விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 26, 2010

பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...ஒரு இயக்குனரை சுத்தமாக பிடிக்காது என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது இருக்காது. அவர்களையே பிடிக்காத இயக்குனர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதே போல எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மோசமான இயக்குனர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்த காலகட்டத்தில் நம் மனநிலை, ரசிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்து மாறும். எனக்கு பிடிக்காத சில இயக்குனர்கள் நான் விரும்பும்படியான நல்ல படங்களை கொடுத்துள்ளார்கள். அதை இங்கே வரிசை படுத்துகிறேன்.


விஜய டி ராஜேந்தர்: மைதிலி என்னை காதலி


எழுபதுகளின் இறுதியில் இளைஞர்களின் இதய துடிப்பை சரியாக புரிந்து கொண்டு படம் எடுத்த இந்த இயக்குனர் கால மாற்றத்தினால் ஏற்பட்ட அடுத்த தலைமுறை ரசிகர்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு திறமை இருக்கிறது. என் படத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து, கடைசியில் படம் பார்க்கும் வேலையையும் அவரே செய்ய வேண்டியதாகிவிட்டது. இவர் சிறப்பாக செயல் பட்ட காலத்திலேயே இவரின் படங்கள் என்னை கவர்ந்தது இல்லை. காரணம் படத்தின் நீளம், மெதுவான காட்சி அமைப்புகள், நடிக்கத்தெரியாத புதுமுகங்கள், ஓவர் ஆக்டிங் செய்யும் பழைய முகங்கள், அடிக்கடி வந்து பயமுறுத்தும் டி ஆர்., சோகமான முடிவுகள் இவைதான். ஆனால் இவை எல்லாம் இருந்தும் என்னை எதோ விதத்தில் கவர்ந்தது இந்த படம்தான். அமலாவுக்கு முதல்படம் என்று நினைக்கிறேன். 
எஸ் ஜே சூர்யா: வாலி 


குறுகிய காலத்தில் கொஞ்சம் நல்ல பெயர், நிறைய கேட்ட பெயர் வாங்கிய இயக்குனர். முதலில் நன்றாக ஆரம்பித்து பின் நிலை தடுமாறி விழும் ஆசாமிகளின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்க்கலாம். சாமர்த்தியமான திரைக்கதை இவரின் பலம். ஆனால் பலான விஷயங்களை வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்வதுதான் இவரின் பலவீனம். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பாக்கியராஜ் மாதிரி வந்திருக்கலாம். இவர் இயக்கத்தில் என்னை கவர்ந்த படம் வாலி. அஜித்தை உற்று கவனிக்க வைத்த படம். மாற்று திறனாளியின் பாடி லாங்குவேஜ், கெட்டப் எதுவும் மாற்றாமலேயே வெறும் பார்வையாலேயே இருவரையும் வேறுபடுத்தி காட்டி அஜித்தின் உண்மையான திறமையை வெளி கொணர்ந்த படம். என்னதான் அஜித் திறம்பட நடித்தாலும் இதில் எஸ் ஜே சூரியாவின் பங்கும் உண்டு. இவர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, நடிக்க ஆரம்பித்தது. மீண்டும் பாதை மாறி தன் பலம் என்ன பலவீனம் என்ன என்று உணர்ந்து செயல் பட்டால் விரைவில் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறலாம்.தரணி : கில்லி 


தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகத்திற்கு இவர் செய்த சேவை மிகப்பெரியது. அப்பாவி கதாநாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அதன் பின் வில்லன் இவனை துரத்த, கதாநாயகன் ஓட தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் நம்ம ஆள் வில்லனை எதிர்க்க துணிந்து வில்லனை ஓட ஓட விரட்டுகிறான். சுபம். இப்படி ஒரு கதையில் கடந்த பத்து வருடங்களாக சுமார் நூறு படங்களுக்கு (மூன்று மொழிகளையும் சேர்த்து) மேல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் நம்ம தரணிதான். இதில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பது மறுக்கலாகாது. ஆனாலும் இவர் படத்தின் ஒரே டெம்ப்ளேட் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதே சமயம் இவரின் இந்த சக்சஸ் பார்முலாவை இவரைவிட இவருக்கு அப்புறம் வந்தவர்கள் கப்பென பற்றிகொண்டார்கள். இவரின் இயக்கத்தில் வெளி வந்த கில்லி படம்தான் என்னை கவர்ந்த படம். இது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்றாலும், இயக்குனரின் உழைப்பு கண்டிப்பாக படத்தில் உண்டு. விஜய் தன் பில்டப்புகளை கொஞ்சம் குறைத்து நடித்திருப்பார். அதே போல வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான பில்டப்புகள் படத்தில் உண்டு. எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது. இந்த படம் விஜய் வாழ்க்கையிலும் ஒரு மைல் கல் என்பதை மறுக்க முடியாது.பேரரசு: சிவகாசி


இவரை பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. இயக்குனர் தரணியின் சிஷ்யர். குருவை மிஞ்சிய சிஷ்யர். பழைய கால எம்ஜியார் படங்களை அதிரடி குத்து பாடல்களோடு மக்களிடம் ரீமேக் செய்பவர். இவர் படங்களை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பலர் விமர்சிப்பதுண்டு. ஒரு படத்தில் எல்லா பாடல்களையுமே குத்து பாடலாக வைக்க முடியும் என்று சாதித்து காட்டியவர். ஓவர் பில்டப், பழைய கதை, நம்ப முடியாத சண்டைகாட்சிகள், கெட்ட வார்த்தை வசனம் என்று எல்லோருக்கும் பிடிக்காத ஒரு இயக்குனராக இன்றும் தன் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவரின் இயக்கத்தில் கொஞ்சம் சுவாரசியமான படம் என்றால் அது சிவகாசிதான். ஒரு ஹீரோவுக்கு எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியும் என்று நிருபித்த படம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்.


சேரன்: ஆட்டோகிராப் 


பொதுவாக சேரன் படங்களை அவ்வளவாக மொக்கை என்று சொல்ல முடியாது. அதில் மெல்லிய உணர்வுகளை சொல்லி இருப்பார். இவரின் படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதன் காரணம் அதீத சோக உணர்வுகள். படம் மிக மெதுவாக நகரும். அதே போல எல்லா கதாபாத்திரங்களும் ஒரு தடவையாவது படத்தில் அழுது விடுவார்கள். இதனாலேய இவர் படத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இவரின் ஆட்டோகிராப் படம் இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட படம். சோக உணர்வு குறைவு. இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக தங்களின் பழைய வாழ்க்கையை நினைத்து பார்ப்பார்கள். இவரின் நடிப்பு இதில் புதுமையாக இருந்தது. தானே நடிக்க முடிவு செய்தது பாராட்டத்தக்கது. ஆனாலும் அதே மாதிரியான எக்ஸ்ப்ரஷன்களை எல்லா படத்திலும் கொடுத்து நோகடிக்கிறார் மனிதர். அடுத்து மிஸ்கின் படத்தில் நடிக்கிறார். என்ன ஆகப்போகிறதோ?


கவுதம் மேனன்: மின்னலே


பொதுவாக கவுதம் மேனன் படம் என்றால் ஆங்கிலம் பொங்கி வழியும். கெட்ட வார்த்தை காதை கிழிக்கும். இளமை ததும்பும். இவரின் படங்களை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு படத்தை முடித்து விட்டு இவர் கொடுக்கும் பில்டப்புகள்தான் கடுப்பை கிளப்புகின்றன. இவரின் பெரும்பாலான படங்கள் பிற மொழிகளின் இன்ஸ்பிரேசன் (அப்படித்தான் சொல்கிறார்கள்). ஆனால் ஏதோ தானே உட்கார்ந்து யோசித்து கதை எழுதுவது போல இவர் பேசும் பேச்சு இருக்கிறது. Derailed என்று ஒரு படம். பாருங்கள். படம் பார்க்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே என்ன படம் என்று கண்டுபிடித்து விடுவீர்கள். அப்படியே கார்பன் காப்பி. இவரின் முதல் படம் என்பதாலோ? இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ? எனக்கு பிடித்த படங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. கவுதமாக இவர் எடுத்த இந்த படத்தில் இருக்கும் வசீகரிப்பு மெல்ல வளர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் ஆன பிறகு இல்லை.சுரேஷ் கிருஷ்ணா: பாட்ஷாஇந்த படத்தை பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. என் மனதில் அண்ணாமலை பிடித்திருந்த இடத்தை இப்படம் நிரப்பி விட்டது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்த படம் வெற்றி வாகை சூடியது. ஆனால் பரிதாபத்துக்குரிய விஷயம் இதன் பின் இப்படத்தின் இயக்குனருக்கு சொல்லிகொள்ளும் படியான படம் எதுவும் இல்லை. இவர் ஆக்சன் படம் எடுப்பதில் வல்லவர். ஆனால் ஒரே மாதிரியான கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று சறுக்கி விட்டார். இவரின் முதல் படம் கமல் நடித்த சத்யா என்றால் நம்ப முடிகிறதா? பிற்காலத்தில் தன் பாணி மாறி ஆஹா என்ற குடும்ப படமும் எடுத்தார். அதுவும் வெற்றி பெறவில்லை.ஆர் வி உதயகுமார்: சிங்கார வேலன்.


கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற மிக சீரியசான படங்கள் எடுத்து பெயர் பெற்றவர். தொடக்கத்தில் நல்ல படங்கள் கொடுத்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான கதை அமைப்புகள், சுவாரசியமில்லாத திரைக்கதை என்று அரைத்த மாவையே அரைத்து தோல்வியை தழுவினார். இவர் தன் பாதையில் இருந்து மாறி எடுத்த படம் சிங்காரவேலன். எந்த வித லாஜிக்கும் பார்க்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த என்டர்டெய்னர் என்பதில் சந்தேகம் இல்லை. 


எஸ் எ சந்திரசேகர்: நான் சிகப்பு மனிதன். சமூகத்துக்கு தனி ஒரு மனிதன் நீதிகேட்பது மாதிரியான ஆன்டி ஹீரோ படங்களை முதலில் தமிழில் எடுத்தவர். இவரது படங்களில் ஆக்சனுக்கும், வன்முறைக்கும் பஞ்சம் இருக்காது. இவர் படங்களில் எனக்கு மிக பிடித்த படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்சன் படம் என்றால் அது இந்த படம்தான். இவர் எடுத்து பெயர் பெற்ற ஒரே படம் இதுதான். இதன் பிறகு இவர் படங்கள் ஓரளவுக்கு சுமாரான வெற்றியே பெற்றன. முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார். கபடி விளையாட்டின் மகத்துவம் பற்றி புதிய கருத்துக்களை சொன்னவர். இயக்குனர் ஷங்கர் இவரின் உதவியாளராக இருந்தவர் என்றால் நம்புவது கடினம்தான்.
லிங்குசாமி : ரன் 


குறுகிய காலத்தில் அனைவராலும் பேசப்பட்ட ஒரு இயக்குனர். தரணியின் வழித்தோன்றல்களில் ஒருவர். கதை என்று ஒன்று இல்லாமல், சம்பவங்களை வைத்தே படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர். முதலில் ஆனந்தம் என்ற குடும்ப படத்தை எடுத்து வெற்றி கண்டு, தன் பாணியை மாற்றி ரன் படம் எடுத்தார். இந்த படம் வெளிவந்த போது பாபா படம் வெளிவந்தது. ஆனாலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாதவனாலும் ஆக்சன் ஹீரோ வேடங்களில் நடிக்க முடியும் என்று நிருபித்த படம். இந்த படம் பழைய நாகார்ஜுனா படம் உதயம் மாதிரி இருக்கிறது என்று சொன்னாலும் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்பின் இவர் தன் பாணியை மாற்றாமல் டெம்ப்ளேட் படங்கள் கொடுத்து சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.


இந்த பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துகொள்கிறேன். இதில் சில இயக்குனர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். உதாரணமாக வசந்த், பிவாசு, சுந்தரராஜன், மணிவண்ணன் ஆகியோர். எனக்கு பிடிக்காத இயக்குனர்கள் என்று சட்டென மனதில் பட்டவர்கள் பெயரையே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கே நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் என் சொந்த கருத்துக்கள். எனக்கு தோன்றியவை பற்றியே எழுதி இருக்கிறேன். யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள். 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...


10 comments:

SShathiesh-சதீஷ். said...

நல்ல விளக்கங்கள் தெரிவுகள்.

"ராஜா" said...

//எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது

பார்றா...

//முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார்

மறுபடியும் பார்றா...

எங்கள் இளையதளபதி அண்ணன் வருங்கால பிரதமர் விஜய் அவர்களை பகைத்துக்கொண்டு தாங்கள் எப்படி தமிழ் நாட்டில் எப்படி வாழ்ந்து விடுகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்... உங்கள் வீட்டுக்கு ஆட்டோ அல்லது லாரி விரைவில் வரும் ....

அகல்விளக்கு said...

எல்லா தேர்வுகளும் சரியானதே...

Yoganathan.N said...

//விஜய டி ராஜேந்தர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர் வி உதயகுமார்//

இவர்களைப் பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. Neutral :)

//எஸ் ஜே சூர்யா, கவுதம் மேனன், சேரன்//

மூவரையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் சொன்னது போல எஸ் ஜே சூர்யா நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் இயக்குணர் அவதாரம் எடுக்க வேண்டும். கவுதம் மேனனுடைய பேச்சே அவருக்கு முதல் எதிரி. சற்று அடக்கி வாசிக்க பழக வேண்டும் இவர்.
சேரனும் எஸ் ஜே சூர்யா போல நடிப்பை விட்டுவிட்டு முழு நீள இயக்குணராக வர வேண்டும்.

//தரணி, பேரரசு, லிங்குசாமி//

இவர்கலெல்லாம் தமிழ் சினிமாவின் சசபக் கேடுகள் என்பேன். அதிலும் 'சங்கு'சாமிக்கு எனது கோர்ட்டில் மன்னிப்பெ கிடையாது.

//எஸ் எ சந்திரசேகர்//

தன் மகனுக்காக தன்னை அற்பனித்த ஒரு புனித ஆத்மா. தன் மகனின் சக போட்டியாளரை விரட்டி அடிக்க என்னென்னமொ செய்தார் என கேள்வி பட்டுள்ளேன். வளர்க அவரது உகழ்...

//யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள். //

இந்த தடவை கொஞ்சம் உஷாரா இருக்கீங்க போல. :P உங்கள் கருத்தைச் சொன்னது போல இது என்னுடையது. நல்ல அலசல். :)

Bala said...

நன்றி சதீஸ்...

@ராஜா
ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் ஏற்றிக்கொண்டா?

நன்றி அகல்விளக்கு..

@யோகநாதன்
நீங்களும் உஷாருதான். நன்றி

ஹுஸைனம்மா said...

நிறைய தகவல்களுடன், ரசனையையும் அறிந்துகொண்டேன். சரியாத்தான் இருக்கு.

ரஹீம் கஸ்ஸாலி said...

பேரரசு தரணியின் சிஷ்யரா?
ராம.நாராயணனின் சிஷ்யர் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாலா said...

@ரஹீம் கஸாலி

ராம நாராயணனிடம் பணியாற்றி இருக்கலாம். ஆனால் அவர் தரணியின் சிஷ்யர்தான்.

mcckrishna said...

பாலா உங்க பதிவு நன்று. ஆனால் இரு சின்ன திருத்தம். SA .C எடுத்த ஒரே பிரபலமான படல் நான் சிகப்பு மனிதன் அல்லப்பா ,சட்டம் ஒரு இருட்டரை, சாட்சி, நீதியின் மறுபக்கம். இதில் சட்டம் ஒரு இருட்டரை 3 மொழிகளில் remake செய்து கிட்டான படம். இந்தியில ரஜினி தான் கீரோ, சட்டம் ஒரு இருட்டரையும் சாட்சியும் விஜயகாந்துக்கு பெரிய BREAK கொடுத்த படங்கள். சரியா தெரிஞ்சா எழுதுங்க. நான் சிவப்பு மனிதன் சுமாரா ஓடிய படம்

பாலா said...

@mcckrishna

தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...