீசில் ஒருவன் மாட்டிக்கொள்கிறான். பார்ப்பதற்கு மனநிலை சரியிலாதவன் போலிருக்கும் அவன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறான். வெங்கட் அவனை தனி அறையில் வைத்து விசாரிக்கிறான். அவன் சிறையில் இருந்தாலும், வெளியே சிசு திருட்டு தொடர்கிறது.  மொத்தம் ஒன்பது சிசுக்கள் திருடப்பட்ட நிலையில் அவனது கைரேகை, அங்க அடையாளங்களை வைத்து போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. இதன் மூலம் அவனின் பயங்கரமான பின்னணி தெரிய வருகிறது. (இந்த பிளாஷ்பேக் படத்தில் முதல் காட்சியிலேயே வந்துவிடும்) பணக்கார வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் மூத்த மகன் சீனு, அந்த செல்வந்தரின் மகள் அமராவதியிடம், இனம்புரியாத அன்புடன் பழகுகிறான். விடலைப்பருவத்தில் இருக்கும் இருவரும் நெருங்கிப்பழகுவதை சகிக்காத அமராவதியின் தந்தை, வேலைக்காரியை கண்டிக்கிறார். இருந்தாலும் சீனு கேட்பதாக இல்லை. அமராவதியிடம் வேறு யார் பாசம் செலுத்தினாலும் அவர்களை தாக்கும் அளவுக்கு இவனுக்கு அன்பு வெறி அதிகரிக்கிறது.  அமராவதி, பத்து என்ற எண்ணின் மீது மிகுந்த பைத்தியமாக இருக்கிறாள். எதுவானாலும் அவளுக்கு பத்து வேண்டும். ஆகவே அவளுக்கு பிடித்த பத்து முத்துக்களை எடுத்துக்கொண்டு அவள் தந்தை இல்லாத நேரத்தில் சென்று கொடுக்கிறான். எதிர்பாராத விதமாக இருவரும் தடுக்கி கட்டில் மேல் விழ, அதை அச்சிறுமியின் தந்தை பார்த்து விடுகிறார். கடும் கோபமுற்ற அவர், சீனுவை கழுத்தை அறுத்து ஆற்றில் வீசுகிறார். அதை பார்த்த சீனுவின் தாயையும் கார் ஏற்றி கொன்று விடுகிறார் ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் ஒரு மனோதத்துவ நிபுணரால் காப்பாற்றப்பட்டு வளர்கிறான். 

பெரியவனாக வளர்ந்து தன் தாயை கொன்ற முதலாளியை பழி தீர்க்கிறான் சீனு. பிறகு வெளியூரில் திருமணமாகி குடியேறிய தன் சிறுவயது தோழியை(காதலியை) காண செல்கிறான். அங்கே அமராவதி கணவனோடு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, கோபமுற்று அவனை கொடூரமான முறையில் கொள்கிறான். அங்கே நடந்த களேபரத்தில் அமராவதியின் தலையில் அடிபட்டு அவள் பைத்தியம் ஆகிறாள். அவளை காப்பாற்றி தன்னுடனே வைத்துக்கொள்கிறான் சீனு. தனக்கு பத்து பிள்ளைகள் என்றும், அவை எங்கே என்றும் திரும்பதிரும்ப இவனிடம் கேட்கிறாள். அந்த சீனுதான் இப்போது போலீசில் சிக்கி இருப்பவன். இதுதான் அவன் பத்து பெண்களின் சிசுக்களை திருட காரணம் என்று கருதும் போலீசுக்கு, இன்னொரு சந்தேகம் வருகிறது. அதாவது, குறிப்பிட்டு அந்த 9 பெண்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்? 9ஆவது திருட்டு நடந்த வீட்டின் அடுத்த வீட்டிலும் ஒரு நிறைமாத கர்ப்பிணி இருந்தாள். ஆனால் அவளுக்கு ஒன்றுமே நிகழவில்லையே? அப்படியானால் அந்த பத்தாவது பெண் யார்? இதற்கெல்லாம் பின்னணி என்ன என்ற கேள்வியில் குழம்புகிறது. முடிவில் அந்த பத்தாவது பெண், வேறு யாருமல்ல, போலீஸ் அதிகாரி வெங்கட்டின் மனைவி லதாதான் என்ற செய்தி எல்லோரையும் அதிர வைக்கிறது. பத்து பெண்களுமே, ஒரே நாளில் ஒரே ஆஸ்பத்திரிக்கு செக் அப்புக்கு வந்தவர்கள். அவர்களுக்கு திரீட்மெண்ட் கொடுத்த லேடி டாக்டரும், தற்கொலை செய்திருக்கிறார். இத்தனை நிகழ்வுகளுக்கும் என்ன காரணம்? குறிப்பிட்ட பத்து பெண்களை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? சீனு சிறையில் இருந்த போதும், வெளியே திருட்டு நடந்தது எப்படி? என்று பல முடிச்சுகளை திரைக்கதையின் மூலம் போட்டு, சஸ்பென்ஸை ஏற்றி இருக்கிறார்கள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதாலோ என்னவோ, இந்தப்படத்தை நான் மிகவும் ரசித்தேன். நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள், திடுக்கிட வைக்கும் இசை என்று சிறப்பாகவே இருந்தது. படத்தில் அமராவதியாக பூமிகா நடித்திருக்கிறார். கதை முழுவதுமே இவரை சுற்றி பின்னப்பட்டிருந்தாலும், கொஞ்ச நேரமே தோன்றி இருக்கிறார். வெங்கட் ஆக நடிகர் ரவி பாபு நடித்திருக்கிறார் . இவர் யாவரும் நலம் படத்தில் மாதவனின் நண்பராக ஒரு போலீஸ் அதிகாரி வருவாரே. அவரே தான். இவரது மனைவியாக சினேகா நடித்திருக்கிறார். இவருக்கும் படத்தில் அதிகம் வேலை இல்லை. இரண்டு பரிச்சையமான நாயகிகள் படத்தில் இருந்தாலும், அதிக காட்சிகளில் தோன்றுவதும், மனதை கொள்ளை கொண்டவரும், காவல் துறை அதிகாரியாக வரும் சிந்தூராதான். மிக அழகான இவரை, பேண்ட் சட்டையில் ரொம்ப கடுமையான அதிகாரியாக காட்டி இயக்குனர் என் சாபங்களை சம்பாதித்துக்கொண்டார். படத்தில் ஒளிப்பதிவு, இசை மற்றும் எடிட்டிங் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சஸ்பென்ஸ் படம் என்றாலே இருட்டில்தான் எடுக்கவேண்டும் என்றில்லாமல், தேவையான அளவுக்கு இருட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள், அதே போல பெரும்பாலான காட்சிகளில் ஒருவர் வசனம் பேசும்போது, அவரது முகத்தை காட்டாமல், எதிரே இருப்பவரின் ரியாக்சன்களையே அதிகம் காட்டுவதால், டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. இது ஒரு மிகச்சிறந்த பொழுது போக்குப்படம். கர்ப்பிணி பெண்களை கொலை செய்வதாக காட்டவிட்டாலும், அவர்களின் சிசுக்கள் திருடுவதாக காட்டுவது(திருடும் காட்சியை காட்டாவிட்டாலும் கூட), பெண்கள் மனதை கண்டிப்பாக பாதிக்கும்.  பி.கு:எனக்கு ஒரு சந்தேகம். படத்தின் தொடக்கத்தில், இதய பலவீனமானவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் பார்ப்பதை தவிர்க்கவும் என்று போடுகிறார்கள். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே அமர்ந்த பிறகு இப்படி போட்டால், யார் வெளியே எழுந்து செல்வார்கள்? அதற்கு போஸ்டரிலேயே போட்டிருக்கலாமே? இதே மாதிரிதான் அருந்ததிக்கும் போட்டார்கள்..... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


10 comments:

selvasankar said...

intha padam konjam mokkai athigamave irukkunu oru andhra friend sonnaru..but unga view interestinga irunthathu

Thava said...

இந்த படத்தை நீங்கள் சொல்லித்தான் அறிவேன் பாஸ்..விமர்சனத்தை படித்தால் ஓரளவு நல்ல சஸ்பென்ஸ் படம் என்றே தெரிகிறது.பார்க்க முயற்சி செய்கிறேன்.வழக்கம் போல விமர்சனம் சிறப்பே.மிக்க நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

பதிவுக்கு நன்றி சகோ ...

ஹீரோ அல்லது வில்லன் போட்டிருக்கிறது ஹானிபல் படத்தில் வந்த அந்த மாதிரி ஒரு முகமூடியத் தானே?

Karthikeyan said...

இந்த படத்தை நானும் பார்த்தேன் என் நண்பனின் அழைப்பினை ஏற்று. எனக்கும் படம் பிடித்திருந்தது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது. இடையில் சில நேரம் மொக்கையாக இருந்தாலும் கொடுத்த காசுக்கு வொர்த் தான். ஒரு முறை பார்க்கலாம்.

Unknown said...

நான் யார் என்று போஸ்டரில் பார்த்தது குழம்பிவிட்டேன்.....நாளை பார்த்துவிடவேண்டியதுதான்

பாலா said...

@selvasankar
படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பதால் மொக்கையாக தெரியலாம் அதே போல சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் இங்கே படம் எடுக்க முடியாதே?... நன்றி நண்பரே

பாலா said...

@Kumaran

வாய்ப்பு கிடைக்கும்போது பாருங்கள் நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

அதேதான். படத்தில் வில்லன் ஒருவரை கடித்து தாக்குவதாக ஒரு காட்சி வரும். அதில் இருந்து இந்த முகமூடியை அணிவித்து விடுவார்கள். நன்றி

பாலா said...

@Karthikeyan

கண்டிப்பாக ஆகா ஓகோ என்று கூறமுடியாவிட்டாலும் பார்க்க கூடிய படம்தான். நன்றி நண்பரே

பாலா said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...