விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 13, 2010

நடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தான்




பொதுவாக ஊடகங்கள் என்பது மக்களுக்கு பல தகவல்களை அளிக்கவும், செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கவும், நல்ல கருத்துக்களை பரப்பவும்தான் அப்படிங்கறது என்னோட கருத்து. இந்த ஊடகங்களை பல சமூக ஆர்வலர்கள் தங்களின் கொள்கைகளை பரப்பவும் பயன் படுத்துகிறார்கள். திரைப்படங்கள் மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கள் ஊருக்கு மட்டும்தான் உபதேசம் என்கிற ரீதியில் இருப்பதுதான் உண்மையான நிலை. சட்டம், நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாசாரம், தேசபக்தி இவை எல்லாம் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு வலியுறுத்தப்பட்டாலும், இவை எல்லாம் சாதாரண பொது ஜனங்களுக்கு மட்டும்தான் என்பது மாதிரியாகத்தான் இவர்களின் நடவடிக்கை இருக்கிறது. இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம்.

சமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் அடிபடும் ஒரு செய்தி என்னவென்றால் "புதுப்பட சிடி விற்றவர் கைது". இது போன்ற நேரங்களில் திரைத்துறையினர் ஒன்று திரண்டு ஆட்சியாளர்களை சந்திப்பது வாடிக்கை. கஷ்டப்பட்டு எடுக்குற திரைப்படங்களை நோகாமல் திருட்டு சிடி போட்டு விற்று எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். ஒரு சினிமாவ நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது என்று ஆதங்க படுகிறார்கள். சிடி விற்பவர்கள் திருடர்கள் என்றால், பிறநாட்டு படங்களை ஆட்டைய போட்டு நோகாமல் படமெடுக்கும் இவர்களை என்ன சொல்வது? திருட்டு சினிமா எடுப்பவர்கள் என்று சொல்வதா? பிற நாட்டு சினிமாகாரர்கள் எல்லாம் இதற்க்கு எதிராக கிளம்பினால் என்ன ஆகும்?


மூன்று நாளைக்கு முன்னால் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். படத்தில் அருமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதிகார வர்க்கம் ஏழைகளை எப்படி சுரண்டுகிறது என்று நக்கல் செய்திருந்தார்கள். நான் படம் பார்த்தது ஒரு பாடாவதி தியேட்டர். ஒரு டிக்கெட் 60 ரூபாய். டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்தது வெறும் 15 ருபாய். இதற்கு பெயர் சுரண்டல் இல்லையா? கருத்து படத்தில் சொன்னால் மட்டும் போதாது காரியத்திலும் இருக்கவேண்டுமே. பின் எப்படி நம்மாள் தியேட்டருக்கு வருவான்? ஒரு பாடாவதி தியேட்டரில், மூட்டை பூச்சி கடிக்கு நடுவே அநியாய விலை கொடுத்து படம் பார்ப்பதை விட, வசதியாக, வீட்டில் படுத்துக்கொண்டே குறைந்த விலையில் படம் பார்ப்பதையே விரும்புவான். தியேட்டர்காரனும் என்ன செய்வான் பாவம்? போட்ட பணத்தை எடுக்க வேண்டும். இப்பலாம் படம் பத்துநாள் தாண்டினாலே பெரிய சாதனை. இளைய தலைமுறைகள் தனக்கு பிடித்த, பிடிக்காத நடிகனின் படத்தை திட்டவாவது வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவார்கள். இரண்டாம் வாரம் தியேட்டர் காத்தாடும். அதனால் முதல் வாரத்திலேயே அடுத்த மூன்று வார வசூலை செய்து விடுவார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாத நிலையே இருக்கிறது. மாயாஜாலில் குசேலன் படத்துக்கு நான் கொடுத்த விலை 180 ரூபாய். அவர்கள் சொன்ன காரணம், டிக்கெட் 100 ரூபாய், 80 ரூபாய்க்கு உங்களுக்கு நொறுக்கு தீனி மற்றும் குளிர் பானம் வழங்கப்படும் என்றார்கள். இடைவேளையில் 7 ரூபாய் மதிப்புள்ள ஒரு மினி செவன் அப் பாட்டில், 10 ரூபாய் மதிப்புள்ள குர்குரே பாக்கெட், 5 ரூபாய் மதிப்புள்ள பாப் காரன் பாக்கெட் ஒன்றும் கொடுத்தார்கள். இதன் விலை 80 ரூபாயாம். எவனாவது தியேட்டருக்கு வருவான்?



சமீபத்தில் நடிகர்களின் சம்பளம் பற்றிய பட்டியல் ஒன்று ஒரு பத்திரிகையில் வந்தது. அது வெளியே தெரிந்த தொகை. இது மட்டும் இல்லாமல் கருப்பு பணமாக வேறு வாங்குகிறார்கள் என்று கேள்வி. படத்தின் தயாரிப்பு செலவில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளம்தான். அதே போல முன்னணி நடிகர்கள் யாரும் தன் படம் தோல்வி அடைவது பற்றி கவலையே இல்லாமல் அடுத்த படம் நடிக்க சென்று விடுகிறார்களாம். தன் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்தாலே தயாரிப்பாளர் பெரும் லாபம் அடைவார். இதை மட்டும் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கே சம்பளத்தை குறைப்பதில் உடன்பாடு இல்லாத போது சாமான்யன் மட்டும் அதிக பணம் கொடுத்து ஒரு மொக்கை படத்தை பார்க்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள்? திருட்டு சிடி வெளிவருவதற்கு கண்டிப்பாக தியேட்டர் மற்றும் திரைதுறையினரின் உதவி உண்டு. ஜக்குபாய் படம் ரீ ரெகார்டிங் இல்லாமலே சிடி வெளி வந்துவிட்டது. அப்படியானால் கருப்பாடு எங்கே இருக்கிறது? அதை விடுத்து நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் நீங்கள் தான் அயோக்கியர்கள் என்று பொதுமக்களை பார்த்து சொல்வது எந்த வகையில் நியாயம்?



மதுரைக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புதுப்படம் வெளிவருவதும் மதுரையில்தான். புதுபட திருட்டு சிடி வருவதும் மதுரையில்தான். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில படங்களுக்கு மட்டும் சிடிக்கள் கிடைக்காது. வாரணம் ஆயிரம், தமிழ் படம் முதலிய படங்களுக்கு மதுரையில் சிடியே கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவை அஞ்சா நெஞ்சரின் புதல்வர் தயாநிதியின் படங்கள். அதே நேரத்தில் அசல் பட சிடி தாராளமாக கிடைத்தது. முதல்வன் படம் கலைஞரை கிண்டல் செய்வது போலிருக்கிறது என்ற காரணத்தால் படத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், படம் வெளியாகி இரண்டாம் நாள் லோக்கல் கேபிள் டிவியில் மூன்று வேளை படம் ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் மதுரையில் உள்ள தயா டிவியில் புதுப்படங்கள் தங்கு தடையின்றி ஒளிபரப்படுகின்றன. இதனை தட்டிகேட்க திரையுலகத்தை சேர்ந்த எவனுக்காவது தைரியம் இருக்கிறதா? கிடையாது. அதனால் இளிச்சவாயன் பொதுஜனம்தான் சிக்கியவன். அவன் தலையில்தான் மிளகாய். தன் பக்கம் இருக்கும் எந்த தவறையும் சிறிது கூட திருத்திக்கொள்ளாமல், பெரும் தவறுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, திருட்டு சிடி தேச துரோகம் என்பது போன்ற பிரச்சாரங்கள் ஊருக்கு மட்டும் உபதேசமாகத்தான் உள்ளன. ஒன்று மட்டும் உறுதி. தமிழில் தரமான படங்கள் வரப்போவதுமில்லை, டிக்கெட் விலை குறையப்போவதுமில்லை, திருட்டு சிடி ஒழியப்போவதுமில்லை...



பல காலமாக கத்தி கதறிக்கொண்டிருந்த சுற்று சூழல் ஆர்வலர்களின் குரல் இப்போதுதான் நம் ஆட்சியாளர்களின் காதில் சன்னமாக கேட்க தொடங்கி இருக்கிறது. ஆமாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இன்னும் சில வருடங்களில் நிலக்கரி தீர்ந்து விடும். மின்சாரத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். என்ன செய்யலாம்? மின் வெட்டை அமல் படுத்தலாம். எல்லோரையும் சூரிய சக்தியை பயன் படுத்த அறிவுறுத்தலாம். முடிந்தால் சட்டம் இயற்றலாம். இவற்றை எல்லாம் அனுபவிக்க போவது யார்? இளிச்சவாயன் பொது ஜனம்தானே? மின்சாரத்தை சேமிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும் மக்களில் ஒருவர்தானே? அவர்கள் தேவ தூதர்கள் இல்லையே? வாரம்தோறும் விழா, வண்ணமயமான அலங்காரங்கள், கலர் கலராக மின் விளக்குகள் உபயம் திருட்டு மின்சாரம். இன்று அரசியல்வாதிகளின் விழாக்களுக்கும், பொதுகூட்டங்களுக்கும்தான் மின்சாரம் அதிக அளவில் திருடப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? சாலைகளை விரிவாக்கம் செய்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? அதெப்படி தலைவர்கள் வீடு இருக்கும் தெருவில் மட்டும் மின் தடை படுவதில்லை? சாக்கடை அடைத்துக்கொள்வதில்லை, மழைநீர் தேங்குவதில்லை? சட்டம் திட்டம் பற்றாக்குறை எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?





நாடே பட்டினியால் வாடிக்கொண்டிருந்த போது அரண்மனையில் உல்லாசமாக இருந்த இடி அமினுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மக்களின் துயரத்தை தானும் அனுபவித்து, அத்துயரத்தில் இருந்து மக்களை காப்பவனே உண்மையான தலைவன். அப்படி யாரும் நாட்டில் இருப்பதாக தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. உபதேசம் ஊருக்கு மட்டும்தான். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் சுறா பட கதை போல ஏற்கனவே அரைத்து சலித்ததுதான். ஆனால் இதை அடிக்கடி ஞாபகம் வைத்துகொள்வதும் நம் கடமைதான். ஞாபகப்படுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கம்.



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


6 comments:

Priya said...

பல தேவையான விஷயங்களை பற்றி எழுதி இருப்பது நல்லா இருக்கு.

//இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் சுறா பட கதை போல ஏற்கனவே அரைத்து சலித்ததுதான்.//.... நைஸ்:)

Bala said...

@Priya

உங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி..

சேலம் தேவா said...

பட்,உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.போற போக்கில சுறாவ வாரிடிங்க.நல்ல எழுதுங்க .அப்பவும் உறைக்காது.

சாமக்கோடங்கி said...

மக்கள் நலனைக் கருதும் அரசு எங்கே பாலா.. அதை விடுங்கள்.. சேவை அமைப்புகள் என்று இயங்கும் நிறுவனங்கள் கூட காசு பார்க்கும் அவலம் இங்கே அரங்கேறுகிறது... நேரில் அடிபட்டு விட்டேன்..தேவைக்கு மேல் வைத்திருப்பவன் அத்துனை பேரும் திருடர்களே... நம்ம காசையே திருடி நம்மளையே திட்டுராணுக... என்னத்த சொல்ல.. உண்மையை நல்லா தோலுரிச்சு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

நன்றி...

பாலா said...

@DEVARAJAN
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா?
வருகைக்கு நன்றி..

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
தேவையான அளவு என்ன என்பதுதான் இப்போது பிரச்சனையே
தங்கள் கருத்துக்கு நன்றி..

ஹுஸைனம்மா said...

எல்லாம் காலங்காலமா நடந்துகிட்டுத்தான் இருக்கு; நாமளும் பார்த்துகிட்டுத்தான் இருக்கோம், வேற வழியில்லாம். எதாச்சும் செய்யலாம்னா, ஆட்டோ, சுமோ வேற இப்ப வருதாம்.

நம்மளவில் நாம் செய்யக்கூடியதைச் செய்வோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...